கதம்பம்
(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மகாகவி மாதவன் ஒரு பூஞ்சோலையினுள் நுழைந்தான். மலர்களின் நறுமணம் அவன் மனத்தைக் கவர்ந்தது. நவநவமான ரமணீயக் காட்சியில் அவன் லயித்துவிட்டான். மலர்களின் வர்ணபேதங்கள் சங்கீத ஸ்வரங்களைப்போல ஒன்றோடொன்று இணைந்து இயற்கையன்னை இயற்றிய ஒரு பெரும் காவியம்போல விரிந்து கிடந்தது. அந்த மலர்க்காட்டில் நிசப்தம் எங்கும் ஆட்சி புரிந்தது.
கவிஞன் அருகிருந்த பளிங்கு மேடையின் மீது அமர்ந்தான். கற்பனா லோகத்தில் மூழ்கி விட்டான்.
மலர் உலகத்தில் அன்று என்னவோ திரு நாள் போலிருக்கிறது. மல்லிகைக் கெ
காடியி லிருந்து சில பூக்கள் குதித்து வந்தன. எதிர்ப் பக்கத்திலிருந்து சில சம்பங்கிகளும் உல்லாசமாக நடந்து வந்தன. இரு மலர்க்குமரிகளையும் வர வேற்று இடமளித்தது தடாகத்திலிருந்த ஒரு தாமரை இலை. மல்லிகையும் சம்பங்கியும், அரும்பிய புன்னகையோடு, தாமரை இலையின் மீது அமர்ந்தன. சிறிது நேரத்தில் ரோஜா, செவந்தி, மந்தாரை, கனகாம்பரம், நீலாம்பரம் முதலான மலரினங்களும் தேவ கன்னிகைகள் போல வந்து அவற்றுடன் அமர்ந்தன.
அந்தப் பூங்காவனத்திலுள்ள அத்தனை மலர் இனங்களும் அங்கு வந்து சேர்ந்தவுடன் ஒவ் வொன்றும் தத்தம் தனி அழகைப்பற்றி விஸ் தரிக்க ஆரம்பித்து விட்டன. ஆனால் மனித உள்ளங்களைப் பாழ்படுத்தும் வீண் பெருமையோ அசூயையோ அவைகளிடம் தோன்றவில்லை. ஒரே இன்பமயமான சம்பாஷணைகள்.
“என் இதழ்கள், கன்னியர் அதரங்கள் போல் எவ்வளவு மென்மையாக இருக்கின்றன பார்” என்று தன் அருகிலிருந்த சம்பங்கியைப் பார்த்துக் கூறியது ரோஜா. சம்பங்கி அதன் மெல்லிய இதழ்களில் முத்தமிட்டுவிட்டுத் தன் தூய வெண்மை நிறத்தைப் பாலின் நிறத்திற்கு ஒப்பிட்டது. ஆயிரம் இதழ்களோடு கலகல வென்று நகைத்துக்கொண்டிருந்த செவந்தி “இதோ பார், என் இதழ்கள், தங்க நிறத்தோடு செழித்திருப்பதை. என்லாவண்யத்தை நன்றாகப் பார்த்தாயா?” என்று குலாவியது.
“தங்கத்தின் நிறத்தை நானல்லவா பெற் றிருக்கிறேன்? அதனால்தானே எனக்குக் கன காம்பரம் என்றுகூடப் பெயரிட்டிருக்கிறார்கள்?” என்று ஒரு குதி குதித்தது கனகாம்பரம்.
“தங்க நிறம் உனக்குத்தான் ஏகபோக உரிமை என்று நினைத்துக்கொள்ளாதே! எனக் கும் அதில் தாராளமான பங்கு உண்டு” என்று பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து சொன்னது தாழம்பூ, ஓய்யாரமாக.
“தங்கம் இந்த லோகத்துப் பொருள் தானே அக்கா! நான் ஆகாயத்திலிருந்தே நீலவர்ணத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேனே” என்று நீலாம்பரம் சிறு று குழந்தையைப்போல மழலை மொழிந்தது.
ஒவ்வொரு வகை மலரும் தத்தம் நிறத் தையே பார்த்து உள்ளம் பூரித்துக் கொண்டது. நிற பேதங்களின் அழகு நன்றாகத் துலங்கும்படி யாக அவைகள் வரிசை வரிசையாக அமர்ந்தன. அப்பொழுது ரோஜா கூறினாள்:”என்பக்கத்தில் பச்சை நிறமுள்ள மலர் ஏதாவது இருந்தால், நான் இன்னும் நன்றாய்ச் சோபிப்பேன் ” என்று ரோஜா கூறியதை அருகிலிருந்த ஒரு மருக் கொழுந்துச் செடி கேட்டது. பச்சை வர்ண மலர் இல்லாத குறையைத் தீர்க்க எண்ணி, ஒரு கொத்து மருக்கொழுந்தை உடனே ரோஜாவின் பக்கம் அனுப்பியது. ரோஜாவிற்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. ஒரு துளி தேனை ஆனந்தக் கண்ணீராக வடித்து மகிழ்ந்தது.
பச்சை, ரோஜா, வெள்ளை, சிகப்பு, நீலம், மஞ்சள் ஆகிய பல வர்ணமுள்ள மலரினங்கள் அதனதன் ஸ்தானங்களில் நிறபேதங்கள் சோபிக் கும்படி அமர்ந்தன.
இவை யாவற்றையும் கவனித்துக்கொண்டி ருந்த கவிஞனுடைய இதயம் பரவசமடைந்தது. கற்பனா லோகத்திலிருந்து எழுந்தான். ‘மலர்ச் சேர்க்கை,’ ‘கதம்பம்’ என்று எக்களித் துக்கொண்டே அந்த மலர்களை அப்படியே நார் கொண்டு இணைத்து விட்டான். அதே சமயம் அவனுடைய காதலி புஷ்பவல்லி அவனைத் தேடிக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தாள். கவிஞன் தான் கட்டிய பூங்கொத்தை அவளு டைய கூந்தலில் சூட்டினான். கரிய மேகம் போன்ற அவளுடைய சடைப் பின்னலில் அமர்ந்த அந்தக் கதம்பமலர்களுக்கு இன்னும்ஒரு புது வர்ணம் — கறுப்பு சேர்ந்து விட்டது. தங்கள் அழகையும், நிறங்களையும், மணத்தையும் இன் னும் விளம்பரப் படுத்த- தலைமேல் வைத்துக் கொண்டாட-ஒரு அழகிய மங்கை அகப்பட்டா ளென்று மலர்கள் குதூகலித்துச் சிலிர்த்தன. கவிஞன் கூத்தாட ஆரம்பித்து விட்டான். பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான். கதம்பம்; கதம்பம்’ என்று கூறிக் களித்தான்.
சில நாட்கள் கழிந்தன. கவிஞன் பூஞ் சோலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். வழியில் ஒருவன் கூடையில் ஏதோ கொண்டு போனான்.கூடையிலிருந்து மலர்களின் வாசனை வரவே “கூடையில் என்ன?” என்று கேட்டான் கவிஞன்.
புஷ்ப வியாபாரி கூடையைக் கீழே இறக்கி, கதம்பம், மொளம் அரையணா” என்றான். “அரையணா ” என்ற வார்த்தை கவிஞன் உள்ளத்தில், கூரிய அம்புபோல் தைத்தது. அவனால் ஒன்றும் பேசவே முடியவில்லை. “ஏனுங்க முழிச்சாப்போல நிக்கிறீங்க?” என்று கூறி விட்டுப் புஷ்ப வியாபாரி போய் விட்டான்.
“அட்டா! மனிதன் அழகிற்கல்லவா விலை கூறிவிட்டான். இயற்கை, எத்தனை கோடி காலம் முயற்சித்துப் பெற்றது இந்த அழகை! மனிதன் அதை அற்பக் காசுக்கு மதித்து விட் டானே! மனித இனத்திற்கே உரியதான அழ குணர்ச்சிக்கும்கூட வரி விதிக்கிறானே! என்ன மனிதர்கள்! இனி, சூரிய ஒளியைக்கூடப் பண மாக்கிவிடுவான் இந்த மனிதன்! ஹும், அது அவன் குற்றமல்ல! அவனை ஆட்டி வைக்கும் விதியின் வேலை” என்று முனகிக் கொண்டே பழையபடி பகற் கனவு காணச் சென்றான் கவிஞன்!
– ஆனந்த விகடன், மணிக்கொடி, வசந்தம், யுவன், சக்தி ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன.
– சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி.
| சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம் தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம். நன்றியுரை "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: November 1, 2025
பார்வையிட்டோர்: 80