கள்ளும் கருப்ப நீரும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2025
பார்வையிட்டோர்: 40 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கப்புடன் சாய்ந்திருப்பவர் தான் பிராம்பத்தைக் கணபதிப்பிள்ளையார். மனைவி பாறுபதிப்பிள்ளையின் படுக்கையுடன் பிராம்பத்தைக் கணபதிபிள்ளையர். மனைவி பாறுபதிப்பிள்ளையின் பாயோரியான படுக்கையுடன் அவரையும் நாரிப்பிடிப்பு வலுவாக பாடு காட்டி விட்டது. இருந்தால் எழும்பேலாது. எழும்பினால் இருக்கேலாது. குனிந்து வளைந்து எதுவுமே செய்ய இயலாத நிலை. ஆள் வெகுவாகச் சோர்ந்து போய்விட்டார். 

எல்லாம் மனைவி பாறுபதிப்பிள்ளையையும் மகன் பரமுவையும் பற்றிய யோசனைதான். அவரை இப்படி வெகுவாக நோகடித்துவிட்டது. கால்களைப் பின்னிப் போட்டபடி திண்ணைக் கப்புடன் சாய்ந்திருக்கும் அவர் தனது அவிழ்ந்த குடுமியைக் கூட அள்ளிக்கட்ட மறந்த நிலையில் ஈக்கில் குச்சியொன்றை வாயில் விட்டுத் துளாவிக் கொண்டே பாரிய யோசனையில் ஆழ்ந்திருக்கின்றார். 

அவரது பார்வை எதிர்த்தாற் போலுள்ள திண்ணையில் பாய்க்கு மேலாகப் பழஞ்சீலைக் குவியல்களைப் பரப்பி வளர்த்தப்பட்டிருக்கும் மனைவியையும், அடுப்பில் சுடுதண்ணீர் வைத்து எரித்துக்கொண்டிருக்கும் மூத்த மகன் பரமுவையும் மேய்ந்தவண்ணமிருக்க அவரது நெஞ்சின் ஆழத்தில் இடை மட்டத்துச் சுழி நீரிழுப்பாக சுழித்து இழுத்துச் செல்லும் யோசனை- 

‘பாறுபதிப்பிள்ளை பாவம் செய்யதவளல்ல. என்றாலும் சீவன் போக வலுவாக வில்லங்கப் படுத்திது. பாயோடு பாயாகப் படுத்தும் இன்றைக்குச் சரியாக மாதம் ஒன்றாகப் போய்விட்டது. ஹம்…. பெடியன் மூத்ததுபாடுதான். ஓய்வொழிச்சலில்லாத கஷ்டம். என்ன செய்வது? அதுகும் கூலிக்குப் போய் கல்லை மண்ணை துாக்கிக்குடுத்து நாலுசதம் பிழைச்சு வந்தால் தான் எங்கடை சீவியமும் ஒரு மாதிரியாகப் போகும். ஓம்! கடைசி காலத்திலை இவள் பாவிக்கும் நல்லது நறியது திங்க ஆசை இருக்குந்தானே. அதெல்லாத்துக்கும் ஆற்றை வீட்டை போறது? அது பெடியின்ரை ஊனத்தைத்தான் பிழிஞ்சு குடிக்க வேண்டிக்கிடக்கு. நான் பின்னை முன்னத்தையிலாளே.’ 

கணபதிப்பிள்ளையின் நெஞ்சில் சினைப்பட்ட நினைவுகளில் சில பிரசவமாகியும், நஞ்சுக்கொடி விழாத தவிப்புடன் சுடுதண்ணீர் வைத்து எரித்துக் கொண்டிருக்கும் மகன் பரமுவை வெகு ஏக்கத்துடன் பார்க்கிறார். 

‘பாவம் பெடியன் வலுவாகத் தேஞ்சு ஓடாகப் போய்விட்டான். 

மறுபடியும் அவரது நெஞ்சில் எண்ணங்கள் துளிர் விட்ட போது அவர் கண்கள் அதற்கு நன்றி உணர்ச்சியோடு நீர் பாய்ச்சுகின்றனவா? 

கடவுளே ஒரு பெம்பிளைப்பெடி இல்லையென்ற குறையை இந்த ஆண்பெடி போக்கிக்கொண்டிருக்கிது. இல்லையெண்டால் இவள் தாய்க்காரி கிடந்த மாதிரிக்கும் படுத்த படுக்கையாகவே மலஞ்சலமெல்லாம் போகத்துவங்கின மாதிரிக்கும் எவ்வளவு நாணய சீலப்பட்டு, நாறி மணந்து சீரழிஞ்சு, நாலு பேருடைய நாக்கு வளைப்புக்கு ஆளாகி இருக்க வேணும். சோத்திலை வைச்சுக் காச்சுவதிலிருந்து. அவளுடைய பீச் சீலைகளைக் கூட துவைச்சுப் போடுறதிலை இருந்து என்ர மூத்த முழு ஆம்பிளைப் பிள்ளைதானே செய்யுது. ஆ கடவுளே, அதுக்கு என்ன சோதனையான கட்டத்தை எழுது வைச்சிட்டாய்.? ஓம் அவன் தடுக்குப் பிள்ளையாக இருக்கிறபோது அதின்ரை எல்லாவற்றையும் அவள் செய்தாள். இன்றைக்கு அவளின்ரை ஊத்தைகளையெல்லாம். அது இழுத்துப் பறிச்சுச் சுமக்கிது. தெய்வமே இந்தப் பிள்ளையின்ரை ஆவியும் பறிஞ்சிட்டுதெண்டால்….’ 

“ஐயாவுக்கும் தேத்தண்ணி தரட்டுக்கே?” 

மகன் பரமுவின் குரல்தான். அந்தக் குரலில் விரவிக்கிடந்த ஈரச் செழிப்பு அவரை நீவிக் கொடுத்து அவன் தரப்போகும் தேநீரை விட அவருக்கேற்பட்டிருக்கும் சோர்வையெல்லாம் அகற்றிவிட்டதான ஒரு நிலை. 

“பின்னை எரப்பன் தாவன். அதோடை கொம்மாவுக்கம் அந்த மருந்துக் குழிசையையும் குடனப்பு” 

“ஓம் ஐயா, அதுதான் அநுபானச் சட்டியை அடுப்பிலை வைச்சிருக்கிறன்.” 

” நீ பேந்து வேலைக்குப் போகவில்லையே தம்பி?” 

“போகப்போறன் ஐயா.” 

“என்ன சாப்பிட்டனி?” 

“நான் கடையிலை சோறு சாப்பிட்டனான் ஐயா உங்களுக்கு சோறு வாங்கிவந்து வைச்சிருக்கிறன். சாப்பிடுங்கோ.’ 

‘சோறு சாப்பிட்டவன் உடனே தேத்தண்ணி குடிப்பானே? பாணை, இடியப்பத்தைத்தான் சாப்பிட்டிருப்பான். தன்ரை வயித்தை வாயைக் கட்டி எங்களுக்கு தவுந்தைத் தந்திட்டு தான் தண்ணியைக் குடிக்குது. 

கணபதிப்பிள்ளையரின் நெஞ்சில் எண்ணங்கள் அவிகின்றன. தாயின் பொருட்டும் தன் பொருட்டும் மகன் படும் பாட்டையும், சிரமத்தையும் பார்க்கின்றபோது அவரால் அழாதிருக்க முடியவில்லை. உதடுகளில் பொருத்தி உறிஞ்சி இழுக்கும் தேனீர் கோப்பைக்குள் அவரது கண்களை பிரித்துக் கொண்டு வடிகால் வைத்து இறங்கும் கண்ணீர் கலந்து சங்கமிக்கின்றது. இப்பவோ பின்னையோ என்று கிடக்கும் தாய் பாறுபதிப்பிள்ளையின் அருகில் பரமு அமர்ந்த வண்ணம், அவள் கடவாயில்தன்னிச்சையாய் வழிந்திருந்த வீணத்தை ஒற்றி எடுத்தான். வற்றி வதங்கி ஒடுங்கி வந்துவிட்ட தேகக்கொட்டில் ஓடித்திரியும் இலையான்களை சிறு வேப்பிலைக் கட்டினால் மெல்ல வீசிக்கலைத்தான். குண்டுக் கோப்பைக்குள்ளிருந்த தேநீரைக் கரண்டியால் அள்ளி அதை ஊதி ஊதி மெல்ல அவள் அவதிப்பட்டு விழுங்கும் அத்தேநீர்ச் சொட்டு அவளது கண்கள் வழியே வெளியே வருகின்றதா? மகனை உற்று உற்றுப் பார்க்கும் அவள் விழிகள் ஏன் அழுகின்றன? அடிபட்டு விழுந்து குற்றுயிராகக் கிடந்து துடிக்கம் மானின் வாய்பேசா ஊமை அழுகை. 

“ஏனம்மா அழுகிறாய்? என்ன வேணும்?” 

தந்தை அழுகின்றார். தாய் அழுகின்றாள், எதற்காக? அவன் பொருட்டு அவன் படும் சிரமத்தையும், தங்கள் மேல் செலுத்தும் பாசத்தையும், பற்றையும் நினைத்து அவர்கள் அழுகிறார்கள். ஆனால் பரமு அழுவது….? 

பரமுவின் நெஞ்சை முட்டிவிட்ட துக்கம் அவனது விழித்திரைக்குப் பின்னே வந்து நின்று ‘விசுக்’ கென்று வெளியே வரப்பார்க்கிறது. அதை அவன் அடக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள்….. உதட்டைக் கடித்து முகத்தை வக்கிரமாக்கி, மென்று விழுங்கிய போதிலும் அவனை அறியாமலே அவன் போட்ட அணைகள் அத்தனையும் உடைத்துப் பீறிக்கொண்டு வெளியே வந்துவிட்டதே! 

பாறுபதிப்பிள்ளைக்கு நாக்கைக் குத்தி விழுத்திப் போட்டுது. இரண்டு மூன்று நாட்களுக்கு முந்தியென்றால் திருந்தாப் பேச்சாக அங்கினை இரண்டொரு வார்த்தைகளாவது சொல்லுவாள். ஆனால் நேற்றும் இன்றும் அடியோடு பேச்சே நின்றுபோய்விட்டது. கேட்கவேண்டியதை வலு பலமாக உரத்துப் பல முறை கேட்டால் மாத்திரம் ஏதோ அருவினைக்காற்றாமல் கைப்பாஷையாக காட்டுவாள். 

இப்பொழுதும் மகன் பரமுவின் கேள்விக்கு தனது பலவீனமான மெலிந்த தனக்கே பாரச்சுமையாகிவிட்ட கையை பலவந்தமாகத் தூக்கேலாமல் துாக்கி மகனின் கரத்தை தடவிய வண்ணம் எதுவோ சைகை காட்டினாள். அதைப் புரிந்துகொண்ட தவிப்புடன் பரமு தாயின் கைகளைச் சேர்த்து பழைய ஸ்திதியில் அவளது மார்பில் பதனமாக வைத்தான். 

இவைகளையெல்லாம் கண்ணிமைக்காமல் கண்ணீரிணூாடே பார்த்துக்கொண்டிருந்த கணபதிப்பிள்ளையரின் நெஞ்சில் குருத்துத் தள்ளி சரிந்து சவளும் நினைவுகள் பார்த்திருக்க பஞ்சமா பாதகங்கள் செய்ததுகள் கிடந்து அலைஞ்சுலைஞ்சு ஆறணியப்படாமலும் விழுந்தவுடனேயேபோய்விடுகிதுகள். பதினாறு வயதுச் சிறுமியாக இருக்கும் போது பாறுபதிப்பிள்ளையை கட்டினன். நான் மனமறிய இண்டுவரைக்கும் சின்னொரு பாவம்தானும் செய்திருப்பாளா? அப்படிப்பட்டது இப்படிக்கிடந்து இழுத்து அல்லல் படுகிது…’ என்று கணபதிப்பிள்ளையரின் நினைவுகளுக்கிடையில் மகன் பரமு வந்து எதிரே நிற்கவே அவர் நினைவுத் தொடரின் இழை இற்று அறுகிறது. 

“என்ன தம்பி யோசிக்கிறாய்?”

“……”

தந்தையின் குணவிஷேடங்களைப் பற்றி மகன் பரமு அறியாதவனா என்ன? நாரிப்பிடிப்பு வந்து ஆளை இப்படிப் போட்டுவிட்டதே தவிர, அவருடைய முற்கோபத்தையும், பிடிச்சிராவித்தனமான போக்கையும் அவனென்ன? ஊரே அறியுமே அவரைப்பற்றி. அப்படிப்பட்ட மனிதரிடத்தில் – அவர் மனதார வெறுக்கும் அந்தச் சங்கதியைப் பற்றி அவரிடத்தில், எப்படிச் சொல்வது? சொன்னால் என்ன நிகழுமோ என்ற அச்சத்துடனே பரமு அவர் எதிரே மெளனமாக நிற்கிறான். 

“சொல்லு தம்பி, கொம்மா சொன்ன விஷயத்தைப் பற்றித்தானே கதைக்கப்போகிறாய்?” பரமு சொல்லப் பயந்து நின்ற விஷயத்தை அவரே நேரடியாகத் தொட்டுக் காட்டியதில் அவனுக்கத் தென்பளித்தது. 

“ஓம் ஐயா அவபடுகிற அவதியைப் பார்த்தால் தம்பியை நினைச்சுத்தான் கிடந்து இழுபடுகிறா போலை கிடக்கு. அதுதான் இப்பவும் சொன்னவ.” 

கணபதிப்பிள்ளையர் ஒரு முறை மகனை நிமிர்ந்து பார்த்தார். அந்தப் பார்வைக்குள் பழைய பிராம்பத்தைக் கணபதிப்பிள்ளையரின் எரிதணல் குணவிசேஷங்களெல்லாம் வினாடிப் பொழுதில் அவரது வி ழிகளில் தோன்றி வெளியேற்றிய உலை முகத்து அனல் காற்றின் பெருமூச்சிற்குள் அதை அமுக்கி அகற்றுப்பட்டு விட்டாற் போல் தோன்றிற்று. மறுபடியும் அவர் மகனை நேருக்கு நேராகப் பார்த்தார். பலவிதமான விருப்பு வெறுப்புக்களின் தாக்கங்களில் அவரது முகத்தில் சுழிப்புகள் தோன்றி விகற்பமான மாறுபாடுகளைப் பிரதிபலித்துக் காண்பித்தாலும் மகனிடத்தில் அமைதியாகவே கதை கொடுத்தார். 

“தம்பி வேலைக்கு நேரம் போச்சு. நீ போவிட்டு எல்லாவற்றுக்கும் பிறகு வா’ 

பரமு போவதையே அவர் பார்த்தபடி இருந்தார். அவர் பார்வை தொடர்ந்தும் படலைக்கப்பாற் போக முடியாததால் படலையின் முன்பு நின்று மீளுகிறது. 

முற்றத்துக் கட்டைப்பனையில் ஏறும் அணிலொன்று அவருக்கு சீவல் கார முருகனை நினைவுபடுத்துகிறது. கருப்ப நீர் பனை என்ற பெயருடன் அந்தப் பனையில் கள்ளும் சேர்க்கின்றான் முருகன். அது நன்றாக ஊறக்கூடிய பனை. கள்ளும் கருப்ப நீருமாக இல்லையில்லையென்று போனாலும் நாளொன்றுக்குப் பதினைந்து இருபது போத்தல் வரை இறக்குவான். நம்பர் போடாத பனை, கருப்ப நீர் பனைக்கு கலால் பகுதியினரின் சில் எதற்கு? 

சந்தேகத்தின் பேரில் ஏறிப்பார்த்தாலும் வட்டுக் கொள்ளும் பகுதியில் இருக்கும் முட்டிகளெல்லாம் கருப்பநீர் சேர்ப்பதற்குரிய முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

ஒரே பனையில் கள்ளும் கருப்ப நீரும் கணபதிப்பிள்ளையாரின் நெஞ்சின் எண்ணங்கள் போத்தல் கள்ளாக நுரை தள்ளுகின்றன. 

ஒரே குடலுக்குள்ளால் வந்த பரமுவுக்கும், சண்முகத்திற்கும் கள்ளும் கருப்ப நீரும் போலத்தான் எவ்வளவு வேறுபாடுகள். 

சேர்க்கையில்தான் எத்தனை பேதங்கள் 

பனை குற்றவாளியா? முருகன் குற்றவாளியா? 

விடை சுலபம். கணபதிப்பிள்ளையர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளும் தோரணையில் தனக்குள்ளாக முணங்கிக் கொள்கிறார். 

பாவம் பாறுபதிப்பிள்ளை அவளை நோவதற்கு என்ன இருக்கு? நான் தான் இளையவன் சண்முகத்தை பழுதாக்கிப்போட்டன். அப்பவே அவளின்ர சொல்லையும், மூத்தவன் பரமுவின்ர சொல்லையும் கேட்டு நடந்திருந்தால் இவ்வளவு சீத்துவக் கேடும் வந்திருக்காது. ஓம் அவனையும் சரிப்படுத்தி எடுத்திருக்கலாம். ஓரவாங்கியமாக ஒன்றை வஞ்சித்து மற்றதை மடிக்குள் கட்டி செல்லமாக வளர்த்ததன், அதுக்குத்தான் கடவுள் என்னை நல்லா தண்டிச்சுப் போட்டான். 

எதை நான் எடுத்தெறிஞ்சு வளர்த்தேனோ அதுதான் இண்டைக்கு எனக்கு கஞ்சி ஊத்திது. கரடி வளர்த்தது காலால் உதைஞ்சிட்டு போவிட்டுது. இந்தப் பிராம்பத்தையானைத் தலை குனியச் செய்து போட்டுப் போய்விட்டான் வடுவா. 

கணபதிப்பிள்ளையர் ஆத்திரத்தின் உச்ச கட்டத்திற்குப் போகும் போது எப்பொழுதுமே அவர் குடுமியைத் தட்டி முடிவதும் வழக்கம். இப்பொழுது அப்படி நிமிரச் செய்யப் போனவரை நாரி ‘நெறிப்பு’ அவசரமாக பழைய இருக்கைக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டது. 

கணபதிப்பிள்ளையரின் யோசனைகளும் திட்டங்களும், வீரமும் அவரது குடுமிக்குள்தான் அடக்கமென்று இன்றும் ஊருக்குள் பேசிக்கொள்வார்கள். நன்மையோ, தீமையோ சரி, எதுவென்றாலும் இது செய்யத்தான் வேணுமென்று தீர்மானித்து விட்டாரென்றால் “இந்தப் பிராம்பத்தையானுக்கும் எதிராக ஒருத்தன் சவுடால் விட இருக்கிறானோடா?’ என்று கூறி தனது பிறங்கையால் குடுமியைத் தட்டிவிட்டு முடிந்து கொள்வாராகவிருந்தால்… நினைத்தது நடந்தே தீரும் அப்படியொரு முறை அவரிட்ட சபதம் நிறைவேறவில்லை என்பதற்காக குடுமியை அறுத்து நிலத்தில் போட்டுவிட்டாரே மனுஷன்! பின்பு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்து அந்தச் சபதத்தை நிறைவேற்றிய பிறகுதான் குடுமியே முடியத்துவங்கினவராம். என்றெல்லா அவரைப் பற்றிய கதைகள் உண்டு. ஆனால் இன்று…. அப்படிப்பட்ட மனிதன் மகன் இளையவன் சண்முகம் தன்னை வித்துப்போட்டு போவிட்டானென்றும் தலைகுனியச் செய்துவிட்டானென்றும் கடந்த இரண்டு வருஷங்களாக கறுவிக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் அவனை வைத்துக் கொண்டு எவ்வளவோ பெருமைப் படப்போவதாக எண்ணிய எண்ணங்கள் கட்டிய கோட்டைகள் யாவும் பொரிமாத் தோண்டியின் கதையாக அமைந்துவிட்டதே! 

மூத்தவன் பரமு தாயின் சாயலும் குணாதிசயங்களும் கொண்டவன். சுறுசுறுப்பற்ற மந்தமான போக்குடையவன். அதனால் அவனை அவர் அவ்வளவாக ‘நத்து’ வதில்லை. இளையவன் சண்முகம் வெகு சுட்டி. சகல விஷயங்களிலும் அவன் கணபதிப்பிள்ளையரின் பிரதிபிம்பமேதான். படிப்பிலும் வலு கெட்டிக்காரன். இவைகளெல்லாம் வைத்துக் கொண்டு தனது நெஞ்சால் செயலால் சண்முகத்தை ஒரு தனியான செல்லப்பிள்ளையாகவே வளர்த்துவிட்டார். கணபதிப்பிளளையர் தந்தையின் வேண்டா வெறுப்பிற்கு ஆளாகிவிட்ட பரமுவை தம்பிக்காரன் கூட மதிக்காமல் ‘சோத்து மாடு’ என்ற பட்டப்பெயரும் சூட்டி ‘பகிடி’ பண்ணி அழைத்துவரத் துவங்கிவிட்டான். 

பாவம்! பரமுவால் பல முறைகள் முயன்று பார்த்தும் ஒன்பதாங் கிளாசை கூட தாண்ட முடியாத துரதிருஷ்டசாலியாகி விட்டான். வயதும், வளர்த்தியும் நியாயமாக வஞ்சகமில்லாமல் அவனை அரவணைத்துக் கொண்டு விட்டன. பள்ளிக்கூடச் சட்டம்பிமார் கூட அவனை அச்சுவேலி’த் தென்னம் பிள்ளைகளுக்கு ஒப்பிட்டு பகிடி பண்ணத் தொடங்கிவிட்டார்கள். இவைகளெல்லாவற்றுக்கும் மேலாக தண்டச் சோறு திண்டு கொண்டிருப்பதாகச் சொல்லி பேசி வெறுக்கும் தகப்பனின் எதிரே போகவே அவன் அஞ்சி நடுங்கினான். அதனால் பரமு படிப்பை அத்துடன் நிறுத்திவிட்டு கட்டு வேலைக்குப் போக துவங்கிவிட்டான். 

பத்தாங் கிளாஸ் பெரிய படிப்பத்தானே! அதற்குப் பரிசாக புத்தப்புது சைக்கிள் ஒன்று. கைக்கடிகாரம், உயர்ந்த ரக துணிமணிகள் இத்தியாதிப் பொருட்களையெல்லாம் கணபதிப்பிள்ளையர் சண்முகத்திற்கு வாங்கிக் கொடுத்திருந்தார் கணபதிப்பிள்ளையர். ட்றாமா, சினிமா, திருவிழா ஆகியவற்றுக்குக் கூட தாராளமாக அனுமதி கொடுத்துவிட்டார். ‘அவனோட்டைத் தரவளிப் பொடியள்’ வந்திருந்து போவதற்கு கதிரை கட்டில் கூட வாங்கிப் போட்டார். 

பாவம் பரமு! அந்தக் கதிரை கட்டில்களில் தன்னை இருக்கவே அனுமதிப்பார்களோ என்ற அச்சத்தினால் அவன் அவைகளில் இருந்ததோ இருக்க எண்ணியதோ கூட கிடையாது. வேலையால் வீடு வருவதும், அடிப்படிக்குள் குமர்ப்பிள்ளைபோல் தாயோடு இருந்து கூட ஆட அவளுக்கு ஒத்தாசை செய்வதுடன் சரி. 

ஒரு நாள் வேலையால் வீடு வந்து சேர்ந்த பரமுவை கண்டு தாய் பாறுபதிப்பிள்ளை பதகளித்து ஏங்கிப் போய்விட்டாள். பரமுவின் கன்னங்கள் வீங்கி கன்றி சிவந்திருக்க, கண்களிலிருந்து நீர் சொரிய வந்த மகனைக் கண்டும், “உனக்கு உந்தக் காரியம் செய்ய யாருக்கு மனம் வந்தது தம்பி? சோலி சுறட்டுக்கு போகாத உனக்கு – தானுண்டு தன்ரைபாடுண்டு என்று திரியிற உனக்கு – குடிக்குப்பிறந்து செடிக்குத் தலைவைச்சுப் படுத்த எந்த வம்பன் உனக்கு உந்தக் காரியம் செய்தான்?” என்று ஆர்ப்பரித்தவளை பரமு சொன்ன வார்த்தைகள் உலுப்பி எடுத்துவிட்டது. 

“ஆரும் பிறத்தியார் அடிக்கவில்லையம்மா. தம்பிதான் அடிச்சுப் போட்டான்.” கண்ணீரினூடே குழந்தைப் பிள்ளைத் தோரணையிற் சொன்ன மகனை அணைத்துக் கொண்டு அழுதேவிட்டாள் பாறுபதிப்பிளளை. 

தகப்பன் எப்போதுமே தம்பிக்காரன் சண்முகத்திற்கு அனுசுரணையாக இருப்பவர். அதனால் அவரிடத்தில் இதைச் சொல்லியும் பிரயோசனமில்லையென்றே பரமு நினைத்தான். ஏனென்றால் முன்பொருமுறை அவன் குற்றங்களை அவரிடத்தில் எடுத்துச்சொல்லி அவனைத் தண்டித்து திருத்தும்படி கேட்டுக் கொண்டதற்கு அவர் பரமுவையே திட்டிக் கலைத்ததும் அவன் ஞாபகத்திற்கு வந்தது. 

“ஐயோ,தம்பி சிகரெட் குடிக்கிறான். கூடாத கூட்டங்களுடன் கூடித்திரிகிறான். இப்பவே கொஞ்சம் கண்டிச்சு வைச்சால்தான் நல்லது” என்றான். 

அதற்கு அவர் சொன்னார். “டே அவன் படிச்சவன்ரா. நாலு பேரோடை நாலுவிதமாகவும் இருக்க வேண்டிய சூழ்நிலைகள் வருமடா. உனக்கதைப் பற்றியொன்றும் தெரியாது போடா உன்ரை பாட்டிலை” என்றாரே. 

அப்படிக் குருட்டுத் தனமாக யோசிக்கிற மனிதனிடத்தில் இதையும் சொல்லி ஏச்சு வாங்கிக்கொள்வான்? என்று நினைத்த பரம அதைப் பற்றி அவரிடத்தில் சொல்லாமல் இருப்பதே மேல் என்று நினைத்தான். 

ஆனால் தாய் பாறுபதிப்பிள்ளை மாத்திரம் பரமுவை இழுத்துக்கொண்டு போய் கணபதிப்பிள்ளையரின் எதிரே நிறுத்திவிட்டு வழக்குரைக்கத் தொடங்கினாள். 

“மிச்சம் நல்லாயிருக்கு பிள்ளை வளர்ப்பு. சண்முகம் வர வர துழுத்துப் போய் தலை கால் தெரியாமல் திரியிறான். படித்துவிட்டால் எல்லாம் செய்யலாமென்று நினைக்கிறான் பெடியன். இதெல்லாம் நீங்கள் அவனுக்கு குடுத்த இணக்கத்தாலையும், ஓரவாங்கியமான பிள்ளை வளர்ப்பாலையும்தான் அவனுக்கு உவ்வளவு கொழுப்பும் வந்தது. கடவுள் தந்த கண்களிருந்தால் இரண்டையும் ஒன்றாகப் பாருங்களேன். இஞ்சைபாருங்போ மூத்தவன், அண்ணன் என்கிற மதிப்பு கணிப்பே இல்லாமல் பிள்ளைக்கு கன்னத்திலை அடிச்சிருக்கிறான். ஆ! அப்ப இது ஞாயமே? கனக்கப் படிச்சவனுக்கு கள்ளுக் கொட்டிலுக்கை என்ன வேலை என்று கேக்கிறன்? இல்லை உங்களைத்தான் கேக்கிறன்? … நீங்கள் முத்தத்துப் பனையிலை கள்ளும், கருப்பனியம் சீவி விக்கிற மாதிரியெல்லே பிள்ளைகளையும் வளர்க்கிறியள். ஒரு நாளைக்கு அவங்கள் அறிஞ்சு வந்து இந்தப் பாளைகளை வெட்டிப் போடுற கணக்காகத்தான் இவன் சண்முகத்தையும் ஆரும் ஒரு நாளைக்கு தறிச்செறியப் போறாங்கள். அப்படித்தான் நீங்கள் அவனை வளர்த்துக்கொண்ட வாறியள். அங்கேயெல்லாம் போகாதே தம்பி, அதெல்லாம் கூடாத பழக்கம்’ என்று இந்தப் பிள்ளை சொன்ன புத்திமதிக்காக அவன்ரை வெறி செய்த வேலையை.” என்றெல்லாம் இளைய மகன் சண்முகத்தின் குற்றங்குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினாளே! அதற்காக அவர் அவனுக்கு என்ன செய்து விட்டார்.? 

மறுநாளே சண்முகத்திற்கு தந்தி ஒன்று வந்திருந்தது. கொழும்பிலிருந்துதான் அது வந்திருந்தது. உடனடியாக வந்து உத்தியோத்தை மேற்கொள்ளும் படி அதில் இருந்தது. அதனால் அவனைப் பற்றிய எல்லாவற்றையும், எல்லோரையும் மறக்கச் செய்துவிட்டது அந்தச் சந்தர்ப்பம். 

ஓ! பரமு கூட அந்தச் சந்தோஷத்தில் பங்கு பற்றி தம்பியாரின் பெட்டி சாமான்களையெல்லாம் தூக்கிக் கொண்டு போய் றெயிலில் ஏற்றிவிட்டு அவனுக்கு கூறிய சில புத்திமதிகள்…. “தம்பி கொழும்பு அவடங்கள் இஞ்சத்தையை போல இல்லை. வலு கவனமாக இருக்க வேணும்” என்று சொன்னானே! என்ன பிரயோசனம்? எல்லாம் கழுதைக்குச் செய்த உபதேசமாக போய்விட்டது. 

சண்முகம் கொழும்பிற்குச் சென்ற ஆறாவது மாதமே அவன் கலியாணம் செய்து கொண்ட செய்தி கணபதிப்பிள்ளையரின் காதுக்கு எட்டுகிறது. அவர் வளர்த்த காளை அவர் நெஞ்சையே குத்திக் கிழித்ததான வேதனையும், ஆத்திரமும் வெஞ்சினமாக மூண்டெள, அங்கேயே போய் சண்முகத்தைக் கொலை செய்து போட்டுத்தான் மறு காரியம் பார்ப்பதாக கிளம்பினார். ஆனால் பாறுபதிப்பிள்ளை தலையிட்டு எவ்வளவோ சொல்லி மன்றாடி,” அவன் எங்கேயாவது எங்கடை கண்ணிலை முழிக்காமல் இருக்கட்டும். இல்லாப் பிள்ளையெண்டு நினைச்சுக் கொண்டு இருக்க வேண்டியதுதான். திடீரென்று அவன் காருக்குள்ளேயோ வண்டிலுக் குள்ளேயோ அகப்பட்டுச் நசுங்கி செத்துப் போயிட்டால் பொறுத்துக்கொள்ளமாட்டமா? அதுமாதிரியெண்டு நினைத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்” என்றெல்லாம் சொன்னவள்…. 

‘அவள்! அந்தப் பாறுபதிப்பிள்ளைதானா இன்று அவனை நினைத்து உயிர் போகாமல் கிடந்து அவதிப்படுகிறாள்?’ என்பதை நினைத்த போதுதான் கணபதிப்பிள்ளையரால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. 

அவனை இந்தப் படலைக்குக் குறுக்கே கண்டாலே கண்ட துண்டமாக வெட்டிக் காகத்துக்கத்தான் போடுவன்’ என்றெல்லாம் வீரசபதம் ஏற்றிருப்பவரை – அவருடைய அந்த சபதத்தை அளிப்பதற்கென்றேதான் பாறுபதிப்பிள்ளை இப்படிக்கிடந்து இழுபறிப்படுகிறாளா? பிராம்பத்தையான் கணபதிப்பிள்ளை ஒரு காலத்தில் ஊரையெல்லாம் விரல் காட்டி நிறுத்திய மனிதன் சபதம் போட்டுவிட்டால் செய்து முடிக்காமல் விடக்கூடிய மனிதனா? அப்படிப்பட்ட ஓர்மமான வீர புருஷனை இன்று, அவர் மனைவி பாறுபதிப்பிள்ளையின் மரண அவஸ்தை படாதபாடு படுத்தி இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையாக தவித்துக்கொண்டிருக்கிறாரே! ‘பாறுபதிப்பிள்ளையின் சீவன் போகாததற்கும், மகன் பரமுவின் கஷ்டங்களுக்கும் கணபதிப்பிள்ளையர்தான் பொறுப்பாளி என்று கைவிட்ட வைத்தியர்களும், ஊரவர்களும் சேர்ந்து அவர் தலைமேல் பழியைச் சுமத்துகிறார்களே! அதனால் அவசரமாக ஏதோ ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகி யோசனை செய்யத் துவங்கினார். கணபதிப்பிள்ளையர். 

‘பெற்ற மனம் பித்தும் பிள்ளை மனம் கல்லும் என்பார்களே! ஓம்! பத்துமாதமும் சுமந்து பெற்றவளல்லவா? பெற்ற வயிறு பற்றியெரியாதே பிள்ளை, அவள் சுமைதாங்கியாக இருந்தவளுக்கல்லவா தெரியும் அதன் வேதனையைப் பற்றி. நான் தான் ஓரவாங்கியமாகப் பிள்ளை வளர்த்தன் என்பதற்காக பாறுபதிப்பிள்ளையும் அப்படிப்பட்டவளே? கன்று துள்ளிப் பசுவில் விழுந்தால் அதற்கு யாரை நோவது? என்று நினைப்பவள்., சண்முகத்தையும் ஒரு கைக்கடங்கிய பிள்ளையாக வளர்க்க வேண்டுமென்பதற்காகாத்தானே அப்பவே என்னிடத்தில் சொல்லிப் படாத பாடுபட்டாள். நான் தான் பாவிப்பயல் அவனைக் கெடுத்து பாழாக்கிப் போட்டன். நான் அளவுக்கு மேல் அவன்மேல் அன்பைச் சொரிஞ்சு நம்பிக்கை வைச்சன். அதனாலேதான் எனக்கு அந்த ஆத்திரத்திலை சபதமும் போட்டன். பாறுபதிப்பிள்ளை இரண்டையும் ஒருமாதிரியாகப் பார்த்தாள்., பழகினாள், அவனைத் திருத்துவதற்காக அப்படிப் பேசினாளே தவிர, பிள்ளை ஒரேடியாக அந்தப் பிள்ளையை அவள் வெறுத்தாளா? சண்முகத்தை நினைச்சு அவளுடைய சீவன் போகாமல் கிடந்து அல்லல்படுவதற்கு இன்னும் ஏன் நான் குறுக்கே நிற்க வேணும்?ம் பிள்ளைப் பாசம் பொல்லாததுதான்……. 

ஓம்! சண்முகமும் வந்து இரண்டு பேருமாக தாயின்ரை தலைமாட்டிலும், கால்மாட்டிலுமாக நின்று அவளை ஆராதனை செய்து தேவாரம் படிக்க… கூடி நிற்கும் ஊரும் உறவும் ஒரு முறை கொம்பி அழுது “ஆரது’ கணபதிப்பிள்ளையின்ரை பெடியளா? படிச்சாலும் படிச்சிதுகள் பங்கை பார், தாயின்ரை தலையடியிலும், கால்மாட்டிலுமாக நின்று தங்களைப் பெற்ற தாய்க்கு தேவாரம் படிக்கிதுகள். அதெல்லோ படிப்பு, எல்லாவற்றுக்கும் கொடுத்து வைச்சிருக்க வேணும். என்றெல்லாம் கதைப்பார்களே! அப்போது…. அப்போது அ!… அ!’ என்று நினைத்துக்கொண்டிருந்த கணபதிப்பிள்ளையருக்கு தொண்டையை அடைத்துக் கரகரத்துக் கொண்டு அழுகை வந்தது. அவர் உணர்ச்சியின் எல்லையில் நினைவுகளை நிறுத்திப் பார்த்தவராக அழுகின்றாரா? 

“ஏன் ஐயா அழுகிறியள்?” 

பரமு பதகளிப்புடன் தகப்பனைக் கேட்டுவிட்டுத் தாயைப் பார்த்தான். அவள் நெஞ்சு ஏறி இறங்குவதிலிருந்து அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிந்து கொண்டான். 

“தம்பியே….? நீ வந்ததைக் கூட நான் கவனிக்கவில்லை” என்று கொண்டே அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டார். கணபதிப்பிள்ளையர். 

“ஏன் ஐயா இன்னும் சாப்பிடவில்லை? சோத்துப் பாசல் அப்பிடியே கிடக்கு. சோறும் பழுதாகிப் போவிடும்”. 

“நான் இதிலை இருந்தாப் போலை இருந்திட்டன் தம்பி. இனி ஒரேடியாக இராத்திரிக்குச் சாப்பிடுவம். முருகன் தந்த ஒருபோத்தல் கருப்ப நீரோடை பசிக்கவும் இல்லைதான்…. என்றவர் ஏதோ நினைத்துக் கொண்டவராக மகனைக் கூப்பிட்டார். 

“என்ன ஐயா” பரமு எதிரே வந்து நின்றான். 

அவர் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டவராகச் சொன்னார். 

“தம்பி பின்னே அவனுக்கொரு தந்தியைக்குடன். கொம்மாவும் அவனை நினைச்சு நினைச்சு கிடந்து இழுபடுகிறதைப் பார்த்தால்… எனக்குத்தான் அந்தப் பழியும் வந்து சேரும் போலை கிடக்கு” என்றார். 

“தந்தி அடிச்சிருக்கிறன், ஐயா,” 

“என்னென்று அடிச்சனி தம்பி?” – அவர் தலையைத் தூக்கி மகனைப் பார்த்தார். 

“அம்மாவுக்குக் கடுமை, அவசரம் வாவெண்டு” 

கணபதிப்பிள்ளையரின் திடீர் மாற்றமும், மகன் பரமுவைக் கூப்பிட்டு சண்முகத்திற்றுத் தந்தி கொடுக்கும்படி சொன்னதும் பாறுபதிப்பிள்ளைக்கும் கேட்டு விட்டதா? அந்த ஒரு வார்த்தைக்காகவே காத்திருந்தவள் போல், சண்முகத்தைப் பார்க்காவிட்டாலும், அவன் தனது கடைசிச் சடங்குகளிளாவது கண்டிப்பாக பங்கு பற்ற வருகிறான் என்ற நினைப்புடனோ என்னவோ போல் மன ஆறுதலடைந்தவளாகப் பாறுபதிப்பிள்ளை தனது கண்களை இறுக ஒரேடியாக மூடிக்கொண்டுவிட்டாள். 

ஊர் கூடிவிட்டது. பாறுபதிப்பிள்ளையின் கடைசிப் பயணத்திற்கு இளைய மகன் சண்முகத்தின் வரவே எதிர்பார்க்கப்படுகிறது. 

விடிந்து வெகு நேரத்தின் பின்பு கராரொன்று வந்து படலையில் நிற்கின்றது. சந்தேகமேயில்லை. அது சண்முகம்தான் வந்துவிட்டான். 

