முகவரி தேடும் காற்று
கதையாசிரியர்: இரஜகை நிலவன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 158
அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27
அத்தியாயம் 22 – கீழே விழுந்தாள் பூனம்

அரசு அங்கு வந்த போது அந்த நிகழ்ச்சி கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை.
அரசு உள்ளே வருகிறான் என்று தெரிந்தத்தும் வேக வேகமாக ஓடிவந்து அவனை எதிர் பாராததுபோல (நடித்து) கீழே விழுந்தாள் பூனம்.
பூனத்தைத் தூக்கி மெதுவாக நாற்காலியில் அமர்த்தி பாட்டிலில் இருந்த குளிர் நீரை எடுத்து அவள் முகத்தில் அடித்து விட்டு அவள் வாயில் குடிக்கவும் கொடுத்தான்.
அவள் மயக்கம் தெளிந்து எழுவதுபோல பாவ்லா செய்து கொண்டே கண்களை மெதுவாகத் திறந்து “ஹும்.. “ ஏய் அரசு எனக்கு என்னாயிற்று”? என்றாள்.
கொஞ்சம் கோபத்தோடு “உனக்கு ஒன்றும் ஆகவில்லை. பூனம் இப்படிச் செய்வதில் உனக்கு வருத்தமில்லை…? வெட்கமில்லை? யேய்ய்.. ஏதோ சாதாரண ஆண்மகனை வீழ்த்துவது போல என்னிடம் ஏன் நடந்து கொள்கிறாய்?”
“பூனம் நீ என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று முதலில் கேட்டபோது விளையாடுகிறாய் என்றுதான் நினைத்தேன்.”
“பூனம் இந்த விளையாட்டு எனக்குப் பிடிக்க வில்லை. எனக்குத் தேவையுமில்லை. நான் என் வீட்டை விட்டு வெளியே வந்தது இப்படி ஏதாவது ஒரு பெண்ணின் வலையில் விழுவதற்கல்ல. நீலா என்று ஒரு பெண்ணை விழுந்து விழுந்து காதலித்தேன் தெரியுமா? இன்னும் கூட அந்த வடு மாறவில்லை. என்ன சொன்னாள்
தெரியுமா? பணமில்லை என்றால் காதலில்லை என்றாள். சே! என் பணத்தை காதலித்திருக்கிறாள் என்று தெரிந்து வெறுத்துபோய் விட்டேன்.”
“இவன் வெற்றுப் பயல் என்று எண்ணி விட்டாள் பார்! ஒரு நாள் அவள் முன்னால் நின்று எப்படி என் தந்தையின் கையை கூட எதிர் பார்க்காமல் இப்படி வளர்ந்திருக்கிறேன் என்று சொல்ல அவள் பார்த்து வெட்கப்பட வேண்டும்.”
‘’பூனம் உன்னுடைய வயது, திருமணம் முடிந்த உடனே கணவனை இழந்து நிற்கும் பாங்கு … ஒரு இளம் ஆண்மகன் மேல் , அதுவும் ரொம்ப ஜாலியாக எதற்கும் மசியாத முரட்டு பிடிவாதம் கொண்ட ஆணை பார்த்தும் இந்த மாதிரி பிரச்சினைகளை எதிர் கொள்ளத்தான் சொல்லும். அதற்காக இப்படியா? தயவு செய்து என்னை எதிர் பார்க்காதே.”
“எனக்கு என் தந்தையின் வியாபார சாம்ராஜ்யத்தை விட நான் பெரிய ஒரு பிசினஸ் மேக்னட்டாக மாற வேண்டும். அதற்கு இந்த மாதிரி சின்னச் சின்னப் பிரச்சினைகள் எல்லாம் வரும் போது கண்டிப்பாக எனக்கு ஏறும் படிகள் இறங்கு முகமாக இடையூறுதான் ஏற்படுத்தும்.”
“என்ன பூனம் எதுவும் பேசாமலிருந்தால் என்ன அர்த்தம். உன் அண்ணன் திலக் உனக்கு நல்ல வரன் பார்த்துக் கொண்டிருக்கிறான். புதியதாக வரும் உன் கணவனுக்கு இப்படி ஒரு
சில கெட்ட செய்திகள் கூட போய்ச் சேர வேண்டாமே.” என்ற அரசுவின் கயைப் பிடித்துக் கல கலவென்று சிரித்தாள் பூனம்.
‘இவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா’ என்று அரசு யோசித்தபோது “போங்க அரசு. எனக்கு இந்த கல்யாணம் கத்தரிக்காய் எல்லாம் வெறுப்புத் தட்டி விட்டது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? எனக்கு சனி நடக்குதாம். எத்தனைத் திருமணம் முடித்தாலும் கணவன் ஒரு மாதத்திற்குள் பரலோகம் போய் விடுவானாம்.”
“பாவம் இன்னும் திருமணம் செய்து வருகின்ற பாக்கியவானை ஏன் கொல்ல வேண்டும் போப்பா, உங்கள் கல்யாணமும்… கருமாதியும்…” திரும்பவும் சிரித்தாள் பூனம்.
“என்ன பூனம் இவ்வளவு பெரிய பைத்தியக் காரியாக இருக்கிறாய். நாம் 21ம் நூற்றாண்டிலும் 22ம் நூற்றாண்டையும் தாண்ட முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இந்த காலகட்டத்தில் சுக்கிர தசை செவ்வாய் தோஷம் எல்லாம் சொல்லிக்கொண்டு… சாத்திரமாவது சாக்கடையாவது.. முதலில் இந்த ஜோசியம் பார்க்கும் விஷயங்களை முதலில் தூக்கி எறி. நல்ல ஒரு ஆண்மகனை திருமணம் செய்துகொள்.”
“உங்களுக்கு தெரியாது அரசு. என் வாழ்க்கையில் ஜோசியர் சொன்ன மாதிரி பல விஷயங்கள் நடந்து விட்டது. அந்த அமெரிக்க
மாப்பிள்ளை வேண்டாம் நீ விதவையாகி விடுவாய் என்று எவ்வளவோ சொன்ன பிறகும் கேட்காமல் என் அண்ணா திலக் தான் திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்தான். கடைசியில் என்னாயிற்று பார்த்தாயா? நீ நம்பாமல் போகலாம் ஆனால் எனக்கு இதுதான் வாழ்க்கை. இன்னொரு ஆண்மகனை வீணாக கொல்ல விரும்ப வில்லை.”
“ஸாரி, நான் நடந்து கொண்ட முறை சரியில்லாமல் போயிருந்தால் மன்னித்துக்கொள். இனிமேல் உன் வழிக்கே வர மாட்டேன்.” கண்ணீர் மல்க ஓடினாள்.
ஓடிப்போன பூனத்தையே பார்த்து கொண்டிருந்த அரசு தலையை உலுப்பி கொண்ட போது மொபைல் போன் கூவியது.
அத்தியாயம் 23 – பயப் பந்து
நரிமன் பாயிண்டிலுள்ள கடற்கரையின் அருகில் அமர்ந்திருக்கும் பன்னிரண்டு மாடிக் கட்டிடமான மிட்டல் டவரின் ஐந்தாவது மாடியில் தன் அறையில் சிகரெட்டை வேகமாக இழுத்துப் புகையை அறைமுழுவதும் பரப்பிக்கொண்டிருந்தார் ஜே.கே.
திடீரென்று தொலைபேசி அழைக்க, எடுத்து “என்ன விஷயம்” என்றார்.
“ஸார்… உங்களைச் சந்திக்க ராஜேஷ் குப்தா டெக்னோ கிராப்ட் கம்பெனியிலிருந்து வந்திருக்கிறார்” என்றாள் டெலிபோன் ஆபரேட்டர்.
“நான் யாரையும் பார்க்கிற மூடில் இல்லை. ரூபி அவனிடம் நாளைக்கு இதே நேரத்திற்கு இங்கே வரச் சொல். இனி எந்தத் தொலைபேசி வந்தாலும்… அது கடவுளே இருந்தாலும் எனக்கு தொடர்பு கொடுக்காதே.” என்று சொல்லி விட்டு நேரடித் தொடர்பு தொலைபேசியின் தொடர்பைத் துண்டித்து விட்டு திரும்ப சிகரெட் பற்றவைத்துக் கொண்டார்.
உள்ளுக்குள்ளே சிறியதாக ஒரு பயப் பந்து சுருண்டு உருண்டோடியது.
‘தமிழரசு எங்கே போயிருப்பான்… சே! இந்தப் பாபுவை நம்பியது தவறோ? இப்படி அவனை கோட்டை விட்டு விட்டு விட்டார்களே…’
ஒவ்வொரு நாளும் தமிழரசு எங்கே போயிருக்கிறான்? என்ன செய்து கொண்டிருக்கிறான் என்ற செய்திகளோடு ராணியை சமதானப்படுத்திக் கொண்டிருந்தேன். இனி அவள் கேட்டால் என்ன சொல்லப் போகிறேன்?’
நேற்றுவரை அவன் கப்போலி போகும் வரை சரியாக கண்காணித்தவர்கள் எப்படியோ அவனைத் தவற விட்டிருக்கிறார்கள்.
சே! என் ஒரே மகன் .. இப்படி உணவிற்கு கஷ்டப்பட்டு…
அவருக்கு அந்த ஏ.சி . குளிரிலும் வியர்த்ததுக் கொட்ட ஆரம்பித்தது. கோட்டைக் கழற்றி நாற்காலியின் பின்னால் போட்டுக்கொண்டு டையை கழற்றி விட்டுக் கொண்டார்.
வயிறு பசிக்க ஆரம்பித்தது. எதையும் சாப்பிட விருப்பமில்லாமல் குட்டிப் போட்ட பூனையைப்போல அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். மொபைல் போன் சப்தித்தது. எடுத்து பார்த்தார்
வீட்டிலுருந்து தான் போன். ‘இவளுக்கு நான் என்ன சொல்லப் போகிறேன். இவ்வளவு பெரிய பிள்ளை தொலைந்து போய் விட்டானே’ என்றா? போனை தொடர்பு படுத்தி “ராணி கொஞ்டம் அவசரக் கூட்டத்தில் இருக்கிறேன். அப்புறம் போன்பண்ணுகிறேன்.” என்று சோல்லி தொடர்பைத் துண்டித்து விட்டு மொபைல் போனையும் அணைத்து மேஜையில் எறிந்தார்.
எதற்காக… ஏன்.. என் மகன் அதுவும் இதற்கு மேல் குழந்தை இருந்தால் சமாளிக்க முடியாதென்று ஒரே பையனாகப் பெற்றெடுத்த இவன்.. என்.. வியாபார சாம்ராஜ்யத்தைக் கவனிக்காமல் இப்படி தனியாக… சுயமாக நிற்க முயற்சிக்கிறானே… இவனை என்னச் சொல்ல…என்ன செய்ய…
வீட்டிற்கு திரும்பி விடுவான் என்ற நம்பிக்கையில் ஒரு மாதத்திற்கும்மேல் ஆகி விட்டது. இனி அவனுக்கு புதிய வாழ்க்கை பழகி விட்டால் திரும்ப வருவதற்கு அவனுக்கே கடினமாகி விடும்.
அந்த அளவிற்கு விட்டு விடக் கூடாது. நான் என் மகனை திரும்ப என்னிடம் வரச் சொல்வதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்…
அவன் ஆரம்பிக்கும்… அவனுக்கு வருமானம் தரும் ஒவ்வொரு ஆணிவேரையும் பிடுங்கி தீயில் போடலாம். அவனுக்கு உதவி செய்கிற…. உணவு கொடுக்கிற ஒவ்வொருவரையும் மறைமுகமாக
மிரட்ட ஆரம்பித்தால்… அவனுக்கு வேறு வழியில்லாமல் என்னிடம் சரணடைவதற்கு வசதியாக இருக்கும்.
ஆனால் இந்த விஷயம் அவனுக்குத் தெரிய வந்தால்… அப்புறம் அவன் என்னையே வெறுக்க ஆரம்பித்து விடுவான். அதுவே பெரிய பிரச்சினையாகி விடும்.
இன்டர் காமை அழுத்தி “ஒரு கப் காபி கொண்டுவரச் சொல்.” என்று சொல்லி விட்டு திரும்ப மொபையில் போனை தொடர்பு ஏற்படுத்தி பாபுவனக் கூப்பிட்டார்.
“பாபு, ஏதாவது செய்தியுண்டா?”
“இல்லை சார். நம்ம பசங்க இவ்வளவு மோசமாக இருப்பார்கள் என்று எதிர் பார்க்க வில்லை. இன்று இரவிற்குள் நானே தேடிப் பார்த்து நல்ல செய்தியோடு வருகிறேன் சார்.” என்றது எதிர்முனை.
“எப்படி கோட்டை விட்டீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.” என்று எரிச்சல் பட்டவர் “சரி.. நம்முடைய நெட் வொர்க் எவ்வளவு பெரிதாக இருக்கிறது. இவ்வளவு பெரிய ஆள்படை நம்மிடமிருந்த பிறகும் என் பையன் எங்கே போனான் என்பதை நம்மால் தொடர முடிய வில்லை என்பதுதான் உண்மையில் கோபமும் ஆத்திரமுமாக இருக்கிறது” என்றார்.
“வெளியே தெரியாமல் இரகசியமாக சொல்லப்பட வேண்டிய விஷயம். நாம் மற்றொருவருக்குத் தெரியாமல் செயல்பட வேண்டியுள்ளது. நான் இரவிற்குள் நல்ல செய்தி சொல்கிறேன்.”
“பாபு… இல்லையென்றால் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் ஒப்படைத்து விடலாம். நாம் பணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்றார்.
“பணம் ஒரு பிரச்சினை இல்லை என்பது எனக்குத் தெரியும் சார். ஆனால் நாம் எடுக்கின்ற ஒவ்வொடு முடிவும் உங்கள் பையனுக்குத் தெரிய வந்தால் அது உங்களுக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்பதுதான் முக்கியமாக இருப்பதால் ஒவ்வொன்றையும் யோசித்து செய்ய வேண்டியதிருக்கிறது.”
“சரி… எதையோ செய்யுங்கள். எவ்வளவு பணம் வேஸ்ட்…எத்தனை வியாபார விஷயங்கள் அங்கங்கே நின்று கொண்டிருக்கிறது…. எத்தனை மீட்டிங் கேன்சலாகி விட்டது. எத்தனை ஆர்டர்கள் பெண்டிங்கிலே இருக்கிறது… எத்தனை இடங்களில் தயாரிப்பு குறைந்து விட்டது” கத்தினார் ஜே.கே.
அத்தியாயம் 24 – வீண் கோட்டைகள்!?
அலைபேசியை எடுத்து பேசிக்கொண்டிருந்த போது,“உள்ளே வரலாமா?” என்ற அழகான தமிழ்க்குரலைக் கேட்டு நிமிர்ந்த போது கேபின் வாசலில் அனாமிகா நின்று கொண்டிருந்தாள்.
“வா. வா… பார்த்து எவ்வளவு நாளாயிற்று. ஆம் எங்கிருந்து இவ்வளவு அழகாக தமிழ்ப்பேசக் கற்றுக் கொண்டாய்.” மராத்தியில் கேட்டான் அரசு.
“சும்மா தமிழிலேயே பேசுங்கள். உங்களை விட எனக்கு நன்றாக தமிழ் தெரியும். ஆமாம் சிங்கப்பூர் போயிருந்தீர்களாமே.”?
“ஆமாம். இரண்டு எக்ஸ்போர்ட் ஆர்டர்கள் கன்ஃபர்ம் பண்ண வேண்டியதிருந்தது. அத்துடன் ஒஸாகாவில் வேறு ஒரு செமினார் இருந்தது. அதையும் இரண்டு மூன்று கிளையண்ட்ஸ் பார்த்து விட்டு நேற்றுதான் வந்தேன்.”
“ஏயப்பா, ஜப்பனெல்லாம் போகிறீர்கள். ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா?”
“சொன்னால் கூட வந்திருப்பாயாக்கும்.”
“கூட வா என்று சொல்லியிருந்தால் உங்களோடு நரகத்திற்கு கூட வரவே நான் தயார் அரசு.”
அவள் சொன்ன பதிலில் தாக்குண்டவன் போல அவளை ஒரு நிமிடம் மௌனமாக பார்த்தான். தலையை இடதும் வலதுமாக அசைத்துக் கொண்டே “அனாமிகா வீண் கோட்டைகள் கட்டுகிறாய் என்று நினைக்கிறேன்?”
“எது வீண் கற்பனைக் கோட்டைகள் என்று நினைக்கிறீர்கள்?”
“நீ இவ்வளவு விரைவாக தமிழ்ப்படித்து.. என்னை இவ்வளவு எளிதாக உன் மனதில் வரித்துக் கொண்டது… ஒருவேளை நான் உன் மனதில் எனக்குத் தெரியாமால் ஏதாவது ஆசைகளை வளர்த்துக் கொள்ள அனுமதித்து விட்டேனோ?”
‘’அரசு உங்களை முதலில் பார்த்த உடனே என் வாழ்க்கைத் துணைவர் இவர்தான் என்று மனது சொல்லி விட்டது. அப்புறம் தான் மொழி, மதம், ஜாதி, பணம் எல்லாம் புரட்டச் சொன்னது.”
“ஒன்று மட்டும் நம்பினால் நம்புங்கள். ஒன்றுமில்லாத அநாதைப் பையனாக நீங்கள் இருந்திருந்தால் கூட கண்டிப்பாக என் வாழ்வின் எல்லாமே நீங்களாகத் தானிருப்பீர்கள்.”
“பாரு, அனாமிகா. நீ வளர வேண்டியவள். வாழ்க்கையின் ஒவ்வொரு திசைகளையும் ருசிக்க வேண்டியவள். நான் என் சுய முயற்சிக்காக ஓடிக்கொண்டிருக்கிறேன். என்காலில் நின்று கொடி கட்ட வேண்டும் என்ற ஒரே ஆதங்கத்திலே கட்டுத்தறிக் காளையாக அலைந்து கொண்டிருக்கிறேன்.”
“இந்தச் சமயத்தில் என் வாழ்க்கையில் பெண் சகவாசம் என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விஷயம்.”
“பார் காதல் கத்தரிக்காயெல்லம் தூக்கி வைத்து விட்டு என் காலில் நின்று கொடிகட்டிப் பறக்க முயன்று கொண்டிருக்கிற இந்த இடைஞ்சல் எல்லாம் எனக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.”
“சரி காத்திருக்கிறேன்.”
“எது வரை?”
“சாகும் வரை… நரை விழுந்து கண்ணில் திரை விழுந்து ஞாபகம் என் மூளையில் உழலும் வரைக் காத்திருக்கத் தயார் அரசு.”
“நீயும் மனதை…என் இதயத்தில் … அதில் உள்ள உன்னைப் பற்றி எப்படிச் சொல்வது? அனுமான் மார்பைக் கிழித்து ராம் சீதாவைக்
காட்டிய மாதிரி எனக்கும் முடியுமென்றால் கண்டிப்பாக அங்கே நீ உன்னைத்தான் பார்க்க முடியும்.”
“பாரு, அனாமிகா. கொஞ்சம் கண்டிப்பாக சொல்கிறேன். நண்பனோட தங்கை என்ற முறையில் தான் சில நேரங்களில் உன்னிடம் கேலி பேசியிருக்கிறேனே ஒழிய கண்டிப்பாக உன் மேல் எனக்கு எந்தக் காதலோ… எதுவுமில்லை என்பது நிச்சமான உண்மை.”
“உள்ளுக்குள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்றைச் சொல்கிறீர்கள் அரசு. மனதிலே கை வைத்துச் சொல்லுங்கள் என்னை நீங்கள் விரும்ப வில்லை என்று.” அவளை அறியாமல் கண்ணீர் கரை புரண்டோடியது.
“கண்களைத் துடைத்துக் கொள் அனாமிகா. என் மனதில் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் கண்டிப்பாக உன்னிடம் சொல்லாமல் இருக்க மாட்டேன். அப்படி உன்னை என் மனம் விரும்பினால் அதைக் கண்டிப்பாக திறந்து காட்டுவேனே ஒழிய பூட்டி வைக்க மாட்டேன்.”
“என்னதான் சொல்ல வருகிறீர்கள்?” திரும்பவும் பொங்கிய கண்ணீருடன் கேட்டாள் அனாமிகா.
“இப்போது என் நோக்கமெல்லாம் என் அப்பா அளவிற்கு என் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதுதான்”. என அவன் முடிப்பதற்குள் அவள் அழுதுகொண்டே ஓடினாள்…
– தொடரும்…
– முகவரி தேடும் காற்று (நாவல்), முதல் பதிப்பு: 2020, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற வெளியீடு.
![]() |
பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க... |
