கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 5, 2025
பார்வையிட்டோர்: 51 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பெரிய கடை வீதிப்பக்கம் போகிறவர்கள் யாராயிருந் தாலும் ராயர் கிளப்புக்குள் நுழையாமல் திரும்ப மாட்டார்கள். பசியே இல்லாதவர்கள்கூட அந்தக் கிளப்புக்குள் நுழைந்து ஒரு கப் காபியாவது சாப்பிட்டால்தான் திருப்தி அடைவார்கள். 

ராயர் கிளப்பிலிருந்து வீசும் வெங்காய வடையின் ‘கம்’மென்ற வாசனை வீதிவழியே செல்கிறவர்களைக் கவர்ந்து இழுக்கும். 

கிளப்புக்குள் நுழைந்து விட்டாலோ முதலாளி முகுந்த ராவின் உபசாரம் நம்மைத் திணற அடித்துவிடும். 

“அண்ணா,அண்ணா!” என்று அவர் கிளப்புக்கு வருகிற வர்களை அன்போடு அழைக்கும்போது அந்தக் குரலில் குளுமை இருக்கும். இனிமை இருக்கும், பண்பு இருக்கும் மரியாதை இருக்கும், உபசார இருக்கும். 

முகுந்த ராவைத் தெரியாதவர்கள் அந்த ஊரில் ஒரு வருமே கிடையாது. சாதுவான மனிதர். எப்போதும் சிரித்த முகம். குணத்திலோ பச்சை வாழைப்பட்டை. ராயர் கிளப் தோன்றிய பிறகு பெரிய கடைவீதி ஏற்பட்டதா, அல்லது பெரிய கடைவீதி தோன்றிய பிறகு ராயர் கிளப் ஏற்பட்டதா என்பது ஒருவருக்குமே தெரியாது. 

கிளப் வாசலில் உயரமான தென்னங்கீற்றுப் பந்தல். யந்தலுக்குப் பந்தல் போட்டதுபோல் ஒரு பெரிய வேப்ப மரம். பக்கவாட்டில் மூங்கில் தட்டிகள். அந்தத் தட்டி களுக்குமேலே ஒன்றன்மீது ஒன்றாக ஒட்டப்பட்ட சினிமா விளம்பரப் ‘போஸ்டர்’கள். வாசலில் நிரந்தரமாகக் கட்டப்பட்ட சிமெண்டுத் தொட்டி. அதற்குப் பக்கத்தில் ஒரு நாட்டு நாய். 

பந்தலுக்குள் குழையும் முன்பே ராயர் நம்மைக் கவனித்து விடுவார். 

“வாங்க அண்ணா, வாங்க ! எங்கே இரண்டு நாளாகக் காணோம்?” என்று சிரித்துக்கொண்டே வரவேற்பார்.

இதற்குள் அவர் கைகள் மேஜைமீதுள்ள மணியை அடிக்கும். 

”அடே பிந்து! யார் வந்திருக்கா பாருடா. அண்ணாவுக்குச் சூடா ரெண்டு ரவா தோசை போட்டுக்கொண்டு வாடா! அதுக்கு முன்னாலே ஜில்லுனு ஒரு டம்ளர்லே பானை ஜலம் கொண்டு வந்து கொடு. சீக்கிரம்…ஓடியா…” 

“பானைத் தண்ணீர் தானா? ‘ஐஸ் வாட்டர்’ இல்லையா?” என்று கேட்டால், “அது எதுக்கு அண்ணா? உடம்புக்கு உஷ்ணம்! பானைத் தண்ணீர் சாப்பிடுங்கள்; சில்லென்று இருக்கும்” என்று கூறிக்கொண்டே தாமே உள்ளே சென்று, தம் கையாலேயே தண்ணீர் எடுத்துவந்து கொடுப்பார். 

கிளப்புக்கு வருகிறவர்கள் சும்மாப் போக மாட்டார்கள். அவரவர்கள் குடும்ப சமாசாரம், ஊர் அக்கப்போர், முனிசிபல் தேர்தல் எல்லாவற்றையும்பற்றி ராயரிடம் ஒரு ‘ஆவர்த்தம்’ பேசி முடித்துவிட்டுத்தான் செல்வார்கள். 

ராயர் எந்தக் கட்சியிலும் சேரமாட்டார். பொதுவாக எதிலும் பட்டுக் கொள்ளாமல் அவரவருக்குத் தகுந்தாற் போல் பக்குவமாகப் பதில் சொல்லி அனுப்பி விடுவார். 

“என்னய்யா ராயரே, நீரும் இத்தனை வருஷமா ஓட்டல் நடத்துகிறீரே? ஜம்மென்று ஒரு கட்டடத்தைக் கட்டிப் போடக் கூடாதா? உமக்குப் பிறகு ஓட்டல் வைத்தவர்களெல்லாம் கட்டடம் கட்டி விட்டார்களே! நீர் மட்டும் இப்படி தென்னங்கீற்றுக் குடிசையிலேயே எத்தனை நாளைக்குக் காலம் கடத்தப் போகிறீர்?” என்று கேட்டால், “வேப்ப மரத்திலேயும் தென்னங்கீத்துலேயும் இருக்கிற சுகம் வேறு எதுக்கு அண்ணா வரும்? கட்டடம் அழகா இருந்துட்டாப் போதுமா? காப்பியும் பலகாரமும் ருசியாயிருக்க வேண்டாமா?” என்பார். 

“அது உண்மை; எங்கே போனாலும் ராயர் கிளப்பிலே வந்து காப்பி சாப்பிட்டாத்தானே திருப்தி ஆகுது?” என்பார் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் இன்னொரு ஆசாமி.

வேறொருவர் வருவார். “இதென்னய்யா, இட்லிக்கு சாம்பார் இல்லேங்கறாரு உங்க ஆளு?” என்பார் கோபமாக. 

சாம்பார் தீர்ந்து விட்டாலும், ‘சாம்பார் தீர்ந்து விட்டது. சட்னிதான் இருக்கிறது’ என்று சொல்லமாட்டார் ராயர். சிரித்துக்கொண்டே கல்லாவை விட்டு எழுந்து சென்று அந்த ஆசாமியின் காதில் ரகசியமாக, “உங்களுக்கு சாம்பார் இல்லேன்னு சொல்லுவோமா? – இன்றைக்கு அமாவாசை பாருங்க. வெங்காய சாம்பார் உங்களுக்கு உதவாதுன்னு சொல்லி யிருப்பான். தேங்காய்ச் சட்னி போடச் சொல்லட்டுமா?” என்று அந்த ஆசாமிக்குக் கோபம் வராத படி இனிமையாகப் பேசி நிலைமையைச் சமாளித்து அனுப்புவார்! 

இதற்குள் இன்னொருவர், “என்ன ராயரே, ஒரு தோசைக்குச் சொல்லி ஒன்பது மணி நேரம் ஆனது! இங்கே ஒரு சப்ளையரும் திரும்பி வரல்லே. எழுந்து போக வேண்டியது தானா?” என்று சத்தம் போடுவார். 

“யாரு ? மருந்துக்கடை மாணிக்கமா? அவசரப்படாதீங்க தம்பி! எல்லோருக்கும் போல உனக்கும் கொடுத்துட முடியுமா? ஸ்பெஷல் தோசையாப் போட்டிருப்பாங்க, கொஞ்சம் பொறு, இதோ முறுகலா வந்துவிடும்” என்று சமாதானப் படுத்துவார். 

“என்ன ராயர்வாள்! வெக்கை தாங்கல்லியே, இரண்டு மின்சார விசிறி போடக் கூடாதோ?” என்று கேட்பார் வழக்கமாக வரும் வக்கீல் குப்புசாமி அய்யங்கார், 

“ஸார்வாளுக்கு ‘பான்’லேயே இருந்து பழக்கம்! குளு குளுன்னு வேப்பங்காற்று வீசுகிறபோது மின்சார விசிறி எதுக்கு?” என்பார் ராயர். 

இப்படி ஆளுக்குத் தக்கபடி எல்லாம் பேசி, அனைவரையும் திருப்தி செய்து அனுப்புவதில் கைதேர்ந்தவர் ராயர். 

சில மாதங்களுக்கு முன் ஒருநாள்… 

அதே பெரியகடை வீதியின் மற்றொரு கோடியில் ‘கிருஷ்ண விலாஸ்’ என்றொரு புதிய ஓட்டல் ஆரம்பமாயிற்று. அந்த இடத்தில் பூட்டப்பட்டுக் கிடந்த ஒரு பழைய கட்டடத்தை விலைக்கு வாங்கிப் புதுப்பித்து புதிய ஓட்டல் ஒன்றைத் தொடங்கினார் கிருஷ்ணமணி. ஆரம்ப தினத்தன்று வாசலில் வாழை மரம், பாண்டு வாத்தியம் எல்லாம் அமர்க்களப்பட்டன. 

சாம்பிராணிப் புகை, ஊதுவத்தி வாசனை, ரேடியோ சங்கீதம், மின்சார விசிறி, குளிர் பானங்கள், நிலைக் கண்ணாடிகள், எவர்சில்வர் பாத்திரங்கள், வழவழப்பான மேஜை நாற்காலிகள் – இத்தனை ஆடம்பரங்களும் சேர்ந்து கிருஷ்ண விலாஸை மிகவும் கவர்ச்சிகரமாக்கின. 

கூட்டம் சொல்லிச் சாத்தியமில்லை. முதல் நாள் அன்று எந்த ஓட்டலுக்குமே கூட்டம் வருவதில் வியப்பில்லை. அல்லவா? அன்று ராயர் ஓட்டலில் ஈ காக்கை இல்லை. ஈ காக்கைகளெல்லாம் கூடக் கிருஷ்ண விலாஸுக்குப் பறந்து போய்விட்டிருந்தன! 

பெரிய கடை வீதியில் எத்தனையோ ஓட்டல்கள் ஆரம்பமாகி, மூடு விழாவும் நடந்துவிட்டது. அதனாலெல்லாம் ராயர் கிளப் வியாபாரம் பாதிக்கப்பட்டதே இல்லை. ஆரம்ப தினத்தன்று எல்லாரும் அங்கே போவார்கள். மறுநாளே பழையபடி ராயர் கிளப்புக்கே திரும்பி வந்து விடுவார்கள். இது ராயருக்கு மிகவும் பழக்கமான விஷயம். தனக்குண்டான வியாபாரம் எப்போதும் நடந்துவிடும் என்பதில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை! 

புதிய ஓட்டல் முதலாளி கிருஷ்ணமணி உட்கார்ந்திருந்த ‘காஷ் டேபிளை’ச் சுற்றிப் பித்தளைக் கிராதிகள் பள பளத்தன. கிருஷ்ண விலாஸ் முதலாளி பாலக்காட்டைச் சேர்ந்தவர். ரொம்ப நல்ல மனிதர்தான். ஆனால் சொல்லில் இதம் இருக்காது. முகத்தில் எப்போதும் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருக்கும். யாருக்கும் வணங்கி பதில் சொல்ல மாட்டார். வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத் தான் பேசுவார். ஓட்டல் சிப்பந்திகளிடமும் சரி, சாப்பிட வருகிறவர்களிடமும் சரி, ஒரே கண்டிப்புத்தான். இதனால் ஊரில் அவருக்குப் பொல்லாதவர் என்ற பெயர் ஏற்பட்டு நிலைத்து விட்டது. 

“ஒரே புழுக்சுமாயிருக்கிறது. அந்த விசிறியைக் கொஞ்சம் போடச் சொல்கிறீர்களா?” என்று யாராவது அவரைக் கேட்டால், “ஏன் ஐயா, அதோ அந்த மூலையில் விசிறி சுற்றிக்கொண்டிருக்கிறதே கண் தெரியல்லே, அங்கே போய் உட்காருங்களேன்” என்பார், முகத்தில் அறைந்த மாதிரி. 

“ஐயா, இந்தக் காப்பிக்குப் பால் போதவில்லை. கொஞ்சம் பால் கொண்டுவரச் சொல்லுங்கள்” என்று அவரிடம் யாரும் கேட்டுவிட முடியாது. 

“காப்பிக்குப் பால் போதாதா? அப்படியானால் எங்களுக்குக் காப்பி தயாரிக்கத் தெரியாது என்று சொல்கிறீர்களா? உமக்குப் பால் போதவில்லையென்றால் அது எங்கள் காப்பியின் குற்றம் இல்லை. இஷ்டமிருந்தால் சாப்பிடுங்கள். இல்லையென்றால் வேறு ஓட்டலைப் பார்த்துச் செல்லுங்கள்” என்பார் அலட்சியமாக. 

“ஐயா, இட்லிக்கு சாம்பார் போடச் சொல்லுங்க!” என்பார் ஒருவர். 

“ஏன் ஐயா, சட்னி போட்டப்புறம் சாம்பார் வேறே கேக்கறீங்க? ஏதாவது ஒண்ணுதான் போட முடியும்.” – இது தான் கிருஷ்ணமணியின் பதில். 

காலையில் ஓட்டல் திறந்ததும் கிருஷ்ண விலாஸுக்குள் கையில் சில்லறை இல்லாமல் நோட்டுடன் செல்லக்கூடாது; 

“ஏன் சார், காலையில் இரண்டணாவுக்குச் சாப்பிட்டு விட்டு ஐந்து ரூபாய் நோட்டை நீட்டறீங்களே. இது நியாயமா? இப்ப சில்லறை கிடையாது. இந்தாங்க சீட்டு, அப்புறம் வந்து பாக்கிப் பணத்தை வாங்கிட்டுப் போங்க” என்பார். 

கிருஷ்ண விலாஸுக்கு வழக்கமாக வரும் ஆசாமி ஒருவர் ஒரு நாள் சாப்பிட்டுவிட்டு வெளியே போகும்போது பில்லைக் கிருஷிணமணியிடம் நீட்டி, இந்த பில்லுக்குப் பணம் நாளைக்குக் கொடுத்து விடுகிறேன்; கையில் சில்லறை இல்லை என்று பல்லைக் காட்டினார். 

கிருஷ்ணமணி முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, “இதோ என்ன போர்டு போட்டிருக்கிறது. பார்த்தீர்களா?” என்று தமக்குப் பக்கத்தில் மாட்டப் பட்டிருந்த போர்டைச் சுட்டிக் காட்டினார். 

“‘இன்று ரொக்கம்; நாளை கடன்’ என்று போட்டிருக்குது ‘” என்றார் கடன் சொன்னவர். 

“பின் எதற்காகக் கடன் சொல்கிறீர்? கையில் சில்லறை இல்லையென்றால் சாப்பிடக்கூடாது. அல்லது சாப்பிடுவதற்கு முன்பே என்னிடம் கேட்டிருக்க வேண்டும். இப்போது நான் கடன் கொடுத்தால் இந்தக் கடனைக் கொடுத்துவிட்டு இன்னொரு நாள் மறுபடியும் கடன் கேட்பீர். அப்புறம் கடன் வளர்ந்துகொண்டே போகும். கடன் கொடுத்தால் உமது சக்திக்கு மீறி அதிகமாகச் சாப்பிடுவீர். அப்புறம் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் திண்டாடுவீர். பிறகு என் ஓட்டலுக்கு வருவகையே நிறுத்திக் கொள்வீர். கையில் உள்ள பணத்துக்குத் தகுந்தபடி சாப்பிட்டால் சாப்பிடுகிறவர்களுக்கும் நல்லது; எனக்கும் கஷ்டமில்லை. சரி! இன்று நீர் சாப்பிட்டதற்குப் பணம் தர வேண்டாம். இனி கடன் கேட்காதீர்கள். போய் வாரும்” என்று சொல்லி அனுப்பினார். அவ்வளவுதான்; அன்று அவமானம் தாங்காமல் தலையைக் கவிழ்த்துக்கொண்டே போன அந்த ஆசாமி அப்புறம் அந்த ஓட்டல் பக்கமே திரும்பவில்லை! 

இப்படி எதற்கெடுத்தாலும் கண்டிப்புடன் நிர்த்தாட்சண்யமாக நடந்து கொண்ட கிருஷ்ண விலாஸ் முதலாளி தம் சுப்பந்திகள் விஷயத்திலாவது கொஞ்சம் கருணை காட்டுவாரா? அதுதான் கிடையாது. 

எந்த சர்வராவது கண்ணாடி டம்ளரைக் கைதவறி கீழேபோட்டு உடைத்து விட்டாலும் போதும்; அவனுடைய சம்பளப் பணத்தில் டம்ளரின் விலையைப் பிடித்து விடுவார். நகரசபை உத்தியோகஸ்தர்கள் யார் வந்தாலும் பல்லைக் காட்டும் வழக்கம் அவரிடம் கிடையாது. ஒரு கப் காபி இனாமாகக் கொடுக்கும் வழக்கமும் கிடையாது. ரூல்படி எல்லாம் செய்து வைத்து விடுவார். எந்த அதிகாரிக்கும் பயப்படமாட்டார். இதனால் கிருஷ்ண விலாஸ் முதலாளியை ஒருவருக்குமே பிடிக்கவில்லை. “என்ன மனுஷன் ஐயா அவர்? கொஞ்சங்கூட தாட்சண்யமில்லாமல் பேசுகிறார்” என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். கிருஷ்ண விலாஸுக்குப் போவதையும் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டார்கள். 

நாளடைவில் அந்த ஓட்டலில் வியாபாரம் குறைந்தது. ஆரம்ப காலத்தில் இருந்த களையும் விறுவிறுப்பும் பிறகு இல்லாமற் போய்விட்டது! 

முன்போல் அங்கே சாம்பிராணி மணம் கமழ்வதில்லை. 

ரேடியோ பாடுவதிலை. 

விசிறிகள் சுழல்வதில்லை. 

கிருஷ்ணமணி அடிக்கடி சோம்பல் முறித்துக் கொட்டாவி விட்டார். 

ராயர் கிளப்பில் மட்டும் எப்போதும் போல் சுறு சுறுப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. 

“வாங்க அண்ணா வாங்க! அடே பிந்து! அண்ணாவுக்கு டிகிரி காப்பி கொண்டு வந்து கொடுடா” என்று ராயர் வழக்கம்போல் இன்முகத்துடன் குளுமையாக எல்லோரை யும் வரவேற்றுக் கொண்டிருந்தார். 

கடைசியில் ஒரு நாள் கிருஷ்ணவிலாஸ் வாசலில் தமுக்குத் தட்டும் ஓசை கேட்டது. கிருஷ்ணமணிக்குக் கடன் அதிகமாகி விட்டதால் கிருஷ்ணவிலாஸ் மூடப்பட்டு சாமான்கள் ஏலத்தில் விடப்பட்டன. 

“என்னய்யா, ராயரே, கிருஷ்ணவிலாஸில் மின்சார விசிறி மலிவாக ஏலத்தில் கிடைக்கிறதே. வாங்கிப் போடுங்களேன்” என்றார் ஒரு வாடிக்கைக்காரர். 

“அதெல்லாம் எதுக்கு அண்ணா? வேப்ப மரத்திலும், தென்னங்கீற்றிலும் இருக்கிற சுகம் வருமா?” என்றார் ராயர். 

ஒரு தோப்பு; அந்தத் தோப்பில் பற்பல விதமான மரங்கள் ஓங்கி வளர்ந்து. கம்பீரமாக நின்று கொண்டிருந்தன. எல்லாம் பெரிய பெரிய மரங்கள்! வயிரம் பாய்ந்த மரங்கள். அவற்றுக்கிடையே ஒல்லியான கமுகு மரம் ஒன்றும் இருந்தது. 

திடீரென்று ஒருநாள் பலமான புயல் காற்று வீசியது. அந்தச் சூறாவளியின் வேகம் தாங்காமல் தோப்பிலிருந்த மரங்கள் அத்தனையும் சடசடவென்று கீழே சாய்ந்துவிட்டன. 

ஆனால், காற்றின் போக்குக்கெல்லாம் வணங்கிக் கொடுத்த அந்தக் கமுகு மரம் மட்டும் அந்த இடத்தில் பழையபடியே நின்று கொண்டிருந்தது. ‘வளைந்து கொடுப்பவர்களே இந்த உலகத்தில் வாழ முடியும்’ என்பதை அந்தக் கமுகு மரம் இந்த உலகுக்கு அறிவுறுத்திக்கொண்டு இருந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *