கடிவாளம்





(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்றைக்கு என்னமோ, மாடசாமிக்குக் கண்ணில் உறக்கம் ஒட்டவேயில்லை. மனத்துக்குள் ஏகப்பட்ட நச்சரிப்பு. தவறு செய்து விட்டோமோ என்ற ரகசியமான உளைச்சல்கள். புரண்டு புரண்டு படுத்தான். ம்ஹும்!
விடிவிளக்கின் மங்கலான பச்சை வெளிச்சத்தையே பார்த்தான். மனைவியும் குழந்தையும் பாயில் படுத்திருப்பது நிழலாகத் தெரிந்தது. அயர்ந்த தூக்கம். பார்க்கப் பொறாமையாக இருந்தது.
பஸ்ஸை விட்டு இறங்கி, விட்டு இறங்கி, பணிமனையில் கணக்கு முடித்துவிட்டு வந்தானென்றால்… சாப்பிட்டதும் படுத்துவிடுவான். அடித்துப்போட்டமாதிரி உறங்கிவிடுவான். விடிந்தபிறகுதான், மனைவி, குழந்தை, வாழ்க்கையெல்லாம்!
அப்படித் தூங்குகிறவன்தான், இன்றைக்கு என்ன இழவோ… உறக்கம் வந்து ஒட்டவே மாட்டேன் என்கிறது. மனத்துக்குள் தவிப்பு. கிடைத்த பொக்கிஷத்தைப் பறிகொடுத்துவிட்ட மாதிரி ஒரு நமைச்சல். அமைதியிழந்த நினைவுகள், பல திசைகளில் ஓடியலைகின்றன.
‘ஒருத்தன் சொத்தை ஒளிச்சு வைச்சா… அது நிலைக்கவா செய்யும்? நோயோ நொடியோ வந்து, அதையெல்லாம் வாரிச் சுருட்டிக்கிட்டு ஓடிவிடாதா? அதுலே என்ன பெருமை இருக்கு? கண்டக்டர் உத்யோகமிருக்கு. கை நிறைஞ்ச சம்பளம். காலமிருக்கு; நாளும் இருக்கு; உழைச்சு எம்புட்டோ சம்பாதிக்கலாம். அடுத்தவன் சொத்தை அமுக்கிச் சம்பாதிக்கிறதும், ஒரு சம்பாத்தியமா? மனச்சாட்சி கொத்திப் பிடுங்காதா? ச்சே!
இப்ப… நாலு பேராச்சும் யோக்கியன்னு சொல்லுவாக.அது போதாதா? ஒரு மனுசன் வாழ்க்கையிலே சாதிக்கவேண்டியது அதுதானே…
நியாயப்படுத்துகிற இந்த நினைவை, வெட்டி முறித்துக் கொண்டு, மற்றோர் நினைவு; லௌகீக வாழ்வின் வெக்கையில் அடிபட்டுக் கன்றிப்போன அந்த நினைவு; கர்ணகடூரமாய்க் கைகொட்டிக் கேலி செய்தது.
‘யோக்கியன்னு பேரு வாங்கி, என்ன செய்யப்போறே? யோக்கியன்னு சொல்லிக்கிட்டுக் கடை முன்னாலே நீ நின்னா, அரிசி, பருப்பு அள்ளி விடுவாங்களா? ஒலகத்துலே யோக்கியனுக்குன்னு சல்லிக்காசு சலுகையாச்சும் உண்டா? ஊரெல்லாம் கூடி உனக்குக் கிரீடமா தூக்கித் தரப் போறாக? இப்படியும் பொழைக்கத் தெரியாத பயலும் இருப்பானா, கிடைச்சதையும் குடுத்துட்டு நிக்கிற கிறுக்கன் மாதிரி அலையுறானேன்ன ஒன்னைக் கேலியும் கிண்டலும்தானே செய்வாக?’
மனம் ஒரு நிலைப்படவில்லை.
மேஜையிலிருந்த கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்தான். மணி 1-15. வயிறு பசிப்பது போலிருந்தது. உதடு, தொண்டையெல்லாம் உலர்ந்து போயிருந்தது. லைட்டைப் போடாமலேயே அடுப்பங்கரைக்குள் நுழைந்து, ஊகத்திலேயே கையால் துழாவி, செம்பை எடுத்துத் தண்ணீர் குடித்தான். செம்பை மறுபடி கீழே வைக்கிறபோது, அந்தச் சப்தத்தில் லட்சுமி தலையைத் தூக்கிப் பார்த்தாள்.
“என்ன, இன்னும் தூங்கலியா?”
“தூக்கம் வரலை.”
“பெறகு?”
“ஒண்ணுமில்லே. தூங்கிடுவேன்.”
அவள், விட்ட இடத்திலிருந்து தூக்கத்தைப் பிடித்தாள். சீரான மூச்சுச் சப்தம் வருகிறது. இவன் கட்டிலில் உட்கார்ந்து சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டான். மனம் அதுபாட்டுக்குக் கண்டமேனிக்கு ஓடிக்கொண்டிருந்தது…
பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த டவுன் பஸ்ஸில், மாடசாமி டிக்கெட் போட்டுக்கொண்டிருந்தான். டைம் கீப்பர் ஆபீஸில் டிரிப் சீட்டில் கையெழுத்து போட்டுவிட்டு,அதோ டிரைவர் வருகிறார். அவரை மறித்துக்கொண்டு இன்னொரு டிரைவர்.
“என்ன பாஸ், உங்க ஜோடி யாரு?”
”மாடசாமி?”
“எந்த மாடசாமி?”
”நம்ம சிரிச்ச முகம்!”
“அட நம்ம சிரிச்ச முகமா? பெரிய பேஜார் இல்லே?”
“அதை ஏன் கேட்கே? ஒரே போர்…”
அவர்கள் கிண்டலாய்ச் சிரித்துக்கொள்வதை, இவன் கவனிக்கிறான்.
மாடசாமின்னு பெயரைச் சொன்னால் ஆளைத் தெரிய மாட்டேங்குதோ…? சிரிச்ச முகம்னு சொன்னால்தான் தெரிகிறதோ? இவன் சிடுசிடுப்பான ஆளாம். எந்நேரமும் உர்ரென்று இருப்பானாம். சிரிப்பையே இவனிடம் பார்க்க முடியாதாம். அதைக் கேலி செய்கிற பட்டப் பெயர்தான், சிரிச்ச முகம்.
மனம் விட்டுச் சிரிச்சுப் பேசி, கலகலப்பா இருக்குற மாதிரியா… தொழிலும், வாழ்க்கையும் இருக்கு? அந்த லட்சணத்துலேயா மனுஷங்களும் இருக்காங்க? நல்ல வாழ்நிலையிலேயும், நல்ல சூழ்நிலையிலேயும்தானே நல்ல மனநிலை அமையும்? சுற்றிலும் தீ பற்றிக்கிட்டு எரிஞ்சுக்கிட்டிருக்கும்போது, நடுவுலே நின்னு குளுமையாச் சிரிக்கவா முடியும்?
பஸ்ஸிலே ஏறி உக்கார்கிற சகலரும், கண்டக்டரைப் பகையாளியை பாக்குறமாதிரித்தானே பாக்குறாக ? அனுதாபமான ஒரு பார்வையைக்கூடப் பார்க்க முடியலியே.
அறுபது பைசா டிக்கட்டுக்கு ஐந்து ரூபாய் நோட்டு.1.60 டிக்கட்டுக்கு இருபது ரூபாய் நோட்டு. அதுவும் மனுசனா மதிச்சு நீட்டுவாகளா? ம்ஹும்! இளப்பமாய் – அலட்சியமாய் நீட்டுவாக. எல்லாரும் நோட்டாகவே நீட்டினா… சில்லறைக்கு நான் எங்க போக? கஜானாவா எம் பைக்குள்ளே இருக்கு? இருபத்தஞ்சு ரூபாய்க்குச் சில்லறை மாத்திப் போட்டாலும், அடுத்த டிரிப்லேயே காலியாயிடுது. ஒவ்வொரு டிக்கட்டுக்கும் சில்லறை சரிபார்த்துக் கொடுக்கிறதுக்குள்ளே, மூளையே கசங்கிப்போகுது.
இதுலே ஐந்து பைசாக் கொறைஞ்சாக்கூட முணுமுணுப்பு. காய்ஞ்சு போன மனங்களிலிருந்து பாய்ஞ்சு வர்ற வசவுகள். பெருக்கல் கணக்கு போட்டுப் பார்த்து, தினமும் கண்டக்டர் நூறு ரூபாய்ப் பொட்டலத்தோடு வீட்டுக்குச் செல்வதாகப் பொருமிப் புகைஞ்சு பேசற பேச்சுகள்… இப்படி, குமைஞ்சு குமைஞ்சு, அடங்குற – உறையுற – உணர்ச்சியெல்லாம், மூஞ்சியிலே வந்து சிடுசிடுப்பா வந்து நின்னுக்கிடுது. நான் என்ன செய்ய?
ஸ்டியரிங்கில் கை வைத்த நிலையில், “போகலாமா” என்றார் டிரைவர். மாடசாமி ‘உம்’ என்றான். விசிலடித்தான். பஸ் உயிர் பெற்றவுடன்-
வெளியே சிதறி நின்ற பயணிகள் ‘மொளோ’ ரென்று ஓடி வந்து இடித்துக்கொண்டு தொற்றினர்.
“உள்ளே வாங்க. ஏறுங்க. டிக்கட், டிக்கட்… எங்கே போகணும்? தெண்ணூறா? சில்லறையில்லியா? பதினைஞ்சு பைசா இருக்கா? அதுவுமில்லியா? படியிலே நிக்குறது யார்? எத்தனை தடவை சொல்றது? உள்ளே வாய்யா.”
மாடசாமி என்ற மெஷின் ஓடத் துவங்கியது. ஓட ஓடச் சூடேறிக்கொண்டிருந்தது. நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த மனிதர்கள். நடுவில் ஆண் – பெண் வித்தியாசமில்லாமல் அப்பிப் போய் நின்ற – தொங்கிய-மனிதர்கள்.
“டிக்கட் யாருக்கு வேணும்? கேட்டு வாங்குங்க… படிக்கட்டுலே யாரு டிக்கட் எடுக்கணும்? சீக்கிரம்.”
மாடசாமி இன்வாய்ஸ் எழுதுவதற்கு முன்பு, கடைசி வரைக்கும் கேட்கிற மாதிரி, “டிக்கட் வேணுமா? யாரும் டிக்கட் எடுக்க வேண்டியிருக்கா?” என்று கத்தினான். நிற்க இடமில்லை. டிரைவர் பக்கத்தில் ஒரு கம்பியில் முதுகைச் சாய்த்து இன்வாய்ஸை எழுதினான். இடது உள்ளங்கைக்குள் அடங்கியிருந்த டிக்கட் கற்றைகளில் நம்பரைச் சரிபார்த்துச் சரிபார்த்து எழுதிக் கொண்டிருக்கும்போதே…
டிரைவருக்கு இடது பக்கம் ஒற்றைச் சீட்டில் உட்கார்ந்திருந்த பெரியவர், “ஆமர்நாட்டுக்கு ஒரு டிக்கட்” என்று இருபது ரூபாயை நீட்டினார்.
மாடசாமிக்குள் தீ பிடித்த மாதிரியிருந்தது.
“எங்க ஏறினது?”
”செவகாசி?’
“இந்நேர வரைக்கும் டிக்கட் வாங்காம, எங்க போனீரு? தொண்டை காயக் கத்துனேனே, காதுலேவுழலை ?”
பெரியவர் முகத்தில் மெல்லிசாக மிரட்சி பரவியது. சட்டென்று அது சினமாக மாறிக்கொண்டது. “இங்க நீங்க வந்தாத்தானே, வாங்க முடியும்?”
“இங்க நாலு தடவை வந்தேன்லே? ஒம்ம பக்கத்துலே இருக்கிறவுகளுக்கெல்லாம் டிக்கட் கொடுத்தேன்லே? நீரு ஏன் வாங்கலே?”
“நீங்க கேட்டாத்தானே நான் வாங்க முடியும்?”
“யோவ்,வாங்காம இருந்ததுமில்லாம, சண்டி வழக்குமா பண்றீரு?”
மாடசாமி சீற, பெரியவரும் பாய, வண்டிக்குள் வெக்கை பரவியது. டிரைவர் குறுக்கிட்டு, மாடசாமியைச் சமாதானப் படுத்தினார்.
“சரி, சரி… பேச்சை நிறுத்திட்டு டிக்கட்டைக் கொடுத்துத் தொலை!”
இவனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது. எரித்துவிடுவதைப் போல அவரைப் பார்த்தான். “சில்லறையில்லியா?’
“இல்லே!”
டிக்கெட்டைக் கிழித்துக் கொடுத்தான். விரலிடுக்கில் நீளவாக்கில் மடித்து வைத்திருந்த ரூபாய்களில் உருவி உருவிப் பதினெட்டு ரூபாயைக் கொடுத்தான். பையைத் திறந்து சில்லறையைக் குலுக்கினான்.
“பத்துப் பைசா இருக்கா? அம்பது பைசாத் தாரேன்.”
“இல்லியே!’
பையைக் குலுக்கிக் குலுக்கிப் பார்த்தான்.மூப்பத்தைந்து காசுதான் தேறியது. கொடுத்தான்.
பெரியவர் உள்ளங்கையில் வைத்து எண்ணி எண்ணிச் சரிபார்த்து விட்டு, “இன்னம் அஞ்சு பைசா?” என்றார்.
“இல்லே.”
“நான் அஞ்சு பைசாக் குறையக் கொடுத்தா… நீங்க டிக்கட் தருவீகளா?”.
மாடசாமிக்குச் சுரீரென்று அடிபட்டதுபோல் இருந்தது. உள் மனம் வலித்தது. ‘பொறு, பொறு’ என்று லகான் போட்டுக் கொண்டிருந்த உள் மனமே அலறிவிட்டது. விருட்டென்று நிமிர்ந்த பார்வையில் அக்கினி…
வெடித்து விட்டான். வார்த்தைகள் மனத்தின் அனலாய்ச் சிதறின. பெரியவரும் விடாக்கண்டனாக வார்த்தைக்கு வார்த்தையாக மோதினார். ‘நீ, வா, போ’ என்று தரம் தாழ்ந்து ஆபாசமாயிற்று.
மற்றவர்கள் தலையிட்டனர். இருவரையும் அடக்கினர்; சமாதானப்படுத்தினர். பஸ்ஸுக்குள் வெக்கை குறைந்தது. குண்டும் குழியுமான ரோட்டில் பஸ், அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது. கிராமங்களைக் கடந்தது. நின்றது. இறக்கியது. ஏற்றியது. போய்க் கொண்டேயிருந்தது.
ஆமர்நாடு போய் விட்டுச் சிவகாசி வந்து சேர்ந்த பஸ், நிலையத்துக்கு வெளியே நின்றது. இந்த டிரிப்போடு இவர்கள் பணி நேரம் முடிகிறது. அடுத்த டிரைவர், கண்டக்டரிடம் வண்டியை ஒப்படைக்க வேண்டும்.
டிரைவர் இறங்கி, டீக்கடையை நோக்கிப் போய்விட்டார். பயணிகளெல்லாம் இறங்கியபிறகு, மாடசாமி வழக்கம்போல் ஒவ்வொரு சீட்டாகப் பார்த்தான். குனிந்து சீட்டுக்கு அடியிலும் பார்த்து வந்தான். டிரைவர் சீட்டுக்கு இடது பக்கமுள்ள ஒற்றைச் சிட்டிற்கும், பாடிக்கும் நடுவில் – இடுக்கில் – ஒரு சிறிய பேப்பர் பொட்டலம்.
அலட்சியமாக எடுத்து விரித்தான்; உடம்பெல்லாம் அதிர்ச்சி, மின்சாரமாய் ஓடிப் பரவியது.
தங்கச் செயின், புத்தம் புதுசாக ரெட்டை வடம். உள்ளங்கையில் தூக்கிப் போட்டுப் பார்த்தான். அஞ்சு பவுனுக்குக் குறையாது. மனத்துக்குள் பிரளயம். ஓங்கியடிக்கிற அலையாக நினைவுகள்.
“கல்யாணமாகி நாலு வருஷமாகுது. ஒரு மூக்குத்தியாச்சும் வாங்கி, இந்தான்னு தந்திருக்கீகளா? நீங்களும் உங்க சம்பாத்தியமும்…”
அற்பத்திலும் அற்பமாய்த் தனக்குத் தன்னையே உணர்த்துகிற லட்சுமியின் அந்தச் சொற்கள், நெஞ்சுக்குள் ஒலித்தன.
“இந்தா, அஞ்சு பவுன் நகை” என்று நீட்டினால்… லட்சுமியின் மனம் எப்படி மலர்ந்து வெடிக்கும்… ஆனந்த மின்னல் பளிச்சிடுகிற அவளது கண்கள். ஆச்சரியப் புன்னகை நிறைந்து பிரகாசிக்கிற சிவந்த முகம். சிரிப்பு மலர்கள் பூத்து, ஈரக்குளிர்ச்சியாக மின்னுகிற உதடுகள்…
மயங்கிய மனதில் நறுக்கென்று கிள்ளுவதைப்போல் ஓர் உணர்ச்சி. மனத்துக்குள் சப்பென்று விழுகிற ஓர் அடி. ‘சீ, நாயே! அடுத்தவன் நகையை அமுக்கி, ஒம் பொண்டாட்டி கழுத்திலே போடவா ஆசைப்படுதே நீயெல்லாம் மனுசந்தானா? சோத்தைத்தான் திங்கியா?’
உள் மனத்தின் இந்த உலுக்கலில், அப்படியே கலகலத்துப் போனான்.
பணிமனைக்குப் போகிற ஒரு பஸ்ஸில் ஏறிக்கொண்டான். மனசுக்குள் ஒரு திகிலான பரவசம் சுமையாக அழுத்த… நடுக்கத்துடன் கணக்கு முடித்தான்.
மானேஜர் அறைக்குள் நுழைந்தான். வெள்ளைப் பேப்பரில் நகைப் பொட்டல விவரம் எல்லாம் எழுதிக் கையெழுத்திட்டு, மானேஜரிடம் நகையையும் ஒப்படைத்தபிறகுதான், மனத்துக்குச் சுலபமாகச் சுவாசிக்க முடிந்தது.
பாரத்தை இறக்கி வைத்துவிட்ட நிம்மதி. அலுப்பு தீரக் குளித்த மனச்சாந்தி…
அப்போது சாந்தியடைந்த மனம், இப்போது அலைபாய்கிறது. நாணயமாய் ஒப்படைத்த யோக்கியம், சரிதானா? கிறுக்குத்தனமானது தானா? நாலு பேரு பாராட்டுவார்களா? பிழைக்கத் தெரியாதவன் என்று நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்களா?
தேள் கடிபட்ட குரங்காக, மனம் ஆடிக் குதித்து அலை மோதுகிறது. தூக்கத்தை அண்டவிடாமல் நிம்மதியைப் பிறாண்டுகிறது.
லட்சுமிக்குத் தெரிந்தால்…என்ன சொல்வாள்? இளப்பமாய்ச் சொல்வாளோ ‘கடவுளாப் பாத்துக் கையிலே தூக்கிக் கொடுத்ததையும் தொலைச்சிட்டு வந்து நிக்கிறீகளே…நீங்க ஒரு ஆம்பளைதானா?’ என்று சீறுவாளோ…
சிகரெட்டை அணைத்தான். அலைந்து தவிக்கிற மனத்தோடு படுத்தான். வலுக்கட்டாயமாக இமைகளை மூடினான். மூடிய இமைகளுக்குள் ஏதேதோ காட்சிகள்…
இரண்டு மூன்று நாட்கள் ஓடிவிட்டன. சினிமாவுக்குப் போய் விட்டு, பத்துமணிக்குமேல் வீட்டுக்கு வந்தான்… அதிசயமாய் விளக்கு எரிந்தது.
இன்னும் லட்சுமி தூங்கலியா…
காத்திருந்தவளைப்போல, உற்சாகமாக எதிர்கொண்டாள்.
“எங்க போனீக, இந்நேரம் வரை?”
“ஏன், சினிமாவுக்குத்தான். எதுக்குக் கேக்கே?’
“உங்களைத் தேடி ஒருத்தர் வந்து, ஏழு மணியிலேயிருந்து காத்திருந்தாரு…”
“என்னவாம்?”
“அவரு சொன்னதைக் கேட்டு எனக்கு மனமே கலங்கிப் போச்சு. உங்களை நெனச்சா, எனக்கு எம்புட்டுப் பெருமையாயிருக்கு, தெரியுமா?”
தலையும் புரியாமல், வாலும் புரியாமல் தவித்த மாடசாமி, சிடுசிடுப்பாய்ச் சீறினான். “என்னங்கிறதைச் சட்டுன்னு சொல்லித் தொலையேன்!”
வீட்டு வாசலில் யாரோ நுழைகிற செருப்புச் சப்தம், திரும்பினான். பெரியவர். அன்று பஸ்ஸில் இவனுடன் சண்டை போட்ட அதே பெரியவர். ஆனால், ஆள் ரொம்பக் கலகலத்துப் போயிருந்தார். கண்ணில், கனத்து நின்ற சோகம். துன்பத்தில் புரட்டியெடுக்கப்பட்ட வாட்டம், முகத்தில்.
விளங்காமையோடு திகைத்தான்.
“என்ன ஐயா?”
வெட்க உணர்வும், நன்றி உணர்வும், முரண்பட்டுத் ததும்ப, கையெடுத்துக் கும்பிட்டார்.
“கோயில் கட்டிக் கும்புடணும் தம்பி, உங்களை… எங்க குடும்பத்துக்குக் குலதெய்வமே…நீங்கதான்…” அவர் கண்ணிமைகள் ஈரத்தில் நனைந்தன.
“கையிலே கிடைச்ச கால் ரூவாயைக்கூட கண்காணாம அமுக்கிக்கிடுற இந்தக் கலி காலத்துலே… அஞ்சு பவுன் தங்க நகை கெடைச்சும், அதை நாணயமா ஒப்படைச்சிருக்கீகளே தம்பி…உங்ககூட அஞ்சு பைசாவுக்காக அற்பத்தனமாச் சண்டை போட்டேனே அன்னிக்கு…:”
“அதெல்லாம் இருக்கட்டும்… அப்ப… அந்த நகை உங்களுடையதுதானா?”
“ஆமா தம்பி, ஒன்றரை வருஷமா நகைப் பிரச்னையிலே என்னோட ஒரே பொண்ணு வாழாவெட்டியா வந்து கிடந்தா. ஊர்லே பஞ்சாயத்துப் பண்ணி அஞ்சு பவுன் நகை போட்டு புருஷன்கூட அனுப்புறதுன்னு முடிவு செய்தாக. தாய்க்குத் தாயா இருந்து காலம் பூரா சோறு போட்ட பூர்வீகப் புஞ்சையை வித்து, அந்தப் பணத்துலேதான் அன்னிக்கு நகை வாங்கிக்கிட்டு ஊர் போனேன்.
“நகை தொலைஞ்சதுன்னு தெரிஞ்சவுடனே… எம் பொஞ்சாதி மருந்தைக் குடிச்சு, ஆஸ்பத்திரியிலே அரை உசுராக் கிடக்குறா…”
“அய்யய்யோ… அப்புறம்?”
“நீங்க ஒப்படைச்ச நகையிலேதான் எம்பொண்ணோட வாழ்க்கையும், வம்ச விருத்தியும் அடங்கியிருக்கு தம்பி…”
“சரி…அதுக்கு நான் என்னமும் செய்யணுமா?”
“மானேஜர்கிட்டே பேப்பர் எழுதிக் குடுத்தேன், அவர் ரொம்ப நேரம் என்னை விசாரிச்சாரு. உங்களையும் விசாரிக்கணும்னு சொன்னாரு…”
”அவ்வளவுதானே! நீங்க அன்னிக்கு அந்த சீட்லேதான் உக்கார்ந்திருந்தீக. அந்தப் பொருள் உங்களுடையதா இருக்க நியாயமிருக்குன்னு, மானேஜர்கிட்டே சொல்லிடுதேன்… போதுமா அய்யா…? கவலைப்படாம போங்க!”
“அதுபோதும் தம்பி… உங்களை மாதிரி ஒண்ணு ரெண்டு நல்ல ஆத்மாக்களாலேதான் மழையும் பெய்யுது. மண்ணும் வெளையுது. நீங்க செய்யுற புண்ணியமே உங்களையும், உங்க குடும்பத்தையும் என்னென்னைக்கும் செழிப்பா வைச்சிருக்கும் தம்பி… நான் வாரேன் தம்பி, நான் வாரேம்மா…”
அவர் போய்விட்டார். லட்சுமியின் பெருமிதமான பார்வையைச் சந்தித்தான். தர்மமே கை நீட்டித் தங்கக் கிரீடத்தைத் தலையில் சூட்டுவது போலிருந்தது. மனித இனமே கையெடுத்து வணங்குவதைப்போல ஓர் உணர்வுச் சிலிர்ப்பு…
தான் செய்த ஒரு சிறிய செயலில்… ஒரு பெண்ணின் வாழ்க்கையே புதிதாகக் காலூன்றியிருப்பதை நினைக்கையில்.. அவனுக்கே பெருமிதமாக இருந்தது.
இப்போது- அவனுள் ஊசலாட்டமில்லை. தெளிந்த நீரோடையாய் ஒரே திசையில் ஓடியது, மனம். மனத்தின் பெருமிதத்தில் அவன் முகமெல்லாம் புன்னகை.
– கல்கி, 24-04-1988.
– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு: 2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |