கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 15, 2025
பார்வையிட்டோர்: 46 
 
 

(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மனம் நிர்ச்சலனமாக இருக்க மறுக்கிறது. 

அமைதியாக கொஞ்ச நேரத்துக்கு உட்கார்ந்திருக்கலாமென்று இங்கே வந்தால் மூளையை புரட்டி குத்துகின்ற ஆரவாரம் இதோ. என் அயல் முழுவதுமே செறிந்து கனத்திருந்தது. ஓங்கித் தலையுயர்த்தி அதே வேகத்திலே தலைகீழாக விழுந்து டொமார் டொமார் என முறிகின்ற கடல் அலைகள் வெளிறிப்போய் நீலங் கரைகின்ற வானம். சோகை பிடித்த பூவரச மரங்கள் காட்டுக் கத்தலாய் குழம்பிக் கேட்கின்ற மனிதக் குரல்கள்…. 

மனம் இன்றையைப் போல எனக்கு குழம்பியதில்லை. சில வேளை பல நாளைய நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியான மனக் குழைவுகள் இன்று தனது உச்ச கட்டத்தினை எய்தியிருக்கலாம். கொஞ்சம் நின்று கண்களைச் சுற்றிப் பாருங்கள். அமைதியையோ சந்தோஷத்தையோ தரிசிக்கக் கூடியதாக இருக்கின்றதா? அவசரம் பரபரப்பு எதிரே தெரிகின்ற ஏதோ பயங்கரத்துள்ள தாய் அஞ்சி வழிவிட்டு விலகி அவசர அவசரமாக ஓடித் தப்புகின்ற வேகம் வெளியுலகச் சூழல்களெல்லாம் மனிதனின் உள்ளுணர்வுகளை எவ்வளவு பூதாகரமாகப் பாதித்து அவனைக் கிலுகிலுக்க வைத்துவிடுகின்றன என்பதனை இந்த நாட்களிலே நான் அனுபவரீதியாக உணர்கிறேன். 

வேணுகோபாலின் முடிவு சில வேளைகளில் இப்படி மாறாகவே நிலைகுலையச் செய்திருக்கலாம். அதனால் தான் மாலையில் நான் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் நினைத்துப் பார்க்கின்ற போது இந்த ஆத்திரத்திற்கும் ஆழமான காரணமிருந்தது. வேணுகோபாலன் சிறு குழந்தையல்ல பதினெட்டு வயது இந்த மார்கழியோடு அவனுக்கு முடிகிறது. நகரத்திலே பிரபல கல்லுாரியில் படித்து வந்தான். விளையாட்டுத் துறையிலும் துலங்கினான். ‘கிரிக்கெட் மாச்’சுக்கு கப்டனாய் விளையாடிக் கொண்டிருந்தவன் இடைவேளையோடு காணாமல் போய்விட்டான். இரவு எட்டரை மணிபோல் அவனது அக்கா – எனது மனைவி பூமணி – திடீரென்று அழுத குரல் கேட்டது. அறைக்குள்ளே போனேன். கடிதத்துண்டு ஒன்றைக் கையில் வைத்தவாறு விசும்பிக் கொண்டிருந்தாள். ‘என்னைத்தேடர்தீர்கள். 

“வேணு” என்ற வார்த்தைகள் என் பிடரியையும் மனதையும் மூர்க்கமாக அறைந்து தாக்கின. நிலைகுலைந்து போய்விட்டேன். அவன் எங்கே போயிருக்கிறான். என்பதை உடனே யூகித்துக் கொண்டேன். மனதிலே என்னவோ அழுத்திற்று. 

பூமணி இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள். என்னால் வேணுகோபாலலின் செய்கையினை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஆயினும் பின்னோக்கி மனதைத் தள்ளிக் கொண்டு இறந்த காலத்தின் சின்னச் சின்ன நிகழ்ச்சிகளையெல்லாம் அலசியெடுத்து கண்களின் முன்னே கொண்டு வருகின்ற போது இவனின் செய்கைக்கான வேரினைக் கண்டு கொள்ள முடிகின்றது. 

இவனுடைய சினேகிதன் சாந்தன் மிகவும் கெட்டிக்காரனாயிருந்தான். இரண்டு முறை முயன்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாக முடியவில்லை. ராஜன் என்ற இன்னொருவன் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து போய்க்கொண்டிருந்தான். கலகலப்பான இளைஞன் எந்த இயந்திரத்தையும் முதல் முறை பார்த்த கையோடேயே கழற்றிப் பூட்டிவிடுவான். கொஞ்சமும் பிசகில்லாமல் அதிகாலைப் பொழுதொன்றில் மூர்க்கத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டான். வேணுகோபாலன் அன்று தொட்டு சில நாட்களுக்கு வெறிபிடித்தவன் போலத் திரிந்தான். நேரத்துக்குச் சாப்பாடில்லை. நான் மெதுவான குரலிலே கொங்சம் அதட்டுகிற தொனியோடு அவனை அணுகினேன். 

“அதை இதை யோசியாமல் படிப்பிலை கவனம் வை வேணு. 

வேணு என்னை சோர்வு மிதக்கின்ற கண்களோடு பார்த்தான். “படிச்சுத்தான் என்னத்தை அத்தான் செய்யிறது? வாழ்க்கையே நிச்சயமில்லாத ஒன்றாய் போச்சுது…….” 

என்மனம் திக்கென்றது. பதினெட்டு வயதின் அங்கலாய்ப்பு என்னை அடித்து நிறுத்தியது. என்னாலே எதுவும் சொல்ல முடியவில்லை. அவனுக்கும் எனக்கும் ஒரு தலைமுறைகால இடைவெளி என்பது வருஷங்களில் மட்டுமல்ல சிந்தனையில் அனுபவங்களில், நடைமுறைச் சிக்கல்களில், வாழ்க்கை நோக்குகையில்….. இப்படி எல்லாவற்றிலுமே என்று அறிகின்றேன். எவ்வளவு இடைவெளி! 

அவனது துண்டுக் கடிதம் அதை இறுக்கமாய் உணர்த்திவிட்டது. 

எவ்வளவு இலேசாக எல்லா உறவுகளையும் தனியென எண்ணி அறத்தெறிந்துவிட்டு வேணு கோபாலன் சர்வ சாதாரணமாக வீட்டை விட்டு போய்விட்டான். முன்பென்றால் கொழும்பிற்கு நான் புறப்படுகின்ற போது ஒப்பாரியொன்றோடுதான் வீட்டை விட்டுப் பிரிவேன். கோழி இறகுக்குள் குஞ்சென வளர்ந்தோம். இப்போது எல்லாமே உடைந்து நொறுங்கிச் சிதறிப்போய் குஞ்சுகள் எல்லாம் எவ்விதம் … எவ்விதம் அதிகாலைவரை பூமணி திக்கித்துப் போய் நித்திரையில்லாமல் உட்கார்ந்திருந்தாள். மடியிலேயே ஆறு வயதுக் குழந்தை பாரதி பூங்கொத்தாய் உறங்கிக் கொண்டிருந்தாள். எவ்விதமான கவலையுமின்றி உறங்கிக்கொண்டிருக்கின்ற என் மகளின் நிர்மலமான முகத்தினைச் சில கணங்களுக்குப் பார்த்தேன். இது போன்ற முகப்பொலிவோடு இவள் வாழ்வு முழுவதும் விளங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும். அந்த நினைவோடேயே வேணுகோபாலணும் மனதிலே முகங்காட்டினான். பாரதியைப் போலத்தான் இவனும் ஒரு கபடமறியா குழந்தையாய், சிறமலராய் என் கண்ணெதிரிலேயே வளர்ந்தவன். 

காலையிலே எழுந்ததும் பாரதியைப் பார்த்தேன். நேற்றைய பதட்டங்கள் அவளது முகத்திலும் இலேசாகப் பூசியிருந்தன. நித்திரையால் மாமனை எழுப்பித் தேனீர் கொடுப்பது அவள்தான். மாமனைத் தேடினாள். காணவில்லை. தாயிடம் கேட்டாள். அவள் அதட்டவே சிணுங்கல் தொடங்கிற்று. அதிர்ந்து பேசாத தாய் மகளை உறுக்கவே சிணுங்கல். அழுகையாய் விரிந்தது. குழந்தைகள் அழுவதை கொஞ்ச நேரத்துக்குத்தான் தாங்கலாம். நான் சென்று மகளைத் தூக்கினேன். ஆறுதல் சொன்னேன். வாக்குறுதிகள் கூறினேன். சிணுங்கல் கொஞ்சமேனும் மங்கவில்லை. மெல்லவே தலையை வருடினேன். ஏதோ நினைத்துக் கொண்டவளாய் காதோடு கிசுகிசுத்தாள். 

“சுபாஷிணியின் அண்ணாவை ஜீப்பிலை வந்து கொண்டு போட்டாங்களாம். சுபா அழுதழுது சொன்னவள். மாமாவையும் அவங்களா கூட்டிக்கொண்டு போயிட்டாங்கள்? அவங்கள் மாமாவை அடிப்பாங்களா அப்பா?” 

நான் விக்கித்துப் போனேன். ஆறுவயதான இவளுக்கு எவ்வளவு விஷயங்கள் தெரிந்து விட்டன. இனிமேல் பிறக்கின்ற குழந்தைகளே இவைகளையெல்லாம் உடனுக்குடன் அறிந்து கொண்டுவிடுமென எண்ணினேன். மீண்டும் மகள் உலுப்பினாள். 

“இல்லை அப்படியில்லை மாமா வேறை இடத்தை போயிருக்கிறான். சுறுக்காப் பிள்ளைக்கு சொக்காவும் கொண்டு வந்திடுவான். நீங்கள் அச்சாப் பிள்ளையாய் போய் முகத்தைக் கழுவுங்கோ….” 

எனது ஆறுதல் வார்த்தைகள் பாரதியின் கவலையைக் குறைப்பதாகத் தெரியவில்லை. “அம்மா, ஏனப்பா அழுகிறா? மாமா போனதாலதானே…. மாமா எங்கை அப்பா போனவர்? மாமாவைக் கூட்டிக் கொண்டு வாருங்கோ.” 

திடுமெனப் பூமணி அவ்விடத்திலே பிரசன்னமானாள். குழந்தையை உலுப்பி உறுக்கினாள். இழுத்துக்கொண்டு கிணற்றடிப் பக்கமாக நடந்தாள்பாரதி மிகத் தீனமான குரலிலே வீறிட்டு அலறிக்கொண்டு தாயோடு இழுபட்டாள். எனக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. “அவன் கடிதத்திலை சுருக்கமாக எழுதினதுதான் விஷயம். அவன் குழந்தைப்பிள்ளையில்லை. யோசிக்கத் தெரிந்தவன். நீ அதைச் சாட்டிக் கோளாறு எடுத்துக் கொண்டிருக்க வேண்டாம். உன்னைப் போலத்தான் எனக்கும். அவனிலை அன்பிருக்குது. பேசாமல் பார்க்கவேண்டிய அலுவல்களைப்பார் குழந்தையை அழுவிக்காதை. 

பட்டென்று அவளின் வார்த்தைகள் உதிர்ந்து சிதறின. 

“உங்களின்ரை தம்பியெண்டால் இப்படி லேசாச் சொல்லுவீங்களோ?” 

நெஞ்சையடித்த அவளின் வார்த்தைகளை வார்த்தைகளால் எதிர்கொள்ளும் பொறுமை எனக்கு இருக்கவில்லை. கையைமூர்க்காவேசமாக பளார் பளார் 

எதிர்பாராத என் செயலால் அதிர்ந்து போனவள் திகைப்பிலிருந்து மீள நெடுநேரம் சென்றது. வார்த்தைகளை இழந்து நின்றாள். வீடு திரும்பிய போது விறாந்தையிலிருந்து பாரதி விளையாடிக்கொண்டிருந்தாள். அவளைச் சமாதானப் படுத்த கையிலே சொக்கிலேற்றும், மனதிலே யோசனையுமிருக்கிறது. வாரித்துாக்கினேன். 

“பாரதிக்குட்டிக்கு ஒரு சங்கதி சொல்லப்போறேன்…… 

“என்னப்பா சொல்லுங்க சொல்லுங்க” 

ஆர்வம் வார்த்தைகளில், முகத்தில், கண்களில் 

“நீங்க நெடுகக் கூட்டிக் கொண்டு போகச்சொல்லுவீங்களே ஒரு இடத்துக்கு அங்கை அடுத்த கிழமை கூட்டிக் கொண்டு போகப்போறன்…” 

அவள் கண்களை மலர்த்தி யோசித்தாள். பிடிபடவில்லை. கெஞ்சுகிற குரலில் மீண்டும் கேட்டாள். “எங்கையப்பா?” 

“கொழும்புக்கு மிருகக்காட்சி சாலைக்கு உங்களின்ரைரீச்சர் பார்க்கச் சொல்லி சொன்னாவே அந்த மிருகக்காட்சி சாலைக்கு ….” நான் சொல்லி முடியவில்லை திமிறிக்கொண்டு என்னை விட்டு இறங்கிய பாரதி தடுமாறுகிற குரலில் தளதளத்தாள். 

“இல்லையப்பா என்னை அங்கை கூட்டிக்கொண்டு போகாதேங்க…. அங்கை போனால் அகதியாய் போய்விடுவமாம். சுமி சொன்னவள். அவள் எங்களின்ரை வகுப்புக்கு புதிதாய் வந்த பிள்ளை. கொழும்பிலை இருந்தவளாம். அவளின்ரை அப்பா செத்துப் போனாராம். வீடு உடைஞ்சு அவயளிட்டை இப்ப ஒண்டுமில்லையாம்.” அவள்தான் சொன்னவள் கொழும்புக்கு போனால் அகதியாய்தான் வரவேணுமாம். வேணாமப்பா கொழும்புக்கு நான் வரமாட்டன். 

நான் கணத்தில் குழம்பிப் போனேன். வேணு கோபாலின் சிந்தனை போய் இப்போது பாரதி பற்றிய கவலை கனக்கலாயிற்று. 

செ.யோகநாதன்

ஈழத்துச்சிறுகதை வரலாற்றில் ஒரு முக்கியமான ஒருவரான செ.யோகநாதன் ஈழநாடு இதழில் ‘வடு’ என்றொரு சிறுகதையை எழுதியுள்ளர். செ. யோகநாதனின் சிறுகதைகள் சமுக வாழ்வின் விமர்சனங்களாக விளங்குகின்றன என்பர். அவரது சிறுகதைகள் பல தொகுதிகளாக வெளிவந்துள்ளன. குறுநாவல் துறையில் கைவந்தவர். இரவல்தாய்நாடு புகழ் பூத்த குறுநாவலாகும். நாவல்கள் பல படைத்துள்ளர். தமிழகத்தில் பேசப்படும் எழுத்தாளர். 

– 06.11.1983

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

joganathan ஈழத்து எழுத்தாளர் செ.யோகநாதன் - எழுதியவர்: முல்லை அமுதன் - 05 February 2008 1942ல் பிறந்த செ.யோகநாதன் அவர்கள் மாரடைப்பால் இறக்கும் வரை நிறையவே எழுதிக்குவித்தவர். 1962ல் தன் முதல் சிறுகதையான ‘மனக்கோலத்தை’ எழுதியது முதல் தொடர்ந்து சிறுகதை, நாவல், குறுநாவல், சிறுவர் இலக்கியம், திரைப்படம், விமர்சனங்கள் என எழுத்தை விரிவுபடுத்தியவர். ஜெயகாந்தனின் ‘வாழ்க்கை அழைக்கிறது’ நாவலை ‘அக்கினிப் பிரவேசம்’ எனும் சிறுகதையை வாசித்தபோது ஏற்பட்ட அதிர்வலைகள் எனக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *