திருமண் வழக்கு
கதையாசிரியர்: சி.எம்.ராமச்சந்திர செட்டியார்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 11, 2025
பார்வையிட்டோர்: 66
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆழ்வார்கள் ஒவ்வொரு திவ்ய தேசத்திற்கு எழுந்தருளியபோதும் அந்தந்த ஸ்தலத்திலே எழுந்தருளி யிருந்த பெருமாள் மீது அருமையான பாசுரங்களை அருளிச் செய்து வழிபட்டார்கள். அப்பாசுரங்களைப் பெருமாள் திரு முன்னர் இருந்துகொண்டுதான் பாடியிருக்கவேண்டும். ஆகவே அவ்வருமை யான திருப்பாடல்களைப் பெருமாளின் முன்னிலையிலேயே அன்பர்களும் பாடினார்கள். புறப்பாட்டின் போதும் தமிழ்ப் பிரபந்தம் பெருமாளின் முன்னிலையிலேயே பாடினார்கள். வேதம் பெருமாளை இன்னமும் அறியவில்லை என்பது ஒரு கோட்பாடு. ஆகவே அது பெருமாளைத் தேடிக்கொண்டே செல்கிறது என்பர். ஒருவேளை தமிழ்ப்பாடல் முன்னால் சொல்லப்பட்டு அது வழக்கமாகி விடவே, வடமொழியில் சொல்லுகிறவர்கள் முன்னால் சென்றால் எங்கே அடிதடி ஏற்படுமோ என்று அப்போதே அஞ்சி ஒரு சமரசத்திற்கு வந்தார்கள் போலும் ! நாளா வட்டத்தில் வடமொழி வேதம் பெருமாளுக்குப் பின்னாலும் தென்மொழி வேதம் முன்னாலும் பாடும் வழக்கு நிரந்தரம் ஆகிவிட்டது. இதனைத் தற்குறிப்பு ஏற்ற அணி யாகத் தமிழ்ப் பெரும் புலவர்,
வேதத்தின் முன்செல்க
.. எங்கள் குருகூர்ப்புனிதன்
பாதத்தின் முன்செல்லுமே தொல்லைமூலப் பரஞ்சுடரே?
என்றும் அருளிச் செய்தார். இவ்வாறு முன் காலத்திலிருந்தே வடமொழி தென்மொழி ஓதுதலைக் குறித்து வாதம் ஒருவாறு சமாதானப்பட்டிருக்க, அந்தப் போராட்டம் இன்னமும் அடிக்கடி கிளம்பிக்கொண்டு வருகிறது. ஒவ்வொரு தடவை பெருமாளின் எதிரே இருவரும் பாடும் போது வாய்ச்சண்டை ஏற்பட்டு நீதிமன்றமும் ஏறி விடுகிறது தென்கலையார் தென்மொழி வேதத்தையும் வடகலையார் வடமொழி வேதத்தையும் சொல்வதாகப் பாகப் பிரிவினை செய்துகொண்டதால் யாதொரு சண்டையும் ஏற்படாது. ஆனால் தென்கலையார் வடமொழியையும் வட கலையார் தென் மொழியையும் விரும்பி உரிமை கொண்டாடுவது உண்டு. இச்சண்டை பெரும்பாலும் ஆழ்வார், ஆச்சாரியார் சாத்துமுறைக் காலங்களில்தான் வரும். இச்சண்டை அடிக்கடி முற்றிப்போய் நீதிமன்றம் ஏறிப் பொருட் செலவு ஆவதுண்டு.
மேலும் புறப்பாட்டுக் காலங்களில் ஒரு கலையார் மற்றக் கலையாருக்கு இடம் கொடுக்காமல் தந்திரம் செய்வதுண்டு. கருட சேவையின்போது புறப்பாட்டின் தொடக்கத்தில் வடமொழி வேதம் முதலில் வாசிக்கப்படும். அப்போது வாத்தியம் நிறுத்தப்படும். ஆனால் தென்மொழி வேதம் தொடங்கியதும் வடகலைத் தருமகர்த்தர் வாத்தியம் வாசிக்க உத்தரவிடுவார். இதனால் தென்கலையாருக்குப் பெருத்த அவமானமும் அவதியும் ஏற்படும். ஒரு முறை ஒரு அதிகாரி இரண்டும் வாசிக்கும்போது வாத்தியம் வாசிக்கக் கூடாதென்று கட்டளையிட்டார். உடனே வந்தது பெருங்கோபம். பல தந்திகள், மனுக்கள், வக்கீல்கள் மூலம் பறந்தன. முடிவில் ஒன்றும் ஆகவில்லை. வாத்தியம் நிறுத்தப்பட்டது. இப்படிப்பட்ட விரோதப் பான்மை எவ்வளவு அச்சந்தர்ப்பதத்தில் இறங்கியது என்று சற்றுக் கவனியுங்கள்.
வடகலைக்கும் தென்கலைக்கும் ஏற்படும் சக்சரவுகள் எல்லாம் பெரும்பான்மை வெளி வேஷங்களால்தான். தத்துவ விஷயமாக வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவைகளைப் பொது மக்கள் அறியார்கள். திருமண் இடுவதிலும் தொடக்கத் துதி சொல்லுவதிலும் மிகுந்த பேதம் உண்டு. நீதி மன்றங்களில் வாதாடுவது இந்த இரண்டிலும் என்று சொல்லாம். தீர்த்தம் வழங்குவதில் யாருக்கு முதல் உரிமை என்ற விவகாரமும் உண்டு. தீர்த்தத்தைக் குறித்து மடாதிபதிகள் ஆயிரக்கணக்காகச் செலவு செய்வதில், இவர்கள் மடாதிபதிகளா, மடாதிபதிகளா என்பதே சந்தேகிக்க வேண்டிவரும். ஒரு கிறிஸ்தவ நீதிபதி இதனைக் கேட்டுவிட்டு, “எங்கள் வீட்டுக்கு வாருங்கள்; சுத்தஜலம் நூறு காலன் தருகிறேன். ஏன் ஒரு கரண்டிக்கு வாதாடுகிறீர்கள்?” என்று கேலி செய்தாராம். இதனைக் கேட்டும் அக்கட்சிக்காரர்கள் வெட்கப்பட வில்லையாம். ஸ்ரீ சைலேசமா, இராமானுஜமா, என்பவனவும் சச்சரவுக்கு ஏற்ற துதிமொழிகள், எதைச்சொன்னால் என்ன? புண்ணியம் எதனால் குறைந்துவிடும்? எல்லாவற்றிற்கும் நெஞ்சின் நிலைமையே காரணம் என்று யார் சொன்னாலும் செவிடன் காதில் ஊதின சங்குபோலாகும். பண்டைய நூல்களில் காணும் நீதிகள் எல்லாம் இவர்கள்முன் வெறும் பதர்தான் !
இனி முக்கிய வேறுபாடு திருமண்ணில் என்க, பாதம் இடுவதா அல்லது பாதம் நீக்குவதா? இந்தப் பேதம் சுமார் ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. பெருமாளுக்கு எதை இடுவது? பரிவார தேவர்களுக்கு எதை இடுவது? ஆலயப் பொருள்களுக்கு எதை இடுவது? என்பதுதான் முதல் கேள்வி. இதனைப்பற்றிய விவகாரம் எத்தனைப் பெரிய கச்சேரி ஏறினாலும் தீருகிறதில்லை. ஒரு தர்மகர்த்தர் வந்தால் எல்லாப் பொருள்களுக்கும் பாதம் ஏறிவிடும், மற்றொருவர் வந்தால் பாதம் மறைந்துவிடும். உடனே விவகாரம் தொடங்கும். முடிவில் பெரியமன்றம் ஏறினாலும் விவகாரம் முடிவடைகிறதில்லை. இவ்வித விவகாரங்களில் ஆயிரக் கணக்கான தொகை செலவாவதுடன் பல குடும்பங்களும் நசித்து விடும். இக்கட்சிப்
இக்கட்சிப் போர்களுக்கென்றேசில வழக்கறிஞர்கள் ஏற்பட்டுத் தங்கள் வயிறுகளை வளர்த்துக் கொண்டும் பெருக்கிக் கொண்டும் இருக்கிறார்கள். ஒரு கிண்ணிக்கு நாமம் போட மறந்துவிட்டால் உடனே சென்னை வக்கீலுக்குச் செய்தி எட்டிவிடும். மறுநாளே தந்தி பறக்கும். பிராது எழுதி ஆகிவிடும். கச்சேரியிலும் பத்து எதிரிகளின் மீது வழக்கு தொடர்ந்து விடும். இவ்வித நியதி எத்தனை ஏளனத்திற்கு இடம் கொடுக்கிறது. பாருங்கள்! ஓர் ஊர்க் கோயிலில் ஒரு ஐயங்கார் தம் மகனுக்கு நோய் சௌக்கியமானால் வெள்ளிக் கிண்ணி உபாயம் செய்வதாகப் பிரார்த்தித்துக் கொண்டார். வியாதியும் சௌக்கியமாயிற்று. ஒரு பெரிய கிண்ணி வார்க்கச் செய்தார். செலவு ரூ.100 ஆயிற்று. அவர் வடகலையார் ஆனதினால் அதன்பேரில் வடகலை நாமம் செதுக்கச் செய்தார். ஒரு குறித்த சுபதினத்தில் பெருமாளுக்கு அபிஷேகம் பூசை முதலியவற்றைச் செய்வித்தார். கிண்ணியும் சுவாமிக்கு உபயமாகக் கொடுக்கப்பட்டது. தருமகர்த்தர் சொத்துச் சாப்தாவிலும் எழுதிக் கொண்டார். காரியம் முடிந்துவிட்டது என்று எண்ணினார் வடகலை ஐயங்கார். சிலநாள் கழித்து அதே ஐயங்கார் ஆலயத்திற்குத் தரிசனத்திற்குச் சென்றார். தாம் கொடுத்தகிண்ணியில் தீர்த்தம் கிடைக்கும் என்று எண்ணினார். அக்கிண்ணி வரவில்லை. பழையதும் உடைந்தது மான ஒரு கிண்ணிதான் வந்தது. பிராம்மணர் திகைத்துப் போய்விட்டார். கிண்ணியைப் பற்றி விசாரித்தார் அது பொக்கிஷச்சாலைக்குள் வைக்கப்பட்டது என்றறிந்தார். இரகசியம் வடகைைல நாமம்தான் அர்ச்சகர் தென்கலை என்பது அறியவேண்டும். அவர் அக்கிண்ணியைத் தொடமாட்டேன் என்று சொல்லி விட்டார். வடகலை நாமத்தைத் தென்கலையாக மாற்றினால் ஒழிய, தொடமுடியாது என்று சொல்லிவிட்டார். எவ்வித விவகாரமும் இதற்கு மேல் பலிக்கவில்லை.
உயிரில்லாத கிண்ணியே இப்பாடு பட்டால் உயிருள்ள ஒரு யானை’ என்ன பாடுபடும்? ஒரு தடவை ஒரு தனவந்தரான செட்டியார் ஆலயத்திற்கு ஒரு யானையைத் தானம் செய்தார். யானையோ மகத்தான மிருகம். அதனால் ஆலயம் அடையக்கூடிய பெருமையும் இலாபமும் அதிகம். அதனை யாவரே மறுப்பர்? தருமகர்த்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதனை ஏற்றுக்கொண்டனர். செட்டியார் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ சேஷாச்சாரியாரின் பரமானந்த சிஷ்யர். தம் ஆசாரிய மூர்த்தியின் வாக்கை ஒரு காலமும் தடை செய்ய மாட்டார். யானையைத் தானம் செய்வதில் என்னென்ன சடங்குகள் செய்யவேண்டுமென்று கேட்டார். யானைக்குத் திருமண் இட்டுத்தான் அனுப்பவேண்டுமென்று ஆக்ஞாபித்தார் குரு. உடனே தென்கலைத் திருமண்பட்டை பட்டையாக இடப்பட்டது. யானையும் ஆலயத்திற்கு அனுப்பப்பட்டது. யானையை ஏற்றுக்கொள்வதாக இசைந்த தர்மகர்த்தருக்கு என்ன செய்வதென்று தோன்ற வில்லை. சில அன்பர்கள் தென்கலை நாமத்தைக் கண்டு அசூயைப்பட்டு அதனைத் திருப்பி விடும்படித் தூண்டினார்கள். சிலபேர் ‘ரூ. 2000 பெறுமானது இதனை எவ்வாறு திருப்புவது? வலிய வந்த சீதேவியை “உதைத்துத் தள்ளலாமா?” என்றார்கள். இறுதியில் யானையைப் பெற்றுக்கொள்வது, பின்னால் நாமத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அவ்வூர்த் தென்கலை வைணவர்களுக்கோ அளவற்ற சந்தோஷம், அந்நாள் ஒரு திருநாளாகக் கொண்டாடினார்கள். யானையைக் கூடத்தில் கட்டி இரண்டுமாதம் ஆயிற்று. ஒருநாள் மழையிலே யானை ஊர்க்கோலம் சென்றது. திருமண் சிறிது மங்கிற்று. அதனைக் கண்டு மாவுத்தன் யானை குளிக்கும் போதெல்லாம் திருமண்ணைச் சிறிது சிறிதாகத் தேய்த்தான். இது ஒரு வேளை தர்மகர்த்தர் தூண்டுதலின் பேரில் நடந்திருக்கும் என்று சிலர் வாதாடினர். ஆனால் மாவுத்தனோ, ‘இல்லவே இல்லை. திருமண் நல்ல மண் அல்ல’ என்றான். பெருந்திருவிழா சமீபத்தது. எல்லா இடங்களும் புதுப்பிக்கப்பட்டன. திருநாமங்களும் சீர்திருத்தப்பட்டன. யானைக்கும் புது அலங்காரம் செய்யப்பட்டது. ஒருநாள் இரவு இரகசியமாக வடகலைத் திருமண் யானையுடல் முழுதும் தீட்டப்பட்டது. உற்சவத்தின்போது யானைமுதலில் வரவே தென்கலையார் பிரமித்து விட்டனர். இந்த அநீதிச் செயலை யார் செய்தனர் என்று கேட்கப்பட்டது. கிரிமினல் சிவில் இரு தரப்பிலும் விவகாரங்கள் தொடரப்பட்டன. வைசியச் செட்டியாரும் சாட்சி சொல்ல வந்தார். முடிவாக யானைக்குத் தென்கலை திருநாமமே இடவேண்டுமென்று இறுதிக் கச்சேரியிலும தீர்ப்பு ஆயிற்று. இதற்குள்ளாக பத்து ஆண்டுகள் கழிந்தன; 10,000 ரூபாயும் செலவாயிற்று. பல குடும்பங்களும் நசித்துப் போயின. தர்மகர்த்தாவும் மாறினார். ஆனால் ‘கலை’யும் அழுக்காறும் மாறவில்லை. கோர்ட்டார் கொடுத்த தீர்ப்பை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது பெருங்கவலை ஆயிற்று. அது நிறைவேற்ற முடியாத தீர்ப்பு என்று வாதாடப்பட்டது. அந்த விவகாரமும் மூன்று கச்சேரிகள் ஏறியது. அதுவரை யானை வடகலையோடுதான் திகழ்ந்தது. அந்தப் பேதம், பாவம் அந்த யானை அறியுமோ? பேதம் எல்லாம் மக்களுக்கே என்றறிக. இறுதியில் வடகலைத் தருமகர்த்தர் யானையின் திருநாமத்தை மாற்றவேயில்லை. தென்கலையார் தீர்ப்பை நிறைவேற்றினார்கள். அமீனா பல தடவை சென்றும் யானையின் அருகில் செல்ல முடியவில்லை. செட்டியார் யானையைத் திருப்பித்தர வேண்டும் என்று விவகாரம் செய்தார் ஒரு தடவை செய்த தானம் பூர்த்தியானால் அதை ரத்துச் செய்யச் சட்டம் இல்லை என்று விவகாரம் தள்ளுபடி ஆயிற்று. இந்தத் தோல்வியைக் கேட்ட செட்டியார் உயிர் துறந்தார். தென்கலையாரோ. விடாமல் வழக்காடினார்கள். சில ஆண்டுகளில் யானை இறந்ததே யொழியத் தென்கலை நாமத்தை அணியவில்லை. இதனோடு விவகாரம் முடிந்ததோ? கவனியுங்கள்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு இத் திவ்யதேசத்தில் யானை இல்லையே என்று கவனித்த ஒரு சிற்றரசர் அவ்வாலயத்திற்கு ஒரு யானையைத் தானமாக அனுப்பினார். ஆலயத்தின் வழக்கத்தை அறிந்தவர் அச்சிற்றரசர். தமக்கு இக்கலைகளில் நம்பிக்கை இல்லாதிருந்த போதிலும் விவகாரம் இல்லாதிருக்க வேண்டி யானைக்கு வடகலை இடும்படிச் சொல்லி அனுப்பினார். யானையும் ஊருக்குப்பத்துக்கல்லில் வந்தது. இதனை அறிந்தார்கள் தென்கலையார்கள். உடனே தாம் நீதிமன்றத்தில் பெற்ற தீர்ப்பை எடுத்துக் காட்டித் தென்கலைத் திருநாமம் இருந்தால்தான் ஊருக்குள் வரலாம், இல்லாவிடில் வரக்கூடாது என்றும், கலகம் நேரிடாதபடி 144 உத்தரவு போடும்படி மனுக் கொடுத்தார்கள். முதலில் 144 உத்தரவும் வந்தது. யானை பத்து மைலிலேயே ஒருமாதம் தங்க நேரிட்டது. அது பிரம்மோத்ஸவத்திற்கும் பயனில்லாமல் போய் விட்டது. தானம் தந்த சிற்றரசர் என்ன முயன்றும் காரியம் சித்திக்கவில்லை. யானையும் திண்டாடித் ‘திரிசங்கு சுவர்க்க’த்தில் இருந்தது. செ. 144 விவகாரத்தில் இருதரப்பாரும் பெரிய வழக்கறிஞர்களை நியமித்தார்கள். ஆயிரக் கணக்கான ரூபாய்கள் செலவாயின. தென்கலையார் பட்சத்தில் உயர்தர நீதிமன்றத் தீர்ப்புக் காட்டப்பட்டது. வடகலையார் தரப்பில், “அத்தீர்ப்பு இப்போது செல்லாது. அது நிறைவேற்றக் கூடியதல்ல. கால அளவைக்குள் நிறைவேற்றப்படவில்லை. கால அளவையால் பாதிக்கப்படுகிறது. மேலும், தீர்ப்பு இறந்த யானையைக் குறித்துத்தான் கொடுக்கப்பட்டது. யானை இறந்தவுடன் அத்தீர்ப்பு ரத்தாகி விட்டது. இறந்த யானைக்குப் புதுயானை வாரிசு அல்ல. அதற்கு இது பிறக்கவில்லை. ஆகவே டிக்ரி பயனற்றுப் போய்விட்டது” என்று வாதாடினார்கள். அதற்குத் தென்கலையாரே “ஒரு யானைபோய் மற்றொன்று வந்தால் அது வாரிசு ஆகும். ஆகவே தீர்ப்புக் கட்டுப்படுத்தும்” என்றனர். வடகலையாரோ, “தீர்ப்பு ரத்து ஆனதுமாத்திரமன்றி புது யானையைத் தந்த சிற்றரசர் வடகலை நாமமே இடவேண்டும் என்று சொல்லித் தானம் செய்ததினால் அதுவே செல்லும்” என்றனர். இத் தர்க்கம் முழுவதும் கேட்ட நீதிபதி, இரண்டு யானைகளும் வேறு. ஒன்றுக்கொன்று வாரிசு அல்ல. முதல் தீர்ப்பு இரண்டாவது யானையைக் கட்டுப்படுத்தாது. இரண்டாவது யானையைத் தந்த சிற்றரசரின் வேண்டுகோளையே எடுத்தாள வேண்டும்” என்று சொல்லி 144-ஐத் தள்ளி விட்டார். தென்கலையார் வாதமோ ‘இலவு காத்த கிளிபோல் ஆயிற்று’ யானையும் இரண்டுமாதம் தவம் புரிந்து விட்டுப் பெரிய வடகலை நாமத்துடன் ஊர்வலம் செய்துகொண்டு ஆலயத்திற்கு வந்தது. கலகம் எங்கு ஏற்படுமோ என்று பயந்து நகர அதிகாரிகள் போலீசு பந்தோபஸ்தோடு யனையை வரவேற்றார்கள். யானை ஆலயம் வந்து சேர்ந்தது. யானை ஆல்யம் வருமட்டும் தருமகர்த்தருக்குக் கூண்டிற்குள் உயிரே இல்லை. வந்து சேர்ந்த பிறகுதான் வயிறார உண்டார். ஆனால் அவருக்கு இன்னமும் சந்தேகம் தான்: ‘மேல் மன்றத்தில் என்ன மாறுதல் ஏற்படுமோ? அல்லது முந்தி வடகலையார் மாற்றினபடி தெரியாமல் திருமண்ணைத் தென்கலையார் மாற்றி விட்டால் என்ன செய்வது?” என்பதாம்.
நண்பர்களே ! திருமண் சண்டைதான் சமயவழிபாடு என்று இப்போதும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நெஞ்சாரவும் எண்ணுகிறார்கள் என்னே, மடமைத்தனம் ! இவர்கள் படித்தவர்களே. படித்தும் பயன் என்ன? இச்சமய வழிபாடு மெய்யான வழிபாடு ஆகுமா? இது ஆஸ்திகத்தின் பேரால் விளங்கும் உலகாய்தமாகும். இதனை நமது மக்கள் அறிவார்களாக.
– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.