தமையன் பரமு, அவனை தாவிப்பிடித்து கட்டிக்கொண்டு தன் முகத்தை தம்பியார் சண்முகத்தின் முகத்துடன் ஒட்டவைத்து ‘ஓ!… ஓ!… அம்மா..ஓ!ஓ! அம்மா! ஓ….’ என்று கதறிக் கதறி அழுகின்றான். அதையே எட்ட இருந்து பார்த்துக்கொண’டிருக்கும் கணபதிப்பிள்ளையரும் குலுங்கிக் குலுங்கி அழுகின்றார். 

ஆனால் சண்முகம்…

“ஏனண்ணை எனிச் சுணங்குவான்?” – கூடி நிற்பவர்கள் கணபதிப்பிள்ளையரைச் சுரண்டி ஞாபகமூட்டுகிறார்கள். 

சண்முகத்தின் செயல்களைக் கவனித்துக் கொண்டிருந்த கணபதிப்பிள்ளையருக்கு ஆத்திரமும், அவமானமும் பீறிட்டுக் கொண்டு வந்தாலும் எல்லாவற்றையும் வெகுசிரமப்பட்டு அடக்கிக்கொண்டவராக எழுந்து போய் சண்முகத்தைப் பார்த்துச் சொல்கின்றார். 

“கொண்ணனும், நீயும் கொம்மாவின்ரை தலைமாட்டிலும், கால்மாட்டிலும் நின்று தேவாரம் படியுங்கோ என்கிறார். 

“அதெல்லாம் அநாகரீகமான வேலை ஐயா, செத்த சவத்துக்கு தேவாரமும், திருவாசகமும்தான். எனக்கு இப்ப அதெல்லாம் மறந்து போய்விட்டது.” சண்முகம் அலுத்துக்கொண்டும் அருவருத்துக்கொண்டும் கதைத்த கதைகள்…… 

கணபதிப்பிள்ளையரின் குடுமியை யாரோ இழுத்துக்கொண்டு செல்ல, அரையில் கிடந்த வேட்டி உரிந்துவிட்டதான அவமானத்தில்…அவர் அடக்கி வைத்திருந்த ஆத்திரங்களெல்லாம் வெடித்துக் கிளம்ப பழைய பிராம்பத்தையான பேயாகமாறி நின்றார் கணபதிப்பிள்ளைர். ‘என்னடா சொன்னாய்?….. எல்லாத்தையும்…… எல்லாத்தையும், எல்லாரையும் மறந்திட்டியாடா? ஆங்! வடுவா!” 

பளீர்! பளீர்! 

றாஸ்கோல்…. செத்துக்கிடக்கிற பெத்த தாய்க்கு இரண்டு தேவாரம் சொல்லமுடியாத உன்ர படிப்பு அதொரு வெறும்படிப்படா, டேய்! வடுவா பெத்த தாயை செத்த பிணமென்றாடா சொன்னாய்? டேய் நாயே! செத்துக்கிடக்கிற பெத்த தாய்க்கு இரண்டு சொட்டுக் கண்ணீர் சிந்தி அழாதனி, அண்ணன் கட்டிப்பிடிச்சழ அதையே அருவருப்பாக நினைக்கிற நீ, இவ்வளவு காலத்துக்குப்பிறகு வந்தனி, கொம்மாவின்ரை அவளை மூடியிருக்கிற முகத்தீட்டுச் சீலையை நீக்கி அவளின்ரை முகத்தைக்கூட ஒரு தரம் பார்க்க ஆசைப்படாத நீ, வடுவா போ வெளியாலை. 

பளீர்! பளீர்! 

உன்னை நினைச்சத்தானடா அவளின்ர சீவன் இவ்வளவு காலமும் கிடந்து இழுபட்டது. அவளின்மேல் அவ்வளவு அருவருப்பாடா உனக்கு? பெரிய நாகரீகத்தைக் கண்டுவிட்டாயோ? றாஸ்கோல் இதெல்லாம் உனக்கு அநாகரீகமாகப்படுகிறதோ? 

“பளீர்! பளீர்!” 

படலைக்கு வெளியே சண்முகத்தை தூக்கி எறிந்துவிட்ட கணபதிப்பிள்ளையரின் பூதாகாரத் தோற்றத்தைப் பார்த்தவர்கள் யாரும் அவர் அருகே போக முடியவில்லை. அவர் விரலின் குறுக்கே கூட அங்கு யாரும் வரத் துணியவில்லை. 

“இந்தப்பிராம்பத்தையானை…” என்று உறுமிய கணபதிப்பிள்ளையர் பிறங்கையால் குடுமியைத் தட்டி விட்டு அள்ளிக், கட்டிக்கொண்டார். 

“தந்தையார் போயினார்…. தாயாரும் போயினார்… தாமும் போவார்….” 

அதோ! பாறுபதிப்பிள்ளையின் தலைமாட்டில் கணபதிப்பிள்ளையரும், கால்மாட்டில் மகன் பரமுவும் நின்று தேவாரப் பண்ணிசைக்கிறார்கள். அந்தத் தேவாரப் பண்ணிசைப் அங்குள்ளோர் என்புகளிளெல்லாம் புகுந்து உள்ளத்தை உருக்கி உள்ளழியச் செய்கின்றதே! 

கே.வி.நடராஜன்

அமரர் கே.வி.நடராஜன் ஈழத்தின் ஆற்றல் மிகு படைப்பாளி. ஏராளமான சிறுகதைகள் எழுதியுள்ளார். வேலி, யாழ்ப்பாணச் சிறுகதைகள்,ஊரும் உலகமும் என மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண சமூகத்தை நுண்ணிப்பாக அவதானித்தல் இவரது கதைகளில் காணப்படும் பண்பு. பேச்சு மொழியை லாவகமாகக் கையாள்வார். 

– 18.09.1969, 25.09.1969

– ஈழநாடு சிறுகதைகள் (தொகுதி-1), முதல் பதிப்பு: 2008, பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வட மாகாணம், திருகோணமலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *