கடவுள் மனிதர்கள்!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 212

‘ஊரில் மற்றவர்கள் வாழ்வு சிறப்பானதாக இருக்க, தனது வாழ்வு மட்டும் தாழ்ந்து போனது ஏன்? தனது குடும்பம் மட்டும் உணவுக்கே வழியின்றி வறுமையில் வாடுவது ஏன்?’ எனும் கேள்வி மனதில் எழ, உள்ளூர் முருகன் கோவிலில் சுவாமியை வணங்கிவிட்டு அங்கே பூஜை செய்து கொண்டிருந்த பூசாரியிடம் சென்று தனது சந்தேகக்கேள்வியைக்கேட்டான் சரவணன்.
“தம்பி…. பசிக்கிறவனுக்கு சோறு பெருசு. பார்வையில்லாதவனுக்கு கண்ணு பெருசு. நடக்க முடியாதவனுக்கு காலு பெருசு. வயசாகி நடக்க முடியாத, சாப்பிட முடியாத கோடீஸ்வரனுக்கு ஏழையா இருந்தாலும் வாலிபனா இருக்கிறவன் தான் பெருசாத்தெரியுவானன். உனக்கு பங்களாவும், காரும் பெருசாத்தெரியும். ஓலைக்குடிசை சிறுசாத்தான் தெரியும். ஒடம்பு ஆரோக்யமா இருக்கறதே மிகப்பெரிய சொத்து. வாலிப வயசுங்கிறது வெலையே மதிக்க முடியாத சொத்து. உனக்கு அது இருக்கு. ஆனா பல பேருக்கு அது புரியறதே இல்லை. மண்ணு, பொன்னெல்லாம் அப்புறம்தான். ஆயிரங்கோடி சொத்து உள்ளவங்க நோயால சாப்பிட முடியாம வாழறாங்க. நீ படிச்சிருக்கிறே… வாலிப வயசா இருக்கறே… பார்க்க சாட்சாத் முருகனப்போலவே அழகா வேற இருக்கறே. அதுக்கேத்தாப்ல நீ வேலை தேடு. வேலை கெடைச்சதும் பாடு பட்டு முன்னேறப்பாரு. வசதி வந்துரும். ஒரு வழி தெரியற வரைக்கும் காத்திரு. முருகன் மனுசங்க மூலமா வழிகாட்டுனா அப்புறம் நடக்காதே… ஓடு…. ஓடிட்டே இரு. கடவுள் உனக்கு மனுசங்க மூலமாத்தான் வழிகாட்டி உதவுவாறு….” என கூறி திருநீறு கொடுக்க, அதை வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டான்.
‘முருகா… முருகா…’ என கூறிக்கொண்டே கோவிலைச்சுற்றி வந்த போது அங்கே பிரசாதம் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு பெரியவர் “கூப்பிட்டியாப்பா….?” என்றதும், சுதாரித்தவன், ‘ நான் உங்களைக்கூப்பிடவில்லை. முருகனைக்கூப்பிட்டேன்’ என சொல்லாமல், “ஆ….ஆமாங்கய்யா….” என்றான்.
“என்னப்பா…. உனக்கு என்ன பிரச்சினை…? என்னை யாருன்னு உனக்குத்தெரியுமா?” எனக்கேட்டார் பிரசாதத்தை சரவணனுக்கும் கொடுத்தபடி.
“உங்களை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தது போல இருந்தது. அதனால தான்….” தயங்கியபடி கூறினான்.
“அது சரி. உனக்கு வயசு இருபது இருக்கும்னு தோணுது. எனக்கு சதாபிசேகம் முடிஞ்சிருச்சு. என்ற வயசென்னன்னு தெரிஞ்சுக்க. விவரமானவனா இருந்திருந்தா தெரிஞ்சிருப்பே. நீ விபரமானவன்னு முருகன் உன்னப்பார்த்தப்பவே சொல்லிட்டான். அப்புறம் எப்படி நீ என்னை பேரு சொல்லிக்கூப்பிடலாம்…?” என்றார் சற்று முகத்தில் கோபத்தை வரவழைத்தபடி.
இதுவரை துணிவாகப்கப்பேசியவன் குரல் நடுங்க பணிந்தபடி “தவறா இருந்தா மன்னிச்சிடுங்க ஐயா. நான் கடவுள் முருகனையே பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன்…. அது மாதிரியே உங்களையும்…” என்றதும் சாந்தமாக அவனையே பார்த்த பெரியவர், “இந்தா பிரசாதத்த நீயே பக்தர்களுக்கு கொடு” எனக்கூறி தன்னிடமிருந்த பிரசாத பாத்திரத்தை கொடுத்து விட்டு வெளியே சென்று விட்டார்.
பிரசாதத்தை கொடுத்து முடித்து தானும் எடுத்து சாப்பிட்டு விட்டு கைகழுவும் இடத்திற்கு சென்று கைகளை கழுவிக்கொண்டிருந்த போது ஒருவர் வந்து “தம்பி உன்னை ஐயா கூப்பிட்டாரு….” என்றவுடன் தயங்காமல் அவர் பின்னே சென்று பார்த்த போது, தன்னிடம் கோவிலில் பேசிய பெரியவர் பெரிய பென்ஸ் காரில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த படி தன்னையும் தனதருகில் உட்காருமாறு அழைத்த போது வெலவெலத்துப்போனான்.
தனது படிப்புக்கும், வயசுக்கும் சாதாரண கார் கழுவும் வேலை கிடைத்தாலே வறுமையை போக்கிக்கொள்ளலாம் என நினைத்தவனுக்கு பெரிய செல்வந்தர் தன்னை அவர் பக்கத்தில் அமரச்சொன்னது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
தைரியத்தை வரவழைத்து காருக்குள் சென்று அமர்ந்ததும் கார் பெரிய அரண்மனை போன்ற வீட்டின் முன் நின்றது.
உள்ளே அழைத்துச்சென்றவர் பல வேலையாட்கள் இருந்த போதும், தனது மனைவியை அழைத்து சரவணனுக்கு உணவு கொடுக்கச்சொன்னார். உணவருந்தி விட்டு ஹாலில் வந்து அமர்ந்தவன் சொர்க்கலோகத்தில் இருப்பதாக உணர்ந்தான்.
சிறுவயதிலிருந்து கூரை வேய்ந்த குடிசை வீட்டில் வளர்ந்தவன் இது போன்ற வீட்டிற்குள் இதுவரை வராததால் பிரமிப்போடு இருந்தான்.
அப்போது சட்டையை கழட்டி விட்டு பூஜையறையிலிருந்து ‘முருகா’ எனக்கூறியபடி வெற்றுடம்புடன் வந்து தனக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தபடி பேசினார் பெரியவர்.
“நானும் சின்ன வயசுல படிக்கறதுக்கு வசதி இல்லாததுனால வேலை தேடிகிட்டு இருந்தேன். நாம பார்த்த முருகன் கோவில்ல கிடைக்கிற பிரசாதம் தான் என்னோட காலை வேளை சாப்பாடு. தினமும் நான் கோவிலுக்கு போனப்ப அங்க வந்த ஒரு வயதான தொழிலதிபர் தான் என் மேல கரிசனம் வெச்சு என்னை வீட்டுக்கு கூட்டிகிட்டு போயி நல்லா சாப்பாடு போட்டு அந்தக்காலத்துலேயே பணம் ஆயிரம் கையில கொடுத்து ‘தொழில் பண்ணி பெழைச்சுக்கோ….’ ன்னு ஆதரவோட சொல்லி அனுப்பினாரு….” சொன்னவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
“அந்தப்பணத்துல ரோட்டோரம் தள்ளு வண்டி கடை போட்டு வியாபாரம் தொடங்கினேன். இன்னைக்கு நூறு ஹோட்டல் தமிழ்நாடு முழுதுக்கும் நடத்தறேன். ஐநூறு கோடி சொத்து மதிப்பு உயர்ந்து நிக்குது. முருகனுக்கு பத்துக்கோவில் கட்டியிருக்கேன். கடவுளை நாம நம்பிக்கையோட கும்பிடும் போது அவரு சிலையா நம்ம கூட எதுவும் பேசமாட்டாரு. வசதியில்லாத பக்தருக்கு வசதியுள்ள பக்தர் மூலமா உதவுவாரு. அவரோட பேர்ல வாழற வேலுச்சாமி, பழனிச்சாமி, முருகசாமி, ஓதிச்சாமி போன்ற பேர்ல அவரு மனுசங்களோட உள்ளத்துல வாழ்ந்து பக்தர்களுக்கு உதவறதாத்தான் நாம் பாக்கறேன்” என்றவர் தனக்கு மனைவி கொடுத்த வெண் பொங்கல் உணவை சாப்பிட்டவர் உடனே இரண்டு மாத்திரைகளை உதவியாளர் எடுத்துக்கொடுக்க அதை விழுங்கி விட்டு மீண்டும் பேசினார்.
“கடவுள் மனுசங்க மூலமா தன்னோட எண்ணங்களை செயல்படுத்தறதா நம்ம முன்னோர்கள் நம்புனாங்க. அதனாலதான் தொழிலுக்கும், குழந்தைகளுக்கும் கடவுள் பேரை வெச்சாங்க. உனக்கும் ஏதாச்சும் உதவி பண்ணச்சொல்லி எம்பெருமான் முருகன் எனக்குள்ளிருந்து சொன்னதா புரிஞ்சிட்டேன். உனக்கு நம்ம ஹோட்டல்ல சாப்பாடு போட்டு, சம்பளம் கொடுக்க சொல்லியிருக்கேன். நீ போய் இப்பவே வேலைல சேர்ந்துக்கோ” என சொன்னதைக்கேட்டு அவரது காலில் விழுந்து வணங்கி விட்டு, ஹோட்டலுக்கு அவரது உதவியாளர் வந்து அழைத்துச்செல்ல மகிழ்ச்சியுடன் சென்றான் சரவணன்.
ஹோட்டலுக்குள் நுழையும் போது நுழைவாயிலில் இருந்த பெயர் பலகையைப்படித்தான். ‘முருகன் ஹோட்டல்’ என எழுதப்பட்டிருந்தது.
‘கடவுள் முருகனது கோவில்’ என மனதில் நினைத்தே தனது வேலையை பக்தியுடன் அங்கு மாட்டப்பட்டிருந்த முருகன் படத்தை வணங்கியபடி வேகமாகச்செய்ய ஆரம்பித்தான் சரவணன்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
