அதீதம்
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2025
பார்வையிட்டோர்: 144
(1999ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்திப் பொழுது, சந்தன வெயில், மிளகாய்ச் செடிகளின் பசுமையை நிறம் மாற்றியிருந்தது. எல்லாச் செடிகளின் தலையிலும் சந்தனக் கரைசலின் ஒளிப் பரவல். பார்க்க அழகாயிருந்தது.
ஆனால் கூதலடிக்கிறது. வெயிலை விழுங்கி விட்டுக் கைநீட்டுகிற பனிக்கூதல். விஷப்பனி. மார்கழி நேற்றுதான் பிறந்திருக்கிறது. இதற்குள் இம்புட்டுப் பனியா? இந்த வருஷப் பருவமே சரியாயில்லை. ஏட்டிக்குப் போட்டியாக இருக்கிறது. என்ன கூத்து கட்ட இருக்கிறதோ…
சோம்பலான யோசனையில் மம்பட்டியோடு அடுத்த பாத்திக்கு நகர்ந்தான் யோகேந்திரன். வாய்க் காலில் தண்ணீர். மண் கரைசலும் நுரைத் துகள்களுமாய் கலங்கலாய் வந்தது. மிளகாய்ச் செடிக்கு முதல் தண்ணீர். ஐப்பசி முதலில் மழைத் தண்ணீரில் மிளகாய் நடுவை. கார்த்திகையில் இரண்டு களைவெட்டு. மூன்று மருந்தடிப்புகள். இப்போது வாய்க்கால் வரப்புகளை எடுத்துக்கட்டி சீர் செய்து, முதல் தண்ணீர். சிரமமில்லை. உடையவில்லை. ஒரு சீராய்ப் பாய்கிறது.
விதைத்த யூரியா முத்துச் சிதறலாக செடிகளின் நிழலுக்குள் சிரிக்கின்றன. அந்தச் சிரிப்பைப் பொறுக்காது, போட்டு அமுக்கித் தின்றுவிட்டுப் படர்ந்து நிறைகிற தண்ணீர்.
குமரிப்பிள்ளைகளாய் கொத்தும் கொழையுமா இருக்க வேண்டிய மிளகாய்ச் செடிகள். மாறி மாறி சுருட்டை நோயடித்து, குழைவில்லாத விறைப்பில் நிற்கின்றன. படர்ந்து அகலமாய் நிற்கா மல் ஒடுக்கிப் பிடித்த விளக்குமாறுகளாக – உலர்ந்த கொக்குகளாக –
யோகேந்திரனுக்குள்ளிருந்து பெருமூச்சு. அடுத்த பாத்திக்காக வாய் மடையைக் கொத்தினான். இன்னும் அவனுக்குள் வாடாத துளிர்களாக நம்பிக்கை.
‘தண்ணி பாய்ஞ்சுட்டா செடிக உசுர்புடுச்சிரும். புதுத்தளிர் எடுத்துப் படர்ந்துரும். பூ பிஞ்சு எடுக்க ஆரம்பிச்சிரும்’
அவனுக்குள் கால் முளைக்கும் நம்பிக்கைகள். சட்டையில்லாத திரேகத்தில் பனியின் குளிர்ப் பரவல். கூடுதல் வெயிலைப் பொருட் படுத்தாத பனி. ‘ச்சே’ என்றிருந்தது.
‘பனிக்கண்ணு தொறந்தா…. மழைக் கண்ணு மூடிக்கிடும்னு பெரியாளுக சொல்லுவாகளே.. பனி இப்படி விஷப் பனியா எறங்குதே… அப்ப தைமாச மழை இல்லாமப் போயிருமோ….’
சூழ்கிற கவலை நினைப்புகள், மிளகாய் புஞ்சைக்கு அடுத்த புஞ்சை தரிசாகக் கிடக்கிறது. கலப்பை முனை பார்க்காத விதவையாக. ஆண் மயில் ஒன்று நீளத் தோகையோடு நடந்து இரை பொறுக்குகிறது. சற்றுத் தள்ளி ஒரு பெண் மயிலும், மூன்று குஞ்சுகளும்.
ஒரு பனங்காடை ‘கார்ர்’ ரென்று நாராசமாகக் கத்திக் கொண்டு பறந்து போகிறது. மைனாவை விட சற்றுப் பெரிசு. நீலமும் பச்சையும் கலந்த ஒரு நிறம். பார்க்க அழகாயிருக்கும் பனங்காடை.
செம்போத்து எங்கோ ஒரு வேலிக்குள் இருந்துகொண்டு சோகமாய்க் கூவுகிறது. கரிசல்காட்டுக்குயில். குயிலை விட இனிமையான கூவல். நெஞ்சுக்குள் ஊடுருவி உரசுகிற உணர்ச்சிக் கூவல்.
‘எப்படா… கரண்டு நிற்கும், வீட்டுக்குப் போகலாம்’ என்று மனசு கிடந்த பரபரத்தது. அவனுக்கு மகனைப் பார்க்கணும் என்கிற ஆசை, முளைத்துவிட்டது. முளைத்த கணத்தில் விருட்சமாகி விடுகிற ஆசை, விருட்சமாகி அவனை அலைக்கழிக்கிற ஆசை.
போன மார்கழி மாசம் இருபத்தி ஒன்றாம் தேதி பிறந்த பயல். ஒரு வருஷம் ஆகப் போகிறது. ஏழு வருஷகாலம் மாய்மாலம் காட்டி, கண்ணாமூச்சி விளையாட்டு நடத்தி… பிறந்த பயல். கல்யாணமாகி, ஏழு வருஷம் கடந்த பின்பு பிறந்த தலைக் குழந்தை.
அடே…யப்பா, ஏழு வருஷ காலத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள்… நாசகரமான மோசமாற்றங்கள். சீரழிவுகள். அவஸ்தைகள்.
ய……ம்மா! பயங்கரம்.
இப்ப நினைத்தாலும்கூட மனசு கிடந்து நடுங்குகிறது, யோகுவுக்கு. நடந்தவற்றையெல்லாம் நினைக்கவே தயங்கினான். நரக நாள்கள். மனசைப் பிள்ளைப் பக்கம் திருப்பி, அந்த நரக நினைப்பு களிலிருந்து தப்பிவிட முயன்றான்.
சந்தன மின்னலாய் வந்து பிறந்த பயல். பார்த்த கண்கூசும். அப்படி ஒரு நிறம். தங்கக் குழைவு. ‘ததுக் பொதுக்’கென்று இருப்பான். வெண்ணைக் கட்டியாகக் குழைகிற அந்திச் சூரிய ஜொலிப்பு. சுருள் சுருளாய் முடி. ஆனாலும் மெல்லிய ரோமம். கோதிய விரல்களுக்குள் பூவின் மென் உரசல். அவன் சிரித்து எச்சில் வடிந்தால்.. அதன் அழகே தனி. அள்ளிக் குடிக்கலாம் போலிருக்கும்.
அவனுக்குள் சகலமும் மறந்து போக… முழுவதும் நிறைந்து போன பிள்ளை. அவன் சிரிப்புச் சிணுங்கல். உருண்ட பிஞ்சுக்கைகளின் பூந்தட்டுகள். மிருதுவான அவன் பிஞ்சுப்பாதம் வயிற்றில் பதித்தால்… அதன் சுகமே தேவபோகம்.
‘ட…டக்’
பம்ப் ஷெட் குழாயின் அதிர்வுச்சத்தம், கரண்டு நின்று போயிற்று. யோகுவுக்குச் சந்தோஷம். வரத்துத் தண்ணீருக்கு இரண்டு பாத்திகளைக் கொத்திவிட்டு… மம்பட்டியோடு பம்ப்ஷெட் ரூமுக்கு வந்தான். தொட்டித் தண்ணீரில் முங்கி எழுந்தான். அவசரத்தில் காக்கா குளிப்பு. ஈரவேட்டியை நான்காக மடித்து இடுப்பில் கட்டிக் கொண்டு, துண்டைத் தோளை மூடிப் போட்டுக்கொண்டான். இப்போது விஷப்பனி ரொம்பக் கூடுதலாயிருந்தது. உதடுகள் நடுங்கி யதிர்ந்தன. நரம்புகள் முழுக்க விறைத்து விறைத்து திரேகம் சிலிர்த்தது.
பொழுது சுத்தமாக அடைந்து விட்டது. ஆகாய வெளிச்சம் தவிட்டு நிற மங்கலாய் மிச்சமிருந்தது. அதையும் விழுங்கித் தீர்க்க இருட்டு, பனியின் உக்கிரத்தோடு சூழ்ந்து வந்தது. யோகு நடையை எட்டிப் போட்டான். மனசுக்குள்… தனது ரத்த நிழல்.
2
“பய இருக்கானா? முழிச்சிருக்கானா, ஒறங்குதானா?” ஆவல் துடிப்பின் கேள்வியோடு உள்ளே நுழைந்த யோகுவை எதிர் கொண்டாள் சரசு.
அப்போதுதான் குளித்திருந்தாள். மஞ்சள் பூசிய சுடர்முகத்தில் மாரி யம்மா கோயில் திருநீறு. செஞ்சாயத்திருநீறு, நடுவில் சிறிசாக ஒரு குங்குமப் புள்ளி. ஈரக் கூந்தலைத் துவளவிட்டு நுனியில் முடிந் திருந்தால் அதிலும் சொட்டடிக்கிற நீர்த்துளி. சரசு உதடுகளின் பூ மலர்வு. பெருமிதமான புன்னகை. புன் சிரிப்புப் பிரகாசம்.
“என்ன சிரிக்கே? தவமணி எங்கே?”
“அவருக்கு ஏககிராக்கி. பவுடர் போட்டு, கறுப்புப் பொட்டு வைக்கிறதுக்குள்ளே அவனைத் தூக்கிட்டுப்போக ரெண்டு மூணு புள்ளைக வந்துட்டுப் போய்ட்டாக….”
“ம்”
“மேலத்தெரு வேலக்கா மகா… தூக்கிட்டுப் போய்ருக்கா.”
“எங்கே… அவுக வீட்டுக்கா?”
“இல்லை. களத்துக்கு”
கைலியைக் கட்டினான். ஈரவேட்டி, துண்டை கொடியில் காயப் போட்டான். உச்சித் தலையில் தேங்காய் எண்ணைத் தேய்த்துக் கொண்டான். தலைசீவிக்கொண்டான். காரியங்களில் தெரிந்த துல்லியமான துரிதம். செயல்களில் ரெக்கையடிப்பு. எங்கோ புறப்பட யத்தனிக்கிற பரபரப்பு.
:என்ன… தூரமா?”
“இல்லை….. கிட்டத்துலேதான்”
“அதான்…… எங்கே?”
“பயலைத் தேடித்தான்”
அவள் முகத்தில் சிரிப்பு. சிரிப்பில் ஒரு பரிகாசம். பெருமிதமான பரி காசம்.
“பத்துமாசப் புள்ளையைத் தேடிக்கிட்டு… முழுத்த ஆம்பளை தெருக்காட்லே திரிஞ்சா… என்ன நெனைப்பாக?”
“நெனைக்கிறவுகளுக்கெல்லாம் பயப்பட்டா…. முடியுமா?”
“சரி… காட்லே தண்ணி பாய்ச்சிட்டு வந்திருக்கீக. காப்பி குடுச்சிக்கிருதீகளா….?”
“பயலைத் தூக்கிட்டு வந்து குடிச்சிருதேன்…”
“இந்தப்பறப்பா…. பறப்பாக? நல்ல தகப்பன் வந்து வாய்ச்சீக. நம்ப பயலுக்கு…’
அவனைக்கடந்து செல்கிற வாசனைச் சோப்பின் நறுமணம். வெறும் குடத்தை இடுப்பில் வைத்து வாசலைக் கடக்கிற சரசுவைப் பார்த்தான்.
தவமணியைக் கருத்தரிப்பதற்கு முன் அவள் தவித்த தவிப்புகள், போட்ட சண்டைகள்….. அழுத அழுகைகள்…. தன்னைத்தானே அவள் மாற்றிக்கொண்ட தலைகீழ் விகிதம்…. அவள் சொல்கிறாள். இவன் பறக்கிற ஆவல் பறப்பு பற்றி. நல்ல கூத்துதான். பெண்ணின் சாகசம். சூழலைத் தலைகீழாகப் புரட்டிப் போடுகிற அவளது சாகசம்.
முற்றத்தைத் தாண்டிய சரசு. தன் முதுகு பார்க்கப் படுவதை பார்வையின் உள் அர்த்தத்தில் மோதிக் கொண்டவள், கண்ணின் கேள்விக்குறி கலைந்து மங்கியது.
அப்பவும்…. வார்த்தையில் மட்டும் கேள்வியை நிறுத்தினாள். “என்னவாம்….?”
“ஒண்ணுமில்லே….”
“அட… சொல்லுங்க”
“தவமணியைக் கொஞ்சுறதுக்கு நான் மட்டும் தவிக்கேன் இல்லையா? அதைத்தான் நெனச்சேன்”
“ஏன்… நீங்க பறக்கலியா?” “ஆமா. நான் மட்டுமா?”
“நானுந்தான். அதுக்கென்ன?”
“அம்புட்டுத்தான்.”
அவள் பூரித்துப் போன சிரிப்பில் முகமே பூவாக மலர்ந்தது. பீர்க்கைப் பூவின் மார்கழிக்குளிர்ச்சி. பசிய மஞ்சள் ஒளிச்சிலிர்ப்பு. அவனுள் மோகத்தீயைப் பற்றவைக்கிற ஒளி.
யோகுவுக்குள் வந்து திரண்ட கிறக்கம். அடிவயிறே சூன்யமாகிப் போன ஓர் உணர்வு. மூர்க்கமோகத்தில் முறுக்கேறித் திணறிய மனசு. தடக் தடக்.. கென்று அடித்துக் கொள்கிற நெஞ்சுத் தீவிரம்.
சரசு நாலெட்டுத் திரும்பி வந்தாள்.
“ஐயா….. ராசா, நான் தவமிருந்து பெத்த ஒங்க புள்ளையைத் தேடித் தூக்கிட்டு வாங்க ராசா…. போதுமா, ராசா?”
“ஒங்க புள்ளை” என்ற வார்த்தையில் அவள் தந்த அழுத்தம்.
கேலியும் குழைவும் பரிகாசப் பணிவுமாகக் கனிந்த பேச்சில் மிழற்றிய சரசு, அவனது கன்னத்தை, குவித்த விரல்களால் ஒத்தி முத்தமிட்டாள்.
அவள் விரல்களின் சிலிர்ப்பான குளிர்ச்சி, மென்மையான ஸ்பரிச உணர்ச்சி, அவனுக்குள் பிரளயம். அதையெல்லாம் கடந்து, சிரித்துவிட யத்தனித்தான். முடியவில்லை. அசட்டுச் சிரிப்பாக முடிந்தது.
அவள் எதையும் கவனிக்காதவள் போல அவனது உள்நிகழ்வை உணராத அப்பாவி போல குடத்துடன் போய்விட்டாள்.
யோகு தெருவில் இறங்கினான். மேல வீட்டு வேலக்கா மகளைத் தேடினான்.
வேலக்கா மகளை வீட்டுவேலை கூப்பிட்டது. பிள்ளையை சரசுவிடம் ஒப்படைத்துவிட எழுந்தாள். பக்கத்திலிருந்த சிறுமி…. “தவம் டேய் தவம்….இங்கே பாரு…..” என்று தூக்குவதற்குக் கைநீட்டி னாள்.
“ம்ஹீம்…. நான் தரமாட்டேன்… சரசக்காகிட்டே குடுக்கணும்”.
“நான் குடுத்துருதேன்…”
“அதெல்லாம் மாட்டேன்…. நீ அழுக வைச்சிருவே”.
அதற்குள் அந்தச்சிறுமி அவனைத் தூக்கிவிட்டாள். அவனும் எச்சில் சிரிப்போடு தாவினான்.
“நான் சரசக்காகிட்டே பத்திரமா குடுத்துருதேன்”.
இப்படியே கைமாறி… கைமாறி…. கைகள் மாறி தவமணி அழகு அப்படி, சகலரையும் ஈர்க்கிற அழகு.
யோகு விசாரித்து விசாரித்து… நூல் பிடித்துத் திரிந்தான். தெருவில் வீடு வீடாக அலைந்தான்.
கடைசியில் மடம், மடத்துச் சிமெண்டுத் திண்ணை. சுற்றிலும் நாலு சிறுமிகள், கைதட்டுகிற சத்தத்தில் கவனத்தை ஈர்க்கிற முயற்சி.
“கோழி பாரு… குஞ்சைப் பாரு… சைக்கிளைப் பாரு… டக்கரைப் பாரு” என்று ஆள் ஆளுக்குக் கத்த… நடுவில் தங்கப்பழமாகத் தவ மணி. திகைப்பும் குழப்பமுமாகத் திணறித் தவித்தான். வந்து வந்து கலைகிற அழுகை. அவனுக்கு ஓவ்வவில்லை. ஆனால் சிறுமி களுக்கு, தங்க வெண்ணெய்க்கட்டியைவிட மனசில்லை. ஆள் ஆளுக்கு விளையாட்டுக் காட்டினர்.
இவனைத் தூ….ரத்தில் பார்த்தவுடன் –
இவனை நோக்கி பிஞ்சுக்கைகளை அகல விரித்துக் கொண்டு வீறிட்டான். ஓட்டமாய் ஓடிப் போய் தூக்கிக் கொண்டான். மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“என்னப்பா… என்னப்பா… ஏண்டா கண்ணு… அழாதேடா … அழாதேடா.”
விநோதமான வகையில் குரலை மாற்றிக்கொண்டு, அவனை நெஞ் சில் வைத்துக் குலுக்கினான்.
“ரோரோ….ரோ…ட்ட்ட்ர்ர்ரு…ட்டர்ரரு…ரோ ரோ ரோ…” என்று இசையலமாய்க் குரல் கொடுத்துக் கொண்டே அவனைக் குலுக்க.. குலுக்க..
முளைத்திருந்த இரண்டு பல் தெரிய அழுத தவமணியின் அழுகை, சிணுங்கலாகக் குறைந்தது. புறங்கையால் கண்ணைக் கசக்கினான்.
“என்னடா…. ஒறக்கம் வருதா? வாடா…. அம்மாகிட்டே போவோம்” தவமணி அந்தச் சிறுமிகளைப் பார்த்தான். இப்போது கை தட்டிச் சிரித்தான்.
3
மல்லாக்கப் படுத்திருந்தான், யோகு. அவன் வயிற்றில் குதிரை ஏறியிருந்த தவமணி தலையைத் தூக்கிக் கொண்டே தவமணி, முகத்தைக் கவிழ்த்தி… “முட்டு….முட்டு, முட்டு….முட்ட்டு” என்று ராகம் பாட, நெற்றிகள் தொட்டவுடன் தவமணி “கெக்கெக்கே” வென்று சிரிக்க……
கொஞ்ச நேரம்தான். அதற்குள் அந்த விளையாட்டு அவனுக்கு சலித்துப் போயிற்று. நெஞ்சு ரோமத்தைப் பற்றியிழுத்து இறங்கப் போனான். யோகுவுக்கு விளையாட்டாசை குறையவில்லை. படுத்த நிலையில் கால்களை உயர்த்தி…கால்களில் அவனைப் போட்டுக் கொண்டு…… ஏற்றவும் இறக்கவுமாய்…. கொஞ்ச நேரம். அதுக்கும் ஒரே சிரிப்பாணி. அதுவும் சலித்துப் போயி ருந்தது. அப்புறம் இவன் விளையாட்டை மாற்றினான்.
“ஏங்க… நீங்களும் பச்சைப் புள்ளை கணக்கா இப்படியே விளையாண்டா எப்படி?”
“ஏன்….. புள்ளையைக் கொஞ்சக் கூடாதா?”
“அதுக்கும் ஒரு அளவு கிளவு கெடையாதா?”
“என்ன அளவு வேண்டிக்கிடக்கு? நீ ஒஞ்சோலியைப் பாரு. எங்களுக்குத் தெரியும்.”
“சரி….சரி கொண்டாங்க. அமர்த்தணும்.”
பயலும் அவளிடம் ஆவலாய்ப் பறந்தான். அரிசிப் பல் தெரியச் சிரித்தான். அவள் திரேகத்தில் பட்டதும் ஆதாளி தாளாமல் அவள் கைக்குள்ளேயே குதித்தான்.
“அவனுக்குப் பசிச்சிருக்கு.”
“ஆமா… நாலுமணிக்கு அமர்த்துனது. பசிக்காது? ஏங்கண்ணு… ஏ…ராசா… என்னடா செல்லம்…! வவுறு பசிக்குதாப்பா ? வயக்காடு வெட்டுனியாக்கும்? நாலுகுறுக்கம் வெட்டியிருப்பியா? சீமை ராசாவுக்கு பாலு வேணுமாக்கும்?”
முகத்துக்கு நேராகத் தூக்கிப்பிடித்திருந்தாள். அவள் பாவனையும் நடிப்புமாய் முகத்தை ஆட்டி ஆட்டிக் கொஞ்ச…. அவனும் பிஞ்சுக் கால்களை உதறி உதறிச்சிரித்தான். அகல அகலமாய் அசைகிற சரசுவின் உதடுகளைப் பிடிக்க கையைக் கையை நீட்டினான்.
காலை நீட்டினாள். மடியில் கிடத்தினாள். அதற்குள் புரிந்து கொண்டு சந்தோஷம் தாளாமல் தத்தளித்தான். ஆவல் ஆவலாய் சரசுவின் நெஞ்சில் அறைந்தான்.
ஜாக்கட் ஊக்கைத் திறந்து, மாராப்புச் சேலையை நன்கு இழுத்துவிட்டு, மகனை அணைத்துக் கொண்டாள். ஆசையும் மகிழ்ச்சியும் அவன் கால்களும் கைகளும் ஆட….
மகனின் உள்நாக்கின் அழுத்தமான ஸ்பரிசத்தில் மனம் கிறங்கிப் போய், கண்களைச் செருகினாள் சரசு. அந்தச் சுகமயக்கத்தில் கை பர பரத்தது. மகனின் பஞ்சு ரோமத்தை வருடினாள்.
சரசுவின் முகம், தாய்மையில் கனிந்து, விம்மி, தெய்வீக நிலையடைகிற முகம். கிறங்கிய கண்களும் பரவச உணர்வுகளுமாய், சுகபோதையில் தத்தளிக்கிற சரசு. தேவசுகம்.
ஒருக்களித்துப் படுத்திருந்த யோகு, சரசுவைப் பார்த்தான். அவள் முகம் கனிந்த உணர்வுகளில் முகக்குழைவு. புருவ அசைவு. பரவசமாய் மலர்கிற மனைவி முகத்தை நோக்கினான். அவனுள் நீள்கிற நினைவோட்டம். “பெத்த புள்ளைக்குத் தாய்ப்பால் குடுக்குறது எம்புட்டோ நல்லது. புள்ளையை நோய் அண்டாது. நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும். வம்சம் வைரத் தொடர்ச்சியா வலுவாத் தழைக்கும் புள்ளைக்கிட்டே பாச உணர்வை வளர்க்கும், உடம்பையும் பண்பையும் ஆரோக்கியமாக்கும். அது மட்டுமில்லை…. தாய்ப் பால் குடுக்கிறது, தாய்க்கே ஒரு சுகம். இன்பப் போதை. பரவசம். தெய்விகமா மாறுகிற மனக்கனிவு. இந்தச் சுகத்தை வேண்டான்னு தள்ள ஒரு பெண்ணாலே முடியுமா? முடியுதே… தாய்ப்பால் தந்தா, கவர்ச்சி கலையுமேன்னு பயப்படுதுகளே… பெத்த புள்ளையை விட கவர்ச்சி முக்கியமா? தாய்ப்பாசத்தைவிட திரேகக் கவர்ச்சி முக்கியமா? தாய்பாசத்தை விட திரேகக் கவர்ச்சி அழகா? தாய்ப்பால் குடுக்கத் தயங்குகிற கலாச்சாரம் தொடங்கிருச்சு. ராட்சஸத் தொடக்கம். இந்தக் கலாச்சாரம்… எய்ட்ஸ் கலாச்சாரத்துலேதான் போய் முடியும்.”
யோகுவுக்குள் யோசனைகள், நேற்று நாளிதழில் தலையங்கத்தைப் படித்த ஞாபகத்தின் விளைவு. தாய்ப்பால் வாரம் அனுஷ்டிக்கப் படுவதைப் பற்றிய தலையங்கம்.
தவமணி தூங்கிப் போனான். மடியிலேயே தூக்கி தொட்டிலில் போட்டாள். லேசாய் சிணுங்கித் திமிறினான். தொட்டிலை ஆட்ட ஆட்ட உறங்கிப் போனான். உறங்கிய பின்னும் கூட, அந்தச் சின்ன உதடுகளில் பால் குடிக்கிற பாவனை. சலனம். ஒரு சின்னத் தூசியை எடுத்து அவன் தலை முடியில் வைத்தாள்.
“எதுக்கு இந்தத் துரும்பு?”
“ஒறக்கத்துலே பேய்க்கனா வராம இருக்கணும்னா…. நாம தலை மாட்டுலே வெளக்கமாறு வைச்சுப் படுக்குறோம்லே?”
“ஆமா…”
“அப்படித்தான் இதுவும், பயப்படாம நிம்மதியா ஒறங்கறத்துக்கு…”
சரசுவைப் பார்த்தான். மோகப் பார்வை. அள்ளி விழுங்கிவிட யத்தனிக்கிற பார்வைத் தீவிரம். அவளைத் தொட்டு ஒன்றரை வருஷமாகப் போகிறது.
சரசு இன்றைக்கு ரொம்ப அழகாய்த் தெரிந்தாள். சுடரொளிப் பிரகாசம். முக வசீகரம். கட்டுவிடாத கனிக்குழைவு. இடுப்புச் சதையின் மினுமினுப்பு. தொட்டுத் தழுவத் தூண்டுகிற சதை மின்னல்.
பெருமூச்சோடு எழுந்தான். தொட்டிலையாட்டிக் கொண்டிருக்கிற சரசு பக்கத்தில் போய் நின்றான். இன்னும் நெருக்கமாய். காது மடலில் அவனது உஷ்ணச் சுவாசம். மனஉஷ்ணம். திரேக உஷ்ணம்.
அவளும் திக்….திக்….திக்….
திரும்பாமல், அசிரத்தைப் பாவனையில் அவள். அவளுக்குள் முரண்பாடு. புருஷனின் நியாயமான பசி. மனசறிந்து இங்கிதமாய் நடந்து கொள்கிற அன்புப் புருஷன். இவள் அழுது புலம்பி ஆர்ப்பரித்து அடம் பிடித்த போதெல்லாம்…. கோபப்படாமல் குளிர்முகம் காட்டிய ஆத்ம தோழன். அவனது காலடியில் சரணடைந்து கிடக்கிற இவளது ஆத்மா.
அப்பேர்ப்பட்ட அருமை மனிதனின் இயல்பான பசி. நியாயமான பசி. தன்னையே பரிமாறி, பரவசப்பட வேண்டிய நியாயம்.
ஆனால்…. விரதம்….! சாமியிடம் போட்டிருக்கிற நேர்த்திக்கடன். தவமிருந்து பெற்ற தவமணியின் ஆயுள் வலிமைக்காக, அவள் போட்டிருக்கிற தெய்வக் கடன்.
என்ன செய்ய….?
அவள் உள்ளுக்குள் மருகித் தவித்தாள். மறுக்கவும் முடியாமல், உடன்படவும் முடியாமல் அவள் துடிக்கிற துடிப்பு….
உரசுகிற அவன், யோகுவின் தீ, அடிவயிற்றில் பரவுகிற அவனது வலக்கை. அந்தக் கையின் நடுக்கம். தகிப்பு. பரவுகிற கை, மலைப் பாம்பாக மேல் ஏறுகிறது. திரும்பினாள்.
திடுக்கிட்டான் யோகு. அவள் கண்ணிமைகளில் முத்துப் புல்லாக்காகத் தொங்குகிற கண்ணீர்த்துளி. “என்ன…?”
“நம்ம புள்ளைக்காக நான் போட்ட வெரதம் தெரியாதா… ஒங்களுக்கு?”
“ச்சேய்….” வெறுப்போடு விலகினான்.
4
யோகுவுக்குள் எரிமலைத் தகிப்பு. வெளிப்படுத்த முடியாத ஊமைக் குமுறல். எரித்துவிடுவதைப் போல சரசுவைப் பார்த்து விட்டு….. வெளியே திண்ணைக்குப் போய்படுத்துவிட்டான்.
துண்டை விரித்துப் படுத்துவிட்டான். விஷப்பனி, நாய் கூட தெருவில் படுக்க முடியாத பனி. திண்ணைச் சிமிண்டு, துண்டை மீறிக்கொண்டு சுரீரென்று குளிர்ந்தது. உடல் நடுங்கியதிர்ந்தது. ஊதல் காற்று வேறு.
எலும்புகளும் உறைந்துவிடுகிற கூதல். நரம்புகள் விறைப்பது போல ஒரு பிரமை. கன்னக்கதுப்புகளிலும் செவிமடல்களிலும் பனியின் உக்கிரத் தீண்டல். எதையும் உணர முடியாத கோப உக்கிரம். மனசு முழுக்க கசந்து வந்தது. அடிமனசு வரைக்கும் கசப்பின் பரவல்.
“ச்சேய்…” என்று வெறுத்துக் கொண்டான். சரசு மீதா… தன் மீதா… இருவரையும் கட்டுப்படுத்தி கசப்பைத் திணிக்கிற சூழல் மீதா? எதன் மீது வெறுப்பு? அவனுக்கே புரியவில்லை.
தினம் தினம் விரதம்….நிமிஷத்திற்கு நிமிஷம் சாமி கும்பிடல்… வீட்டுச்சுவர் முழுக்க சாமி போட்டோக்கள், திருப்பதியிலிருந்து உள்ளூர்ச்சாமி போட்டோக்கள் வரை வீட்டுச்சுவரே தெரியாது. பூராவும் கண்ணாடியடைப்பு போட்ட கடவுள் படங்கள்.
சரசு… குமரி மாதிரியிருக்கிறாள். ஆனால் நடைமுறையில் ஆசார அனுஷ்டானம். சாமியிரிணி மாதிரி. காவி உடுத்தாத குறை ஒன்று தான்.
அப்பவும் இப்படியா? ச்சேய்!
…கல்யாணமான வருஷம். ஏழெட்டு மாதம் தான் ஆகியிருந்தது.
அப்போது நெருங்கிய உறவுக்காரன் ஒருத்தன், தன் குழந்தைக்கு மொட்டையடித்து, காது குத்த ஏற்பாடு. தூரம் தொலைவிலுள்ள அருஞ்சுனைகாத்த அய்யனார் கோவில். திருச்செந்தூர் பக்கம். அம்மன் புரம் அருகில். வேன் பிடித்துப் பயணம். யோகுவையும் கூப்பிட்டான். சரசுவிடம் கேட்டான்.
“போவமா….?”
“நானுமா?”
“ம்”
“நான் வந்து என்ன செய்யப் போறேன்?”
“சும்மா போவம். போயி சாமி கும்பிடு…”
“சாமி மனசுக்குள்ளேயே இருந்தா போதும். நாலு பேரு பாக்க கும்பிடணும்னு தேவையில்லை.”
“சாமி கும்பிடறது… கேவலமா?”
“கேவலமில்ல… ஆனா அதுக்காக…. ஊரறியக் கும்பிடணுமா? பெருமைக்கா? நானும் கும்புடுதேன்னு காட்டிக்கிடவா?’
“அட…. அதுதான் வேண்டாம். சும்மா சுற்றுலா மாதிரி இருக்கட்டுமே, கோயிலுக்குப் போயிட்டு… ஒறவுக்காரனுக்கு மொய் செய்ஞ்சுட்டு வந்துருவமே…”
“அப்பச் சரி…”
பெரிய பெரிய மருதமரங்கள். ரொம்ப ரொம்ப உயரம். பந்தல் போட்ட மாதிரி மரங்களின் அடர்த்தி. வெயில் தரையில் படாது. செம் மணல். ஜில்லென்று குளிர்ச்சியாக இருக்கும். அருஞ்சுனை வேறு. குளம், படிக்கட்டுகள் உள்ள குளம். ஆனால் எந்நேரமும் சுனை யிலிருந்து வரும் புதுத்தண்ணீர் மாதிரி…. வெதுவெதுப்பு. குளிக்க குளிக்க ஆசையாக இருக்கும்.
பெண்களெல்லாம் குளித்துவிட்டு ஈரச்சேலையோடு கோயிலை மூன்று முறை சுற்றி வந்தனர். ஆனால் சரசு போகவில்லை. குளித்து விட்டுத் துணி மாற்ற வேனுக்குள் போய்விட்டாள்.
பகல், மணி ஒன்றரையாகிவிட்டது. பூசாரி, பூஜையைத் தொடங்கினார். மணி அதிர்ந்தது. காடெல்லாம் மணியின் வெண்கல நாதம்.
பெண்கள் பக்தி பூர்வமாகக் கும்பிட்டனர். அய்யனாரைத் தரிசித்தனர். பரவசப்பட்டனர். நெக்குருகிக் கசிந்தனர். சொந்த துன்பங்களைச் சொல்லி சொல்லி மனசுக்குள் ஆறுதலைத் தேடினர்.
“ஆளோடு ஆளுகளாச் சேர்ந்து நீயும் கும்பிடு. ஒதுங்கி நின்னா… ஒன்னை ஒரு மாதிரி நெனைக்கப் போறாக….” என்று சரசுவிடம் கிசு கிசுத்தான்.
அவள் கூச்சப்பட்டாள். பிணங்கினாள். ரகசியமாக மறுத்தாள். “சும்மாயிருங்க” என்று பதற்றத்துடன் கிசுகிசுத்தாள்.
“ஆனால்…. அதற்குள் ஒரு பெண்-”
“சரசு…. இங்கே வா …. சாமி கும்பிடு.”
அதற்குமேல் மறுக்க முடியவில்லை. கூட்டத்தோடு கூட்டமாய் நின்று கொண்டாள். கையைக் குவித்திருக்காளா.. இல்லையா என்று தெரியவில்லை. தர்மசங்கடமாய் நெளிந்தாள். வயிற்றுக்கு நேர் கைகளைக் கோத்திருந்தாள். சும்மா நின்றாள்.
கும்பிடுகிற மாதிரியும் தோன்றும், இல்லாதமாதிரியும் தோன்றும் கூச்சப்பட்டு நெளிகிற அவளையே பார்த்தான் யோகு குறும்பாகச் சிரித்தான். அவனது சிரிப்பில் வாடிப் போன அவள், கோபப்பட முடியாமல் திணறிய சரசு. கண்களில் மட்டும் தீ.
“ச்சேய்… உங்க பேச்சைக் கேட்டு வந்தது தவறாப் போச்சு” என்று சொல்கிற கண்கள்.
அப்படி இருந்தவள் தானே….. சரசு.
இப்போது –
சாமியிரிணி மாதிரியாகிவிட்டாளே… காவி உடுத்தாத துறவி மாதிரி மாறிப்போனாளே…..
நாளுக்கொரு விரதம்….. கிழமைக்கொரு பூஜையென்று…. வீட்டையே கோயில்மடம் மாதிரியாக்கி விட்டாளே… இப்படி மாறிப் போனதை நினைக்கிற போது…. யோகுவுக்குக் கோபம் குறைந்தது, கோபத்தின் உக்கிரம் தணிந்தது
அவள் ஆசைப்பட்டா மாறினாள்? மாறவேண்டும் என்று திட்டமிட்டா மாறினாள்? அவமானமும் துன்பமும் இயலாமையும் சேர்ந்து, அவள் ஆத்மாவை வதைத்த கொடுமையாலல்லவா… இப்படி மாறினாள் ?
அதை நினைக்க நினைக்க… யோகுவுக்குப் பரிதாபமாக இருந்தது.
5
திருமணமாகி இரண்டு வருஷம் ஆகிவிட்டது. அச்சு குலையாம லிருந்தாள், சரசு கல்மாவு போட்டு தீட்டிய வீச்சரிவாள் மாதிரி யிருந்தாள், புதுசு மங்காமல். வாட்டமில்லை. காறித்துப்பவில்லை. ஓங்கரிக்கவில்லை. ஊண் ஒவ்வாமலில்லை.
அதை அவனோ அவளோ பொருட்படுத்தியதேயில்லை. நல்லது பொல்லது வீடுகளுக்குப் போகிற போது, நெருக்கமான உறவுக்காரப் பெண்கள் காதுக்குள் சத்தமாய் கிசுகிசுப்பார்கள்.
“கஞ்சி தண்ணி தள்ளலியா?” என்று உள் அர்த்தம் பொதிந்து கேட்பார்கள். மனக்காயம் எதுவுமில்லாமல் “இன்னுமில்லை” என்று வெட்கச் சிணுங்கலாக முணுமுணுப்பாள், சரசு.
“இருக்கட்டும்…. இருக்கட்டும், இப்பத்தானே கல்யாணமாச்சு. சின்னஞ்சிறிசுக… சந்தோஷமா இருங்க. காலமா போயிருச்சு? எப்ப வேணும்னாலும் பெத்துக்கலாம் என்று ஆறுதலாகவும், ஆசீர்வாதமாகவும் கூறுவார்கள்.
யோகேந்திரனும் சரசுவும் ஜோடி சேர்ந்த முதல் வருஷம், ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தார்கள். அந்தத் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்த செய்தி வந்தபோது –
சரசுக்குள் ஒரு சூன்யம். சட்டென்று இருதயமே கழன்ற மாதிரியோர் உணர்வு. எதையோ இழந்து போன மாதிரி ஒரு வெறுமை. ஏன்… தன் வயிற்றில் மட்டும் ஒன்றும் தட்டுப்படவில்லை?
நெருஞ்சி முள்ளாய் ஒரு குத்தல். உள்ளிறங்குகிற வலி. வலியின் அதிர்வு திரேகம் பூராவும் படர்கிற மாதிரி ஒரு வேதனை.
யோகுவிடம் புலம்புவாள்.
“ஏங்க…. நான் மலடியாகத்தான் இருப்பேனா?”
“அதெல்லாம் இருக்காது… கல்யாணமாயி பதினைஞ்சு வருஷம் கழிச்சுக்கூட கொழந்தை பெத்தவுக இருக்காக. நீ ஏன் வீணா மனசைப் புண்ணாக்கிக்கிடுதே?”
“இல்லைங்க…… எனக்குப் பயமாயிருக்கு.”
“நீ ஏன் பயப்படணும். வம்சம் தழைக்கணும்ணு நான் இல்லே கவலைப்படணும்? நச்சரிக்கணும்? நானே சும்மாயிருக்கேன்….”
ஒருக்களித்துப் படுத்திருப்பாள். அவனும்தான். அவன் கை மேல் தலை வைத்திருப்பாள். அலைபாயும் மனசு. ஆறுதல் பெறாமல் அற்றலைகிற மனசு. அவனது கையில் வெதுவெதுப்பான நீரின் ஸ்பரிசம். அதில் முகம் காட்டுகிற அவளது மனக்கலக்கம்.
“ஏய்ய்… இந்தா, ஒனக்கென்ன கிறுக்கா? என்னத்துக்கு இப்ப அழணும்?”
“வம்சம் தழைக்கணும்னு நீங்க கவலைப்பட ஆரம்பிச்சுட்டா…? என் கதி?”
ஒன்னை ஒதுக்கி வைச்சிருவேனா? வேற கல்யாணம் பண்ணிக்கிடுவேனா? அம்புட்டு கல்நெஞ்சா… எனக்கு? ஈரமத்தவனா? ஈரமத்த வம்சம் இருந்தா என்ன, முடிஞ்சா என்ன?
“இல்லைங்க -”
அவளைப் பேசவிடமாட்டான். உதடுகளை உதடுகளால் அடைத்துக் கொள்வான். அள்ளி நெருங்கிக் கொள்வான். பூவின் மிருது. சுடரின் ஒளி. கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீர்ச்சுவடுகளை நாவால் அழிப்பான். விம்மி வெடிக்கும் விசும்பலை தன் திரேகக் கதகதப்புக்குள் அமுக்கி விடுவான்.
ஒவ்வொரு மாதவிலக்கின் போதும்… வீடேதுக்க மயமாகிவிடும். அழுகையும் புலம்பலுமாய்த் தவிப்பாள். வீடெங்கிலும் துக்கநிழல். துயரவாசம் நெஞ்சையடைக்கும். அறுத்துப்போட்ட கீரைத்தண்டாக வாடிக்கிடப்பாள். இவன் சொல்கிற ஆறுதல் வார்த்தைகளெல்லாம் முகமழிந்து காற்றில் பறந்துவிடும்.
உறவுக்காரப் பெண்ணின் வீட்டில் ஒரு நல்ல காரியம் தம்பதி சகித மாய்ப் போயிருந்தனர். சரசுவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள். மறு நாள், பகல் பஸ்ஸில் திரும்புவதாகத் திட்டம்.
யோகுவுக்கு ஒன்று விட்ட தங்கையும் வந்திருந்தாள். தங்கையின் மகள் இரண்டு வயசிருக்கும். கறுத்த குழந்தைகள் தான். குழந்தை என்றாலே லட்சணம்தானே……
அந்தக் குழந்தைக்கு என்ன ஈர்ப்போ… யோகுவிடம் ஒட்டிக் கொண்டது. காலை முதல் அவன் மேல் தான் ஏறிவிளையாடினாள். யோகுவும் அந்த மழலையிடம் ஒரே விளையாட்டுதான். கொஞ்சலும் கும்மாளமும்தான். குழந்தையுடன் விளையாட விளையாட… அவனும் ஒரு குழந்தையாகி… மனமே பூவாகி… ஒளியும் வாசமுமாகி அவன் முகம் பிரகாசமாகி…
சரசுவை சுத்தமாய் ஏறிட்டே பார்க்கவில்லை. ஆனால் சரசு அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள். மனசுக்குள் பிரளயம். அச்ச நடுக்கம். தன் புருஷனே தன்னை விட்டு விலகுவதாய்…. தூரம் தூரமாய் நகர்வதாய்… அவளைத் தொலைத்து விட்டு, மறந்து போன துஷ்யந்தனாய்…
அவளுக்குள் ஏக இருட்டு. கரியரேகைப் பின்னல்கள். பின்னிப் பின்னி முறுக்கேறி, தாறுமாறாகிற நினைவுகள். வன்மமாய்…. வக்ரமாய் நிறம்மாறுகிற உணர்வுகள்.
அவனுடன் பேசவில்லை. சரசு, விறைத்துப்போன முகமாய்த் திரும்பிக் கொண்டாள். யோகுவுக்கு ஒன்றும் புரியவில்லை. என்னத்துக்குக் கோபம் இவளுக்கு?
யோகுவுக்குள் ஒரே திகைப்பு. பஸ்ஸில் வரும் போது, முழுக்க மௌனம். இறுக்கமான மௌனம். மனசு முழுக்க கனத்துப் போகிற மௌனம்.
வீடுவந்துவிட்ட பின்னாலும்…. அதே கோபம், விறைப்பு, மௌன இறுக்கம்.
என்ன என்ன என்று கேட்டு மன்றாடினான். காரணம் தேடி கெஞ்சிக் கூத்தாடினான். காலில் விழாத குறைதான்.
ம்ஹீம்….. அவள் அசைவதாக இல்லை.
இவனும் அயர்ந்து போனான். சலித்துப் போய் முயற்சியைக் கை விட்டபோது – “எப்படியும் போ” என்று ஒதுங்கிய கணத்தில்-
வெடித்துச் சிதறி அழுதாள்….சரசு. அவலச் சோகமாய் கசிந்து, அவன் காலடியில் வழிந்தாள்.
6
அன்றைக்கு-
மேலக்காட்டில் ஆட்டுக்கிடை. செம்மறியாடுகள் உழுதுகிடக்கிற புஞ்சையில் வந்து அடையும். அதன் உடல் வெக்கையும், மூத்திரமும், புழுக்கையும் மண்ணை வளப்படுத்தும். சாண உரம். மண்ணின் உயிரணுக்களை பெருக்கும்.
முன்னிரவுக் காவல் புஞ்சைகாரன்பொறுப்பு. கிடைக்காவல்காரர் அந்திமயங்க வந்துவிட்டார். கம்பளி, சாக்கு, காப்பிச்சட்டி, கம்பு வகையறாக்களோடு.
“தம்பி….. ஆடுகளைப் பார்த்துக்கோ. ஒரு மணிக்கொரு தடவை பேர்வையடி. பன்னெண்டு மணிக்கு மேல் என்னை உசுப்பி விட்டுட்டு, நீ வீட்டுக்குப் போ……”
“ஆட்டும்ண்ணாச்சி.”
“சுத்துலே வெள்ளாமைக் காடுக. கள்ள ஆடுக நைஸா நழுவிப் போய்விழும், கவனமாப் பாத்துக்க.”
“சரிண்ணாச்சி.”
அவர் விரித்துப்படுத்துவிட்டார். உழவுக் கட்டிளைக் காலால் தள்ளி…. தூசி மண்ணில் சாக்கை விரித்து, கம்பளியைத் தலைக்கு அண்டக் கொடுத்து சாய்த்துவிட்டார்.
காடுகளில் அலைந்து மேய்ந்த செம்மறியாடுகள். ஓய்வும் உறக்கமும் அதுகளுக்கு வேண்டும். சில ஆடுகள் சுற்றி நடந்து உலவ, பல ஆடுகள் படுத்துவிட்டன.
ஆடிமாதக் காற்று. நெருஞ்சி பூக்களாய் ஆகாய நட்சத்திரங்கள். பனந்தோப்பில் மயில் சத்தம். கரிச்சான்களின் “கிரீச், கிரீச்” என்கிற வீறிடல். சுகமான இரவின் இதமான இருட்டு.
சில்வண்டுகளின் சத்தம். “ங்ங்ஙீய்ய்ய்” என்கிற இரைச்சல். அவ் வப்போது ஆடுகளின் கத்தல். அதுகளுக்குள் ஏதோ பேசிக்கொள்கிற மாதிரியான மிதமான கத்தல்கள்.
யோகு ஆட்டுக் கம்போடு காலார பொழியில் நடந்தான். ஆடுகளைக் கவனித்துக் கொண்டான். எங்கோ…. பஸ்ஸின் என்ஜின் இரைச்சல். லாரிகளின் “லொட, லொட” சத்தம். ஆலைச் சங்கின் தொலை தூரக் கூவல்.
இவனுக்குள் சோம்பலான நினைவுகள். செத்தவர்களைப் பற்றிய ஞாபகங்கள். சிறு வயசில் கேட்ட பேய்க்கதைகள். உள்ளே வெகு ஆழத்தில் புதைந்து மறைந்து கிடந்த ஞாபகப் பிரதேசங்கள். உயிர் பெற்று மேலெழும்பி வருகிற ராட்சஸப் பயங்கரம்.
இவனுக்குள் இரவுப் பயம். உதறல் எடுக்கிற உள் மனசு. சமாளித்துப் பார்த்தான், நேரம் நகர்ந்தது.
பேர்வையடித்தான். படுத்துக்கிடற ஆடுகளை எழுப்பி விட்டு… மூத்தரம் பெயய அவகாசம் தந்து…. அப்புறம் சற்றுத் தள்ளி அதுகளைப் பத்தி… மடக்கி… படுக்கவைப்பதுதான் பேர்வையடிப்பு. பெயர்வு அடிப்போ? இருக்கலாம்.
ஊருக்குப் பக்கத்தில் தான்… இவனது புஞ்சை இங்கிருந்து பார்த்தால்… கைக்கெட்டும் தூரம் தான் வீடு. அவன் வீட்டைப் பார்த்தான். சின்ன ஜன்னலில் மின்வெளிச்சச் சதுரம்.
“இன்னும் சரசு படுக்கலையோ…”
தேய்பிறை நிலா. பத்து மணிக்கு மேலே மெல்ல வந்து முகம் காட்டுகிற குறை நிலா. நிலா வெளிச்சத்தில் துல்லியமாய்த் தெரிகிற ஊர். தன் வீட்டின், புகைக்கூண்டு மங்கலாகத் தெரிகிறது.
ஊர் அடங்கிவிட்டது. நாய்ச்சத்தம்கூட இல்லாத அசுர அமைதி. அச்சுறுத்தலான அமைதி.
ஊர் அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒரு குரல். குடுகுடுப்பைச் சத்தம் போன்ற ஒரு சத்தம்.
சாமக் கோடாங்கியோ…?
கம்பளத்தார் இப்படி சாமக்காட்டில் வருவார்கள். பூட்டிக் கிடக்கிற வீடுகளைப் பார்த்து குறிசொல்வது போல ராகப்பாட்டோடு சத்தம் கொடுப்பார்கள்.
கம்பளத்தார்களுக்கு அருள்நாக்கு. சொல்லும் குறி பலிக்கும் என்று கிராமத்து ஜனங்களுக்கு ஒரு நம்பிக்கை. பகலில் வீடுவீடாக வருவார்கள். பெண்கள் தானியமோ, துட்டோ… படி தருவார்கள்.
அவர் சத்தத்தைக் கவனித்தான். கூர்ந்து கேட்டான். வார்த்தைகள் சிந்திச் சிதறினாலும்… சொச்சமிச்சமாகக் கேட்டது.
“மசங்க வேண்டாம், மருகவேண்டாம்
மழலை வரும் தாயீ…
சாமியை நம்பணும், சந்தானம் வந்து சேரும்
சஞ்சலம் வேண்டாம் தாயீ…
காலம் சேர்ந்து வரும், நேரம் கூடி வரும்
கடவுளை வணங்கு தாயீ…
கலக்கம் வேண்டாம், கையெடுத்துக் கும்பிடு
ஐக்கம்மா சொல்றா… தாயீ…”
இந்தச் சத்தம்…. தன் வீட்டுக்கு அருகில் கேட்பது போல ஓர் உணர்வு. மனசுக்கள் தத்தளிப்பு. சந்தோஷக் கொந்தளிப்பு. சந்தோஷக் கொந்தளிப்பு.
யோகு நாத்திகனுமில்லை. ஆத்திகனுமில்லை. கடவுள் இருக்கு. இல்லை என்கிற தர்க்க நியாயம் எல்லாம் தெரியாது, அவனுக்கு.
காடே கதியென்று கிடக்கிற சம்சாரி. பத்துவரை படித்துவிட்டு மண்ணை நம்பிப் பாடுபடுகிறவன். வியர்வையையும் பூமியையும் நேசிக்கிறவன்.
சாமியே கதியென்றும் கிடக்கமாட்டான். இல்லவே இல்லை என்று கட்சி கட்டி சாதிக்கவும் மாட்டான். ஆனால்…. இந்தக் குறியை நம்புவதற்கு ரொம்ப ஆசைப்பட்டான். இந்தக் குறி தன் வீட்டுக்கான அருள்வாக்காக இருக்க வேண்டுமே என்று ஆசைப்பட்டான்.
காவல்காரரிடம் கிடையை ஒப்படைத்துவிட்டு…. ஆசையும், ஆவல் பரபரப்புமாய் வீடு வந்தான்.
சரசு விழித்திருந்தாள். இவனைக் கண்டதும் ஓடிவந்து சேர்ந்து கட்டிக் கொண்டாள். ஆவிசேரப் பின்னிக் கொண்டு…. கோவென்று கதறியழுதாள். கேவிக் கேவியழுதாள்.
“நான் மலடியில்லை… மலடியில்லே… ஜக்கம்மா சொல்லிச்சு… நான் மலடியில்லே… ”என்று ஆவேச மகிழ்ச்சியில் அழுது கரைந்தாள். ஆனந்தக் கூத்தாடினாள். கையெடுத்து சாமி கும்பிடவே கூச்சப்பட்ட சரசு, அதற்குப் பிறகு தலைகீழாக மாறிப் போனாள். அனுதினமும் பூஜைதான். வீடு முழுக்க சாமி படங்கள். பெரிய பெரிய கண்ணாடி போட்ட படங்கள். எந்நேரமும் பத்திவாசம், சாம்பிராணிப் புகையின் நறுமணம். கற்பூரச் சுடர்கள்.
7
சங்கரன் கோவில் கமிஷன்கடை திண்ணையில் உட்கார்ந் திருந்தான் யோகு. இவனது புஞ்சைகளில் விளைந்திருந்த மிளகாய் வற்றல் விற்பனைக்கு வந்திருக்கிறது. டக்கரில் கொண்டு வந்து இறக்கினார் கள்.
கடைக்குள் வரிசைக் குவியல்களாக வற்றல் அம்பாரம், சிவப்புக் குன்றுகளாக, ரத்தமலைகள்.
குவியல்களுக்கிடையே தாட்டுக் கட்டுகள் எல்லைக் கோடுகளாக இவனது அம்பாரத்தில் பார்த்தான்.
பெரிய குமி. குமியின் உச்சந்தலையில் ஒரு மூங்கில் குச்சியில் செருகிய துண்டுப் பேப்பர்.
யோகேந்திரன், மிளகாய் வற்றல். தாட்டு 6 சாக்கு 2 என்று எழுதப்பட்ட விவரம்.
இரண்டு மணிக்குத்தான் மார்க்கெட் வரும். விலை திகையும். எடை நடக்கும். வற்றல் பணமாகும்.
கமிஷன் கடைக்கு வெளிப்புறத் திண்ணை. பெரிய திண்ணை. சம்சாரிகள் வெள்ளையும் சொள்ளையுமாய்… எண்ணெய் வழியும் முகங்களோடு உட்கார்ந்திருந்தனர்.
நாளிதழ் கிடந்தது. முதல்பக்கத்தில் பிள்ளையாருக்கு பாலூட்டுகிற ஒரு கிராமத்துப் பெண்ணின் புகைப்படம். இன்றைய சூடான செய்தியே…. பால் குடிக்கிற பிள்ளையார்தான்.
அற்புதம் குறித்த வியப்பும் மறுப்புமாக நடந்த தர்க்கம். அதில் ஒருத்தர் விபரமானவர் போலத் தோற்றமளித்தார். அவர்கையில் ஒரு நாளிதழ். பிரபலமில்லாத நாளிதழ். அதை விரித்துக் காட்டினார். அதிலும் ஒரு படம்.
அறிவியல் இயக்க விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் காந்தி சிலைக்கு பாலூட்டிக்கொண்டிருந்தார். “உலர்ந்த சிலை பாலை உறிஞ்சுவது தெய்வீக அற்புதமல்ல. இயல்பானதுதான்” என்று நிரூபித்துக் கொண்டிருக்கிற விஞ்ஞானி. அவரைப்பற்றியும், அது பற்றிய செய்தியையும் பேசுகிற அந்த ஆள்.
அவர் பேசுவதையே உன்னிப்பாகக் கேட்டான், யோகு. சாமியை நம்புகிற மனித மனங்களைக் காயப்படுத்தி விடக்கூடாதே என்கிற நாகரீகக் கனிவோடு பேசுகிற அந்த ஆள். வாழ்க்கையைப் பேசுகிறார். நடப்புகளை இயல்பாகப் பேசுகிறார். இனிமையான பேச்சு. நல்ல மனசின் அன்பான பேச்சு.
யோகுவுக்கு அந்த ஆள்மீது நம்பிக்கை வந்தது. நம்பிக்கை வசப்பட்ட யோகுவுக்குள் வந்த சரசு. தீவிரபக்தையாக மாறிய பின்பு – இரண்டு வருஷம் கழித்து விட்ட பிறகும் – மாதா மாதம் விலக்காகிற சரசு.
பக்தி என்றால் சாதாரண பக்தியில்லை. வெறிபிடித்த பக்தி. சாமியை ஒரு வரி கூட கேலி செய்ய அனுமதிக்க மாட்டாள். சண்டைக்கு வருவாள். தலைவலி, காய்ச்சலுக்குக் கூட மருந்து சாப்பிட மாட்டாள். திருநீறும், தீர்த்தமும்தான் மருந்து.
போகாத கோயிலில்லை. செய்யாத பூஜையில்லை. பார்க்காத ஜோஸ்யரில்லை. சொல்லாத மந்திரமில்லை. யாரோ ஒரு வேற்றுப் பெண்ணின் மன நிலையைச் சொல்வது போல…. யோகு அவரிடம் சொன்னான்.
“பேய்க்கும் பாரு, நோய்க்கும் பாருன்னுதான் பெரியாளுக சொல்றாக. அவுக சாமிகளையும் கும்புடட்டும், ஆஸ்பத்திரியிலேயும் வைத்தியம் பாக்கட்டும். எதனாலே காரியம் ஆனாலும் சரி… குழந்தை பெறந்துட்டா… நல்லது தானே?” என்று தீர்வு சொன்னார். அந்த சாமான்ய மனிதர். அசாதாரணமான தீர்வு. தீர்வுக்கான யுக்திகளையும் கூடச் சொன்னார். அவர் யுக்திப்படியே –
சரசுவை ஒரு சாமியாரிடம் அழைத்துப் போனான். சாமியார் சாந்த சொரூபி. காவியும் தாடியுமாக ஞானப் பழமாயிருந்தார். பக்திபூர்வமாக பவ்யமாக வணங்கி நின்ற சரசுவைப் பரிவும் கனிவுமாக நோக்கினார்.
புராணக்கதைகள்லே வர்ற மாதிரி பகவான் கிரீடமும் ஒளி வட்டமுமாய் இப்போ காட்சியளிக்கமாட்டாரு. இப்பவும் காட்சி யளிக்காரு. ரூபவித்யாசங்களோட அவதாரம் எடுக்காரு….
அவரது கனிந்த உதடுகளின் அலுங்காத அசைவுகள். கருணையே மனசாக – மனசே மொழியாக – மொழியே – ஓர் உணர்வாக அவளுள் ஒளிபரப்பியது. சரசு மெய்மறந்து, ஆத்ம சரணமாகி போயிருந்தாள்.
“உயிர்களைப் படைக்கிற பெற்றோர் கடவுளோட ரூபங்கள் தான். கல்விக் கண்ணைத் திறந்து ஞான வாசலை அகலத் திறந்துவிடுகிற ஆசான்கள். ஆசிரியர்கள் ஆண்டவனோட அவதாரம் தான். வந்த நோய்களுக்கு வைத்தியம் செய்து உயிரைக் காப்பாற்றுகிற டாக்டர்களும் தெய்வ ரூபங்கள்தாம். கடவுள் வெவ்வேறு அவதாரங்களில் வந்து நமக்குள் உலவி லீலைகள் செய்கிறார். நாம கண்டுக்கிடாம ஒதுங்கிட்டு கண்மூடித்தனமா இருந்தா… நட்டம் நமக்குத்தான், அந்த நாயகனுக்கில்லே. ஆண்டவன், ஆத்மாவுக்குத் தான் வைத்தியர். தேகத்துக்கில்லை. தேகத்துக்கத் தேவையான மாற்றத்தை நாமதான் உருவாக்கிக்கணும். தேகத்துக்குமான வைத்தியரா ஆண்டவனை நினைக்கிறது, பாவம். சாம்பாரை கொதிக்கவைக்கறதுக்கு சந்தனக்கட்டையைப் பயன்படுத்தலாமா?’
சாமியார் வாக்குக்கு அப்பீல் உண்டா… சரசுவிடம்?
அதற்குப் பிறகுதான் சரசு மருத்துவமனைக்கு வரச் சம்மதித்தாள். பரிசோதனை நடந்தது. கருப்பைக்கான பாதையில் சதை வளர்ச்சி இருப்பதையும், ஆபரேஷன் இல்லாமலேயே ஊசி, மாத்திரை மூலமாகவே அந்தச் சதையைக் கரைத்துவிட முடியும் என்பதையும் டாக்டர் சொன்னார்.
வைத்தியம் தொடர்ந்தது. விரதம், பூஜையும் தொடர்ந்திருந்தன. மிகக்கூடுதலான நம்பிக்கை ஏற்பட.. சரசுவின் ஆசார அனுஷ்டம் மேலும் இறுகியது. அடர்ந்தது. வெறிமிக்க அடர்த்தி.
மாதவிலக்கு நின்றது. சோறு ஒவ்வவில்லை. அறுத்துப் போட்ட கொடியாகத் துவண்டாள். காறிக் காறித்துப்பினாள். ஓங்கரித்தாள். சரசுவின் சந்தோஷத்துக்கு அளவேயில்லை.
தவமணி வந்து பிறந்தான். தவமிருந்து பிறந்தவன் என்பதாலோ… என்னவோ, பூக்களின் அழகுகளையெல்லாம் அள்ளிக்கலந்த பேரழகில் ஜொலித்தான். ஆனால்-
அவன் பிறப்பதற்கு முன்பே…. ஒரு புயலை உருவாக்கிவிட்டான்.
8
நிறைமாச கர்ப்பத்தில், தை மாச மிளகாய்ச் செடியாக காயும் பூவுமாக தளதளவென்றிருந்தாள், சரசு. முகத்தில் ஒரு அமானுஷ்ய பொலிவு. சுடரின் ஒளிர்வு. குளிர்வான ஒளிர்வு.
வயிறு, மிகவும் சின்ன வயிறாகத் தோன்றியது. நிறைமாசம் போலவே தெரியவில்லை. ஏதோ ஆறுமாசம் போலத் தோன்றியது.
“ஏன் இப்படி”
குழந்தைத்தனமாக நச்சரிக்கிற யோகு. சாந்தமாக ஒரு புன்னகை, சரசு முகத்தில் பூக்கும்.
“எனக்கென்ன தெரியும்?” என்றாள். ஆனால் அவளுக்குத் தெரியும் என்பது புன்னகையின் நாணப் பூடகத்தில் புதைந்திருந்தது.
“சொல்லு…” அறிந்துகொள்ள ஆசைப்படுகிற ஒரு மழலை. மீசை முளைத்த மழலை.
“ஆம்பளப் புள்ளையாயிருந்தா… வவுறு சிறுசா இருக்குமாம். பெரியாளுக சொல்றாக.”
“அடி சக்கை.”
அவளைச் சுற்றிச்சுற்றிக் குதித்து வந்தான்.
“அய்ய்…அய்ய்க்…அய்ய்… அய்ய்க்”
அவனது உல்லாசக் கூவல்களில் மனசின் விசிலடிப்பு. பூவெடித்து இதழ் விரித்த மாதிரி ஒளியும் வாசமுமாய் அவன் முகம்.
அவனது ஆனந்தக் கூத்தாட்டத்தில் நிறைந்து ததும்புகிற சரசு. அவளுக்குள் மெல்லிய பயம். அடி மனசுக்குள் அவ்வப்போது எறும்புக்கடியாகத் தோன்றுகிற வலி…. சில சமயம் தேள்கடியாக ரணமாகிற உணர்வு. காதில் விழுகிற பிரசவச் செய்திகள் சிசேரியன் களாகவே நடந்து கொண்டிருக்கிற பெரும்பான்மையான பிரவசங்கள்.
இவளுக்குத் தலைப்பிரவசம், பிரவசம் குறித்த பய உணர்வு. ஆயுதக் கேஸாகிவிடுமோ… பெரிய உயிரைக் காப்பாற்றுகிற விளிம்பில், சின்ன உயிர் பறிபோய்விடுமோ….
ஐயய்யோ… அதுதானே அவளுக்கு உயிர். ஆத்மா. ஜீவாதாரம். ஒரு நேர்த்திக்கடன் போடணும். குலம் தழைக்க குலதெய்வத்திடம் வேண்டணும்னா…. யோகுவிடம் கேட்கணும். நேர்த்திக் கடன் நிறைவேற்ற… அவனும் வரணுமே… அவன் இல்லாமல் எப்படி?
அவனிடம் எப்படிக் கேட்க? கேட்டால்… பயப்படுவானே…பதறித் துடிப்பானே…மெல்லத் தொடங்கணும். பேச்சைத் தொடங்க, இதுதான் தருணம். கனிந்த தருணம்.
“ஏங்க?”
”ம்”
“நல்லபடியாக பெத்தெடுத்து, நானும் புள்ளையுமா வீடு வந்து சேரணுமில்லையா?”
சட்டென்று வாடிய அவனது முகம், தீக்குள் விழுந்த மொட்டாக மகிழ்ச்சி போன இடம் மாயமாயிற்று. வேதனைத் துடிப்பில் துடிக்கிற கண்ணிமைகள், வெட்டுப்பட்ட பல்லிவாலாக.
“ஏன் இப்படிக் கேக்கே?”
“பதறாதீங்க. நெருப்புன்னா வாய் வெந்தாபோகும்?”
“அப்படியில்லை….. இருந்தாலும்…”
“இருங்க. நம்ம குலதெய்வத்துக்கு ஒரு நேர்த்திக்கடன் போடலாம்னு…. ஒரு நெனைப்பு.”
“என்னன்னு… நேந்துக்கிடப்போறே?”
“நல்லபடியாக பிரசவம் முடிஞ்சு… தாயும்புள்ளயும் ஆயுசு பலத்தோட வீடு வந்துட்டா….’
“ம்?”
“புள்ளையோட முதல் பிறந்தநாள் அன்னைக்கு குலதெய்வம் சந்நிதிக்கு வந்திருந்து… மொட்டை போடுதோம்னு.”
“நேர்த்திக்கடன் போடணுமா?”
“போட்டா… நல்லது?”
“பாரத்தை சாமிக்கிட்டே ஒப்படைச்சிட்டு… பயமில்லாம இருக்கலாம். பயம் இல்லாட்டா… மனசுலே ஒரு தெம்பு வரும். நம்பிக்கை வரும். நம்பிக்கையோட பலத்துலே… மலைகூட பனியாப் போயிரும்.”
யோகுவுக்கு இது சரியாகத் தெரிந்தது. மனவியல் நுட்பத்தின்படி இது நல்லதுதான் என்று தோன்றியது. சரியென்றான்.
“ஒனக்கு எது சரின்னுபடுதோ…. அப்படியே செய்….” “இன்னைக்கு வெள்ளிக்கெழமைதானே?”
“ம்.”
“அப்ப… இப்பவே செய்ஞ்சிருவம்….”
ஒரு வெள்ளத் துணியை எடுத்தாள். முனை முறியாத மஞ்சள் வைத்து முடிச்சுப் போட்டாள். மூன்று முடிச்சு, உள்ளங்கையில் வைத்துக் கொண்டு சாமி படத்தின் முன் போய் நின்றாள்.
சுவரில்…
முன்பெல்லாம் இவர்களது கல்யாணப்போட்டோ ஒன்று மட்டும் தான் இருக்கும். இப்போது சுவர் முழுக்க போட்டோக்கள். தெய்வப் படங்கள். எல்லாத் தெய்வங்களின் படங்கள்.
குலதெய்வம் முன்பு நின்றாள்.
கையெடுத்து வணங்கினாள். கையில் மனசின் நடுக்க அதிர்வு, கண்களை இறுக மூடினாள், இமை ரோமங்களில் ஈரக்கனம்.
இவன் மனைவியின் முகத்தில் பரவும் உணர்வுகளையே கவனித்தான். சரணடையும் ஆத்மாவே முகத்தில் வந்து நின்ற மாதிரி ஒரு நடுக்கம், உணர்வுக்கிரம். அசையும் சிறு உதடுகள்.
அந்த நேர்த்திக்கடனே… அவர்கள் வாழ்வில் ஒரு பெரும்புயலாக வீசி…. சர்வநாசம் செய்யும் என்று நினைக்கவேயில்லை… யோகு.
9
சாமக்காட்டில் யோகுவுக்கு முழிப்புத் தட்டியது. வீட்டுக்குள் தவமணியின் உறக்கச்சடவான சிணுங்கல். தொட்டிலை நனைத்து விட்டானே… அந்த ஈரச் சிலிர்ப்பில் அழுகிறானே… உயிரில் கலந்துவிட்ட உயிரின் சிறு சலனம், இவளை உசுப்பி விட்டுவிட்டது.
சரசு எழுகிற சத்தம். மகனைத் தூக்கிக் கொண்டு “ரோ…ரே….ரோ…. என்னடா கண்ணு… ஒன்னுக்கிருந் திட் டீயா…? வாடா ராசா… வா” என்று கொஞ்சலாய் ராகமிடுகிற சத்தம்.
ஆசுவாசப்பட்டான். யோகு, மார்கழிப் பனி விஷமாய்த் தாக்குகிற பனியின் உக்கிரம். வெறும் துண்டை விரித்துப் படுத்த ஞாபகம், சரசுவின் மீது கொண்ட கோபத்தில்.
“இந்தப் பனியிலா… ஒறங்கிட்டோம்” என்று யோசித்த போது தான் கவனித்தான். தலையணை வைக்கப்பட்டிருந்தது, தலைக்கு. கனத்த கம்பளி தன் மேல் மூடப்பட்டருந்தது.
சரசுவை நினைத்துச் சிரித்துக் கொண்டான். பக்திப் பிடிவாத்தில் கோபமாய்ச் சீறிய சரசு, தொட்டு உரசியவுடன் முத்துமுத்தாய்க் கண்ணீர் வடித்த சரசு, கண்ணீரிலேயே கோபத்தையும், வேதனையையும் உஷ்ணமாய் உணர்த்திய சரசு.
இவனும் கோபித்துக் கொண்டு வெளியே வந்து கொட்டும் பனியில் வெற்றுடம்போடு படுத்தவுடன்-
உள்ளிருந்து வெடித்த விசும்பல் சத்தம்.
அதெல்லாம்… கோபத் தளதளப்பிற்கு அடியில், ஈரமனசின் நீரோட்டம் ஓடுவதற்கான அறிகுறி. அதுதான் சரசு.
அதனால்தான்…. உறக்கம் கலையாமல் தலையணையைத் தலைக்கடியில் செருகியிருக்கிறாள். கம்பளியை மூடியிருக்கிறாள்.
கம்பளியே பனியில் ‘தொப், தொப்’பென்று நனைந்து விட்டது. ஈரச்சிலிர்ப்பு. தலையணையும் தண்ணீர் தெளித்த மாதிரி சொத சொதப்பாகிவிட்டது.
இனியும்….. பனியில் படுத்திருக்க முடியுமா? கஷ்டம் தான். உள்ளே போகக் கதவைத் தட்டினால்….. சரசு சந்தேகப்படுவாள். தான் உன் மத்தம் கொண்டு மூர்க்கமாய் பிரவேசிப்பதாகப் பதறுவாள். பாவம்… சரசு.
இவனுள் ஓடுகிற நீரோட்ட மனசின் ஈரம் ஆத்மதோழியின் மன அவஸ்தையை உணர்ந்து இவன் தவித்தான். ஆனாலும்….
பனியில் படுத்திருக்க முடியுமா? நாய்கூட படுக்க முடியாத பனி, உடம்பின் புல்லரிப்பை அலை அலையாக எழுப்புகிற பனி.
கதவு திறக்கப்படுகிற சத்தம்.
“ஏங்க.”
தொட்டு உசுப்பினாள்.
“ம்.”
“முழிச்சுத்தான் இருக்கீகளா?”
“பய அழுதானா? அந்தச் சத்தத்துலே முழிச்சிட்டேன்.”
“அப்ப… கட்டைதான் வெளியே படுத்திருக்கு. உசுர் பூராவும் தவமணி மேலதான். ம்?”
“ஆமா. அதுலே என்ன தவறு? சரி… இப்ப எதுக்கு நீ வெளியே வந்தே?”
“நீங்க பனியிலே கெடந்தா… எப்படி? எம் மனசு இரும்புலே அடிச்ச அரிவாளா? ஈரமில்லாம கிடக்க முடியுமா?”
“சரி..சரி.. இரும்பு மனசுக்காரின்னு யாரு சொன்னது? இரும்புப் பக்திக்காரின்னுதான் சொன்னேன்.”
“எனக்காகவா வெரதம் இருக்கேன்? நம்ம புள்ளைக்காகத் தானே….?”
“ரைட், ரைட் பொலம்பாதே, இப்ப என்ன…. வம்பு தும்பு பண்ணாம நான் உள்ளே வந்து படுக்கணும். அம்புட்டுதானே?”
“ஆமா, ராசா…!”
“உத்தரவு ராணி.’
சமனப்பட்ட சந்தோஷ மனசின் பூக்களின் வெடிப்பாக அவளது சிரிப்பு. கலகலக்கிற சரசுவின் மனசு, குழந்தையின் குதூகலத்தோடு இவனை ஒட்டி உரசிக் கொண்டு நடக்கிற சரசு. அவள் தேகக் கதகதப் பான ஸ்பரிசத்தில் உன்மத்தம் கொள்கிற மனசைக் கட்டுப்படுத்திக் கொண்டான்;
கதவைப்பூட்டினாள். விடிவிளக்கின் மங்கலான பச்சை நிற வெள்ளம். தொட்டிலில் பார்த்தாள். உறங்காத உணர்வுகளுடன் உறங்குகிற தவமணி. இன்னும் சப்பிக்கொண்டிருக்கிற சின்ன உதடுகளின் மெல்லிய சலனம். உதட்டின் ஓரத்தில் அமிர்தப் பாலின் துளிச்சுவடு.
மேல்துண்டால் அதைத் துடைத்து விட்டான். தொட்டிலுக்குப் பக் கத்தில் விரித்துக் கிடந்த பாயில் படுக்கப்போனான் யோகு.
“கட்டில்லே படுங்க.”
“ஏன்?”
“சிமிண்டுத்தரை ஜில்லுன்னு, குளுருது”.
“நீ மட்டும்…?”
“புள்ள முழிச்சா… நானும் முழிக்கணுமே. அதுக்குத்தான் நான் கீழே படுத்திருக்கேன்…”
இரும்புக்கட்டிலில் துணிவிரிப்பு. தலையணை. நீட்டி நிமிர்ந்து படுத்தான். பனியில் நனைந்துகிடந்தற்கு மாறாக.. துணி விரிப்பின் கத கதப்பு. வித்தியாசத்தை உணர்ந்த மனசின் சுகலயிப்பு.
பக்கத்தில் வந்து உட்கார்ந்த சரசு. அவனது வயிற்றில் உள்ளங் கையை வைத்து… ரோமங்களுக்குள் விளையாடுகிற சரசு. நெஞ்சோடு ரோமங்களுக்குள் அவளது கை. அதன் மீது நாடியைப் பதித்து… இவன் முகத்துக்குப் பக்கமாக அவள் முகம். கண்ணுக்குள் கண்ணாகப் பார்க்கிற பார்வையின் கனிவு, குழைவு.
ஏதோ கெஞ்சிக் கேட்க முயல்கிற அவளின் யத்தனிப்பு. சரசு சாகசம்.
“என்னம்மா…?” மனசின் குழைவோடு கேட்கிற யோகு.
“ஒண்ணுமில்லே…”
“மனசுல இருக்குறதைக் கேளுடா… கண்ணு”
“மனசுல இருக்குதுன்னு ஒங்களுக்கு எப்படித் தெரியும்… ராசா?”
“கண்ணுல்லே வந்துதான்… மனசே நிக்குதே…. சொல்லுடா.. கண்ணு, என்ன?”
“ஒண்ணுமில்லே… மார்கழி பெறந்து தேதி பத்தாச்சு”
“ம் அதுக்கென்ன?”
”நாம போட்ட நேத்திக்கடன் இருக்கே. அவனோட மொதப் பொறந்தநாளுக்கு குல தெய்வத்தோட சந்நிதிக்குப் போய் மொட்டை போடணும்லே?”
“ஆனா..?”
“என்ன ஆனா?’
“கடுமையான பனியாருக்கே. இந்தப் பனிக்காலத்துலே கோயிலுக்குப் போனா… ஒடம்புக்கு ஒத்துக்குமா? தை பொறக்கட்டும், போகலாம்.”
“இல்லைங்க, தெய்வகாரியம். பிசகு இருக்கக் கூடாது. சொன்னா சொன்னபடி நடக்கணும். தெய்வ குத்தம் ஆயிட்டா… அதுவே புள்ளைக்கு ஏதாச்சும் ஆயிருமே…”
“சும்மாயிரு. நீ நம்புற குல தெய்வம் உன்னைப் புரிஞ்சுக்கிடும். பத்து இருவது நாள் பிந்தினதுக்காக… அதைக் குத்தமா எடுத்துக்காது. பனியிலே போய் பாழாகக் கூடாதும்மா, நாமளும் கொஞ்சமாச்சும் அறிவோட நடந்துக்க வேண்டாமா?”
“பனியோ…. மழையோ….. நாம சொன்னபடி நாம நடந்துக் கிடுவோம். பனி மழையிலிருந்து நம்ம குல தெய்வம் நம்மளைக் காப் பாத்திடும்.”
“எப்படி?”
“எப்படியோ… காப்பாத்தும். நம்புனா…. நல்லதாவே இருக்கும்.”
“நம்புறதுக்கும் ஓர் அளவு வேண்டாமா? அளவுக்கு மிஞ்சிட்டா… அமிர்தமும் நஞ்சாயிரும். பக்தியோடயும் இருக்கணும். புத்தியோடயும் இருக்கணும் சரசு.”
“புத்தி எதுக்குங்க? நம்மாலே. நம்ம புத்தியாலே என்ன நடந்துரும்? எல்லாம் … குல தெய்வத்தோட மகிமை. நம்ம குலக்கொழுந்தைத் தந் ததும் சாமிதான். காப்பாத்தப்போறதும் சாமிதான்.”
இப்படித்தான் தொடங்கியது…. அந்தப் புயல். பத்து நாளாக அடை மழையாய் நச்சரித்த தர்க்கம், விவாதம், அழுகை. அடம்பிடித்த விசும் பல், விசும்பல்கள்.
“முழுத்த ஆம்பளைக்கே இந்தப் பனியைத்தாங்க முடியலே… பூ மழலை எப்படித்தாங்கும்? என்று யோகுவின் பயம்.”
பயத்திற்கே இடமில்லாமல் பக்தி வசப்பட்ட முரட்டு நம்பிக்கையில் சரசுவின் அடம், பிடிவாதம்.
பத்து நாள்களாக – வீடு வீடாக இல்லை. சண்டையும் சச்சரவுமாய் நரகமாகிவிட்டது. தாங்க முடியவில்லை யோகுவால். வேறு வழியும் தெரியவில்லை. எப்படியும் நடந்து தொலைக்கட்டும் என்ற வெறுப்பில் சம்மதித்துத் தொலைந்தான்.
இருபதாம் தேதி இரவு. வேன் வந்து சேர்ந்தது. யாருக்கும் எந்தக் தாக்கலும் சொல்லவில்லை. சாமான் செட்டுகளோடு அந்தச் சின்னக் குடும்பம். பனியின் உக்கிரத் தாக்குதலில் நடுங்கியவாறு…. நேர்த்திக் கடன் செலுத்தப் புறப்பட்டது.
10
ஆயிற்று. எல்லாமே சுலபமாய் முடிந்துவிட்டது. யோகுவுக்கே ஆச்சரியமாக இருந்தது. ரொம்ப நிம்மதியாகவும் இருந்தது.
மொட்டை எடுப்பதற்குள் தவமணி எப்படியெல்லாம் அடம் பிடிப்பானோ.. திமிறி, அழுது, ஆர்ப்பாட்டம் செய்வானோ என்றெல்லாம் பயந்து கிடந்தான், யோகு.
ஆனால்….. ரொம்பச் சாந்தம். தவமணி அமைதியின் சொரூபமாய், கத்தியோடு நெருங்கி வந்த நாவிதர் முகம் பார்த்துக் கைதட்டிச் சிரித்தான்.
தலைமுடியைக் கோதி தண்ணீர் தெளித்தபோது கூட… பனியின் குளிரினால் அவனது உடல் சிலிர்த்ததே தவிர… அவன் பயந்து அலறவில்லை. மாறாக…. கை தட்டிக் குதூகலித்தான்.
வெயில் முகமே தெரியவில்லை. மார்கழிப் பனியின் உக்கிரம். ஏற்கெனவே…. சிலிர்ப்பான குளிர்பூமி. குளத்து நீரின் குளுமை. பனிக் காலத்தில் ரொம்ப பொங்கல் வைத்து முடித்துவிட்டு… இவர்கள் குளித்தபோது, தாள முடியவில்லை. பல்லோடு பல்லாக மோதிக் கிடுகிடுத்தது. நடுங்கிக் கொண்டு வந்தது. சாமிவந்த மாதிரி உடம்பு தானாக ஆடியது.
மொட்டையடிப்பு முடிந்தது. சரசுவும் யோகுவும் தவமணியைச் சுனைக்கு அழைத்துப் போய்க் குளிப்பாட்டினர். புதுச்சட்டை போட்டனர். மொட்டைத் தலை தங்க நிற உருண்டையாகப் பளபளத்தது. சந்தனக் கரைசலைத் தலையில் பூசினர். சந்தனம் பூசிய போது தலையில் ஒரு கூச்சம் வந்ததோ…. என்னவோ….. அந்நேரம் தான் மெல்லச் சிணுங்கினான்.
அப்படியே… வேனுக்குள் உறங்கிவிட்டான்.
யோகுவும், சரசுவும் மறுபடியும் குளித்து சாமி கும்பிட்டுவிட்டு… பொங்கல் சோறு சாப்பிட்டுவிட்டு….
எல்லாம் ஆயிற்று.
சாயங்காலம்…. வேன் திருச்செந்தூர் வந்தது. டிரைவரிடம் பிள்ளையைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு…. இருவரும் நாழிக் கிணற்றில் குளித்து விட்டு…. முருகனைத் தரிசனம் செய்துவிட்டு… வேனுக்குத் திரும்பினர்.
வேனுக்குள்……
தவமணி இரண்டு காலையும் அகலமாக விரித்து உறங்கிக் கொண்டு இருந்தான். லேசாக மூச்சுத்திணறல். சுவாசிக்க முடியாமல் சற்றே திணறல். நெஞ்சு திக்திக்திக்… கென்று விம்மி விம்மித் துடித்தது. தொண்டைக்குள் என்றைக்குமில்லாத ஒரு விநோத சத்தம் “கொரட்.. கொரட்” டென்று.
யோகுவுக்கு வித்தியாசம் துல்லியமாகத் தெரிந்தது. சட்டென்று நெஞ்சுக்குள் நெருடிய பயத்தின் அதிர்வு, ஆத்மாவின் ஆணிவேர் வரை பரவியது.
“என்னங்க… என்னங்க…” பதறித்தவித்த சரசு. அழுகையும் புலம் பலுமாய் அவளது அதிர்ச்சி.
“என்னன்னு தெரியலை….. மூச்சுத் திணறல்தான்…”
“ஏங்க?”
“சளியாயிருக்கும் போலிருக்கு”
“நேத்து ராத்திரி வரைக்கும் தடுமன் எதுவும் பிடிக்கலையே…”
“வேத்துச் சூழல்… அதிகமான பனி… மொட்டையெடுப்பு… பச்சைத் தண்ணிக் குளிப்பு… பாவம்… சின்னப்புள்ள எப்படித் தாங்குவான்?”
சரசு, வேனுக்குள் ஏறினாள். பிள்ளையை வெறி கொண்டவளைப் போல தூக்கினாள்.
கடுமையான தலைவலி போலும்… கண்ணை அரைக் கண்ணாகத் திறந்துவிட்டுமூடிக்கொண்ட தவமணி.
தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் எள்ளாய்ப் பொரிந்தது. “ஐயய்யோ… இப்ப நான் என்ன செய்ய? என்னதான் செய்யப் போறனோ…? அடக் கடவுளே.”
“வீணா… அழுது பொலம்பாதே… சரசு. இப்போதைக்கு ஒரு டாக்டர்கிட்டே பாப்போம், அப்புறமா… ஊருக்குப்போவம்.”
டிரைவரும் வெலவெலத்துப் போயிருந்தான். பூமழலையான ஓர் அரும்புக்கு நோய் என்றால்… எல்லார் மனசுக்குள்ளும் ஒரு பதற்றம் தொற்றிக் கொள்கிறது. வண்டியை அவசர அவசரமாக ஸ்டார்ட் செய்தான். அவனே வண்டியை நிறுத்தி எதிரில் பட்ட ஆட்களிடம் விசாரித்தான்.
“குழந்தை ஸ்பெஷலிஸ்ட் இந்தப் பக்கம் யாரு? எங்க கிளினிக்?”
ஒரு ஆஸ்பத்திரி முன் வண்டி நின்றது. மாலை நேரம். வரிசையில் நிறைய ஆட்கள். ஆனால் டிரைவர் இவனையும் சரசுவையும் அழைத்துக் கொண்டு பரபரப்பாக டாக்டரின் தள்ளு கதவைத் தள்ளினான். அவனது பரபரப்பின் வேகம், சகலரையும் அப்பிக் கொள்ள… யாரும் எதுவுமேஆட்சேபிக்கவில்லை. முணுமுணுக்க வில்லை. மாறாக.. எல்லாருமே பதற்றத்துடன் என்ன, என்ன என்று விசாரித்தனர். ஈரமனசுகளின் துடிப்புகள்.
கிளீனர்தான் எல்லாருக்கும் பதில் சொன்னான்.
டாக்டர் இளமையானவர். நாற்பதுக்கும் கீழே வயது. ஆனால் கிழவரின் நிதானம். பதற்றமில்லாத அமைதி. ஞானத் தெளிவு தந்த அமைதி.
மடியில் போட்டுக் கொண்டு யோகு பதற்றப் பரபரப்பில் பேசினான். பேச்சைக் கேட்காமலேயே அல்லது கேட்கும் பாவனை யிலேயே… ஸ்டெதஸ்கோப்பால் குழந்தையைப் பரிசோதித்தார்.
குழந்தையின் முதுகு…நெஞ்சு… சோதித்தார். கண்ணிமைகளை விலக்கி, உதடுகளை விலக்கிப் பார்த்தார்.
“என்ன சார்….. செய்யுது?”
“பொறுங்க. இஞ்ஜெக்ஷன் போடுறேன்.”
அதற்குள் தவமணிக்குள் சில நுட்பமாற்றங்கள் ஜன்னி மாதிரி வெட்டி வெட்டி இழுக்கிற கோரம்.
சரசு இந்தக் கொடுமையைக் காணச் சகியாதவளாக… குற்ற உணர்வின் முள்குத்தலைத் தாங்க இயலாதவளாக… வெளியே வந்து விட்டாள். வேனுக்குள் ஏறி உட்கார்ந்து சாய்ந்து கொண்டாள். கண்ணை மூடிக்கொண்டாள்.
பாதகத்தி நான், எம்புள்ளைக்கு நானே எமகாதகியாகிட்டேனே… பனியிலே போட்டுப் பாழாக்கிட்டேனே… “மலடியில்லை, நீ மாதா”ன்னு சொல்லிக் கண்ணீர் துடைக்க வந்த மழலையை மண்ணாக்கிட்டேனே. அரும்பை எடுத்து அக்கினியிலே வீசிட்டேனே… ஐயய்யோ… ஐயயய்யோ… ஐயய்யோ…
யந்திரகதியிலான புலம்பல். மனச் சிதைவுக்களாகிப் போன ஒரு கிறுக்கியின் உளறலைப் போல… உணர்வற்ற புலம்பல். உலர்ந்த உ தடுகளின் மெல்லிய துடிப்பு.
ஆனால் அழவில்லை. கதறவில்லை. உறைந்து போன சோகத்தின் வடிவமாற்றாக… அவள், புற உலகின் சலனங்களிலிருந்து முற்றாக அறுபட்டு… உள் உலக உணர்வுகளில் உறைந்து மூழ்கிப் போனவளாக
…சரசு.
டாக்டர் இன்ஜெக்ஷன் போட்டார். அப்புறம் ஓர் இன்ஜெக்ஷன்.
“பனியும் குளிரும் தாங்கலை. சின்னக் குழந்தை. டிப்தீரியான்னு நோய் அட்டாக் பண்ணியிருச்சு. ரொம்ப காம்ப்ளிக்கேட்டா இருக்கு. வேன் இருக்கில்லே? நீங்க பாளையங்கோட்டை பெரியாஸ் பத்திரிக்குப் போனா…. நல்லது.”
“போறவரைக்கும் தாங்குமா… சார்? நீங்களே முயற்சி பண்ணுங்களேன்…”
“என்னய்யா ஆளுக நீங்க? பச்சைப் புள்ளைக்கு இந்தப் பனிக்காலத்துலேயா மொட்டை போடுவாக?”
டாக்டரின் மெல்லிய சிடுசிடுப்பு. யோகுவுக்கு அழுகை அழுகையாக வந்தது.
தவமணி… நெஞ்சிலும் முதுகிலும் விளையாடிய பிஞ்சு. ஆறு வருஷ தவத்திற்குப் பிறகு பிறந்த பூ. தனது அழகால் தெருவையே கவர்ந்திருந்த தங்கக்கனி. ஆசை ஆசையாகச் சகலரையும் தூக்கிக் கொஞ்ச வைத்த பூ மழலை.
பூவுக்கு ஒரு நாள் ஆயுள் இந்த மழலைக்கு ஒரு வருஷம்தானா? பிறந்தநாளிலேயே அவனது ஆயுளும் முடிந்துவிடுமா?
யோகுவுக்கு யோசிக்கவே முடியவில்லை. கேவிக் கேவி அழுதான். டாக்டர் எவ்வளவோ ஆனமட்டும் முயன்றார். எல்லாவிதமான சிகிச்சைகளையும் அவசர அவசரமாகச் செய்தார்.
இரவு எட்டு மணி இருக்கும்.
யோகு”ஐயய்யோ எம்மகனே ” என்ற கதறலில், அந்த மருத்துவ மனையே நடுநடுங்கியது.
வேனுக்குள்ளும், வந்து கேட்ட அந்தக் கதறல், வேனும் ஒரு நடுக்கம் நடுங்கி அதிர்ந்து அடங்கியது.
யோகு வெறிபிடித்தவனைப் போல புறப்பட்டான்.
“எங்கே அவள்? எம்புள்ளையை எமனைப் போல வந்து கொனன அந்தச் சண்டாளி எங்கே? அவளையும் கொல்லணும்.
ஆவேசமாய்ப் புறப்பட்டவனை டாக்டர் பிடித்து நிறுத்தினார். சற்றுக் கோபமாகவே அதட்டினார்.
“என்ன செய்யப்போறீக? ஊம்? நடந்தது நடந்து போச்சு, இனிமே நீங்க மனைவியை நல்லபடியாப் பாத்துக்கணும்.”
“என்ன சொல்றீங்க?”
“இந்தக் கொழந்தைக்கு இப்படியானதுனாலே ரொம்பப் பாதிக்கப்படப் போறது உங்க மனைவிதான். அவங்களுக்கு எதுவும் ஆயிராம ஜாக்கிரதையா பாத்துக்கணும். அவங்க நல்லபடியா இருந்தா… இன்னும் ரெண்டுபுள்ள கூடப் பெத்துக்கலாம்…”
அவனது ஆவேசம் அடங்கியது. அடங்கிய ஆவேசம் அழுகையாக வெளிப்பட… நெஞ்சுமுட்டியது.
டிரைவர் நல்ல மனிதர். அதற்குள் ஊருக்குப் போன் செய்து தகவலைச் சொன்னார். வேனுக்குள் வந்து பார்த்தால் உயிருள்ள பிரேதமாக சரசு.
11
சுற்றிலும் இருட்டு, வாழ்க்கையைப் போல கனத்த இருட்டு. கொலைகாரப் பனி வேறு, வேன் இருட்டைக் கிழித்துக்கொண்டு பாய்ந்தது.
நடுச்சீட்டில்… உயிருள்ள பிரேதமாகக் கிடக்கிற சரசு குளித்துக் காய்ந்த கூந்தல் காற்றின் சீற்றத்தில் அற்றலைய… கண்ணை மூடிச் சாய்ந்து கிடக்கிறாள். உதடுகள் மட்டுமே உயிராகத் துடிக்கின்றன. “ நான் கொன்னுட்டேன்…நான் கொன்னுட்டேனே” என்கிற ஒரே முனகல், ஒற்றைவரி முனகல், முடிவில்லாமல் தொடர…
நடுவில் –
புதுச்சட்டையோடு உதிர்ந்துலர்ந்த ஒரு வருடப் பூவாக.. அது. அதுவாகிப் போன தவமணி.
இந்தப்பக்கம் யோகு. அவனுக்குள் குத்திப்பிடுங்குகிற சோகம். அடிவயிறே சூன்யமாகிப் போனமாதிரி ஓர் பகீர். நெஞ்சுக்குள் “கபகப்”வென எரிகிறது. மனசின் ஆழத்திலிருந்து திரண்டு வருகிற துயரக்கற்றையை… அவ்வப்போது அழுது அழுது அரற்றுகிற யோகு.
சரசு அழவுமில்லை..ஆழ்ந்து உறைந்த சவமாக ?
யோகுவுக்குப் பயமாக இருந்தது.
சரசு ஏன் அழலை? ஏன் அழ மாட்டேங்குறா? நெஞ்சுக்குள்ளே விழுந்த தீயிலே உள்ளேயே கருகிப் போறாளா? நெஞ்சடைச்சு இவளும் செத்துப் போவாளா? ஐயய்யோ…
சரசுவை எப்படியாவது அழவைத்துவிட வேண்டும். அழுது விட்டால் நெஞ்சுப்பாரம் குறையும். உயிர் வாழ்ந்து விடுவாள். இன்னோர் உயிரைக்கூட அவளால் படைத்துவிட முடியும்.
“சரசு… ஏய் சரசு… இங்கபாரு… நம்ம புள்ளையைப் பாரு. செத்துக் கெடக்குற புள்ளையைப் பாரு ஊரு பூரா நம்ம புள்ளையை தூக்கிட்டுப் போய்க் கொஞ்சுவாகளே… தெருத்தெருவா தேடித்தேடிப் போய் புள்ளையை வாங்கிட்டு வருவேனே… இப்பப் பாரு எமன் தூக்கிட்டுப் போயிட் டானே… இனிமே எத்தனை தெரு சுத்துனாலும் எம் புள்ளையை எப்படி வாங்க? ஐயய்யோ…”
இவளை அழவைப்பதற்காக இவன் புலம்புகிற புலம்பலில், இவன் தான் கதறியழுதான். அவள் அசையவேயில்லை. உயிரே உறைந்து இறுகிப் போனவளாக. ஐம்புலனும் அறுந்து போன அசைவற்ற பிணமாக – வேனின் குலுங்கலுக்கேற்ப ஆடுகிறவளாக…
“நான் கொன்னுட்டேனே….நான் கொன்னுட் டேனே…” என்ற ஒற்றை வரிப்புலம்பலின் உணர்வற்ற முனகலாக…
இவனுக்கு பயம் கூடிற்று. உள்ளுக்குள் பகீர் பகீரென்று வருகிற பயங்கரக் கற்பனை. அவளும் நெஞ்சடைத்துப் போய் விட்டாளா? மகனோடு சேர்ந்து மாதாவும் பயணமா? நாம் மட்டும் ஒற்றை மரமா… பட்டமரமாகத் தனித்து நிற்கப் போகிறேனா…?
சரசுவின் ஒற்றை வரிப்புலம்பலின் உணர்வற்ற உலர்ந்த தன்மை, உடைந்த ரிக்கார்டின் ஈனமுனகலாய் அது.
அவனுக்குள் வேறொரு பயம்.
சரசு நிதானமிழந்து விட்டாளோ… சித்தப்பிரமை பிடித்து விட்டதோ… மூளை குழம்பிக் கலங்கிவிட்டதோ… அதிர்ச்சியைத் தாள முடியாத தாயுள்ளத்தின் மெல்லிய ஜவ்வு கிழிந்துவிட்டதோ….
ஐயய்யோ….அப்படீன்னா… சரசுவுக்கு கிறுக்கு பிடிச்சிருச்சா? பைத்தியமாகிவிட்டாளா?
அவனுக்குள் நிறைய பிசாசுகள், அச்சப் பிசாசுகள். அவனது உள் நரம்புகளைப் பற்றித் தொங்குகிற ஆர்ப்பாட்டப் பிசாசுகள். அவனை அவனுக்குள் அலைக்கழிக்கிற மூர்க்கப் பிசாசுகள்.
தவமணியையும் சரசுவையும் மாறிமாறிப் பார்த்தான் யோகு. அவனுக்குள் பொங்கியெழும் அழுகை.
ஊரே திரண்டு நின்றது. யோகுவின் வீட்டுக்கு முன்னால், தவமணியைத்தூக்கிக் கொஞ்சிய ஊர். தங்கக் குழைவான அவன் உடலின் பூவிதழ் ஸ்பரிசத்தில் பரவசப்பட்ட ஊர். குழிவிழுந்த அந்தச் சிறுகன்னங்களில் முத்தமிடப் போட்டிபோட்ட ஊர். அவனது சிரிப்புச் சங்கீதத்தில் மனசை இழந்து மயங்கிய ஊர்.
“தவமணி செத்துப் போனான்” என்ற தீயில் விழுந்து துடிக்கிற ஊர். வந்து நின்ற வேனைச் சுற்றி மொய்த்த அவலக் கதறல்கள் ஜனங்களின் ஒப்பாரிக் கூவல்கள், விசும்பி விசும்பி கண்ணைக் கசக்குகிற பாவா டைச் சிறுமிகள்..
யோகு குழப்பமாய் உணர்ந்தான். வந்து மொய்க்கிற ஒப்பாரியின முற்றுகை, எப்படி வெளியேற? ஐய்யோ…ஐய்யோ… என்ற கதறல்களின் முற்றுகை.
வேன் வந்து நின்றவுடன் –
யோகுவே திகைத்து ஸ்தம்பித்து நிற்க – உயிர் பெற்ற ஆவேசமாய் எழுந்த சரசு, இவனையும் கடந்து கொண்டு, வேன் கதவைத் திறந்து கொண்டு, சுற்றி மொய்த்த மனிதக்கற்றையை மூர்க்கமாய் நெட்டித் தள்ளிப் பிளந்து கொண்டு – வெறிபிடித்தவளாக வீட்டுக்குள் பாய்ந்தாள்.
யோகு திகைத்துப் போய், பதற்றமும் பரபரப்புமாய் பின் தொடர்ந்தான்.
இறந்துபோன மழலையை யோரோ ஒரு பெண் தூக்கிக்கொண்டு வந்தாள்.
யோகு பதறிப் பதைத்தான். “சரசு எதுக்காக இப்படிப் போறா….? சாகவா?”
12
மொத்தக் கிராமமும் வாசலையடைக்க – கசபுசா வென்ற பலவிதப் பதற்றப் புலம்பல்கள்.
பின் தொடர்ந்தான் சரசுவை. கொப்பளிக்கும் பகைமை உணர்ச்சியோடு கொதிப்போடு உள்ளே போன சரசு, சுவரிலிருக்கும் சாமி போட்டோக்களையெல்லாம் வன்ம உக்கிரமமாய்ப் பார்த்தாள். பத்ரகாளியின் பார்வை. பத்ரகாளியின் ருத்ரப் பார்வை.
“அடப்பாவிகளா… கும்புட்ட கையை வெட்டிட்டீகளே… நீங்க உருப்படுவீகளா? உங்களைச் சுமந்து நெனச்ச நெஞ்சை நொறுக்கிட்டீகளே… வெளங்குவிகளா? உங்களுக்கெல்லாம் ஒரு சுவரு… ஓர் ஆணி… ஊதுபத்தி வாசம்… த்தூ !” கம்
ஒரு பெரிய கண்ணாடிப் போட்டோவைப் பற்றி விருட்டென்று இழுத்தாள். பேய்பிடித்தவளைப் போல டமார் என்று கீழே போட்டாள்.
சலீர் என்று உடைந்து சிதறுகிறகண்ணாடிச் சிதறல்கள், சிமிண்டுத் தரையில் விழுந்து அதிர்கிற தகரச்சத்தம். கண்ணாடிச்சில்லுகள் கையைக் கிழிக்க… மூர்க்கமாய்ப் பாய்ந்து கடவுள் படத்தை பற்றி, கிழித்து… கசக்கி…
அவளைப் பிடித்து நிறுத்தப் பாய்ந்த இரண்டு பெண்களைக் கைநீட்டித் தடுத்தான், யோகு.
“விட்டுருங்க… அவமனம் போல விட்டுருங்க. மனசுலே இருக்கிற பாரம் பூராத்தையும் கொட்டிடட்டும். விட்டுருங்க….”
பதற்றமும் பரபரப்பும் உள்ளே தளதளக்க… அசையாமல் நின்றான், யோகு. நிதானமாக அவளையே பார்த்தான்.
“சலீர்…சலீர்” என்று சிதறுகிற கண்ணாடிகள் டமார்…டமார் என்று விழுந்து நெளிகிற தகரங்கள். கண்ணாடிச்சில்லுகள் மேலே வெறி பிடித்தவளாக பாய்ந்து… பாய்ந்து, படங்களைக் கிழிக்கிற தீவிரம், தீக் குழிக்குள் இறங்குகிற பக்தர்களின் அதே உணர்வுக்கிரமம்.
சரசுவின் உள்ளங்கையிரண்டிலும் ரத்தக் கசிவுகள், கண்ணாடிச் சில்லுகளின் கிழிப்புகள், பாதங்களிலும் ரத்தக்கசிவுகள். சிமிண்டுத் தரையெல்லாம் அவள் பாதங்களின் ரத்தத்தடங்கள். சின்னச்சின்ன மண் சிலைகளையெல்லாம் உடைத்தாள். அறைமுழுக்க அவளது ருத்ரதாண்டவ அடையாளங்கள். குப்பைக் குமியாக கண்ணாடிச் சில்லுகள், காகிதக் கசக்கல்கள். தகரநெளிவுகள். வாய்பிளந்த மரச் சட்டங்கள்.
பேய்பிடித்த அவளது மூர்க்க நர்த்தனத்தைக் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான், யோகு. எதில் போய் முடியுமோ…? என்கிற மனப்படபடப்பு.
எல்லாமே… அதீதம், நம்பிக்கும்பிட்ட விதத்துலேயும் அதீதம். வெம்பி வெடிச்சு உடைக்கிற வேகத்துலேயும் அதீதம். அமிர்தத்தையும் நஞ்சாக்குகிற அதீதம். அறிவுக்குப் பொருந்தாத அதீதம். அறிவைக் குருடாக்குகிற அதீதம்… அளவையும் நிதானத்தையும் இழந்த அதீதம்.
அதீதத்தின் விளிம்பைத் தாண்டினால்…ஆபத்து. சித்தபிரம்மை. மனச்சிதைவு. துணியைக் கிழித்துக் கொண்டு… பிரக்ஞையைக் குழப்பிக்கொண்டு உள் உலகத்துக்குள் முகம் புதைத்துக் கொள்கிற பைத்தியம்… கிறுக்கு….
“ஐயோ… சரசு… சரசு…”
யோகுவின் ஆத்ம அலறல், மொழி உருவம் பெறாத உணர்வின் கதறல். பயத்திலும் பதைப்பிலும் துடிக்கிற நெஞ்சு.
எல்லாப் போட்டோக்களையும் உடைத்துவிட்டாள். கழுவித் துடைத்த முகமாய்…சுவர். சுவரில் ஒரே நெற்றித் திலகமாய்… ஒற்றைப் போட்டோ. இவர்களின் கல்யாணப்போட்டோ. மாலையும் கழுத்துமாய் யோகுவும், சரசுவும், கனவுகள் சுமக்கிற கனிந்த இளமைத் தோற்றம்.
வெறிபிடித்த பேய் வேகத்தில் அதையும் கழற்றப் போன சரசு. நடுங்குகிற அவளது கைகள். தாண்டவிடாமல் தடுக்கிற விளிம்பு, அவளைக் கட்டுப்படுத்துகிற விளிம்பு. உணர்வுச்சீற்றத்தை லகான் போட்டுச் சுண்டியிழுக்கிற விளிம்பு.
நடுங்குகிற கைகள், அந்தப் போட்டோவிலும் அவளது உள்ளங் கைகளின் ரத்தத்தடம். அதை எடுக்கவில்லை. அதையே உற்றுப் பார்த்தாள். யோகுவை மட்டுமே உற்றுப் பார்த்தாள் ஒருகணம்.
“பக்தியோடயும் இருக்கணும். புத்தியோடயும் இருக்கணும்மா..” ஆத்மாவுக்குள் கிசுகிசுத்த யோகுவின் இங்கிதக் குரல். அவளது ஆரவாரம் – அடம் – அழுகை ஆர்ப்பாட்டம், கோப தாபங்கள் எல்லா வற்றையும் பொறுத்துக்கொண்டு அன்பு செலுத்திய ஆத்மதோழன்.
“நீ ஒரு மலடி” என்று ஆறுவருஷ தாம்பத்யத்தில் ஒரு நாள்கூட உணராத உண்மையான மனிதன். மனித புருஷன்.
இந்நேரம் வரைக்கும்-
இறுகிக்கிடந்த அவளது மன உறைவுக்குள் சிறுகசிவு. கசிந்த கணத்தில் கரையைப் பிளக்கிற உணர்வுப் பீரிடல், ஆத்மபுருஷனை ஆவிசேரத் துடிக்கிற வாழ்வின் வேட்கை. உயிரை நினைத்த உயிரின் ஓங்கார வெடிப்பு.
“கோ”வென்று வெடித்துக் கதறியழுதாள். போட்டோ யோகுவையே பார்த்துக் கதறினாள். தலையில் மடேர் மடேரென அடித்துக் கொண்டு அழுது புலம்பினாள்.
“ஐயோ…என்தெய்வமே… என்ராசாவே… பக்தியோட இருந்தாலும் புத்தியோட இருக்கணும்னு படிச்சு படிச்சு சொன்னீகளே…. பாவிநான் கேக்கலையே…. புத்தியைக் கடன் கொடுத்துட்டேனே… ஐயோ…ஐய்யயோ… என் ராசாவே…”
அங்கலாய்ப்பான ஒப்பாரி. அடிமனசின் இறுக்க மெல்லாம் பாசப் பிரவாகத்தில் உடைந்து நொறுங்கி… அழுகையாக வெளிப்படுகிற துயரம். துக்கப் பெரும் பிரவாகம்.
தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு கதறியழுத சரசுவை ஓடிப் போய் ஏந்திக்கொண்டான் யோகு. அவனுக்குள் ஒரு சின்ன ஒளி. இருட்டுத் துக்க முற்றுகைக்குள்ளும் ஒரு நட்சத்திர ஒளிப் புள்ளி.
சரசு … சாகமாட்டா… சரசு உசுரோட இருப்பா… சரசுக்கு சித்த பிரம்மை பிடிக்கலை… அழுதுட்டா… கரைஞ்சுட்டா… மனப்பாரத்தை நழுவ விட்டுவிட்டுட்டா…
ஏந்திப்பிடித்த புருஷனின் முகத்தை ஒரு வெறிப் பாசமாய்ப் பார்த்தாள். முகத்தின் வியர்வையும் கண்ணீரும் உதடுகளில் நிற்க… கோணித்துக் கொண்டு கதறுகிற வாய்.
“ஐயோ… ராசா… உங்க பேச்சைக் கேட்காம … உங்க புள்ளையைக் கொன்னுட்டேன்… நான் கொலைகாரி… கொன்னுட்டேனே… நான்…கொலைகாரி… கொலைகாரி…”
“இல்லை சரசு… நீ பெத்தபுள்ளைதான். ஒம்புள்ளைதான். ஒன்னோட வவுறு சுமந்த நம்ம புள்ளைதான். நீ இன்னும் ஒரு தவமணியைச் சுமப்பே. இன்னும் ஒரு பூமழலை ஒன்னோட வவுத்துலே பூக்கும்மா…”
அழுகையில் கலங்கி, உடைந்த குரலில் அவன். அவனது ஆத்ம தழுவல், அவனது அன்பு மனசு. தாயின் இறக்கைக்குள் ஒடுங்கும் குஞ்சாக…அவள்.
அவளை அப்படியே அள்ளியணைத்துக் கொண்டான். கட்கத்தில் கை கொடுத்து ஒரு பூச்செண்டைப் போல தூக்கி, கண்ணாடிச் சிதறல்களைத் தாண்டிக் கொண்டு வந்தான்.
இறந்து போன நிமிஷங்களில் கரிய நிழல்களாய்… அவன் உடம்பெல்லாம் உலர்ந்து கறுத்துப்போன ரத்தப் பிசுக்கு.
அவனது நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்ட சரசு. விம்மி விம்மி வெடித்து அழுகிற அவளது மனச்சோகம்.
அவனது நெஞ்சு ரோமங்களுக்குள் வாழ்வின் புதிய அழைப்பு குரலாக ….. அவளது விசும்பல்.
இப்போதுதான்-
தன்னிலைக்கு வந்த சரசு. தாயாக மாறிய சரசு. யோகுவிடமிருந்து பிய்த்துக்கொண்டு… பெற்ற பிள்ளையின் பிரேதத்தைப் பார்த்து… அழுகையும் புலம்பலுமாய்ப் பாய்கிற உயிருள்ள தாய்மை.
தவமணியின் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை அழுகைக் கதறலோடு ஊர் செய்ய…. தனது ஆத்ம தோழியை அரவணைத்துக் கொண்டு நிற்கிற யோகு. அவர்களை ஒரு சேர அரவணைத்துக் கொண்ட வாழ்க்கை.
– 1996 நவம்பர், அமுதசுரபி.
– என் கனா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 1999, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
