பானுமதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 1, 2025
பார்வையிட்டோர்: 36 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பானுமதி சுந்தரகுமார பாண்டியனுடைய ஒரே மகள். ரூபலாவண்யத்தில் அவளை மிஞ்சக் கூடிய பெண் அக்காலத்தில் ஒருவருமில்லை. அவளை அவளுடைய மாமன் மகன் விமலநாத னுக்கே மணம் முடிக்க வேண்டுமென்று, அவர் கள் இருவரும் சிறு வயதாக இருக்கும்போதே எல்லோரும் தீர்மானித்திருந்தார்கள். 

பானுமதிக்குப் பதிமூன்று வயதானபோது அவளுடைய குரு வாணிதாசர் திடீரென்று இறந்து விட்டார். இறப்பதற்கு முன் அவர் பானுமதியிடம் ஒரு வாக்குறுதி பெற்றுக் கொண்டார். அதன்படி சித்திரக் கலையில் கைதேர்ந்த ஒருவனையே அவள் மணம் செய்து கொள்ள வேண்டும். பானுமதி சித்திரக் கலை யில் உள்ள இன்பத்தை நன்றாக அனுபவிப்ப தற்கு அதுவே சிறந்த வழியென்று வாணிதாசர் கருதினார். அவளுக்குச் சித்திரக் கலையைக் கற்றுக் கொடுப்பதற்குள் தனக்கு மரணம். நேரிடப் போவதை அறிந்தே வாணிதாசர் தன் சிஷ்யை பானுமதியிடம் இத்தகைய வாக் குறுதி வாங்கிக்கொண்டார். பானுமதிக்கு அப்பொழுது சித்திரக் கலையைப்பற்றி ஒன்றுமே தெரியாது. 

விமலநாதன் இருபது வயதுவரை யுத்தப் பயிற்சியிலேயே ஈடுபட்டு, சிறந்த போர்வீர னானான். அதோடு, பானுமதியை மணக்கத் தகுந்த அழகையும் பெற்றிருந்தான். அடிக்கடி பானுமதியின் இனிய கீதங்களைக் கேட்டு மகிழ் வான். பானுமதியும் விமலநாதனுடைய வீரச் செயல்களைக் கேட்டு மகிழ்வாள். சிறு வயதில் இருவருக்கும் ஏற்பட்ட நேசம், பருவம் வந்த வுடன் காதலாகக் கனிந்தது. 

இவ்வாறிருக்கையில்தான் பானுமதி தன் குரு வாணிதாசருக்கு வாக்குறுதி கொடுக்க நேரிட்டது. குருவின் வார்த்தையை மீறி அவள் நடக்கமுடியாது. ஆனால் விமலநாதனைத் தவிர வேறு யாரையும் கணவனென்று கருதக்கூட அவளால் முடியாது. ஒருபுறம் காதல்! மற் றோர் புறம் குருவின் ஆக்ஞை! இரு லட்சியங் களுக்கிடையே பானுமதியின் மனம் கிடந்து குமைந்துகொண்டிருந்தது. 

பானுமதி தன் குருவிற்கு வாக்குறுதி கொடுத்ததைப்பற்றித் தன் அத்தான் விமலநாத னிடம் தெரிவித்தாள். இந்தச் செய்தியைக் கேட்டவுடன் விமலநாதன் திகைத்து விட்டான். சித்திரக் கலையைப்பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது. ஆகவே இப்பொழுது அவனுடைய காதலுக்குக் குறுக்கே ஒரு தடை ஏற்பட்டது போலிருந்தது. இந்தத் தடையை நீக்குவதற்கு என்ன செய்யலாமென்று பானுமதியும் விமல நாதனும் வெகுநேரம் வரை ஆலோசித்தார்கள். விமலநாதன் சித்திரக் கலையைப் பயின்று வருவ தைத் தவிர வேறு வழியே இல்லை. சித்திரம் தீட்டுவதில், தான் வல்லவனாகும் வரையில் பானுமதி தனக்காகக் காத்திருக்க வேண்டு மென்று அவளிடம் உறுதிமொழி பெற்றுக் கொண்டான். 

மறுநாளே விமலநாதன் ஒரு கைதேர்ந்த சித்திரக் கலைஞனிடம் போய்ச் சேர்ந்தான். பானுமதியைச் சீக்கிரமே மணந்துகொள்ள வேண்டுமென்று அவனுக்கிருந்த ஆத்திரத்தினால் ஒரே வருஷத்திற்குள் அவன் சிறந்த சித்திரக் கலைஞனாகி விட்டான். ஊண் உறக்கங்களைக் கவனிக்காமல் எழில் மிகுந்த ஓவியங்களைத் தீட் டிக்கொண்டே யிருப்பான். காதலின் வேகத் தில் வித்தை லகுவாக வந்து விட்டது. தான் எழுதிய படங்களை எதிரே வைத்துக்கொண்டு கற்சிலை போல விழித்த கண் மூடாமல் உற்று நோக்கி அவற்றின் அழகைப் பருகி ஆனந்திப் பான். அந்தச் சமயங்களில் அவன் இந்த உலகத்தில் இருப்பதாகவே உணர்வதில்லை. 

சித்திரக் கலையில் ஏற்பட்ட அபாரமோகம் காரணமாக, சில காலத்தில் அவன் பானுமதி யையே மறந்து விட்டான். கலை இன்பத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தவனுக்குக் காதலின்பம் திரணமாகத் தோன்றியது. பகல் முழுதும் தன் கைவன்மை விளங்கச் சித்திரம் தீட்டுவதும், இரவில் தன் சித்திரங்களைப் பற்றியே சிந்திப்பதுமாகத் தன் காலத்தைக் கழித்து வந்தான். வேறு வெளி உலகச் சிந்தனையே அவனுக்கு இல்லை. 

விமலநாதன் இவ்வாறு தன்னை மறந்திருப் பது பானுமதிக்குப் பிடிக்கவில்லை. அவன் மெய் மறந்து படம் எழுதிக் கொண்டிருக்கையில் பானுமதி அவனருகில் போய்ப் பேச விரும்பு வாள். ஆனால் விமலநாதன் அவள் வந்ததைப் பார்த்துவிட்டு உடனே தன் வேலையில் ஈடுபட்டு விடுவான். பானுமதி ஏதாவது பேச ஆரம்பித்தால் அவன் “பானு, அதெல்லாமிருக்கட்டும். இந்தச் சித்திரத்தைப் பார்! எவ்வளவு அழகாக இருக்கிறது! என்ன பாவம்! என்ன உணர்ச்சி! ஆஹா ! உருவம் நேரில் வந்து பேசுவது போலி ருக்கிறதே!” என்று ஆரம்பித்து விடுவான். பானுமதி தங்கள் காதல் விஷயமாக ஏதாவது பேசினால் அவன் காது கொடுத்துக் கேட்பதே இல்லை. 

ஒரு நாள் பானுமதி பகல் முழுவதும் அவன் பக்கத்திலேயே காத்திருந்து அவனுடைய சித்திர வேலைகள் முடிந்ததும் தங்களுடைய கலியாண விஷயத்தைப் பற்றிப் பேச்செடுத்தாள். விமலநாதனுக்கு எரிச்சலாக இருந்தது. “பானு, இப்போ வந்து என்னைத் தொந்தரவு பண்ணாதே! இன்னும் ஒரு வருஷம் செல்லட்டும். பின்பு பார்த்துக் கொள்ளலாம்.” என்று சொல்லி அவளை அனுப்பி விட்டான். பானுமதி என்ன சொல்லியும் பயனில்லை. 

விமலநாதன் கூறியபடி ஒரு வருஷம் கழிந்த பின், பானுமதி அவ்விடம் போய்த் தன்னை மணந்துகொள்ளும்படி வற்புறுத்தினாள். அப் பொழுதும் அவன் “என்ன? அதற்குள்ளாகவா ஒரு வருஷம் கழிந்து விட்டது? அடுத்த வருஷம் இதைப்பற்றி யோசிப்போமே! இப்போது என் னிடம் கலியாணத்தைப் பற்றி ஒன்றுமே பேசாதே!” என்று கடிந்து கொண்டான். 

இவ்வாறு சில வருஷங்கள் கழிந்தன. பானுமதி பொறுமையை இழந்து விட்டாள். கடை சித் தடவையாக விமலநாதனிடம் போய் “நீங்கள் என்னை மணப்பீர்களா மாட்டீர்களா? இரண்டிலொன்று சொல்லுங்கள் ” என்று தீர்மானமாகக் கேட்டாள். 

“நான் சித்திரக் கலையில் வல்லவனான பிறகே என் கல்யாணத்தைப் பற்றிச் சிந்திக்க முடியும்!” 

“உங்களைவிடச் சிறந்த ஓவியக்காரர் இந்த நாட்டிலேயே இல்லை என்னும்படி நீங்கள் அவ்வளவு வல்லமை பெற்றிருக்கிறீர்கள். உண்மை இவ்வாறிருக்கையில் நீங்கள் இப்படிப் பேசுவது நியாயமா?” 

“உலகத்திற்கும், உனக்கும் நான் சிறந்த சித்திரக் கலைஞனாகத் தோன்றலாம். ஆனால் என் மனதிற்குமட்டிலும் என்னவோ அப்படித் தோன்றவில்லை. நான் இன்னும் சித்திரக் கலையில் பூரணத் தேர்ச்சி அடையவில்லை என்று தான் உணர்கிறேன்” 

“கலை உலகம் எல்லையற்றது. அடிவானத்தைப் போல எட்ட எட்டப் போய்க்கொண்டே யிருக்கும் தன்மையுள்ளது.” 

“காதலும் அப்படிப்பட்டதுதானே! மணம் செய்து கொள்வதில் எனக்கு இப்பொழுது அவா இல்லை. நீ வேண்டுமானால் வேறு யாரை யேனும் மணந்துகொள்ளலாம். எனக்கு இதில் ஆக்ஷேபணை இல்லை. ஆகையால் தயவு செய்து இனிமேலாவது என்னைத் தொந்தரவு செய்யாம லிரு ”! என்று சொல்லிவிட்டு, முதல் நாள் தான் வரைந்து வைத்திருந்த மேனகையின் படத்தை எதிரே வைத்துக்கொண்டு அதன் அழகில் லயித்துவிட்டான். விமலநாதன் அந்த மேனகை யின் படத்தில் தனது கைத்திறன் முழுவதையும் காட்டியிருந்தான். தேவலோகத்தில் உள்ள ஒரு பெண் இவ்வாறுதானிருக்கவேண்டுமென்று வெகு நாட்கள் கற்பனை செய்து, அவள் நடன மாடுகையில் எவ்விதம் காட்சியளிப்பாள் என்று மனதில் பூரணமாகப் படம் பிடித்து,பாவம் ததும்பும்படி எழுதப்பட்ட படம் அது! அவன் தன் மனோ உலகில் கண்ட லட்சிய உருவம் திரையில் அப்படியே பிரதிபலித்திருந்தது. படத்திலுள்ள ஒவ்வொரு நெழிவு வளைவுகளிலும் அவன் தன் மனதைப் பறிகொடுத்து லயித்திருந்தான். அப்படிப்பட்ட அபூர்வமான ஒரு படத்தைத் தான் வரைந்து விட்டோமென்று அவன் உள்ளம் பூரித்திருந்தான். அவன் இதழ்களில் தன்னையறியாமல் புன்னகை பூத்தது. ஆனந்த வெறியுடன் படத்தின் எதிரே அமர்ந்திருந்தான். 

விமலநாதன் கூறிய கடுமொழிகளைக் கேட் டுப் பானுமதி பல பல யோசித்துக்கொண்டு அவனருகில் நின்றாள். மேனகையின் படத்தை விமலநாதன் அவ்வளவு ரசிப்பதிலிருந்து அவள் அவன் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்தாள். உணர்ச்சி வேகத்தினால் அறிவு மழுங்கிவிடுகிற தல்லவா? அந்தப் படத்திலுள்ள ஏதோ ஒரு பெண்ணின் மீது அவன் காதல் கொண்டுவிட் டான் என்றும், அதனால் தான் அவன் தன்னைப் புறக்கணிக்கிறா னென்றும் அவள் எண்ணினாள். அவ்வாறு எண்ண எண்ண அவளுடைய உள் ளத்தில் பொறாமைத் தீ மூண்டது. தலை சுழல் வதுபோலிருந்தது. உலகமே ஒருவஞ்சக உருவம் போல அவளுக்குத் தோன்றியது. வெறிபிடித்த வள்போலானாள். அரண்மனைக்கு ஓடிப்போய்த் தன் உடைவாளை எடுத்துவந்து மேனகையின் படத்தை ஆத்திரத்துடன் குத்திக் கிழித்து விட்டாள். 

மறு வினாடியில் விமலநாதனின் உடம்பு படபடத்தது.முன்பின் யோசிக்காமல் தன் கை வாளினால் அதே இடத்தில் பானுமதியைக் குத்திக் கொன்று விட்டான். பானுமதியின் ரத்தம் தோய்ந்த தன்கைவாளுடன் விமலநாதன் படத்தின் அருகில் போனான். “உன்னை நெஞ்சில் அல்லவா குத்திவிட்டாள்! இந்த மாதிரியல்லவா குத்தினாள்” என்று சொல்லியவண்ணம் வாளால் தன் மார்பில் குத்திக்கொண்டு விழுந்து விட்டான்.

– ஆனந்த விகடன், மணிக்கொடி, வசந்தம், யுவன், சக்தி ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன.

– சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947, மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி

சிற்பியின் கனவு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1947மணி மன்றம் தமிழ் நூல் வெளியீட்டகம், திருச்சி. சமர்ப்பணம்  தமிழன் தனது கவிச்செல்வத்தையும் இசைச் செல்வத்தையும் நன்கு அனுபவிப்பதற்கு வழிகாட்டிய சிந்தனைச் செல்வர் ரசிகமணி  டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்.   நன்றியுரை  "ஆனந்த விகடன் " "மணிக் கொடி “வசந்தம்”, யுவன்'', "சக்தி" ஆகிய பத்திரிகைகள் இக்கதைகளை முன்னமே பிரசுரித்தன. இந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு எனது நன்றி. இப்பொழுது இவைகளைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *