விடா முண்டன்
கதையாசிரியர்: சி.எம்.ராமச்சந்திர செட்டியார்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2025
பார்வையிட்டோர்: 47
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என் வீட்டின் வெளித்தாழ்வாரத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் எ உட்கார்ந்துகொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் தெருவின் வழியாகச் சென்று கொண்டிருந்த ஒரு பெரியவர் என்னைப்பார்த்து விட்டார். அவருடைய முகம் ஏதோ முன் பார்த்தது போலத் தெரிந்தது. ஆனால் அவர் இன்னார் என்று எனக்கு ஞாபகம் வரவில்லை. சென்று கொண்டிருந்தவர் வீட்டு வாயிலில் தொங்கிக்கொண்டிருந்த பெயர்ப் பலகையைக் கண்டார். உடனே என்னிடம் வந்தார். நானோ எனக்குத் தெரியாமலே வணக்கம் செய்தேன். அவரும் பிரதி வணக்கம் செய்துவிட்டு என்னை நோக்கிப் பேசத்தொடங்கினார்.
”சுவாமி, என்னை அடையாளம் தெரியவில்லையா?” என்றார். நானோ என் தலையைச் சொரிந்தும் பார்த்தேன் ஒன்றும் தெரியவில்லை”.
“மன்னிக்க வேண்டும், ஞாபகத்திற்கு வரவில்லை. தாங்கள் யாரோ? பிசகாக எண்ணிக் கொள்ள வேண்டாம்.”
“சுவாமி, பல ஆண்டுகளாக நாம் இருவரும் ஒரு வகுப்பில் வாசித்தோம். நான் தான் நடராசன். 1910ல் இரண்டாம் வகுப்பில் படித்தோம். அப்போது ஒருநாள் சுந்தரம்ஐயர் நீங்கள் ஒரு கேள்விக்கு விடை கூறாததனால் உங்களை அடிக்க வந்தார். நான் மெதுவாய் உங்கள் காதில் விடை ஊதி விட்டேன். நீங்கள் சொல்லித் தப்பித்துக் கொண்டீர்கள்.”
நான் எப்போதும் நல்ல ஞாபசக்தி உடையவன் என்று என்னையே புகழ்ந்து கொண்டிருப்பதுண்டு. சிறு சிறு சம்பவங்களையும் நான் எளிதில் மறக்க மாட்டேன். ஆனால் இதுவோ ஞாபகம் இல்லை.
“சுவாமி! ஞாபகம் இல்லை, ஒரு வேளை இருக்கலாம்”
“மற்றொன்று சொல்லுகிறேன். 1914-ம் ஆண்டில் நான்காம் வகுப்பில் வாசித்தபோது உங்களை வாத்தியார் பெஞ்சியில் நிற்கச்சொன்னார். நான் அவர்களிடம் மன்றாடி பெரிய மனிதர்கள் வீட்டுப்பிள்ளைகளைப் பெஞ்சியில் ஏற்றுதல் தப்பு என்று கெஞ்ச அவரும் ஒத்துக்கொண்டார்.”
“சுவாமி, எனக்கென்னமோ இவைகள் ஞாபகமே இல்லை. நான் 1910-இல் 2-ம் வகுப்பும் 1914-இல் நான்காம் வகுப்பில் வாசித்ததில்லை. ஒரு வகுப்பிலும் தேராதிருந்த தில்லை. அந்த ஆண்டுகளும் சரியல்ல, உபாத்தியார் பெயரும் சரியல்ல.
“அப்படியா, நான் ஆளை பிசகாக நினைத்தேன். பொதுவாக அவ்விதம் செய்ததில்லை. உங்களை நன்றாக அறிவேன். நீங்கள் இத்தனை சுலபத்தில் என்னை மறக்க முடியாது” என்று தீனக்குரலில் பேசினார்.
“சுவாமி, ஏதோ இருக்கலாம். மன்னிக்க வேண்டும் வந்த காரியம் யாதோ?”
“நான் நல்ல உத்தியோகத்தில் இருந்தேன். ஏதோ ஒரு சனீச்சுவரன் வந்தான். பொல்லாத காலம் வேறொருவர் செய்த பிசகுக்காக நான் தண்டனை அடைந்தேன். இப்போது வேலையில்லாமல் இருக்கிறேன். “
“பிறகு?”
“வேறொன்றும் இல்லை. இன்று என் தகப்பனார் திதிநாள். என் சுற்றத்தார்களை எல்லாம் எண்ணிப் பார்த்தேன். கால் எடுத்துவைக்க வெட்கமாயிருக்கிறது. உங்கள் ஞாபகம் வந்தது. நல்ல நிலைமையில் இருக்கின்றீர்கள். நண்பர்களைப் போல் வேறு எவர் உதவுவார்கள். இன்று சடங்கினை நிறைவேற்றிக் கொடுத்தால் புண்ணியம் உங்களுடையதே” என்றார்.
இக்கதையைக் கேட்டதும் நான் என்ன செய்வேன். வந்தவர் அன்னியனாக இருந்தாலும் பிதிர்காரியத்தை நிறைவேற்றிக் கொடுப்பது புண்ணியம் தானே என்று எண்ணி வீட்டுக்குள்ளே சென்று ஐந்துரூபாய் எடுத்துக் கொடுத்தேன். என்னை வணங்கி நன்றி செலுத்திவிட்டுச் சென்றார்.
மூன்றுமாதம் கழிந்தது. மறறொரு நாள் என் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவரே திரும்பவும் அதே வழியில் சென்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்துத் திண்ணைக்கு வந்தார் எதிரே’ ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.
“சுவாமி, உங்களைப் பார்க்கக் கொடுத்து வைத்தேன் வெகு நாளாகப் பார்க்கவில்லை நாம் இருவரும் ஒரு ஆபீசில் வேலைசெய்தோமே. ஞாபகம் இல்லைபோல் இருக்கிறது” என்றார்.
“எந்த வருஷத்தில் சுவாமி?” என்று கேட்டேன்.
“1925-ல் யோசித்துப் பாருங்கள். நமது தலைவர் உம்முடைய பிரதியில் ஒரு பிசகு இருப்பதாகக் கண்டித்ததில் நான் உங்களுக்கு உதவிக்கு வந்து அவர் பிசகு அல்ல என்னுடையது என்று சொல்லி உம்மைத் தப்புவிக்கவில்லையா” என்றார்.
என்னை எப்போதும் பிசகு செய்பவனாகவும் இவர் என்னைத் தப்புவிக்கிற உதவியாளாகவுமே கதை கட்டுகிறார் என்று எண்ணினேன். எண்ணினேன்.
“சுவாமி, ஞாபகம் இல்லை, எந்த ஆபீசு, தலைவர் பெயர் என்ன என்று கேட்டேன்.”
“அதுதான் ஞாபகம் இல்லை. யோசததுப் பார்த்தேன். வரமாட்டேன் என்கிறது. எனக்குச் சிறிது ஞாபகப் பிசகு வருகிறதுதான் வெகுநாள் ஆயிற்றல்லவோ?”
சரி இவ்வளவு தான் இவருடைய ஜம்பம் என்று எண்ணினேன். ஆனால் ஒன்று தெரிந்தது. தன் பேரில் பிசகு எப்போதும் வருவதில்லை. பிறர் பேரில் பிசகும் காட்டி அதற்குத் தன்னை பரோபகாரச்சீலனுமாகச் செய்து கொள்ளுகிறாரே என்று எண்ணி, இப்படிப்பட்டவரை எதிர்த்துப் பேசிப் பயனில்லை என்று வாளாவிருந்தேன். ஆனால் அவரோ விட்டவரல்ல.
“சுவாமி என் ஞாபகமறதியை மன்னிப்பீர்கள். நான் இப்போது கெட்டுவிட்டேன். பொல்லாத வேளை எனக்கு வந்தது. என் வேலை போய்விட்டது. இப்போது எங்கு பார்த்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் அல்லவா? அது எனக்கும் ஏற்பட்டிருக்கிறது. யாரிடம் சொல்வது கடவுள் சோதிக்கிறார்.”
“சரி, தங்கள் கதையை கேட்க விசனமாகத் தான் இருக்கிறது. உண்மை சொல்லி விட்டால் காரியம் சித்திக்குமோ.”கைக்கு
“என்ன சொல்லட்டும், இன்றைக்கு என் தாயார் திதி அதை எப்படி நடத்தாமல் இருப்பது. ஏதோ ஒன்றுக்குப் பாதியாவது செலவு செய்து நடத்தலாம் என்று இருக்கிறேன். உறவினர் பக்கம் செல்வதோ முடியாத காரியம் தங்களைப் போன்ற பழைய நண்பர்களே ஆகச் கூடியவர்கள். ‘உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டாம்’ என்று கம்பர் சொல்ல வில்லையா. என்றார்.
ஏது இவர் தமிழையும் மறக்கவில்லை போல் இருக்கிறது. இருந்தாலும் ஒளவையாருக்கும் கம்பருக்கும் பேதம் தெரியாத ஆசாமி என்று நினைத்தேன்.
“சுவாமி, மேற்கோளும் கீழ்க்கோளும் வேண்டாம். சங்கதி சொல்லும்” என்றேன்
“ஏதோ காரியம் நடத்தி வைத்தால் போதும். இந்தப் பணம் கொண்டு போய் தான் அரிசி பருப்பு முதல் வாங்கிக் கொண்டுத் திதி செய்ய வேண்டும்” என்று அழாத அழுகையில் பேசினார். பக
பஞ்சதந்திரத்து நீள்செவியன் போல நானும் நடந்து கொண்டேன்; அவருடைய நிலைமை என் மனம் உருகினது. உடனே வீட்டிற்குள் சென்று ஐந்து ரூபாய் கொண்டு வந்து கொடுத்தேன். வந்தனம் சொல்லிவிட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு சென்றான்.
மீண்டும் மூன்று மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் என் அறையில் உட்கார்ந்து கொண்டு தமிழ் நூல் வாசித்துக்கொண்டிருந்தேன். யாரோ வந்து கதவு தட்டும் சத்தம் கேட்டது. ஆள்காரி கதவு திறந்தாள். முன் என்னிடம் திதிக்காக இரு முறை பணம் பெற்ற அதே ஆசாமி வந்தார். வணக்கம் செய்து எதிரே உட்கார்ந்தார்.
“சுவாமி, என்ன விசேஷம்” என்றேன்.
“பார்த்து வெகு நாள் ஆயிற்று. பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன்” என்றார்.
இந்தத் தடவை என்ன புதிதாகக் கதை கட்டப்போகிறார் என்று வியந்தேன். ஆனால் கயிறு திரிப்பதில் இவர் கெட்டிக்காரர் என்று எண்ணினேன். புதுக்கதை ஒன்றும் கட்டாமலே “சுவாமி தங்களிடம் தான் வந்தேன். இன்று ஒரு திதி என்ன செய்யட்டும். என் மூத்த மனைவிக்கு இன்றுதான் சிராத்தம். உமக்குப் புண்ணியம்’ என்றார்.
புதுக்கதை இல்லாவிட்டாலும் திதி என்பது போக வில்லை. தகப்பனார், தாயார் இப்போது மனைவி இன்னும் எத்தனை திதிகள் இவருக்கு உண்டோ என்று பயந்தேன்.
என்ன செய்வது! இல்லை என்று சொல்ல மனம் வரவில்லை. மூன்று ரூபாய் கொடுத்து அனுப்பினேன்.
இரண்டு மாதம் சென்றது. நான் பட்ட வியப்புக்கு அளவேயில்லை. மீண்டும் அதே ஆள் என் முன் தோன்றினார். இந்தத் தடவையும் யாதொரு கதையும் அளக்கவில்லை. சட்டியில் இருந்தால் தானே அகப்பைக்கு வரும்.
“சுவாமி, மன்னிக்க வேண்டும். என்னை இந்த சங்கடத்திலிருந்து து தப்புவிக்க வேண்டும்” என்று தீனக் குரலில் சொன்னார்.
“என்ன சுவாமி, அப்படிப்பட்ட சங்கடம் வந்தது” என்று கேட்டேன்.
“காலம் கெட்டுவிட்டது. ஒரு காசுக்கும் வழியில்லை. இன்றைக்கு என் தகப்பனார் திதி. தாங்கள் தான் கெதி” என்றார்.
மறுபடியும் திதிக் கதைதான். ஆனாலும் எட்டு மாதத்திற்குள் எவ்விதம் தகப்பனார் திதி வரும் என்று எண்ணினேன்.
“சுவாமி, எங்கள் குடும்பங்களில் எல்லாம் பன்னிரண்டு மாதங்களுக்ளு ஒரு முறை தான் திதி வருகிறது. உங்களுக்கு எட்டு மாதங்களில் வருகிறதாகத் தோன்றுகிறதே” என்றேன்.
“அப்படியல்ல, சுவாமி, என் தகப்பனார் இறந்தது ஆனி மாதம் திரிதியை அன்று. இன்றைக்கு ஆனி திரிதியை அல்லவா? ஆகவே திதி வராதா என்று வற்புறுத்தினார்.
எனக்கோ ஆத்திரம் பொங்கியது. எவ்வளவு நாள் இவர் இப்படி வஞ்சித்துப் பிழைக்க முடியும். இவருக்குப் புத்தி புகட்ட வேண்டும் என்று நினைத்து விர்ரென்று எழுந்து வீட்டுக்குள் சென்று கணக்குப் புத்தகத்தை எடுத்து வந்தேன்.
“சுவாமி, கணக்குப் பார்த்துச் சொல்லுகிறேன். இன்றைக்கு 8 மாதங்களுக்கு முந்தி 5 ரூபாய் நன்கொடை பெற்றிருக்கிறீர்கள். கார்த்திகை மாதத்தில் 5 ரூபாய் செலவு எழுதியிருக்கிறது” என்றேன்.
“ஒருவேளை வேறொருவர் ஏழை என்னைப் போன்றவர் பெற்றிருக்கக்கூடாதா?” என்று மீண்டும் கேட்டார்.
“சுவாமி, அப்படியல்ல, நேரிலே பாருங்கள் சுப்பையர் தகப்பனார் திதிக்குக் கொடுத்தது ரூ.5 என்று எழுதியிருக்கிற தல்லவா? நீங்கள் தானே உமது பெயர் சுப்பையர் என்று சொன்னீர்கள் அல்லவா” என்றேன்.
இதைப்பார்த்த பிறகு சுப்பையர் ஒன்றும் பேசவில்லை மௌனமாகி விட்டார். வெலவெலத்துப் போனார். இவர் கணக்கும் சூ என்று எழுதிவைப்பார். அதில் தன் பெயரும் இருக்கும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், அவர் விட்டுப் போகவில்லை. சிறிது நேரம் உட்கார்ந்துக் கொண்டே யிருந்தார். என்ன விடாமுண்டன் போல இருக்கிறாரே என்று நினைத்தேன். சிறிது நேரம் பொறுத்து பச்சாத்தாபத்துடன்,
“சுவாமி, என்னை மன்னியுங்கள். நான் செய்தது தப்புத்தான். ஒப்புக்கொள்கிறேன். வறுமைக் காரணத்தால் செய்தேன். அதற்குநானா பொறுப்பு. அவனை, என்னை உண்டாக்கினவனைக் கேட்க வேண்டும். இன்று வீட்டில் சாப்பாட்டிற்கே வழியில்லை. என் மனைவி பிள்ளைகள் சாகிறார்கள். எப்படியாவது ஏதாவது கொடுத்துத் தான் தீரவேண்டும்” என்று மன்றாடினார்.
மனம் இரங்கிற்று. ஒரு ரூபாய் கொடுத்தேன். ”இனி மேல் என்னிடம் வரவேண்டாம். இந்தப் பொய் எனக்குப் பிடிக்கவில்லை. இனியாவது மனசாட்சிக்கு விரோதமாய் நடந்து கொள்ள வேண்டாம்” என்று சொன்னேன்.
பிறகு ஊரில் விசாரித்தேன். அவர் பெயர் சுப்பையர் என்பதும் பொய். என்னைப் போல் திதி என்று நம்பி கொடுத்த புண்ணியவான்கள் பல பேர். ஆனால் ஒருவரும் இரண்டு தடவைக்கு மேல் ஏமாந்ததில்லை. நான் தான் நான்கு தடவை ஏமாந்தேன். அவர் திரும்பி என்னிடம் வரவில்லை. வந்தால் ஒரு காசும் கிடைக்காது என்று அறிவார்.
படிப்பவரே, இவரை நீங்கள் கண்டதில்லையா? காண்டிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். காணா விட்டால் உமது துரதிட்டம்தான். இப்படிப்பட்டல், சுப்பையர்கள் நாட்டில் பலபேர் இருக்கிறார்கள். இவர்கள் தொலைந்தால் ஒழிய நாட்டிற்கு மதிப்பு வராது.
– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.