நிலமங்கை
கதையாசிரியர்: சாண்டில்யன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
சரித்திரக் கதை
கதைப்பதிவு: November 2, 2025
பார்வையிட்டோர்: 281
(1977ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12
அத்தியாயம் 11 – வாழ்க பாண்டிய ராணி!

சோழர்களின் தலைநகராக நீண்ட காலம் சீரும் சிறப்பும் அடைந்திருந்த உறையூர், பாண்டியர்களின் கடைசி. சாம்ராஜ்ய காலத்தில் மிகச் சாதாரண பட்டணமாகிவிட்டதால், அதற்கு அருகிலிருந்த வீரதவளப்பட்டணம் கோட்டை
கொத்தளங்களுடன் மதுரைக்கு அடுத்தபடி பாண்டியர்களின் உள் நாட்டுத் தலைநகரமாகக் காட்சியளித்தது. அந்த முக்கியத்தின் காரணமாகப் பாண்டியர் படையில் ஒரு தனிப்பிரிவு அங்கும் நிறுத்தப்பட்டிருந்ததால், தெற்கு எல்லைகளை மதுரையும் மேற்குக் கிழக்கு எல்லைகளை வீரதவளப் பட்டணமும் ஆளக் கூடிய நிலை ஏற்பட்டிருந்தது. அத்தகைய பட்டணத்துக்குத்தான் நிலமங்கை வீரபாண்டியனைத் தோப்பில் நடந்த விவாதங்களுக்கு மறுநாள் இரவு அழைத்து வந்தாள். அப்படி அழைத்து வந்தவள் நேராக வீரபாண்டியனைப் பிரதான வாசல் வழியாக அழைத்துச் செல்லாமல், மேற்கிலிருந்த சிறுவாசல் வழியாகக் கோட்டைக்குள் அழைத்துச் சென்று சிறுவிடுதி ஒன்றில் தங்க வைத்தாள். அந்த விடுதியில் சகல சௌகரியங்களும் இருந்தாலும் இளவரசனான தான், அங்கு திருட்டுத்தனமாகத்… தங்கவேண்டிய அவசியமென்னவென்று மட்டும் வீரபாண்டியனுக்குப் புரியாததால் அதை வாய் விட்டே கேட்டான் அவன், “இங்கு எதற்காக நான் தங்க வேண்டும்?” என்று.
நிலமங்கை அவனைக் கூர்ந்து நோக்கிவிட்டு “இங்கு ஏதாவது குறையிருக்கிறதா உங்களுக்கு?” என்று வினவினாள்.
அவள் கேட்ட பின்பு அதற்கு உடனடியாகப் பதில் சொல்லாமல் வீரபாண்டியன், அந்தச் சிறு வீட்டின் கூடத்திற்குள்ளும் அறைகளுக்குள்ளும், உலாவிவிட்டுத் திரும்பினான். திரும்பியவன் கூடத்திலேயே நின்றிருந்த நிலமங்கையை நோக்கி, “இல்லை எந்தக் குறைவுமில்லை. சகல சௌகரியங்களும் இருக்கின்றன.” என்று பதில் கூறியவன், “ஏன், நான் அரண்மனைக்கு உன்னுடன் வந்தாலென்ன?” என்று வினவினான்.
“இப்பொழுது வருவதற்கில்லை,” என்றாள் நிலமங்கை.
“ஏன்? இது பாண்டியர் பட்டினந்தானே? நான் இளவரசன் தானே?” என்று வினவினான் எரிச்சலுடன்.
“காயலும் பாண்டியர் பட்டனந்தான். அங்கும் நீங்கள் இளவரசர்தான்.” என்று சுட்டிக் காட்டினாள் நிலமங்கை.
“இங்கும் அபாயம் இருக்கிறதா எனக்கு?”
“ஆம்.”
“என்ன அபாயம்?”
“பெரிய சுமை!”
“சுமையா?”
“ஆம், ஆம்!”
“சற்று விவரிக்கலாமா?”
“நாளை உங்களுக்கே தெரியும்.” இதைச் சொன்ன நிலமங்கை, மேலும் பேச்சை வளர்த்தாமல் அந்த வீட்டின் வாயிலிலிருந்த இரு காவலர்களை அழைத்து இளவரசனுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுக்கும்படி நியமித்துவிட்டு வெளியே சென்றாள்.
வீரபாண்டியனுக்கு எல்லாமே பெரும் புதிராக இருந்தது. காயல்பட்டினத்திலிருந்து தன்னை இழுத்து வந்த நிலமங்கை அந்தச் சிறு வீட்டில் தன்னைத் தங்க வைத்துச் சென்றது, அவள் குறிப்பிட்ட ஆபத்து, எதற்கும் விடை காண முடியவில்லை அவனுக்கு.
“என்னை யாரோ இங்குச் சந்திக்கப் போவதாகக் கூறினாளே நிலமங்கை, அது யாராயிருக்கும்? இதுவரை யாரையும் காணோமே,” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். பிறகு மனத்தை அதிகமாகக் குழப்பிக் கொள்ளாமல் நீராடி, வேறு ஆடை புனைந்து உணவருந்தி படுக்கச் சென்றான். அவன் படுத்து ஒரு நாழிகை கூட இருக்காது. அந்தச் சிறு வீட்டின் கதவு கிறீச் என்ற சத்தத்துடன் திறக்க, அரச உடையணிந்த நடுத்தர வயதைத் தாண்டிய ஒருவர் உள்ளே வந்தார்.
“எங்கே அவள்?” என்று அவர் கேட்ட கேள்வியில் மிகுந்த அதிகாரம் தொக்கி நின்றது மட்டுமல்லாமல்
வீரபாண்டியனுக்கு வியப்பையும் அளித்தது. அவர் குரலும் அவனுக்குப் பிரமிப்பை ஊட்டியது. ஆகவே படுக்கையிலிருந்து துள்ளியெழுந்தான் வீரபாண்டியன். அந்தச் சமயத்தில் அந்தப் பெரியவரும் உள்ளே நுழைந்தார்.
“யார் தாங்களா?” என்று பிரமிப்புடன் கேட்ட வீரபாண்டியன், மண்டியிட்டு அவரை வணங்கி அவர் பாதங்களைத் தொட்டான்.
பெரியவர் புன்முறுவல் கொண்டார். “ஆம் வீரபாண்டியா! நான் தான்,” என்றார். அவன் சிறிய தந்தையான விக்கிரமபாண்டியர்.
“ஒரு வார்த்தை சொல்லியனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே. இப்படி ஒரு பெண்ணை விட்டு ரகசியமாக….” என்று ஏதோ சொல்லப் போனவனைக் கையைக் காட்டி இடைமறித்த விக்கிரம பாண்டியர், “வீரபாண்டியா! பாண்டிய நாட்டை விழுங்க மாலிக்காபூர் வந்து கொண்டிருக்கிறான். அவனுக்குத் துணையாக நமது பரம்பரை எதிரி வல்லாளனும் வருகிறான். பாண்டிய நாட்டை அழிக்க இந்தச் சக்திகளே போதும். போதாக்குறைக்கு உன் அண்ணன் தந்தையின் ரத்தத்தைப் பாண்டிய மண்ணில் சிந்திவிட்டான். உள் நாட்டுக் கலகம் வேறு பாண்டிய நாட்டை ஆட்கொள்ள இருக்கிறது. இந்த நிலையில் காவலில் இருக்கும் உன் உயிருக்கும் உலை வைக்கப்படும் என்பதை அறிந்தேன். ஆகவே உன்னையும் உன் மூலம் பாண்டிய நாட்டையும் காக்க நிலமங்கையை அனுப்பினேன்.” என்றார்.
பிரமித்து நின்றான் வீரபாண்டியன்.
“ஒரு பெண்ணைத்தானா அனுப்பவேண்டும் என்னைக் காக்க? வேறு ஆண்மகன் யாரும் கிடைக்கவில்லையா?” என்று வினவவும் செய்தான், வீரபாண்டியன் பிரமிப்பை உதறிக் கொண்டு.
“பெண்கள் செய்வதை ஆண்கள் செய்ய முடியாது. தவிர நிலமங்கை செய்யக்கூடியதை யாருமே செய்ய முடியாது. போர்த் தந்திர திலும் அவளுக்கிணை பாண்டிய நாட்டில் கிடையாது” என்று விளக்கினார் விக்கிரமபாண்டியர்.
அதை அவர் சொல்லத் தேவையில்லை. நிலமங்கையின் பெயர் ஏற்கெனவே பாண்டிய நாட்டில் பிரசித்தமாயிருந்தது. போரில் நிகரற்றவளென்பதும் பல வீரர்களை அவள் பணிய வைத்திருக்கிறாளென்பதும் எல்லாரும் அறிந்த – விஷயமென்றாலும் அவளை எதற்காகச் சிறிய. தந்தை தன்னைக் காக்க அனுப்பினார் என்பது புரியவில்லை வீரபாண்டியனுக்கு. அவன் மனதில் எழுந்த அந்த வினாவை விக்கிரமபாண்டியர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆகவே சொன்னார்
“எல்லாவற்றையும்விட ஒரு காரணம் இருக்கிறது வீரபாண்டியா,” என்று.
“என்ன அது?”
“உன் நலத்தில் அக்கறையுள்ளவள் நிலமங்கை.”
“ஆம்; ஆம்.”
“உன் மனைவியாக நிச்சயிக்கப்பட்டவள்.”
“சிறு பிராயத்தில், நாங்கள் ஏதுமறியாத வயதில்…”
விக்கிரமபாண்டியர் நகைத்தார்.
“அந்த வயதில் தான் யாரும் பெரியவர்கள் சொல்வதைக் கேட்பார்கள். அது மட்டுமல்ல வீரபாண்டியா! என் தமையனார் அவளை உனக்கு நிச்சயம் செய்ததில் அரசாங்க சம்பந்தமும் பாண்டிய நாட்டின் நலனும் கலந்திருக்கிறது.” என்றும் கூறினார்.
“எப்படி?” என்று வினவிய வீரபாண்டியனுக்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை அவன் சிறிய தந்தை. சிறிது நேரம் சிந்தித்தார். பிறகு ஒரு வெடியை எடுத்து வீசினார். “அவள் ரவிவர்மன் குலசேகரன் மகள்” என்று மெள்ள மெள்ளச் சொற்களை உதிர்த்தார்.
ஸ்தம்பித்து நின்றான் வீரபாண்டியன். “சேர மன்னன் மகளா?” என்றும் வினவினான் மிதமிஞ்சிய வியப்பால்.
“ஆம்! பாண்டிய நாட்டு ஆபத்தில், உன் திருமணத்தால் சேர மன்னனுக்கும் பங்கு ஏற்படும்.”
“சேர மன்னன் மகள் இங்கு ஏன் வளர்ந்தாள்? ஏன் சேர நாட்டில் வளரவில்லை?” என்று வினவினான் வீரபாண்டியன்.
விக்கிரமபாண்டியர் சில விநாடிகள் தத்தளித்தார்.
“அவளும் உன்னைப்போல் பிறந்தவள், சேர மன்னனின் மூன்றாவது மகள். ஆசைநாயகியின் மகள். இவள் அங்கிருந்தால் ஆபத்தென்று ரவிவர்மன் சிறு வயதிலேயே உன் தந்தையின் பாதுகாப்பில் இருக்கட்டுமென்று அனுப்பி வைத்தார்” என்று மெள்ள மெள்ள உண்மையைச் சொன்னார்.
வீரபாண்டியன் முகத்தில் சிந்தனை படர்ந்தது. புரிகிறது; ஒரு மன்னனின் ஆசைநாயகியின் மகள் இன்னொரு மன்னனின் ஆசைநாயகியின் மகளை மணக்கிறாள். உயர்வு தாழ்வு ஏதுமில்லை. அவளை நமது மந்திரி வளர்த்ததால் அவள் உயர் குலத்தவள் என்று நினைத்தேன்.” என்று வீரபாண்டியன் நகைத்தான்.
விக்கிரமபாண்டியரின் முகத்தில் சினம் பீறிட்டு. நின்றது. அவர் சொற்களிலும் அது பரவி நின்றது.
“குலத்தினால் சிறப்பில்லாவிட்டால் என்ன? குணத்தினால் சிறந்தவள். வீரத்தில் சிறந்தவள். என் அண்ணன் உன்னை இளவரசனாக்கியிராவிட்டால், அவளை நானே வீரதவளபட்டணத்தின் அரியணையில் ஏற்றுவேன். என் இஷ்டத்துக்கு மாறாக உன்னை அங்கு அமரச் செய்ய வேண்டியிருக்கிறது” என்று சுடு சொற்களை உதிர்த்த விக்கிரமபாண்டியர், “நாளை உனக்குத் திருமணம் மகுடாபிஷேகம் இரண்டும்” எனக் கூறி விட்டு அந்த வீட்டிலிருந்து விடுவிடுவென்று வெளியேறினார்.
வீரபாண்டியன் அவரைத் தொடர்ந்து வாயிற்படி வரை சென்றான். விக்கிரமர் திரும்பி, “இங்கும் உன் அண்ணன் ஒற்றர்கள் இருக்கிறார்கள், ஆகவே இந்த வீட்டை விட்டு வெளியேறாதே. நாளை மகுடாபிஷேகத்திற்குப் பின்பு உன் இஷ்டப்படி இருக்கலாம்.” என்றார்.
“அப்புறம் ஒற்றர்கள் ஓடி விடுவார்களோ?” என்று வினவினான் வீரபாண்டியன் விஷமத்துடன்.
“நீயே ஒற்றர்களைக் கண்டுபிடித்து ஒழிக்கலாம். இல்லையேல் உன்னைக் காக்க உன் சமீபத்தில் நிலமங்கை இருப்பாள்.” என்று கூறிவிட்டு விக்கிரமபாண்டியர் சென்றார்.
திரும்பவும் தனது அறைக்கு வந்த வீர பாண்டியன், படுக்கையில் தடாலென்று விழுந்தான். நிலமங்கையிடம் தனது சிறிய தந்தைக்கு இருந்த நம்பிக்கையை நினைத்து வியந்தான். ஆனால் அடுத்த நாள் அவனுக்கு அதற்குப் பல அத்தாட்சிகள் கிடைத்தன.
மறுநாள் வீரதவளப்பட்டணம் மணக்கோலம் பூண்டது. எங்கும் தோரணங்களும், கோலங்களும் அந்த நகரையே திருமண நிலமங்கையாக அடித்தன. வீரர்கள் நடமாட்டமும், கண்காணிப்பும் நிறைந்து திருமணத்துடன் போர்ச்சன்னத்தமும் இருப்பதாகத் தோன்றியது. அந்த மாநகரத்தில், அன்று காலை அரண்மனையில் குறிப்பாக அழைக்கப்பட்ட மந்திரி, பிரதானிகளுக்கு முன்பாக நிலமங்கைக்கும் வீரபாண்டியனுக்கும் திருமணம் நடந்தது. அடுத்த இரண்டு நாழிகைகளுக்கெல்லாம் வீரபாண்டியன் பாண்டிய நாட்டு மன்னனாக முடிசூட்டப்பட்டான். மணிமுடி அவன் தலையில் ஏறியதும் – ஊதப்பட்ட தாரைகளின் ஒலி அடங்கியதும்-விக்கிரமபாண்டியர் சபையில் எழுந்திருந்து, “என் தமையன் இஷ்டப்படி இன்று வீரபாண்டியன் பாண்டிய நாட்டு மன்னனாகி விட்டான். இனி பாண்டிய நாட்டுத் தலைநகர், மதுரையல்ல, வீரதவளப்பட்டணந்தான். இந்த நகரையும் நாட்டையும் காக்க நீங்கள் உங்கள் மன்னன் பக்கலில் நில்லுங்கள். இனி இந்த மாதிரி விழாவை நீங்கள் நீண்ட காலம் பார்க்க முடியாது. மாலிக்காபூர் பாண்டிய நாட்டை நோக்கி வருகிறான். அதைக் காக்க வீரபாண்டியனால் தான் முடியும். அவன் இந்தப் பாண்டிய நிலமங்கையையும் பாதுகாப்பான். இதோ இந்த நிலமங்கையையும் பாதுகாப்பான்” என்று அறிவித்து அரியணையில் வீரபாண்டியன் பக்கலில் அமர்ந்திருந்த நிலமங்கை, மீதும் கண்களை ஓட்டினார்.
“வாழ்க மன்னர்! வாழ்க பாண்டிய ராணி!” என்ற கோஷங்கள் அந்த அலங்கார மண்டபத்தில் பெரிதாக எழுந்தன. மந்திரிப் பிரதானிகள் மன்னனை வணங்கினர்.
அத்தியாயம் 12 – மண் சுமையும் பெண் சுமையும்
மணக்கோலமும் மகுடாபிஷேகக் கோலமும் ஒரே நாளில் பூண்ட வீரபாண்டியன் மனத்தில் மகிழ்ச்சிக்குப் பதில் தீவிர சிந்தனையே படர்ந்து கிடந்ததால், மந்திரிப் பிரதானிகள் தன்னையும் நிலமங்கையையும் குறித்து எழுப்பிய வாழ்த்துக் கோஷங்கள் அதிகமாக அவன் காதில் விழவில்லை. திருமணத்தின்போதும் சரி, மகுடாபிஷேகத்தின் போதும் சரி, திரளான மக்கள் மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படவில்லையென்பதை குறிப்பாகச் சில பெரு வணிகர்களும், மந்திரிப் பிரதானிகளும், உப தளபதிகளும், பொறுக்கியெடுத்தாற்போல் சில வீரர்களும் மட்டுமே அங்கு கூடியிருந்தார்களென்பதையும் மிக நுண்ணிய அறிவுள்ள வீரபாண்டியன் உணர்ந்து கொண்டான். மங்கலம் பாடிய பெண்கள் கூட, பெரிய இடத்துப் பெண்களே தவிரப் பொது மக்கள் கலப்பு தனது திருமணத்தில் அதிகமாகக் சம்பந்தப்படவில்லை என்பதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. திருமணக்கூடத் தூண்களிலும், மகுடாபிஷேக மண்டபத் தூண்களிலும் காத்திருந்த வீரர்கள் அந்தப் பொன் விழாக்களைக் கவனிக்காமல் சதா அங்குமிங்கும் கண்களை அலையவிட்டுக் கொண்டிருந்ததால் தன்னைக் காயலில் பிடித்த பெருத்த அபாயம், அரசனான பின்பும் வீரதவளப்பட்டணத்திலும் போகவில்லையென்ற விபரத்தையும் சந்தேகமறப் புரிந்து கொண்டான்.
இத்தகைய எண்ணங்கள் மனத்திலோட மகுடாபிஷேக மண்டபத்திலிருந்து அந்தப்புரத்துக்கு நடுப்பகல் தாண்டிய பின்பு வந்தவன், அரச உடை நீக்கித் தனது பழைய உடையை அணிந்துகொண்டு இடையில் தனது வாளையும் குறுவாளையும் கட்டிக் கொண்டு, விக்கிரமபாண்டியர் தங்கியிருந்த தனி மாளிகையை நாடிச் சென்றான். அவன் அந்தப்புரத்திலிருந்து புறப்பட்டதும் அவனைத் தொடர இருந்த கட்டியக்காரர்களையும் காவல் வீரர்களையும் சைகை செய்து அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டுத் தன்னந்தனியே விக்கிரம பாண்டியன் மாளிகைக்கு வந்து சிற்றப்பனை அவரது அறையில் சந்தித்தான்.
வயதின் காரணமாக அலுத்து அப்பொழுதுதான் சற்று இளைப்பாறிக் கொண்டிருந்த விக்கிரம பாண்டியர், வீரபாண்டியனை வியப்புடன் நோக்கிப் படுத்த நிலையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.
“இன்று உன் மகுடாபிஷேக நாள், திருமண நாள்” என்று சுட்டியும் காட்டினார்.
“ஆனால் மகிழ்ச்சி நாளல்ல” என்றான் வீர பாண்டியன் திட்டமாக.
“ஏன்?” விக்கிரமபாண்டியர் புரிந்தும் புரியாதது போலவே வினவினார்,
“திருமண மண்டபத்தில் பொது மக்கள் திரளக் காணோம். மகுடாபிஷேக மண்டபத்தில் குறுநில மன்னர் யாரையும் காணோம்” என்ற வீர பாண்டியன் அவரை உற்று நோக்கினான். விக்கிரமபாண்டியர் சிறிது நேரம் சிந்தனையிலிறங்கினார். கடைசியாகக் கேட்டார்: “அதனாலென்ன? இன்று மக்கள் மகிழ வேண்டிய நாளல்லவா?”
“எப்படிப் பழக்கம்?” என்று வினவினான் வீர பாண்டியன், தன் கூரிய விழிகளை விக்கிரம பாண்டியர் மீது நாட்டி.
“பழக்கங்கள் சாதாரண காலத்துக்கு ஏற்பட்டவை” என்று குறிப்பாகச் சொன்னார் விக்கிரமபாண்டியர்.
“இப்போது காலம் அசாதாரணமானதா?”
“மாலிக்காபூர் வருவதையும் உன் அண்ணன் தந்தையைக் கொலை செய்ததையும் உன்னையும் தீர்த்துக்கட்டப் பார்ப்பதையும் எப்படி நினைக்கிறாய்? சாதாரண சம்பவங்களாகவா?”
“அதனால்?”
“காலத்திற்கேற்ற கோலம் போடுகிறோம்” என்ற விக்கிரமபாண்டியர் தமது பஞ்சணையிலிருந்து இறங்கி அறையில் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டே சொன்னார்; “வீரபாண்டியர்; பல படாடோபங்களை, நான் காரணமாகவே உன்னைப் பற்றிய இரு வைபவங்களிலும் தவிர்த்தேன். உனக்கு அபாயம் இங்கும் நீங்கவில்லையென்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டினேன். தூரி வாத்யங்கள் முழங்கப் பட்டணப் பிரவேசம் செய்து கொள்ள வேண்டிய நீ, திருட்டுத்தனமாக அழைத்து வரப்பட்டாய். சிறு விடுதியில் இருத்தப்பட்டாய். பிறகு திடீரெனத் திருமணமும் மகுடாபிஷேகமும் நடந்தன ஆனால் இத்தனை ரகசியமும் உன்னைக் காக்காது. எனது அண்ணன், உன் தந்தை, எப்படி அகற்றப்பட்டாரோ அப்படி உன்னையும் என்னையும் அகற்ற உன் அண்ணனின் ஒற்றர்கள், கொலைகாரர்கள் இந்தப் பட்டணத்திலும் மறைந்து திரிகிறார்கள். ஆகவே நானும் இன்றிரவு இங்கிருந்து மறைந்து விடுவேன்.”
இந்த இடத்தில் பேச்சை நிறுத்திய விக்கிரம பாண்டியர் வீரபாண்டியன் மீது, அர்த்தமும் துக்கமும் நிரம்பிய விழிகளை நாட்டினார். அவர் சொற்களைக் கேட்ட வீரபாண்டியன்
மனத்தில் எல்லையில்லா துன்பச் சுமை ஏறியிருந்தது. “நீங்கள் கொலைகாரர்களுக்கு அஞ்சுகிறீர்களா?” என்று வினவினான் முடிவில்.
“ஆம்,”
“ஏன்?”
“இன்னும் சில நாட்கள் நான் உயிருடன் இருக்க வேண்டியிருக்கிறது.”
“எதற்காக?”
“பாண்டிய நாட்டைக் காக்க!”
“இப்பொழுது அந்தப் பணியை ஏற்றாலென்ன?”
“சந்தர்ப்பம் சரியாயில்லை.”
“எப்பொழுது வரும் சந்தர்ப்பம்?”
“வெகு சீக்கிரம் வரும். அப்பொழுது விக்கிரம பாண்டியன் மறைவிடத்திலிருந்து வெளிவருவான். வெறுங் கையுடனல்ல; வாளேந்தி வருவான். படைகளுடன் வருவான். அப்பொழுது ஒன்று மாலிக்காபூர் திரும்பி ஓடுவான் அல்லது உன் சிற்றப்பன் இந்த மண்ணில் புதைக்கப்படுவான்.” என்ற விக்கிரமபாண்டியர், “வீரபாண்டியா! இப்பொழுது வேறெதுவும் கேட்காதே. என் திட்டங்கள் நிலமங்கைக்குத் தெரியும். எதையும் அவளைக் கேட்டுத் தெரிந்துகொள்.” என்றும் கூறி விட்டு மீண்டும் பஞ்சணையில் படுத்தார்.
“என்னைவிட நிலமங்கையிடம் அத்தனை நம்பிக்கையா உங்களுக்கு?” என்று வினவினான் வீரபாண்டியன்.
‘உன்னைவிட என்ன? என்னை விட அவளிடம் எனக்கு நம்பிக்கை அதிகம். போ வீரபாண்டியா, நிலமங்கை காத்திருப்பாள்,” என்று கண்களை மூடினார்.
அத்துடன் அங்கிருந்து கிளம்பி, சிந்தாக்கிராந்தனாய் அந்தப்புரத்துக்கு வந்த வீரபாண்டியன் அந்தப் பகல் பொழுதைத் தனிமையிலேயே கழித்தான். இரவு நெருங்கியதும் பணிப்பெண்கள் இருவர் அவன் மங்கள ஸ்நானத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். அவன் ஸ்நானம் செய்ததும் அறுசுவை உண்டி படைக்கப்பட்டது. அதை அதிகமாக உண்ணாத வீரதவள மன்னவன் மணவறைக்குச் சென்றபோதும் சிந்தனையுடனேயே சென்றான். அங்கிருந்த கோட்டுக்கால் கட்டிலின் மீது மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மீது சயனித்த போதும் அவன் மனம் நிம்மதியடையவில்லை.
சர்வாலங்கார பூஷிதையாய், மணவறை விளக்குகளைவிட பெருவிளக்காய், உள்ளே நுழைந்து, அறையைத் தாளிட்டுத் திரும்பி, நீள் விழிகளை நிலத்தில் சாயவிட்ட மனையாளையும் காணவில்லை அவன் கண்கள்.
அவன் மன நிலையை நிலமங்கை புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆகவே அன்ன நடை நடந்து அவளே வந்தாள் கட்டிலுக்கருகே. அவள் வந்ததும் அவன் நன்றாகத் தள்ளிப்படுத்தான். நிலமங்கையும் பஞ்சணையின் ஓரத்தில் சயனித்தாள். அவன் மௌனத்தைக் கலைக்க அவளே கேட்டாள், “இதற்குள் மண்சுமை ஏறிவிட்டது போலிருக்கிறது?” என்று மிக மிருதுவாக.
மல்லாந்து படுத்த நிலையில் சொன்னான் வீரபாண்டியன், “ஆம்” என்று.
“அது மட்டுமல்ல மன்னவா!” என்று லேசாக நகைத்தாள் நிலமங்கை.
“வேறென்னவோ?”
“பெண் சுமையும் ஏறியிருக்கிறது!”
“பெண் சுமையா!”
“ஆம்!”
“யாரது?”
“ஏன் தெரியவில்லையா?”
“இல்லை.”
“தெரிந்து கொள்ளுங்கள்.”
“எப்படி?”
நிலமங்கை சிரித்தாள்.
“ஏன் சிரிக்கிறாய்?” என்று சீறினான் வீரபாண்டியன்.
“என்னைக் கேட்கிறீர்களே! எப்படி என்று அதற்காகச் சிரித்தேன்” என்றாள் நிலமங்கை.
ஆத்திரம் சற்றே விலகியதால் அப்பொழுது தான் புரிந்தது வீரபாண்டியனுக்கு விவரம். அவனும் நகைத்தான்.
“இப்பொழுது என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?” என்று கேட்டான் அவன்
நிலமங்கை பதில் சொல்லவில்லை. ஏளனப் புன்முறுவல் காட்டினாள். பஞ்சணையில் இருவருக்குமிடையில் மூன்றடி இடைவெளியிருந்ததைக் கடைக்கண்ணால் நோக்கினாள். ஏதோ சிந்தித்துவிட்டு அவன் காது கேட்கும் படியாக முணுமுணுத்தாள், “இதைவிட மோசமான கேள்வியை ஆண் பிள்ளையாயிருக்கும் யாரும் கேட்க முடியாது என்று.”
இதைக் கேட்ட வீரபாண்டியன் மல்லாந்த நிலையிலிருந்து ஒருக்களித்துத் திரும்பி அவளை நோக்கினான். அவன் கண்களில் வெறித் தீ ததும்புவதைக் கவனித்தாள் நிலமங்கை. அதன் விளைவாகத் தன் கண்களை மூடிக்கொண்டாள். அடுத்த விநாடி இருவருக்குமிடையே இருந்த மூன்றடி இடைவெளி மறைந்தது. வீரபாண்டியனுக்கு மண் சுமையோடு பெண் சுமையும் சேர்ந்து கொண்டது.
(முற்றும்)
– நிலமங்கை (சரித்திர நாவல்), முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1977, வானதி பதிப்பகம், சென்னை.