குப்பை
கதையாசிரியர்: ஜெயந்தி சங்கர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 18, 2025
பார்வையிட்டோர்: 182
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரத்தம், தரையெங்கும் ஒரே இரத்தம். அலறல், முனகல், முக்கல், அழுகை, தொடர்ந்து குபுக் குபுக் என்று வழியும் அடர்ந்த இரத்தம், மறுபடியும் அதே அலறல், அழுகை, முக்கல், முனகல்.
சுற்றிச் சுற்றி வந்த கருப்புப் பூனை ஒன்று உற்று உற்றுப் பார்த்தது. கூசும் ஒளியுடன் இருந்த அதன் பச்சைக் கண்களால் கோபமாக சீறிப் பார்த்தபடி துரத்தத் துரத்த மீண்டும் மீண்டும் அங்கேயே வட்டமிட்டது. அதன் வளாகத்தினுள் மற்றவர்களின் ஊடுருவலைத் தன் மொழியில் எதிர்த்தது.
அடுக்கு மாடிப்படியின் கீழ்ப்பகுதி, பலத்த மழை பெய்து ஓய்ந்திருந்த குளுமையான மார்கழி மாதத்துப் பின்னிரவு நேரம். மின் விளக்கின் உதவியால் அமாவாசை இருட்டில் முக்கால்வாசி விலக்கப்பட்டிருந்தது. அவரவர் சுவாசமே இரைச்சலாய்க் கேட்கும் அளவிற்கு ஜன நடமாட்டமற்ற நிசப்தம். வீசியெரியப்பட்ட சில அட்டைப் பெட்டிகள். கடைசிப் படியருகே கீழ்த்தளத்தில் குப்பைகள் அகற்றப்படாத ஒரு பச்சை நிறக் குப்பைத் தொட்டி அதனுள்…
இந்த கட்டத்தில் தான் அவன் பதறியடித்து ஓர் உலுக்கலுடன் எழுவது வழக்கம். பலமுறை கண்டும் கூட இப்பயங்கர கனவினால் அசாத்தின் தூக்கம் கலையாமல் இருந்த இரவுகள் சொற்பமே. ஒவ்வொரு முன்னிரவும் இதே கனவு மீண்டும் மீண்டும் வந்து வருடக்கணக்காகத் தொல்லைப் படுத்தியது.
பள்ளிக்கால நண்பர்கள் எல்லோருமே எங்கிருக்கின்றரோ?! பள்ளியில் சிலரும் புதுமுக வகுப்பில் சிலரும் பிரிந்து பின் தேசிய சேவைக்குச் சென்று விட்டதில் முற்றிலும் தொடர்பறுந்து போனது.
துள்ளித் திரிந்த நாட்கள் அவை. இருபாலாரும் ஓடித்த உயர்நிலைப் பள்ளியில் அவனுக்குத் தோழர்களும் தொழிகளும் ஏராளம். பிரச்சனைகள் எதிலுமே மாட்டிக் கொள்ளாமல் முக்ச் சிறப்பாகப் படிக்கும் சில மாணவர்களுள் ரவியும் ஒருவன். படிப்பு மட்டுமா, நாட்டின் பதினாராவது தேசிய தின விழாவிற்கான தீவிரப் பயிற்சி வேறு.
சூலுங்கை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்ததே ரவி தான். அவள் அதே தோபாயோ வட்டாரத்தில் வேறு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். ஒரே வயதினரான அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ள ஏராளமான விழயங்கள் இருந்தன. திரைப்படம், பாட்டு என்று பேசப் பேச அவர்களுக்கு அலுக்காமல் அக்ஷ்ய பாத்திரமாய் விஷயங்கள் வந்தபடியிருந்தன. நேரம் போவதே தெரியாமல் மரத்தடியிலும் அடுக்குமாடிக் கீழ்த்தளத்திலும் பேசிப் பேசிப் பொழுது போக்கினர். உலக அறிவு தங்களுக்கு குறைவு என்பதை உதட்டளவிலோ மனத்தளவிலோ ஒப்புக் கொள்ளாத விடலைப் பருவம். அதனால, பெரியவரிகளாகிவிட்டதாய் மனதில் ஒரு நினைப்பு.
சூலிங் சாதாரணமாய்த் தன் பள்ளி மாணவிகளுடன் பழகியதில்லை. ரவி மூலமாய் அவளுக்குப் பல நண்பர்கள் கிடைத்தனர். அவளுக்கு உடன் பிறந்தவர் யாருமில்லாததால், அவள் நட்புக்கும் தோழமைக்கும் ஏங்கினாள். அவளின் அம்மா தன் வியாபாரத்தில் மூழ்கி முத்தெடுத்தபடி இருந்ததில் தன் மகளின் நினைவை மறந்திருந்தார். தொலைபேசியில் வியாபாரப் பேச்சாய் அமைந்தது தாய் மகள் உறவு. சூலிங் யாருமில்லாத வீட்டிற்குப் போவதை விட நண்பர்களுடன் ஊர் சுற்றுவதையே தீவிரமாய் விரும்பினாள். தன் அம்மா தன்னையும் கோப்பாக நினைத்ததாய் அவள் குற்றம் சாட்டினாள்.
மற்றவர்களை விட அவனின் வசீகரிக்கும் கவர்ச்சியான உருவம் அவளை ஈர்த்தது. அவனையே சுற்றிச் சுற்றி வந்தாள். அவனது ஆஃகானிய தந்தை வழிச் சொத்தான பழுப்பு பூனைக் கண்ணும், ரோஜா நிறமும், கூர்மையான மூக்கும் அவளை மயக்கின. அகத்தை நோக்காது புறத்தை மட்டுமே நேசித்த உண்மையை அவன் ஆரம்பத்தில் அறிந்ததில்லை.
சூலிங் நாளடைவில் அவன் கூட்டத்திலிருந்து பிரித்துத் தனியே இழுத்துக் கொண்டு ஊர் சுற்ற நினைத்தாள். ஏனென்று கேள்வி கேட்டவனை பேச்சுச் சாதுர்யத்தால் தன் வழிக்குக் கொண்டு வந்தாள். அவன் மற்றவருடன் பேசினால் அவள் சட்டென்று எரிச்சலடைந்தாள்.
நண்பர் கூட்டத்திலிருந்து தனியே வர அவனுக்கு முதலில் விருப்பமில்லை. இருப்பினும், சூலிங் தான் இறுதியில் வென்றாள். கும்பலில் இருந்தவரை அவளிடமிருந்த அழகான கனிவும் பணிவும் இருந்த இடம் தெரியாது தொலைந்தது. நாளடைவில் சூலின் அவனைத் தன் தோழனாக மட்டுமின்றி கிட்டத்தட்ட ஓர் கொத்தடிமையாகவே நடத்த ஆரம்பித்தாள்.
கே.கே. தாய் சேய் மருத்துவமனையின் வரவேற்பறையில் காத்திருந்தான் அசாத். நினைத்து வந்த காரியம் நிறைவேறுமா என்று அவன் உள்ளம் சிறுபிள்ளைத் தனமாய் ஏங்கியது. நபீஸா வேறு, அலுவலகத்திலிருந்து நேராக வருகிறேனென்று சொல்லிவிட்டுத் தாமதிக்கிறாள். விடுப்பெடுக்க அவன் சொன்ன போதும் அதிக வேலையைக் காரணம் காட்டி மறுத்திருந்தாள். எப்படியும் சீக்கிரம் கிளம்பி விடுவதாகச் சொல்லியிருந்தாள்.
சூலிங் அவனைத் தன் விரலிடுக்கில் வைத்திருக்க ஆசைப்பட்டாள். பணக்காரத் தாயிடம் அவளுக்குக் கிடைக்காத பாசத்தை அவனிடம் எதிர்பார்த்தாள். தன்னிடமில்லாத ஒரு நாய்க்குட்டியின் விசுவாசத்தையும் சேர்த்தே அவனிடம் எதிர்பார்த்தாள். பல சமயங்களில் அவளுடைய ஆளுமை அவனுக்கு தொந்தரவாக இருந்த போதிலும் அவளிடம் புழங்கிய ஏராளமான பணம் அவனுக்கு வேண்டியிருந்தது.
பெரிய குடும்பத்தில் பிறந்த அவனுக்குக் கைச்செலவிற்குப் போதுமான காசு எப்போதுமே இருந்ததில்லை. சாதாரணப் பணியில் இருந்த அவனது தந்தை தன் குடிப் பழக்கத்திற்குச் செலவிட்டது போக மீதிச் சொற்பத் தொகையை தாயிடம் கொடுத்தார். தாயோ நான்கு குழந்தைகளையும் வளர்த்தெடுக்க அந்தத் தொகையை இழுத்து இழுத்துத் தானும் உடன் இழுபட்டார்.
பகுதி நேர வேலைக்குப் போகவிருந்த அவனைத் தடுத்ததே சூலிங் தான். அவ்வேலையில் கிடைக்கக் கூடிய தொகையைத் தானே கொடுப்பதாகக் கூறி பள்ளி நேரம் தவிர மீதி நேரங்களில் அவளுடனேயே அவனை இருக்கச் செய்தாள். பாடம் தவிர வேறு எதையாவது செய்ய அவனை ஊக்குவித்தாள்.
தன்னுடைய நண்பன் ஒரு சாதாரண வேலையில் இருந்தால் தனக்கு இழுக்கு என்று நினைத்ததுடன், அவனிடமே சொல்லவும் செய்தாள். அவனையும் இழுத்துக் கொண்டு ஒவ்வொரு அங்காடிக் கடையையும் திரையரங்கையும் மணிக்கணக்கில் சுற்றினாள் சூலிங். கூட்டத்தில் இருந்த போது தாக்காத அந்நியர்களின் பார்வை அவர்களை கேள்விக் குறியுடன் தொடரவாரம்பித்தது.
பள்ளிப்பையில் மதியம் மாற்றிக் கொள்ள கவர்ச்சியான ஆடை ஒன்றை எப்போதும் வைத்திருந்தாள். அவனையும் கொண்டு வர வற்புறுத்தினாள். வழியில் இருந்த விரைவு ரயில் நிலையத்தில் இருந்த கழிவறையில் இருவரும் உடை மாற்றிக் கொள்வது வாடிக்கையானது.
தன்னைக் கவர்ச்சியாகக் காட்டிக் கொள்ள அவள் எடுத்த முயற்சிகளும் செய்த செலவுகளும் ஏராளம். இத்தனைக்கும் அவள் காண்பவரைக் கவரும் மஞ்சள் நிறமும் மெலிந்த சீரான உடலமைப்பும் கொண்டவள். அவனுடைய தோற்றமும் அவளுக்குக் கௌரவச் சின்னமானதால் அதில் பாதியளவிற்கு அவனுக்கும் செலவிட்டாள்.
அது மட்டுமில்லாது தான் கண்ட திரைக்காட்சிகளில் வந்த காதல் ஜோடிகளை சூலிங் மிகவும் விரும்பினாள். அந்த கதாப்பாத்திரமாகவே தன்னை கற்பனை செய்து கொண்டாள். ஆதலால், அந்த ஜோடிகளைப் போலவே தானும் அவனும் நடக்க வேண்டும் என்று ஆவல் கொண்டாள்.
அசாத் தான் மட்டும் விடுப்பெடுத்துக் கொண்டு வெள்ளிக்கிழமைத் தொழுகையையும் முடித்துவிட்டு இரண்டு மணி நேரம் முன்பாகவே வந்து காத்திருந்தான். நபீஸா தான தாமதப்படுத்தினாள்.
சாளரத்தின் வழியாக பார்க்கப் பார்க்க அலுக்காத மழையையே பார்த்தபடியிருந்தான். ஆயிரமாயிரம் ஊசிகளாய் மழைச்சரங்கள் பூமியைக் குத்தின.
அன்றும் இதேப் போலத் தான் பலத்த மழை பெய்திருந்தது. பல வருடங்கள் ஓடி விட்ட போதிலும் மழையின் பின்பு அன்று நிலவிய குளுமையும் கண் முன்னே விரிந்து திகிலூட்டிய ரத்தத்தின் செம்மையும் இன்று நடந்ததைப் போலவே அவன் நினைவில் என்றும் அழியாது நின்றது.
வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தைத் தன் பதினாறே வயதில் பெறுவது, அதுவும் இனிமை கடுகளவும் இல்லாமல் அச்சமும் குற்றவுணர்வும் மட்டுமே மிஞ்சுமென்றால் அத்தகைய நினைவுகள் கடைசி மூச்சு வரையில் விடாமல் நிச்சயம் துரத்தத் தானே செய்யும். அதைத் தான் அசாத்தும் அனுபவித்தான். நினைவுகள் பல சமயங்களில் அவனை நிலைகுலையச் செய்தன.
சமீப காலமாகத் தான் அசாத்துக்கும் நபீஸாவிற்கும் தங்களுக்கு குழந்தையில்லாதது பெருங்குறையாகத் தெரிந்தது. இருவருக்கும் உடலில் ஒரு குறையும் இருக்கவில்லை. இருந்தாலும் பிள்ளை தரிக்கவே இல்லை. அந்தப் புதிருக்குத் தன் கனவே விடையோ என்று அசாத் பலமுறை புழுங்கியிருக்கிறான்.
ஓடி ஓடி உழைத்துச் சம்பாதித்த பொருளைக் கட்டியாள ஒரு வாரிசு வேண்டும் என்பது ஒரு புறமிருக்க அம்மா என்றும் அப்பா என்று கூப்பிட ஒரு குழந்தையில்லையே என்று இருவருமே கருதினர். மழலையின்பம் என்றால் என்னவென்று உணர்ந்தறிய தீவிரம் கொண்டனர். ஆனால், சிறு குழந்தையை வளர்க்கும் போது பார்ப்பவர் தங்களைத் தாத்தா பாட்டியென நினைத்து விடக்கூடிய சங்கடங்களையும் அவன் மனம் ஆராயத் தவறவில்லை. ஆயினும் வேறு வழியும் இருக்கவில்லை.
இருவரது உறவினர்களும் குழந்தைகளைத் தத்துக் கொடுக்க முன்வந்தனர் என்ற போதிலும் நபீஸாவிற்கு அதில் துளியும் உடன்பாடில்லை. வெளியிலிருந்து முடிந்தால் மலேசியாவிலிருந்து ஒரு குழந்தையைத் தத்தெடுக்கவே அவள் விரும்பினாள். பிறந்த குழந்தை தான் தன்னிடம் ஒட்டி வளரும் என்றும் அவள் தீவிரமாய் நம்பினாள்.
சில வாரங்களுக்கு முன்னர் செய்தித்தாளில் ‘குப்பைத் தொட்டி’யில் கண்டெடுக்கப்பட்ட ஒரு குழந்தை கே.கே.மருத்துவமனையில் தாதிகளிடம் வளர்வதைப் பற்றிப் படித்த அசாத் அந்தக் குழந்தையைப் பற்றியே வெகு நேரம் யோசித்தான்.
ஏன் அக்குழந்தையையே தத்தெடுத்து வளர்க்கக் கூடதென்று தோன்றியதால் நபீஸாவுடன் ஆலோசித்தான். அவளும் சம்மதிக்கவே மேலும் விவரங்கள் மற்றும் சட்ட நுணுக்கங்களை அறிய வேண்டி மருத்துவமனை அதிகாரிகளிடம் வேச நேரம் குறித்து முன்பே வாங்கியிருந்தனர்.
தத்தெடுப்பது ஒன்றும் அத்தனை சுலபமல்ல என்பதை ஒரே வாரத்தில் அசாத் அறிந்தான். அதில் ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள் ‘நுணுக்கங்கள்’ என்ற பெயரில் இருந்தன. இன்று இவ்விஷயத்தில் ஒருவருக்கு ஆலோசனை கூறும் அளவிற்குக் கற்றுக் கொண்டுள்ளான்.
குப்பைத் தொட்டியில் கிடைத்த அந்தக் குழந்தையை வளர்க்க ஏகப்பட்ட போட்டியாம். அதிகாரி தொலைபேசியில் கூறியிருந்தார். பலர் விண்ணப்பித்திருந்தது தெரிய வந்தது. இருந்தும் கடைசி வரை முயற்சி செய்து விடுவதெனத் தீர்மானித்தான்.
எஸ்தர் என்ற வகுப்புத் தோழி கணிதத்தில் ஒரு நாள் சந்தேகம் கேட்டபோது, கணக்கை அவன் அவளுக்கு விளக்கிக் கொண்டிருந்தான். சூலிங் அங்கு வந்ததை அவன் கவனிக்கவேயில்லை. அதுவே அவளை அதிக ஆத்திரம் கொள்ளச் செய்தது.
உடனே போட்டிக்குத் தானும் கணக்குப் புத்தகத்தை எடுத்தது மட்டுமில்லாது எஸ்தரைத் தரையில் கோபத்துடன் தள்ளியும் விட்டாள். சீற்றம் கொண்ட புலியாகச் சீறினாள் சூலிங். எஸ்தர் பயந்து ஓடியே விட்டாள்.
அவனுக்கு அவள் செய்கைகள் சில சமயங்களில் எரிச்சலையும் கோபத்தையும் கொடுத்தாலும் பல முறை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் தான் இருந்து வந்தது. தான் இல்லாவிட்டால் சூலிங் நிலை என்ன, ஒரு வேளை பைத்தியமாகி விடுவாளோ என்று நினைக்கும் போதே அவனுள் ஒரு வித போதை எழுந்தது.
தன் வீட்டில் கிடைக்காத சுக போகமும் கவனமும் அவளிடம் கிடைத்ததால் சூலிங்கின் பிடிவாதத்தை பொருட்படுத்தாது இருக்க அவன் மெள்ளப் பழகினான்.
அவனுக்கு வேண்டிய அனைத்தையும் சூலிங் வாங்கிக் கொடுத்தாள். உல்லாசமாகக் கையைக் கோர்த்துக் கொண்டு அடிக்கடி உணவங்காடிக்கும் திரையரங்கத்திற்கும் வேறு அழைத்துப் போனாள். அவன் அவளின் கோபத்திற்கு ஆளாகி அச்சலுகைகளை இழக்க விரும்பவில்லை. பணத்திமிரில் வாங்கிய பொருள் புதிதாய் இருக்கும் போதே அவள் குப்பைத் தொட்டியில் எறிவது தான் அவனுக்கு முதலில் வருத்தமாயும் பிறகு பழகியும் விட்டது.
அரையை நோட்டமிட்ட அசாத்தின் கண்ணில் மூக்குக் கண்ணாடியணிந்த ஒரு சீனப் பெண்மணி தன்னைப் போலவே காத்திருப்பது பட்டது. அறையின் மறுபுறமிருந்த சாளரத்தின் வழியாக வேடிக்கை பார்த்தபடியிருந்தார். முகம் சரியாகத் தெரியவில்லை. வேறு சிலரும் வந்திருந்தனர். ஆனால், வந்தவர் ஒருவரும் திரும்பிப் போகவில்லை. காத்திருக்கவே வந்ததை போலக் காத்திருந்தனர் பொறுமையுடன்.
சூலிங் ஒரு நாள் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று சொல்லிச் சிடுசிடுத்தாள். அவனுக்கு சற்று அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் இருந்தது. “நிஜமாவா சொல்ற” வாய் பிளந்தபடி அதிர்ச்சியில் கேட்டதற்கு, “இதுக்கு எல்லாம் நீதான் காரணம், இப்ப எங்கம்மாவுக்குத் தெரிஞ்சா, நம்ம ரெண்டு பேரையுமே கொன்னுடுவாங்க,” என்று முழுப் பழியையும் அவன் மீது போட்டாள். அவனை கேவலமாகக் ஏசியது மட்டுமில்லாமல் அடிக்கவும் அடித்தாள்.
சில வாரங்களுக்கு முன் ஒருமுறை செந்தோசாத் தீவிற்கு அவனை நிர்பந்தப்படுத்தி அழைத்துச் சென்றாள். கற்பனையைச் செயல்படுத்த நினைத்தாள் சூலிங். கடற்கரையில் அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் வற்புறுத்தியதே அவள் தான். உனக்கு என் மேல் துளியும் அன்பே இல்லை. உனக்கு எஸ்தரைத் தான் பிடிக்குமோ, என்று அபாண்டமாகக் கூறி அவனை வலுக்கட்டாயமாக இணங்க வைத்து வீழ்த்தினாள். அதை மறந்து இப்போது தன் மீது தவறே இல்லையென்பது போலப் போசினாள். கண்மூடித்தனமாகப் புறத்தோற்றத்தை மட்டுமே விரும்பியிருக்கிறாள் என்று அந்தக் கணமே அவனுக்குத் தெரிந்து விட்டது.
விவரம் அறிந்த ரவி முதலில் அதிர்ந்து, விவகாரம் பெரிதென எண்ணி அவர்களிடமிருந்து அஞ்சி விலகிடப் பார்த்தான். இருவரும் சேர்ந்து கெஞ்சியதில் வேறு வழியில்லாமல் உதவ முன் வந்தான்.
அவனுடைய ஆலோசனையின் படி சூலிங் அவளுடைய குருட்டுப் பாட்டியுடன் இருந்து படிக்க அவள் அம்மாவிடம் அடம்பிடித்து அனுமதி வாங்கினாள். பாட்டி வீடு மார்ஸ்லிங் வட்டாரத்தில் இருந்தது.
பாட்டியுடன் இருக்க ஆரம்பித்த சூலிங் எப்படியாவது கருக்கலைப்பு செய்யத் துடித்தாள். யாருக்கும் தெரியாமல் அதைச் செய்வது ஒன்றும் சுலபமாக இருக்கவில்லை. அவளின் தோற்றமும் சோர்வும் மாணவர்க்ளிடையே சந்தேகத்தை வரவழைத்தன. வழக்கம் போல வதந்திகள் உருவாயின.
அவனுக்கு அடிக்கடி அம்மாவிடம் ஏச்சு கிடைத்தது. உண்மையில்லாத முழு வதந்தி என்று சத்தியம் செய்தான் அவன். அம்மாவிற்கு மற்ற மூன்று பிள்ளைகளையும் கவனிக்க அதிக கவனமும் நேரமும் தேவைப்பட்டதில் அவன் பிழைத்தான். மேலும் ரவி அவனுக்காக அம்மாவிடம் சொன்ன சொல் அம்மாவின் வாயை அடைத்தது.
சூலிங்கின் பாட்டிக்குக் கண் தெரியாவிட்டாலும் காது துல்லியமாகவே கேட்டது. வதந்திகள் அவர் காதையும் எட்டின. சூலிங் வெகு சாமர்த்தியமாக அவரைச் சமாளித்தாள். அத்தனையும் பொய் என்று புளுகினாள். அவருக்கு வேண்டிய பிடித்த பொருள்களை வாங்கித் தந்து வதந்திகள் தன் அம்மாவின் காதுக்கு எட்டாமல் பார்த்துக் கொண்டாள். பாட்டியின் மறதியும் சூலிங்கிற்குச் சாதகமாக இருந்தது.
சக மாணவர்களின் பார்வைகளை பொறுக்க முடியாமல் தான் அதிகம் தவித்தாள் அவள். தூரம் அதிகமாய் இருப்பதாக அம்மாவிடம் சொல்லி பாட்டி வீட்டுக்கருகிலேயே உள்ள ஒரு பள்ளிக்கு மாறினாள். ஒன்பது பாடங்கள் படித்துக் கொண்டிருந்த அவளுக்கு அக்கம்பக்கப் பள்ளியொன்றில் எட்டு பாடங்களுடன் உயிரியல் இல்லாத பிரிவு தான் கிடைத்தது.
ஆனால், தினமும் தொலைபேசியிலிலும் நேரிலும் அவனைத் தொல்லைப் படுத்துவதை மட்டும் விடவில்லை. சில நாட்கள் பள்ளிக்குப் போகாமல் கூட அவள் தன்னைத் தேடி தனது பள்ளிக்கு வருவதை அவன் வெறுத்தான்.
அவன் தன் எண்ணத்தைச் சின்னதும், சூலிங் தன் ‘தற்கொலை’க்குக் காரணம் அவன் தானென்று எழுதி வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொள்வேன் என்று பயமுறுத்தினாள். அதனால், அவள் கூப்பிடும் போது அவள் முன் நிற்க வேண்டியிருந்தது அவனுக்கு. பேசாமல் தானே தற்கொலை செய்து கொள்ளலாமென்று விரக்தியுடன் சிந்தித்தான். துணிவு தான் துளியும் வரவில்லை.
அவன் வாயைத் திறந்தாலே எரிந்து விழுந்தாள். முன்பு களிப்பளித்த அவன் தோற்றம் இப்போதெல்லாம் அவளுக்குக் கோபத்தையே வரவழைத்தது. புறக்கணிக்கவே தருணம் பார்த்திருந்தாள்.
இக்கட்டில் மாட்டிக் கொண்ட அவளுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. சீன மருந்து உட்கொண்டும் தன் கரு கலையாததால், வேறு வழியின்றி ஜோகூரில் சென்று ஆங்கில மருத்துவரைப் பார்த்துப் பேசினாள். அங்கும் அவர்கள் மாதம் கடந்து விட்டது, சூலிங்கின் உயிருக்கே ஆபத்து என்று பயமுறுத்தி அனுப்பி விட்டனர். பெற்றெடுப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை அவளுக்கு.
அம்மாவை நேரில் சந்திப்பதை முற்றிலும் தவிர்த்தாள். வியாபார நிமித்தம் தென்கிழக்காசியாவின் நகரங்களை நோக்கிப் பறந்தபடி இருந்த அவருக்கு மகளின் தொந்தரவு குறைந்ததில் ஏக மகிழ்ச்சி. தொலைபேசியிலேயே பேசிக் கொண்டனர் இருவரும் சக ஊழியர்கள் போல்.
இருவருமே பள்ளியையும் பாடங்களையும் புறக்கணித்தனர். அவனது வீடில் பள்ளி அரையாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைந்ததற்கான காரணமே பெரிதாய் இருந்ததே தவிர அவனுடைய பிரச்சனை என்னவென்று உட்கார்ந்து பேச அவனது தாய்க்குப் பொறுமையோ தந்தைக்கு நேரமோ இருக்கவில்லை. மாதங்கள் உருண்டன.
சூலிங் மிகவும் சிரமப்பட்டுத் தன் வளரும் வயிற்றை மற்றவர் பார்வையிலிருந்து மறைக்க பல வழிகளில் பிரயத்தனப் பட்டாள். பள்ளிக்குப் போகும் நாட்கள் அரிதானது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய் சூலிங் பள்ளிக்குப் போவதையே பிறகு முற்றிலும் நிறுத்தினாள்.
மழை நின்றுவிட்டது. அசாத் மறுபடியும் அறையை நோட்டமிட்டான். தலையின் ரிப்பன் முதல் உயர் குதிங்கால் வைத்ட்ன காலணி வரை அடர்சிவப்பில் அணிந்த ஒரு நவ நாகரிக யுவதி அறையின் வெளியில் உல்லாசமாகச் செல்வது அவன் கவனத்தை ஈர்த்தது. சிவப்பு…
இரத்தம், இரத்தம் ஒரே இரத்தம், தரை முழுவதும் சிவப்பு. உலகையே உலுக்கக் கூடிய அலறலைத் தன் அழுக்கு கைக் குட்டையை வாயில் அடைத்து அமுக்கியும் கட்டுபடுத்த முடியாது தவியாய்த் தவித்தாள் சூலிங். அவள் அலறல் தேய்ந்து “ச்சூமிங், ச்சூமிங்கா, ஆ,” என்று உதவி கேட்கும் முனகலானது.
சரளமாக இல்லாவிட்டாலும் சூலிங்குடன் பழகியதில் அவன் ஓரளவிற்கு மாண்டரின் மொழி பேசவே செய்தான். புரிவது ஒன்றும் அவனுக்குச் சிரமமில்லை. இடையிடையே அவள் அவனைச் சொல்ல நாக்கூசும் வசைமொழிகளால் ஏசினாள். அவனுக்கிருந்த பதற்றத்தில் அவனது மூளை வசைவுகளைப் பதிவு செய்யவில்லை.
உலகில் இருந்த கோடானுகோடி உயர் திணைகள், அஃறிணைகள் மற்றும் அண்ட சராச்சரங்கள், தான் உள்பட அனைத்தையுமே முற்றிலும் மறந்திருந்த அவன் நினைவில் அக்கணம் சூலிங் மட்டுமே இருந்தாள். இரண்டு மணி நேரப் போரட்டம் இரண்டு யுகங்களாக அவனை வியர்வை வெள்ளத்தில் தள்ளியது. இறப்பின் வாயிலைத் தொடும் போது தான் பிறப்பு என்னும் அமானுஷ்ய உண்மை என்று புலப்பட்டது அவனுக்கு.
வயிறு பருத்து உடல் மெலிந்திருந்த அவளின் வேதனை கொடுமையாகத் தான் இருந்தது. ஆனால், செய்வதறியாது தவித்தான். அவன் உதவியாக எதைச் செய்தாலும் அவள் வலியிலும் கோபத்திலும் கத்தித் தீர்த்தாள். இரண்டே மணி நேரத்தில் இருபது வயது சோர்வு அவனிடம் வந்தடைந்தது.
அவள் அன்றிரவு வலியுடன் தன் வீட்டருகே வந்து அவனைத் தொலைப்பசியில் அழைத்து பிரசவ வலி எடுப்பதைப் பற்றிக் கூறியதும் அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
ரவியுடன் சென்று இரவு திரைப்படம் பார்க்கப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு, அவளுடன் பேருந்தில் ஏறி சற்று தொலைவில் இருந்த நீசூன் வீடமைப்புப் பேட்டையின் ஒதுக்குப்புறத்தில் இருந்த பூங்காவில் ஊரடங்கக் காத்திருந்தான். அப்போது தான், நீசூன் வீடமைப்புப் பேட்டை உருவாக ஆரம்பித்திருந்த நேரம். இப்போது போல் இப்போது போல் அல்லாமல் அடுக்குமாடி வீடுகள் குறைவாகவே இருந்தன. வலி அதிகரித்தபடியிருந்தது. அவள் அழுதாள். இறந்து விடுவோமோ என்ற பயம் அவளை ஆட்டியது. குழப்பத்திலிருந்தவன் மேலும் பயந்தான்.
அறை வாயிலில் ஒரு பெண் தன் கணவனோ காதலனோ கழுத்தில் தொங்கியபடி நடந்து சென்றாள். அவளைத் தனியே பிரித்தால் அவளுக்கு நடக்கத் தெரியாதோ!
மருத்துவமனையில் மட்டுமில்லாது, இந்த உலகிலேயே அவர்களிருவரும் மட்டும் இருப்பதாய் நினைப்பு போலும். இல்லை, ஒரு வேளை, அத்தகைய செய்கை தான் இருப்பத்தியோராம் நூற்றாண்டின் உலகமயமான நாகரீகத்தின் வெளிப்பாடு என்ற நினைப்போ!
நிச்சயம் அவர்கள் இருபது வயதைக் கடந்தவர்களாய்த் தானிருப்பர். தன்னையும் மறந்து அவர்களிருவரையும் ஒரு பதின்ம வயதுப் பெண் ஆர்வமாய்க் கவனித்தாள். கண் முன்னே விரியும் அத்தகைய காட்சிகள் அவ்வயதில் தூண்டக் கூடிய ஆர்வம் சொல்லிலடங்காது. அவளின் சீற்றுக் கண்கள் அவளுள் எழுந்த ஆர்வத்தையும் ஈர்ப்பையும் அப்பட்டமாய் துளியும் அச்சமோ நாணமோ இல்லது உரைத்தன.
பொது இடங்களில் எப்படி நடப்பது என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதைச் சொல்லிப் பழமைவாதி என்ற பட்டத்தை அசாத் பெற்றிருக்கிறான் பல முறை. இருவதினரைப் பார்த்துத் தானே பதின்மர் கற்றுக் கொள்ள ஆசைப்படுவர். ஆனால், இம்மாதிரி முன்மாதிரிகள் மலிந்து விட்டது தான் வேதனை.
சற்றுத் தொலைவிலிருந்து குழந்தையொன்றின் அழுகுரல்…
சூலிங்கின் நிர்பந்தம் அதற்கில்லை. வாய்விட்டுச் சுதந்திரமாய் அழுதது. சின்னப் புத்தம்புது உயிரின் அலறல் அவனின் சுயநினைவைக் கொணர்ந்தது. சூலிங் மயக்கத்தில் ஆழ்ந்தாள். அவளால் சுற்றுப்புறத்தை உணர முடியவில்லை. எல்லா நினைவுகளையும் மறைக்கும் பிரசவ வலியே அவளை சாட்டையடி அடித்து போட்டது. பெரிதாய் அலறி ஊரைக் கூட்டி விடிவாளோ என்று அவன் பயந்தான். ஆனால், வலியில் கூடக் கத்திவிடாமல் முக்கியும் முனகியும் சமாளித்தாள். சத்தம் கேட்டு யாரும் வந்துவிட்டாள் திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாகி விடுமே!
அவனும் தன்னால் இயன்ற வரை உதவியாய் இருந்தான். ஆனால், வலியைப் பங்கு போட்டுக் கொள்ளவா முடிந்தது? ஏதோ கையைப் பிடிக்கவும் தலையை அழுத்தவும் செய்தான். வலியின் தீவிரத்தால் ஒரு முறை அவள் அவனுடைய கையை அழுத்தியதில் அவன் கிட்டத்தட்ட அலறியே விட்டான். ஒரு வாரத்திற்கு அவன் கையில் இரத்தம் கட்டி வீங்கியிருக்கிறது. வாயில் வந்த எல்லா வசவுகளையும் அவனை நோக்கி வீசினாள். பிள்ளை பிறந்ததுமே மயக்கமடைந்தாள்.
ஏற்கனவே பேசிய ஒப்பந்ததின்படி அவன் குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்து அதனைத் தயாராக வைத்திருந்த துணியில் சுற்றி எடுத்துக் கொண்டு கிளம்பினான். சில தெருக்களைக் கடந்து பதுங்கிப் பதுங்கி நடந்தான். சின்ன இதயத்துடிப்பு அவனது நாடியின் லயத்துடன் தனியாவர்த்தனமாய் ஓடியது. ஈரமும் நிணமும் கூடிய இலேசான வெப்பத்துடன் அவனுடைய கையிலிருந்த குழந்தையின் மீதிருந்து இரத்த வாடை முகத்தில் அடித்தது. சொந்த இரத்தமே இத்தனை அந்நியமாய இருக்குமோ? இருந்தது. வேண்டாத குப்பையாக நினைத்த அந்த உயிர் அந்நியமாக இல்லாமல் தன் சொந்தச் சிசுவாகவா தோன்றும்?
குப்பைத் தொட்டியருகே பொதுமக்கள் வேண்டாமென்று தூக்கியெறிந்த சில பழைய உடைந்த நாற்காலிகளும் தட்டுமுட்டுச் சாமாங்களும் கிடந்தன. செய்வது தவறு என்ற அச்சத்தின் பிடியிலிருந்தவன் பிடியிலிருந்தவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அங்கிருந்த பச்சைக் குப்பைத் தொட்டியில் அதனை விட்டு விட்டு, வந்த வழியே விடுவிடுவென்று நடந்தான்.
செய்தது சரியாவென்று வழியில் ஒரு கணம் யோசித்து பின்னர் அவளே போட்டுக் கொடுத்த திட்டம் தானே என்று சமாதானமும் அடைந்தான்.
நபீஸாவிடம் கூட தன் கனவின் அவஸ்தையைச் சொல்ல அவனால் முடியவில்லை. வெளியில் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஒவ்வொரு நாளும் தவித்தான். குழந்தை ஆசை வரவர ஆரம்பத்திலிருந்து அவன் பட்ட கனவுத் தொல்லை அதிகமானது.
சென்ற வாரம், செய்தித் தாளில் மறுபடியும் ‘குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட குழந்தை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட’ செய்தியைப் படித்ததிலிருந்தே தன் மகனைப் பற்றிய நினைவு அதிகம் எழ ஆரம்பித்தது. இப்போது இருபத்தைந்து வயது வாலிபனாகியிருப்பான் என்ற நினைவு எள்முனையளவுக் கூச்சமும் இன்றி அவனுள் எழுந்தது.
‘மகன்’ என்ற பதமே சற்று வினோதமாக இருந்தது. குற்றமொன்று விபத்தாகிப் பின் மறக்க முடியாத சம்பவமாகியிருந்தது. அதன் விளைவாக ஓர் உயிர் இப்பூமியில் வீழ்ந்தது. அது தன் மகனாக முடியுமா என்ன? அப்படி நினைக்கக் கூடத் தனக்குத் தகுதியோ உரிமையோ உண்டா? நினைக்க நினைக்க ஆயாசமே மிஞ்சியது. குற்றவுணர்வோ விஸ்வரூபம் எடுத்தது. அது வளர எடுத்தது. அது வளர வளர அவன் குறுகிக் குறுகிச் சிறுத்தான். அந்த செய்கைக்குப் பிராய்சித்தம் தேடவே தன் மனம் இத்தீர்மானத்தை எடுத்ததுவென்று அவன் சுய அலசலில் கண்டுபிடித்தான்.
வேலைக்கு அரை நாள் விடுப்பு சொல்லிவிட்டு அங் மோ கியோவிலிருந்து கே.கே.தாய் சேய் மருத்துவமனையை அடைவதற்குள் பேய்மழையில் சிக்கிக் கொண்டான். நல்ல வேளையாகக் கையில் குடை இருந்தது. வரவேற்பறையில் இருந்த பெண், அதிகாரியைப் பார்க்கக் காத்திருக்குமாறு கனிவுடன் கூறினாள்.
இன்னும் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.
அசாத் சுற்றுமுற்றும் பார்த்தான். அறையில் நிலவிய குளிர் அவனுள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
குளிரில் நடுனடுங்கிய சூலிங்கைப் போர்த்திவிடவும் போர்வை இல்லாமல் அவன் முழித்தான். பிரசவத்தில் இருவருக்கும் முன் அனுபவமா இருந்தது? கடுமையாய் வலிக்கும் என்பதைத் தவிர ஒன்றுமே இருவரும் அறிந்திருக்கவில்லை. என்ன தேவையாயிருக்கும் என்றும் தெரிந்திருக்கவில்லை.
அவள் குளிரில் நடுங்கியபடி “பாப்பா எங்கே? பாப்பா எங்கே? பாப்பா எங்கே?” என்று அரற்றினாள். அவனுக்குப் படு எரிச்சலாய் இருந்தது. அவள் ஒப்புக் கொண்டபடி தானே அவன் குழந்தையை அகற்றினான். இப்போது இவள் புதுப் பிரச்சனையைக் கிளப்புகிறாளே என்று கோபப்பட்டான். திட்டப்படி அடுத்த கட்டம் விடிவதற்குள் ரவியின் வீட்டிற்குப் போக வேண்டும். ஆனால், அழும் அவளைப் பார்க்கவும் மிகவும் பரிதாபமாக இருந்தது. ஒரு வேளை மனது மாறுகிறாளோ, இது என்ன புதுப் பிரச்சனை.
“சரி சரி, இரு, ஒரு தடவை பார்த்துக் கொள், பிறகு மறுபடியும் அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுவேன். என்ன சரியா,” கேட்டபடி குப்பைத் தொட்டியை நோக்கி ஓடினான். ஒரு முறை பார்த்து விட்டுப் போகட்டுமே, உடன் வைத்துக் கொள்வது தான் ஆபத்து, பார்ப்பதில் என்ன தவறு.
ஆனால், அங்கே சந்தடியும் தொப்பிகளுடன் நீலச்சீருடைகளும் தெரிந்தன. தயங்கி நின்றான். அதற்குள் அழும் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு காவலரும் பொது மக்களும் கூடி விட்டிருந்தனர்.
வாகனங்களின் பூபாளத்தில் சிங்கப்பூர் விழிக்க ஆரம்பித்திருந்தது. மேலும் அங்கு நிற்காமல், விடு விடுவென்று ஓட்டமும் நடையுமாக வந்து அவளைக் கைத்தாங்கலாய் கிட்டத் தட்ட இழுத்தபடி ரவியின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
மருத்துவமனையில் தாதிகள் கருமமே கண்ணாக ஒரே தாளகதியில் நடந்தனர். இவர்களுக்குள் எப்படி இந்தத் தாய்மையுணர்வு வந்திருக்கும்? ஒரு முழந்தையைப் பெற்றுவிட்டால் மட்டும் அவ்வுணர்வு வருவதில்லை. இவர்களில் பாதி பேருக்குக் குழந்தை கூட இருக்குமோ?
ரவியின் குடும்பத்தினர் மலேசியாவிற்குப் போயிருந்தனர். இரண்டு நாட்கள் சூலிங் அவன் வீட்டில் தான் ஓய்வெடுத்தாள். தன் குழந்தையை ஒரு முறை கூடப் பார்க்க முடியாமல் போனதற்குத் தொடர்ந்து அவனைச் சபித்தபடியிருந்தாள். அவனோ குற்றவுணர்வில் குழம்பி, வாய் மூடி மௌனியானான்.
அடுத்த நாள் செய்தித் தாளிலாவது குழந்தையின் புகைப்படம் வருமென்று எதிர்பார்த்தாள். செய்தி மட்டுமே இருந்தது. ஓரிரு நாட்கள் அவனைத் தொந்தரவு செய்த சூலிங் ஒரே வாரத்தில் குழந்தையைப் பற்றி மரந்தே போனாள். பால் சுரப்பைக் கட்டுப்படுத்தத் தயாராய் வாங்கி வைத்திருந்த சீனக் கஷாயத்தைக் கண்ணை மூடிக் கொண்டு குடித்தாள். அவள் குணம் அறிந்திருந்த அவனுக்கு அப்போது அது பெரிய ஆச்சரியமாக இல்லை.
இப்போது நபீஸாவிற்கு குழந்தையை வளர்க்கப் பொறுமை இருக்குமா என்று அவனுள் சிறு சந்தேகம் உண்டு. நாற்பதை நெருங்கும் அவளுடைய வயது ஒரு காரணமென்றால் இயல்பாக இருக்க வேண்டிய தாய்மை அவளிடம் இருக்குமா என்று இரண்டு நாட்களாகப் பல முறை அவன் யோசித்து விட்டான்.
சாதாரண நிலைத்தேர்வின் முன்னோட்டத் தேர்வை பெயருக்கு எழுதியிருந்த சூலிங் டிசம்பர் மாதக்கடைசியில் வயிற்று பாரத்தை இறக்கியிருந்தாள். சாதாரண நிலைத் தேர்வை அவள் எழுதவேயில்லை. அவனோ எழுதியிருந்தும் திருப்தியாகச் செய்யவில்லை.
தன் உப்பிய வயிற்றை மறைக்க முயன்றதில் அவள் பாதி நாட்கள் பள்ளிக்கும் போகவில்லை. முன்னோட்டத் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணே வாங்கியிருந்தாள். பலமுறை ஆசிரியர்கள் எச்சரிக்கை கொடுத்துப் பார்த்தனர். அவளுடைய அம்மாவைத் தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொள்ள முயன்று தோற்றனர்.
அதற்குப் பிறகு சூலிங்கின் போக்கே முற்றிலும் மாறிவிட்டது. அவனை அலட்சியப்படுத்தினாள். முகம் கொடுத்துப் பேசவே இல்லை. அவனுடைய அப்பாவின் துப்புரவாளர் பணியும் அவனது குடும்ப வறுமையும் அவளுக்கு திடீரென்று மட்டமாகத் தெரிய ஆரம்பித்தது. அவனுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக இருந்தது.
தான் இல்லவிட்டால் சூலிங் பைத்தியமாகி விடுவாள் என்று நினைத்த அவன் தான் உண்மையில் பெரிதும் தவித்தான். அவள் அவனைத் தவிர்ப்பது அவனுக்கு பெரும் வேதனையளித்தது. வேண்டாததைக் குப்பையில் போடுவதில் கெட்டிக்காரியாயிற்றே, அவனையும் ஒதுக்கியெறிந்தாள். வேண்டாத சாமானாய் குப்பைத் தொட்டியினுள் எறிந்தாள்.
ரவி தான், அவளை அவள் போக்கில் விட்டு விடச் சொன்னான். அவன் அப்படியே செய்வதென முடிவு செய்தான். புதுமுக வகுப்பில் சேர்ந்த நேரமாதலால் படிப்பில் கவனத்தைச் செலுத்தினான்.
ஆரம்பத்தில் நண்பனிடம் தன் கனவைப் பற்றிக் கூறியதுண்டு. ரவியோ வெகு இலகுவாக, அதெல்லாம் போகப் போக சரியாயிடும். கவலப்படாத லா. ரெண்டு பேரும் சுத்த ஆரம்பிச்சப்பவே நான் எவ்வளவோ எச்சரிச்சேன். நீ கேக்கல. சரி விடு லா. இப்படியெல்லாம் நடக்கும்னு யார் எதிர்பார்த்தோம் சொல்லு, ஏதோ துரதிருஷ்டம். அதையே நினைக்காம மறக்க முயற்சி பண்ணு, என்ன நீ இவ்வளவு பயந்தாங்கொள்ளியா இருக்க, என்று கேலி செய்தான். அதன் பிறகு, அவனிடமும் அதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க ஆரம்பித்தது நாளடைவில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் அவனுள்ளேயே நிரந்தரமாகத் தங்கி விட்டிருந்தது…
தன் பெயரைக் கூப்பிடுவார்கள் என்று உட்கார்ந்திருந்த அசாத்திற்கு உட்கார்ந்து உட்கார்ந்து சலிப்புத் தட்டியது. நபீஸா வேறு இன்னமும் வரக் காணோம். போசாமல் உணவங்காடிக்குச் சென்று சூடாக ஒரு கோப்பை தேனீரப் பருகி வரலாமென்று கிளம்பினான். அவன் உணவங்காடியை நெருங்கும் போது அறையில் அமர்ந்திருந்த சீனப் பெண் எதிரில் வருவதைக் கண்டான். எங்கேயோ பார்த்த உணர்வு அவனுள் எழுந்தது. வேலையில் எத்தனையோப் பேரைச் சந்திக்கிறோம். அதில் இவரும் ஒருவராய் இருக்கலாம். யோசித்தபடியே தேனீரைப் பருகினான்.
மறுபடியும் வரவேற்பறைக்குத் திரும்பியவன் நபீஸா வந்திருப்பதைக் கண்டான். அவள் நெடுநாள் பழகிய தோழியிடம் பேசுவதைப் போல அந்தச் சீனப் பெண்மணியுடன் பேசிக் கொண்டிருந்தாள். அசாத் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் தன் மனைவியை நோக்கிக் கையாட்டிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான்.
பள்ளி சுற்றுலாவென்று சொல்லிவிட்டு தன் குருட்டுப் பாட்டியை நம்ப வைத்த அவளால் தன் உடல் சோர்வை மறைக்க முடியவில்லை. மேலும் மிகவும் நன்றாக மதிப்பெண் வாங்கக்கூடிய சூலிங்கின் மோசமான முன்னோட்டத் தேர்வு முடிவுகள் அவளுடைய அம்மாவின் கவனத்தை ஈர்த்தன.
தன் தொழிலை எதிர்காலத்தில் ஏற்கவிருக்கும் இளவரசி படிப்பில் பின் தங்கியதற்கான காரணத்தை ஒருவாறாக ஊகித்த போதிலும் மகள் கருக்கலைப்பு செய்திருப்பதாய்த் தான் அவர் நம்பினார்.
கேள்விக் கணைகளால் துளைத்தும் அவள் அவனது பெயரைச் சொல்லிக் காட்டிக் கொடுக்காமல் இருந்தாள். அவனுக்கு அவள் செய்த கடைசி நன்மையாக அது அமைந்தது.
மகள் சாதாரண நிலைத் தேர்வு எழுதவில்லை என்ற விவரம் குபீரென்று அவர் இரத்த அழுத்ததைக் கூட்டியது. அவளை உடனே ஹாங்காங்கிறகுக் கிளப்பிக் கொண்டு போய்விட்டார்.
இரண்டு நிமிடங்களிலேயே நபீஸா அவனை நோக்கி அவனை நோக்கி வந்தாள். அந்தப் பெண்மனியும் அதே குழந்தையைக் கேட்டு வந்தாராம். நபீஸாவிற்கு அவர் ஒரு போட்டியாகத் தோன்றினார்.
ஆனா, அவங்க நம்மள மாதிரி இல்லைங்க. தனி ஆளாம், திருமணமே ஆகலையால். அதனால நமக்குத் தான் குழந்தை கிடைக்கும்,” என்று நூறு சதவிகித நம்பிக்கையுடன் கூறினாள். அவளுடைய சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கையே அசாதிற்கு சிரிப்பைக் கொடுத்தது.
சில நிமிடங்களில் ‘சூலிங் லீ என்ற பெயர் கூப்பிடப்பட்டது. பெயரைக் கேட்டதுமே சீனமாது எழுந்து சென்றார். அசாத் ஆச்சரியத்தில் சில கணங்கள் வாய் பிளந்தபடியிருந்தான். அந்தப் பெண்மணி சூலிங்கா! உலகம் நிச்சயம் உருண்டை மட்டுமில்லாது மிகமிகச் சிறியதே. ஹாங்காங் சென்ற சூலிங் எப்போது சிங்கை திரும்பினாள். எங்கோ பார்த்த மாதிரி இருந்ததில் என்ன வியப்பு. நபீஸா அப்போது பேசிய எதுவும் அவன் காதுகளில் விழவில்லை. இயங்க மறந்து மூளை அப்படியே உறைந்தது.
சில வருடங்களாக இருபத்தைந்து வயது இளைஞர்கள் எவரைப் பார்த்தாலும் சூலிங்கின் சாயல்களைத் தேடித் தேடியலைந்திருந்தான். தன் தேடல்களில் இருந்த சூலிங்கின் முகம் இளமையானது. அதனால் தான் முதிர்ந்த முகத்தை அவனால் அடையாளம் காண முடியவில்லையா? ஆனால், இவள் ஏன் இங்கு இப்படித் தன்னந்தனியாக?
அந்த நாளில் அவள் தன் சொந்தக் குழந்தையைப் பார்க்கவில்லை. அப்போது அழுத அழுகை அவன் நினைவில் வந்தது. இன்று அவளுக்கு இந்த குழந்தையாவது விட்டுக் கொடுப்போம் என்று அவனுள் இரக்கம் சுரந்தது.
வீட்டுக்குப் போகலாவென்று மனைவியை அழைப்பதற்குள் திரு.அசாத் என்று தன் பெயர் அழைக்கப்பட வேறு வழியில்லாமல் அதிகாரியின் அறைக்குள் மனைவியுடன் சென்றான்.
அரை வாயிலில் வெளியேறிய சூலிங் தன்னை அடையாளங்கண்டு கொண்டதை அவளது பார்வையிலேயே அவன் அறிந்தான். இருவரும் ஒரு தலையசைப்பிலேயே முகமன் தெரிவித்துக் கொண்டனர். சூலிங்கின் கண்கள் குளமாவிட்டிருந்தன. ஏன்?
அறையினுள் அசாதிற்கு இன்னமும் பெரிய ஆச்சரியம் விடையாகக் காத்திருந்தது. இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க மக்கள் தொடர்புத் துறை அதிகாரி அங்கு அமர்ந்திருந்தார். அவர் தன்னுடைய இளமையின் மறுபதிப்பாய் இருந்தது அசாதிற்கு விளங்க முடியாத அதிர்ச்சியாயிருந்தது.
“மன்னிக்கவும், உங்களுக்கும் கூட நான் ஏமாற்றமே தரப் போகிறேனென்று நினைக்கிறேன்,” அதிரடியாய் ஆனால் மிககிமக் கனிவாக சிரித்தபடி சொன்னான்.
“உம்… நான் கூட கூட இங்கு வளர்ந்தவன் தான் தெரியுமா, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டு இங்கு கொண்டுவரப் பட்டேன் என்றால் நீங்கள் நம்புவீர்களா, ஒரு நல்லுள்ளம் படைத்தவர் தான் என்னை வளர்த்தார். என்னைப் போல சிறப்பாய் இந்த குழந்தையும் வளர வேண்டுமென்றால் குழந்தையின் அருமையறிந்த இளமையான தம்பதி தேவை.”
சூலிங் நிச்சயம் புரிந்து கொண்டிருப்பாள். அவள் தேடல்களில் இருந்த இளமையான அசாத் அவளுக்கு அடையாளம் தெரிந்திருப்பாள்! அதனால் தானோ அவள் கண்களில் கலக்கம், பாவம்! ஆனால், நபீஸாவின் முகத்தில் புரிதலின் அடையாளம் துளியும் இல்லை.
“குழந்தையை வளர்க்க உங்களை விட நேற்று இங்கு வந்திருந்தவர்கள் சரியாக இருப்பார்கள். தாங்கள் பெற்ற குழந்தையை இரண்டு வருடங்களுக்கு முன்பு இழந்துவிட்டனர். மறுபடியும் ஒரு குழந்தை பெற முடியாத அவர்களால் தான் குழந்தையின் அருமையை நங்கு உணர முடியும் என்பது என் கருத்து. நிச்சயம் இதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்களென்றே நம்புகிறேன். இதை தீர்மானிக்க நானும் ஒரு குப்பைத் தொட்டிக் குழந்தை என்ற தகுதியையும் தாண்டி வேறு என்ன தகுதியோ பதவியோ வேண்டும்? மன்னிக்கவும். உங்கள் குழந்தை ஆசை சீக்கிரமே நிறைவேற என் வாழ்த்துக்கள்” என்றான் அழகாகச் சிரித்தபடி. கண்ணெதிரில் நிற்கும் உண்மை அவனுக்குத் தெரிய நியாயமில்லை. ஆமாம், சொந்த தாயையும் தகப்பனையும் வழி வாங்க அவனைத் தவிர வேறு யாருக்குண்டு தகுதி?
தூரத்தில் சாலையோரத்தில் சாயமிழந்து பல்லிளித்த ஒரு பச்சைக் குப்பைத் தொட்டி. அதன் மேலே பலகையொன்றில் சாலையில் குப்பை போடுபவருக்கு அபராதம் ஐநூறு வெள்ளி என்ற எச்சரிக்கை. சூலின் தன்னந்தனியே தளர்ச்சியுடன் நடந்து போனாள்.
(இ-சங்கமம் டாட் காம், பிப்ரவரி – 2004)
![]() |
சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க... |
