இரண்டாவது ஷிப்ட்
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

படுக்கையறை ஜன்னலுக்குப் பின்னால் கொல்லையிலுள்ள இந்த வேப்பமரத்துப் பறவைகள் விடிவதற்கு வெகுநேரமுன்பே எழுந்து விடுகின்றன. இவைகளின் சத்தத்தில் தினமும் எனக்கு மட்டுமே இந்தவீட்டில் தூக்கம் கலைகிறது. எழுந்து முகம் கழுவிவிட்டு அறைக்குள் வந்து பார்த்தால் இவரும் பிள்ளைகளும் போர்வைகளுக்குள் சுகமாய்த் தூங்குகிறார்கள். இவ் வளவு சீக்கிரம் எழுவதும். இசைப்பதும் வேப்பமரத் தின் பெண் பறவைகள் மட்டுமா; ஆண் பறவைகளும் சேர்ந்தா என்று வெகு நாள் ஐயம்.
இதுபற்றித் தெரிந்த யாரிடமாவது கேட்கவேண்டும். புத்தகங்களில் கூட இருக்கலாம். நானும் படித்தேன் கல்லூரியில். இதுமாதிரி நுட்பமாய் என்னென்னவோ படிக்க விட்டுப்போய்விட்டன. இவர்தான் இப்போதும் எதையாவது படித்துக் கொண்டிருக்கிறார். டி.வி.யை மூடப் போகும்போது ‘இருக்கட்டும் உஷா மூடாதே’ என்பார். அரசியல். தத்துவம். விஞ்ஞானம் என்று அறுவைகளாயிருக்கும். இவர் விடாமல் பார்க்கிறார். எதையாவது படிக்கிறார். இவருக்கு எல்லாவற்றிற்கும் நேரம் கிடைக்கிறது.
கதவைத் திறந்து வெளியில் வருகையில் உலகம் ஈரத் துணியாய்க் கிடந்தது. வாசலில் பாலிதீன் பைக்குள் குளுகுளுவென்று பால். பக்கத்தில் இங்கிலீஷ்பேப்பர். பாலை ஒரு கையிலும் பேப்பரை ஒரு கையிலும் எடுத் துக்கொண்டு உள்ளே போகும்போது முழங்கால் இரண்டும் வலித்தன. ஒரு மாதமாய் இந்த வலி. ஒரு வாரமாகிறது, இவர் ஒரு நல்ல டாக்டரைத் தேட ஆரம்பித்து.
ஸ்டவ்வைப் பற்றவைத்துப் பாலை அடுப்பில் போட்டு விட்டு பல்லுக்கிடையில் பிரஷைவைத்துக் கொண்டே மூலைகளிலும் ஸ்டாண்டிலும் கொடியிலும் கிடந்த அழுக்குத் துணிகளைக் குவித்து சோப்பவுடரில் ஊறப் போட்டு விட்டு காப்பி கலக்கினேன்.
பிள்ளைகளை எழுப்பி முகத்தைக் கழுவ வைத்து பிரஷ்களோடு மறுபடி பாத்ரூமுக்குள் அனுப்பித்திரும்ப ”சரி ஒரு தடவை உதட்டோரங்களைப் பார்த்து யாய்ப் போய்க் கொப்புளி” என்று உள்ளே அனுப்பி விட்டு அடுப்புப் பக்கம் போனேன். காப்பியைக் கைகளில் கொடுத்து பாடத்தை எடுத்துப் படிக்கச் ‘ சொல்லிவிட்டுக் கீழே கிடந்த குழந்தைகளின் படுக்கை களைச் சுருட்டி வைத்துவிட்டுகட்டிலைப் பார்த்தேன். இவர் முதலில் படுத்திருந்த திசை மாறாமல் தூங்கிக் கொண்டிருந்தார்.
நேற்று ராத்திரி போட்டிருந்த மீதிகளும் எச்சில்களும் ஒட்டி அழுகல் வாசம் வரும் பாத்திரக் கிடங்குக்குப் பக்கத்தில் நின்று பாத்திரங்களைத் தேய்த்துக் கொண் டிருக்கும் போது கீழே காய்கறி வண்டிக்காரன் குரல் கேட்டது. பாதியில் கையைக் கழுவி முந்தானையில் துடைத்துக் கொண்டு கூடையையும் ரூபாயையும் எடுத்துப் படிகளில் பாதி இறங்குகையில்மேலே இரண் டும் அடித்துக்கொண்டு சத்தம் போடுவது கேட்டது.
மேலே பார்த்து, ‘கலா வாயைமூடிக்கிட்டுப்படி’ என்று கத்திவிட்டு அவசரமாய் இறங்கினேன். இந்தப் பையன் தள்ளுவண்டியில் காய்கறிகளைச் சுத்தமாய்க் கழுவி நூல் பிடித்தது போல் அடுக்கி தினமும் வருகிறான். பச்சையும் மஞ்சளுமாய் இதைப் பார்க்கையில்தான் கண் நிறைகிறது. ஒவ்வொரு வகையாய்ப் பார்த்து அனுபவிக்க ஆசை. இங்கு நிற்கையிலும் அவசரம் எதாவதொரு உருவத்தில் கர்ல்களைச் சுற்றும். இப் போது மேலே பிள்ளைகளின் சண்டைச் சத்தம். கூடவே ஓவென்ற அழுகை.
எரிச்சலோடு மேலே வரும்போது ஆளுக்கொரு மூலை யில் நின்று இரண்டும் தலை கலைந்து அழுது கொண் டிருந்தன தரையில் புத்தகங்களும் பென்சில்களும் இரைந்து கிடந்தன. ஸ்கெட்ச் பேனா ஒரு பாக்கெட் வாங்கிவந்து இரண்டுபேரையும் வைத்துக்கொள்ளச் சொன்னதில் வந்த தகராறு. எல்லாமே இரண்டு இரண்டாய் வாங்க வேண்டும்.
ஆறாவது படிக்கிறாள் இந்தக் கலா. ஒருநாள் கேட் கிறாள். வீட்டுக்கு ரெண்டு சம்பளம் வருது. ரெண்டு வாங்க வேண்டியதுதானே இந்தத் தெரு முழுதிலும் ஆபீஸுக்குப் போகும் நான்கு அம்மாக்களில் தன் அம்மாவும் ஒருத்தி என்பதைக்கூட ஒரு நாள் அவள் அப்பாவிடம் சொன்னாள்.
மூத்தது இப்படி என்றால் இளையவள் விஷமம். படிக்க மட்டும் பிடிக்காது.முணுக்கென்றால் சண்டைக்குத் தயாராகி விடும்.
‘இனி சத்தம் வந்தா கொண்ணு உரிச்சிருவேன். கலா மொதல்லெ நீ குளிக்கப்போ’ என்றதும் மூலையிலிருந்து வெளியே வந்தாள். ‘ராஜி ஏய் இதையெல்லாம் பொறுக்கு’ என்றதும் காலை உதறிக்கொண்டே நின்றது. ஒரு அடி எடுத்து அவளை நோக்கிக் கையைத் தூக்கிக்கொண்டு போனதும் குனிந்து பொறுக்க ஆரம்பித்தாள்.
பாத்திரம் தேய்த்து முடித்துக் காய்கறி நறுக்கிக் கொண்டிருக்கையில் பாத்ரூமிலிருந்து கலா கத்துகிறாள்: ‘அம்மா டவல்’.
எழுந்து போய் டவலைக் கொடுக்கையில் கதவை இத் துணூண்டாய்த் திறந்து வாங்கிக் கொள்கிறது.
ஸ்டவ்வின் இரண்டு அடுப்புகளும் திகுதிகுவென்று எரிகின்றன. சாதமும் குழம்பும் அடுப்புகளில். வெயில் கிழக்கு ஜன்னலுக்குள் வந்து கீற்றுக் கீற்றாய் விழுகின்றன.
இதுதான் அவர் படுக்கையிவிருந்து எழுந்திருக்கும் நேரம். போய்த் தொட்டதும் எழுந்து கொண்டார்.
என்ன உஷா ஒரே சத்தமாக் கேட்டது? என்று சொல்லிக்கொண்டே கண்களைத் துடைத்து விட்டுப்பாதி மெத்தையில் உட்கார்ந்தார். நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் இரண்டு வேலையாவது தாமதப்படும். அடுக்களைக்காகத் திரும்பும் போது பார்த்தேன். என்னைப் பார்த்துப் புன்சிரிப்போடு அவர் எழுந்தது போலிருந்தது.
சின்னவள் உடம்பைத் துவட்டிக் கொண்டிருக்கும் போது இவர் பிரஷோடு பாத்ரூமுக்குள் வந்தார். மிக்ஸியைப் போட்டுவிட்டு நிமிர்ந்த போது சோபாவில் போய் உட்கார்ந்தார். காபியைக் கையில் வாங்கிக் கொண்டே பேப்பரைப் படிக்க ஆரம்பித்தார். ஒரு மடக்கு காப்பி வாய்க்குள்ளும் ஒரு பத்தி செய்தி கண்ணுக்குள்ளும் போய்க் கொண்டிருந்தன.
வெந்த சாதத்தையும் குழம்பையும் இறக்கி வைத்துக் கொண்டிருந்த போது முன் அறையிலிருந்து சத்தம் வந்தது “உஷா ஒங்க டைரக்டரை மாத்தியாச்சு. அஃபீஸியல் போஸ்ட்டிங்கிலே போட்டிருக்கு” என்றார்.
ஒரு வினாடி நேரத்துக்கு டைரக்டர் முகம் கண் முன்னால் வந்தது. ராதா ஒரு நாள் அவர் ரூமுக்குள் போய் பத்து நிமிடம் கழித்து வந்தவள் பேயறைந்தது போல் உட் கார்ந்ததும். தொடர்ந்து ஆபீஸ் முழுவதும் கசமுச வென்று பேச்சும் அப்புறம் நோட்டீஸ் விநியோகங்களும் வாயிற் கூட்டங்களும் நடந்தன. என்னிடம் கூட ராதா பாதிதான் சொன்னாள். ஆனால் ரொம்ப நடந்திருக்க வேண்டும்.
இரண்டுக்கும் தலை சீவிவிட ரிப்பன்களையும் ஹேர் பின்களையும் எடுத்துக்கொண்டு முன் அறைக்கு வந்த போது இவர் பேப்பருக்குள் கிடந்தார். தன்வினை தன்னைச் சுடும். அந்தப் பொண்ணு இப்ப எப்படி இருக்கு உஷா? என்றார் இதுமாதிரியான விஷயங் களை எல்லாக் கணவர்களும் உற்றுக் கவனித்து கொண்டிருப்பார்களோ? உள்பயம் காரணமோ?இவர் அப்படியெல்லாம் இல்லாதவர் போல்தான் தெரி கிறார். ஆம்பிள்ளை மனசில் அரை வாசிதான் ஆயுளுக்கும் அறிய முடியுமென்பாள் அம்மா.
“அந்தப் பொண்ணு ரொம்ப போல்ட் டைப்புங்க. ல்லைனா இந்தப் பொண்ணைத்தான் ட்ரான்ஸ்பர் பண்ணியிருப்பாங்க என்றேன். இந்த வாக்கியங்களை என் வாயால் கேட்டதில் ஆச்சரிப்பட்டது போலவும் ஆதரிப்பது போலவுமிருந்தது அவர் பார்த்த பார்வை.
இன்னும் கொஞ்ச நேரத்தில் ஸ்கூல் பஸ் வந்துவிடும். தயிர் சாதத்தைக் கிண்டி வைத்துவிட்டு முன் அறையைப் பார்த்தபோது டி.வி.யில் இவர் காலைச் செய்தியைக் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த நிமிடம் வரைஉலகம் பூராவும் நடந்த ஒவ்வொன்றும் அவருக் குத் தெரிந்தாக வேண்டும். அப்படி உன்னிப்பாய்க் கேட்பார். பார்ப்பார் செய்திகளை.
அடுத்த டம்ளர் காப்பியோடு அவர் முன்னால் போனேன். “இந்த சதாம் உசேன், ஒத்தை ஆள் உலகத்தையே ஆடவைக்கிறான் பாரு உஷா” என்றார் அவருக்கு எல்லாம் தெரியும். நேற்று ராத்திரி ரஷ்யா வில் கொர்பச்சேவை எதிர்த்துப் பேசிய ஆள். அமெரிக்க செனட்டில் புஷ்ஷை எதிர்க்கும் செனட்டர் பெயர்களைச் சொல்லிப் பேசுவார்.
பிள்ளைகள் இரண்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கை யில் கஜேந்திரன் வந்தார். கஜேந்திரன் இவருக்கு ஆபீஸ்சிநேகிதர். நாலு வீடு தள்ளி இருக்கிறார். ஓடிப் போய் வாங்க’ என்று கேட்டுவிட்டு வந்து மறுபடி காப்பி கலக்க ஆரம்பித்தேன்.
இளையவள் இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவப் போனவளைக் கவனித்துவிட்டேன் பக்கப் பார்வையில். தோளைப் பிடித்து உட்கார வைத்து, தெனமும் ஒன்னோட இதே ரோதனையாப் போச்சு. சாப்பிடு எல்லாத்தையும். சாப்பிடாம எந்திரிச்சா கொன்னு தோலை உரிச்சிருவேன்’” என்று கத்தி விட்டு கஜேந்திரனுக்குக் காப்பியைக்கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தேன்.
சிநேகிதர்கள் வந்துவிட்டால் இவருக்கு கால நேரம். எதுவும் கணக்கிலிருக்காது கஜேந்திரன் ஆபீஸ் விஷயங்களை வீட்டில் வந்து பேசுவார். இவர் உலக விஷயங்களை ஆபீஸில் போய்ப் பேசுவார் போல.
டப்பாக்களில் தயிர் சாதத்தை அடைத்து மூடி பிள்ளைகளிடம் கொடுத்து, ‘நோட்டை எடுத்தாயா, பென்சில் சீவியிருக்கா என்று நூறு கேள்வி கேட்டு இரண்டையும் தயார் பண்ணிக் கொண்டிருக்கும் போதே ஸ்கூல் பஸ்ஸின் ஹாரன் சத்தம் கேட்டது.
இரண்டையும்இழுத்துக்கொண்டுமுன் அறை வழியாய்ப் போகையில் கஜேந்திரன் உச்சக்குரலில் ஏதோ வரி ம் பேசிக் கொண்டிருந்தார். பிள்ளைகள் அப்பா வுக்கு ‘டாட்டா’ சொன்னதும், நடுவில் திரும்பி சிரித்துக் கொண்டே ‘டாட்டா’ சொல்லிவிட்டு கஜேந்திரனின் பேச்சைக் கேட்க ஆரம்பித்தார்.
தெருமுனையில் பஸ் ஏற்றி விட்டு வந்து நுழைகையில் வீடு அமைதியாயிருந்தது. கஜேந்திரன் போய் விட்டார். ஒரு மூட்டைத் துணிகளைத் துவைத்து, குளித்து வெளியேற வேண்டும். இவர் பாத்ரூமுக்குள் ஆபீஸுக்கு எடுத்துப் போகும் பேக்கில் டப்பா, பஸ்ஸுக்கு ரூபாய், வரும் போது சாமான்கள் வாங்கி வர பை எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கையில் இவர் வெளியில் வந்தார்.
ஓரு புலிப் பாய்ச்சலில் பாத்ரூமுக்குள் போய் ஊற வைத்தவைகளை சட்சட்டென்று கும்மி அலசிப் பிழிந்து போட்டுவிட்டு நாலுடப்பா தண்ணீரை உடம்பில் ஊற்றிக் கொண்டிருக்கும் போது “உஷா நேத்து போட்டிருந்த பேண்ட்டைத் துவைச்சிட்டியா?” என்றார்.
“ஆமா.”
“பாக்கெட்டிலிருந்த காகிதங்கள்ளாம் எங்கே உஷா?”
“ஷெல்ஃபில் இரண்டாவது அடுக்கிலே தூக்குக்குக் கீழே வெச்சிருக்கேன். ”
சிறிது கழித்து சத்தம் கொடுத்தார். “இருக்கு உஷா, எடுத்துக்கிட்டேன்.”
வெளியில் வந்து புடவைகளை அள்ளிப் போட்டு ஒன்றைச் சுற்றிக்கொண்டு மேட்ச் கிடைக்காமல் ஒவ்வொன்றாயெறிந்து ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு முந்தானையை இழுத்துவிட்டுக் கண்ணாடி பீரோ முன் போய் நின்று பார்க்கையில், ஆபீஸில் பலரையும் விட அழகாய்த்தானிருந்தது. கண்ணுக்குக் கீழே மட்டும் நெளிநெளியாய் அரை அரை வட்டங்கள். இன்னும் பத்து வருடந்தாண்டி வரவேண்டியவை. அம்மாவுக்கு வயதாகித்தான் வந்திருக்கும்.
காலை நேரத்திலாவது கடிகாரத்துக்குக் கண் வைக்க வேண்டும். எந்திரமாயல்ல. மிருகம் போல், மதம் பிடித்த மிருகம் போல் ஓடுகிறது. இரக்கமில்லாதவை களில் இந்தக் கடிகாரம் முதன்மையானது.
இரண்டுதட்டுகளிலும் கொதிக்கும் சாதத்தைப் போட்டுக்கொண்டு இவரைப் கூப்பிட்டபோது லெண்டிங் லைப்ரரி புத்தகத்தை மூடிவிட்டு வந்து உட்கார்ந்தார். குத்துக்கால் வைத்துக்கொண்டே சாப்பிடத் தொடங்கினேன். அவர் சம்மணம் போட்டு உட் கார்ந்து சாப்பிட்டார்.
“ராஜாராம் வீட்டுக்கு வர்ற அம்மாவை இங்கேயும் வந்து துணி துவைச்சுப் பாத்திரங் கழுவச் சொல்லிக் கேட்டிருக்கேன். ஒண்ணாந்தேதியிலிருந்து அந்த அம்மா வந்திருவா உஷா” என்றார்.
“மாசம் எவ்வளவு?”
“ஒனக்கெதுக்கு அதெல்லாம். ராஜாராம் பேசி அனுப்பிருவான் உஷா.”
“சாயங்காலம் சீக்கிரம் வந்திருங்க.”
“மணி 9.10. மோர் போடு உஷா”
தினமும் ராத்திரி 9 மணிக்கு வருவார். இவருக்கு ஊர் பூராவும் சிநேகிதர்கள்.
எல்லா ஜன்னல்களையும் சாத்தி ஸ்விட்சுகளையெல்லாம் சரி பார்த்து சாதம், குழம்பையெல்லாம் மூடி வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை இரண்டு மடக்கில்குடித்து, பின் அறையைப் பூட்டி சாவியைக் காய்கறிக் கூடைக்குள் போட்டு மேலே காய்களை வைத்து மறைத்துவிட்டு ஹேண்ட் பேக்கைத் தோளில் போட்டுக்கண்ணாடியில் ஒரு தடவை பார்த்துப்புடவையைச் சரி செய்து கொண்டு பெரிய பூட்டை எடுத்து வாசலில் பூட்டும்போது கீழே இவர் ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்ணுகிற சத்தம் கேட்டது.
இவர் போன வாரம் கலாவிடம் சொன்னார். “ஒங்கம்மாவுக்கு என்னை விட நாப்பது ரூபா சம்பளம் ஜாஸ்தி. என்னை வாங்க போங்கன்னு சொல்றே. அம்மாவை வா போன்னு சொல்றே”
கலா அப்போது ஒன்றுந் தெரியாததுபோல் கள்ளச் சிரிப்பு சிரித்தது திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது. எதிர் வீட்டில் சாவியைக் கொடுத்து விட்டு இரண்டு படிக்கு ஒரு காலாய்த் தாவி இறங்கி வந்து ஸ்கூட்டர் பின்னால் உட்கார்ந்ததும் வேகமாய்ப் பக்கவாட்டில் திருப்பிப் பறந்தார். பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு இவர் இணக்கமாய் ஒரு பார்வை பார்த்து விட்டுக் கிளம்பினார். இவர் தினமும் ஸ்கூட்டரிலேயே ஆபீஸ் வருகிறார்.
பஸ் ஸ்டாப்பில் கூட்டம் அலை அலையாய் ஒவ்வொரு பஸ்ஸிலும் மோதியது. ஆண்களில் கூட பலசாலிகளும் இரக்கமற்றவர்களும் வைராக்கியமுள்ளவர்களும் மட்டு மே இந்த உச்சநேரத்தில் பஸ்ஸில் ஏறிவிடுகிறார்கள்.
ஒரு பஸ் நிற்காமலேயே போனது. அதை நோக்கி ஓடிய ஒரு நடு வயதுப் பெண் அலங்கோலமாய்க் கீழே விழுந் தார். கையைப் பிடித்து மெல்லத் தூக்கிவிட்டு, அடி பட்டிருச்சா, என்று நான் கேட்டு அவர் பதில் சொல் வதற்குள் அடுத்த பஸ்.
திமிறிக்கொண்டு ஒவ்வொரு படியாய் ஏறுவதற்குள் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் ஆண்களா பெண்களா என்று அனுமானிக்க முடியாதபடி உடம்பு கள் நசுக்க, உள்ளே போய் மேலே கம்பியைப் பிடிக்க கையை உயர்த்தினால் ஏற்கனவே கம்பி காள்ளாமல் கைகள். பின்னால் ஒட்டி இடித்து நசுக்கும் உடம்புகள். வேர்வை, பவுடர் செண்ட் வாசனை. பெல்ஸ் ரோடு முனையில் பஸ் நின்றதும் நெஞ்சு படபடக்க இறங்குகையில் 9. 42. இன்னும் உள்ள மூன்று நிமிடங்களுக்கும் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்தர் பெரிதா உயிர் பெரிதா என்று போராட்டம் நடக்கும்.
என்னோடு சேர்ந்து ஒரு கூட்டம் ராட்சசர்களாய் வரும் வாகனங்களை எதிர்த்தும் மறித்தும் சாலையின் குறுக்காய் ஓடியது. அடிபடாமலும் சாகாமலும் சாலையின் அடுத்த பக்கம் போவது தினமும் ஒரு அதிசயம்.
சேப்பாக்கத்தில் அந்த இரண்டாவது மாடிக்குத் தாவித் தாவி ஓடிப் போகையில் முழங்கால் பக்கம் பழைய வலி தெரிந்தது.
அட்டெண்டன்ஸில் கையெழுத்துப் போட்டுவிட்டு நாற்காலியில், உட்கார்ந்து மேஜையைப் பார்த்தேன். கட்டுக் கட்டாய் ஃபைல்கள்.
‘இரண்டாவது ஷிஃப்ட் ஆரம்பம்’ என்று மனசு சொல்லிக் கொண்டது.
– சாசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, அன்னம் பி.லிட், சிவகங்கை.