ஒரு நொடி






அந்த ஷாப்பிங் மாலில் தங்களுக்கு தேவையானதை பர்சேஸ் செய்துக் கொண்டு காரை பார்க் செய்த இடத்திற்கு வந்துக் கொண்டிருந்தார்கள் சஞ்சய்யும் கௌரியும், அவர்களது ஐந்து வயது செல்ல மகள் லக்ஷ்மி அங்கு வந்த பட்டாம்பூச்சியை பிடிப்பதற்காக முன்னாடி சென்றாள்.
காரில் தாங்கள் பர்ச்சேஸ் செய்த பொருளை எல்லாம் வைத்துக் கொண்டிருந்தார்கள், அப்போது லக்ஷ்மி கௌரியிடம்.
“மேம்! இங்க பாருங்க இந்த பட்டர்ஃபிளை எவ்ளோ அழகாக பறக்குன்னு”
என்று கூற அதற்கு கௌரி அவளை லேசாக முறைத்துவிட்டு
“உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்லியிறுக்கேன் என்னை மேம்னு கூப்பிடாத அம்மான்னு கூப்பிடுன்னு”
“ஓ! சாரி மேம் சீச்சீ சீச்சீ அம்மா”
என்று கூறிவிட்டு பட்டாம்பூச்சியை பிடிப்பதற்காக முன்னாடி ஓடினாள்,பிறகு கௌரி திரும்பி சஞ்சய்யிடம்,
“இவ ஆசிரமத்திலிருந்து நம்ம வீட்டுக்கு வந்து ஒரு வருஷம் ஆகுது, ஆனால் இன்னும் என்னை அவ அம்மா மாதிரியே பாக்க மாட்டேங்குறா ஒருவித தயக்கத்தோட தான் என்கிட்ட பழகிட்டு இருக்கா, சஞ்சய்”
“இப்பதான வந்துருக்கா அதனால அவ நம்மளோட சகஜமா பழகுறதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்,நீ இதை நினைச்சு ஏதும் குழப்பிக்கிட்டிருக்காத”
என்று அவன் சொல்லிக்கொண்டிருந்த அதே நேரத்தில் பாலா தனது பைக்கில் வேகமாக போய்க் கொண்டிருந்தான் அவனது வாய் “மதுவுக்கு எதுவும் ஆகக்கூடாது,மதுவுக்கு எதுவும் ஆகக்கூடாது” என்று முனுமுனுத்துக் கொண்டிருந்தன அப்போது அவனது சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போன் ‘ஐ லவ் யூ ‘ ‘ஐ லவ் யூ’ என்கிற தனது ரிங்டோனை வெளியிட்டது, அவனது அம்மாதான் கால் செய்துக் கொண்டிருந்தாள் இவனும் வண்டியை ஓட்டிக்கொண்டே காலை அட்டெண்ட் செய்தான்
“ஹலோ! எப்பா பாலா உனக்கு இரட்டை குழந்தை பிறந்துருக்குப்பா”
என்றதும் இவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை,மேலும்
“மதுவுக்கும் அந்த கடவுள் புண்ணியத்துல எதுவும் ஆகல”
என்றதும் இவனது மகிழ்ச்சி இரட்டிப்பானது, அப்படி அவன் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும்போது, எதிர்பாராவிதமாக இடையில் ஒரு சிறுமி ஓடி வர வேகமாக வந்துக் கொண்டிருந்த பாலாவுக்கு கன்ட்ரோல் கிடைக்காமல் போக அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதற்குள்ளாக அச்சிறுமி மேல் மோதினான்
மோதியதில் அச்சிறுமி பைக்கின் சக்கரத்திற்கு அடியில் மாட்டி கொண்டாள், பாலாவும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான்.அப்போது பின்னாடி சஞ்சய்யும், கௌரியும் “லக்ஷ்மி” என்று கத்திக்கொண்டே ஓடிவந்தார்கள், அவள் பிடிக்க வந்த பட்டாம்பூச்சி அவளது சடலத்தின் மேல் உட்கார்ந்துக்கொண்டிருந்தது.