பூச்சுமை





(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘அப்பவும்… இப்படியா ஒரு மனுசர், அப்புராணியா இருக்கிறது?’
அடுப்பு வேலையிலிருந்த பூவாத்தா, விடிந்து பொழுது புறப்பட்டபிறகும் ஒதுங்குகிற கைலி தெரியாமல், ‘குண்டக்க முண்டக்க’ படுத்து உறங்குகிற புருஷனைப் பார்த்தாள். குறட்டைச் சத்தம் வேறு. கள்ளமில்லாத ராசாவுக்குக் கவலையற்ற உறக்கம்.
இரண்டு அடுப்பிலும் தீ. ஒன்றில் சோறு; மற்றதில் குழம்பு. அவசரமாய் சோறு ஆக்கி வைத்துவிட்டு, ஏழு மணிக்குள் பூமார்க்கெட்டுக்குப் போயாகணும்.
முள்ளில் உட்கார்ந்திருப்பவளைப் போலத் தவித்தாள். பெரிய பூக்குடலையை எடுத்துவைத்தாள். ஈரத் துணியும், பையும் எடுத்துப் போட்டாள். வாழை மட்டைகளை, நீரில் நனையப்போட்டாள்.
ஏற்கனவே நனைந்த மட்டைகளை எடுத்துப்போட்டு, கத்தியால் கிழித்தாள். பழகிய கை. தன்னிச்சையாக இயங்கியது. சிந்தாமல், சிதறாமல் உரித்தாள். மயிரிழையாய் நார்கள் மடியில் துவண்டன. அதையும் முடிச்சாகப் போட்டு நீருக்குள் போட்டாள்.
மறுபடியும்… அடுப்படியிலிருந்துகொண்டே புருஷனைப் பார்த்தாள். நல்ல கறுப்பு, முரட்டு உடம்பு.தடித்த உதடுகள், உதடுகளின் பருமனை மறைக்கிற கட்டி மீசை. அவன் சிரித்தால் முகத்தில் ஓர் அழகு விரியும். கண்ணில் ஒளி துள்ளும். உள்வேதனையை மறைத்துக்கொண்டு சிரிக்கிற மாதிரியாகப் பக்குவப்பட்ட ஒரு தோற்றம் தெரியும்.
தோற்றத்திற்குச் சம்பந்தமில்லாத மனசு. ரொம்ப இளகின மனசு. கோழை மனசு. அசட்டு மனசு, அப்புராணி…
இப்படிப்பட்ட அப்புராணியாக யாரும் இருக்கமாட்டார்கள். அதுவும்… இந்தக் கலிகாலத்தில்!
போன மாதம்… அப்படித் தான்.
கடையைப் பார்த்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு, பூ மார்க்கெட் போயிருந்தாள். வந்து பார்த்தால்… கடையே காலி. சின்ன மாலை, பெரிய மாலை எல்லாம் குளோஸ். பூப்பந்துகூட ரொம்பக் குறைந்துபோயிருந்தது.
பூவாத்தாவுக்குள் பகீர் என்றது.
டப்பாவைத் திறந்தாள். அவசரமாய் எண்ணிப் பார்த்தாள். அவள் பயந்தபடியே ஆகியிருந்தது. பணம் ரொம்பக் குறைந்திருந்தது. அசல்கூடத் தேறவில்லை. கட்டுக்கூலி, லாபம் எல்லாம் போச்சு. மண்ணாப் போச்சு.
அவளுள் ஆத்திரமும், குழப்பமும். ரௌத்ரமாய் புருஷனைப் பார்த்தாள். பார்வையின் தொனியில் அரண்டு போனான்.
அதிகாலையில், நகரத்தின் மிக முக்கியப் பிரமுகர் பெரிய தொழிலதிபர் – அருஞ்சுனை நாடாரின் மரணம், அந்த நகரைக் குலுக்கியது. ஏகப்பட்ட பேர் அஞ்சலி செலுத்த, மாலை கேட்டு ஆலாய்ப் பறந்திருக்கிறார்கள். அருஞ்சுனை நாடார் இவனுக்கும் முதலாளி. அவரது நிறுவனங்களில் ஒன்றான பெரிய தீப்பெட்டியாபீஸில் ரெண்டு வருஷம் வேலை பார்த்திருக்கிறான்.
‘மோலாளி’ செத்துப் போனார் என்ற செய்தியில், இவன் ரொம்ப ஆடிப்போனான். மாலை கேட்டு வந்தவர்களுக்கு எல்லாம், தூக்கி தூக்கி தந்துவிட்டான்.
விலையும் சொல்லவில்லை; பேரமுமில்லை. அவர்களாகக் கொடுத்த பணத்தை மட்டும், டப்பாவில் போட்டு வைத்திருந்தான்.
பூவாத்தாவுக்குள் ‘திகு, திகு’வென்று எரிந்தது. ‘அடப்பாவி மனுசா’ என்று மனசு கிடந்து புலம்பியது.
“இப்படியும் ஒரு மனுசரா? இளிச்சவாய்த்தனமாய் ஏமாந்துபோய் இருப்பாகளா? அடக் கொடுமையே…”
காலை நீட்ட பொழுதில்லாமல், மடக்கிக்கொண்டே உட்கார்ந்து, இடுப்பொடிய பூக்கட்டியவள். அவள் குலை கொதித்தது.
“இப்படி… எல்லாத்தையும் கரியாக்கித் தொலைச்சுட்டு நிக்கீகளே – உங்களுக்கு அறிவேயில்லியா? சுரணையில்லியா? நீங்க ஒரு ஆம்பளைதானா? ச்சே.”
சீறினாள். அவள் முகமே ரணகாளியாய், கோரமாய் இருந்தது.
அவன் அலுங்காமல் நின்றான்.
இந்த கதைதான் எப்பவும். வெள்ளை மனசில் காரியம் செய்து, ஏமாந்துபோய் நிற்பான். அதைவிடக் கொடுமை, ஏமாந்துபோனதை உணரவே மாட்டான்.
‘கடையோ, கருவூலமோ’ என்று கருதுகிற அக்கறை இருக்காது. லௌகீக வாழ்வின் மேடுபள்ளம் தெரியாது.
பஸ் ஸ்டாண்டு பக்கத்தில், மெயின் வீதியின் ஓரத்தில் வரிசையாகப் பூக்கடைகள். பெரிய கடையல்ல. ரோட்டின் விளிம்பில் ஒரு மேஜை. பின்னால் இரண்டு மரப்பெட்டி. இரண்டு குச்சிகளை ஊன்றி, அதன்மேல் ஒரே ஒரு கிடுகு. அவ்வளவுதான் கடை.
மாமூல் வாங்க மாசாமாசம் காக்கி உடுப்பு வரும். பழக்கமான ஆள்தான். அவரைக் கண்டுகூட இவன் பதறுவான். கைகால் எல்லாம் நடுங்குவான். வேட்டியைக்கூட சில சமயம் நனைத்துக்கொள்வான். பூவாத்தா வந்தால்தான், அவனுக்கு உயிரே வரும். மூச்சு விடுவான்.
உறங்குகிற இந்த மனிதரை, இலேசில் எழுப்பிவிட முடியாது. கும்பகர்ணனை எழுப்புகிற மாதிரித்தான். கத்திக் கத்தி தொண்டைத் தண்ணீர் வற்றிப்போகும்!
கடை திறக்கப் போகச் சொன்னால் -ஏகமாய் ‘பிகு’ பண்ணுவான். கிராக்கி பண்ணுவான். ‘ஐயா, ராசா’ என்று நாடியைப் பிடித்து, கெஞ்சிக் கூத்தாடி, தள்ளி விடுவதற்குள்… ஆத்தாடி அம்மாடி என்றாகிப்போகும்.
மார்க்கெட்டுக்குள் நுழைந்தாள் பூவாத்தா. அங்கே கமிஷன் கடையில் ஏலம் துவங்கிவிட்டது. ஏகப்பட்ட ஆட்கள்.பூ வாங்க காத்திருக்கிற, ஏலம் கேட்கிற ஆட்கள்.
அரும்புகள் யாவும் நானூறு நானூறு கிராமாகக் கூறு கட்டி, ஏலம் விடப்பட்டது.
“சீவலப்பேரி மல்லி அரும்பு…அம்பது பைசா…
“ஒன்னேகால்.”
“ஒன்னேகால்.”
