தெய்வத்தாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 333 
 
 

அம்மா இறந்துவிட்டாள்!

நம்பமுடியாத அதிர்ச்சி யில் உறைந்துபோய் கிடந்தான் ரகு.

கண்ணாடிப் பேழைக்குள் உறங்குவதுபோல் தெரிந்தாள் ஜானகி.

ஒரு நாள் கூட ரகுவை விட்டுப் பிரிந்து வேறிடம் சென்றதில்லை.

தம்பி கண்ணன் அடிக்கடி இது குறித்து புலம்புவான்.

ஏம்மா, உனக்கு ரகு மட்டும்தான் பிள்ளையா? ஏன் நான் இல்லையா? ரகு கூடவே தான் இருக்கணுமா, என்னோட கொஞ்ச நாள் வந்து இருக்கலாமில்ல.

சின்னவனுக்கு புன்னகைத்தவாறே சமாளித்துப் பேசிவிடுவாள் ஜானகி.

அதான் டெய்லி போன்ல பேசிக்கிறோமே கண்ணா, அப்புறம் என்ன?

நீயாவது நான் இல்லனாக்கூட சமாளிச்சிக்குவ.ஆனா உங்க அண்ணனுக்கு நான் கூட இல்லனா தவிச்சிப் போயிடுவான். வயசுதான் நாப்பதாச்சே தவிர, பெண்டாட்டி, பிள்ளைங்கன்னு ஆனபிறகும் இன்னமும் குழந்தை மாதிரி அம்மா நான் கூடவே இருக்கணும்னு ஆசைப்படறான், என்னாலயும் அவனைவிட்டு இருக்க கஷ்டம்டா கண்ணா, ப்ளீஸ் புரிஞ்சிக்கடா.

கெஞ்சும் அம்மாவை மேலும் வற்புறுத்த விரும்பாமல் கண்ணன் சமாதானம் ஆகிவிடுவான்.

தன்னை விட்டு பிரியாமல் கூடவே இருந்த அம்மா இனிமேல் இல்லை, எப்படி இருக்கப்போகிறேன், கண்களில் மீண்டும் கண்ணீர் பிறக்க, பக்கத்தில் இருந்த கண்ணனைப் பார்த்தான் ரகு. அழுது சிவந்த விழிகளோடு சோர்வடைந்த நிலையில் இருந்த அவனைக் காண்கையில் பரிதாபம் மிகுந்தது.

கூடியிருந்த உறவினர் கூட்டத்தில் இருந்து பெரியவர் ஒருவர் குறுக்கிட்டார்.

ஜானகி இறந்தது வருத்தம் தான், அதுக்காக இப்படியே அழுதுகிட்டிருந்தா என்னாவறது? ஆக வேண்டிய சடங்கு, சம்பிரதாயம் இருக்கில்ல.

அதெல்லாம் நாம பார்த்துக்கலாம், ரகு வயதொத்த நபர் பதிலளிக்க, பெரியவர் சற்று மௌனம் காத்துவிட்டு மீண்டும் ஆரம்பித்தார்.

நான் சொல்ல வந்தது கொள்ளி போடற சடங்கு பத்தி. ஜானகியோட வயத்துல பொறந்த ஒரே பிள்ளை கண்ணன், அவன்தான் அதைச் செய்யணும்.

பெரியவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற கண்ணன், ரகுவை நோக்கி வேகமாக திரும்பினான், அண்ணா இவர் என்ன சொல்றாரு…என்று கேட்டதும் ரகு உடல் குலுங்கி அழ ஆரம்பித்தான். பின் தன்னை சமாளித்துக் கொண்டு மெல்ல பேசத் தொடங்கினான்.

ஆமாம் கண்ணா, நீதான் அம்மாவுக்கு பிறந்த பிள்ளை, நான் நம்ம அப்பாவோட மூத்த தாரப்பிள்ளை. என் ரெண்டு வயசுல அம்மா தவறிட்டதால நம்ம அம்மா தான் அப்பாவுக்கு ரெண்டாந்தாரமா வாழ்க்கைப் பட்டாங்க, இந்த விஷயம் கூட எனக்கு சமீபமாத்தான் தெரிஞ்சது. அப்படின்னா பார்த்துக்க அம்மா என்னை எவ்வளவு பிரியமா பார்த்துக்கிட்டாங்கன்னு. எனக்கு கிடைச்ச தெய்வத்தாய் அவங்க, உன்னையும், என்னையும் எந்த வித்தியாசம் காட்டாமல், ஏன் உன்னைவிட என்மேல் அதிகபாசம் வைச்சிருந்தாங்கன்னு உனக்கே தெரியும். மாற்றாந்தாய் கொடுமை யெல்லாம் நிறைய கேள்விப்பட்டிருக்கோம். ஆனா நம்ம அம்மா…

மேற்கொண்டு பேச இயலாமல் விக்கி அழுகிறான் ரகு.

ரகுவையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்த கண்ணன், முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு பெரியவரை நோக்கி தீர்மானமாய் பேசத்துவங்கினான்.

மாமா, சடங்கு, சம்பிரதாயம் விட என் அம்மாவோட உணர்வுகள் தான் முக்கியம். அண்ணன் வேணா அம்மா வயத்துல பொறக்காம இருக்கலாம். ஆனா அவங்க மனசுல அண்ணன் தான் மூத்த பிள்ளை, மாற்றாந்தாய் பிள்ளைங்கற விஷயத்தை, ரகுகிட்ட மட்டும் இல்ல, எங்கிட்டயும் மறைச்சிருக்காங்கன்னா பார்த்துக்கோங்க அவர் மேல எவ்வளவு பாசம் வைச்சிருந்திருப்பாங்க, அண்ணன் சொன்ன மாதிரி அம்மா தெய்வத்தாய்தான். அந்த உன்னத தாய்க்கு பிறந்த நான் மட்டும் எப்படி வேறாக முடியும். எங்க அம்மா சொன்னபடி அண்ணன் தான் அவங்க மூத்த பிள்ளை, அதனால் அம்மாவுக்கான எல்லா சடங்குகளையும் எங்க அண்ணன்தான் செய்யணும்.

உறுதியான குரலில் சொல்லி முடித்தான் கண்ணன்.

தம்பியின் உருவில் தாயின் பிம்பத்தைக் கண்ட ரகு நன்றியுடன் அவனை ஆரத்தழுவிக் கொள்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *