ஒரு பொழுதாயினும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2025
பார்வையிட்டோர்: 64 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புது சைக்கிள் என்றால் ரொம்ப விலையாகும். ஒரு பழைய சைக்கிளாவது வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது. இதற்கு முன் இவன் வேலை பார்த்த இடங்கள் கிராமமாகவும் இல்லாமல் பெரிய நகர மாகவும் இல்லாத இடங்களாக அமைந்து விட்டன. 

வீட்டிலிருந்து ஆபீஸுக்கு நடந்தே போய்விடுவான். பிள்ளைகளும் பள்ளிக்கூடத்திற்கு அப்படியே நடந்து போனார்கள். அவசியப்பட்ட நேரங்களில் யாரிட மாவது சைக்கிள் இரவல் கேட்டு வாங்கிக் கொள்வான். இரவல் கிடைக்காத நேரங்களில் அவசரத்திற் காக வாடகைக்கு சைக்கிள் எடுத்துச் சென்றிருக்கிறான். 

அந்த ஊர்களில் இவனுடைய ஆபீஸ் நண்பர்கள் எல்லோருமே சைக்கிள் வைத்திருந்தனர். வீடு தவறாமல் தாழ்வாரத்திலோ வாசலிலோ சைக்கிள் நிற்கும். அந்த வீட்டு ஆண் வீட்டிலிருக்கிறான் என்பதை வெளியே நிற்கும் சைக்கிள் அடையாளம் காட்டும். 

கேரியரில் தங்கள் வீட்டுக் குழந்தைகளிலொன்றை ஏற்றிக் கொண்டு வெளியே போவார்கள். பெண் குழந்தைகளை அதிகமாய் யாரும் ஏற்றிக் கொள்வ தில்லை. ஆண் குழந்தைகளையே ஏற்றிக் கொண்டு மாலை வேளைகளில் கடைத் தெருவிற்குப் போவார் கள். செல்லமாய் சைக்கிளிலிருந்து இறக்கிவிடுவார்கள். 

நண்பர்கள் வீட்டிற்கு அவசர விஷயமாய்ப் பேசப் போவார்கள். அப்போதும் கடைக்குட்டிப் பையனுக்குத் தலைசீவி வேறு சட்டை மாற்றிக் கேரியரில் உட்கார்த்தி விடுவார்கள் பெண்கள். அடுத்த தெருவிற்குப் போவதானாலும் சைக்கிளில் ஏறிப்போய் வருவார்கள். வழியில் வேண்டியவர்களைக் கண்டால் சைக்கிளிலிருந்து இறங்காமலேயே ஒரு காலைப் பெடலிலும் இன்னொரு காலைத் தரையிலுமாய் ஊன்றி நின்று மணிக் கணக்காய்ப் பேசிக் கொண்டிருப்பார்கள். அதிகாரிகள் எதிரில் வந்தால் சைக்கிளிலிருந்து இறங்கி நடப்பதை ஒரு மரியாதையாக்கியிருந்தார்கள்.

ஓவ்வொருவரும் ஏதாவதொரு சைக்கிள் கடைக்காரனோடு சிநேகமாயிருந்தார்கள். காலையில் அங்கே போய் உட்கார்ந்து பேப்பர் படிப்பது; சைக்கிளில் சிறுசிறு பழுதுகளைச் சரி செய்யச் சொல்லி நுட்ப மாய்ப் பேசுவது;டீ வாங்கிக் கொண்டு வரச் சொல்லிக் குடிப்பது, காற்று அடித்துக் கொள்வது போன்ற வேலைகளில் கிளம்பும் போது டீக்காசு, ரிப்பேர்க் காசு கடைப் பையனுக்கு இனாம் எல்லாவற்றையும் கணக்குப் பார்த்து சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுப்பது பந்தாவாயிருக்கும். 

இவன் இதுவரை சைக்கிள் வாங்காததற்கு இவை யெல்லாம் கூட காரணங்கள். வீட்டிலல்லாமல் காலை யில் வெளியே ஒரு கடையில் போய் உட்கார்ந்து இவனால் டீக் குடிக்க முடியாது. இவன் ஆபீஸ் பியூனையே டீ வாங்கி வரும்படி சொல்ல இவனுக்கு துவரை தைரியம் வந்ததில்லை. அப்படியிருக்க, தெரி யாத ஆளிடம் போய் டீ வாங்கச் சொல்வது இவனால் முடியாதது. தவிரவும் டீ யெல்லாம் குடித்து சைக்கிள் ரிப்பேரெல்லாம் ஆன பின்னால் கணக்குப் பார்த்துக் காசு கொடுக்க இவன் பையில் அவ்வளவு பணப் புழக்கம் எப்போதும் இருப்பதில்லை. 

எல்லாவற்றிற்கும் மேல் சைக்கிள் ஓட்டிச் சல்வ தென்பது ஒரு அவஸ்தையாகவே இருந்து வந்திருக் கிறது. எப்போதாவது சைக்கிள் ஓட்டி விட்டு வந்த மறுநாள் தொடைச் சதை இறுகிக் கொள்ளும், ஆடு சதை விண்விண்ணென்று வலிக்கும். அதனாலும் சைக்கிள் மேல் இவனுக்கு ஆசை வந்ததில்லை. 

ஓசியிலாவது சைக்கிள் வாங்கி இவன் தன் பிள்ளை களை சைக்கிள் கேரியரில் வைத்து ஒரு நாளும் கடைத் தெருவிற்கு அழைத்துச் சென்றதில்லை. சைக்கிள் சவாரி குழந்தைகளின் தூரத்து லட்சியமாகவே இருந் தது. யாராவது நண்பர்கள் இவனைத்தேடி வீட்டிற்கு வந்து வாசலில் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே வந்து பேசிக் கொண்டிருப்பார்கள். இவனுடைய பிள்ளைகள் உடனே வெளியே ஓடி சைக்கிளைச்சுற்றிச் சுற்றி வரும் ஒன்று மணியடிக்கும்; ஒன்று பெடல் சுற்றும். இவை முடித்து ஒன்று சீட்டிலும், ஒன்று கேரியரிலும் உட்கார்ந்து கொள்ளும். இவனோடு பேசியது போதுமென்று வந்தவன் பாதியிலே பேச் சை முடித்துக் கொண்டு குழந்தைகளிடமிருந்து சைக் கிளைப் பிய்த்து எடுத்துச் செல்வான். 

இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும். வீட்டில் எல்லோருக்கும் சாப்பாடு துணிமணி ஆக வேண்டும். கிராமத்திலிருக்கும் வயதான தாய்க்குப் பணம் அனுப்ப வேண்டும். வீட்டு வாடகை, பால், நல்லது கெட்டதுக்குப் போவது, செய்வது இந்த எல் லாவற்றிற்கும் இவனுடைய சம்பளத்திற்கும் இழுபறி நடக்கும். மாதத்தின் முதல் தேதியிலேயே ஒரு சிநேகி தனைக் குறிவைத்து விடுவான். மாதக் கடைசி வரை அவன் நினைவாகவே திரிவான். சம்பளம் வாங்கிய மறுதினமே அவனைப் பிடித்து இழுத்துக் கடன் வாங்கிச் சமாளிப்பான். குழந்தைகளின் சைக் கிள் சவாரிக் கனவுகள் எல்லாம் இதனால் இவனுக்கு உறைத்ததேயில்லை. 

இந்த ஊருக்கு வந்ததும்தான் ஒரு சைக்கிள் இல் லாமல் சமாளிக்க முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. முதலில் இவன் நட்டநடு ஊரில்தான் வீடு பார்க்க ஆரம்பித்தான். ஆகாயத்திற்குச் சொல்லப் பட்ட வாடகையைக் கேட்டுவிட்டுக் கொஞ்சம் கொஞ்சமாய் ஊர்க் கோடிக்கே வந்தான். குறைச்சல் வாடகையில் அங்கேதான் வீடு அமைந்தது. 

‘ஊர்க் கோடியிலா வீடு பிடித்தீர்கள்?’ என்று யாரா வது கேட்டால், ‘ஊர் ஆரம்பத்தில் வீடு கிடைத்திருக் கிறது’ என்று சமாளித்தான். இவன் இருக்கும் வீட்டிலிருந்து பார்த்தபோது தான் பிள்ளைகளின் பள்ளிக் கூடம் வடக்கு மூலையில்,ஆபீஸ் தெற்கில், மார்க்கெட் கிழக்கு மூலையிலிருப்பது தரிந்தது. நேரங்கெட்ட நேரங்களில் பேருக்கு ஒரு டவுன் பஸ் போனது. 

எப்படிப் பார்த்தாலும் ஒரு சைக்கிள் வாங்க வேண்டி யது அத்தியாவசியம் என்றாகி விட்டது. ஆபீஸ் பியூன் அங்கும் இங்குமாய்க் கேட்டுக் கடைசியாய் ஒரு ஆளிடம் கூட்டிப் போனான். எல்லாம் ஐந்து நாட் களுக்குள். அதுவே ஒரு பெரும் சாதனை. 

அவர் விவசாய ஆபீஸில் வேலை பார்க்கிறவர். சைக்கிள் திண்ணையில் நின்றது. அழுக்கு அப்பிக் கிடந்தது. சீட்டுக் கிழிந்திருந்தது. பெயிண்ட் உதிர்ந்து பல தேசப்படங்கள் சைக்கிள் முழுக்க. டயர்கள் இரண்டும் வழுக்கையாயிருந்தன. ஒரு புதிய சைக்கிள் வாங்கப் போவதாகவும் இந்த சைக்கிளை விற்பது பற்றி யோசித்துக் கொண்டிருப்பதாகவும் சொன் னார். ஆபீஸ் பியூன் அவருடைய யோசிக்கும் சக்தியைப் பேசிப் பேசியே சிதறடித்தான். 

மறுநாள் சாயங்காலம் ரூபாயோடு போய் சைக்கி ளோடு வந்தார்கள். வீட்டிற்குப் போகும் வழியில் இவனும் பியூனும் மெயின் ரோடு வரை சைக்கிளைத் தள்ளிக் கொண்டே பேசிக் கொண்டு வந்தனர். இனி அந்த விலக்கு ரோடு வழியாய் போய் வீடு சேர வேண்டும். பியூன் ஊருக்குள் நடக்கத் திரும்பினான். விலக்கு ரோட்டில் சைக்கிளிலேறி சொந்த வாகனத் தின் முதல் சவாரியைத் துவக்கினான். 

பொழுது மெல்ல இருட்டிக் கொண்டிருந்தது. இரண்டு முறை சைக்கிள் டயர்கள் சாலைக் குழிகளுக்குள் ‘டங்’ கென்ற சத்தத்தோடு விழுந்து எழுந்தது. உற்றுப் பார்த்தான். அது தார் ரோடு தான். அரைக்கால் தார் தானிருந்தது. மீதி முக்காலே அரைக்காலும் குண்டும் குழியும்தான்.சுமார் அரை கிலோ மீட்டருக்கு இந்தப் பள்ளங்கள். 

விலக்கிக் கொண்டு போய் இடுக்குகளின் வழியே குழி களில் விழாமல் சில இடங்களில் தப்பிக்க முடிந்தது. கொஞ்ச தூரம் ஓட்டினான். மறுபடி ‘டங்’. நேராய் மூளையில் போயடித்தது. சாலை செய்யப்பட்ட கற் கள் குழிகளுக்குள் நீட்டிக் கொண்டு கூராய் நின்றன. 

சில இடங்களில் சைக்கிளிலிருந்து விழப் பார்த்தான். சமாளித்து மறுபடி ஓட்டும்போது கைகளிலும் உடம்பு முழுக்கவும் சலவையாய்க் கொப்புளித்த வேர்வை. பிடி அடிக்கடி வழுக்கியது. பயம் நரம்புகளில் பரவி லேசாய் நடுங்க ஆரம்பித்தான். 

வீட்டுக்கு வந்ததும் மனைவியும் பிள்ளைகளும் சைக்கிளைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். பிள்ளைகள் சைக்கிளைத் தொட்ட இடங்களிலெல்லாம் வேர்வைப் பிசுபிசுப்பு. அன்று ராத்திரி சாப்பிட்டு விட்டுப் படுக்கப் போகுமுன் திண்ணையில் நிறுத்தியிருந்த சைக்கிளைப் பயத்தோடு பார்த்து விட்டுப் போனான். 

மனைவியோடு ராத்திரி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தான். காலையில் எட்டு மணிக்கு சைக் கிளில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விட வேண்டும். அப்படியே மார்க்கெட்டுக்குப் போய் காய் வாங்கிக் கொண்டு வந்து போட்டு விட்டுக் குளித்து டிபன் சாப்பிட்டு மறுபடி சைக் கிளில் ஏறி ஆபீஸ் போக வேண்டும். சாயங்காலம் பிள்ளைகளை ஆபீஸுக்கு வரச்சொல்லி ஆபீஸ் முடிந்ததும் அவர்களை ஏற்றிக் கொண்டு வீடு வர வேண்டும் என்று தீர்மானமாயிற்று. 

ஒரு சைக்கிள், புதுசோ, பழசோ-வாங்கி வந்து நிற்கிறது. இந்த விலக்கு சாலையின் குழிகளுக்குள் ழுந்து எழுந்து தினமும் போய் வர வேண்டும். என்ற நினைவு வா மனசு படபடவென்று அடித்துக் காண்டது. தூக்கம் வர வெகு நேரமாகி விட்டது. 

விடிந்ததும் ஒரு முறை சைக்கிளைப் பார்த்து விட்டுக் குளிக்கப் போனான். பிள்ளைகளுக்கு இன்று முதல் சைக்கிள் சவாரி என்பதால் குதூகலமாய்ப் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். 

புத்தகப் பைகளை முதுகில் போட்டுக் கொண்டு பிள்ளைகள் படிகளில் இறங்கியதும் இவன் சைக் கிளைத் திறந்து ஸ்டாண்டைக் காலால் தள்ளிப் பின்னால் விட்டான். பின் வீல் உலோகச் சத்தத் தோடு தரையில் விழுந்தது. டயரைத் தொட்டுப் பார்த்தான். ‘வதக்’ கென்று கிடந்தது. துளிக் காற்று இல்லை. 

எல்லார் முகங்களிலும் கவலையும் கோபமும். இவனுக்கு உதடு துடித்தது. பிள்ளைகளை நடந்து போகச் சொல்லிவிட்டு அவளிடம் ரூபாய் வாங்கிக் கொண்டு சைக்கிளை இறக்கினான். தள்ளிக் கொண்டே வெகு தூரந்தாண்டி ரெயில்வே ஸ்டேஷனுக்கருகில் ரவுண்டாணாவுக்குப் போனான். 

இரண்டு மூன்று சைக்கிள் கடைகள் தள்ளித் தள்ளி இருந்தன. முதலிலிருந்த கடையோர வேப்பமரக் கிளையிலிருந்து பாதி சைக்கிள் தொங்கிக் கொண்டி ருந்தது.இவன்போய் ‘பஞ்ச்சர்’ என்றான்.குத்துக் கால் வைத்து ஒரு ரிம்மை உருள விட்டுக் கொண்டிருந்த சைக்கிள் கடைக்காரன் திரும்பி இவனையும் இவன் சைக்கிளையும் பார்த்தான். முகத்தில் ஒரு உணர்ச்சி யுமில்லாமல் மறுபடி ரிம்மைக் கையால் வேகமாய் உருள விட்டுக் கொண்டிருந்தான். 

‘ஆபிஸ் போகணும். கொஞ்சம் அவசரம்’ என்றான் இவன். இந்த ஊருக்குப் போஸ்ட்டிங்ஸ் போட்டவன், இந்த வீட்டை வாடகைக்கு விட்டவன், இந்த சைக் கிளை வாங்கிக் கொடுத்த ஆபிஸ் பியூன், இந்த சைக்கிளை இவனுக்கு பிகு பண்ணிக் கொண்டே தலையில் கட்டிவிட்ட விவசாயத் துறை கிளார்க், அவசரம் புரியாத இந்த சைக்கிள் கடைக்காரன் எல்லோரும் ஒரே நேரத்தில் இவனை இப்போது இம்சை செய்து கொண்டிருந்தார்கள். 

கை வேலையை முடித்து விட்டுக் கடைக்காரன் வீலிலிருந்து டயரைப் பிரித்துக் குடலை உருவுவது போல் டியூபை உருவினான். குண்டாத் தண்ணீரில் ‘பஞ்ச்சர்’ தேடி ஒட்டிக் கொடுத்துவிட்டு ‘ஒரு ரூபாய்’ என்றான். ரூபாயைக் கொடுத்துவிட்டு சைக்கிளிலேறி வீட்டிற்கு வந்து ஆபீஸ் போனான். 

சாயங்காலம் பிள்ளைகளை ஆபிசிலிருந்து சைக்கிளி லேற்றிக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான்.விலக்கு ரோட்டில் திரும்பியதும் குழிகளுக்குள் சைக்கிள் ஏழெட்டுத் தடவை விழுந்தது. ஒன்பதாவது தடவை சைக்கிள் உடைந்த ஒரு பள்ளத்தில் விழுந்தபோது நிலை தடுமாறி சாய்ந்தது. பிள்ளைகள் இரண்டும் தரையில் கிடந்தன. 

சைக்கிளை நிமிர்த்தும்போது உடல் முழுவதும் நடுங்கி யது. மூத்த பெண்ணுக்கு முழங்கால் சிராய்த்து ரத்தம் வந்தது. நடந்து போகிறவர்கள், லாவகமாய் நல்ல சைக்கிள்களில் போகிறவர்கள் பலரும் வேடிக்கை பார்த்தது தலை முழுக்கக் கட்டெறும்புகள் மொய்த்தது போலிருந்தது. 

பிள்ளைகளை ஏற்றிக் கேரியரிலும் பாரிலும் உட்கார வைத்து வெட்கத்துடன் தள்ளிக் கொண்டே வந் தான். வீட்டு வாசலில் நின்று இப்படி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தவள் ஓடிவந்து பிள்ளைகளை இறக்கினாள். இரண்டும் ஓ வென்று அழ ஆரம்பித்தன. ‘எது ஒண்ணையும் தொட்டோம், துலங்கனோம்ணு இல்லையே’ என்று சைக்கிள் பார் மேல் கோபமாய் இடது கையால் ஒரு அடி அடித்து அதே கையால் தலையிலடித்துக் கொண்டாள். 

இவன் மெளனமாய் சைக்கிளைத் திண்ணைக் கேற்றினான். அன்று ராத்திரியும் வெகு நேரம் தூக்கம் வர வில்லை. விடியற்காலையில் எழுந்ததும் நேராய் திண்ணைக்கு வந்து சைக்கிள் டயரைத் தொட்டுப் பார்த்தான். இன்று முன் வீலில் காற்றில்லை. ‘பிள்ளைகளைத் தயார்ப் பண்ணு. இதோ வந்துடறேன்’ என்று அவளிடம் சொல்லி விட்டு உள்ளே போய் ரூபாயெடுத்துக் கொண்டு சைக் கிளைத் தள்ளிய படியே அரை ஓட்டத்தில் சைக்கிள் கடைக்குப் போனான். 

இன்னும் ஒரு கடைக்காரனும் வந்திருக்க வில்லை. வேப்ப மரத்தடியில் இங்கும் அங்கும் நடந்து பார்த்து விட்டு உட்கார்ந்தான். ஒரு மணி நேரமாய் மனசு உலையில் போட்ட அரிசியாய்க் கொதித்துக் கொண்டி ருந்தது. கடைக்காரன் வந்ததும் ‘பஞ்ச்சர்’ என்றான். அவன் கடைச் சாமான்களை ஒவ்வொன்றாயெடுத்து வைத்துக் கொண்டிருக்கையில் இவன், ‘பிள்ளைகளைப் பள்ளிக் கூடத்துக்குக் கூட்டிப் போகணும்’ என்றான். 

கடைக்காரன் பாதியில் நிறுத்தி விட்டுக் குண்டாவில் தண்ணீரெடுத்து வந்து பஞ்ச்சர் பார்த்தான். இரண்டு இடங்களில் தண்ணீர் முட்டையிட்டது. ஒட்டிக் கொடுத்து விட்டு ‘ரெண்டு ரூபா’ என்றான் கடைக்காரன், கிளம்பும்போது அவன் சொன்னான்; ‘கல்லிலே அடிபட்டுப் பஞ்சராகுது. டியூபும் டயரும் ரொம்ப வீக்காயிருக்கு’ 

‘சீக்கிரம் மாத்திருவோம்’, என்று சொல்லிவிட்டு சைக்கிளிலேறிப் பறந்து வீட்டிற்கு வந்தான். பிள்ளைகள் வெகு நேரமாய்க் காத்திருந்து பார்த்து விட்டு நடந்து பள்ளிக்கூடம் போய் விட்டிருந்தன. அவள் முகம் கல்லாய் மாறியிருந்தது. இந்த சைக்கிள் இவனுக்கும் அவளுக்கும் டைவெளி ஏற்படுத்தித் தூரத்தை அதிகமாக்கிக் கொண்டே வருவதாகத் தோன்றியது. 

இரண்டு நாள் கழித்து மறுபடி ‘பஞ்ச்சர்’ ஒட்ட சைக்கிள் கடைக்காரனிடம் போனான், இப்போது இரண்டு வீல்களிலும் பஞ்ச்சர். பழைய செருப்பைத் தைக்கிற ஆளைத் தேடிப் போவது போலிருந்தது, சைக்கிள் கடைக்காரனிடம் போனது. ஒட்டி முடித்து விட்டு டயரைத் தடவிப் பார்த்தான் கடைக்காரன். பின் டயரில் கல்லடித்து ஓட்டைகள் விழுந்திருந்தன. சின்ன டயர் துண்டுகளை ஓட்டைகளுக்கு நேராய் உள்ளே வைத்து அதன் மேல் டியூபை நுழைத்தான். பின் வீலின் இரண்டு இடங்கள் புடைத்து நின்றன. வேலைக்கு வரும் வரை பழைய துணிகளைத் திணித்த தலையணை தான் வீட்டில் இவனுக்கு. இந்த டயரைப் போல் தான் அதுவும் எங்கெங்கோ புடைத்துக் கிடக்கும். 

சைக்கிளில் ஏறி ஓட்டினான். வீல் ஒரு சுற்றுச் சுற்று வதற்குள் இரண்டு முறை தூக்கிப்போட்டது. 

ரெண்டு டயர். ரெண்டு டியூப் என்ன விலை என்று விசாரித்தான். நூறு ரூபாய் ஆகும் எனறு சொன்னார்கள். வீடு அட்டத் தரித்திரத்தில் கிடந்தது. 

அடிக்கடி காலை மாலை என்றில்லாமல் விலக்கு ரோட்டிலும் ஆபீஸ் வாசலிலும் பஞ்ச்சரான சைக் கிளைத் தள்ளிக் கொண்டே தலையைக் குனிந்து கொண்டு திரிந்தான். இந்த விலக்கு ரோடும் முனிஸி பாலிடிக்காரனும் இவன் இரைப்பையையே கிழித்துத் தொங்க விட்டிருப்பது போல் பல ராத்திரிகளில் சொப்பனம் வந்தது. 

இன்று மாலை நாலு மணிக்கு பிராவிடண்ட் பண்ட். கடன் தொகையை ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டி வாங்கினான். உடம்புக்கு சுகமில்லை என்று ஆபீஸில் சொல்லி விட்டு நேராய்க் கடைத் தெருவுக்குப் போனான். ரெண்டு டயர் ரெண்டு டியூப்களை வாங் கிக் கொண்டு சைக்கிள் கடைக் காரனிடம் வந்தான். 

வேர்வையைத் துடைத்தான். ஒற்றைக் காலைச் சாய்த்துக் கொண்டு அலட்சியமாய் நின்றான். ரெண்டு டீ சொல்லு’ என்றான். டீக் குடித்துக் கொண்டே மாலைப் பத்திரிகையைப் படித்தான். புது டயர் புது டியூப்களை மாட்டிவிட்டுப் பழையவைகளை யெல்லாம் ஒரு மூட்டையாய்க் கட்டிக் கொடுத்தான் கடைக்காரன். ‘நீயே வெச்சுக்கோ’ என்று சொல்லிக் கொண்டே பத்து ரூபாயைபும் டீக்காசையும் கொடுத்தான். 

சைக்கிளில் ஏறி உட்கார்ந்து ஓட்டினான். ஆனந்த மாயிருந்தது. வேகமாய்க் கால்களைச் சுழற்றினான். வீட்டிற்குப் போகாமல் விலக்கு ரோட்டிற்குப் போ னான். ‘டக டக’ என்று குழிகளில் விழுந்து எழுந்தது சைக்கிள். ஒரு முறை, இரண்டாம் முறை, மூன்றாம் முறை விலக்கு ரோட்டில் ஒரு வெறியோடு போய்த் திரும்பினான். இருட்டி வீடு வந்து சேர்ந்தான். 

காலையில் எழுந்ததும் நேராகப் போய் வீல்களைத் தொட்டுப் பார்த்தான். கிண்ணென்று டயர்கள் நின்றன. முன் வீலைத் தொட்டுக் கொண்டும் தடவிக் கொண்டும் வெகு நேரம் நின்றான். 

– சாசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, அன்னம் பி.லிட், சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *