கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 8, 2025
பார்வையிட்டோர்: 67 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மொபெட் கடைவீதிக்குள் நுழையும்போது தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தன. பிளாட்பாரம் பூரா வும் கடைகள். சாக்கை விரித்து எலுமிச்சம்பழ வியாபாரம். துணியை விரித்து பிளாஸ்டிக் சாமான்கள். சைக்கிள் முதுகில் துணி வியாபாரம். பால் கடை. டீக் கடை சர்பத் கடை. தள்ளு வண்டிகளில் பழக்கடைகள். நடக்கப் போட்ட பிளாட்பாரம் முச்சூடும் ‘ஜே ஜே’ என்று வியாபாரம். 

ஜனங்கள் எந்த ஒழுங்குமின்றி நடுச்சாலையில் எருமை களைப்போல் நடந்து போகிறார்கள். கார்கள், மொபெட்கள், சைக்கிள்கள் ஹாரன்களையும் மணி களையும் அடித்துக் கொண்டு அங்குலம் அங்குலமாய் ஜன நெரிசலுக்குள் முன்னேறுகின்றன. ஹாரன்சத்தம் யாருக்கும் உறைக்கவில்லை. காதுகளைக் கழற்றிக் கால் களுக்குக் கீழ் போட்டு மிதித்துக்கொண்டு நடக்கிறார் கள். கால்களின் ராச்சியம் கடை வீதியெங்கும். 

இவனுக்கு இந்தஜனங்களைப்பற்றிநினைக்கும் போதெல் லாம் ரத்தம் முழுதும் தலைக்கேறிவிடும். மொபெட் ஆகாயத்தில் பறப்பதுபோல் வேகத்தில் போகும். அடக்கிக்கொண்டு மொபெட்டை ஊர விட்டுக் கடை வீதியைத் தாண்டி கவரைத் தெருவில் திரும்பினான். 

ஆண்கள் தெரு முனையிலும் ஒரங்களிலும் நின்று பேசிக் காண்டிருந்தார்கள். அடுத்தவனைத் தன்வழிக்கு இழுக்கவே ஒவ்வொருவனும் பேசுகிறான். அடுத்தவன் வழிக்கு ஒத்துக் கொண்டால் ஐந்து ரூபாய் நன் கொடையிலிருந்துஐந்து மூட்டை சிமிண்ட் கடன்வரை ஏதாவது உபத்திரவம் வரும். ஜாக்கிரதையாய்ப் பேச வேண்டும்.அறியாமல்வரும் ஒருவார்த்தையால் பத்துப் பைசா உதிர்ந்து விடலாம்; ஒருகாப்பிக்காசு பெயர்ந்து விழலாம். ஒவ்வொருவன் பேச்சிலும் இழையோடும் ஆசை அடுத்தவன் நொடிக்க வேண்டும்; தான் அரண்மனைக்குக் குடிபோக வேண்டும். 

மொபெட் டாட்டன்ஹாம் சாலைக்குத் திரும்பையில் தெருநெடுகிலும் வாசற்படிகளில் பெண்கள்உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்தார்கள். 

வாசற்படிகள் மூன்றென்றால் மேற்படியில் உட்கார்ந்தி ருப்பவள் தான் அந்த வீட்டுக்காரி. அந்தவீட்டுப் பெண் களே மூன்று படிகளிலும் என்றால்சாவிக்கொத்துக்காரி மேற்படியில் நாடு பூராவும் இந்த நடைமுறை தப்பாம லிருக்கும். இன்னொருத்தியை எங்கே வைக்க வேண்டு மென்பதில் எப்போதும் கவனம். விட்டுக் கொடுக்கக் கூடாது. விட்டால் வினைகள் வரும். 

சாயங்காலம் வரை சாத்தப்பட்டுக் கிடந்தவாசற் கதவு களை இப்போதுதிறந்து வைத்திருப்பது சீதேவிஉள்ளே வரவும் காலைமுதல் இந்நேரம் வரை நிகழ்ந்த அந்தந்த வீட்டுப்பெருமைகள் அடுத்ததெருவரை போய்ச் சேரவு மாக வாசற்கூட்டங்கள் நடத்தவுந்தான். 

இவை முடிந்ததும் மறுபடிகதவுகள் சாத்தப்பட்டுவிடும். உறவுகள் வாசற்படி தாண்டி உள்ளே வந்தால் எவ் வளவு நஷ்டம் எந்த உருவில்வரும் என்பதைச் சொல்லி முடியாது. ஒரு கிண்ணம் எண்ணெய் என்றாலும் ஒரு டம்ளர் சர்க்கரை என்றாலும் நஷ்டம் நஷ்டம் தானே. 

வீண்வம்பு வாய்ப்பேச்சோடு போகவேண்டும். செய்கை யில் இழுத்தால் வேலைவேறு பாதிக்கும். வாசற்கதவு ஒருவழிப் பாதையாயிருந்தால் தான் குடும்பத்திற்கு நன்மை. 

மொபெட் கீழே இரண்டாம் வீதிக்கு வந்தபோது கணேஷ் காபி பார் முன்னால் சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றான்.இந்த கணேஷ் அலுவலகம் முடிந் ததும் காபிபாருக்கு வந்துவிடுகிறான். ஸ்டீரியோ ஃபோனிக்கில் பாட்டுப் போடச் சொல்லி ரசிக்கிறான். பாதி சம்பளம் சீட்டுக்கும், சிகரெட்டுக்கும். 

கணேஷோடு நிற்கும் நேரத்தில் வாழ்நாளில் கொஞ்ச நேரம் வீணாய்க் குறையும். அவனோடு பேசும் நேரத் தில் சேர்த்த புத்தியில் சிறிது குறையும். இருந்தாலும் கைகாட்டி நிறுத்திவிட்டான். 

கணேஷ், தான் வாங்கப்போகிற கலர் டி.வி.யைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். கடந்த பத்து நாளாய் யார் எதிர்ப்பட்டாலும் அவனுக்கு இந்தப் பேச்சுத் தான்.ஒரு சரியான டி.வி. கம்பெனியைத் தேர்ந்தெடுப் பதற்குள் அவன் குடும்பத்திற்குப் பைத்தியம் பிடிக்கப் போகிறது. அவன் வாங்கியதை விட நல்ல டி.வி. இன்னொன்றிருக்கிறது என்று யாராவது சொல்லிவிட்டால் வடக்கிருப்பான் போல. 

மூக்கும் முழியும்தான் வித்தியாசம். குணத்தில் அநேக மாய் எல்லோரும் கணேஷ்கள் தான். யாருடைய மீட்டருக்கும் இவன் மீட்டர் ஒத்துவரவில்லை. இந்த ஊரில் தன்னைப் போல் ஒருவன் இவனுக்கு இன்னு கண்ணுக்குத் தெரியவில்லை. 

இவனைப் பார்த்தால் யாராலும் இவன் மூவாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்குகிறான் என்று சொல்ல முடியாது. இரண்டு பேண்ட், இரண்டு ஜிப்பாக்களைத் தான் மாற்றி மாற்றித் துவைத்துப் போட்டுக் கொள் வான். கதர்க்கடையில் வாங்கும் கட்டை விரல் மட்டும் நுழையும் செருப்புகள். 

வீட்டில் சரியாக இரண்டாயிரத்தைக் கொடுத்து விடுவான். கல்யாணம் பண்ணிக் கொள்வதில்லை என்று வைராக்கியம். வால்ட்டேரிலிருந்து ஜே.கே வரை தலை நிறையத் தத்துவங்கள்; வீடுநிறையப் புத்தகங்கள். அவனிடம்ஒரேஆடம்பரம்இந்தச்சின்னமொபெட்தான். நாலு மைலுக்கப்பால் அரசபட்டி கிராமத்திற்கு வாரம் மூன்று நாள் போய் முதியோர் கல்வி எடுப்பான். அரிக்கேன் லைட்டிலிருந்து புத்தகம் சிலேட்டெல்லாம் இவன் செலவுதான். உள்ளூர் நூல்நிலையத்தில் உள்ள புத்தகங்கள். எல்லாம் உதவாக்கரை என்று ஒரு நாள் கண்டுபிடித்ததற்குப் பின்னால் நாலைந்து ‘அறிவாளிகள்’ பத்திரிகைகளும் புதியபுதிய கனமான நூல்களும் வாங்கி இலவசமாய்க் கொண்டு போடுவான். இரண்டு ஏழைப்பையன்களைத் தேடிக் கண்டுபிடித்து ஹாஸ்டல் செலவை ஏற்றுக்கொண்டான். 

இதில் நூறில் ஒரு பங்கு பொதுலட்சியத்தோடு இவன் தேடித்தேடிப் பார்த்தும் ஒருவனும் அகப்படவில்லை. பார்க்கிற, பழகுற ஆட்களெல்லாம் தினுசுதினுசாயிருக் கிறார்கள்.இவன் அலுவலகத்தில் ராமச்சந்திரன் அடிக்கடி சொல்வார்: “ரிட்டையர்டு ஆகுரதுக்குள்ள நமக்குண்ணு ஒரு வீட்டைக் கட்டிரணும்ப்பா”. பக்கத்து வீட்டு சோமு சொல்வார். ‘மூத்தவனை எப்படியும் ஒரு டாக்டராக்கிரணும்.’ 

அவனவனுக்கும் உள்ள லட்சியம் அவனவனுடைய தலைக்குக் கிரீடம் வரவேண்டுமென்பதுதான். வார்த்தைகள் தடம்மாறி அர்த்தம் மாறி அலைகின்றன. ஆசைகளை லட்சியங்கள் என்கிறார்கள். 

யாரும் எச்சாக்கையால் எறும்பைக் கூட விரட்டு வதில்லை. அரைப் பருக்கை விரயமாகும்.கணேஷ் மறு படி மறுபடி ஒவ்வொரு கம்பெனி கலர் டி.வி. யாகப் பேசிக் கொண்டே போனான்.சாலை நிறைய ஜனங்கள் நெரிசலாய்த் தத்தம் சிநேகிதர்களைக் குறைசொல்லிச் சுற்றத்தாரைப் பகை கூறிச் சென்று கொண்டிருந்தார்கள். கணேஷ் உலகம் பூராவும் டி.வி. யில்தெரியும் ஆண்ட்டனாவை கண்டுபிடித்தது பற்றிப் பேச்சைத் தொடர்ந்தான். 

பார்வையை கணேஷ் பக்கமிருந்து எதிர்சாரிக்கு இவன் திருப்பையில் பகீரென்று மூளை நரம்புகள் தடதடத் தன .எதிரிலிருந்த ஒரு டிஸ்பென்ஸரியின் மாடியிலிருந்து தலைகுப்புற ஒரு மனிதன் தரையில் விழுந்து கொண்டி ருந்தான். இவ்வளவு நாள் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவத்தை இப்போது தான் கண்முன்னே பார்க்கிறான். கார்களை, சைக்கிள்களை ஜன நெரிசலைத் தாண்டி ஓடிப் போய் தரையில் விழுந்தவன் பக்கத்தில் போய் நின்றான். 

தலை விழுந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு பெரிய கல் கிடந்தது. அதில் விழுந்திருந்தால் தலைசிதறியிருக்கும். விழுந்த இடத்தில் யதேச்சையாய்ச் சற்றுக் குழி பறிந்து மணல் கிடந்தது. 

டிஸ்பென்ஸரி மாடியில் விழுந்தவனுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவன் மனைவி அதிர்ச்சியில் சித்தப்பிரமை வந்தவள் போல் ஒடி வந்தாள். நகரங் களில் இந்தமாதிரி விபத்துகள் தான் தெருத் திரு விழாக்கள். கூட்டம் அந்த இடத்தைச் சுற்றிவளைத்து நின்றுகொண்டு ஒருவருக்கொருவர் விசாரணை நடத்த ஆரம்பித்தது, கணேஷும் கூட்டத்தில் வந்து நின்று அதைப் பார்த்தான். 

விழுந்தவன் மூக்கருகில் இவன் விரல் வைத்துப் பார்த் தான்.சுவாசம் தட்டுத்தடுமாறிவந்துகொண்டிருந்தது. மாடிக்கு ஓடிப் போய் டாக்டரைக் கூட்டி வந்தான். டாக்டர் ஸ்டெத்துடன் மாடியிலிருந்து சகல நிதானத் துடனும் இறங்கி வந்து பார்த்தார். மேலே தூக்கி வரச் சொல்லி விட்டுப் போனார். 

நடந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாய் ஒருவாறு இவனுக்குத் தெரிய ஆரம்பித்தது. விழுந்தவனின் மாமனார் ஒரு சின்ன ஆப்பரேஷனுக்காக இந்த மாடி டிஸ்பென்ஸரியில் சேர்ந்திருக்கிறார். அவரைப் பார்ப்பதற்காக மனைவியோடு இந்த ஆள் வந்திருக்கிறான். பார்த்துவிட்டு வந்து இருவரும் மாடிக் கைப்பிடிச் சுவரருகில் நின்று பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள், 

அந்த நேரம் கைப்பிடிச்சுவரில் கைகளை மடித்துப் போட்டுக் குனிந்திருக்கிறான்.பையில் கிடந்த சில்லரை கள் (ஒரு ரூபாய்க்குள்ளிருக்கும்) கீழே கொட்ட இந்த ஆள் மேலும் பதறிக் குனிய தலை பூமியைத் தொட்டு விட்டது. 

இவன் தலையத் தாங்கிப் பிடிக்க நாலைந்து பேர் சேர்ந்து தூக்கி மாடிக்குக் கொண்டு போனார்கள். விழுந்தவனுக்கு முப்பத்தைந்து வயதுக்குள்ளிருக்கும். திடமான உடம்பு. அந்தப் பெண்ணின் புலம்பலிலும் அழுகையிலும் டிஸ்பென்ஸரியை கல் மண்ணால் கட்டாமல் வேறு எதாலாவது கட்டியிருந்தால் கரைந்திருக்கும். 

வற்றலாயிருந்த நோயாளி மாமனார் தலையில் படார் படாரென்று அடித்து அழுது கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தாலியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு பித்துப் பிடித்தவள் போல் அந்தப் பெண் உருள ஆரம் பித்தாள். மாடியில் நின்று இவன் சாலையப் பார்த் தான். கூட்டத்தின் நடுவில் கணேஷ் மறு சிகரெட் டைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தான். 

அந்த டாக்டர் கற்களில் பாறாங்கல்போல எல்லோரை யும் தள்ளிப் போகச் சொல்லிவிட்டு சாதாரணமாய் ஏதோ நடந்தது போல் பெஞ்சில் படுக்க வைத்திருந்த ஆளைப் பார்த்தார். தலையிலிருந்து ரத்தம் பெஞ்சுக் கால் வழியாய் தரையை நனைத்துக் கொண்டிருந்தது. 

கையைப் பிடித்து நாடி பார்த்தார். நர்ஸைக் கூப் பிட்டு இரண்டு கைகளிலும் ஊசி போடச் சொன்னார். தலையில் நாலு இடங்களில் சின்னத் தையல்கள் போட்டு பேண்டேஜ் கட்டச் சொன்னார். 

மாடியில் வேடிக்கைபார்க்கிற கூட்டம் ஐம்பதுபேருக்கு மேல் நின்றுகொண்டிருந்தது. மீதிப்பேர் படிகளிலும், தெருவிலும். இவன் டாக்டரிடம் போய், “எப்படி இருக்கு டாக்டர்?” என்றான். 

“நீங்க இவருக்கு என்னவேணும்?” என்றார் டாக்டர்.

“ஒண்ணும் வேண்டாம்.” 

“பின்னெ எதுக்கு இந்தக் கேள்வியெல்லாம் கேக்குறீங்க?” 

பளாரென்று அறைய வேண்டும் போல வந்தது. அடக்கிக்கொண்டு கேட்டான்: “பொழைச்சுக்கிடுவார்ல?” 

கடுகடு வென்று இவனைப் பார்த்துவிட்டு டாக்டர் சொன்னார்: “ப்ளட் தலையில கிளாட்ஆயிருச்சுன்னா பொழைக்கிறது சிரமம். இப்பவே தஞ்சாவூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகணும். மேஜர் ஆப்பரேஷன் பண்ணினா பிழைக்கக் கொஞ்சம் சான்ஸ் இருக்கு” 

இவன் மெல்ல அந்தப் பெண்ணிடம் சென்றான். “உங்கள்ட்ட பணமிருக்கா?” என்றான். அந்தப் பெண்ணுக்கு சர்வாங்கமும் நடுக்கம். கூடவே இவன் மட்டும் இந்த ஊமை இரக்கத்தோடு நிற்கும் கூட்டத் திலிருந்து தனித்து வந்து ஏன் இப்படிக் கேட்க வேண்டு மென்றும் தோன்றியிருக்கக் கூடும். 

அழுதுகொண்டே சொன்னாள்: “வீட்டில் பீரோவில் இருக்கு. தம்பி வீட்டிலிருக்கான். பீரோ சாவி கிச்சன்ல வெங்காயக் கூடைக்குள்ள இருக்கு.” 

அவளிடம் வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டு கூட்டத்தை விலக்கி மொபெட்டை ஓடினான். அசுரத்தனமாய்க் கிளப்பிய போது கணேஷ் பாதி புகைந்து கொண்டிருந்த சிகரெட் சாம்பலை விரலால் தட்டிக் கொண்டே கேட்டான்: “ஆள் போச்சா. இருக்கா” 

எம்.ஏ.சோசியாலஜி படித்தவன் கேட்ட கேள்வி. அடுத்தவனைப்பற்றி நினைக்கும் எல்லோர்க்கும் படிப்பு வித்தியாசம் ஒரு விதியில்லை. 

அந்தப்பையன் வேலையில்லாமல் அக்காள் வீட்டில் வந்து ஓசிச்சோறு சாப்பிடுகிறவன் போல. வாசலில் உட்கார்ந்து வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பதறி எழுந்து ரூபாயை எடுத்துப் பையில் போட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு இவன் பின்னால் ஏறி உட்கார்ந்தான். 

இவன் அந்தப் பையனோடு மாடி ஏறும் போது முன்பிருந்த கூட்டமில்லை. பத்துப் பேர் நின்று கொண்டிருந்தார்கள். சுவாரஸ்யம் குறைந்து போனது காரணமாயிருக்கலாம். தலையில் போட்டிருந்த கட்டு முழுவதும் சிவப்பாகியிருந்தது. ஆள் தடுமாறி மூச்சு விட்டுக் கொண்டிருந்தார் 

தம்பியைப் பார்த்ததும் கட்டிக்கொண்டு அழுதாள். “நேரமாகுதே நேரமாகுதே” என்று திசையெங்கும் பார்த்துக் கதறினாள். 

இவன் அந்தப் பையனை மெல்ல அவளிடமிருந்து பிரித்துக் கீழே அழைத்துப் போனான். டாக்ஸி ஸ்டாண்டில் டாக்ஸிகளைவிட டாக்ஸி முதலாளிகள் டிரைவர்கள், தரகர்கள் கூட்டம் அதிகமாயிருந்தது. அவசரம் என்றோ ஆபத்து என்றோ தெரிந்தால் உதவுகிற தேசமில்லை இது. நெருக்கடி தெரிந்து இரண்டு பங்கு வாடகை கேட்டார்கள். தொண்டை சரியில்லாத மாதிரி பாவனையில் இரண்டுமுறை காறித் துப்பினான். 

ஒரு வழியாய் டாக்ஸியை அமர்த்திக் கொண்டு வரும் போது ராத்திரி எட்டுமணி ஆகிவிட்டது. கணேஷ் பெட்டிக்கடை வாசலில் தான் நின்று கொண்டிருந்தான். யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். கலர் டி.வி. பற்றித் தானிருக்கும் 

மேலே போய் “கிளம்புங்கள் டாக்ஸி கொண்டு வந்துட்டோம்” என்றான் அந்தப் பெண்ணிடம்.

”தஞ்சாவூரிலே எங்களுக்கு யாரையும் தெரியாதே” என்றாள்: மாலை மாலையாய்க் கண்ணிலிருந்து நீர் வடிந்து கொண்டேயிருந்தது. 

“நான் கூட வர்றேன். வாங்க பார்த்துக்கலாம்” என்றதும் ரொம்ப நன்றியோடு இவனைப் பார்த்தாள். மெல்ல அந்த ஆளைத் தூக்க ஆரம்பிக்கையில் டாக்டர் ஒரு பில்லுடன் வந்தார். வாங்கிப் பார்த்தான். நூற்றி அறுபது ரூபாய் சார்ஜ் பண்ணியிருந்தார். ஊசி போட்டது. தையல் போட்டது எல்லாவற்றையும் வகை பிரித்துப் போட்டிருந்தார் “இவுங்க வீட்டு ஆள் ஒருத்தர் இங்கேயே பேஷண்ட்டாயிருக்கார். அந்த பில்லிலெ இதையும் சேர்த்துடுங்க. இப்ப நாங்க ஆள் தெரியாத ஊருக்குப் போகணும். அங்கெ ஆகிற செலவுக்குப் பணம் போதுமோ போதாதோ” என்றான் டாக்டரிடம். டாக்டர் பாறாங்கல்லைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார். “அது வேறு இதுவேறு கிளீயர் பண்ணிட்டுப் போங்க” 

எங்கேயோ விபத்து நடந்து இங்கே தூக்கி வரவில்லை. இந்த டிஸ்பென்ஸரியில் நடந்த விபத்து. இவருக்கும் சேர்த்து அந்த சர்வ தேச மருத்துவர் விதிகள். கல் மரமெல்லாம் பேண்ட்சட்டையோடு ஸ்டெத்தோடும் கேஸ் கட்டோடு கனமான புத்தகங்களோடும் திரிகின்றன என்று நினைத்துக் கொண்டான். 

இதை ஒரு சுத்தமான வேடிக்கையாய்ப் பார்த்துக் கொண்டு நிற்கும் ஜனக் கூட்டத்தையும், அந்த டாக்டரையும் டிஸ்பென்ஸரியையும் கொளுத்த வேண்டும் போல் வந்தது. அந்தப் பெண் பணத்தைக் கட்டினாள். 

ஆளைக் கீழே தூக்கி வந்து டாக்ஸியிலேற்றும் போது கணேஷ் பேச்சை நிறுத்தி டாக்ஸியைப் பார்த்தான். “என் மொபெட்டை வீட்டிலெ சேத்திரு” என்று கணேஷைப் பார்த்துச் சொல்லி சாவியையும் எறிந்து விட்டு டாக்ஸியிலேறினான் இவன்.

பின் சீட்டில் அடிபட்ட ஆளைப் படுக்க வைத்தான். ஓரமாய் அவன் மனைவியை, உட்கார்த்தி அவள் மடியில் கட்டுப்போட்ட தலையைப் பதமாய் வைத்துப் பிடித்துக் கொள்ளச் சொல்லி விட்டு முன் சீட்டில் இவனும் அந்த ஆள் மைத்துனனும் உட்கார டாக்ஸி கிளம்பியது. ஜனக் கூட்டம் டாக்ஸியைச் சுற்றி நின்றது. இன்னும் ஒரு வாரத்திற்கு சந்திக்கிற ஆட்களிடம் பேசிக் கொள்ள தற்செயலாய் இப்படி ஒரு அபூர்வ சம்பவத்தைப் பார்க்கக் கொடுத்து வைத்த திருப்தியில் கலைந்து போவார்கள் என்று நினைத்துக் கொண்டான். 

ஆதனக் கோட்டையைத் தாண்டிய போது அந்தப் பெண்ணின் கேவலும் அழுகுரலும் பரிதாபமாய்க் கேட்டது. வண்டியை நிறுத்தச் சொல்லி இவன் இறங்கிப் பின்னால் வந்து அவளை எழுந்திருக்கச் சொன்னான். அவள் இடத்தில் தான் உட்கார்ந்து அடிபட்ட தலையைத் தன் மடி மீது வைத்துக் கொண்டான். அந்தப் பெண் கால் பக்கம் போய் சுருண்டு கீழே குத்துக்கால் வைத்து ஒடுங்கினாள். அடிபட்ட ஆளின் சுவாசம் பார்த்துக் கொண்டும் அந்தப் பெண்ணுக்குத் தைரியம் சொல்லிக் கொண்டும் தஞ்சாவூர் வருவதற்குள் இவனுக்குக் களைப்பு வந்து விட்டது. 

தஞ்சாவூர் ஜி.எச்.சில் டாக்ஸி நின்றதும் இறங்கி ஓ.பி.யில் ஓடிப்போய் டூட்டி டாக்டரிடம் அவசரம் எப்படிப்பட்டது என்றும் டாக்ஸியில் கொண்டு வந்து வெளியில் காத்திருப்பதைப்பற்றியும் பதறிக் கொண்டே சொன்னான். 

ஸ்ட்ரெச்சர் வரக் கால் மணி நேரத்திற்கு மேலானது. அந்தப்பெண் டாக்ஸிக்குள் இழை இழையாய்ப் பிரிந்து கொண்டிருந்தாள். மருத்துவமனைக்கு இது புதிதோ அதிசயமோ அல்ல. மரத்துப் போய் நின்றார்கள் எல்லோரும். நிமிர, அசைய, செய்ய ஒவ்வொன்றிற்கும் சம்பந்தப்பட்டவன் சாவி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டிய இடம். எல்லாம் ‘மெல்ல’ நடந்தன. 

இவன் டூட்டி டாக்டரிடம் “எமெர்ஜன்ஸி ஆப்பரேஷன் பண்ணணும். ப்ளட் கிளாட் ஆனால் உயிருக்கு ஆபத்துண்ணு சொல்லி அனுப்பியிருக்காங்க” என்று பட படத்துச் சொன்னதை யெல்லாம் பதறாமல் கேட்டுக் கொண்டிருந்தார் டாக்டர். 

“இப்ப சர்ஜன்ஸ் யாரும் டூட்டியிலில்லியே” என்று சொல்லி விட்டு ஒரு ஊசி போட்டு நர்ஸிடம் இரண்டு மாத்திரைகளைக் கொடுக்கச்சொன்னார். “தூங்கட்டும் விடியற்காலையில் சர்ஜன்கள் வருவாங்க” என்றார். 

கட்டிலருகில் நின்று அந்தப்பெண் இப்போது முழுதும் நம்பிக்கையற்று அழுதவண்ணமிருந்தாள். தன் அம்மா வீட்டிற்கு விடுமுறைக்குப்போன பிள்ளைகளின் பெயர்களைச் சொல்லி “போயி எம் புள்ளைகளைக் கூட்டிக் கிட்டு வாங்க” என்றாள். ஒரு விவரமுமில்லாமல் அந்தப் பெண்ணின் தம்பியும் தேம்பி அழ ஆரம்பித்தான். ”கொஞ்சம் இருங்க இதோ வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு ஊர் திரும்பத் தயாராயிருந்த டாக்ஸியிடம் போனான். ஏற்கெனவே பேசிய தொகையைக் கொடுத்துக் கணக்கை முடித்தாயிற்று. டிரைவரிடம் பேசி விட்டு டாக்ஸியிலேறி இவனுக்குத் தெரிந்த நாலைந்து பிரமுகர்களின் வீடுகளில் போய் அந்த அகால நேரத்தில் கதவுகளைத் தட்டினான். அவர்களில் இரண்டுபேர் ஏனோ தானோவென்று யாருக்கோ ஃபோன் பண்ணினார்கள். 

விடியற்காலை நாலு மணிக்கு டீக்கடையில் நிறுத்தி டிரைவருக்கு டீ வாங்கிக் கொடுத்துவிட்டுத்தானும் ஒரு டீ குடித்துக் கொண்டிருந்தபோது நினைத்தான்: விழுந்தவன் யார்? அவன் நல்லவனா கெட்டவனா? அவன் முழுக் குடும்ப வரலாறு என்ன? ஒன்றுந் தெரியாது. என்றாலும் நாயாய் அலைகிறேன். நான் பார்த்த ஒருவனுக்குக் கூட இந்தக் குணமில்லை. இதோ இந்த டிரைவர் உள்பட. இவன் ஆஸ்பத்திரி வாசலுக்குப் போனதும் ஊர் முழுக்கச் சுற்றியதற்குப் பணம் கேட்பான். அதுவும் கூடவே கேட்பான்.” 

அதே போல் ஆஸ்பத்திரிக்கு வந்ததும் டிரைவர் “என்னை வெட்டிவிடுறீங்களா?” என்றான். கைப் பையிலிருந்து தன் சொந்தப் பணத்தைக் கொடுத்து டிரைவர் பாஷையில் வெட்டி விட்டான். உள்ளே போய்ப் பார்க்கையில் நாலைந்து டாக்டர்கள் படுக்கையைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். சுற்றியடித்து அலைந்ததில் எங்கோ கிளிக்காகியிருந்தது. எமெர்ஜன்ஸி ஆப்பரேஷனுக்குத் ‘தயாரிப்புகள்’ நடந்து கொண்டிருந்தன. நர்ஸுகள் வேக வேகமாய் நடந்து கொண்டிருந்தார்கள். இவன் போய் தலைமை டாக்டரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். அவர் “உங்களைத் தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம். ப்ளட் பேங்க்கில் இருக்கிற ரத்தம் ஆப்பரேஷனுக்குப் போதாது. வழக்கமா ரத்தம் குடுக்கிறவங்களையும் இப்பப் பிடிக்க முடியாது. நீங்க எத்தனை பேர் கூட வந்திருக்கீங்க? நீங்கள்ளாம் ரத்தம் கொடுத்தீங்கன்னா அவருக்கு வேண்டிய குரூப் ரத்தத்திற் கேத்தாப்பல மாற்றித்தர பிரைவேட்ல ஏஜன்ஸி இருக்காங்க.” 

இவன் வாழ்க்கையில் இது வரை என்னென்ன உதவி யெல்லாமோ முகந்தெரிந்தவர்கள் முகமறியாதவர்களுக்கெல்லாம் செய்திருக்கிறான். ஆனால் முகப் பொலிவும், வாட்டசாட்டமும் உள்ள இந்த உடம்பிலிருந்து வேறு யாருக்கும் ரத்தம் கொடுத்ததில்லை. இன்றைக்கு அதற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததில் குதூகலம். 

அந்தப் பெண்ணுக்கும் அவள் தம்பிக்கும் முந்தி இவன் கையை நீட்டிக்கொண்டு காட்டிய நாற்காலியில் உட்கார்ந்து விட்டான். முழங்கையை விறைப்பாக்கியதும் நரம்புகள் புடைத்து வந்தன. பச்சை படத் தெரிந்தொரு நரம்பில் ஊசியால் நர்சு குத்தியதும் ரப்பர் குழாய் வழியாக பாட்டிலில் போய் செக்கச் சிவப்பாய் ரத்தம் இறங்கியது. ஒரு பாட்டில் நிறைந்து வரும் போது நர்ஸ் ஊசியைப் பிடுங்கி மருந்து நனைத்த பஞ்சால் அழுத்திக் கையைத் தோள் பட்டையோடு மடக்கினாள். 

“கொஞ்ச நேரம் உட்காருங்க” என்று பக்கத்து ஸ்டூலைக் காட்டினாள். இன்னொரு நர்ஸ் குளுக்கோஸ் வாட்டர் கொண்டு வந்து கொடுத்தாள். 

மைத்துனன் கையை நீட்டி ரத்தம் கொடுக்க வந்து உட் கார்ந்தான். மனைவி வந்து ரத்தம் கொடுத்தாள். குரூப்களைக் குறித்தார்கள். ரத்த ஏஜன்ஸீக்காரன் வந்து மாற்றினான். மாற்றியதற்குப் பணம் வாங்கிக் கொண்டான். 

ஸ்ட்ரெச்சர் தூக்குகிறவன் வார்டு கூட்டுகிறவன். ஊசி போட்டவள், நின்றவன் போனவன் வந்தவனெல்லாம் காசு கேட்டார்கள். மைத்துனன்காரன் அநேகமாய் சுயநினைவு இழந்து கேட்பவர்களுக் கெல்லாம் கொடுத்துக் கொண்டே இருந்தான். 

ஒருவழியாய் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து ஆப்பரேஷன் தியேட்டருக்கு ஆளைக் கொண்டு போனார்கள். பதட்டமும் கலக்கமுமாய் அந்தப் பெண் ஸ்ட்ரெச்சரைப் பிடித்துக் கெண்டு ஓடினாள். 

இந்த ஆஸ்பத்திரி வாசனையைத்தாண்டிக் காற்றாடக் கொஞ்சம் வெளியே போய் நடக்க வேண்டும் போலிருந்தது. 

பொழுது சாம்பல் நிறத்தில் விடிந்து கொண்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு எதிரில் பிளாட்பாரத்தில் ஜூஸ் கடைக்காரர்கள் அப்போதுதான் கடைகளைத் திறக்க ஆரம்பித்திருந்தார்கள். ஒரு கடை முன்னால் நின்றான். 

கடைக்காரருக்கு நாற்பது வயதிருக்கும். முன்னால் நாலைந்து சர்பத் பாட்டில்கள். ஒரு உயரமான தளத்தில் மிக்ஸி இருந்தது. வயர் கூடைகளில் திராட்சைப் பழங்கள், அன்னாசிப்பழங்கள் வரிசையாய் நாலைந்து தொங்கிக்கொண்டிருந்தன. ஆள் அழுக்குக் கைலியோடு திரிந்தார். 

இரண்டு ஊர்களிலும் பார்த்த அரக்க ஜனங்கள், தூக்க முழிப்பு, ரத்தங்கொடுத்த களைப்பு எல்லாம் சேர்ந்து திடீரென்று தான் பலமற்றுப் போனதாய் நினைத்தான். ஒரு சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் தெம்பாயிருக்கு போல இருந்தது. அந்தக் கடையில் சாத்துக்குடிப் பழங்களைக் காணோம். அடுத்த கடைக்குப்போகத் திரும்பியவனிடம் “என்ன வேணும்?” என்றார் கடைக்காரர். 

“சாத்துக்குடி ஜூஸ்” என்றான். 

“இருங்க.டேய் பையா ஓடிப்போய் ஒருடஜன் சாத்துக்குடி வாங்கிட்டு வாடா” என்று ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துக் கடைப் பையனை அனுப்பினார். கடையை முழுதுமாய்ப் பரப்பிவைப்பதில் குனிந்து நிமிர்ந்து கொண்டிருந்தார். 

பையன் இரண்டு நிமிடங்களில் பழங்களோடு ஒடி வந்தான்.பழங்களை நறுக்கி மிக்ஸியில் உரசி ஐந்துநிமிடத்தில் ஜூஸ் பண்ணி ஒரு பெரிய கிளாஸ் நிறைய ஊற்றி ஸ்ட்ரா போட்டு இவன் முன்னால் வைத்தார். 

குளிரக் குளிரக் குடித்தான். லேஸாய்த் தெம்பு வருவது போலிருந்தது. தன்னைப் பற்றிய பெருமிதத்தில் பறக்க வேண்டும் போல் வந்தது. முழங்கையைப் பிரித்து ஊசி குத்திய இடத்தைத் தன்னையறியாமல் பார்த்தான். பையைத் திறந்து ரூபாய் நோட்டை எடுத்துக் கடைக்காரரிடம் நீட்டினான். 

இவன் முழங்கையை விரித்துப் பார்த்ததைக் கூர்மையாய் நோக்கி விட்டுக் கடைக்காரர் கேட்டார்: 

“ரத்தங் குடுத்தீங்களா.” 

“ஆமா” 

“ரத்தங் குடுத்தவங்க கிட்ட நான் ஜூஸுக்குக் காசு வாங்குறதில்ல. வச்சிக்குங்க” 

அழுக்குக் கைலியோடு அந்தக் கடைக்காரர் அடுத்து எதையோ எடுத்து வைக்கக் கீழே குனிந்தார்.

– சாசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, அன்னம் பி.லிட், சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *