புத்தகப் புழுவும், ஒரு புனிதமலரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2025
பார்வையிட்டோர்: 157 
 
 

ஆகாயம் கண்டவர் அனைத்துமாவர் தேகம் தனை பற்றினால், தெளியாது அந்த வானம், உளி கொண்டு, செதுக்க வருவதே, தெளிவுறும் மனம் உயிர் வெளி காணாமல், உண்மையுமில்லை.

உயிர் வெளி காணாமல், சறுக்கி வீழும் நிழல்களில் இதுவும் ஒன்று, இந்தக் கதை படிப்பவர்கே அது பளிங்கு வானம் போல் பிடிபடும் வாழ்க்கை மீது கண்மூடித்தனமான பற்று வைத்து, அன்பு நிலை சறுக்கி, கீழ் மட்ட மனிதர்கள் போல் வாழ்வதை விட மேலானது, கஷ்டப்படுகிறவர்களை கருத்தில் வைத்து அன்பு காட்டுவதை விட , மேலான சொர்க்கம் இது போல் வேறில்லை. அவர்கள் கடவுளுக்கு சமம்.

அப்படி கடவுளைக் காணக் கூடியதாய் இந்த உலகமும் உறவுகளும் இல்லையென்பதே நிதர்ஸனமான உண்மை.

இந்த உண்மையக் கண்டறிய அனுபவங்கள் தேவையில்லை, வாழ்க்கையே போதும்
வாழ்க்கையென்றால், எப்பேர்ப்பட்ட வாழ்க்கை? அமுதாவைப் பொறுத்தவைரை இது குறித்து வேதமே சொல்லலாம், இந்த வேத வழிபாடும் அன்பு வழி உண்மைகளும் எங்கோ சிலருக்குத் தான் அபூர்வமாகக், கிடைக்கும், அப்படி ஒருத்தி தான் இந்த அமுதாவும் கூட. கல்யாணமான பிறகு அடுத்து அடுத்து வந்த சவால்களால் வாழ்க்கையே திசை மாறிப் போனது. கற்பே கேள்விக் குறியானது. வீட்டை காப்பாற்ற, வாசல் தாண்டி, தெருவுக்கு வந்த, பின் அவள் கதை கந்தலாகி விட்டது. புருஷன் குமரன் நினைத்திருந்தால், இப்படி தீக்குளித்து சாக விடாமல், அவளை தங்க சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து, ஒரு மகாராணியாகவே வாழ வைத்திருக்கலாம். மாறாக எடுக்கிற சம்பளமும் அவள் கைக்கு வருவதில்லை. இந்த லட்சணத்தில் குழந்தை செல்வம் மட்டும் அமோகமாய் பெருகிற்று, ஒவ்வொரு சமயமும் தசை வெறி மேலோங்கும் போது, அவன் ஆடித் தீர்க்கிற, ஆட்டத்தின் முன் அவள் வெறும் நிழற் பொன்மையாக வாழ்ந்து களித்த அந்தக் கசப்பான உண்மை, குறித்து, நெருங்கி, சொந்தம் கூட வாய் திறக்காமல், போனது அவள் கொண்டு வந்த பாவக் கணக்கின் உச்ச கட்ட முடிவாகவே அதையும் அவள் எதிர் கொள்ள நேர்ந்தது.

பிள்ளைகள் வளர்ந்த பின், அவளை வேறு கவலை துரத்திற்று. பையன்களை நன்றாகப் படிக்க வைப்பதோடு, பெண்களையும் , கரை, ஏற்றி வைக்காவிட்டால், உலகம் அவளை சும்மா விடாது ஏறி மிதித்துக் கொன்றே போடும். இது அவள் பட்ட அனுபவம் வாழ்க்கையில் உண்டாகிற வீழ்ச்சி அனைத்துக்கும் அவள் தான் பொறுப்பாம். அப்படியென்று உலகமல்ல சமூக மனிதர்களின் வாய் மொழி. பையன்களைத் தான் ஒரு மாதிரி யாரிடமாவது கையேந்தி படிக்க வைத்து விடலாம் மகள்களைக் கரை ஏற்ற என்ன வழி? அதிலும் மூன்று பெண்கள்.

மூவருக்கும் கல்யாணம், காட்சி திருவிழா காண்ப்தென்றால், சும்மாவா? போடுவதற்கு நகை நட்டுகள் கூட இல்லை, ஆக இருக்கிற சொத்து அப்பா சீதனமாகத் தந்த அந்த, வீடு ஒன்று மட்டும் தான், அண்ணன் பையன்களில்.. ஒருவனையாவது கட்டி வைக்கலாம்.

அண்ணன் மனம் வைத்தால் நிச்சயம் இது நடந்தேறும். இது வெறும் நடைப் பயணமல்ல, கல்யாணம்.

புதிருக்குள்ளிருந்து பூதம் வருவது போல அண்ணனின் நிலைப்பாடு. திடீரென்று ஒருநாள் அது நடந்தேறியது; கொடாஞ்சேனையிலிருந்து திடீரென்று ஒருநாள் அக்கா அவளைக் குசலம் விசாரித்துப் போகவல்ல. குண்டு மழை பொழியத்தான் அவள் வருகை. அப்போது அமுதா . நிலை வாசலில் குந்தியிருந்தாள். கனவுப் பிரக்ஞையாக கண்முன்னே உயிரை அரிக்கின்ற வாழ்க்கையின் எத்தனையோ நிழல்கள் அவற்றை உதறிவிட்டு நிஜத்தைப் பற்றலாமென்றால் அதுவும் சவாலாக வந்து நின்றது. கண்ணைத் திறந்து பார்த்தால் பெரியக்கா முகம் வெளிறி வந்து நிற்பது தெரிந்தது.

என்னக்கா?

உனக்கு ஒரு செய்தி சொல்வேன் வருத்தப்பட மாட்டியே?

என்னக்கா புதிர் போடுறியள்? என் முன்னாலை நான் பற்றிக் கொள்ள, துடுப்பே இல்லாமல், போச்சு.

எப்ப என்ரை கழுத்திலை தாலி ஏறினதோ, அப்பவே சாக வேண்டியவள் நான். இவ்வளவு நடந்தும் நான் சாகேலை. குடி மூழ்கிப் போகேலை. ஒன்றும் நடக்கேலை. எதையும் நீங்கள் பயப்படாமல் சொல்லலாம்.

அண்ணை சொன்னவர் விசாகனுக்கு பொம்பிளை பார்க்கிறாராம்.

அதுக்கு என்ன இப்ப?

பொறு நான் சொல்லவந்ததை முழுசாய் சொல்ல விடு, அதுக்கு நான் கேட்டேன். என்னண்ணை? கையிலை வெண்ணெய் வைச்சுக் கொண்டு நெய்க்கு அலைகிற கதை மாதிரி இருக்கு உங்கடை கதை. ஏன் தங்கைச்சி அமுதா விட்டை தான் மூன்று பெட்டையள் இருக்கிறாளவையே அதில் ஒன்றை ஏன் நீங்கள் விசாகனுக்கு பேசக் கூடாது?

அதைக் கேட்டு விட்டு அவர் சொன்னார் விசர்க் கதை கதையாதை அவன்ரை படிப்புக்கு மகிடம் வைச்ச மாதிரித் தான் ஒன்றை நான் தேடிக் கொண்டிருக்கிறன். அமுதா விட்டை போனால், கஷ்டத்துக்குள்ளை கொண்டு போய் விட்டிட்டன் என்று அவன் என்னைக் கொன்றே, போடுவான்.

இதைக் கேட்க எனக்கு அழுகை தான் வந்தது .கஷ்டத்திலை இருந்து நம்மைக் காப்பாற்ற, கடவுள் தான் வர வேண்டும். இருந்து பார்ப்பம் விசாகன் கொடி கட்டிப் பறக்கப் போகிறானா அன்றி… என்று அவள் கூறி முடிக்கேல்லை.

அக்கா! வாயை மூடுங்கோ. ஆரையும் சபிச்சு எனக்கு பழக்கமில்லை. நான் இதை எதிர்பார்க்கவுமில்லை.

அப்ப என்னதான் வேணும் உனக்கு?

கடவுள் விட்டவழி, என்றாள் அந்த ஆதர்ஸ தேவதை.

அவள் நினைத்தது போல் கடவுள் வரத் தான் செய்தார். இது நடந்து சில தினங்கள் கழித்து அண்ணன் சுயம் போக்காக அவள் வீட்டிற்கு விஜயம் செய்தார். அப்போது அவர் முகம் மிகவும் களை இழந்து கிடந்தது.

அவர் கால் பதிக்கக் கூட அஞ்சுகிற ஒரு சின்ன வீடு. எதிரும் புதிருமாக, இரு துருவங்கள். கதிரையை இழுத்துப் போட்டு அவரை அமர வைத்து விட்டு, அவள் கேட்டாள்.

என்னண்ணை? ஒரு மாதிரி இருக்கிறியள்? முகம் வேறு இருண்டு கிடக்கு?

அவர் அழுகை குமற உணர்ச்சி வசப்பட்டு பேசத் தொடங்கும் போது, அவள் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள், அடி ஆழத்திருந்து பேசுவது போல் அவர்குரல் சுரத்தின்றிவெளிப்பட்டது.

விசாகன் என்னை ஏமாத்திப் போட்டான்.

என்ன சொல்லுறியள்?

ஆம் அமுதா ஒரு பெரிய இடத்திலை பொம்பிளை எடுத்து, அவன்ரை கல்யாணம், சிறப்பாக நடக்க வேண்டுமென்று கனவு கண்டன். எல்லாம் போச்சு. சொந்தத் தங்கைச்சி முறையிலை ஒருத்தியை இப்ப அவனே பெண் பாத்து முடிக்கப் போறானாம், இல்லை காதல் வேறு செய்கிறானாம்.

ஆரது அண்ணை?

வேறு ஆர்? எல்லாம் சொந்த சித்தி மகள் சரிதா தான் அவனுக்கு வேணுமாம். முடிச்சுக் கொடுக்காட்டில் உயிரை விட்டு விடுவானாம், இதை உணர்ச்சி வசப்பட்டு கூறி முடிக்கும் போது அவர் வாய் விட்டு அழுதே விட்டார்.

அமுதாவுக்கு இது குறித்து வேதம் சொல்லவும் வரவில்லை, அவரை சமாதானப்படுத்தத் தோன்றாமல், சூழம் இருட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் மெளனம் பேசியது.

அண்ணை! உங்களூக்கு புத்தி சொல்ல நான் ஆர்? எனக்குத் தெரியும் நீங்கள் படிப்பு மேதை. ஆனால், நீங்கள் இப்ப படித்துணர வேண்டியது வாழ்க்கையை மட்டுமல்ல மனிதர்களையும் தான், அதிலும் நான் வெறும் மனுஷி. மூளியாகிப் போனவள், ஒன்றுமேயில்லை என்னிடம், ஆனால் அன்பையே வைச்சுக் கொண்டிருக்கிற நிறைஞ்ச மனசிலே, கோபரமல்லே, நான் இதை நீங்கள் பார்த்திருந்தால் இண்டைக்கு நீங்கள் இப்படி இடிஞ்சு போய் வந்து நிக்குமளவுக்கு, தீவினை வந்து மூடியிராது. வெளிச்சத்திலை என்னை பார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் ஒரு குருடனாக, வாழ நேர்ந்ததைக் குறித்துத் தான் இப்ப என் மனவருத்தமெல்லாம், இதை வாய் விட்டு சொல்லும் அளவுக்கு இப்பவும் என் கண் இருண்டு போகேலை, வெளிச்சத்துக்கு வந்து இருட்டை மறந்து போகிற, குருடியும் நானில்லை, அதை அவள் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும் போது அவர், கேட்டார்.

என்ன அமுதா? இது பற்றி நீ வாயே திறக்கேலை அதைக் கேட்டு, விட்டு சிரிப்பு நிறைந்த முகத்தோடு, கம்பீரமாக குரலை உயர்த்தி அவள் சொன்னாள்.

அண்ணா! நான் வாய் திறந்தால், வேதம் தான் வரும், அதற்கு மட்டுமே என் வாய் மொழி, மந்திரமெல்லாம் பூதம் வராது. என்றாள் புதிர் போடும் விதமாக, அவள் சொல்லி முடித்த வேதம் பூதம் பாஷை பிடிபடாமல், அதற்கப்பால், வெட்ட வெளி கூட காணாத பிரமையில் இருள் வெறித்துக் கிடந்த அவரை விழிப்புணர்வு வெளிச்சம் பிடிபடிபடாத வெகு தொலைவில் அறியாமை இருள் மூடிக் கிடக்கும் ஒரு வெறும் மனிதனாகவே கண்டு உணர்கையில் பெருமூச்செறிந்து அவள் நினைத்தாள். இந்த அண்ணனைப் பொறுத்தவரை, இவர் ஒரு புத்தகப்பழு நூல்நிலைய முதல்வராக அரும் பணியாற்றியவர், எனினும் வாழ்க்கையைப் பொறுத்தவரை, அறிவுக்கு மட்டுமல்ல அன்புக்கும் வெகுதுராமாய் போய் விட்ட இந்த இடைவெளியை இட்டு நிரப்ப, கடவுள் தான் வரவேண்டுமென்று அவள் மிகவும் கவலையுடன் நினைவு கூர்ந்தாள்.

ஆனந்தி என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *