பரோபகாரம்
கதையாசிரியர்: வல்லிக்கண்ணன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி முல்லை
கதைப்பதிவு: November 7, 2025
பார்வையிட்டோர்: 84
(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பணப் பெட்டி. கணக்கு நோட்டு முதலிய வியாபாரச் சூழல்களில் கிடந்து புழுங்கிய உள்ளம் கொஞ்சம் விடுதலையை விரும்பியது. பெட்டியைப் பூட்டி விட்டு, நோட்டை மூடிவைத்து எழுந்து நின்று சோம்பல் முறித்துக்கொண்டார் சின்ன முதலாளி.
சின்ன முதலாளி என்று மற்றவர்கள் அழைப்பதன் மூலம் முதலாளி மகன் முதலாளி’ என்றுதான் அறிமுகம் செய்துகொள்கிறார்கள். கடைப்பொறுப்பிலிருந்து தந்தைக்கு ஓரளவு விடுதலை அளிக்க வந்த புத்திர பாக்கியம் சோமநாதன். உழைக்கச் சோம்பல்தான். என்றாலும் உழைப்பு என்னும் பெயரால் பெட்டியடியையும் கணக்குப் புத்தகத்தையும் கட்டி மாரடிக்க வேண்டியிருந்தது. என்ன செய்வது! ‘கூலிக்கு
எவனையாவது பிடித்துக் குமாஸ்தாவாகப் போடுவதுதானே. பணம் இல்லையா என்ன!’ என்று குமுறும் முதலாளி மனம் அடிக்கடி. ‘ஊம். இப்படி வந்து இருந்துவிட்டுப் போறதனாலே செலவுக்குப் பணம் புரளுது’ என்று அந்த மனமே சமாதானமும் கூறும்.
மேஜையடியை விட்டு முன்வாசல் பலகைமீது வந்து நின்ற சின்ன முதலாளி, ‘டே, போய் ஜில்லுனு ஐஸ்போட்டுக் காபி வாங்கி வாடா!” என்று குரல் கொடுத்தார்.
இந்த விபரீத உத்தரவு அருகிலிருந்த நண்பனுக்கு வியப்பளிக்கவில்லை! இதெல்லாந்தான் அன்றாட வாழ்க்கையின் ‘ஹாஸ்யங்கள்’ என்பது அவனுக்குத் தெரியும். ‘ஏன், சுடச் சுட கூல் டிரிங்க் வேண்டாமா, ஸார்!’ என்று கேட்டு வைத்தான் கடையிலிருந்த வேறொருவன்.
“ஓ! பார்த்தாயா, மறந்து போனனேன். போயி வெறும் கூல் டிரிங்க் மட்டும் வாங்கி வா. ஜும் வேண்டாம். சுடச் சுடவும் வேணாம்” என்று இறுதி அறிவிப்பு விடுத்தார் .சோமநாதன், தமது பேச்சுத் திறமையை மெச்சிய புன்னகை தம் முகத்திலே படரும்படியாக.
வீதியில் புரண்ட பார்வை சட்டெனத் தாவியது, நடந்துவந்த பகட்டுடைக்காரி மீது. அவள் அந்தக் கடையை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தாள். அவளையே கவனித்த சோமநாதன். தமது இடத்தில் வந்து அமர்ந்தார். யாராவது சாமான் வாங்க வரும் புள்ளியாக இருக்கலாம்!
தனி நடை நடந்துவந்து நின்றாள் அவள். வெயிலில் அடிபட்டு வதங்கிய அழகு மலர் போலச் சோபை குறைந்து தோன்றினாள் அவள்.
‘ஓ, இவளா!’ என்றது மனம், அறிமுக சம்பிரதாயங்களுக்கு அவசியம் இல்லை என்று காட்டி அவளை அவருக்குத் தெரியும். அர்ஜுன ரசனை பெற்ற சின்ன முதலாளியைத் தெரியாத பகட்டுக்காரிகள் இருக்க முடியுமா அந்த ஊரிலே?
அவள் உணர்ச்சிக் கொதிப்பை மூலதனமாக்கி, உணர்ச்சிப் பரிவர்த்தனையை வியாபாரமாகக் கையாண்டு வாழ்க்கை நடத்தும் தொழிற்காரி. அவளுக்குப் பகட்டு தேவைதானே? நைஸாக அணி செய்திருந்தாலுங்கூட இயற்கை மெருகு இல்லாத காகிதப் பூப் போல இருந்தாள் அவள். தவம் வேண்டி, கர்ப்பக்கிருக இருளில் பதுங்கியுள்ள சிலையை நோக்கிப்பக்தி பண்ணும் அநாதை மாதிரி, கெஞ்சும் பாவம் தீட்டிச் சின்ன முதலாளியின் முகத்திலே விழி பதித்தாள்.
அவரை அவளுக்குத் தெரியும். விதவிதமலர்களை நாடித்திரிந்த முதலளித் தேனீ அந்த நந்தவனத்திலும் எப்போதாவது பறந்து திரிந்திருக்கலாம் தான்!
என்றாலும் அவளை அவ்வேளையில் அங்கு எதிர்பாராத சின்ன முதலாளி “என்ன என்ன வேணும்?” என்று விசாரித்தார், சாமான்வாங்க வந்த வாடிக்கைக் காரர்களிடம் பரிமாறும் தொனியில்.
அவள் நின்ற சாயல் கலை எழில் சிந்தியது. ஜரிகை மின்னிய மேலாடைத்தலைப்பைத் தந்த வண்ண விரல்களால் நெருடியபடி, விரலின் நெளிவைக் கவனிக்கும் தாழ்ந்த கண்களை அடிக்கடி அவன் விழிகளில் பதித்துப் பின் மீட்டு, சோகம் பூசிய முகத்தில் சிறு நகை பூக்கச் செய்து நின்றாள் அவள்.
சிறு நேர மௌனந்தான் என்றாலும் வேதனை வளர்ப்பதாக இருந்தது. வீண் பிரச்சினைகளை எழுப்புவதாயும் இருந்தது. அதைக் குலைக்கச் சொல் உதிர்த்தார் மைனர். ‘என்ன ஏதாவது சாமான் வாங்க வந்தியா? என்ன வேணும் சொல்லு!”
விழி வண்டுகளை அவர் முகத்தில் சுற்றவிட்டு அவள் சொன்னாள் தீனக் குரலில்: “ஒரு உதவி செய்யணும் அவசரமானது” என்று.
“என்ன?” என்ற திகைப்பு ஒலியாகியது அவரிடத்தில்.
“ஒரு உதவி. ரொம்ப நெருக்கடி. இல்லையென்றால் இங்கே வருவேனா?’ அவள் மிதப்பிலே கண் வைத்துத் தூண்டிலை வீசுகின்ற மீன்பிடிப்போன்போல, அவரது முக மாற்றங்களை ஆராய்ந்தபடி திறமையாக விஷயத்தை வெளியிட்டாள்: “ரொம்ப அவசரம். ஆபத்துச் சமயம். நீங்கதான் உதவி செய்யணும்.”
மைனருக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. “விஷயத்தைச் சொல்லேன்” என்று கனன்றார்.
அவள் குறுநகையுடன் குழறினாள்: “வேறு யாரும் உதவி செய்வாங்க என்று தெரியலே. நீங்கதான்..”
“சரிதாம் புள்ளே! சீக்கிரம் விஷயத்தைச் சொல்லு. கதை அளப்பானேன்?”
நழுவாத மேலாடையைப் பரபரப்புடன் இழுத்துவிட ஓடிய கை மைனரின் பார்வையைக் கவர்ந்தது. பின் அந்த வனப்புத் தோட்டத்தின்மீது மேய்ந்தது அவர் பார்வை. முகத்தில் பதிந்தது. கரு விழிகளில் என்னவோ காண முயன்றது!
அவள் சொன்னாள்: “அவசரம். எனக்கு ஐம்பது ரூபா வேணும்” எதிரொலி எதுவும் இல்லாததால் தொடர்ந்தாள்: “எங்க அம்மா இறந்து போனா அவசியம் பணம் வேணுமே. யார் தருவா? அதனாலே உங்ககிட்டே வந்தேன்..”
“நான் மட்டும் பணம் தந்து விடுவேன் என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்றார் மைனர்.
‘உங்களைப்பற்றி, உங்க உதவியைப்பற்றி, அறியாதவங்க உண்டா’ நீங்க தருமராச்சே! அர்ஜுனனில்லையா நீங்கள் என்று சொல்லியிருந்தால் உண்மையாகத் தொனித்திருக்கும்! ஆனால் அவள் புகழ்ச்சி சரியானபடி வேலை செய்தது.
சோமநாதன் பெருமையாகச் சிரித்துக்கொண்டார், தம் நண்பனைப் பார்த்து. தாம் வள்ளல் என்று போற்றப்படுவது மதிப்புக்குரிய விஷயமில்லையா! இருந்தாலும் _ “அம்பது ரூபான்னா சும்மாவா! நான் எப்படி புள்ளெ தர முடியும்? என்றது அவர் வாய். விழிக் கோணத்தில் தேங்கிய பார்வையும், மேலாடை நழுவிக் கிடக்க எழில் சிதறும் கோலமுமாய் ஒயிலாக நின்ற அவளை எடை போட்ட மனம் சொன்னது, ‘உனக்காக இது கூடச் செய்யலேன்னா, பணம் இருந்துதான் என்ன பிரயோசனமடி குட்டீ!’ என்று.
ஆனால் பிகு பண்ணாவிட்டால் மதிப்பு ஏது! அதனால் வார்த்தையாடினார். மேலும் அவளுடன் பேசிச் சிரிப்பதனால் ஒருவித இன்பம் வட்டியாகக் கிடைக்கிறதே!
“இந்தா பாரு! பணம் என்ன, சும்மாக் கிடைக்குதா, என் இஷ்டம்போல் தர? கணக்குக் காட்றது எப்படி? முதலாளியிடம் என்ன சொல்வது?”
வலைவீசும் அவள் கவரும் புன்சிரிப்புச் சிதறி, ‘நீங்கள் நினைத்தால்._” என்று இழுத்து முடியாமலே விட்டுவிட்டாள். அதுவும் சாதுரியமாய் இனிதாகவே ஒலித்தது. கெஞ்சினாள். பிறகு கொஞ்சுவதுபோல் குழறினாள். சாகசங்கள் அவளுக்குச் சொல்லி வருவதில்லையே?
சின்ன முதலாளி மனம் இளகியது! ‘பரிதாபமாகத் தான் இருக்கு, இந்தா, போ. ஐம்பது இல்லே, முப்பது ரூபாதான் இருக்கு” என்று கூறிப் பணம் எடுத்துக் கொடுத்தார்.
அவள் மகிழ்வுடன் வாங்கிக்கொண்டாள். குமிழ் சிரிப்பும் கும்பிட் கையும் குதிக்கும் எழிலின் துணுக்குகளாக மின்னும் வனப்புடன் அவள் திரும்புவதையே விழுங்கிய சோமநாதன் சொக்கிப் போனார்.
“பார்த்தேளா! சிறு உதவி தான். அவள் உள்ளத்தில் எவ்வளவு களிப்புத் துள்ளுகிறது! பரோபகாரம் மனித இருதயத்தை மலர்விக்கும் பொன்னொளி. எனக்குப் பிறர் துன்பம் இரக்கமும் கண்ணீரும் ஊட்டிவிடும்.” சின்ன முதலாளி அளந்து கொண்டிருந்தார்.
எல்லாம் ஜம்பப் பேச்சு என்பது அவரது வேலைக்காரர்களுக்குத் தெரியாதா! ஏழை, தொழிலாளி, பிச்சைக்காரிகளுக்குக் கொடுக்க விரைவதில்லை அவர் பரோபகார சிந்தனை. ஆனால் பகட்டுகின்ற பாவையருக்குத் தாராளமாக வழங்கும் வள்ளல் அவர் என்கிற உண்மை ஊரறிந்ததாயிற்றே!
‘அது சரி. அவள் உம்மை ஏமாற்றியிருந்தால்? ஆபத்து, அவசரம், அம்மாவின் சாவு என்றதெல்லாம் ஹம்பக் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது” என்று ஆரம்பித்தான் நண்பன்.
“சேச்சே! புளுகி என்ன ஐயா ஆகப்போகுது அவளுக்கு!
“பணம் கிடைக்கிறது. அவள் வேஷம் உம்மிடமிருந்து பணம் கவர்ந்து விடுகிறது. அதுதானே அவள் தொழில்!’
நண்பரின் பேச்சு அவருக்குப் பிடிக்கவில்லை. எப்படிப் பிடிக்கும்? “போய்யா உமக்கு எல்லாம் சந்தேகம்தான். அவள் என்னிடம் ஏமாற்றியிருக்கமாட்டாள்” என்று உறுதியாகச் சொன்னார் மைனர்.
ஓர் ஆத்மாவுக்குத் திருப்தி அளித்து விட்டோம். பணம் பெற்றபோது அவள் முகத்தில் எத்தகைய அழகு மலர்ச்சி! என் உதவி அவள் உள்ளத்திலே விதைத்த அன்பு என்றென்றும் மிளிருமல்லவா! – இப்படி எண்ணி மகிழ்ந்தது அவர் உள்ளம்.
ஆனால், அதே வேளையில் வீட்டில் தாயுடன் அன்றைய ‘நாடகம்’, அதன் வசூல் இவற்றைப்பற்றிப்பேசிக் கலகலவென நகைத்துக்களிப்புற்ற பாசாங்குக்காரி, “பாவம்! நல்ல பையன்தான்; ஆனால் உலகம் அறியாதவன்'” என விமர்சித்துக்கொண்டிருந்தது மைனருக்குத் தெரியாதுதான். “உலகமறிந்து விழிப்புற்றவனாக இருந்தால் நம்மைப் போன்றவங்க பிழைப்பு எப்படி நடப்பதாம்?” என்று தாய் அநுபவம் போதித்ததைச் சின்ன முதலாளி அறிய நியாயமே இல்லை!
இவற்றை அறிந்திருந்தால் தாம் செய்த ‘பரோபகாரம்’ பற்றித் தாமே பெருமைப் பட்டுக் கொண்டிருப்பது சாத்தியமில்லையே!
– முல்லை – 13, முல்லை இலக்கியக் களஞ்சியம், 1946-1947இல் வெளிவந்த முல்லை இதழ்களின் முழுத் தொகுப்பு, பதிப்பும் தொகுப்பும்: முல்லை மு.பழநியப்பன், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, முல்லை பதிப்பகம், சென்னை.