“ஒன்னேமுக்கா.”
“ஒன்னேமுக்கா.”
“ரெண்டரை.”
“ரெண்டரை.”
பூ வாங்க வந்தவர்கள் கேட்கிற ஏலத்தொகையை, கமிஷன் கடைக்காரர் எதிரொலிக்கிறார். ஒரே கூச்சல், கிண்டல், கேலி, போட்டி. பூவின் தரம் பற்றிய அபிப்பிராயங்கள்… காலடியில் நசுங்கிக் கிடக்கிற பூக்கள். மூடை மூடையாய் கேந்திப்பூக்கள், குவிந்துகிடக்கிற ரோஜாப் பூக்கள்…
பூவின் பவித்திரமும், கவித்துவமும் காணாமல்போய், ஏலப்பொருளாய், கேலிப்பண்டமாய்
கூட்டம் நெரிபட்டது. ‘நாமுந்தி நீ முந்தி’ என்று ஏலம் கேட்கிற கூவல். ஏலம் முடிந்து, பூவை அள்ளிக்கொண்டு கணக்கு முடிக்கிற பேரம், இரைச்சல். சந்தைக் கடை இரைச்சல்.
கையில் உள்ள பணத்திற்கேற்ப ஏலம் கேட்டு, பூ வாங்கிக் கொண்டாள். அப்புறம் கேந்தி, ரோஜா, சேவல் கொண்டை, மரிக்கொழுந்து எல்லாவற்றையும் எடைபோட்டு வாங்கிக் கொண்டாள்.
பூச்சந்தைக் கூட்டத்திலிருந்து பிதுங்கிக்கொண்டு பூவாத்தா வெளியே வரும்போது, வியர்வையில் ‘தொப்பொப்’பென்று நனைந்திருந்தாள்.
நீரில் நனைத்த அரும்பு, துணிப்பொட்டலத்தில் கசிந்து வழிகிற நீர், செவியோரங்களைக் கடந்து புஜத்தில் சொட்டு போட்டது.
பூச்சுமை தாளாமல், பூவாத்தா திணறினாள்.
மணி எட்டரை இருக்கும். நகரம் ரொம்பச் சுறுசுறுப்பாகி விட்டது. யந்திர கதியில் பரபரத்தது. அவளும் யந்திரமாய் நடந்தாள்.
‘…இன்னிக்கு மட்டும் எரநூத்தி நாப்பது ரூபாய்க்கு பூ வாங்கியிருக்கு. நமக்கும் அரைக்குறுக்கம் புஞ்சை இருந்திருந்தா… இம்புட்டு ரூபாயும் மிச்சமாகும். பாடுபட்டு வெளையவச்ச பூவைமட்டும் மாலைகட்டி வித்து, துட்டாக்கிடலாம்!
புஞ்சையில்லே. துட்டு போட்டு சரக்கு வாங்கி, இடுப்பொடிய உக்காந்து, கண் பூத்துப்போற அளவுக்கு உத்து உத்துப் பாத்து… பூக்கட்டி வித்துப் பொழைக்குற ஏவாரப் பொழப்பாய்ப் போச்சு. நாலு சில்லறை மிஞ்சுறதும் உண்டு. இல்லாமப்போறதும் உண்டு.
சொந்த பந்தம் ஒட்டுதலும் இல்லை. நாதியற்ற நிலைமை. தாய் தகப்பனை உதறிவிட்டு வந்தவள்,பூவாத்தா.
அதுவும் இந்த ராசாதி ராசாவுக்காக!
இவனது இரக்க சுபாவம்தான், அவளது மனசை முதலில் ஈர்த்தது. இரும்பு உடம்புக்குள் இருந்த பூப்போன்ற மிருதுவான மனசு, பூவாத்தாவின் பூ நெஞ்சுக்குள் வேர்விட்டது.
தெருவில் பூ விற்றுக்கொண்டு திரிந்த கன்னி மனசு, கள்ளமற்ற அந்த மனிதனின் வெள்ளையான சிரிப்பால் சூறையாடப்பட்டது.
வாடுவதற்குள் மூடினால்தானே, பூ – பூவாகப் பயன்படும். அதனால் தயங்கித் தயங்கி அய்யாவிடம் வாயைத் திறந்தாள். அவரோ வெகுண்டு சீறினார். முரட்டுத்தனமாய் பூக்கூடையை ஏற்றினார்.
நாதியத்த பயல். உப்பு கல்லுக்குக்கூட பெறாத வெறும் பயல்… உருப்பட வழியறியாத குருட்டுப் பயல்.
இதுதான் இவனைப்பற்றிய அய்யாவின் கணிப்பு.
“பூ விக்குறதுக்கு… தெருவுல திரிஞ்சதுலே, ஓம் மனசே நாறிப்போச்சு. பேசாம வீட்லேகிட.’
அய்யாவின் கட்டளை, அவளை உசுப்பியது. உழைப்பும், தொழில் அறிவும் அவளைத் தைரியப்படுத்தியது. தீயின் பலத்தோடு புறப்பட்டாள்.
”நாதியத்தவனோட நாதியத்த ஒருத்தி சேர்ந்துட்டா, நாங்க தனிமரமில்லியே, தோப்பு மரங்கதானே? பாருங்க அய்யா, நா உப்புக்கல்லை வைரக்கல்லா ஆக்கிக் காட்டுறேனா… இல்லியான்னு பாருங்க.”
என்று வீராவேசமாய் சவால் விட்டுவிட்டு வந்தாள். இவனுடன் வந்து, வருஷம் மூன்றாகிப்போயிற்று. இன்னும் இவன் சுக்கான் கல்லாகக்கூட மாறவில்லை.
அதே இரக்கம். அதே அப்பாவித்தனம். அதே நடுக்கம். அதே, அதே, எல்லாம் ‘அதே’ தான்.
அன்பில் கரைத்துப் பார்த்தாள். ஆசை மோகத்தில் நனைத்தும் பார்த்தாள். தலையணை மந்திரத்தில் புரட்டிப் பார்த்தாள். கூடை கூடையாக பூவையள்ளிக் கொட்டுகிற மாதிரி, அறிவுரை சொல்லிப் பார்த்தாள். அதட்டி மிரட்டியும் பார்த்துவிட்டாள். அலுத்துப் போனதுதான் மிச்சம்.
மலையைக்கூட நகர்த்திவிடலாம்; இந்த மனிதரை அசைக்கவே முடியலியே…
உருப்படவேமாட்டாரா? அய்யா சொன்ன சொல், மெய்யாகிவிடுமா? உருட்டி வைத்த பொம்மை மாதிரித்தான் இருப்பாரா? சுய அறிவு வராதா? சுரணை வரவே வராதா? தொழில் சூட்சுமம் புரியாதா? துட்டோட அருமை புரியவே புரியாதா?
மாறவே மாட்டாரா? வாழ்க்கையே நஷ்டமாகிவிடுமா? மழையில் நனைந்த கேந்திப்பூவாய்… குப்பைக்குப் போய்விடுமா?
நினைக்க நினைக்க அவளுள் கலக்கம்; மலைப்பு; அயற்சி… மனசுக்குள் வந்து நிற்கிற அய்யா, ‘என்னாச்சு, நீவிட்ட சவால்’ என்று எகத்தாளமாய்க் கேட்டு, கெக்கெலி பண்ணுகிறார்.
மெயின் வீதியில் ஒரு திருப்பத்தைக் கடந்தாள். இன்னும் பஸ் நிலையத்திற்குக் கொஞ்ச தூரம்தான். அங்குதான் வீதியின் விளிம்பில் பூக்கடைகள். அதில் இவளது கடையும் உண்டு. பிளாட்பாரக் கடை. அடிக்கடி போலீஸ் வந்து மிரட்டும், ஆக்ரமிப்பால் போக்குவரத்தே முடங்கிப்போவதாகக் கூச்சல் போடும். லத்தியால் மேஜையில் ‘டம்ம்’மென்று அடிக்கும். கொடுப்பதைக் கொடுத்துவிட்டால்… பஸ் போக்குவரத்து எல்லாம் ஒழுங்காகிவிடும்.
இதுவேறு…நிரந்தரத் தொல்லை. அடிக்கடி இன்ஸ்பெக்டர் மாறுவார். புதிதாக ஒருவர் வருவார். வந்தால் கடையைப் பந்தாடுவார்கள். ஏகக் கெடுபிடியாயிருக்கும்.
அப்போதெல்லாம் ‘சாலையோர வியாபாரிகள் சங்கம்’தான் வந்து கவசமாக இருக்கும். ஒற்றுமையின் பலத்தில் பாதுகாக்கும்.
‘சாலையோர வியாபாரிகள் சங்க’க் கூட்டத்துக்கு அவன்தான் போவது வழக்கம். போய் என்ன பிரயோசனம்? நாலு வார்த்தை பேசினால்தானே!
அன்று ராத்திரி, சாப்பிட்டு முடித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கொட்டாவிவிட்டான். படுத்து உறங்கிப்போனான். இவள்தான் ஒற்றையில் உட்கார்ந்து, மாலை கட்டிக்கொண்டிருந்தாள். விரல்கள் யந்திர கதியில் ‘பொடு, பொடு’வென்று இயங்கின. நேரம் போய்க்கொண்டிருந்தது.
அடிக்கடி கால் மரத்துப் போயிற்று. மரத்துப்போகப் போக, காலை மாற்றி மடக்கிப் போட்டுக்கொண்டாள். இடுப்பு கடுத்தது.
இரண்டாவது ஷோ விடுகிற நேரம். உறக்கம் அப்பிக்கொண்டு வந்தது. நரம்பு முழுக்க அயற்சி. கண்ணை மூடினாள்… இமைக்குள் கலர் கலராய் ரேகைகள்.
சமாளிக்க முடியவில்லை. எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு படுத்தவளை,ஆயாசம் அமுக்கியது.
படுத்தவுடன், அவளது வயிற்றின் குறுக்காக வந்து விழுந்தது அவன் கை. கைரோமங்களின் வருடலில், அவள் தேகமே புல்லரித்தது. கழுத்தடியில் அவனது சூடான சுவாசம். முதுகில் வந்து உரசுகிற அவனது தேகச்சூடு.
‘நேரம் கெட்ட நேரத்தில் இந்த மனிதருக்கு… இந்த நினைப்பா?’ அலுத்துக்கிடந்த பூவாத்தாவுக்குள் மண்டிக்கொண்டு வந்த எரிச்சல்.
“என்ன…?” இறுகலான அவளது குரல்.
“சும்மாதா.”
“சும்மான்னா…”
“ஒன்னுமில்லே…”
அவளது கை இடம்மாறி, தடுமாறிக்கொண்டிருந்தது. அந்தக் கையை வெறுப்புடன் தட்டிவிட்டாள்.
“இதுக்கு மட்டும் பொண்டாட்டி வேணுமாக்கும்?”
“இதுக்கு மட்டுமா? எதுக்குமே எனக்கு பூவாத்தாதான். நீதான் எனக்கு சகலமும்.”
“பேச்சுலே ஒன்னும் கொறைச்சலில்லே. எம்மேல உங்களுக்கு அக்கறையேயில்லே.”
“எனக்கா… இல்லே?”
“ஆமா.”
“எப்படிச் சொல்றே?”
“நா குளிச்சு எம்புட்டு நாளாச்சு? ஒரு நாளாச்சும் ஏன்னு கேட்டதுண்டா?”
“நானே ஒன்னைக் குளிப்பாட்டிவிடணுமா?”
“நா… அத்தக் குளிப்பைச் சொல்லலை.”
”பெறகு? எந்தக் குளிப்பு?”
“அந்தக் குளிப்பு.”
மன ஆழத்தின் ரகசியமாய் அவளது குரல், அந்தரங்கமாய் ஒலித்தது. கிசுகிசுத்து நழுவியது.
அவனது குரலிலும் ஓர் உணர்வு மாற்றம்.
“எம்புட்டு நாளாச்சு?”
“நாளு தப்பிப்போய்… இன்னையோட முப்பத்தேழு நாளாகுது.”
“அப்ப்…படியா?”
“ஆமா. மூணு வருஷமா ரெண்டு பேருமா வாழ்றோம். நாளும் பொழுதும் நகர்றதே பெரும்பாடா இருக்கு. ஒரு புள்ளையும் பெறந்துச்சின்னா… அதை வச்சு எப்படிக் காப்பாத்தப்போறோம்? நம்ம கையிலே ஐவேசு ஒண்ணுமில்லே. எப்படிப் பாடுபடப்போறோம்? ஒரு நோய்நொடி வந்தா, எப்படிச் சமாளிக்கப் போறோம்? நெனைச்சாலே… படபடப்பா இருக்கு. நீங்க என்ன டான்னா… வெளையாட்டுப்புள்ளை மாதிரி, பொறுப்பில்லாம இருக்கீக…”
கவலைப்பட்ட பாவனையில் பேசினாலும், பூவாத்தாவுக்குள் ஒரு பூரிப்புதான். ஓர் உயிரைச் சுமக்கிற மகிழ்ச்சியின் ததும்பல். ஒரு சிசுவைப் படைக்கும் தாய்மைப் பூரணத்தை எட்டப்போகிற சந்தோஷம். பனிச்சுமை தாங்காத பூவாக, அவள் குலுங்கினாள்.
‘கர்ப்பம்’ என்றவுடன் புருஷன் குதிக்கப்போகிறான்; சிறுபிள்ளைபோல் கும்மாளம் போடப்போகிறான்; தன்னைக் கட்டிப்பிடித்து, சந்தோஷம் தாளாமல் கொண்டாடப் போகிறான்…
ஆவல் பரபரப்பில் காத்துக்கிடந்தாள். ஆனால், அவன் செயலற்றுப் போனான். ஆழ்ந்து பெருமூச்சுவிட்டான். மேலே போட்டிருந்த காலை எடுத்துக்கொண்டான். சூடான சுவாசமில்லை. மல்லாந்து படுத்துக்கொண்டான். அவன் தேகச்சூடு விலகிப் போயிருந்தது.
இடையில் வந்து உட்கார்ந்துகொண்ட இடைவெளியின் தகிப்பை, அவள் உள்மனசுக்குள் உணர்ந்தாள்.
“என்ன… பேச்சு மூச்சையே காணோம்?” திரும்பாமலேயே குறும்பாகக் கேட்டாள்.
“ஒண்ணுமில்லே.” அடர்த்தியான அவனது குரல். யோசனையில் மூழ்கி, அமைதியில் அழுத்தமாகிவிட்ட குரல்.
“என்ன பூவாத்தா, கடைக்குப் போறீயா?” வேற்றுக் குரல் வெளி உலகமாய் வந்து முட்டியது. உள் உலகத்திலிருந்து மீண்டு வந்தாள் பூவாத்தா. எதிரில்…
சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர், சொர்ணமணி.
“என்னண்ணே… இங்குட்டு?”
“பிரஸ்ஸுக்குப் போயிட்டு வாரேன்.ஆமா,ஒம் புருஷனுக்கு என்னாச்சு? ஆளே மாறிப்போய்ட்டானேம்மா…”
“என்னண்ணே சொல்லுதீக?” பதறிப்போனாள்.
சொர்ணமணி சிரித்தார்.
“முந்தியெல்லாம் சங்கக் கூட்டத்துக்கு வந்தான்னா, பூப்போல இருந்துட்டுப் போயிடுவான். இருக்குற இடமே தெரியாது.நேத்து என்னடான்னா…!”
“ம்… ஏதாச்சும் ரகளை பண்ணிட்டாரா?”
“அதெல்லாமில்லேம்மா. நேத்துக் கூட்டத்துலே அவன் சத்தந்தான் தூக்கலா நின்னுச்சு. நெடுஞ்சாலைத்துறை மூணுதடவை நோட்டீஸ் அனுப்பியிருக்கே. அதைப்பத்தி கொதிச்சுப் பேசினான். ரெண்டுல ஒன்னு பாத்தே தீரணும்னு ஒத்தைக் கால்லே நின்னான்…”
“அப்படியா?”
“ஆமா பூவாத்தா. பயந்துபோய்க் கிடந்த அவன், இப்ப ரொம்பத் தெளிவா பேசுறான். என்னமோ-மாயம் நடந்திருக்கு.”
அவளுக்குள் ததும்பிய பூரிப்பு. காலடி முழுக்க பூத்தூவிய மாதிரியோர் உணர்வு. அவள் அப்படியே குளிர்ந்துபோனாள்.
எக்காளச் சிரிப்பு சிரித்த அய்யாவின் உதடுகள், சுருங்கி ஒடுங்கிப்போகிற மாதிரியோர் பிரமை. மகிழ்ச்சியில் நனைந்துபோன மனசு. அந்த மகிழ்ச்சிக்குள்ளும் ஒரு சின்ன நெருடல். ஒரு குழப்பம். அது என்ன மாயம்? ஆளைத் தலைகீழாய் மாற்றிய அந்த மாயம்தான் என்ன?
ஒரு இழவும் புரியவில்லை.
நிமிர்ந்து நடைபோட்டாள்.
அதோ கடை. கடையில் தொங்குகிற இரண்டு பெரிய மாலைகள். கடையின் முன்னால் ஒருவர்.
மாலையைக் காட்டி ஏதோ பேசுகிறார்.
அந்த மாலையை இருபத்தைந்து ரூபாய்க்கு விற்க வேண்டும். இருபதுக்குக் குறைவாக விற்றால் நட்டம்தான்.
சத்தமில்லாமல் போய், கிடுகு மறைவில் நின்றுகொண்டாள்.
“என்னய்யா, இந்த மாலை முப்பது ரூபாயா? அநியாயமா இருக்கே.”
“அண்ணாச்சி, நம்மகிட்டே ‘காமா, சோமா’ அய்ட்டமே கிடையாது. பாருங்க, மாலை பூராவும் மல்லியும், ரோசாவுந்தான். வேற வாசனையில்லாத பூவே கிடையாது.”
“அதெல்லாம் சரிதான். கொஞ்சம் கொறைச்சுக்கங்க.”
“கொறைக்க இடமேயில்லே, இந்த வெலையும் ஒங்க மொகத்துக்காகத்தான்!”
“சொன்னா -சொன்ன வெலைதானா? ஒரு சொல் கடையா? கொஞ்சம் கொறைச்சுக்கங்க.”
“ம்ஹும்…இடமேயில்லேண்ணாச்சி”
“இப்படிச் சொன்னா எப்படி?”
“என்ன செய்யறது? பூ வெல அப்படியிருக்கு, எடவாடகை ஆளைத் தூக்குது. இதுலே ரெண்டு ரூவா பாத்துத்தான் – நாங்க புள்ளைக் குட்டியைக் காப்பாத்த வேண்டியிருக்கு.”
“சரி… உங்க மனசு. இந்த மாலையை எடுங்க. நல்லா எலைவைச்சு கட்டிக் குடுங்க.”
“ம்-அழகா கட்டிருவம்.”
அவன் மாலையைப் பார்சல் பண்ண, அந்த ஆள் முப்பது ரூபாயை மேஜைமேல் வைத்தார்.
“கடைக்கார அண்ணாச்சிக்கு புள்ளைக எத்தனை?”
“ஒரு புள்ளை, இன்னும் ஏழெட்டு மாசத்துலே பெறக்கப்போகுது.”
அந்த ஆளுக்கு சிரிப்பாணி பொத்துக்கொண்டு வந்தது.
“அடேங்கப்பா… பெறக்கப்போற புள்ளைக்கு இப்பவே சம்பாதிக்கீகளாக்கும்?”
“என்ன செய்யச் சொல்லுதீக? நம்ம பொழைப்பும் அம்புட்டுக்குள்ளேதானே இருக்கு.”
அவர் புன்சிரிப்பு உதட்டில் இருக்க, மாலையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். மிச்சமிருந்த ஒரு மாலையை அவன் பார்த்தான்.
பூவாத்தாவுக்குள் மகிழ்ச்சித் திணறல். ‘அட, இந்த மனிதருக்குள் இப்படியொரு சாமர்த்தியமா? இத்தனை சாமர்த்தியத்திற்கும் மூலம் யார்? அந்த மாயம், என் கர்ப்பம்தானா? என் பிள்ளைதானா?
என் வயிற்றுப்பிள்ளைதான், இந்த அப்பிராணி மனிதரை ஒரு பொறுப்புள்ள அப்பனாக வார்த்துவிட்டதா…!”
கடைக்குள் வந்தாள். அவன் ஓடிவந்து, அவளது பூச்சுமையை இறக்கி வைத்தான். அவள் மனச்சுமையையும்தான்!
– 1992 ஜூன் ‘வாசுகி’ முதற் பரிசுக் கதை.
– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு: 2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |