சிவகாமியின் செல்வன்
கதையாசிரியர்: சாவி
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 4, 2025
பார்வையிட்டோர்: 97
(1990ல் வெளியான வாழ்க்கை வரலாறு, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4

திரு. சத்தியமூர்த்தி 1936-இல் மாகாணக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராயிருந்த போது அவருடைய காரிய தரிசியாகப் பணியாற்றினார். நேருஜி தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்த போது சத்தியமூர்த்தி, காமராஜ் இருவருமே அந்தச் சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டனர்.காம ராஜின் கடின உழைப்பையும், தன்னலமற்ற சேவையையும் நேருஜி நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டது அப்போது தான்.
அதற்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக வரும் வாய்ப்பு சத்தியமூர்த்திக்கு இல்லாமலே போய் விட்டது. சத்தியமூர்த்தி தலைவராக வருவதற்கு ராஜாஜியே பக்கபலமாக இருந்துங்கூட, சத்தியமூர்த்தியால் வெற்றி பெற முடிய வில்லை. காங்கிரசுக்குள் வகுப்பு வாதம் புகுந்து விட்டதே இதற்குக் காரணம். சத்தியமூர்த்தி இதை நன்றாகப் புரிந்து கொண்டதால் தலைவர் தேர்தலுக்குத் தாம் போட்டியிடுவதை நிறுத்திக் கொண்டு, 1940-இல் காமராஜைப் போட்டியிடச் செய்தார்.
அந்தக் காலத்தில் காங்கிரசுக்குள் ராஜாஜி கோஷ்டி, சத்தியமூர்த்தி கோஷ்டி என்று இரண்டு பிரிவுகள் இருந்தன. காமராஜை நிறுத்தி வைத்திருப்பது பற்றி ராஜாஜியின் கருத்தை அறிந்து கொள்வதற்காக முத்துரங்க முதலியார், அவிநாசிலிங்கம், ராமசாமி ரெட்டியார் மூவரும் ராஜாஜியை நேரில் போய்ப் பார்த்துப் பேசினார்கள். அவர்களிடம் ராஜாஜி தம் கருத்து என்ன என்பதைச் சொல்லவில்லை. பிராமணர் அல்லாதவர் ஒருவர் தான் தலைவராக வர முடியும் என்றால் தமக்கு வேண்டிய ஒருவர் தலைவராக வரட்டுமே என்று ராஜாஜி எண்ணினாரோ என்னவோ? தலைவர் தேர்தல் விஷயமாகத் தம்மைப் பார்க்க வந்த போது, ”சி.பி.சுப்பையாவையே நிறுத்தி வைக்கலாமே!” என்ற யோசனையை வெளியிட்டார் ராஜாஜி. அப்போது காமராஜை நிறுத்தி வைப்பது பற்றி ராஜாஜியிடம் சத்தியமூர்த்தி என்ன கூறினார் அதற்கு ராஜாஜி என்ன பதில் கூறினார் என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால், ராஜாஜி குறிப்பிட்ட சுப்பையாவைத் தாம் ஆதரிப்பதாக ஒப்புக் கொண்டு திரும்பி வந்தார் சத்தியமூர்த்தி.
இதற்குள் காமராஜும் அவரைச் சேர்ந்தவர்களும் காமராஜின் வெற்றிக்காக வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது சத்தியமூர்த்தி சென்னை நகர மேயராக இருந்தார். அவர் காமராஜை அழைத்து, ”சி.பி. சுப்பையாவைப் போடும்படி ராஜாஜி சொல்கிறார்; நானும் சரி என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன். நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.
”நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சுப்பையா நிற்பதில் எனக்கு இஷ்டமில்லை: சுப்பையாவுக்குப் பதிலாக வேறு யார் நின்றாலும் எனக்குச் சம்மதந்தான். இல்லையென்றால் நானே தான் நிற்கப் போகிறேன்” என்று பிடிவாதமாகக் கூறிவிட்டார் காமராஜ்.
சத்தியமூர்த்தியால் அதற்குமேல் ஒன்றும் பேச முடிய வில்லை, ‘சரி, உன் இஷ்டப்படியே செய்’ என்று கூறிவிட்டார். எனவே காமராஜும், அவருக்கு எதிராக சி.பி.சுப்பையாவும் போட்டி போடும்படி ஆயிற்று. அந்தத் தேர்தலில் சுப்பையாவுக்கு 100 வோட்டுக்களும். காமராஜுக்கு 103 வோட்டுக்களும் கிடைத்தன. காமராஜ் மூன்று வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பதவியேற்றார். தலைவர் காமராஜுக்குக் காரியதரிசியாக அமர்ந்து சத்தியமூர்த்தி துணைபுரிந்ததும் அந்த ஆண்டில்தான்.
1919இல் அரசியல் வாழ்க்கையில் ஒரு சாதாரணத் தொண்டனாக விருதுநகரிலிருந்து புறப்பட்ட காமராஜ் இருபது ஆண்டுகள் கழித்துக் காங்கிரஸ் தலைவராக வந்தது காங்கிரஸ் வரலாற்றிலேயே ஒரு முக்கியத் திருப்பமாக அமைந்தது.
காமராஜ் தலைவராக இருந்தபோதிலும், தொண்டனாக இருந்தபோதிலும் சுதந்திரம், ஜனநாயகம், காந்தீயம் ஆகிய உயர்ந்த லட்சியங்களை ஒரு போதும் மறந்ததில்லை. நியாயம், நேர்மை இவ்விரண்டுக்கும் மாறான கருத்துக்களை அவர் எப்போதும் ஜீரணம் செய்து கொண்டதும் கிடையாது. நியாயம், கொள்கை என்று வரும்போது அவற்றை நிலைநாட்ட காந்திஜி, நேருஜி, பட்டேல் போன்ற பெருந்தலைவர்களோடு அவர் வாதாடத் தயங்கியதுமில்லை.
ஒரு சமயம் காமராஜ் தமிழக முதலமைச்சராக இருந்த போது, டாக்டர் சுப்பராயன் தம்முடைய மகன் மோகன் குமாரமங்கலம் ஹைகோர்ட் நீதிபதியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் ஆசைப்பட்டதற்குக் காரணம் மோகன் குமாரமங்கலம் பதவி காரணமாகத் தம் முடைய கம்யூனிஸக் கொள்கைகளை விட்டு விடலாம் என்று கருதினார். அப்பொழுது பிரதம நீதிபதியாக இருந்த ராஜ மன்னார் அவர்களும் மோகன் குமார மங்கலத்தை நீதிபதியாக நியமிக்க தம்முடைய சம்மதத்தைத் தெரிவித்து முதலமைச்சர் காமராஜுக்குச் சிபாரிசுக் குறிப்புடன் ஃபைலை அனுப்பி வைத்தார். காமராஜும் சுப்பராயனும் நெருங்கிய நண்பர்கள் தான். ஆனாலும் தாம் இந்தச் சிபாரிசை ஏற்று, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாக அமர்ந்தால் கோர்ட்டில் வழங்கப்படும் நியாயத்துக்கு அது இடையூறாகப் போய்விடும் என்பது காமராஜின் பயம். அத்துடன் திரு. மோகன் குமார மங்கலம் இளைஞராக இருப்பதால் சீக்கிரமே பிரதம் நீதிபதியாக வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு கம்யூனிஸ்ட் பிரதம நீதிபதியாக ஆகும் அளவுக்கு வாய்ப்புத் தேடித் தரும் ஒரு சிபாரிசைத் தம்மால் அங்கீகரிக்க முடியாது என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார். இந்த நிலைமையில் தலைமை நீதிபதி ராஜமன்னாரால் எதுவும் செய்ய இயலவில்லை. முதலமைச்சருக்கும் தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் நியமன விஷயத்தில் கருத்து வேற்றுமை ஏற்பட்டால் அந்தப் பிரச்னையை ஆராய்ந்து முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. அப்பொழுது நேருஜி மந்திரி சபையில் பண்டிதபந்த் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்தார். குமாரமங்கலம் நியமனம் சம்பந்தமான ஃபைல் பந்த்திடம் போயிற்று. பந்த்துக்கும் இந்த நியமனம் சரியில்லை என்றே பட்டிருக்க வேண்டும். ஆனாலும் நேருஜியிடம் இதை எடுத்துச் சொல்வதற்கு முன்னால் பந்த் காமராஜை நேரில் சந்தித்துப் பேச விரும்பினார். அப்போழுது வேறு காரியமாக டில்லிக்குப் போயிருந்த காமராஜிடம் இதைப்பற்றி விசாரித்தார் பந்த்.
“கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரை ஹைகோர்ட் நீதிபதியாகப் போடுவதில் எனக்கு இஷ்டமில்லை. நியாயம் கெட்டுப் போகும்” என்று தம் கருத்தை எடுத்துச் சொன்னார் காமராஜ். பந்த்துக்கும் அது சரியாகவே பட்டது. இது சம்பந்தமாக நேருஜியும் அப்பொழுது காமராஜைப் பார்த்துப் பேசினார். காமராஜ் இதே கருத்தைத்தான் நேருஜியிடமும் எடுத்துச் சொன்னார்.
“சரி, மோகன் குமாரமங்கலத்தை நீதிபதியாகத் தானே போடக்கூடாது; அட்வொகேட் ஜெனரலாகப் போடுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று மேலிடத்தில் கேட்ட போது, “எனக்கு அதில் ஆட்சேபமில்லை” என்றார் காமராஜ்.
“அட்வொகேட் – ஜெனரலாக வந்தால் மட்டும் கம்யூனிஸ்ட் என்ற ஆட்சேபம் இல்லையா?” என்று திருப்பிக் கேட்டார்கள்.
“சர்க்கார் தரப்பில் வழக்காட வேண்டிய கேஸ்கள் எல்லா வற்றையுமே அட்வொகேட் ஜெனரலைக் கொண்டு தான் வாதாட வேண்டும் என்பது கிடையாது. வேறு வழக்கறிஞர்களிடம் கொடுத்தும் வாதாடலாம். அந்த உரிமை சர்க்காரிடந் தானே இருக்கிறது? எனவே, வழக்குகளின் தன்மையைப் பொறுத்து அவ்வப்போது அந்தந்தக் கேஸை யாரிடம் கொடுப்பது என்பது பற்றிச் சர்க்கார் முடிவு செய்து கொள்ளலாமே!” என்றார் காமராஜ்.
திரு. மோகன் குமாரமங்கலம் நீதிபதியாக வருவதிலோ. அல்லது அட்வொகேட் ஜெனரலாக வருவதிலோ காமராஜுக்குச் சொந்த முறையில் எந்தவிதமான ஆட்சேபமும் கிடையாது. ஆயினும் நியாயம் என்று தம் மனதுக்குப் பட்டதை எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்தபோது அதை எடுத்துச் சொல்ல வேண்டியது அவருடைய கடமை ஆகிற தல்லவா?
1940 ஆம் ஆண்டு தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன் சத்தியமூர்த்திக்குச் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி கிடைக்க விருந்தது. அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை. இதுபற்றி அவர் மனத்தில் ஒப்புக் கொள்ளலாமா, வேண்டாமா என்று குழப்பம் இருந் திருக்க வேண்டும். சில பெருந்தலைவர்களை அணுகி, ‘துணைவேந்தர் பதவியை நான் ஒப்புக் கொள்ளலாமா?” என்று யோசனை கேட்டார். “தாராளமாக ஒப்புக் கொள்ளுங் கள்’ என்று கூறினார்கள் சிலர். யார் என்ன சொன்னபோதிலும் சத்தியமூர்த்தி காமராஜைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. “காமராஜ்! இதைப் பற்றி நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.
“இப்பொழுது உள்ள நிலையில் இதை நீங்கள் ஏற்றுக் கொள்வது எனக்குச் சரியாகப் படவில்லை. காரணம், இப் பொழுது நடப்பது பிரிட்டிஷ் ஆட்சி. இந்த ஆட்சிக்கு எதிராக நாம் இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறோம். நம்முடைய சர்க்கார் ஏற்பட்டு, அந்தச் சர்க்கார் மூலமாக தங்களுக்கு இந்தப் பதவி கிடைத்தால் அது நமக்குப் பெருமையாயிருக் கலாம்” என்றார் காமராஜ்.
“இது பொலிட்டிக்கல் அப்பாயிண்ட்மெண்ட் இல்லையே?” என்றார் சத்தியமூர்த்தி.
“இருக்கலாம். ஆனாலும் சர்க்காரின் தொடர்பு இருக்குமே! அத்துடன் தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகப் போகிறது. அதில் நீங்கள் கலந்து கொள்ளாமல் இந்தத் துணைவேந்தர் பதவியை ஏற்றுக் கொண்டால் தங்கள் அரசியல் வாழ்க்கை என்ன ஆவது?” என்று கேட்டார் காமராஜ்.
இதற்குப் பிறகுதான் சத்தியமூர்த்தி அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டார்.
காமராஜிடம் இதைப் பற்றி நான் விசாரித்தபோது அவருக்கு இந்தப் பழைய சம்பவங்களெல்லாம் நினைவில் தோன்றி மறைந்திருக்க வேண்டும். சத்தியமூர்த்தியை நினைத்துக் கொண்டு ஒரு முறை பலமாக சிரித்தார் அவர். “ஐயோ பாவம், சத்தியமூர்த்தி குழந்தை மாதிரி அவருக்கு ஒண்ணும் தெரியாது. சின்னச் சின்ன பதவி என்றால்கூட அதை விடுவதற்கு மனம் வராது அவருக்கு. அதுக்கெல்லாம் ஆசைப்படுவார். எப்பவுமே நான் சொல்வேன், பதவின்னு வரப்போ அதுமேல் ஆசைப்படாமல் இருந்தாத்தான் தப்பு செய்ய மாட்டோம். பதவி ஆசை வந்தா, அது அறிவைக் கெடுத்துடும்பேன்” என்று கூறிவிட்டு மீண்டும் சிரித்தார்.
அத்தியாயம் – 5
“நீங்கள் 1940இல் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவரான பிறகுதானே தனிப்பட்டவர்கள் சத்தியாக்கிரகம் ஆரம்பமாயிற்று? அப்போது எந்த இடத்தில் சத்தியாக்கிரகம் செய் தீர்கள்? எப்போது கைது செய்யப்பட்டீர்கள்?” என்று காமராஜைக் கேட்டேன்.
“நான் சத்தியாக்கிரகம் செய்யவில்லை. அதற்குள்ளாகவே போலீசார் என்னைப் பாதுகாப்புக் கைதியாகக் கைது செய்து சிறைக்குக் கொண்டு போய்விட்டார்கள்… காந்திஜியின் அனுமதி பெற்றவர்களே சத்தியாக்கிரகம் செய்யலாம் என்பது நிபந்தனை. எனவே, தமிழ்நாட்டில் சத்தியாக்கிரகம் செய்ய விரும்புகிறவர்களின் ‘லிஸ்ட்’ ஒன்றைத் தயாரித்து எடுத்துக் கொண்டு நான் காந்திஜியை நேரில் கண்டு பேசுவதற்காகச் சேவாகிராமம் போய்க் கொண்டிருந்தேன். என்னுடன் நாக ராஜனும் வந்து கொண்டிருந்தார்…”
“எந்த நாகராஜன்? அந்தக் காலத்தில் நாகராஜன் என்பவர்தான் தங்களுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தார் என்றும், அவர் சொல்படிதான் நீங்கள் கேட்பீர்கள் என்றும், சொல்வார்களே, அந்த நாகராஜனா?”
“அதெல்லாம் சும்மாப் பேச்சு. என்னோடு அவர் எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பார். அவரை முதல் முதல் ‘இந்தியா’ பத்திரிகை ஆபீசிலோ, அல்லது வேறு எங்கேயோ சந்தித்தேன். அவருக்கு என்னிடத்தில் அக்கறையும் அன்பும் இருப்பதை அறிந்து கொண்டேன். அதனால் நானும் அவரும் சில விஷயங்களைச் சேர்த்து ஆலோசிப்பதும் உண்டு. அவர் எப்போதும் என்னுடன் இருந்தால் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் நான் எதுவும் செய்கிறேன் என்று அர்த்தமா, என்ன?” என்றார் காமராஜ்.
“தங்களை எதற்குப் பந்தோபஸ்துக் கைதியாக்கி வேலூர்ச் சிறைக்குக் கொண்டு போனார்கள்?”
”அதுவா? அப்ப மெட்ராஸிலே ஆர்தர் ஹோப் என்னும் வெள்ளைக்காரன் கவர்னர் வேலை பார்த்துக்கிட்டிருந்தான். யுத்த நிதிக்குப் பண வசூல் செய்யறதுக்காக அவன் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்துகிட்டிருந்தான். நான் அவனுக்கு முன்னாடியே ஊர் ஊராப் போய் யுத்த நிதிக்குப் பணம் கொடுக்கக்கூடாதுன்னு பிரசாரம் செய்துட்டு வந்துட்டேன். அதனாலே ஹோப்புக்குப் பணம் வசூலாகல்லே. இதுக்கு என்ன காரணம்னு விசாரித்தான் போல இருக்கு. காரணம் தெரிஞ் சதும் என்னைப் பாதுகாப்புக் கைதியாக்கி ஜெயில்லே கொண்டு வைக்கும்படி உத்தரவு போட்டிருக்கான்…”
“ஹோப்தான் உங்களை அரெஸ்ட் பண்ணச் சொன்னார்னு உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது?”
“அப்போ பாத்ரோன்னு ஒரு போலீஸ் ஆபீசர் இருந்தார். நல்ல மனுஷன். தேச பக்தி உள்ளவர். தேச பக்தர்களுக் கெல்லாம் தன்னால் முடிஞ்ச அளவு உதவி செய்வார். அவரை அப்போ ராமநாதபுரம் ஜில்லா சூப்பரின்டென்ட்டா. மாத்திட்டாங்க. போற வழியிலே அவர் விருதுநகரிலே இறங்கி, என் வீட்டுக்குப் போய் என் தாயாரைப் பார்த்துப் பேசிவிட்டு, அம்மா! என்னையும் உங்க மகன்னு நினைச்சுக்குங் கம்மா’ன்னு சொல்லிவிட்டுப் போனாராம். அப்புறந்தான் எனக்கு இந்தச் சங்கதியெல்லாம் தெரிஞ்சுது…”
“ஆனந்த விகடனில் அப்போது துணை ஆசிரியராயிருந்த கல்கி சத்தியாக்கிரகம் செய்யணும்னு உங்ககிட்ட வந்தாரா?”
“ஆமாம், வந்தாரே! நல்லா ஞாபகம் இருக்குதே? வாசன் கூட அவருக்குச் சத்தியாக்கிரகம் செய்யப் பர்மிஷன் கொடுக்கல்லேன்னு சொன்னதாக ஞாபகம்…”
“கல்கியைப் பற்றி உங்க அபிப்பிராயம் என்ன?”
“நல்ல எழுத்தாளர். அந்தக் காலத்திலே திரு.வி.கலியாண சுந்தர முதலியார் ‘நவசக்தி’ன்னு ஒரு பேப்பர் நடத்திக்கிட்டிருந்தார். அதிலேதான் கிருஷ்ணமூர்த்தி எழுத்தை நான் முதல்லே படிச்சேன். தேனீயோ, தமிழ்த் தேனீயோ – ஏதோ ஒரு பேர்லே எழுதுவார். ரொம்பத் தெளிவா, வேடிக்கையா எழுதுவாக. ஆனந்த விகடனில் அவர் எழுதிய தலையங்கமெல்லாம் காங்கிரசுக்குப் பெரிய பலம் தேடிக் கொடுத்தது. ஏ.என்.சிவராமன் கூட என்னோடு ஜெயில்லே இருந்தவர்தான். 1930இல் அலிபுரம் ஜெயில்லே நான், சிவராமன், சடகோபன், கிருஷ்ண சாமி, வெங்கட்ராமன் எல்லாரும் ஒரு பக்கம்; லாகூர் வழக் கிலே ஈடுபட்டவங்க இன்னொரு பக்கம். சிவராமன் பெரிய பெரிய சிக்கலான பிரச்னைகளையெல்லாம் எடுத்து அலசி ஆராய்ந்து கோர்வையா எழுதுவார். பாமரர்களை விடப் படிச்சவங்க அவர் தலையங்கத்தை ரொம்ப விரும்பிப் படிப்பாங்க. சொக்கலிங்கமும் கல்கியும் பாமரர்களுக்கும் புரியும்படி எழுதுவாங்க…”
“பின்னால் ராஜாஜி வேண்டுமா வேண்டாமா?’ன்னு தமிழ் நாட்டிலே ஒரு பெரிய கிளர்ச்சி நடந்ததே; அப்ப கல்கி தங்களை ரொம்பத் தாக்கி எழுதினாரே, அதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“அவருக்கு என் பேரில் உள்ள கோபத்தினாலே அப்படி எழுதினாருங்கிறதை விட ராஜாஜியின் பேரில் உள்ள பக்தியினால் எழுதினாருங்கறதுதான் என் அபிப்பிராயம். எப்படி எழுதினாலும் ரொம்பத் தெளிவான எழுத்து.காங் கிரஸை வளர்க்கிறதுக்கு அவரும் வாசனும் ரொம்ப உதவி செஞ்சிருக்காங்க…
இப்போ சத்தியமூர்த்தி பவன் இருக்குமிடத்தில்தான் அப்ப காங்கிரஸ் ஆபீஸ் இருந்தது. அது முப்பது வருஷத்துக்கு முன்னாலே தீப்பிடிச்சு எரிஞ்சு போச்சு. அப்ப காங்கிரஸ் கட்டட நிதிக்குப் பணம் வசூல் செய்ய ஆரம்பிச்சதும் முதல் முதல் வாசன்தான் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தார். மொத்தம் அறுபது எழுபதாயிரம் ரூபாய் சேர்த்து வெச்சிருந்தேன். தேனாம்பேட்டையிலே இப்ப இருக்கிற காங்கிரஸ் கிரவுண்ட் இந்து சீனிவாசனுக்குச் சொந்தமாயிருந்தது. அவருக்கும் காங் கிரஸ்லே ரொம்பப் பற்றுதல். அது பத்து ஏக்கர் நிலம். அதில் ஒரு பில்டிங்கும் இருந்தது. அந்த இடத்தை அவர் ஆக்ஷன்லே எடுத்திருந்தார். அந்த விலைக்கே காங்கிரசுக்குக் கொடுத்துடறேன்னு சொன்னார். ஆனால், அதை வாங்கறதுக் குப் பதினைந்தாயிரம் ரூபாய் குறைஞ்சது. வாசனைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொல்லிப் பதினைந்தாயிரம் கடனாக் கேட்டேன். காதும் காதும் வெச்சாப்பலே உடனே ஒரு செக் எழுதி அப்பவே கொடுத்துட்டார். அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கெல்லாம் அந்தக் கடனைத் திருப்பி கொடுத்துட்டேன்.”
“அவரை ஏன் எந்த எலெக்ஷனிலும் நீங்க நிற்க வைக்கல்லே?”
“அவரை எலெக்ஷன்லே நிற்கச் சொல்லிப் பலமுறை கேட்டுக்கிட்டேன். அவர்தான் பிடிவாதமா முடியாதுன் னுட்டார். கடைசியாக வற்புறுத்தி ராஜ்ய சபாவுக்குப் போட்டோம்.”
“பாதுகாப்புக் கைதியாக எத்தனை மாசம் ஜெயில்லே இருந்தீங்க?”
“நாற்பத்தொண்ணு நவம்பர்லே வெளியே வந்துட்டேன். மாத்தம் எத்தனை மாசம்னு கவனத்திலே இல்லே.”
“உங்களை விருதுநகர் முனிசிபல் சேர்மனாகத் தேர்ந்தெடுத்தது அப்பதானே?”
“ஆமாமாம், நான் ஜெயிலிலிருந்து வந்ததும் விருதுநகர் பானேன். நான் சிறையிலே இருந்தபோது என்னைச் சேர்மனாத் தேர்ந்தெடுத்துட்டாங்க. நான் போனதும் என்னைக் கூப்பிட்டுச் சேர்மன் நாற்காலியிலே உட்காரச் சொன்னாங்க. நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு ‘சேர்மன் பதவி’ எனக்கு வேண்டாம். பார்ட்டி வேலை, கெட்டுப் போய்விடும். சேர்மன் வேலை சரியாச் செய்ய முடியாது. எப்பவுமே கட்சி வேலை செய்வதில்தான் பிரியம். இந்தக் கௌரவத்தை எனக்குக்’ கொடுத்ததற்காக உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றி’ன்னு சொல்லி ராஜிநாமா எழுதிக் கொடுத்துவிட்டு எழுந்து வந்துட்டேன்…”
“ஒரு நாள் கூட பதவியிலே இல்லையா?”
”கொஞ்ச நேரந்தான் இருந்தேன். எனக்குப் பார்ட்டி முக்கியமா, பதவி முக்கியமா?”
“சத்தியமூர்த்தி உங்களோடு சிறையிலே இருந்திருக்காரா?” “அம்ரோட்டி. ஜெயில்லே இருந்தார். நாற்பத்திரண்டு ஆகஸ்ட் போராட்டத்திலே அவரை கைது பண்ணி அமரா வதிக்குக் கொண்டு போயிட்டாங்க. அப்புறம் நான், திரு வண்ணாமலை அண்ணாமலைப் பிள்ளை எல்லோரும் அங்கே போய்ச் சேர்ந்தோம். சத்திய மூர்த்திக்கு உடல் நலம் சரியில்லாமல் ஜெயில் ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார். அவரைப் பார்க்கணும்னா ஜெயில்லே விடமாட்டாங்க. அதுக்காக ஏதாவது ஒரு வியாதியைச் சொல்லிகிட்டு அந்த ஆஸ்பத்திரிக்குப் போய் வருவோம். என்ன செய்யறது? ஏதோ சொல்லிட்டுப் போய் சத்தியமூர்த்தியைப் பார்த்துட்டு வருவோம். அம்ரோட்டி ஆஸ்பத்திரியில் அவர் ரொம்பக் கஷ்டப்பட்டுக் கிடந்தார். வெயில் தாங்காது. ரொம்பக் கடுமை. மண்டை வெடிச்சிடும் போல இருக்கும். நானும் அண்ணாமலைப் பிள்ளையும் தொட்டியிலே தண்ணியை நிரப்பி விட்டு ராத்திரியெல்லாம் தொட்டித் தண்ணியிலேயே உட்கார்ந்துக்கிட்டிருப்போம். அண்ணாமலைப் பிள்ளை ஏதாவது பாடிக்கிட்டு இருப்பார்…”
“அவர் நல்லாப் பாடுவாரா?”
“சுமாராப் பாடுவாரு. ஏதாவது லாவணி தீவணி பாடிக்கிட்டிருப்பார். நான் கேட்டுக்கிட்டிருப்பேன். என்ன செய்யறது? ஜெயிலுக்குள்ளே பொழுது போவணுமில்லையா?”
‘பாவம் சிறைத் துன்பங்களோடு பாட்டுக் கேட்கிற கஷ்டம் வேறா?’ என்று எண்ணிக் கொண்டேன் நான்.
அத்தியாயம் – 6
ஆகஸ்ட் போராட்டத்துக்கு முன் இந்தியாவுக்கு வந்த கிரிப்ஸ் மிஷன் இந்தியத் தலைவர்களுடன் பேசி ஓர் உடன்பாட்டுக்கு வர எண்ணினார்கள். அந்தத் தூது கோஷ்டி யின் முயற்சி வெற்றி பெறாததால், அவர்கள் தோல்வியுடன் திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று. இந்த நேரத்தில்தான் ராஜாஜி முஸ்லிம் லீகின் பாகிஸ்தான் கோரிக்கையை ஒப்புக் கொள்ளலாம் என்றும், அவர்களையும் சேர்த்துக் கொண்டு தேசிய சர்க்கார் அமைக்கலாம் என்றும் ஒரு யோசனையை வெளியிட்டார். இந்த யோசனையைக் காங்கிரஸ் காரியக் கமிட்டி ஏற்றுக் கொள்ள மறுத்தது. இதனால் ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகித் தனி மனிதராக நின்று தம்முடைய பாகிஸ்தான் பிரசாரத்தைத் தொடங்கினார்.
இதற்குப் பிறகுதான் பம்பாயில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி அடுத்தாற்போல் காங்கிரசின் போராட்டம் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி ஆலோசித்தது. இந்தச் சரித்திரப் புகழ் வாய்ந்த கூட்டத்துக்கு நாட்டின் எல்லாத் திசைகளிலிருந்தும் காங்கிரஸ் தலைவர்களும், பிரமுகர்களும், தொண்டர்களும் போயிருந்தார்கள்.
ஆகஸ்ட் எட்டாம் தேதியன்று பம்பாய் நகரமே அல்லோல கல்லோலப்பட்டது. காந்திஜி, சர்தார் படேல், நேருஜி போன்ற பெருந்தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டிலிருந்து தலைவர் சத்தியமூர்த்தி, காமராஜ், பக்தவத்சலம் முதலானோர் பம் பாய்க்குப் போயிருந்தார்கள்.
“வெள்ளையரே, வெளியேறுங்கள்!” என்று பிரிட்டிஷ் ஆட் சியை எதிர்த்து மகாத்மா குரல் கொடுத்தார். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியும் அப்படியே தீர்மானம் நிறைவேற்றியது.
அவ்வளவுதான்; மறுநாளே மகாத்மா காந்தி, நேருஜி போன்ற பெருந் தலைவர்களெல்லாம் அடுத்தடுத்துக் கைது செய்யப்பட்டார்கள். இதற்குள் யார் யாரை எங்கெங்கே கைது செய்ய வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி ஒரு பட்டியலைத் தயாரித்துத் தயாராக வைத்திருந்தது.
பம்பாய்க் கூட்டம் முடிந்து ரயில் ஏறி ஊருக்குத் திரும்புவதற்குள்ளாகவே பல காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழ் நாட்டிலிருந்து போன சத்திய மூர்த்தி முதலானவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
“உங்களை எப்ப கைது செய்தாங்க?” என்று காமராஜைக் கேட்டேன்.
“நான் முத்துரங்க முதலியார், பக்தவத்சலம், கோபால ரெட்டி, எல்லோரும் ரயிலில் வந்துக்கிட்டிருந்தோம். எனக்கு ஒரு சந்தேகம், வழியிலேயே எங்காவது என்னைப் பிடிச்சிடு வாங்களோன்னு. ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னாலே தமிழ் நாடு பூராவும் சுற்றிப் போராட்டத்தை எப்படி நடத்தணுங் கிறதைப் பற்றி அங்கங்கே உள்ளூர்க் காங்கிரஸ்காரங்ககிட்டே பேசிடணும்னு நினைச்சேன். அதுக்குள்ளே ‘அரெஸ்ட் ஆயிடக் கூடாதுங்கிறது என்னுடைய பிளான்.
சஞ்சீவ ரெட்டியோடு குண்டக்கல் வரைக்கும் போய், அங்கிருந்து பெங்களூர் மார்க்கமா ஆந்திராவுக்குப் போய், சஞ்சீவ ரெட்டியோடு இரண்டொரு நாள் தங்கி, சரியானபடி திட்டம் போட்டுக்கிட்டு, அப்புறம் தமிழ் நாட்டுக்கு வரணும்னு முதல்லே நினைச்சேன். ரெட்டியும் அவங்க ஊருக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டாரு. ஆனா எனக்கு ஒரு சந்தேகம், இந்த நிலையிலே சஞ்சீவ ரெட்டியைப் பாதி வழி யிலேயே கைது பண்ணிடுவாங்க, அப்ப என்னையும் போலீஸ் சும்மா விடாதுன்னு…
சரி, நீங்க போங்க, நான் தமிழ் நாட்டுக்கே போயிட றேன்னு சஞ்சீவ ரெட்டி கிட்டே சொல்லிட்டு, அரக்கோணம் வரை வந்துட்டேன். அரக்கோணத்திலே எட்டிப் பார்த்தா, பிளாட்பாரம் பூரா ஒரே போலீஸாயிருந்தது. வந்தது வரட்டும்னு தைரியமா பிளாட்பாரத்தில் இறங்கி நடந்தேன். நல்லவேளையா என்னை யாரும் கைது செய்யல்லே. அவங்க லிஸ்ட்லே என்பேரு இருந்ததா, இல்லையான்னும் தெரியல்லே. மளமளன்னு ஸ்டேஷனுக்கு வெளியே போய் ஒரு வண்டியைப் பிடிச்சு, சோளங்கிபுரம் போயிட்டேன்.
“அங்கே எதுக்குப் போனீங்க?”
“அங்கே ஓட்டல் தேவராஜய்யங்கார்னு ஒரு காங்கிரஸ் காரர் இருந்தார். பழைய காங்கிரஸ்காரர். அவருக்கு இரண்டு பிள்ளைங்க. ஒருத்தர் ஏதோ சினிமா தியேட்டரோ, கம் பெனியோ நடத்திக்கிட்டிருக்கார்னு கேள்வி.
தேவராஜய்யங்கார் ஓட்டல்லே சாப்பிட்டுவிட்டு, கார் மூலமா அன்றைக்கே ராணிப்பேட்டை போயிட்டேன். ராத் திரி பத்து மணி இருக்கும். கலியாணராமய்யர் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினேன். அவர் கதவைத் திறக்கல்லே. அவருக்குப் பயம், போலீஸார் தன்னைக் கைது செய்ய வந் திருப்பாங்களோன்னு. என் குரலைக் கேட்டப்புறம் தான் மெது வாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். அந்த நேரத்தில் என்னைக் கண்டதும் அவருக்கு ஆச்சரியமாய்ப் போய் விட்டது.
சரி, நீங்க இங்கே தங்கினால் ஆபத்து. போலீஸார் கண்டு பிடித்து விடுவார்கள். வாங்க இன்னொரு இடம் இருக்கு’ன்னு சொல்லி ராணிப்பேட்டைக்கு வெளியே ஒரு மைல் தள்ளி ஒரு காலி வீட்டுக்கு அழைச்கிட்டுப் போனார். அது ஒரு முஸ்லிம் நண்பருக்குச் சொந்தம்.
அந்த வீட்டிலேயே ராத்திரி படுத்துத் தூங்கினேன். மறுநாள் பகல்லே கலியாணராமய்யரிடம் பேசிக்கிட்டிருக் கிறப்போ கொஞ்ச தூரத்தில் யாரோ ஒரு சப் இன்ஸ்பெக்டர் வர்ற மாதிரி தெரிஞ்சுது.
சப் இன்ஸ்பெக்டரைக் கண்டதும் கலியாணராமய்யருக்கு மறுபடியும் பயம் வந்துட்டுது.
சரி, கைது செய்யத்தான் வர்றாங்க. இனி தப்ப முடியாது இப்ப என்ன செய்யலாம் என்று என்னைக் கேட்டார்.
வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு நான் உள்ளே போய்ப் படுத்துக்கிட்டேன்.
சப் இன்ஸ்பெக்டர் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு, ‘இந்த இடம் போதாது; அவ்வளவு வசதியாயும் இல்லை.டி.எஸ்.பி. வர்றார். அவர் தங்கறதுக்கு இந்த இடம் சரியாயிருக்குமான்னு பார்க்கத்தான் வந்தேன்’னு சொல் லிட்டுப் போயிட்டார். அப்புறந்தான் கலியாணராமய்யருக்கு மூச்சு வந்தது.
அன்று மாலையே நானும் கலியாணராமய்யரும் கண்ண மங்கலம் ஸ்டேஷனுக்குப் போய் ரயிலேறிட்டோம். அங்கிருந்து வேலூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வரைக்கும் போலீஸார் கண்ணில் அகப்படாமலேயே போயிட்டோம். அங்கங்கே பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிட்டேன். மதுரையிலே குமாரசாமி ராஜாவைப் பார்த்துப் பேசினேன். அப்ப அவர் ஜில்லா போர்ட் பிரசிடெண்டாயிருந்தார். ஆல் மூவ் மெண்டலே அவ்வளவு தீவிரமா ஈடுபடல்லே.
மதுரையிலே என் வேலை முடிஞ்சதும் திருநெல்வேலி, ராமநாதபுரம் போயிட்டு, அங்கிருந்து விருதுநகருக்குப் போய் அம்மாவைப் பார்த்துட்டு, கடைசியாக மெட்ராசுக்குப் போயிடலாம்னு நினைச்சேன்.
இதுக்கு இடையிலே போலீஸ்காரங்க அரியலூருக்குப் போய் என்னைத் தேடிக்கிட்டிருந்தாங்க. அப்ப காங்கிரஸ் மகாநாடு ஒன்று அங்கே ரகசியமா நடக்கப் போவதாய் போலீசுக்கு தகவல் கிடைச்சிருக்கு. நாள் எப்படியும் அங்கே வருவேன், பிடிச்சுடலாம்னு போலீஸார் அங்கே போய் உஷாரா காத்துக் கிட்டிருந்தாங்க. நான் எல்லா இடத்துக்கும் போயிட்டுக் கடைசியாக விருதுநகருக்குப் பக்கத்திலே இருந்த ஒரு கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே ராமசந்திர ரெட்டி யாரைப் பார்த்து அவர் வண்டியிலே விருதுநகருக்குப் போனேன்.”
“வண்டியிலே எதுக்குப் போனீங்க?”
“விருது நகரிலே எங்க வீட்டுக்குப் போற வழியிலேதான் போலீஸ் ஸ்டேஷன் இருக்குது. அந்தத் தெரு வழியா நடந்து போனா போலீஸார் பார்த்துட மாட்டாங்களா? அதனாலே வண்டியிலே போனேன்.”
“அம்மாவைப் பார்த்தீங்களா?”
“ஆமாம்; ராத்திரி வீட்டிலேதான் இருந்தேன். அதுக் குள்ளே போலீசுக்கு எப்படியோ தகவல் எட்டிவிட்டது. சரி, இனி மெட்ராஸ் போக முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. அதனாலே ‘நான் வீட்டிலேதான் இருக்கேன். அரெஸ்ட் செய்யறதாயிருந்தால் செய்துக்கலாம்’னு போலீஸ் ஸ்டேஷ னுக்குச் சொல்லி அனுப்பிட்டேன்.”
“எழுத்தச்சன்னு ஒரு சப் இன்ஸ்பெக்டர்தான் உங்களை அரெஸ்ட் செய்தார் இல்லையா?”
“ஆமாம், அவர்கூடச் சொன்னார், ‘வேணும்னா நீங்க இன்னும் சில நாள்கூட வெளியே இருக்கலாம். போலீஸ் உங்களைத் தேடிக்கிட்டு அரியலூர் போயிருக்கு துன்னு, நான் தான் என் வேலையெல்லாம் முடிஞ்சுட்டுது. இனிமேல் வெளியே இருந்து ஒண்ணும் செய்ய முடியாது. உள்ளே போவதுதான் சரின்னு சொல்லிட்டேன். அப்புறம் என்னை அரெஸ்ட் பண்ணிக்கிட்டுப் போயிட்டாங்க.”
“ஜெயில்லேருந்து எப்ப வெளியே வந்தீங்க.”
“மூணு வருஷம் கழிச்சு 1945 ஜூலையில் வந்தேன்.”
“அதுவரைக்கும் நீங்கதான் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் பிரஸிடெண்டா?”
“ஆமாம். எல்லாருமே ஜெயிலுக்குப் போயிட்டாங்க. காங்கிரஸுக்குச் சர்க்கார்லே வேறே தடை போட்டிருந்தாங்க ராஜாஜி காங்கிரஸிலிருந்து விலகிப் பாகிஸ்தான் பிரசாரம் செய்துக்கிட்டிருந்தார். இதனாலே அவர் பேரில் காங்கிரஸ் காரர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு, ராஜாஜி எதிர்ப்புக் கோஷ்டின்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே பலமா வளர்ந்த விட்டது”
“காந்திஜ தமிழ்நாட்டிலே சுற்றுப் பயணம் செய்துட்டுப் போறப்போ ராஜாஜிக்கு எதிரா இருந்தவங்களைக் ‘கிளிக்’ என்று சொன்னாரே, அது அப்பத்தானே?”
“ஆமாம்; ஹரிஜன் பத்திரிகையிலே அப்படி எழுதினார். நான் அதை ஆட்சேபித்து அறிக்கை விட்டேன். காந்திஜி அப்படிச் சொன்னது தப்புன்னு சர்வோதயம் ஜகந்நாதன் மதுரைக் கோயில்லே போய் உட்கார்ந்துகிட்டு உண்ணாவிரதம் இருந்தார்.
காந்திஜி சொல்லிட்டாரே. அதை எப்படிக் கண்டிக்கிற துன்னு நான் பயப்படல்லே. இதே மாதிரி படேலுடன் கூட ஒரு சமயம் சண்டை போட்டிருக்கேன். 1945-இல் மத்திய அசெம்பிளிக்கு யார் யாரைப் போடணும் என்பதில் எனக்கும் படேலுக்கும் தகராறு வந்தது. மைனாரிட்டி வகுப்பிலேருந்து யாராவது ஒருத்தரைப் போடலாம்னு நான் சொன்னேன். தூத்துக்குடி பால் அப்பாசாமிங்கிறவரைப் போடலாம். கிறிஸ்துவராயும். இருக்கிறார். படிச்சவராயும் இருக்கார்னு சொன்னேன்.
அவருக்கு வயசாயிட்டுதுன்னு சொல்லி மறுத்துட்டார். படேல். அவருக்குப் பதிலா மாசிலாமணி என்பவரை ஏன் போடக்கூடாதுன்னு என்னைக் கேட்டார்.
அவருக்கு உடல்நலம் சரியில்லை. அவர் வேண்டாம்னு நான் சொன்னேன்.
என்ன உடம்புன்னு என்னைக் கேட்டார். அவருக்கு ‘லெப் ரஸி” இருக்குதுன்னு சொன்னேன். படேல் நம்பல்லே; நான் பிடிவாதமாயிருந்தேன் ‘நான் சொல்றதிலே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மெடிக்கல் ரிப்போர்ட் மூலமா செக் பண்ணிக்கலாம்’னு சொன்னேன். அப்புறம் தான் மாசிலாமணி பேர் அடிப்பட்டுப் போச்சு. அம்மு சுவாமிநாதனை போட் டாங்க. என்னைப் படேல் நேரில் வரச் சொல்லிப் போன் பண்ணினார். நான் அப்ப பம்பாயில்தான் இருந்தேன். லிஸ்ட்டை முடிவு செய்யுங்க, அதுக்கப்புறம் நான் வந்து சந்திக்கிறேன்’னு சொல்லி விட்டேன்.
– தொடரும்…
– சிவகாமியின் செல்வன், சாவியில் தொடராக வெளிவந்த காமராஜரின் அரசியல் வாழ்க்கை, நான்காம் பதிப்பு: ஜனவரி 1990, மோனா பப்பிளிகேஷன்ஸ், சென்னை.