கோபு மாமாவின் கடைசி ஆசை!
கதையாசிரியர்: வி.கே.லக்ஷ்மிநாராயணன்
கதைத்தொகுப்பு:
அமானுஷம்
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 117

‘ தட்…தட்…தட்..’
அறைக் கதவு பலமாகத் தட்டும் ஓசை மண்டையில் ஓங்கி அடிக்குறார்போல் கேட்க, அசந்து தூங்கிக் கொண்டிருந்த ராகவன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். பக்கத்தில் இருந்த மேஜை மீது வைத்திருக்கும் கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான். மணி பதினொன்று எனக்காட்டியது கடிகாரம்.
‘ இந்த நேரத்தில் யார் வந்திருப்பா’ மனத்தில் கேள்வி எழுந்தது. எழுந்து லைட் ஸ்விட்சை ஆன் செய்ய, பளீரென்று அறை முழுவதும் வெளிச்சம் பரவியது.
மீண்டும் ‘தட்…தட்..தட்..’ சப்தம்..
இந்த தடவை சப்தம் அதிகமாக கேட்டது. ராகவன் மனத்தில் பீதி எழுந்தது. போனமாதம், பக்கத்துத் தெரு லாட்ஜ் ஒன்றில் இப்படித்தான் இரவில் கதவு தட்டி ஒரு அறைக்குள் புகுந்து ஒருவன் லேப்டாப், ஸ்மார்ட் ஃபோன், மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றான். போலீசில் புகார் கொடுத்தும் இன்னும் கண்டு பிடிக்கவில்லை.
அந்தமாதிரி தனக்கும் நேருமோ என்ற பயம் ராகவன் மனத்தில் தோன்றியது.
கதவருகில் சென்று நின்றவன், எச்சரிக்கையுடன், “யாரது?” குரல் கொடுத்தான். தெரிந்த நபராய் இருந்தால் கதவைத் திறப்பது. இல்லையென்றால் சற்றுத் தள்ளி வேறொரு அறையில் இருக்கும் நண்பனை துணைக்கு அழைப்பது என்ற ஐடியா எழுந்தது.
“யார் கதவைத் தட்டறது?” மீண்டும் நடுங்கும் குரலில் கேட்டான்.
உடல் வேர்த்து விறு விறுத்தது!
“ராகவா! நான் தாண்டா…கோபு மாமா…கதவதத் திறடா!”
பரிச்சயமான கோபு மாமாவின் குரல்தான். சந்தேகமில்லை.
நெஞ்சில் தைரியம் தோன்றிட கதவைத் திறந்தவன், மாமாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்தான்.
“வாங்க மாமா!” வாய் நிறைய வரவேற்றான். கோபு மாமாவை ராகவனுக்கு ரொம்பப் பிடிக்கும்.
சின்ன வயதில் ராகவனுக்கு பிடித்ததெல்லாம் வாங்கித் தருவார் மாமா. தாய்மாமன். மாமாவுக்கும் ராகவனைப் பிடிக்கும்.
ராகவன் கதவைத் திறந்ததும், விர் ரென்று வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்போல் பாய்ந்து உள்ளே தாவி குதித்தபடி நுழைந்த கோபு நாற்காலியில் அமர்ந்துகொண்டார்!
மாமாவின் செயல் ராகவனுக்கு விநோதமாகப் பட்டது!
கதவைத் தாழிட்டு மாமா எதிரில் வந்து நின்ற ராகவன், “சரி..என்ன மாமா இந்த நேரத்துல வந்துருக்கீங்க?” எனக் கேட்டான். அப்போது சட்டென கரண்ட் கட்டானது. அறை பூராவும் கும்மிருட்டு! மின் விசிறி நின்று போனதால் ராகவனுக்கு வேர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.
தோள் துண்டால் தன் முகத்தைத் துடைத்தபடி மாமா, “என்னடா இது…கரண்ட் போயிடிச்சி…அடிக்கடி கட்டாகுமோ?” என்றார்.
“சாரி மாமா ! எப்பவாவது போகும் ஆனா கொஞ்ச நேரத்துல வந்திடும்…”
“ராகவா…இங்க ஒரு வேலையா வந்தேன். அப்படியே உன்னையும் பார்த்துட்டுப் போகலாம்ன்னு ஒரு
நப்பாசை…!”
ராகவன் மென்மையாய் சிரித்தான். மாமாவின் அன்பை எண்ணி பூரித்துப் போனான்.
அதேநேரம் போன கரண்ட் திரும்பி வந்தது. ராகவன் நிம்மதியாக மூச்சு விட்டான்.
விளக்கு வெளிச்சத்தில் தன் கண்களால் அறையை மாமா அளவெடுத்தார்.
“ராகவா! ரூம் வாடகை எவ்வளவு?”
“மூவாயிரம் மாமா!”
“அம்மாடி! ஏண்டா அவ்வளவு?”
“ஹார்ட் ஆஃப் த சிட்டியில இருக்கு. அதோட டாய்லட் அட்டாச்டு. ரெயில்வே ஸ்டேஷன்…கடை..மெஸ்ஸெல்லாம் கிட்டக்கயே இருக்கு….சரி மாமா! ரொம்ப டயர்டா இருக்கீங்க. நீங்க கட்டிலில் படுங்க நான் தரையில படுத்துக்குறேன்..” எழுந்த ராகவன், அறை மூலையில் சுருட்டி வைத்திருக்கும் பாயைப் பிரித்து உதறினான். அலமாரியில் இருக்கும் தலையணையை எடுத்தவன், பாயையும் தலையணையையும் தரையில் போட்டான்.
நாற்காலியில் இருந்து எழுந்த கோபு, “ராகவா! நான் தரையில படுத்துக்கறேன். நீ கட்டுல்ல படு. ஏன்னா நல்லா ஃப்ரீயா இருக்கும்”
“இட்ஸ் ஓ.கே.” ராகவன் கட்டிலில் படுத்துக்கொண்டான்.
கோபு மாமா படுக்காமல், பாயில் அமர்ந்தபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தார்.
“மாமி, மைதிலியெலாலாம் எப்படி இருக்காங்க மாமா?”
“நல்லாயிருக்காங்க…ஆனால் மைதிலிக்குதான் வரன் எதுவும் குதிராமல் தள்ளிக்கிட்டே இருக்கு!” ஆழ்ந்த பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
“மைதிலிக்கு என்ன குறை! மூக்கும் முழியுமா நல்லாத்தானே இருக்கா!”
“நீ சொல்றே. ஆனால் வந்து பார்க்குற பிள்ளையாண்டானெல்லாம் ‘உம்’ முன்னு தலையாட்றாங்க. போய் லெட்டர் போடறோம்னு சொல்லிட்டுப் போறாங்க. அதோட சரி. கணத்துலே கல்லுப் போட்ட மாதிரி ஆயிடும்…” என்றவர்,
“ராகவா! பேசாமல் நீயே மைதிலியைக் கட்டிட்கோயேன்! நம்ம உறவு விட்டுப்போகாம இருக்கும்.”
“நீங்க சொல்றது சரிதான்… ஆனால் எங்கப்பா உறவுல கூடாதுன்னு பிடிவாதமா இருக்காரே!”
“என்னம்மோ ராகவா! அலையன்ஸ் தள்ளிப்போறதப் பார்த்தால் மைதிலி உனக்குதான்னு என் மனசுல படறது…ஹூம்…ஆண்டவன் விட்ட வழி.” எனக் கூறிவிட்டு படுத்துக்கொண்டார் கோபு.
மாமாவைப் பார்க்க ராகவனுக்கு பாவமாய் இருந்தது. ஏற்கனவே மைதிலி காலம் கடந்து பிறந்தவள். எம்.பி.ஏ. படித்திருக்கிறாள்.
அம்சமாய் இருப்பாள். இன்னும் நான்கு வருட சர்வீஸ்தான் மாமாவுக்கு இருக்கு. இன்னும் வரன் குதிரவில்லை என்றால் யாருக்குதான் கவலை ஏற்படாது?
ராகவனுக்கே மைதிலியைப் பண்ணிக்கொள்ள வேண்டும் என்கிற அபிப்ராயம் உண்டு. அம்மாவுக்கும் ஓ.கே.தான். ஆனால் அப்பா மட்டும் கூடாதென்கிறார். ஆண்டவன் விட்ட வழி!
மாமாவை பரிதாபமாக பார்த்து விட்டு கண்மூடினான் ராகவன்.
திடீரென மொபைல் அலறியது.
திடுக்கிட்டு கண்விழித்த ராகவன் மொபைலை எடுத்துப் பார்த்தான்.
அம்மாவின் நம்பர். “சொல்லும்மா!”
“டேய் ராகவா ! எத்தன தடவை உனக்குப் போன் பண்றது! அப்படி என்னடா அசாத்திய தூக்கம்?” அம்மா எரிந்து விழுந்தாள்.
“ஸாரிம்மா! அசந்து தூங்கிட்டேன். சரி என்னம்மா சமாச்சாரம் ! வேளை கெட்ட வேளையில ஃபோன் பண்றே?”
மறுமுனையில் அம்மா விசும்புவது ராகவனுக்கு தெளிவாக கேட்டது. திடுக்கிட்டான் ராகவன்.
“அம்மா…யாருக்கு என்ன உடம்பும்மா.? சீக்கிரம் சொல்லாம்மா!”
“டேய் ராகவா! கோபு மாமா போயிட்டாண்டா.”
அதிர்ச்சியுற்றவன், “எத்தனை மணிக்கு ?”
“நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு …சாப்டுட்டு கொஞ்சம் நடந்தவன் அப்படியே நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு சாஞ்சவன்தான் அதுக்கப்புறம் எழுந்திருக்கவே இல்ல. டேய்..ராகவா! எழுந்து மொதல் பஸ்ஸ பிடிச்சு சீக்கிரமா காஞ்சிபுரம் வர வழியைப் பாரு!” அம்மா ஃபோனை அணைத்து விட்டாள்.
ராகவன் கீழே மாமா படுத்திருந்த இடத்தைப் பார்த்தான். காலியாக இருந்தது. மாமா அறைக்கு வந்தது தன்னுடன் பேசியது எல்லாம் கனவு என்று புரிந்து போனது.
மாமா இறந்தது பதினோரூ மணிக்கு. அதே நேரம் கனவில் அறைக்குள் நுழைந்தது….வேர்த்துக் கொட்டியது ராகவனுக்கு.
எழுந்து குளித்தவன் பேண்ட் ஷர்ட் அணிந்துகொண்டு புறப்பட்டான்.
ஒருமணி அவகாசத்தில் காஞ்சிபுரம் அடைந்தவன் முதலில் தன் வீட்டுக்குச் சென்றான். வாசலில் அவன் தந்தை நின்றிருந்தார். அவர் கண்களும் கலங்கியிருந்தன. அதே தெருவில் கொஞ்சம் தங்கியிருந்தது மாமாவின் வீடு.
“வா ராகவா! உன் அம்மா மாமாவோட வீட்டிலதான் இருக்கா. நீ டிரஸ் மாத்திண்டு கிளம்பு!”
ராகவன் உள்ளே நுழைந்து வேஷ்டிக்கு மாறி வெளிப்பட்டான்.
“ராகவா ஒரு நிமிஷம்! உன் மாமா கடைசி நேரத்தில உன்னைப் பார்க்கணும்னு துடிச்சிக் கிட்டிருந்தாராம்… பாவம். அவரோட கடைசி ஆசை நிறைவேறாமலே போச்சு! சரி..நீ புறப்படு!”
‘மாமாவோட கடைசி ஆசை நிறைவேறிடுச்சப்பா! என் கனவில் வந்து என்னை சந்திச்சாரு .பேசினாரு!’ கண்ணீர் வழிந்தோடியது. மாமாவின் ஆன்மா சாந்தியடைய அவர் மகள் மைதிலியை எப்பாடுபட்டாவது தானே மணந்துகொள்வது என்கிற ஆணித்தனமான எண்ணமும் ராகவன் மனத்தில் எழுந்தது.
மாமா வீட்டினுள் கண்ணீருடன் நுழைந்தான். தலைமாட்டில் மாமி கண்ணீருடன் பெண் மைதிலியுடன்.
அருகில் சென்று ஐஸ் பெட்டியினுள் பார்த்த ராகவனின் கண்கள் நிலைகுத்தியிருந்தன! தண்டவடம் சில்லிட்டது! நேற்று இரவு கனவில் மாமா அணிந்திருந்த அதே கருநீல சட்டையும் வெள்ளை வேஷ்டியும் இப்போது அவர் உடலில் காணப்பட்டது!