உனக்கும் ஒரு நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 271 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மன்னார்பகுதியில் ராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்த பின்னர் மஜீத்தின் “டியூரோறியல்” காலேஜ் சுக்கு வரும் மாணவர்களின் தொகை வெகுவாகக் குறைந்துவிட்டது. 

“காலேஜ்”சை மூடி விடலாமா…? எனக்கூட அவர் எண்ணினார். அதனை மூடிவிட்டு என்ன பண்ணுவது. என்பது அடுத்த கேள்வி. 

தள்ளாடி இராணுவ முகாம் அமைக்கப்பட்ட நாளி லிருந்து, அம்முகாமுக்குள் தமிழ் இளைஞர்களைக் காரண மின்றி இழுத்துச் சென்று ராணுவம் செய்யும் சித்ரவதை. களை அவரிடம் படிக்கவரும் மாணவர்கள் கதைகதையா கக் கூறுவார்கள். சிலவற்றை மஜீத்தால் நம்பக்கூட முடிவதில்லை. ஒரு சில சித்ரவதைகளைக் கூறும்பொழுது அதனை மாணவிகள் காதில் விழாமல் கூறும்படி ரகசிய மாய் மாணவர்களை எச்சரித்தும் வைப்பார். அவ்வளவு அகோரமான சித்ரவதைகளும் அங்கு நடந்தன.. 

மஜீத்திடம் படிப்பவர்களில் மூன்று பேர் மட்டும் தான் முஸ்லிம் மாணவர்கள். மற்றவர்கள் அனைவரும் தமிழ் மாணவர்களே. 

காலப்போக்கில் ராணுவத்தினரின் அட்டூழியங்கள் அதிகரிக்கவே அவரது வகுப்புக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. முதலில் பன்னி ரெண்டாக இருந்தது… பின்னர் ஏழாகி… இறுதியில் பக் கத்து தெருவிலுள்ள இரண்டு பெண்கள் மட்டுமே வந்து போய்க்கொண்டிருந்தனர். அவர்களும் இந்த இரண்டு தினங்களாக வருவதை நிறுத்தி விட்டனர். மாணவர் களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வர, ‘மஜீத்தின் மனதிலும் எதிர்காலத்தைப் பற்றிய சில அச்சுறுத்தல்கள்… 

முதல் நாள் பாடம் நடத்திய நெஞ்சறையின் படத்தை “பிளாக்போர்ட்”டிலிருந்து அழித்துவிட்டு, இன்றைய பாடத்திற்கான இரத்த அணுக்கள் பற்றிய விளக்கப்படங்களை மஜீத் வரைய ஆரம்பித்தார். 

அவரது மாணவர்களில் ஏழெட்டுப்பேராவது பல் கலைக்கழகத்துக்குச் செல்லத்தக்க நல்ல தகுதி வாய்ந்த பையன்களாக பரீட்சையில் தேறி விடுவார்களென்பதில் அவருக்கு நல்ல நம்பிக்கையிருந்தது. அதிலும் சபேசன் என்கின்ற மாணவன் நல்ல திறமைசாலி. எந்தப் பரீட் சையிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கத் தவற மாட்டான். 

படத்தை வரைந்து கொண்டிருந்த மஜீத் பின்னால் மேசையொன்று நகர்த்தப்படும் சத்தம் கேட்கவே திரும் பிப்பார்த்தார். 

“குட்மார்னிங் சார்…” 

பல நாட்கள் வகுப்புக்கு வராமல் நின்றிருந்த சரஸ் வதி வந்திருந்தாள். 

“என்ன ‘ஆ ர் மி’க்காரன் பயமெல்லாம் போயாச்சா?”— மஜீத் வேடிக்கையாகக் கேட்டார். 

“விளையாடாதீர்கள் சார்…! எங்களுக்குக் குலை நடுங் குகின்றது. நீங்கள் தப்பி விட்டீர்கள் என்ற எண்ணமா? ஒரு நாளைக்குப் பாருங்கள் எங்களை அழித்து தொலைத்த பின் உங்கள் மேல் தான் சிங்களவன் கை வைக்கப் போகி றான்” சரஸ்வதி எப்பொழுதுமே குறும்பாகப் பேசக் கூடியவள். 

“அதற்கு முன்னால் நான் எங்காவது அரபு நாடு களுக்கு ஓடித் தப்பி விடுவேன்…’ 

“என்னதான் சிங்கள அரசு தமிழ் இளைஞர்களை நசுக்கி விட எண்ணும்பொழுதுதான் எங்களுக்குள்ளும் ஏதோ ஒன்றைச் சாதிக்க வேண்டுமென்ற பலம் தீவிரம் கொள்கிறது!” என்றான், சரஸ்வதிக்குப் பின்னால் வந்து உட்கார்ந்த சபேசன். 

அதிகம் பேசாத சபேசனின் நெஞ்சிலும் ஆத்திரம் நிறைந்திருப்பது அவன் பேசியதிலிருந்து புரிகிறது. 

‘வகுப்பை ஆரம்பிக்கலாமா?” பேச்சை திசை திருப்பினார். 

ஏறக்குறைய எல்லா மாணவர்களும் வந்திருந்தார் கள். அப்துல்காதர் மட்டும் வரவில்லை. எப்பொழுதுமே அவன் “லேட்”டாகத்தான் வருவான். அதுபற்றி மஜீத் கண்டு கொள்வதும் இல்லை. காதரின் தந்தை மன்னார் நகரிலேயே பெரிய புள்ளி. நான்கைந்து சடைகளுக்கு மூதலாளி. 

பெண்களில் சரஸ்வதி மட்டும் தான் வந்திருந்தாள்; அவளும் முன்னைய வாரங்களில் மஜீத்கொடுத்த ‘”நோட்ஸை’ எழுதிச் செல்லவே வந்திருந்தாள்; தொடர்ந்து வகுப்புக்கு வரும் நோக்கம் இல்லை. 

சபேசனின் “நோட்புக்’கை வாங்கிய மஜீத்… “இங் கேயே உட்கார்ந்து எழுதிக்கொண்டு செல்…” என அதனைச் சரஸ்வதியிடம் கொடுத்தார். 

அவள் உட்கார்ந்து எழுத ஆரம்பிக்கும் சமயம் வேர்க்க விறுவிறுக்க ஓடி வந்த அப்துல்காதர், “சார்… இராணுவமும் போலீசுமாக மன்னார் “டவுனு”க்குள் எல்லாக் கடைகளையும் அடைக்கும்படியும் ஓடும் வாக னங்களை நிறுத்தும்படியும் கட்டளைப் போட்டதுடன் பொதுமக்களை தெருக்களிலிருந்து அடித்து விரட்டிக் கொண்டிருக்கிறார்கள் சார்… வகுப்பை நிறுத்தி விடுங் கள்” எனக் கூறினான். 

அதனைக் கேட்டதும் “ஐயையோ…” என்ற வண் ணம் எழுந்து கொண்டாள் சரஸ்வதி. 

“சிஸ்டர், நீங்க வட்ட கண்டல் கிராமத்தில் இரு தல்லவா வந்திருக்கிறீர்கள்? “பஸ்” செல்லாம் நின்று விட் டது. எப்படிப் போகப் போகிறீர்கள்?” மேலும் சரஸ் வதியைப் பயப்படுத்தினான். 

வகுப்புக் கலைந்து, எல்லோரும் கசமுசவெனப் பேசிக்கொண்டு எழுந்தார்கள். பக்கத்துத் தெருவிலுள்ள மாணவர்களை மேலும் அவ்விடத்தில் தாமதிக்காமல் விரைவாக வீட்டுக்குப் போய்விடச் சொன்ன மஜீத் தூரத்தில் இருந்து வரும் சபேசன் போன்ற இரண்டொரு இளைஞர்களைத் தன் வீட்டில் போய் இருக்கும்படி கூறினார். அவர் வீடு பக்கத்திலேயே  இருந்தது. 

சரஸ்வதியை மட்டும் எப்படியாவது கிராமத்திலுள்ள அவள் வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்த்து விட வேண்டுமென அவசரப்பட்டார். ‘டவுனி’ல் நடக்கும் இந்த வெறியாட்டத்தைக் கேள்விப்பட்டதும் அவளது பெற்றோர்கள் படப்போகும் வே தனையை அவரால் ஊகிக்க முடிந்தது. 

எப்படிக் கொண்டு போய்ச் சேர்ப்பது? பஸ் கிடை யாது வாடகை வண்டிகள் அமர்த்த முடியாது; முஸ்லிம் நண்பர்கள் கூட, உயிருக்குப் பயந்து வீட்டுக் குள்ளேயே முடங்கியிருந்தார்கள். 

மஜீத்துக்கு அசாதாரண துணிச்சல். வீட்டுக்குச் சென்று போட்டிருந்த ‘பாண்ட்’டை அவிழ்த்து வைத்து விட்டு, சிவப்பும் நீலமுமான கட்டம் போட்ட லுங்கியை எடுத்துக் கட்டிக் கொண்டு, தொழுகைக்குச் செல்லும் பொழுது அணிந்து கொள்ளும் தொப்பியை எடுத்துத் தலையில் மாட்டினார். 

தன் சைக்கிளின் பின் சீட்டில் சரஸ்வதியை ஏறி அமரச்சொல்லிவிட்டு, மெயின் ரோட்டிலிருந்து விலகிச் செல்லும் காடுகளுக்குள்ளால் சைக்கிளைவிட்டார்; அதே சமயம் ‘டவுன்’ பக்கமிருந்து தீபாவளிப் பட்டாசு கள் போல் இடைவிடாமல் வெடிச் சப்தங்கள் கேட்ட வண்ணமிருந்தன. 

சரஸ்வதியை அவள் வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்கும் சமயம், பொழுது சாய ஆரம்பித்து விட்டது. தங்கள் பெண் ஒழுங்காக வீடு வந்து சேர்ந்ததில் பெற்றோர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். 

மஜீத்தை மனமாரப் பாராட்டினார்கள். அவர் திரும்பி வரும்பொழுது மன்னார் நகரமே மயான அமைதி பூண்டிருந்தது. ஏறக்குறைய பிரதான வீதியிலுள்ள எல் லாக் கடைகளும் எரிந்து சாம்பலாகிக்கிடந்தன. வீதியில் மனித நடமாட்டமே இல்லை. மஜீத்”சைக்கிளை வேகமாக மிதித்தார். 

அவரது வீடிருக்கும் சந்தில் திரும்பியதும் கண்ணில் பட்ட காட்சி அவர் நெஞ்சை உறையவைத்தது. 

எதிரே மூன்று சிங்கள ராணுவ வீரர்கள் மூவரின் கையிலும் இயந்திரத் துப்பாக்கிகள். தமிழர்களைத் தான் அவர்கள் வேட்டையாடுகிறார்கள் என்று உள்ளூர ஒரு நினைப்பிருந்தாலும் கூட எவனோ ஒரு எதிரியைப் பார்த்து விட்டது போல் மனதுக்குள் இனம் புரியாத பதட்டம். 

“ஓடி விடலாமா?” ஒரு இன்னும் ஒரு வீட்டினைத் தாண்டினால் அவரது வீடு. தன்னைப் பார்த்ததும் ராணுவத்தினரின் நடை துரித மாகுவது தெரிந்தது, இனிமேலும் தாமதிக்கக்கூடாது, பட்டென்று சைக்கிளில் இருந்து குதித்து, அதனை வேகமாக உருட்டிக் கொண்டு பக்கத்து வீட்டுக்குள் ளேயே நுழைந்தார். மஜீத். 

பின்னால் அவரை எச்சரிப்பது போல் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்ந்தன. 

மஜீத் மாஸ்டர் தூரத்தே வருவதை அவர் வீட்டு ஜன்னலினூடாகப் பார்த்துக்கொண்டு நின்ற சபேசன், துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் திடுக்கிட்டுப் போனான். 

‘அவரைத்தான் ராணுவம் சுட்டுவிட்டது’ என்ற அதிர்ச்சியில் சூழ்நிலையையும் மறந்து வெளியே பாய்ந்து வந்தான். 

”கொட்டியா” ராணுவத்தினர் கூக்குரலிட்ட வண்ணம் சபேசனை வளைத்துப் பிடித்துக் கொண்டனர் 

பூட்டிய கதவுத்துவாரத்தில் கண்களைப் பதித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார் மஜீத். 

சபேசனை அவர்களிடமிருந்து விடுவிக்கவேண்டும் போல் அவரது கையும், காலும் பரபரத்தன. இருப் பினும் துப்பாக்கி முனையின் அச்சுறுத்தல் அவர் மனச் சாட்சியையும் சாகடித்தது. 

“கொட்டியா நேதி?” நீயும் ஒரு புலிதானே?” விசாரணை செய்யும் ராணுவத்தினரின் கண்களில் வெறித்தனம் கூத்தாடுகிறது. 

இரண்டு கைகளையும் மேலே உயர்த்தியபடியே. அவன் ‘இல்லை’யெனப் பதிலளிப்பது புரிகிறது. 

மறுவினாடி அவனது கைகளில் ஏதோ ஒரு ‘அட்டை’ யைத் திணிக்கிறார்கள். 

“ஓடுடா ஓடு, எங்கள் கண்ணில் படாமல் ஓடு” 

கட்டளையில் அனல் வீசுகிறது. சபேசன் தன் பலமனைத்தையும் கூட்டி; கால் பிடரியில்பட ஓடுகிறான்: 

ஒரு நிமிடந்தான். அடுத்த கணம் ஓடும் அவ் விளைஞனின் முதுகை நோக்கி யந்திரத் துப்பாக்கிகள் இயக்கப்படுகின்றன. 

அடுத்தடுத்து ஏழெட்டு குண்டுகள் சபேசனின் முது கெலும்புகளை முறித்துக் கொண்டு செல்கின்றன. 

தலைகுப்புற நிலத்தில் பிணமாகச் சுருண்டு விழுந்த. சபேசனின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்து வந்து வீதியோரத்துக் கம்பமொன்றில் கட்டிவிட்டுக் செல்கிறார்கள். 

அவர்கள் தலை மறைந்ததும் கண்களில் நீர்மல்க வெளியே வந்தார் மஜீத். 

தலை சரிந்து தொங்க, இரத்தத்தில் தோய்ந்து கம்பத்துடன் ஒட்டிக் கிடந்த சபேசளை அணுகினார். அவனது சிவந்தமேனி துப்பாக்கி ரவைகளால் சல்லடைக் சண்சளாகத் து ளைக்கட்டட்டிருச்சின்றன. அவர்கள் திணித்த அட்டை மட்டும் இன்னும் நழுவாமல் அவன் பிடிக்குள்ளேயே இருச்சிறது. அதனைத் திருப்பிப் பார்க்கிறார். 

“விடுதலைப்புலி”யெனத் தமிழில் அவ்வட்டையில் எழுதப்பட்டிருக்கிறது. 

– அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 1985, தேனருவி வெளியீடு, சென்னை.

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *