நெஞ்சுக்குள் நெஞ்சு வை…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 201 
 
 

(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 13

பூங்காவில் விருத்திஷ் வந்து தன் மூன்று சக்கர வாகனத்தை நிறுத்தியபோது உடல் தொப்பலாக நனைந்திருந்தது.

ஆத்திரம் அடங்கவில்லை. தான் ஒரு நெருப்புத் துண்டாக இருக்க…. வெப்பம் நாலாபுறமும் வீசி அடிப்பது அவனுக்கேத் தெரிந்தது.

‘இரண்டு மாத’ வார்த்தைகளே அவனுக்குள் ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்தியது.

‘எனக்கா, அவனுக்கா..? யாருக்கு இரண்டு மாதம்.’ புத்தி இப்படி போனது. எனக்கேத் தெரியாமல், என்னிடம் சொல்லாமல் அவனிடம் மட்டும் சொன்னால் என்ன அர்த்தம்..? அவன் அவ்வளவு உயர்வானவனா உரிமையானவனா..?

‘பாவி! படுபாவி!’ மனம் இரண்டு பேர்களையுமேத் திட்டியது.

‘எனக்கே… மனைவியைத் திருப்திப்படுத்தும் அளவிற்கு நடந்திருக்கின்றேனா என்பதில் சந்தேகம். இந்த லட்சணத்தில் இரண்டு மாதம் என்று வெங்கடேஷிடம் சொல்கிறாளென்றால்..?

‘ நிச்சயமாக நானில்லை. அவன்தான்! அவன் வந்தது தன் கண்ணில் பட்டது ஒரு தடவை. படாமல் எத்தனைத் தடவைகள் வந்தானோ. அப்படி வந்ததினால்தானே இப்படி! என்ன காரணமோ அத்தை மகனைத் தவிர்த்து தன்னைக் கட்டி இப்போது கள்ளத்தனமாக அவன்!

தான் இன்னொருத்தன் பிள்ளைக்குத் தகப்பனாவது.. கேவலம்!

கால் மட்டும் சரியாய் இருந்திருந்தால்… இருவரையும் கையும் மெய்யுமாகப் படித்து… சாத்வீகமாக…இந்த இடத்தை விட்டுப் போ! சொல்லலாம். இல்லையே..?

இப்படி ஒப்புக்குக் கழுத்தை நீட்டி உல்லாசத்திற்கு வேறு ஆளைத் தேடுவார்களென்றுதான் திருமணமே வேண்டாமென்று உறுதியாக இருந்தேன். அம்மா கேட்டாளா, அப்பா கேட்டாரா..? போய் மேலதிகாரியிடம் முறையிட்டு முடிச்சுப் போட…. இப்போது இந்த அவமானத்தை யார் என்ன செய்யமுடியும்..? எவர் தீர்த்து வைப்பார்கள். எப்படி தீர்த்து வைத்தாலும்… தன் வாழ்வில் சோடை, சோரம் என்பது நிதர்சனம்.

இந்தஉண்மை தெரியாமலேயே குழந்தை பெற்றிருந்தால்….எவன் குழந்தைக்கோத் தான் தகப்பன். அவன் கரு. நான் தகப்பன் கேவலம்!

இனி என்ன செய்ய…? வீட்டிற்குத் திரும்பினான்.

குடியிருப்புகளின் சுற்றுச் சுவர் கேட் தொடும்போது…. தன் வீட்டிலிருந்து சிவா சென்றது. விருத்திசுக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

இவனும் சேர்த்தியா..? நினைக்க உமட்டியது, குமட்டியது.

வாசலில் வண்டியை நிறுத்தி உள்ளே சென்றான்.

ஆத்திரம் அடக்கி…

“மணிமேகலை!” அழைத்தான்.

வந்தாள்.

“சார் வீட்டுக்குப் போனீயா..?”

‘”போனேன்!”

“வேலையெல்லாம் முடிஞ்சுதா..?”

“முடிஞ்சுது…?”

“நாளைக்குப் போகணுமா..?”

“வேணாம். எனக்கு சிரமம் வேணாம்ன்னு சொல்லி நாளையிலிருந்து வேற ஆள் ஏற்பாடு பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டார்.” – பக்குவமாக சொன்னாள்.

“சந்தோசம். சிவா வந்தானா..?”

“வந்தார்..”

“எதுக்கு வந்தான்..?”

“படிக்க புத்தகம் கொடுத்துவிட்டுப் போனார்.”

“அவன்தான் உனக்குப் புத்தகம் கொடுக்குறானா…?”

”இல்லே! அந்தப் பெண் கொடுத்தனுப்பியிருக்காள்.”

“அவன் பழக்கம் வேணாம்ன்னு சொன்னேன்.”

“பழகல. வாசல்ல நின்னு புத்தகம் மட்டும் கொடுத்துவிட்டுப் போனார்.”

“உன் அத்தைப் பையன் வந்தாரா..?”

“வந்தார்..”

“அடிக்கடி ஏன் வர்றார்..?”

“சின்ன வயசிலிருந்து பழக்கம். அன்பு, பாசம் . பார்க்க வர்றார்.”

“பார்க்க வர்றாரா..? படுக்க வர்றாரா..?”

காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலிருந்தது.

“அத்தான்!” – அலறினாள்.

“யாருக்கு ரெண்டு மாசம்..? எனக்கா அவனுக்கா..?”

மறுபடியும் அதே அதிர்ச்சி.

“விருத்திஷ்!” – கோபப்பட்டாள்.

“என்னடி பேர் சொல்றே..?”

“சந்தேகத்துக்கும் அளவிருக்கு…”

“சரி. என் சந்தேகத்தை சரி செய்!”

“எப்படி..? சீதை மாதிரி தீக்குளிக்கணுமா..?”

“ம்ம்… செய்யலாம்..!” மனசாட்சி இல்லாமல் சொன்னான்.

“அப்படி செய்யிறது அந்தக்காலம். இன்னைக்கு மரபணு சோதனை!..”

“நான் தயார்…”

“அதுக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேரக்குள்ள ஒரு ஒப்பந்தம்”.

“என்ன..?”

“அந்த சோதனையில் நீங்கதான்னு முடிவு வந்தால்… நான் கருவைக் கலைச்சிடுவேன்!”

“மணிமேகலை…!” அரண்டான். அதிர்ச்சியாய்ப் பார்த்தான்.

“எதுக்கு சந்தேகப்புத்தி உள்ள கருவைச் சுமந்து உங்க புள்ளையைப் பெத்துக்கனும்..? அதுக்கு நான் சுமக்காமலே இருக்கலாம். நமக்கு வாரிசு தேவை இல்லே. வெறுமனே படுத்துக்கலாம்…!”

“மணீஈஈ!..”

“இதுக்குத் தயார்ன்னா…. நாம இப்பவே போகலாம்!”

அதிர்ச்சியில் திகிலை விழுங்கியது போல இருந்தது .

‘எதிர்த்து பேசாதவள் இன்றைக்குப் பேசுகிறாள். சந்தேகப்பட்டால் இப்படி ஒரு முடிவு சொல்கிறாள். இந்த பிரச்சனைக்குத் தீர்வு…?’

சிறிது நேரம் மௌனமாக இருந்த விருத்திஷ்… மெல்ல வெளிவந்து வாசலில் வண்டி ஏறினான்.

மெல்ல விட்டு பூங்கா வந்து ஒரு மணி நேரம் தங்கி நல்ல காற்று வாங்கி… கோபதாபம் விலகி மனம் சமாதானமாகி…. ஒரு முடிவிற்கு வந்து தன் சொந்த வீட்டிற்கு வண்டியை விட்டான்.

வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தவனுக்கு அதிர்ச்சி!

அத்தியாயம் – 14

மணிமேகலையுடன் நின்ற அம்மா, அப்பா இவனைக் குரோதமாய்ப் பார்த்தார்கள்.

“எதுக்குடா இவளை இந்தப்பாடு படுத்தறே..?” அம்மா அன்னபூரணிதான் முதலில் பாய்ந்தாள்.

“வாயும் வயிறுமா உள்ள பொண்ணை இப்படியெல்லாமா படுத்துறது..?” அடுத்து அப்பா. கங்காதரன்.

“மொதல்ல பொண்டாட்டியை நம்பனும். அது இல்லாம அதுக்கு சொந்தக்காரன் அவனா, இவனான்னு கேட்கிறதெல்லாம் தப்பு.”

“வர்றவன்கிட்டேயெல்லாம் படுக்குறதுக்கு மனைவி என்ன விபச்சாரியா..?…”

“சொல்டா..? “

“ஏன்… அத்தைப் பையன் மாமன் பையன் வீட்டுக்கு வரக்கூடாதா..? நீங்க ரெண்டு பேரைத் தவிர வேற யாரும் வீட்டிற்குள் நுழையக்கூடாதா..? நீங்க ரெண்டு பேர்தான் வாழனுமா..? அவன்கிட்ட பேசாதே. இவன்கிட்ட பேசாதே. அவன் அப்படி, இவள் இப்படின்னு உன்னைச்சுத்தி உள்ள அத்தனைப் பேர்களும் அயோக்கியம். நீ மட்டும் யோக்கியம். அப்படித்தானே..?!”

“இங்கேயே பெத்த தாயை சந்தேகப்பட்டவன் தானே நீ..? ‘அம்மா! அப்பா நல்லா இருக்க… நான் மட்டும் ஏன் இப்படி..’ ன்னு கேட்டவன்தானே நீ…?”

“நீ அனாதையாய்க் கிடந்து அவஸ்தைப் படக்கூடாது. ஒரு நோய் நொடின்னா உதவிக்கு ஆள் வேணும்ன்னு நெனைச்சி விழாதவங்க காலிலெல்லாம் விழுந்து உனக்குக் கலியாணம் பண்ணி வச்சது எங்க தப்பு.”

அன்னபூரணியும், கங்காதரனும்… வாயைத் திறக்க விடாமல் ஆளைப் பிலுபிலுவென்று பிடித்தார்கள்.

அம்மா, அப்பாவிடம் சொல்லி முறையிடலாமென்று வந்தால்… இங்கேயும் இடி! – விருத்திசுக்கு வாயிலிருந்து எந்த வார்த்தைகளும் வரவில்லை.

எதுவும் பேசாமல் திரும்பினான்.

“அத்தே….! அவர் கோபமா போறார்..” மணிமேகலைத்தான் பதறினாள்.

“எங்கேயும் போகமாட்டான் நேரா வீட்டுக்குத்தான் போவான். நீ போ. அடுத்து ஏதாவது சொன்னான்னா நீ வர வேணாம்; கைபேசியில் சேதி சொல்லு. உடனே வர்றோம். இவனை இன்னும் செதுக்கனும்.” அன்னபூரணி சொன்னாள்.

‘பூட்டி சாவி தன்னிடம் இருக்கும்போது அவர் போய் வாசலில் நிற்பாரே..!’ மணிமேகலை மறு பேச்சு பேசாமல் உடனே கிளம்பினாள்.

இவள் ஆட்டோவில் வீடு சென்று இறங்கியபோது வாசலில் கணவனின் மூன்று சக்கர வண்டி இல்லை.

‘அப்பாடி! வரவில்லை!’ – நிம்மதியாய் இறங்கி வீட்டினுள் சென்றாள்.

1 மணி, 2 மணி, 3 மணி….

“அத்தே ! ஆள் இன்னும் வீட்டுக்கு வரல..”

அன்னபூரணிக்குப் புரிந்தது.

“ரெண்டு பக்கமும் இடி. கோபம் எங்காவது தங்கி ஆத்திட்டு வருவான். பொறு.”

மணி…5.30

”அத்தே! இன்னும் காணோம்.!”

“பொறு!”

மணி 9.00.

ஆளைக் காணோம். மனம் கலவரமானது.

‘தற்கொலை, கிற்கொலை..!’ நினைக்கத் திகீரென்றது.

“அத்தே ! இன்னும் வரலை. கோபத்துல தற்கொலை…?” பீதியுடன் சொன்னாள்.

“அந்த முடிவுக்கேப் போகமாட்டான். கோபத்துல ரெண்டு மூணு நாள் கழிச்சி திரும்பி இருக்கான்.”

“அத்தே! எனக்குத் தனியே இருக்க பயமா இருக்கு…”

“அக்கம் பக்கம்தான் வீடிருக்கே. பயப்படாம இரு. முடியலைன்னா சொல்லு. உடனே ஆட்டோ பிடிச்சி வர்றேன்.”

‘ஒரு பொம்மனாட்டி ! இரவில் தனித்து வருவது சரி இல்லை.’ – நினைத்த மணிமேகலை…

“சரி அத்தே! நான் பயப்படாம இருக்கேன்.” சொல்லி துண்டித்தாள்.

அத்தியாயம் – 15

அலுவலகத்திற்குக் கிளம்பி வெளியே வந்த சிவா கண்கள் வழக்கம் போல் மணிமேகலை வீட்டின் மேல் தாவியது.

வாசலில் விருத்திஷ் வண்டி இல்லை. நேற்றும் இல்லை. இன்றும் இல்லை. ஆக கணவன் மனைவிக்குள் தகராறு. மனம் எடை போட்டது.

விருத்திஷ் வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி கோபம் தலைக்கு மேல் ஏறிவிட்டால் குறைந்த பட்சம் இரண்டு நாட்களுக்கு வீடு, அலுவகப் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டான். எங்காவது போய் இரண்டு நாட்கள் தங்கி தன் கோபத்தை ஆற்றி விட்டுத்தான் திரும்புவான். இது அவனைப் பற்றி அலுவலகமே அறிந்த சேதி.

ஆரம்பத்தில் ஆள் எங்கே என்று தடுமாறினாள் தேடினார்கள். அப்புறம் இதுதான் அவன் குணாதிசயம் என்று தெரிந்து விட்டு விட்டார்கள்.

சிவா அலுவலகம் செல்லாமல் விருத்திஷ் வீடு வந்தான்.

கதவு தட்டினான்.

கணவன் என்று எதிர்பார்த்து திறந்த மணிமேகலை முகத்தில் ஏமாற்றம்.

“என்ன..?” நிலையில் நின்றபடியே கேட்டாள்.

” கொஞ்சம் உள்ளே பேசனும்…”

வழி விட்டாள்.

கூடத்தில் அமர்ந்தவன்…

“விருத்திஷ் எங்கே..?” கேட்டான்.

“அம்மா வீட்டுக்குப் போயிருக்கார்.!”

“பொய் சொல்றீங்க…. அவன் கோபம் எங்கோ போயிருக்கான்.”

“எப்படித் தெரியும்..?”

“அவன் உங்களைத் தனியே விட்டுப் போயிருக்கான்னா இதுதான் காரணமா இருக்க முடியும்..! அவன் சுபாவம் அப்படி.”

ஆளைப் பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது! இவளுக்குப் புரிந்தது. பேசாமலிந்தாள்.

“என்ன சண்டை..?”

“சண்டை இல்லே..”

“திரும்பவும் பொய் சொல்றீங்க. சந்தேகமா..? “

கொஞ்சமாய்த் துணுக்குற்றுப் பார்த்தாள்.

“எனக்குத் தெரியும். அவன் அப்படித்தான்! யார் மேல…?”

“என் அத்தைப் பையனை அவருக்குப் பிடிக்கலை..”

“ஓ… அந்த ஆள் மேல சந்தேகமா..?”

“ஆமாம்!”

”நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே மணிமேகலை..?”

“என்ன..? “

“இந்த சந்தேகப்புத்தியாலதான் அவன் கலியாணமே வேண்டாம்னு இருந்தான். இதை என்கிட்டேயே பலமுறை சொல்லி இருக்கான். அவனால எந்த நல்ல பொண்ணையும் வைச்சு குடித்தனம் நடத்த முடியாது. அவுசாரி பட்டம் கட்டிடுவான்.”

“….”

“உண்ணாம தின்னாம எதுக்கு கேட்ட பேர் எடுக்கனும். அதை தின்னு சரி செய்யலாமே..? !”

“புரியல..?!”

“நல்லவள் கெட்டவளாகவே ஆகலாம்..”

அதிர்ச்சியாய்ப் பார்த்தாள்.

‘இவன் நல்லது சொல்ல வரவில்லை!′ – அவளுக்குப் புரிந்தது.

“உங்க உபதேசத்துக்கு நன்றி!” சொன்னாள்.

“நான் தயாராய் இருக்கேன் மணிமேகலை!…”

“வெளியே போங்க…”

“ஏன் உங்க அத்தை மகன் மட்டும்தான் அதுக்குச் சரிப்படுவாரா..? என்னையெல்லாம் ஏத்துக்க மாட்டீங்களா..மணிமேகலை..?”

‘அப்பா! என்ன பேச்சு!’ காதை பொத்திக் கொண்டாள்.

“இதுக்கு மேல பேசினா செருப்பு பிஞ்சுடும்.” – கத்தினாள்.

“மணிமேகலை..! “

“வெளியே போடா பொறுக்கி நாயே!” குரலை இன்னும் அதிகம் உயர்த்தி கத்தி வாசலைக் காட்டினாள்.

இனி இருந்தால் ஆபத்து. இது நமக்கு உதவாது! தெரிய… அடுத்த வினாடி…

வெளியேறினான்.

பெண்களுக்காக அலையும் என்ன உலகம் இது! அப்படியே நொறுங்கிப் போய் அமர்ந்தாள் மணிமேகலை.

அழைப்பு மணி அடித்தது.

விருத்திசா, சிவாவா..? – வந்து திறந்தாள்.

வெங்கடேஷ்!

தன் தாயைக் கண்ட மனநிலையில் அப்படியே தாவி கட்டிப் பிடித்துக் குலுக்கினாள்.

“என்ன… என்ன…” அவளை விடமால் அணைத்துக் கொண்டு உள் நுழைந்த வெங்கடேஷ்

“என்ன நடந்தது சொல்…?” ஆதரவாகத் தட்டி கேட்டான்.

“உங்களைச் சிதைச்சதுக்குக் கை மேல் பலன்..”

“புரியல…”

விசும்பி விசும்பி நடந்தைச் சொன்னாள்.

“எங்கே இருக்கான் அந்த ராஸ்கல்!” துடித்தான்.

“வேணாம் விட்டுடு வெங்கடேஷ். வெளியில தெரிஞ்சா நமக்குத்தான் அசிங்கம். சேலைதான் கிழியும்..!”

“மானம், ரோசம், கோபதாபத்துக்கெல்லாம் பயந்து பெண்கள் உண்மையைச் சொல்லாமல் விடுவதால்தான் நெனைச்சவங்களெல்லாம் அத்து மீறுறாங்க. இது தப்பு மணிமேகலை. தப்பா பார்த்தாலோ, பேசினாலோ, நடந்தாலோ அந்த நிமிஷமே எதிர்க்கணும். சொல்லணும். அப்போதுதான் அவன் மான அவமானத்துக்குப் பயந்து ஓடுவான், ஒளிவான். அன்னைக்கு அந்த மேலதிகாரி சந்திரசேகரன், இன்னைக்கு சிவா. இவனுங்களை விடக்கூடாது.” வெடித்தான்.

“தயவு செய்து எனக்காகப் பொறு!” அவன் கையைப் பிடித்துக் கெஞ்சினாள்.

தொய்ந்து…அமர்ந்தான்.

தன் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து விட்டான்! என்று நினைத்து சிறிது நேரம் பேசாமலிருந்த மணிமேகலைக்குள்…

‘எல்லோரும் கண் நிறைந்த கணவனை விரும்பும் போது நாம் கொஞ்சம் மாறி இப்படி ஊனமானவனைத் திருமணம் செய்து அவனுக்கும் வாழ்க்கை கொடுத்து சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ வைத்தாலென்ன என்று மாற்றி யோசித்து தன் காதலைத் துறந்து வந்தால்… வாழ்க்கை கேவலம். அதலபாதாளம்! இது சரி இல்லை!’ – என்று நினைத்த மணிமேகலை ஒரு முடிவிற்கு வந்தாள்.

“வெங்கடேஷ்!” அழைத்தாள்.

பார்த்தான்.

“சாகடிச்ச நம்ம காதலுக்கு நானே உயிர் தர்றதா முடிவு பண்ணிட்டேன்.!” பார்த்தாள்.

பார்த்தான்.

“இனி என்னால இந்த வாழ்க்கை வாழ முடியாது! நீ என்னை ஏத்துக்கனும்.” சொன்னாள்.

“மணிமேகலை!” அலறினான்.

“ஆமாம் நீங்க என்னை ஏத்துக்கனும். நாம கணவன் மனைவியாய் கடைசிவரை சந்தோசமா வாழனும்.”

“மணிமேகலை! உனக்கொன்னும் புத்தி பேதலிச்சுப் போகலையே..?” கேட்டான்.

“புத்தி பேதலிக்கலை. தெளிவா இருக்கேன். தெளிவா பேசறேன்.”

”உளறாதே! இது தப்பு.”

“நம்ம நல்ல காதலை உதறி . சேவை மனப்பான்மை, நல்ல மனசோட ஒரு மாற்றுத் திறனாளியைப் புருசனாய் ஏத்துக்கிட்டேன். ஆனா… அவர் என் நல்ல மனசை ஏத்துக்கலை. ஊனத்தின் பாதிப்பு பிரதிபலிப்பு அவருக்கு ஆண் பெண் பேதமில்லாமல் மனுச வர்க்கத்தின் மீதே சந்தேகக் கண். நானும் மாறும் மாறும்ன்னு பொறுத்தேன். எனக்கு சித்தரவதைகள் சங்கடங்கள்தான் பரிசாக் கிடைச்சதேத் தவிர… நல்ல வாழ்க்கை கிடைக்கலை. மறுபடியும் நான் இதிலேயே எதுக்கு உழன்று சாகனும். அதனால வெளியே வர முடிவு பண்ணிட்டேன். அது மட்டுமில்லே ஒரு மாற்றுத் திறனாளி மனைவியை மத்தவங்களுக்கு ஒரு மதிப்பா மரியாதையாய்ப் பார்க்கலை. ஏழ்மை, வறுமை, வழி இல்லாமல் திருமணம் முடிச்சதா நினைச்சி ஏளனமா பார்க்கிறதோட நிறுத்தாம, ஆண்கள்…. நான் சோரம் போனவள், சோரம் போவேன்னும் எதிர்பார்க்கிறாங்க. இந்த தொல்லையிலிருந்தெல்லாம் நான் நீங்கனும். நாம வாழனும்..”

“வேணாம் மணிமேகலை. மனசை மாத்து. பொறு.”

“இனியும் பொறுமையாய் இருக்க முடியாது வெங்கடேஷ். சந்தேகத்தோடு இருக்கிறவரோடு சரியாய் வாழமுடியாது என்கிறது நிதர்சனமான இருந்தாலும்….அவர் ஒரு பொறுப்புள்ள கணவன், ஆண் மகனாகவும் இல்லே. கோபம் வந்தால் ரெண்டு மூன்று எங்கோ தொலைந்து திரும்ப வருவாராம். இப்பவும் அப்படித்தான் இருக்கார். நேத்து போனவர். ஒரு நாளாச்சு இன்னும் திரும்பலை.ராத்திரி முழுக்க தனியா இருந்தேன். இப்படி பட்டவரோட நான் எப்படி வாழ முடியும்..?”

“தப்பு மணிமேகலை. அவரைச் சரி படுத்திடலாம்.”

“முடியாது. அவர் அப்பா, அம்மாவே கைவிட்ட கேஸ். அது மண்ணோடு மண்ணாகிற வரை முடியாது. என்னை அவருக்கு கடமைக்கு கட்டி வச்சு காரியத்தை முடிச்சிக்கிட்டாங்க. “

“வந்து… வந்து…”

“நீங்க என்னை எச்சில் பழம்ன்னு ஒதுக்குறீங்க..” அடுத்த சாட்டையை எடுத்தாள்.

“இல்லே மணிமேகலை..?”

“அப்போ என்னை ஏத்துக்காததுக்குக் காரணம்…? “

“அவசர படவேணாம்…”

“நிறுத்துங்க வெங்கடேஷ். உங்க காதல் பொய், கரிசனம் பொய், மெய்யாய் இருந்திருந்தால் என்னை இந்த நரகத்திலிருந்து காப்பாத்துவீங்க..”

“எதுவும் பொய்யில்லை மணிமேகலை. உன்னை நான் எப்பவும் காதலிக்கிறேன். அப்போ காதலிச்சதுக்கும் இப்போ காதலிக்கிறதுக்கும் வித்தியாசமிருக்கு. அன்னைக்கு உன்னை காதலியாய்ப் பார்த்தேன். திருமணத்துக்குப் பின் ஒரு பெரிய மனசு படைத்த பெண்ணாய்ப் பார்க்கிறேன். அந்த மதிப்பு மரியாதையில் தான் நேரம் கிடைக்கும்போ தெல்லாம் உன்னை வந்து பார்த்து பெருமை பட்டுப் போவேன். இன்னைக்கு நான் உன்னை ஏத்துக்கிட்டேன்னா…உன் வித்தியாச மனசுக்கு மதிப்பு இருக்காது. நாம இன்னும் கள்ளத்தனமாவே பழகிறதா உலகம் நினைக்கும். இந்த அசிங்கம் நமக்குத் தேவை இல்லாதது. ஒரு காரியத்தில் இறங்கும் போது நம் எதிர்பார்ப்புகளையும் மீறி சங்கடங்கள் வரத்தான் செய்யும். அதையும் தாண்டி நாம சாதிக்கிறதுதான் உண்மையான வெற்றி. மத்தபடி சங்கடங்கள் வரும்போது துவள்வது, ஒதுங்குவது, விலகுவதெல்லாம் கோழைத்தனம்.”

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா… என்னை ஏத்துக்காததுக்குக் காரணம் அடுத்தவன் குழந்தைக்குத் தகப்பனாகணும் என்கிற எண்ணம். சரியா..?” கேட்டாள்.

“தப்பு. அந்தக் குழந்தையைப் பெத்துக்கொடு என் சொந்தக் குழந்தையாய் வளர்க்கிறேன். ஆனா உன் முடிவை மட்டும் என்னால் ஏத்துக்க முடியாது. மணிமேகலை..! விருத்திசை விவாகரத்து செய்துவிட்டு உன்னை ஏத்துக்கிறது பெரிய விசயமில்லே. எனக்கு சம்மதம். இதை ஊராரும் ஏத்துப்பாங்க. அப்படி நடந்தால் நீ துணிஞ்சு இறங்கிய காரியத்தில் உனக்குத் தோல்வி. உயிரே போகும் தருணம் வந்தாலும் நாம கொண்ட கொள்கையில் பிடிப்பாய் இருக்கணும் அதுதான் சரி.

மணிமேகலை ! இன்னைக்கு உன் அருமை புரியாத விருத்திஷ் நீ பிரிந்த பிறகு வேதனை படுவார். எல்லா மனுஷன்கிட்டேயும் நல்ல மனசு இருக்கு. அதை தோண்டி எடுக்கிறதுதான் சிரமம். துவளாதே. தப்பான முடிவு வேணாம். உன் புருசன் என்னைக் கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளினாலும் உனக்கு காவலாய் இருப்பேன்.” சொன்னான்.

கதவு தட்டப்பட்டது.

வெங்கடேஷ் வந்து கதவைத் திறந்தான்.

எதிரில் விருத்திஷ் அம்மா, அப்பாவுடன் இருந்தான்.

வெங்கடேசை கண்டதும்… அவன் அப்பா, அம்மா முகங்களில் ஆயிரம் வோல்ட்டின் அதிக மின்சார வெளிச்ச பிரகாசம்., பரவசம்.

“நீங்க….எங்களுக்குத் தம்பி இல்லே தம்பி. தங்கக்கம்பி!” சொல்லி கங்காதரன் வெங்கடேசை கட்டிப் பிடித்தார்.

“ஆமாம் தம்பி!” அதே பரவசத்தில் அன்னபூரணியும் அவன் கையைப் பிடித்தாள். “இவனைத் தேடி கண்டுபிடிச்சி … சந்தேகம் வேணாம்டா. உன் மனைவி மேல அன்பு வை, பாசம் வை, நெஞ்சுக்குள் நெஞ்சு வை . அப்போதான் மனைவி அருமைத் தெரியும்ன்னு புத்திமதி சொல்லி அழைச்சு வந்த நாங்க… நீங்க உள்ளே பேசின பேச்சு மொத்தமும் கேட்டோம். பின்னிட்டீங்க. ரொம்ப உசந்துட்டீங்க.” சொல்லி அவர் இறுக்கிப் பிடித்தார்.

“மருமகளே…! என் மகனை ஏதோ வேண்டா வெறுப்பாய் விருப்பமில்லாம கட்டிக்கிட்டதாதான் நினைச்சோம். நீ துணிஞ்சு, தன் அருமை காதலை தியாகம் செய்து, என் பிள்ளைக்குக் கழுத்தை நீட்டினே என்கிறதை நினைக்கும் போது… உன்னைப் பார்க்க பெருமையாய் இருக்கு”. அன்னபூரணி அவளை அதிக பரவசத்தில் கட்டிப் பிடித்தாள்.

“இங்கே பார் விருத்திஷ் ! இவளை மனைவியாய்ப் பெற நீ கொடுத்து வச்சிருக்கனும். மனசுல கொஞ்ச நஞ்ச சந்தேகம் இருந்தாலும் தூக்கி எறிஞ்சுட்டு குடித்தனம் செய்!” அவன் அப்பா கங்காதரன் சொல்ல…

“மணிமேகலை! வெங்கடேஷ்! என்னை மன்னிச்சிடுங்க..” விருத்திஷ் இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு தழுதழுத்தான்.

எல்லார் முகங்களிலும் மலர்ச்சி.

(முற்றும்)

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *