கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2025
பார்வையிட்டோர்: 62 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அண்ணாச்சி, அண்ணாச்சி… சீக்கிரமா சிட்டையைப் பதிஞ்சிட்டுக் குடுங்க…” என்று  நச்சரிப்பாகக் கெஞ்சுகிற மயில்த் தாய் பிடுங்கப் போகிறவளைப் போல கைநீட்டுகிறாள். நாலெட்டு தள்ளி கும்பலாய்ப் போகிற ஏழெட்டுச் சிறுமிகள். அவர்களைப் பார்த்து ஒரு கத்தல். 

“ஏய்ய்… கொரங்குகளா, கொஞ்சம் நில்லுங்களேன். கொள்ளையா போகுது”

குச்சியடுக்கிய கட்டைகளின் எண்ணிக்கை சரிபார்த்து ஒற்றையெ ழுத்தில் கையெழுத்துப் போட்ட கணக்குப் பிள்ளை, அவர் தருவதற்குள் பிடுங்கிக்கொண்டு பரபரப்பாய் ஓடுகிற மயில்த்தாய். அடிப்பாவாடை சட சடக்க எறிபட்ட கல்லாக ஒரே ஓட்டம். தீப்பெட்டி யாபீஸ் வெளிக்கதவைத் தாண்டுவதற்குள் வந்து சேர்ந்து கொண்ட மயில்த்தாய்க்கு “தஸ்ஸூ, புஸ்ஸ்” ஸென்று இரைத்தது. 

“எதுக்குடி இப்படி ஓடித் தவிக்குறே ? மெள்ள வரவேண்டியது தானே?” 

“நீங்க என்னத்துக்கு இந்தப் பறப்பு பறந்து போறீக ? நின்னு வரவேண்டியதுதானே? வேன் இன்னும் வரல்லே?” 

“வர்ற நேரம்தான்.” 

தீப்பெட்டியாபீஸின் பிரம்மாண்டம். பகாசுரத்தனம். புகையும், கந்தக நெடியும், பசை நாற்றமும் காற்றையே தின்று ஜீரணித்திருந்தன. விரிந்த வெளிமுற்றம். வரிசையாக வேப்ப மரங்கள். கும்பல் கும்பலாய்ச் சிறுமிகள். பாவாடைச் சிறுமிகள். தாவணிச் சிறுமிகள். 

ஏற்கெனவே பொழுது அடைந்திருந்தது. மேலடிவார மேகங்களின் கனிந்த சிவப்பு, இருண்ட கருமைக்குள் மூழ்கிக் கொண்டிருந்தது. 

“அடியே மயிலு, நாம நாலைஞ்சு நாளா பொழுதையே பாக்கலே இல்லே?” 

“எங்குட்டுப் பாக்க? விடியறதுக்கு முந்தி இங்க க வந்துருதோம். பொழுது அடைஞ்ச பெறகுதானே வீடு போய்ச் சேருதோம்?” 

“பொழுது மொகத்தைப் பாக்கக் கூட நமக்குக் குடுத்து வைக்கலை.. ம்ள்ச்சூ!” 

சோகத்தைச் சுமந்த அந்தச் சலிப்பு, மயிலைத் தொடவேயில்லை. அவள் மனசு முழுக்கக் குதூகலம். விளையாட்டுத்தனம். பூவுக்குப் பூவாக மாறிமாறி உட்கார்ந்து விளையாடுகிற வண்ணத்துப் பூச்சித்தனம். பார்த்தவர்களுக் கெல்லாம் பற்றிக்கொள்கிற மழலைத்தனம். 

“ஏய் மாரி, காலையிலே வர்றப்ப வேன் டிரைவரு இந்தியன் பாட்டைப் பாதியிலே நிறுத்திட்டாருல்லே ?” 

“கேஸட்டு சிக்கிக்கிட்டு நைஞ்சி போச்சுன்னா… அவரு என்ன செய்வாரு?” 

“அதை இப்பப் போடச் சொல்லணும், விடக்கூடாது.” 

“அதெல்லாம் முடியாது… முத்துலேதா பாட்டுப் போடச் சொல்லணும். ரஜினி பாட்டு.” 

“இந்தியன்லேதான் போடணும். புதுப்பாட்டு, நல்லா யிருக்கும். உனக்குத் தடால்லாம்’ சூப்பர்ப் பாட்டு.” 

“முத்துதான் போடணும்” 

“இந்தியன்தான்.” 

“ஏய்… வாலு, வாயைப் பொத்து.” 

“நீதான் கொரங்கு. வாலைச் சுருட்டு.” 

வேப்பமர இலைக் கூடாரத்திற்குள் மைனாக்களின் உல்லாசச் சண்டைகள். சந்தோஷச் சர்ச்சைகள். இரைதேடிய அலுப்பை மறந்துவிட்ட குதூகலக் கூப்பாடு. ‘கீச்சடி… மூச்சடி’ என்கிற கூட்டுக் கலவைக் கூச்சல். 

லோடுவேன் வந்தது. தீப்பெட்டியாபீஸின் வெளிக்கதவு அகலமாய்த் திறக்க, உள்ளே போனது. 

நிறைய்ய லோடு. அட்டைக்கட்டுகளும், தாள்க்கட்டுகளும் சதுர சதுர மூட்டைகளாகச் சரிந்துகிடந்தன. அவசர அவசரமாய் இறக்கப்பட்டன. டிரைவர் பதற்றமும் பரபரப்புமாய் உள்ளே ஓடினார். மேனேஜரைப் பார்த்து முடித்த வேகத்தில்… துரத்தப் பட்டவராக ஓடிவந்தார். ஏன் லேட்? என்று ‘தாட் பூட்’டென்று விரட்டியிருப்பார் போலும். 

டிரைவர் முகத்தில் அதன் வெக்கை. நேரில் காட்ட முடியாத கோபத்தையெல்லாம் கெட்டவார்த்தை முணு முணுப்புகளாகக் கசியவிட்டார். 

கேபினுக்குள் ஏறிக் கதவை அறைந்து சாத்திய சத்தத்தில் கோபம் முகம் காட்டியது. வேன் வட்டமடித்துத் திரும்பி… வெளியே வந்து உறுமலோடு நின்றது. 

“ம்…ம்…சீக்கிரம் ஏறுங்க” என்று சிறுமிகளை அதட்டினார்.

வெளிமுற்றம் முழுக்க சிரிப்பும் விளையாட்டுமாக இருந்த சிட்டுக் குருவிகள் விழுந்தடித்துக்கொண்டு ஏறின. ‘காச், மூச்’ சென்று கத்தல்கள். ஏறுவதில் -இடம் பிடிப்பதில் – போட்டி, தள்ளுமுள்ளு. ‘போடி, வாடி’ என்ற ஏசல்கள். வேப்பமரத்து மைனாக்களாக ஒரே சண்டைக்காடு. சத்தக்காடு. 

வேன் டிரைவருக்கு இதையெல்லாம் சகித்துக்கொள்கிற மன நிலை இப்போது இல்லை. இந்தச் சிட்டுகளையெல்லாம் மேனே ஜரைப் பார்ப்பது போல கடுப்போடு வெறித்தார். 

“ஏய்… அறிவுகெட்ட கொரங்குகளா… என்னத்துக்கு இந்த ஆட்டம் போடுதீக? அரவமில்லாம ஏறித் தொலையுங்களேன்…” என்று காட்டுக் கத்தலாய் அலறினார். 

வேன் நகர்ந்து வேகமெடுத்தவுடன் உள்ளுக்குள் நேர்ந்த அலைக்கழிப்பு. ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து சரிந்த அலங்கோலம். “ஹோய்… ஹோய்ய்…” என்று பயங்கர கூவல்காடு. 

டிரைவரின் எரிச்சல். தீயில் எண்ணெய் கொட்டியதுபோல ஒரு தகிப்பு. 

“இப்படி கந்தகக் கெடங்குல போட்டு வறுத்தெடுக்கு றப்பவே… இதுகளுக்கு இம்புட்டு ஆட்டமும் பாட்டமுமா? இதுகளையெல்லாம் வயசுக்கேத்த மாதிரி படிக்க வைச்சு… வெளையாடவுட்டா… ஊரையே குட்டைப் புழுதியாக்கிருமே…ச்சேய்!” 

அவரது எரிச்சல் வண்டியின் அசுரவேகத்தில் தெரிந்தது. ஹெட்லைட்டின் கற்றை வெளிச்சத்தில் பூச்சிகள் பறந்தன. 

வண்டிக்குள் ஒரே கூச்சல். 

“டேப்பு போடுங்கண்ணே.”

“இந்தியன்லே பாட்டு…”

“முத்துலே பாட்டு…” 

“உள்ளத்தை அள்ளித்தாதான் சூப்பர் பாட்டு. அந்தக் கேஸட்டைப் போடுங்கண்ணே…” 

டிரைவருக்கிருந்த எரிச்சலில்…கைக்குக் கிடைத்த கேஸட்டை எடுத்துச் சொருகினார். சுவிட்சைத் தட்டிவிட்டார். 

மயில்த்தாய் கம்பிவலை ஜன்னலில் கன்னம் பதித்து மௌனத்தில் உறைந்து கிடந்தாள். நகர்ந்து கரையும் இருட்டையே வெறித்தாள். 

வேன் ஏறுகிற வரைக்கும் குதூகலவெள்ளமாய்க் கரைபுரண்டவள், சண்டைகளிலும் சர்ச்சைகளிலும் கலந்து கொண்டவள், அர்த்தம் இருந்தோ… இல்லாமலோ சளசளத்தவள், வேன் ஏறி… கம்பிவலை ஜன்னல் பக்கத்தில் இடம் கிடைத்து நின்றவுடன்- 

அவள் கண்ணில்பட்ட காட்சி. சற்று தூரத்தில் – ரோட்டுக்கு அந்தப் பக்கம் – ஒரு சிறுமி. மயில்த்தாய் வயசுதானிருக்கும். பள்ளி யூனிபார்ம் டிரஸ்ஸோடு டயர்ச் சக்கரத்தை உருட்டி உருட்டி சுற்றி வந்தாள். சைக்கிள் டயர். வெறும் டயர். கையில் கட்டைக் குச்சியோடு… துவண்டு நெளியும் அந்த டயர்ச் சக்கரத்தை, ‘ டப், டப், டப்’பென்று அடித்துக்கொண்டே சுற்றினாள். அவளது சின்ன முகம் பீர்க்கைப் பூவாகச் சுடர் விட்டுப் பிரகாசித்தது. மனசின் மகிழ்ச்சி, கண்ணில் மின்னல்களாக… மின்னலின் அசலான பேரொளியாக… நிஜமான குதூகலத்தின் வெளிச்சமாய்… 

அதைப் பார்த்த கணத்தில் – 

மயில்த்தாய்க்குள் எனனவோ நிகழ்ந்தது. அவளுக்குள் நுரை பொங்கி வழிந்த குதூகலம், சட்டென்று வடிந்து, உலர்ந்து, மாயமாகிவிட்டது. வாடிச்சாம்பிப் போன முகம். இழந்த உலகத்தின் ஏக்கத்தில் நைந்து போகிற மனசு, நனைந்த காகிதமாக. 

வேனுக்குள் புளிச்சிப்பமாக அடைபட்டிருக்கிற சிறுமிகள். ஏழெட்டு கிராமத்துச் சிறுமிகள். ஒருத்தர் மூச்சு, ஒருத்தரைச் சுட்டது. “நீ தள்ளிக்கோ… ஏங்காலை மிதிக்காதேடி…, மேலே இடிக்காதேடி…,” “காட்டுப் பன்னி,” “குட்டிநாய்” என்று ஏகமாய்க் கோபச் சத்தங்கள். குமைச்சல். ஒரே கூவல்காடு. எதையும் கவனிக்க முடியாத மனச்சுமையில், மயில்த்தாய். ஜன்னலின் கம்பி வலைப்பின்னல் கன்னத்தில் அழுத்த, இருட்டையே பார்க்கிற அவள். மனசுக்குள் டயர்ச் சக்கரம், டப், டப், டப் பென்று அடிக்கிற சத்தம். டயரின் பின்னால் ஆட்டுக் குட்டியாய்த் துள்ளித் துள்ளி ஓடிய அந்தச் சிறுமி.. 

போன வருஷம். ஆறாப்புப் படித்தாள் மயில்த்தாய். சாயங்காலம் ஆகிவிட்டால் வகுப்பில் மனசு இருக்காது. ரெக்கையை விரித்துவிடும். 

எப்படா பெல் அடிக்கும்… எப்படா வெளையாடப் போகலாம் என்று மனசு கிடந்து ஆலாய்ப் பறக்கும். மணியடித்த மாயத்தில் மயில்த்தாய் பைக் கட்டோடு முதல் பிள்ளையாய் வெளியே வருவாள். ஒரே ஓட்டம். தெருப் புழுதி கிளம்பும். தீயாய்ப் பறப்பாள். 

பைக் கட்டைப் போடுவாள். தண்ணீரை ‘மடக், மடக்’ கென்று அவசரகதியில் குடிப்பாள். அம்மா என்னமோ சொல்லுவாள். புலம்புவாள். “ஆடுகாலிக் கழுதை… ஓங்காலை ஒடிச்சு அடுப்புலே வைக்கணும். சனியன்” என்றெல்லாம் திட்டித் தீர்ப்பாள். எதுவும் காதில் ஏறாது. மறுபடியும் ஒரே ஓட்டம். மேற்கே… களத்தில்தான் வந்து நிற்பாள், விளையாட. 

ஊரின் மேற்கு விளிம்பில் அந்த விரிந்த களம். மைதானம். இந்த இடம் இவளுக்கு ரொம்ப உயிர். தாய்மடி மாதிரி சுகமா யிருக்கும். கண்மூக்கு தெரியாமல் வெறிகொண்ட மகிழ்ச்சியில் விளையாடுவாள். 

அவளை மாதிரியே… ஏழெட்டுச் சிறிசுகள் வந்துவிடும். ஓடிப்பிடித்து விளையாட்டு. கல்போகுது விளையாட்டு. நொண்டியடித்து விளையாட்டு. தட்டாங்கல் விளையாட்டு. இன்னது என்று கணக்கில்லை. எல்லா விளையாட்டுகளும். 

விளையாட விளையாட ஆசையாயிருக்கும். திகட்டவே செய்யாது. நேரம் போவதே தெரியாது. பசியும் தெரியாது. ஒரே விளையாட்டு வெறி. 

இதுதான் அவள் உலகம். அந்த வயசுக்கான உலகம். பூக்களின் உலகம். பூஞ்சிட்டுகளின் உலகம். சிரித்து சிரித்து சிறகடிக்கிற மன உலகம். 

இருட்ட ஆரம்பித்தால்… மயிலுக்குப் பதைப்பு. விளையாட்டை நிறுத்தியாகணுமே என்கிற சங்கடம். அணையும் கங்குகளாக கருமைபடியும் மேகங்களைக் கடுப்புடன் பார்ப்பாள். 

கருகருவென்று மயங்கும். மெல்ல மெல்லக் கவிகிற இருள். பாவாடைப் பூ மறையும். முகங்கள் மறையும். ஒவ்வொன்றாக மறைய மறைய பிள்ளைகள் மனசு பதறும். 

“வீட்டுக்குப் போவணும்.”

“கொஞ்சம் நில்லு.” 

“அம்மா வைவா. அடிப்பா…” 

“அதெல்லாம் அடிக்க மாட்டாக.” 

“ஐயய்யோ! அடி பின்னிருவா.” 

“இரு… இரு… இன்னும் ஒரே ஆட்டம்.” 

“ம் ஹூம் வேண்டாம்.” 

மயில்த்தாய்க்கு என்னவோ போலிருக்கும். இந்தப் பிரிவைத் தாங்கவே முடியாது. கிள்ளப்பட்ட பூமனசாக வாடும். இந்த உலகத்தை விட்டு விலகவே மனசிருக்காது. 

“அவரவரு வூட்டுக்கு, அவரைக்கஞ்சி குடிக்கப்போங்க…” என்று கூட்டுப் கோரஸ். விளையாட்டுக்கு ”ஜன கன மண…” 

துவண்ட நடையாக உயிரில்லாமல் வீடு போவாள், மயில். அரை மனசாக நடப்பாள். எல்லாச் சிட்டுகளும் சிறகு விரித்த பிறகு… கடைசியாளாகத்தான் புறப்படுவாள். அதுவும் ஏக்கப் பெருமூச்சோடு. 

…வேன், மெட்டல் ரோட்டில் தடதடத்தது. அதன் தகரத் திரேகம் தாறுமாறாய்க் கலகலத்தது. ரோட்டோர வேலி மரங்களின் விளார்கள், வேன் தகரத்தில் ‘டர், பர்’ ரென்று இழுக்கிறது. ஒரு சின்னக் கிராமம். வேன் நின்றது. இறங்கிய டிரைவர், பின் கதவைத் திறந்துவிட்டு… “ம், எறங்குங்க” என்றார். ஏழெட்டுச் சிறுமிகள், நாலைந்து தாவணிப் பெண்கள் இறங்கினர். கைளிலிருந்த வெற்றுத் தூக்குச் சட்டிகள் கலகலத்தன. 

‘போய்ட்டு வரட்டா’ என்கிற பிரிவு வார்த்தைகளெல்லாம் கிடையாது. “கொரங்கு… நாயி… போடி… வாடி” என்ற விளையாட்டான வசவுகளும், கேலிகிண்டல்களுமாய்… சிரிப்புச் சத்தமுமாய்… 

டிரைவர் மறுபடியும் கதவைத் தூக்கிச் சாத்தினார். டேப்-ரிக்கார்டு பாட்டுச் சத்தம். வேனுக்குள் இருக்கிற ஒரு சிறுமி, தெருவில் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு போகிறவர்களைப் பார்த்து… பாட்டுச் சத்தத்தை மீறிக் கொண்டு கத்தினாள். 

“அடியே…ய், நாளைக்கு ஞாயிற்றுக்கெழமை. டி.வி.யிலே ‘கமல்’ படம்டி. மைக்கேல் மதன காமராசன். பாக்காம இருந்துராதே…டீ.” 

வேன் மறுபடியும் உறுமிக் கொண்டு உயிர்பெற்றது. வட்ட மடித்துத் திரும்பி வேகமெடுத்தது. 

மயிலுக்குள் மெல்லச் சலனம். வருகிற உயிர். இருட்டி லிருந்து கண்ணைப் பிடுங்கினாள். கத்திய அந்தச் சிறுமியைப் பார்த்தாள். 

“பம்பம்பம்… ஆரம்பம்” என்று பாடிக்கொண்டே ஆடினாள், உட்கார்ந்த நிலையில். 

‘நாளைக்கு ஞாயிறு’ 

இந்த நிஜம், மயில்த்தாய்க்குள் இறங்கியது. சலனமுற்ற மனசு. ஏக்க வேதனையிலிருந்து மெல்ல மீண்டது. ஒடித்துப் போடப்பட்ட சிறகுகளை எடுத்துப் பொருத்திப் பார்த்தாள். பறந்து பார்க்கலாமா… என்று நினைத்த கணத்தில்… உள்ளுக்குள் குப்பென்று பொங்கியெழுகிற ஆசைகள், விளையாட்டு ஆசைகள். 

‘நாளைக்கு விடிஞ்சவுடனே வெளையாடப் போவணும்’ என்று மனசுக்குள் குறித்துக்கொண்டாள். குதூகலமாக இருந்தது. 

‘நொண்டியடிப்பு…’ ‘தட்டாங்கல்… ‘ ‘கல் போகுது… கண்ணா மூச்சி…’ விளையாட்டுகள். 

மனசு ரெக்கையடித்துப் பறந்தது அவளுக்குள். டயர்ச் சக்கரம் உருட்டினாள். மனசுக்குள் தீவிரம். அடைகாத்து குஞ்சு பொறிக் கிற நினைவுகள் 

‘எப்ப வெளையாடப் போவணும்… வெளையாட்டுலே யார் யாரைச் சேர்க்கக்கூடாது… என்னென்ன வெளையாட்டு வெளை யாடலாம்… எப்படியெப்படி வெளையாடலாம்…’ என்று ஒரே நினைவுத் தீவிரம். நினைக்க நினைக்க இனிக்கிற மனசு. இனிக்கும் தேனில் சிக்கிய எறும்பின் சுகமயக்கம். 

“அடியே… மயிலு, ஏங் கண்ணு… ஏந்தங்கம்… அடியே என் வைரப் பெட்டி…” 

உசுப்புற அம்மாவின் சத்தம். பிரிய மறுக்கிற கண்கள். முகத் தில் விழும் வெயிலுக்குப் பிடறியைக் காட்டி குப்புறப் படுத்துக் கொண்டு சிணுங்குகிற மயில். 

“ஏம்மா மயிலு… இங்க பாரு… ஏஞ்செல்லம்… நா காட்டு வேலைக்குப் போவணும்டி.” 

“ஆமா… போ.” 

“எந்திச்சுச் சாப்புட்டுக்கடி…”

“ஆட்டும்.” 

உறக்கச் சடவில் உணர்வில்லாமல் சொல்லுகிற மயில்த்தாய்.

“மோட்டார் ஓடுச்சுன்னா… ஓம் பாவாடை சட்டைகளைத் தொவைச்சுக்கடி…” 

“ம்…ம்…” 

“காலைக் கரண்டு. நாலுகொடம் தண்ணி எடுத்து வைச்சிருடி…” 

“போ… போ… அதெல்லாம் முடியாது. போ.’ 

“சரி… ஞாபகமா சாப்புட்டுக்கோ.” 

“ஆட்டும்.” 

மாறி மாறி நச்சரிக்கிற அம்மா போய்விட்டால் தேவலை என் று அவளுக்குள் ஓர் எரிச்சல். உறக்கத்தை இழக்க விரும்பாத அயற்சி. 

அம்மா… போய்விட்டாள். 

அவளாக உறங்கி முழித்தபோது… மணி ஒன்பதரை. காலை வெய்யில் சுள்ளென்று அறைந்தது. கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை. கண் கூசியது. 

காலைக் கரண்டு. பத்து மணிவரைக்கும் தான் த்ரீபேஸ் கரண்டு. மோட்டார் ஓடும். அப்புறம் கிடையாது. 

அவள் ஆறு நாளாய் உடுத்திக் கழற்றிப் போட்ட அழுக்குப் பாவாடைகள். சட்டைகள். இன்றைக்குத் துவைத்தால்தான்… நாளைக்குத் தீப்பெட்டியாபீஸுக்கு உருப்படியான பாவாடை உடுத்திப் போக முடியும். 

பதறிப் பதைத்துப் போய் எழுந்தாள். “மோட்டார் ஓடுமா… கிணற்றில் தண்ணீர் இருக்குமா?” 

ஒரே ஓட்டமான ஓட்டம். ‘தக், தக், தக்’கென்று தரையதிர வேக வேகமாய் நடந்தாள். ஊருக்கு வடக்கே… ரெண்டு ஓடைகளைத் தாண்டினால்… மோட்டார் கிணறு. 

இவள் ஓடிய வேகத்தில் பதறிப் போய் கலைந்தோடிய, காட்டு மயில்கள். 

நல்லவேளை… பம்ப்ஷெட் மோட்டார் ஓடிக் கொண்டிருந்தது. அரக்க பரக்க சோப்பு போட்டாள். ஏறு வெயில், தொட்டித் தண்ணீருக்குள் ஊதா நிற வானவில்லை உருவாக்கியிருக்கிறது. வெள்ளிக் கற்றையாக அள்ளி ஊற்றுகிற குழாய். 

குளித்து முடித்து வீட்டுக்கு வந்தாள். துணிமணிகளைக் காயப் போட்டாள். அவளுக்குள் ஆயாசமாக வந்தது. கிறு கிறுப்பு. இன்னும் காலைக்கஞ்சி குடிக்கவில்லை. குடிக்க மனசு மில்லை. 

சோம்பலாயிருந்தது. அம்மா சோறு வைத்துக் கொடுத்து… சாப்பிடுடி… சாப்பிடுடி என்று கெஞ்சினால்… அதட்டினால்… நல்லாயிருக்கும். சாப்பிடலாம். 

வீட்டிலுள்ள வெறுமை. ஒற்றைச் சீவனாய் உட்கார்ந் திருக்கிற தனிமை. அதன் பாரச்சுமையின் அழுத்தம். வயிறு பசியெடுத்தாலும். சாப்பிடத் தோன்றவில்லை. ஆனாலும் சாப்பிட்டாகணும், சாப்பிட்டு முடிக்கிற போது, சரிமதியமாகி விட்டது. நிழல், காலடிக்குள் மிதிப்பட்டது. 

இந்நேரம்வரை சாப்பிடாமலிருந்துவிட்டு… இப்போது சாப்பிட்டது… என்னவோ போலிருந்து. நஞ்சடித்த கெண்டையாக ஒரு கிறுகிறுப்பு. தாளமுடியாத அயற்சி. பட படப்பு. 

அப்படியே, கதவை ஒட்டிய நடையில் சரிந்து, சாய்ந்து உட்கார்ந்தாள். சொருகிக்கொண்டு வருகிற கண்கள். அவளுக்குள் ஏதோ ஒரு நப்பாசை. 

அம்மா இருந்தால் திட்டுவாள். நல்ல வேளை. ஆசையாக வலது கைக்கட்டை விரலை வாய்க்குள் திணித்தாள். ஏதோ ஒரு சுகம். தாய் மடியில் முகம் புதைத்த மனப்பரவசம். ஆசை ஆசையாக விரலைச் சூப்பினாள். 

கட்டை விரல் வாய்க்குள் இருக்க… சுட்டுவிரல் கண் புருவத் தை வருடிக் கொடுக்க… கண்ணைச் சொருகிக் கொண்டு ‘சிப், சிப்’ பென்று சூப்பினாள். 

மனசுக்குள் வேன். பாட்டுச் சத்தம். சிறுமிகளின் கூவல்காடு. தினம் தினம் விடியற்காலம் நாலுமணிக்கு முழித்தாக வேண்டிய கட்டாயம். நாய்கூட உறங்குகிற இருட்டில்… கோழி கூவும் முன்பே எந்திரிக்கணும். வேனுக்கு ஓடணும். ராத்திரி ஒம்பது மணிக்குத்தான் ஒறங்க முடியும்… ச்சேய் ! 

நித்தம் நித்தம் சாமக்கூத்தாகிப் போன பிழைப்பு… எதை எதை யோ நினைத்துக் கொண்டேயிருந்தவள், அப்படியே உறங்கிப் போனாள். 

மயில்த்தாய் முழித்துப் பார்க்கிற போது, அம்மா அடுப்பங்கரையில் இருந்தாள். தலைக்குத் துணிப் பொட்டலம் இருக்கிறது. அம்மா வைத்திருப்பாள். 

காலை-கையை நீட்டி நெட்டி முறித்தாள். நல்ல உறக்கம். கடைவாயில் ஒழுகியிருந்த எச்சிலை கையாலேயே வழித்து இழுவிக்கொண்டாள். 

“என்னடி… முழிச்சிட்டீயா…?” 

“ம்.” 

“மதியச் சோறு சாப்புடல்லேடி?”

“காலைக்கஞ்சியே மதியந்தான் குடிச்சேன். ஏம்மா, என்னை உசுப்பலே?” 

“அரை ஒறக்கமும் கொறை ஒறக்கமுமா நெதம் நெதம் ஓடிய லைஞ்சு குச்சியடுக்குதே. இன்னிக்கு ஒரு நாளாச்சும் நல்லா ஒறங்கட்டுமேன்னு நெனைச்சேன். சரி மயிலு, அம்மா சோறு வைக்கட்டா…? சாப்புடுதீயா?” 

“ம்…” 

“சோறு சாப்புடுதீயா, காப்பி குடிக்கீயா?” 

எழுந்து உட்கார்ந்தாள். கை, கால்களில் ரத்த ஓட்டம் நின்று போன மாதிரி ஒரு மதமதப்பு. 

“ஏதாச்சும்…” என்று அசமந்தமாய்ச் சொன்ன மயில்த்தாய், எதையோ நினைத்துக் கொண்டவளாய் சுதாரித்தாள். பதறிப் போய்க் கேட்டாள். 

“ஏம்மா… இப்ப நேரம் எம்புட்டு இருக்கும்?” 

“மணி அஞ்சரைக்கு மேலேயிருக்கும் மயிலு, பால்வண்டி அப்பவே போயிருச்சு.” 

“அஞ்சரையா? ஐயய்யோ.” 

துல்லியமாய்ப் பதைத்தாள். 

“என்னடி?” அம்மாளும் அதிர்ந்துபோய்க்கேட்டாள்.

“ஐயய்யோ… டீ.வி.யிலே படம் நாலரைக்கே போட்டுருப்பானே…” 

“போட்டுப் போகட்டும். நீ காப்பியைக் குடி.” துள்ளியடித்து எழுந்தாள். 

“முக்காப் படம் முடிஞ்சிருக்குமே…” என்று புலம்பிய மயில்த் தாய், அவசர அவசரமாய் முகத்தைக் கழுவினாள். அவள் உடம்பெல்லாம் பரபரப்பு. 

“அடியே… காப்பியைக் குடிடி. ஒறக்கச் சடவு போகும்.”

“நீதான்… குடி…” என்று அலட்சியமும் கோபமுமாய் உதறியெறிந்து பேசிவிட்டு, ஓட்டமாய் ஓடினாள். 

பஞ்சாயத்து டீ.வி. நடுத்தெருவில் இருக்கிறது. எதையோ பறி கொடுத்த வருத்தம். ஓசி டீ.வி.யும் பார்க்கக் கொடுத்து வைக்கலியே, தவற விட்டுட்டோமே… என்கிற எரிச்சல். கோபம், ஆத்திரம். 

யார் மீது? தெரியவில்லை. கண்டமேனிக்கு எல்லாரையும் திட்டினாள். மனசுக்குள். அம்மாவை, தீப்பெட்டியாபீஸை – வேன் டிரைவரை – எல்லாரையும் திட்டிக் கொண்டே தெருவில் ஓடினாள். 

மேற்கே… களம். விரிந்து பரந்த களம். வெறுமையாகிக் கிடந்த களம். தெருவைப் போலவே வெறிச்சோடிப் போய்… ஒரு சுடு குஞ்சுகூட இல்லாமல். 

எல்லோரும் டீ.வி.யில் படம் பார்ப்பார்கள்.

அப்போதுதான் – 

நேற்றைய திட்டம் சுரீரென்று ஞாபகத்தில் வந்தது. ஆசை தீர விளையாடணும் என்ற திட்டம். 

ஓடிய ஓட்டத்தில் அடிப்பாவாடை ‘டப், டப்,’ பென்று அடித்தது. விளையாடாமல் போன – விளையாட முடியாமல் போனதை நினைத்தவுடன் – அவளுக்குள் சப்பென்று அறைகிற ஏமாற்றம். கற்றையாக நெஞ்சுக்குள் ஏறிக்கொண்ட வருத்த அடர்த்தி. 

தூங்கிக் கழிந்துபோன பொழுதை நினைத்து மனசுக்குள் நைந்தாள். 

‘பாழாய்ப் போன உறக்கச் சனியனாலே… வெளையாட முடியாமல் போச்சே. சேய்ய், இன்னிக்கு ஒரு நாளாச்சும் வெளையாடலாம்னு பாத்தா… அதுவும் இப்படியாயிப் போச்சே…’ 

மனசுக்குள் துவண்டாள், மயில்த்தாய். இழந்த உலகத்தை எட்டிப் பிடிக்க முடியாவிட்டாலும், எட்டிப் பார்க்கவும் இயலாமற் போய்விட்டதே… 

இந்த வேதனையின் அவஸ்தையை டீ.வி. படம் குறைக்க முடியவில்லை. டீ.வி. பார்க்கணும், என்கிற ஆசை கூட மட்டுப் பட்டது. 

‘செத்த நாய்க்கு சினிமாதான் கொறைச்சலாக்கும்’ என்கிற விரக்தி. வயசுக்கு மீறின உணர்வு. 

ஓட்டம், நடையாகி… நடை மெதுநடையாக மெலிந்தது. உயிரற்ற நடை. 

மயில்த்தாயின் மெல்லிய அரும்பு மனசுக்குள் காயத் தழும்பா கக் கரடு தட்டிக் கொண்டிருக்கிறது, கசந்த நினைவு. 

– 1996, கல்கி தீபாவளி மலர்.

– என் கனா (சிறுகதைகள்), முதற் பதிப்பு: அக்டோபர் 1999, வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல்.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *