கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம் முல்லை
கதைப்பதிவு: November 7, 2025
பார்வையிட்டோர்: 85 
 
 

(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவர்கள் இருவரும் இரண்டு ரோஜா மலர்களே! அவர்களின் நிறம்? இளம் மக்களின் உடல் நலத்தைப்பற்றி அவர்களுடைய தாய் தந்தையருக்குக்கூட இல்லாத கவலையை ஏற்றுக்கொள்ளும் எழுத்தாளன் நானல்ல. எனவே, இந்த நவீன காலத்து ரோஜாக்கள் மங்கிய வெண்ணிறமானவை என்று தளுக்காக வர்ணித்து விகாரமாகச் சித்திரிக்க எனக்குத் தெரியாது. இளைஞர்களுடைய உடலழகிலும் இளம்பெண்ணிகளின் மேனிமினுக்கிலும் அக்கறை கொள்வதுபோலவே, அறுபது நாழிகையும் அவர்களுடைய கல்யாணக் கவலையிலேயே மூழ்கிக் கிடக்கும் எழுத்தாளர்களின் கும்பல் ஒன்றும் இருக்கிறது. பெண் குழந்தை தகப்பனைக் கட்டிக்கொள்ளும் பருவத்தை அடைவதற்கு முன்பே, இந்த எழுத்தாளர்கள் அவளைப் பிற மனிதன் கழுத்திலே கட்டிப்போடப் பந்தயக் குதிரைகளைப்போல ஆத்திரத்தோடு விரைந்தோடுவார்கள். இவர்களுடைய கதைகளில் பையன் பெண்ணைத்தான் பார்க்கிறானே! அதுவும் எங்கே? நடுத்தெருவிலும் புகைவண்டியிலும் சோலையிலும் கலாசாலையிலும்! கணப்பொழுது அவர்கள் ஒருவரை மற்றவர் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் தாமதம்; உடனே அவர்களுக்கு ஜன்மத்துக்கும் தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. இந்தத் தொடர்பைக் கலைக்கப் பிரம்மாவின் தாத்தா வந்தாலும் முடியாது! நான் இந்தக் காதற் கூடாரத்தைச் சேர்ந்த எழுத்தாளனாக இருந்திருந்தால், என் ரோஜாக்களின் நிறம் சிவப்பு என்று உடனே சொல்லியிருப்பேன் காதலும் இடையூறும் சிவப்பு நிறம் கொண்டவை. இந்த ரோஜாப்பூக்கள் மஞ்சளாகவும் இல்லை. குக்கிராமத்திலே ‘கஸ்டம் ஆபீஸில், உப்பு மூட்டைகளை நிறுப்பவனுக்கும் பொன்னுக்கும் என்ன சம்பந்தம்? தினசரிகளிலே பொன்னின் விலையைப் படிக்கும்போது மட்டுமே அந்தச் சம்பந்தம் ஏற்படலாம். 

இந்த ரோஜா மலர்கள் வெண்மையல்ல, சிவப்பு அல்ல, மஞ்சளும் அல்ல. பின்னே அவை கறுப்போ? ஆம், கறுப்புத்தான் என்று சொல்லாமல் என்ன செய்வது? ஆனால் அவை அட்டைக் கறுப்பல்ல. மாநிறம்! வைரச் சுரங்கத்துடனோ கரிச் சுரங்கத்துடனோ அவற்றிற்கு எவ்விதத் தொடாபும் இருந்ததில்லை. என்னைப் போன்ற கதாசிரியன் இவ்விரு ரோஜாக்களைப் பிற்காலத்திலே ஒரு கதைக்கு நாயகநாயகிகளாக்கிக் கௌரவிக்கப் போகிறான் என்று அவர்களின் பெற்றோர் கனவிலும் கருதியிருக்க மாட்டார்கள். அப்படியிருந்தால் அவர்களுடைய கையேடு பேரேடுகளில் சோப்பு பௌடர் வகையில் இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செலவழிந்திருக்குமே! 

ரோஜாவுக்கு முதல் முதலில் முள் இருந்திராது. கவிகள் யாவரும் தமது உள்ளத்திலே உறுத்திய முள்ளை அதற்கு அர்ப்பணம் செய்யலாயினர். பிறகுதான், ‘முள் இல்லாத ரோஜா இல்லை’ என்பது புலனாயிற்று. என்னுடைய இந்தக் கறுப்பு ரோஜாக்களுக்கும் முள் இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இந்தக் காலத்திலே ரோஜாச் செடியில் வேல முள்ளும் நெருஞ்சி முள்ளும் நாகதாளி முள்ளும் இருப்பதாகச் சில சிறுகதை மன்னர்களின் தாம்பத்திய வாழ்க்கை வர்ணனையிலிருந்து தெரிய வருகிறது. இந்த ரோஜா மலர்கள் மட்டும் அந்த வகையைச் சேர்ந்தவையல்ல. இவற்றின் முள்ளும் ரோஜா முள்தான்! 

“பூனைக்குட்டியை மடியில் விட்டுக்கொள்கிறீர்களே. அதன் உடம்புச் சூடு உங்களுக்குப் பிரியமாக இருக்கிறதாக்கும்!” என்று அவள் சொல்வாள். 

“பொன் வைக்கிற இடத்திலே பூவை வைப்பது போல என்பார்களே! ஒரு பொன்மேனி இந்த வீட்டிலே வந்து விளையாடட்டும். உடனே -‘ என்று அவன் இழுப்பான். 

“சும்மா இருங்கள்!” என்னும் தலைவன், இந்த விவாதக் கூட்டத்தை வெறும் சமிகினையினால் முடித்து வைப்பான். 

பட்டினி கிடப்பது அவளுக்குப் பழக்கமாகிவிட்டது, “ஏன் பட்டினி இருக்கிறாய்?” என்று அவன் கேட்பான். 

“நான் யாருக்காக உபவாசம் இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று அவள் பதிலுக்குக் கேட்பாள். 

“யாருக்காக இருக்கிறாய்? பிறருக்காக உபவாசம் கிடக்க நீ காந்தியா என்ன?” 

“நான் காந்திதான். சரி, நான் காந்தி; நீங்கள்-”

“நான் யார்? நீலா நாகினியா?” 

“சேச்சே ! நுங்கள் வைஸ்ராய்”. 

அப்பொழுதைய அவளுடைய அபிநயம், குலப்பெண்கள் சினிமாவில் நடிக்கலாமா கூடாதா என்ற சிக்கலைத் தீர்த்து விடுவதாக இருக்கும். 

பிறகு என்ன? அரைக்கணத்திலே காந்தி இர்வின் ஒப்பந்தத்தையும் தோற்கடிக்கும் உடன்படிக்கை ஏற்பட்டுவிடும். 

அவளுக்குத் தூக்கம் சிறிது-கதாநாயகி இப்படி இருப்பது நல்லதல்ல என்பது தெரிகிறது; ஆயினும் உண்மையைச் சொல்லப் போனால் நிறைய – அதிகமாகத்தான் வரும். அவள் ஏழைப் பெற்றோர்களுக்குப் பிறந்தவளாயினும் ஒரே செல்வக் குழந்தையாக வளர்ந்தவள். பிறந்த வீட்டில் அவள் தூக்கத்தைக் கலைப்பவர் யாருமில்லை. மணமான பிறகு மட்டும் என்ன? பிரிவினால் தூக்கம் கலையுமே என்றால், அத்தகைய சந்தர்ப்பமே பெரும்பாலும் நிகழ்ந்ததில்லை. உப்பு இலாக்காவில் குமாஸ்தா என்றால் நாட்டுப்புறத்து வாழ்க்கை. கணவனுக்குச் சாப்பாட்டுக் கஷ்டம் கூடாது என்பதற்காக அவள் பிறந்தகமே போவதில்லை. அவள் மூளையிலே கவிதை சுழலவில்லை; கழுத்திலே மாதர் சங்கத்தில் தலைமைவகித்த மாலை அசையவில்லை; கையிலே பூத் தையல் போடுவதற்குக் கைக்குட்டை இல்லை; கால்களுக்கோ ஊர் சுற்றும் பழக்கமில்லை. பொழுது போக்குவதற்கு அவளுக்குப் பாவம், தூக்கத்தைத் தவிர வேறு வழி ஏது? அவள் பொழுது போக்குக்காகப் பெண்களுக்கென்றே வரும் ஒரு மாதப் பத்திரிகையை அவன் வரவழைத்தான். ஆனால் அவள் அதைப் படிக்கும் போக்கைப் பார்ப்பவர்கள் அது பெண்களுக்காக வரும் பத்திரிகையல்ல என்றே எண்ணுவார்கள்! நடுநடுவே அவன் பிரசித்த நாவல்களுள் ஏதாவதொன்றை வாங்கிவருவான். அந்த நாவலைவிடத் தூக்கந்தான் அவளை மயக்கும். பெரும் புகழினால் கிறுக்குப் பிடித்தலையும் எந்த நாவலாசிரியன் கண்ணிலும் மிளகாய்ப் பொடியைத் தூவும் சாமர்த்தியம் அவள் தூக்கத்துக்கு இருந்தது. 

இப்படித் தூங்கியதனால் அவன் அடிக்கடி அவளைப் பரிகாசம் செய்வான். “இரவில் வீட்டில் திருடன் புகுந்தால்கூட உனக்குச் சந்தடியே தெரியாது” என்பான். 

அவள் தற்காப்புக்குரிய கடைசி முயற்சியாக, “அதனால்தானே நீங்கள் எனக்கு நகை செய்து போடுவதில்லை! அப்படித்தானே?” என்பாள். 

“நீ ஏன் இப்படிப்பட்ட கணவனைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பினாய்?’ 

“அப்பொழுது நான் தூக்கத்தில் இருந்திருப்பேன்” 

இன்னொரு சமயத்திலே அவன், ‘உனக்குச் சிறுகுழந்தையைக் கண்டால் ஏன் பிடிக்கிறது என்பது எனக்கு இன்றுதான் தெரிந்தது” என்பான். 

அவள் முகத்தைச் சொடுக்கிக்கொண்டே, “ஏதாவது உங்களுக்குத் தோன்றியதைச் சொல்லிக் கொண்டிருப்பீர்கள். தம்மிடம் இல்லாதபொருளைத்தான் மனிதர்கள் வேண்டுகிறார்கள்” என்பாள். 

“அடி பைத்தியமே! மனத்தத்துவ சாஸ்திரத்தின் வாசனையே உனக்கு அடியோடு இல்லையே?” 

“வேண்டாமே; அதனால் அடுப்பு ஒன்றும் புகையாமல் இருக்கப் போவதில்லை”. 

“சிறு குழந்தையைக் கண்டால் உனக்குப் பிடிப்பதற்கு முக்கியமான காரணம்-” 

“சொல்லுங்கள், உங்கள் புதிய ஆராய்ச்சியையும் தெரிந்துகொள்கிறேன்” 

 “அதற்கு காரணம்: சிறுகுழந்தை நீண்ட நேரம் தூங்குகிறது என்பதுதான்.” 

“பெரியவர்களுக்குத் தூக்கம் வராததனால் அவர்கள் வளவள வென்று பேசிக்கொண்டிருப்பார்கள்.” 

இந்த ரோஜாக்களின் முள் இப்படி இருந்தது. அன்புள்ள இந்தத் தம்பதிகளின் பெயரைச் சொல்லாமல் நான் அவர்களை ரோஜா என்று சொல்வானேன் என்று பலர் நினைக்கலாம். நான் சொல்வதற்குக் காரணம் ஒன்று இருக்கின்றது. மனிதர்களுக்கு ஏன் பெயர் வைக்கிறார்கள்? ஒருவர் மற்றவரைத் தெரிந்துகொள்வது சுலபமாக இருக்க வேண்டும் என்றுதானே? அப்படிப் பார்த்தால் இந்த ஜோடியை ரோஜா என்று சொல்வதே பொருத்தமானது. ரோஜாப்பூ என்றால் அவனுக்கு வெகு ஆசை. அப்பொழுது பறித்த ரோஜா மலரின் மோகன மணத்தை உள்ளத்திலே நிரப்பிக்கொண்ட அவன், “இந்த ஒரு கணத்திலே மனிதப் பிறப்பே பயன் பெற்றுவிட்டது” என்பான். 

ஒரு ரோஜா இதழின் பின்னால் கூத்தாடும் மற்றொரு பெரிய ரோஜா இதழைக் கண்டதும், இந்த இதழ்கள் யாவும் சேர்ந்து கும்மியடிப்பதாக அவள் நினைப்பாள். ரோஜாவின் நறுமணமே அவற்றின் கீதமாக அவளுக்குத் தோற்றம். 

அன்றும் அதுதான் நிகழ்ந்தது தலைமைக் குமாஸ்தாவின் மனைவியிடமிருந்து ஒரு பொட்டலத்தையும் பெரிய செய்தியையும் கொண்டுவந்தான் சேவகன். தலைமைக் குமாஸ்தா என்றால் அந்தக் குக்கிராமத்திலே பெரிய மனுஷர். அவர் மனைவி அன்று பிற்பகலில் அவளைப் பார்க்க வருவதாகச் சொல்லியனுப்பினாள். அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்க்கக்கூட அவளுக்கு ஞாபகமில்லை. இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் கணவன் வாய் சும்மா இருக்குமா? ‘பகலிலே நீ தாழ்ப்பாளைப் போட்டுக்கொண்டு தூங்கிவிடாதே!” என்றான். 

“ஏன்?” 

“நீ கதவை அடைத்துவிட்டுத் தூங்கும்பொழுது அந்த அம்மாள் வந்தால்? உன்னைப் பார்க்காமலே அவள் திரும்பிப் போவாள். பிறகு அது திடுக்கிடும் சம்பவமாகிவிடும்; நாவல்களில் வருவதுபோல!” 

கணவனுடைய கருத்து அவளுக்கு விளங்கியது. பகலில் கண்ணசையும்போது கதவைச் சிறிதளவு திறந்து வைக்கவேண்டும் என்று அவள் தீர்மானித்தாள். ஆனால் பேச்சிலே தோல்வியடையக் கூடாதென்று எண்ணி, “தலைமைக் குமாஸ்தாவின் மனைவி, நாவலில் வரும் திடுக்கிடும் சம்பவத்தைப்போல் நான் எப்படி?” என்றாள். 

“நீயா! நீ வசன கவிதை” 

“மட்டாகத்தான் இருக்கிறது பொல்லாத்தனம்!” 

அவன் அந்தப் பொட்டலத்தைப் பிரித்தான். அதில் என்ன இருந்தது? இரண்டு ரோஜா மலர்கள்! இரண்டும் சமமாக இருக்கக்கூடாதா? ஒன்று பெரியது; பச்சைப்பசேலென்ற இலைகளுக்கு நடுவே ஒய்யாரமாகத் தலைநிமிர்ந்து ஆடியது. மற்றொன்று சிறுத்தது; வாடிப்போனது; இலையற்றது. நல்வினையும் தீவினையும் உருவெடுத்தவைபோல இருந்தன அந்த மலர்கள். இரண்டே பூக்கள்! ஆனால் அந்த ஊரில் ரோஜாவைக் காண்பதே அரிது. அவன் பெரிய ரோஜாப்பூவின் மணத்தை நுகர்ந்த வண்ணம், “எவ்வளவு அழகான பூ!” என்றான். 

அவள் கண்ணும் அந்தப் பூவின் மேல் விழுந்தது. 

அந்த மணத்தைப்போன்ற இன்ப வெறியில், “பூஎன்றால் இப்படி இருக்கவேண்டும்! சட்டையில் அணிந்துகொண்டால் வெகு நேர்த்தியாக இருக்கும்” என்று கூறி, அவன் அந்தப் பூவை ஆசையோடு பார்த்தான். அவள் என்ன செய்கிறாள் என்பதையே அவன் கவனிக்கவில்லை. அவளும் மிகுந்த ஆவலோடு அந்த மலரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். எடுத்துக் கட்டிய தன் கூந்தலிலே அந்தப் பூவைச் செருகிக்கொண்டால் எவ்வளவு அழகாக இருக்கும் என்ற கற்பனையிலே அவள் மனம் ஈடுபட்டது. இருவருடைய பார்வையிலும் ஒரே உணர்ச்சிதான் தென்பட்டது. அந்த மலரை நுகரும் உணர்ச்சி. 

பெரிய ரோஜாப்பூவை எடுத்துக்கொண்டு அவன் சமையலறை யிலிருந்து வெளிவந்து, அங்கிருந்து இயல்பாகத் திரும்பி அவளைப் பார்த்தான். அவள் பார்வை விசித்திரமாக இருந்தது; பசியால் வாடும் சிறு குழந்தையின் பார்வையைப் போல இருந்தது. அவன் சடக்கென்று, “இந்தா, இந்தப் பெரிய பூவை நீ எடுத்துக்கொள், எனக்கு எதுக்கு? அந்த மற்றொரு பூவே எனக்குப் போதும்” என்றான். 

ஆபீசுக்குப் புறப்பட அவன் அவசர அவசரமாகக் கோட்டை எடுத்த பொழுது கவனித்தான்: அந்தப் பெரிய ரோஜாப்பூ அதில் செருகியிருந்தது. உள்ளே போய் அவளுக்கு இம்மாதிரியே ஓர் அழகிய பரிசு அளிக்க வேண்டும் என்று நினைத்தான். அதைவிட மற்றொன்று செய்யலாம் என்று தீர்மானித்தான். 

வழியிலே அவனுடைய சைக்கிளின் சக்கரங்கள் இரு ரோஜா மலர்களாக அவனுக்குக் காட்சி யளித்தன! 

பகலில் இடைநேரத்தில், ஆபீசிலிருந்த மற்ற குமாஸ்தாக்கள் விரல்களைச் சொடுக்கிக்கொண்டும் கொட்டாவி விட்டுக்கொண்டும் எழுந்தனர். இவன் மட்டும் சிரித்துக்கொண்டே கிளம்பினான். இடையில் அரைமணி நேரத்தில் இவன் அன்று வீட்டுக்குப் போய்வரக் கிளம்பியதைக் கண்டு இவனைவிட மூன்று மடங்கு சம்பளம் வாங்கும் தலைமைக் குமாஸ்தா பெருமூச்சு விட்டார். அன்று காலையில் அவர் வீட்டுக்கு அதி தேவதையான மகாகாளி விடுத்த துப்பாக்கி வெடிகளின் புகை போல இருந்தது அந்தப் பெருமூச்சு, இந்தக் குண்டுவீச்சு அவர் வீட்டில் நாள் தோறும் நடப்பதுதான். வீடாவது! அது ரணகளந்தான். ‘தண்ணீர் வெள்ளத்தைப் போலவே ரத்தவெள்ளத்தின் உற்பத்தி ஸ்தானமும் குறுகலாகத்தான் இருக்கும்!’ என்ற விதி இந்த வீட்டு யுத்தத்திலும் அநுபவத்தில் கண்ட விஷயம். அன்று காலையில் கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை ஆரம்பமானதற்குக் காரணம் ரோஜா மலர்தான். அந்தக் குக்கிராமத்தில் ரோஜாப்பூ கிடைப்பது மிகவும் அரிது. தலைமைக் குமாஸ்தாவின் பங்களாவிலே மட்டும் அவை பூத்தன. அன்று சுமார் இருபது பூக்கள் பூத்திருந்தன. ஆனால் தலைமைக் குமாஸ்தாவின் மனைவி., அந்தக் குமாஸ்தாவின் மனைவிக்கு அனுப்பிய பொட்டலத்தில் இரண்டு பூக்களே வைத்திருந்தாள். அவற்றில் ஒன்று வாடிய பூ. இதை அவர் பார்த்துவிட்டார். குமாஸ்தாக்களின் வாய்க்குப் பயப்படாத மேலதிகாரி உண்டா? குமாஸ்தாக்களே எப்போதும் அற்பங்கள்! அவர்கள் வாய் கண்டபடி பேசும்! எனவே தலைமைக் குமாஸ்தா தம் மனைவியின்மேல் எரிந்து விழுந்தார்; அவள் அவர்மேல் பாய்ந்தாள்; துப்பாக்கிகள் வெடித்தன; குண்டு வீச்சுகள் நிகழ்ந்தன; கன்னங்கள் சிவந்தன-போரின் முடிவு என்ன? மீதியிருந்த ரோஜாப்பூக்கள் வெந்நீர்த் தவலையில் மிகுந்திருந்த தண்ணீரில் போய் விழுந்தன. இடைநேர விடுமுறையில் அவசரமாக வீட்டுக்குப் போகும் குமாஸ்தாவின் சட்டையிலே ரோஜாப்பூ மிளிர்வதைக் கண்டு, தலைமைக் குமாஸ்தாவுக்கு அந்தத் தவலையில் எறிந்த ரோஜாமலர்களின் ஞாபகம் வந்தது. அவர் தம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். 

தலைமைக் குமாஸ்தாவின் மனைவி பிற்பகலில் வரப்போவதால், அடியோடு தூங்கக்கூடாது என்று தீர்மானித்து, அவள் வெளிக்கதவை ஒருக்களித்து வைத்துவிட்டு, ஒரு நாவலை எடுத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தாள். நாவலில் கதாநாயகனைப்பற்றிய அழகிய வர்ணனையைப் படித்தபொழுது அவளுக்குத் தன் கணவன் எதிரே நிற்பது போல இருந்தது. ‘சட்டையில் பெரிய ரோஜா மலரைக் கண்டதும் அவர் ஆனந்தமாகச் சிரித்திருப்பார்; மாலையில் வீடு வந்ததும் அவர் என்னை அன்போடு பார்ப்பார்; அப்புறம்- 

இப்படிக் கற்பனையில் மூழ்கியிருந்தபோது அவள் கண்ணயர்ந்தாள். இனிய கனவு கண்டாளோ என்னவோ, வெகு நேரம் வரையில் அவள் எழுந்திருக்கவே இல்லை; கடைசியில் திடுக்கிட்டு விழித்தாள். பார்த்தால் மணி மூன்றுக்குமேல் ஆகிவிட்டது! ‘தலைமைக் குமாஸ்தாவின் மனைவி வந்து திரும்பிப் போயிருப்பாளோ? கதவைத்தான் திறந்து வைத்திருக்கிறேனே!’ என்று அவள் யோசித்தாள். பரபரப்போடு எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு, கூந்தலைச் சரிப்படுத்திக்கொள்ள நிலைக்கண்ணாடியின் முன் வந்து நின்றாள். ‘மேலதிகாரியின் மனைவி இன்று தானாகவே நம்மைப் பார்க்க வருகிறாள். அந்த வாடிய சிறு ரோஜாவைச் சூட்டிக்கொண்டால் என்னவோ போலத்தான் இருக்கும். காலையில் ரசசியமாக அந்தப் பூவைக் கொண்டுபோய் அவர் கோட்டில் செருகினேனே! அதை நானேகூட வைத்துக்கொண்டிருக்கலாம்’ என்று நினைத்தாள். ஆனால் அந்த நினைப்பு ஒரு கணங்கூட நிலைத்திருக்கவில்லை. அந்தச் சிறிய பூவை அவள் தேடினாள். அது எங்கும் அகப்படவில்லை. அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மனச்சோர்வுடன், கண்ணாடி முன் நின்று, கூந்தலைப் படிய வைக்கலானாள். திடீரென்று அவள் சோர்வு மறைந்தது! 

பிச்சோடாவிலிருந்து அந்தப் பெரிய ரோஜாப்பூவை எடுத்து அவள் உற்றுப் பார்த்தாள். காலையில் கிடைத்த மலரேதான் அது. ‘ஆனால் ஆபீசில் அவருடைய சட்டையிலிருந்து என் பிச்சோடாவுக்கு இது எப்படி வந்தது? நம்முடைய தூக்கமோ சொல்லவேண்டியதில்லை அவர் மெதுவாக வந்து, கதவை மெல்லத் திறந்து- சரி, சாயங்காலம் அவரைச் சும்மா விடக்கூடாது!’ இப்படி அவள் எண்ணம் ஓடியது. 

வெகுநேரம் வரையில் அவள் தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள். மேலதிகாரியின் மனைவி வந்தபிறகுதான் அவள் சிந்தனை கலைந்தது. 

அன்றிரவு மனைவியிடம் தாற்காலிகமாகச் சமாதானம் செய்ய விரும்பிய தலைமைக் குமாஸ்தா இந்தத் தம்பதிகளின் பேச்சை எடுத்தார். “எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறான் அந்த மனுஷன்! இன்று அவன் சட்டையில் அந்தப் பெரிய ரோஜாப்பூ இருந்தது. அந்தப் பூவைப் போலவே அவனும் இருந்தான். நம் குடும்பமுந்தான் இருக்கிறதே, காட்டு முள்ளைப்போல!” என்றார். 

அந்த அம்மாள் விஷப்பார்வையோடு அவரைப் பார்த்துக்கொண்டே, ‘உங்களுக்கு எப்போதுமே சொந்த வஸ்து பிடிக்காது; அயலார் பொருள் அழகாக இருக்கும். அவன் சட்டையிலே சின்னப் பூ இருந்திருக்கும். பகலில் நான் அவளைப் பார்க்கப் போயிருந்தேன். அவள் பிச்சோடாவில் அந்தப் பெரிய பூ இருந்தது. எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறாள் தெரியுமா அவள்! அவள் கணவன் அவளைப் பூப்போல வைத்துக்கொண்டிருப்பான். நம் குடித்தனமும் இருக்கிறதே, வெறும் காட்டுமுள்போல!’ என்றாள். 

தலைமைக் குமாஸ்தாவின் பங்களாவில் காட்டு முள்கள் யாவும் குவிந்து விட்டதனால், அந்த நேரத்திலே அந்தக் கறுப்பு ரோஜாக்கள் இரண்டும் தமது சிறு கூட்டுக்குள்ளே முள்ளின்றி மலர்ந்திருந்தன. 

– மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு, வி.ஸ.காண்டேகர். தமிழில்: கா.ஸ்ரீ.ஸ்ரீ. 

– முல்லை – 13, முல்லை இலக்கியக் களஞ்சியம், 1946-1947இல் வெளிவந்த முல்லை இதழ்களின் முழுத் தொகுப்பு, பதிப்பும் தொகுப்பும்: முல்லை மு.பழநியப்பன், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, முல்லை பதிப்பகம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *