விலை போகும் உறவுகள்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 18, 2025
பார்வையிட்டோர்: 203

காலை 9:00 மணிக்கு மருத்துவர் மருதுதுரை அவர்களை, அவரது வீட்டிற்கே சென்று பார்க்க மனம் துடியாய் துடித்துக் கொண்டிருந்தது. இதய பலவீனம் உள்ளவர்கள் கூட இப்படி பதட்டம் அடைந்து இருக்க மாட்டார்கள். நான் பதறியபடி இருந்தேன்.
உடனடியாக இந்தப் பிரச்சனைக்கு என்ன காரணம்? எதனால் இப்படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள்? இதற்கெல்லாம் மூல காரணம் எதுவாக இருக்கும்? என்பதை எல்லாம் அறிய மனம் அளவுகடந்த ஆவல் கொள்ள, நான் அவசர அவசரமாக மருத்துவரை பார்க்க சென்று கொண்டிருந்தேன்.
மருத்துவர் மருதுதுரை, எனது தந்தைக்கு நன்கு தெரிந்தவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார். அவரை நான் பலமுறை அவர் வீட்டிலும், வெளியிலும், அவரது மருத்துவ மனையிலும் பார்த்திருக்கிறேன். பலமுறை, மருத்துவம் சார்ந்த பலவகை பிரச்சனைகளைப் பற்றி பேசியும் , விவாதித்தும் இருக்கின்றேன். எனக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்கு உடனடியாக எப்படியாவது ஒரு தீர்வை கண்டடைய வேண்டும் என்பதில் நான் கவனமாக இருப்பேன் என்பதும் மருத்துவர் மருது துரைக்கு நன்கு தெரியும். இதோ அவரது வீடு வந்துவிட்டது.
வாசல் கதவருகே நிற்கும் கணேசனை காணவில்லை. நான் கதவை திறந்து உள்ளே நுழைந்தேன். வீட்டின் இடது புறத்தில் கருநீல நிறத்தில் ஒரு கியாஊர்தி நின்று கொண்டிருந்தது. மருத்துவர் பயணிக்கும் ஸ்கைரைடர் ஊர்தியை காணவில்லை . அவர் வீட்டில் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். எதற்கும் கணேசனிடம் கேட்டு தெளிவுபடுத்த விரும்பி கணேசனை தேடினேன்.
கணேசன் தோட்டத்திலிருந்து என்னை நோக்கிவர, நான் பத்தடி தூரத்தில் அவன் வரும்போது எனது வினாவை அவனிடம் வீசினேன். அது அவனிடம் மோதி அவனுக்குள் இறங்க, அடுத்த நொடி பதிலாக அவனிடமிருந்து வார்த்தைகள் எனைநோக்கி காற்றில் மிதந்து வந்தன. நான் புரிந்து கொண்டேன். .
கணேசன் சொன்னதன் அடிப்படையில், “இரவு ஏழு மணிக்கு மருத்துவர் மருதுதுரையை பார்க்க வேண்டும்” என்ற எண்ணம் மனதிற்குள் ஊடுருவி பின் உள்ளுக்குள் உட்கார்ந்து கொண்டது.
காலை உணவகத்தில் நடந்தவை மின்னோட்டமாய் என் கண்ணோட்டத்தில் கலந்து அலைக்கற்றையாய் என்முன்னே அலைந்தபடி இருந்தது.
சோழன் உணவகத்தின் உள்ளே நுழைந்து, ஒரு நாற்காலியில் நறுக்கென்று அமர்ந்தேன். என் அக்காவின் வயதையொத்த, ஒரு நடுத்தரவயது பெண் பணியாளர் , என் அருகில் வந்தார்..
“என்னப்பா சாப்பிடுறீங்க? “என்று என்னை அவளது அப்பா நிலைக்கு இட்டுச்சென்றபடி கேட்டாள் . நான் “ஒரே ஒரு கல் தோசை” என்றேன் .
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கல் தோசை எனக்கு முன்னே இருந்த மேஜையின் வெற்றிடத்தில், ஒரு வாளிப்பான வாழை இலையின் மேல் வந்து படுத்திருந்தது. நான் அதனை சோதித்துப் பார்த்தேன். பளிச்சிடும் வெள்ளை நிறத்தில், தோசை சூடாக இருந்தது. அந்த கல் தோசையில் நிச்சயமாக கல் இல்லை. “இதற்கு ஏன் கல் தோசை என்று பெயர் சூட்டினார்கள்?” என்று யோசித்தவாறு பக்கத்தில் இருந்த வாளியில் இருந்து தேங்காய் சட்னியையும், தக்காளி சட்னியையும், சாம்பாரையும் ஊற்றிக் கொண்டேன்.
நான் இன்னும் சாப்பிட ஆரம்பிக்கவில்லை. அப்போது ஒரு மாருதி ஆல்டோ ஒன்று ஆவேசமாய் வந்து, ஒரு குலுங்களுடன் உணவகத்திற்கு எதிரே இருந்த புங்க மர நிழலில், நின்றது. உள்ளே இருந்து ஒரு பெண்ணும், வெள்ளைக்கு வெள்ளை என்ற வகையில் உடை அணிந்திருந்த, அவளது கணவரும் இறங்க, அவர்களுக்கு பின்னால் அவர்களது 3 மகன்களும் ஒவ்வொருவராக ஆட்டோவில் இருந்து இறங்கினார்கள்.
வெள்ளைக்கு வெள்ளையாய் இருந்த கணவன் உணவகத்தை நோக்கி நடை போட்டார். அவருக்கு பின்னே அவர்களது மூத்த பையன் வந்து கொண்டிருந்தான்.
அந்த பெண் கைத்தாங்கலாக, இன்னொரு சிறுவனை இழுத்துக் கொண்டு, உணவகத்தை நெருங்கி வந்தாள். அந்தச் சிறுவன் “இந்த உணவகம் வேண்டவே வேண்டாம். வேற உணவகம் போவோம்” என்பது போல ஆவேசமாக கத்திக் கொண்டே, கைகளையும் கால்களையும், முடிந்தவரை வேகமாக ஆட்டியபடி, தனது எதிர்ப்பை எதிரில் இருந்த அவர்களுக்கு, தெரிவித்து கொண்டே இருந்தான்.
அவனுக்கு நான்குவயது இருக்கும். நன்றாக பேச வருகின்றது. குரலும் நன்றாகவே இருக்கின்றது. அப்போது அவன் அங்கே போடுகின்ற கூக்குரல்தான் எரிச்சலை மூட்டுவதாக உள்ளது.
“அவன் என்ன சொல்கிறான்? எதற்கு இப்படி அடம் பிடிக்கின்றான்?” என்பது உணவகத்தின் முதலாளி முதல், சாப்பிட வந்தவர்கள் வரை, என்னையும் சேர்த்து, ஒருவருக்கும் விளங்கவில்லை. அவனது சேட்டைகள் புஷ்பா தங்கதுரையின் புதிர் கதையைப்போல, என்னை அலங்கமழங்க வைத்தபடி இருந்தது.
இன்னொரு சிறுவன், அந்த ஆட்டோவிற்கு அருகிலேயே நின்றுகொண்டான் . அவன் கடையை நோட்டமிட்டபடி இருந்தான். அவன் சாப்பிட உள்ளே வரவும் இல்லை. இவர்கள் அவனை கூப்பிடவும் இல்லை. உள்ளே வரும் உத்தேசம் இல்லாமல் அமைதியாக ஆல்டோவின் அருகில், அதற்கு பாதுகாப்பாக நிற்பதுபோல், நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு 5 வயது இருக்கும். அவனுக்கு பசி இல்லையோ அல்லது உடம்பு சரி இல்லையோ தெரியவில்லை. . சரி, அவன் எப்படியோ போகட்டும், என எண்ணிக்கொண்டு, எனக்கு பக்கத்து மேசையின்மீது என் பார்வையை நகர்த்தினேன்.
இப்பொழுது என்பார்வை அந்த பெண்மீது சாய்ந்தது. அவள் அழகாகவும் இல்லை. அலங்கோலமாகவும் இல்லை. . இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் அவள் இருந்தாள். இப்போது இங்கே அந்தப்பெண், தான் அமர்ந்திருந்த மேசைக்கு அருகே, ஓரத்தில் உட்கார்ந்து இருந்த அந்தச் சிறுவனை, சமாதானம் செய்ய இன்னும் போராடிக்கொண்டே இருந்தாள்.
“என்ன சாப்பிடற இட்லியா? தோசையா.? பூரியா? இடியாப்பமா? என்ன வேணும் சொல்லு? “ என்று அந்தப் பெண் பலமுறை கேட்டும் அந்த சிறுவனோ “ எதுவும் வேண்டாம் “ என்று அவன் பாதிஅழுதப்படியும், மீதி அடம்பிடித்தபடியுமாக கூச்சலிட்டபடியே இருந்தான்.
கடைசியில் வெள்ளைக்கு வெள்ளையாக இருந்த அவளது கணவன் ஆளுக்கு மூன்று இட்லிகளை கொண்டு வரும்படியும், அடுத்ததாக மூன்று தோசைகள் வேண்டும் என்றும், அந்த பணிபெண்ணிடம் சொல்லிவிட்டு, தனது அலைபேசியில் மனதை அலைய விட்டான்.
நான் இரண்டு வாய்தான் சாப்பிட்டேன். அதற்கு மேல் சாப்பிட பிடிக்கவில்லை. சாப்பிட முடியவில்லை. சிறுவனின் கத்தலும், கதறலும், கூக்குரலும், கர்ண கடூரமாகவும் அது எனக்கு மிக கொடூரமாகவும் தெரிந்தது. .
அந்த நடுத்தரவயது பெண் பணியாளர், அவர்கள் நால்வரும் அமர்ந்திருந்த மேசையில், நான்கு இலைகளை போட்டுவிட்டு, ஒவ்வொரு இலையிலும் , அவர்கள் கேட்டபடி மூன்று இட்லிகளை வைத்துவிட்டு சென்றாள். அவளது கணவரும் பெரிய பையனும், எந்தஒரு பரபரப்பும் இல்லாமல் அந்த இட்லிகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
எனக்கு எதுவும் புரியவில்லை . அப்போது, அந்த அடம்பண்ணும் சிறுவன், தனக்குமுன் வைக்கப்பட்ட மூன்று இட்லிகளையும், வடதிசையை தவிர்த்து, மூளைக்கு ஒன்று என்ற கணக்கில், வேகமாக எரிச்சலுடன் வீசி எறிந்தான்.
அவன் வீசிய இட்லிகளில் ஒன்று சாலையில் போய்க் கொண்iடிருந்த, ஒருவரின் முகத்தில் பட்டு, இடதுபுறம் இதமாக திரும்பி, ஓர் ஓரமாக ஓடிக் கொண்டிருந்தது.
இட்லியின் இதமான தாக்குதலுக்கு ஆளானவர், ஒரு மின்னல் தாக்குதலுக்கு ஆளானவரைப் போல மிரண்டு போனார் . அவரது கண்கள் கலக்கத்துடன், சுற்றிசுற்றி சுழன்றபடி இருந்தது . அவரால் அதற்கு மேல் நடக்கப் பயந்தவராய், அப்படியே சாலையோரத்தில் அமர்ந்தார். .அவரிடம் பயம் பவ்யமாக அமிழ்திருந்தது.
அந்தப் பையன் அந்த வாழை இலையை மூன்று துண்டுகளாக்கி, அவற்றை முரட்டுத்தனமாய் வெளியே வீசிஎறிந்தான்.
அந்தப்பெண் தனது இலையை அவன் அருகில் வைத்து, அதில் இருந்த ஓர் இட்லியின் ஒரு பகுதியை லேசாக விண்டு, அவனுக்கு ஊட்டி விடுவதற்காக, தனது கையை அவனது வாய அருகே கொண்டுசென்றாள். அவன் அவளது கையை ஒருவித கொடூர ஓசையுடன் உதறித் தள்ளினான்.
எதிரே அமர்ந்திருந்த இருவரும் எதைப்பற்றியும் கவலைப்படாமல், அவர்கள் போக்கில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அந்தப்பெண் எழுந்து நின்றபடி , அந்த சிறுவனை கைதாங்கலாக பிடித்துக் கொண்டு, அவனுக்கு இட்லியை ஊட்டிவிட முயன்றாள். அவன் அதிவேகத்துடன் முண்டி எழுந்து, அவனது தாயை அப்படியே நாற்காலியோடு தள்ளிவிட, அவள் “அம்மா” வென்று அலறியபடி கீழே சாய்ந்தாள். உடனே பக்கத்தில் இருந்த கடை ஊழியர்கள் அந்தப் பெண்ணையும் பையனையும் தூக்கி விட்டனர் .
நான் பாதிதோசையைகூட சாப்பிடாமல் அப்படியே மூடி வைத்துவிட்டு, கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தவரிடம் உரிய காசை கொடுத்துவிட்டு, எரிச்சலுடன் வெளியே வந்தேன். .
சிலநிமிடங்களில் அவர்களும் உணவகத்தை விட்டு வெளியேறி வந்தார்கள். அந்த நால்வரும் ஆல்டோ வாகனத்தில் ஏறி அமர்ந்தபோது, ஆட்டோவிற்கு அருகில் அமைதியாக நின்று கொண்டிருந்த சிறுவன், கீழே விழுந்து கைகால்களை உதறியபடி, “ என்னை விட்டுட்டு எப்படி சாப்பிட்டீங்க? ஏன் என்ன கூப்பிடாம போனீங்க? நான் இனி உங்க கூட வரமாட்டேன். நான் இங்கேயே இருந்து சாவுறேன் ” , என்று சொல்லியபடி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தான்.
ஆல்டோவில் ஏறிய நால்வரும் அவனை அலட்சியப்படுத்தியபடி, ஏதோ தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். வெளியே அந்த சிறுவனின்
சேட்டைகள் மூட்டை மூட்டையாய் கீழே விழுந்து சிதறிக்கொண்டிருந்தது. அது போவோர் வருவோரை சிரமப்பட வைத்துக் கொண்டும் இருந்தது.
இந்த சிறுவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? என்ற குழப்பம் என்னுள் தர்பூசணி கொடியாய் தாராளமாய் வளர்ந்து கொண்டிருந்தது.
இரவு 7 மணி அளவில் நான் மருத்துவர் மருதுதுரையிடம் உணவகத்தில் நடந்தவற்றை விவரமாக சொல்லிவிட்டு, அவரை பார்த்தேன். அவர் மெல்லிய புன்னகையுடன் என்னை பார்த்தார். சில கேள்விகளை என்முன் வைத்தார்.
“நீங்க பார்த்த அந்ததம்பி, அதாவது அந்தபசங்களோட அப்பா, வெள்ளைசட்டை வெள்ளை முழுக்கால் சட்டை போட்டிருந்தாரா? “
“ஆமாங்கய்யா “
“அவங்களோட பசங்க மொத்தம் மூணுபேர்தானே நல்லா தெரியுமா? “
“ஆமாங்கய்யா. பசங்க மூணு பேருதான்.”
“சரி அவங்க வந்தது வெள்ளைநிற ஆல்டோ தானே ? “
“ஆமாங்கய்யா “
“அந்தபொண்ணுக்கு கையில ஆறுவிரல் இருந்துச்சா? நல்லா பார்த்தீங்களா ?“
“ஆமாங்கய்யா. நான் நல்லா பார்த்தேன் கையில ஆறு விரல்தான் இருந்துச்சு “
”அப்ப கண்டிப்பா நான் நினைக்கிற அந்த குடும்பம்தான், நீங்க சொல்ற அந்த குடும்பம்.”
“சரிங்கய்யா. அவங்க யாருன்னு உங்களுக்கு தெரியுங்களா ? ”
“எனக்கு தெரிஞ்சவங்கதான் .’ நீங்க சொல்ற அந்த தம்பியோடபேரு “நீலகண்டன்”. நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பையன். எங்க ஊருக்கு பக்கத்து ஊருதான் அவரு . அந்தத் தம்பி, கல்யாணத்துக்கு முன்னாலேயே கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தாரு. அந்த தம்பியபத்தி தெரிஞ்சவங்க அவருக்கு பொண்ணு கொடுக்க முடியாதுன்னுட்டாங்க.
இப்பவும் அந்தத்தம்பி சில நேரம் அப்படித்தான் இருக்கிறாரு. அந்தத்தம்பி இன்னும் முழுசா சரியாகல. அந்தபொண்ணோட பேரு கல்பனா . அவங்க கொஞ்சம் ஏழ்மையான குடும்பம். இப்போது கல்பனா முருகன் என்ற பையனை காதலித்து வந்தாள். எப்படியோ அந்த பொண்ண கட்டாயப்படுத்தி. இவனுக்கு கட்டி வச்சாங்க. . ரெண்டுபேரும் இன்னவரைக்கும்
வெறுப்போடையும், , கோபத்தோடையும்தான் இருக்காங்க. எப்பவாவது ராத்திரியில சேர்ந்து படுப்பாங்க . அப்படி பொறந்தவங்கதான் அந்த ரெண்டுபசங்களும்.”
“சரிங்கய்யா, நீங்க சொல்றது புரியுது. ஆனா அது மட்டும்தான் காரணம்னு நீங்க நினைக்கிறீங்களா? “
“ அதுதான் அடிப்படை காரணம். ஆனா அதோட இன்னைக்கு இந்த பசங்க அதிகமா வாங்கிசாப்பிடற அடைப்பு உணவுகள், தின்பண்டங்கள், குளிர்பானங்கள் , அடைப்புத் தண்ணீர், பலவகை கேக்குகள் இப்படி எல்லாத்திலேயும் நம்ம நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய மோசமான ரசாயனங்களும், சுவைக்காக சேர்க்கப்படும் சில பொருட்களும், இந்த பசங்களோட மூளைய பாதிச்சு, நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டு வருது. நாளாக நாளாக அதனோட தாக்குதல் அதிகமாகி பையன்களோட நிலைமை இன்னும் கொடூரமானதாககூட மாறலாம் . ஆனால் இதுக்கு நீங்களும் நானும் மட்டும் கவலைப்பட்டு என்ன பண்றது? ஆனா இதுக் கெல்லாம் நிச்சயம் ஒரு விடிவுகாலம் சீக்கிரம் வந்தே தீரும் . அப்பதான் இந்த மாதிரி பசங்களோட நிலைமைமாறும். ஆனால் அது எப்பவரும்? எப்படி வரும்?ங்கறது நம்ம கையில இல்ல. . சரிதம்பி எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு . மீதியை அப்புறமா பேசிக்கலாம். சரி தம்பி நான் வரட்டுமா ?“
“மன்னிக்கணும் ஒரே நிமிஷம் ஐயா. என்னோட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நீங்க பதிலை சொன்னீங்கன்னா, கொஞ்சம் நல்லா இருக்கும் . “
“சரி கேளுங்க.”
“நான் பார்த்தவரைக்கும் அந்த ஆல்டோல வந்த பையன்கள்ல அந்த பெரிய பையன் மட்டும் எந்தவித சிக்கலோ சிரமமோ, இல்லாதவனா , நல்ல விதமா நல்ல பையனா, இருக்கிறான். நல்லா பேசுறான். அதுமட்டும் எப்படி? இதுதான் எனக்கு புரியாத புதிராக இருக்குது“
நீலகண்டன் நிச்சயமா அதுக்குக் காரணம் இல்ல. அந்த முதல் பையன் பிறந்தபோது நீலகண்டன் இயல்பாக இருந்தார். ஆனால், அதைவிட முக்கியமான உண்மை என்னவென்றால்…”
மருதுதுரை என் கண்களை நேராகப் பார்த்துவிட்டு பின் தொடர்ந்தார்.
“…கல்பனா, அவளது திருமணத்திற்கு பின்னரும் தான் நேசித்த நபருடன் இன்னமும் தொடர்பில் இருந்து வந்தாள். தான் நேசித்த ஒருவனை விட்டுவிட்டு பணத்திற்காக தனது பெற்றோர் இன்னொருவருக்கு தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்த நிகழ்வினால் வெறுப்படைந்த அவள், அந்த வெறுப்பின் வெளிப்பாட்டை அப்படித்தான் வெளிப்படுத்த முயன்றாள். முதல் பையன் பிறந்த பிறகு, அவளது காதல் அவனை விட்டு
விலகியது. அந்த முதல் பையன், அவளது உண்மையான காதலின் வெளிப்பாடாக இருந்திருக்கலாம். அடுத்த குழந்தைகள் பிறந்தபோது, அவளது மனதில் நீலகண்டன் மீதும் தன் வாழ்க்கை மீதும் வெறுப்பு மட்டுமே நிறைந்திருந்தது.”
“தன் தாய், தந்தையின் மனநிலையைப் போலவே அந்தப் பிள்ளைகளும் வெறுப்பும் கோபமும் கொண்டவையாக மாறிவிட்டன. ஒரு தாய், கருவுறும்போது, தன் வாழ்வின் மீதும், தன் கணவன் மீதும், ஏன், பெற்றெடுக்கும் குழந்தை மீதும் வெறுப்புடன் இருந்தால், அந்த உணர்ச்சிப் பிழைகள் குழந்தையின் மனதின் அடித்தளத்தில் அமர்ந்துவிடும்.”
“அந்த முதல் பையன், அந்தக் கட்டாயத் திருமணத்தில் சிக்காத ஓர் உறவின் வெளிப்பாடு. மற்றவர்கள்… விலைப் போன உறவுகளின் பிழைகள்.”
மருத்துவர் மருதுதுரை அவரது கருநீல ஸ்கைரைடர் வாகனத்தை நோக்கி வேகமாக நடந்தார். அவர் சொன்ன வார்த்தைகள், அந்தக் குடும்பத்தின் இருண்ட ரகசியத்தைப் புரிய வைத்தன. ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றியபடி நான் அங்கிருந்து மெல்ல நகர்ந்தேன்.