சிறந்த அறம் யாதோ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2025
பார்வையிட்டோர்: 46 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருத்தேனாறு ஒரு பண்டைய சிவஸ்தலம். ஐவராலும் பாடல்பெற்ற சிறப்புடையது. ஆலயமோ தமிழ் நாடெங்கும் பெயர் பெற்றது. அதன் சிற்பக்கலையும் விசித்திர வேலைப்பாடும் மேற்கு நாட்டு வெள்ளைக்கலைஞர்களும் பார்த்து மெச்சித் தங்கள் அருமையான நூல்களில் அதன் பெருமைகளை வெளியிட்டி ருக்கின்றனராம். அத்தனை சிறப்பு வாய்ந்த புனிதத் தலத்திற்கு அன்றோ நம் குடும்பத்துத் திருப்பணி இருக்க வேண்டும் என்று நினைத்தார். சோ.ம.பெரி. சின்யைஞ்செட்டியார். திருப்பணி செய்வதற்காக நிச்சயம் செய்வதற்கு முந்தி பல தடவைகள் அந்தத் தலத்திற்குச் சென்று அதன் மகிமைகளைப்பற்றி விசாரித்தார் தமிழ்த் திருப்பாடல்களும் தமிழ்ப்புராணங்களும் அவருக்குப் போதுமான திருப்தி அளிக்க வில்லை. அவ்வாலயத்து முக்கிய அர்ச்சகர் பேச்சே அவர் மனதில் ஊன்றிவிட்டது. தேனாறுடைய பிரான் என்று பாசுரங்களில் கூறப்பட்டிருந்தபோதிலும் அதனை வடமொழியில் மதுநதீசுவரர் என்ற திருநாமம் படைத்துள்ளதெனவும் கலியுகத்தில் மதுநதிஆக உள்ள தீர்த்தம் கிருதயுகத்தில் பொன் நதி என்ற சுவர்ணநதியாக இருந்ததாகவும் ஒரு அரசன் அந்நதியில் ஒரு இரும்புக் குண்டை எறிய அது தங்கக்குணடாக மாறியதாகவும் இந்தக் கலியுகத்திலும் அந்நதியின் தீர்த்தம் ஆயிரம் கங்கையினும் சிறந்த புனிதத் தன்மையை தரக்கூடியது என்ற பல வரலாறுகளைக் கூறி அர்ச்சகர் செட்டியாரை மகிழ்வித்தார் செட்டியாரும் அத்திவ்விய தலத்தின் திருப்பணியை ஏற்றுக் கொண்டார் 

அந்தத் தலத்துக் கோயில் அப்போது ஒரு முதலியார் குடும்பத்தின் மேல் பார்வையில் இருந்தது. அம் முதலியார் பரம்பரை பாத்தியம் பாராட்டி வந்தார் அவருடைய முன்னோர்களில் ஏற்கனவே மானிய நிலங்கள் எல்லாம் பராதீனம் ஆகிவிட்டன ஒன்றிரண்டு மீதி இருந்தவற்றை அந்தத் தற்கால தருமகர்த்தர் விற்று விட்டார். இப்போதோ உற்சவகாலத்துக் காணிக்கைகள்தான் வரும்படி அவைகளை அர்ச்சகர் கைப்பற்றிக் கொள்வார் சுவாமிக்குத் தானமாக வந்த நகைகள் புத்தகத்தில் பெயர் அளவில் உண்டே தவிர உண்மை நகைள் எங்கு போயினவோ தெரியவில்லை. ஒரு மார்வாடிக்கடையில் அவைகள் பத்திரமாக இருக்கின்றன என்று சொல்லுகிறார்கள். 

சுவாமி இயற்கை உருவத்தில் தோன்றுவதே ஒரு அழகு என்று அவ்வூர்ப் பெரிய பண்டிதர் சொல்லுவார். ஆலய நந்தவனத்தில் எருக்கலை முளைத்திருந்தால் அதுதான் ஈசனுக்கு உகந்த மலர் என்று தைரியமாகச் சொல்லி விடலாம். ஆகவே அப்படிப்பட்ட தருமகர்த்தாவிடம் சென்றார் செட்டியார். உடனே தனக்கு உத்தரவு கிடைத்து விடும் என்று எண்ணினார். அது வீண் பிரமை ஆயிற்று. இறுதியில் அருச்சகர் தரகுபேசி ரூ. 1000 பிரதிப் பிரயோசனத்தின் பேரில் திருப்பணி செய்வதற்கு முதலியார் சம்மதித்தார். செட்டிய: ருக்கு ஒரு ஒப்பந்தப் பத்திரமும் எழுதிக் கொடுக்கப்பட்டது செட்டியார் 1 1/2 லட்சம் ரூபாய்க்குத் திருப்பணி செய்வதாக மதிப்புப்போட்டார். ஆனால் இறுதியில 3 இலட்சத்துக்கு இழுத்துவிட்டது. கல்வெட்டுக் கற்கள் எல்லாம் குப்பை என்று விலக்கப்பட்டன. பல கற்கள் அஸ்திவாரத்துக்குள் சென்றன. மற்றவை எறியப்பட்டன. பண்டை சிற்பச்சிலைகளும் தூண்களும் அழகாக இல்லை என்று தள்ளப்பட்டன. திருவண்ணாமலைப் பட்டிக் குப்பம், கோவலூர், திருமெய்யம் முதலான இடங்களிலிருந்து கற்கள் தருவிக்கப்பட்டன. வேலை மும்முரமாகத் தொடங்கி ஒருவாறு முடிக்கப்பட்டது. செட்டியார் தனக்கு ஒரு விடுதியும் தம் இனத்தாருக்கு ஒரு மகா விடுதியும் கட்டிவைத்தார். அவ்வூரில் ஒரு வட்டிக்கடையும் அமர்த்தினார். திருக்குளம். வேதபாடசாலை, தேவாரபாடசாலை முதலியவைகளுக்காக வேறு ஒரு செட்டியார் ஏற்றுக்கொண்டார். அவ்வாறே நந்தவனம் பசு மடம் முதலியவைகளுக்கு மற்றொரு செட்டியாரும் வந்தார். 

சந்திக்காலம், தெப்பம், பிரமோற்சவம் இவைகளுக்காக மற்றும் சில ஆய்ச்சிமார்கள் பணங்களை ஒதுக்கியும் வைத்தார்கள். ஆகவே 3 வருஷங்களுக்குள்ளாகத் தேனாறு ஒருபுது ஷேத்திரமாகவே மாறிவிட்டது. கும்பாபிஷேகத்திற்கு ஒருநாளும் பார்க்கப்பட்டது. பத்திரிகையும் விடப்பட்டது. பந்தல் அலங்காரம் முதலியவைகள் தடபுடலாக நடக்கின்றன. செட்டியாரும் தேனாற்றில் ஒரு மாத காலமாக இருக்கிறார். கும்பாபிஷேகப் பத்திரிகை அழகிய உருவங்கள் தேனாற்றின் பண்டைய வரலாறுகள் திருப்பாசுரங்கள் முதலியவைகள் எல்லாம் பலவித வர்ணங்களால் அச்சடிக்கப் பட்டிருந்தன. தேனாற்றீசர் கிருபைக்குப் பாத்திரர்களாகும்படி எல்லா ஆன்ம கோடிகளும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அழைப்புக் கடிதத்தின் அடியில் சோ.ம.பெரி. சின்னையன் செட்டியார் என்று அழகாக அச்சடிக்கப்பட்டிருந்தது. செட்டியாரும் எல்லா நாட்டுக் கோட்டை நகரத்தார்களுக்கும் மற்றப் பெரிய மக்களுக்கும் அழைப்பு அனுப்பியிருந்தார். பழைய தருமகர்த்தாவை மறக்கக்கூடாது என்று கருதி அவருக்கு ஒரு அழைப்பை அனுப்பியிருந்தார். தன்னிடம் நேரில் வந்து அழைக்காமலே தபாலில் ஒரு அழைப்பை அனுப்பியதைக் குறித்து முதலியார் கோபப்பட்டார். அப்போது. அவரிடம் அவ்வூர் கணக்குப் பிள்ளை உட்கார்ந்திருந்தார். கணக்கனுக்கோ செட்டியார் தன்னை மதிக்கவில்லை என்பது ஒரு கோபம். ஆகவே முதலியார் முகத்தைக் கண்டுவிட்டு அவருக்குத் தூபம் காட்டத் தொடங்கினார். அழைப்புத் தாளை தான் வாங்கி வாசித்தார். பிறகு “முதலியாரே, இது என்ன அநியாயம். தேனாற்றுக் கோயில் தங்கள் கோயில் ஆயிற்றே. கும்பாபிஷேகப் பத்திரிகையில் தங்கள் பெயர் இல்லையே!” என்றார். மக்கள் 

“என் பெயர் எப்படி இருக்கும்? திருப்பணியோ செட்டியா ருடையது அல்லவா? என்று பதில் சொன்னார்.” 

“அட! பைத்தியமே திருப்பணி செட்டியாருடையதுதான். யார் இல்லை என்று சொல்லுகிறார்கள். ஆனால் தருமகர்த்தா உரிமை தங்களுடையது அல்லவா? அது எப்படி மாறும்? நெபத்திற்காகவாவது தங்கள் பெயர் போடலாகாதா?” 

“நான் முன்னமே ஒப்பந்தம் எழுதிக் கொடுத்துவிட்டேனே.” 

“எழுதிக் கொடுத்தால் என்ன. என் பெயர் போட்டுத் தான் தீரவேண்டும் இல்லாவிட்டால் கும்பாபிஷேகம் நிறுத்திவிடுவேன் என்று நோட்டீசு கொடுத்துவிடும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூரிய புத்திமதி கூறினார். பார்த்தார் முதலியார். இதில் பலன் உண்டு என்று எண்ணினார். உடனே இருவரும் ஆலோசித்து ஒரு நோட்டீசு எழுதித் தபாலில் அன்றே நுழைத்துவிட்டார்கள். முதலியாரும் பிள்ளைக்கு ஒரு ரூபாய் இனாம் கொடுத்தார். 

செட்டியாருக்கு மறுநாள் நோட்டீசு கிடைத்தது. வாங்கிப் படித்தார். அது வெடி குண்டு விழுந்தாற்போல் இருந்தது. அழைப்பாளர்கள் எல்லோரும் வரத்தொடங்கிவிட்டார்கள். மறுநாள் கும்பாபிஷேகத் தொடக்கம். இந்தச் சமயத்தில் நோட்டீசு வந்தால் என்ன செய்வது? தன் காரியஸ்தனைக் கலந்து யோசித்தார். பத்திரிகையில் முதலியார் கையெழுத்து இடுவது என்றால் தான் செய்த புண்ணியத்தில் பாதி கொடுத்தது ஆகும். தவிர இனிமேலும் ஆலய பரிபாலனத்தில் இடைவிடாத தொந்தரவு. ஆகவே அது கூடாது என்று தீர்மானிக்கப்பட்டது. 

ப்வே பகுக்கர பக செட்டியார் இதுவோ கணக்கனுடைய வேலைதான் என்று ஊகித்தார். திருவிழா நடுவில் கலகம் ஏற்பட்டால் விபரீதம் ஆகும். ஆகவே சமாதானம் செய்து கொள்ள முயன்றார். வெகு தூரம் மத்தியஸ்தம் பேசி முதலியாருக்கு 500 ரூபாய் கொடுத்து விடுவது என்று ஒத்துககொள்ளப்பட்டது. வேண்டிய ஒப்பந்தமும் பூர்த்தியாயிற்று. பணம் பெற்றவுடன் கணக்கன் தன் பங்கை எடுத்துக் கொண்டான். 

கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. யாகங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள், சன்மானங்கள், ஊர்கோலங்கள், பொய்க்கால் குதிரை முதலிய வேடிக்கைகள், பாண வேடிக்கைகள், சதுர், பாட்டுக் கச்சேரி. நாதசுரம். காலட்சேபம் ஆர்ப்பாட்டங்கள் முதலியவைகள் குறைவில்லாமல் நடந்தன. எல்லோருக்கும் தராதரத்திற்கேற்றபடி சாப்பாடு முதலியன முடிந்தன. செட்டியார் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்த செய்தியைக் குறித்து அழகாக ஒரு சிலாசாசனம் தீட்டின கல் பதிக்கப்பட்டது. அதில் செட்டியார் திருப்புகழ்கள் எல்லாம் உரைநடையிலும் செய்யுளிலும் எழுதப்பட்டிருந்தன. வட மொழியிலிருந்து தென்மொழியில் பாடப் பெற்ற ஒரு நல்ல புராணம் மதுநதீஸ்வரர் மாகத்மியம் என்ற பெயரினால் வெளியிடப்பெற்றது. வடமொழி புராணமும் தமிழ் உரையுடன் மற்றொன்று பதிக்கப்பட்டது. இரண்டிலும் செட்டியார் வாழ்க்கைச் சரித்திரம் அழகிய உருவப்படங்களுடன் வெளிவந்தன. கும்பாபிஷேக நாளன்று இந் நூல்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதோடு அன்று மாலை மகா மண்டபத்தில் ஒரு கூட்டம் கூட்டி அதில் அவர் நூல் அறங்கேற்றப்பட்டது. அப்போது செட்டியாரின் உருவப்படம் உருவச் சிலை முதலியவைகள் திறக்கப்பட்டன திருவிழா ஒருவாறு நிறைவேறிற்று. கும்பாபிஷேகச் செலவு ரூ.50000 என மதிப்பிடப்பட்டது. செட்டியார் மிகவும் திருப்தி அடைந்தார். 

மறுநாள் செட்டியார் கோயில் திருப்பணி காரியாலயத்தில் கணக்குப் பரிசீலனை செய்து கொண்டிருந்தார். அரையின் வெளிப்புறம் கோயில் மகா மண்டபம் அதில் இரண்டு பிரயாணிகள் உடகார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சு செட்டியாரின் காதினை இழுத்தது. 

“அண்ணே, சாப்பாடு எப்படி இருந்தது ?” 

:இந்த மாதிரி சாப்பாடு சாப்பிட்டு வெகு நாளாயிற்று. செட்டியார் மிகவும் உதாரகுணம் உடையவர்.” 

“ஆமாம் திருப்பணி எப்படி இருக்கிறது?” 

“நன்றாய்தான் இருக்கிறது. பர்மாவிலும் மலேயாவிலும் சம்பாதித்த பணத்தை நம்ம ஊருக்குத் தந்தாரே நமது பாக்கியம்தான்.” 

“ஆனால் செட்டியார் சும்மாவா தந்தார். ஒருவிதப் பயனும் கருதாமலா கொடுத்தார்.” 

“அவருக்கு என்ன பயன்? பின்னாலே புண்ணியமும் நற்கதியும் கிடைக்குமென்று இந்தத் திருப்பணி செய்திருப்பார்.” 

“போ.போ, அசடே, இந்தக் காலத்திலே புண்ணியம் ஏது? புருஷார்த்தம் ஏது? புகழ் கிடைக்க வேண்டும் என்று தான் செய்திருப்பார்… “

“சரி, புகழ்ச்சியிலே என்ன லாபம்.”

புகழ்ச்சியில்லையோ, போய் சிலாசானத்தைப் படித்துப்பார். அதில் செட்டியாரைக் கலியுகத்துக் கண்ணன் என்று எழுதியிருக்கிறது. உண்மையாக தருமம் செய்கிறவர்கள் அப்படிப்பட்ட தற்புகழ்ச்சி கொள்வார்களா ! ஒரு கை செய்த தர்மத்தை மற்றொரு கை அறியக் கூடாது என்பதல்லவோ தருமம் ஆகும். 

“என்ன உன் அபிப்பிராயம் சரியாக இல்லை. முன் காலத்து அரசர்கள் இராசராசன் முதலியவர்கள் மகத்தான கோயில்களைக் கட்டி வைத்துத் தம் பெயர்களைத் தீட்டிவைக்கவில்லையா? பின்னால் வருகிறவர்கள் அதனைக் கண்டு அதன் படி செய்ய வேண்டும் என்ற மேல் நோக்கத்துடன் முன்னிட்டு அல்லவா அவ்வாறு செய்யப்பட்டது? அது தற்புகழ் ஆகுமா! மேலும் அவ்வாறு எழுதிவைக்காமல் விட்டிருந்தால் ஆங்கிலேயர்கள் அம்மகத்தான செயல்களைப் புகழ்வது எப்படி? நம்நாட்டிற்குக் கீர்த்தி எப்படி ஏற்படும்?” 

‘பழைய கதையைப் பேசிப் பயனில்லை. இராசராசனுக்கும் செட்டியாருக்கும் என்ன சம்பந்தம். ஆனைக்கும் பூனைக்குமா இணைபோடுவது? மேலும் சோழியன் குடுமி சும்மா ஆடுமா? செட்டியார் இந்த கோயிலுக்கு ரூ.31/2 இலட்சம் ஏன் செலவழிக்க வேண்டும். இலாபம் இல்லாமலேயா? மூலஸ்தானங்களை திருட்டுத்தனமாக எடுத்து விட்டு அடியில் இருந்த அபரிமிதமான பொருள்களை எடுத்துக்கொண்டதாகச் சொல்லுகிறார்கள். தவிர ஆபரண அறைச்சாவி அவரிடம் தான் இருக்கிறது. அதில் பழைய நகைகள் எங்கே போயிற்று?” என்று இவ்விதப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தான்.

இந்தப் பேச்சுகளைக் கேட்டுக்கொண்டிருந்த செட்டியாருக்கு இனிமேல் கேட்க நெஞ்சு இடம் தரவில்லை. “எத்தனை நன்மை செய்தாலும் மக்களுக்கு அழுக்காறு போகவில்லையே’ என்று சஞ்சலத்துடன் எழுந்து போய் விட்டார். மறுநாள் காலையில் ஒரு செய்தி வந்தது. திடுகிக்கிட்டார் செட்டியார். சிலாசாசனத்தில் “தருமம்” என்ற சொல்லுக்கோ முன்னால் யாரோ “அ” சேர்த்திருந்தார்களாம். என்ன நன்றிகெட்ட உலகம் இது என்று நொந்து கொண்டார் செட்டியார்.

மற்றொரு முறை செட்டியாரின் உருவச்சிலையண்டை யாரோ நின்றுகொண்டு பரிகசித்துக்கொண்டு இருந்தார்களாம். இதனைக் கேட்டு செட்டியார் நெஞ்சு புண்ணாகி விட்டார். சிலநாள் கழித்து மற்றொரு செய்தி வந்தது. சிலையின் அடியில் இருந்த செட்டியார் பெயர் அடிக்கப்பட்டிருந்தது. மற்றொரு முறை உருவத்தின் காதும், மூக்கும் பின்னம் செய்யப்பட்டிருந்தது. இதனைச் சர்க்காருக்குத் தெரியப்படுத்திப் பயனில்லாமல் போய்விட்டது. செட்டியார் அச்சின்னங்களைச் சரிப்படுத்த வெகு பணம் செலவழித்தார். அவைகளைப் பாதுகாக்க நிரந்தரமாகக் காவலும் வைத்தார். மேலும் செட்டியார் தன்னைப்போல மற்றொன்றும் செய்து கையில் விளக்கேந்தினது போல செய்து வைத்திருந்தார். இவைகள் கர்ப்பக்கிரகத்தில் சுவாமியின் சமீபமாக வைக்கப்பட்டிருந்தன. புது குருக்கள் ஒருவர் வந்து மனுஷப் பிரதிமைகளை கர்ப்பக்கிருகத்தில் வைக்கக்கூடாது என்று அவைகளை எடுத்து அர்த்தமண்டபத்தில் வைத்தார். செட்டியாருக்குப் பெரிய கோபம் வந்துவிட்டது. என்ன சொல்லியும் குருக்கள் கேட்கவில்லை. வேைைலயிலிருந்து நீக்கி விட்டார். உடனே குருக்கள் தன்னை நீக்கினது பிசகு என்று பிராது செய்தார். கச்சேரியில் குருக்களுக்கு அநுகூலம் ஆகிவிட்டது. பழைய பாக்கியுடன் சம்பளம் கொடுக்கவேண்டி வந்தது. குருக்களோ ஜெயபேரிகை அடித்துவிட்டு அந்த பதுமைகளை அர்த்தமண்டபத்தை விட்டு நீக்கி வெளிமண்டபத்துக்கு கொண்டு போய் வைத்து விட்டார். செட்டியாருக்கு கோபம் வந்தது. குருக்கள்மீது இன்ஜங்க்ஷன் பிராது கொடுத்தார். மத சம்பந்தமான விஷயத்தில் கோர்ட்டார் பிரவேசிப்பதில்லை என்று வழக்கு தள்ளப்பட்டது. செட்டியார் இன்னது செய்வது என்று அறியாமல் திகைத்தார். 

இத்தனை அவமானமும் பட்ட பிறகு அந்த கோயிலில் இருக்கக்கூடாது என்று எண்ணித் தன் தருமகர்த்தா வேலையை விட்டுவிட்டார். இனிமேல் ஆலயத்திருப்பணிக்குச் செல்வதில்லை என்று நிச்சயித்துக்கொண்டார். 

ஆனால் அவருக்குத் தரும சிந்தனை போகுமா! தம் பொருள்களைப் பாடசாலை ஆஸ்பத்திரி முதலியவைகளுக்குச் செலவழித்தார். சிறிதுகாலத்தில் அரசியலார் பட்டமும் தந்தார்கள். வெகு திருப்தியோடு காலம் தள்ளிவந்தார். இறைவன் தனக்குச் செய்தவனைக் காட்டிலும் தன் குழந்தைகளாகிய மக்களுக்குச் செய்யும் தொண்டையே பெரியதாகக் கருதுகிறான் என்று செட்டியார் கண்டுகொண்டார். 

– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *