கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 362 
 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் 1 – அதிகமான லாபம்

அந்த மொத்தக் கம்பெனியின் இயக்குனர்கள் கூட்டம் (“போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்” கூட்டம்) மிகவும் ஆரவாரமாக நடந்து முடிந்ததும் வெளியே வந்த ஜே.கே யை எல்லோரும் சூழ்ந்து கொண்டனர்.

”என்ன ஜே.கே. நீங்கள் இந்த வருடம் அதிகமான லாபம் வந்திருப்பதால் முப்பத்தைந்து சதவீதம் போன்ஸ் கொடுக்கலாம் என்று அறிவித்திருக்கிறீர்களே? அடுத்த வருடமும் நாம் இதே அளவிற்கு கொடுக்க முடியுமா என்று யோசித்துப் பார்த்தீர்களா?” டைரக்டர் செங்குப்தா கேட்டார்.

ஒரு நிமிடம் மௌனம் சாதித்த ஜே.கே. ‘’நீங்களெல்லாம் டைரக்டர் என்று சொல்லிக் கொண்டு புடுங்கதுக்கா உட்கார்ந்திருக்கீங்க. என்று கத்த நினைத்தவர்,” தன்னைச் சுதாரித்துக் கொண்டு ”செங்குப்தா நீங்களும் கம்பெனியின் ஒரு டைரக்டர். அடுத்த வருடம்

இதைவிட எவ்வளவு நமது கம்பனி வேலையாட்களுக்கு போனஸ் தரமுடியும். அதற்கு நாம் எவ்வளவு உழைப்பைத் தர வேண்டும் என்று யோசியுங்கள்.மேலும் இந்த அளவிற்கதிகமான லாபம் நம்முடைய கம்பெனியின் ஒவ்வொரு தளத்திலும் பணிபுரிகின்ற ஒவ்வொருவரையும் பிழிந்து எடுத்த வருமானம். அதில் ஒரு பகுதியேனும் திரும்பவும் அவர்களுக்குப் போகவேண்டாமா?” என்று திருப்பிக் கேட்டார்.

‘’ஜே.கே. போனஸ் கொடுக்க வேண்டாம் என்று சொல்ல வில்லையே நான். ஆனால் முப்பத்தைந்து சதவிகிதம் அதிகம் என்கிறேன்.” செங்குப்தா கொஞ்சம் முறைத்துக் கொண்டு சொன்னார்.

‘’ஏய்யா நீ வாங்குற இரண்டு லட்ச ரூபாய் சம்பளத்திற்கு பத்தில் ஒரு பகுதியாவது வேலை செய்வாயா? செய்தவனுக்கு கொடுப்பதில் உனக்கென்னக் குறையப் போகிறது? உன் அப்பன் வீட்டு பணத்தையா எடுத்துக் கொடுக்கிறோம்?” என்று திட்ட நினைத்தவர் ”மிஸ்டர் செங்குப்தா நேரடியாகவோ, மறைமுகமாகவோ நமக்கு எவ்வளவு லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளனர். இது ஒரு நன்றிக்கடந்தான்.

முதலில் எல்லோருமே ஐம்பது சதவிகிதம் போனஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்லிய போது நீங்கள் வெளிநாடு சுற்றிவிட்டு

திரும்பினீர்கள். கம்பெனி அளவிட்டதை விட பன்னிரெண்டு மடங்கு அதிகமாக செலவழித்து மாமன் மச்சான் எல்லோரயும் கூட்டிக்கொண்டு சுற்றிவிட்டு வந்தீர்கள். வேலை செய்தவனுக்கு போனஸ் கொடுக்கச் சொன்னால் உங்களுக்கு வலிக்கிறது அப்படித்தானே’’ ஜே.கே. கொஞ்சம் வேகமாகப் பேச ‘’உங்களுக்கு இந்த செங்குப்தாவை மட்டம் தட்டுவதென்பது அல்வா தின்ன மாதிரி அப்படித்தானே?. வாருங்கள் செங்குப்தா என் அண்ணா அப்படித்தான்’’ என்று செங்குப்தாவை இழுத்துக் கொண்டு போனாள் ஜே.கேயின் தங்கை பத்மினி..

”பத்மினி நீ ஒரு பெங்காளியைக் கல்யாணம் செய்து கொண்டு.. நீயும் என் தங்கை என்று உன் கணவன் செங்குப்தாவை நான் கட்டி அழுது கொண்டிருக்கிறேன்.”

”அண்ணா மெதுவாகப் பேசுங்கள். அவருக்கு தமிழ் நன்றாகப் புரியும். வீட்டிற்குப் போனதும் காச் மூச்சென்று கத்த ஆரம்பித்து விடுவார்.”

”இப்படிச் சொல்லியே என்னை அடக்கி விடு. புருஷனை எதிர்த்து பேசாத உண்மையான தமிழச்சி” என்று வெளியே வந்து காரில் ஏறிக்கொண்டதும் மொபைல் போன் பாடியது.

போனை எடுத்து ‘’ராணி என்ன விஷயம்?” என்று கேட்டார்.

“உடனே வீட்டிற்கு வாருங்கள். திரும்பவும் நமது மகன் அரசுவைக் காணவில்லை.” என்றாள். எதிர் முனையில் அவர் மனைவி ராணி.

“அவன் என்ன சின்னக் குழந்தையா? எஞ்சினியரிங் முடித்து விட்டு என் பிஸினஸைக் கவனிக்காமல் ஊரைச் சுற்றிக் கொண்டு திரிகிறான் அவன். மொபைலில் அவனைக்கூப்பிடு.”

“நீங்கள் ஆபீஸ் என்று தவம் கிடக்கிறீர்கள். மூன்று நாட்களாக அவன் வீட்டிற்கு வரவில்லை. செல்போன் வீட்டிலேதான் இருக்கிறது. அவன் எடுத்துக் கொண்டு போகவில்லை. எனக்குப் பயமாக இருக்கிறது.”

“அய்யோ நீ ஒரு தொட்டாச்சிணுங்கி. எதற்கெடுத்தாலும் உடனே அழ ஆரம்பித்து விடுவாய். சரி…சரி. நான் கிளப்பிற்கு போவதை நிறுத்தி விட்டு வீட்டிற்கு வருகிறேன். ஆமாம் அவன் நண்பர்கள் வீட்டிற்கு போன் பண்ணிப் பார்த்தாயா?”

“எல்லோர் வீட்டிற்கும் பேசியாகி விட்டது.”

“சரி..சரி. அழாதே. நான் இதோ வந்து விடுகிறேன்.” என்று தொடர்பைத் துண்டித்து விட்டு திரும்ப அதே செல்போனில் வேறு ஒரு எண்ணைத் தேடி “ஹலோ ஜே.கே. பேசுகிறேன். அரசுவை மூன்று நாட்களாகக் காணவில்லை. வெளியே தெரியாமல்

இரகசியமாக கொஞ்சம் தேட முடியுமா?” என்று கேட்கும்போது கொஞ்சம் நடுக்கம் காத்திருந்தது.

“என்ன ஜே.கே. பயந்திருக்கிறீர்கள். நான் உங்கள் வலது கை. இந்த பாபு இருக்கும் வரை ஏன் வீணாக கலக்கம்?. நான் உங்கள் செக்யூரிட்டி ஆபிஸர் மட்டுமல்ல. ஆருயிர் நண்பன். உங்கள் அன்பின் ஆலோசகன். ஏதாவது வீட்டிலே சண்டை சச்சரவுகள் உண்டா.” என்றது எதிர் முனை.

அத்தியாயம் 2 – சொந்தக் காலில் நிற்க விரும்பும் அரசு

“ஆம் கொஞ்சநாளாக என் பிஸினஸை கவனிக்க வர மறுக்கிறான். சொந்தக் காலில் நின்று தனியாக வியாபாரம் செய்யப் போவதாக சத்யாகிரகம் பண்ணிக் கொண்டிருக்கிறான்.”

“விட்டு விட வேண்டியதானே?”

“நான் இவ்வளவு ஓடி ஓடி சேர்த்து வைத்திருப்பது யாருக்காக.. இந்த பிஸினஸ் சாம்ராஜ்யத்திற்கு எனக்கு ஒரு வாரிசு இல்லை என்றால் எதற்கு இவ்வளவு அலைச்சல், மன உளைச்சல்.”

“கொஞ்சம் விட்டுப் பிடியுங்கள் ஜே.கே”

“பாபு உங்களுக்கு நன்றாகத் தெரியும், அவன் படிப்பு முடித்து ஓராண்டு தாண்டி விட்டது. நானும் இவ்வளவு நாளும் விட்டுப் பிடிப்போம் என்றுதான் நினைத்தேன். இனி பிந்த முடியுமா?”

“ உங்கள் பையன் தோளுக்குமேல் வளர்ந்த பிறகு தோழன் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.”

“அதற்காக சும்மா சோம்பேறியாக ஊரைச் சுற்றிக்கொண்டு திரிந்தால்…. ஆம் பாபு ஒன்று செய்யுங்கள். என் தங்கை பத்மினி வீட்டிற்கு நேரடியாகப் போய் என் பையன் அரசு இருக்கிறானா என்று பார்த்துச் சொல்கிறீர்களா?”

“சரி.” என்றது எதிர்முனை.

தொடர்பை துண்டித்ததும் திரும்பவும் செல் போன் பாடல் ஒலிக்க “ஹலோ” என்றார்.

“அப்பா நான் அரசு பேசுகிறேன்.” என்றது எதிர்முனை.

“அரசு எங்கிருக்கிறாய்?” கொஞ்சம் கோபமும், எரிச்சலும், ஆதங்கமும், பயமும் கலந்து குரலை அடக்கிக் கொண்டார்.

“நான் அத்தை வீட்டிலேயிருந்து பேசுகிறேன் அப்பா.” என்றான் தமிழரசு.

“ஏண்டா மூன்று நாட்களாக போனும் பண்ணாமல், செல்போனையும் அணைத்துப் போட்டு விட்டு.. வீட்டுக்கும் வராமல் அம்மா எவ்வளவு வருத்தப்பட்டுக் கொண்டு”…. கோபமாக சப்தம் தெறிக்க….

“அப்பா….. சப்தம் போடுவதில் நீங்கள் சூரர்தான். பேசுங்கள்.” என்றான் தமிழரசு.

சுதாரித்துக் கொண்டு “ஏண்டா இப்படி அம்மாவைக் கஷ்டப் படுத்துகிறாய்.” என்றார் சன்னமாக.

“அப்படீன்னா என் அப்பா என்கிற ஜே.கே. என்னும் ஜெயக்குமார் அவர்களுக்கு அவர் மகன் திரு தமிழரசு காணாமற் போனதில் கவலை இல்லை அப்படித்தானே?”

“ஏன் அரசு…. ஏன் இப்படு பேசுகிறாய். அந்த செங்குப்தா உனக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுத்தானா?”

“அப்பா அவர் உங்கள் மைத்துணர். உங்கள் உங்கள் மைத்துனர் என்ற மதிப்புக் கொடுங்கள்.அவர் உங்கள் தங்கை பத்மினியின் கணவர்.”

“புடுங்கி…. அவன் என் தங்கையை வளைத்துப் போட்டுக் கல்யாணம் பண்ணிக் கொண்டு இப்போது என் மானத்தை வாங்கிக் கொண்டிருக்கிறான். அரசு நீ நேரே வீட்டிற்கு கிளம்பி விடுகிறாயா? இல்லையென்றால் நான் வந்து பிக் அப் பண்ணிக் கொள்ளட்டுமா?”

“நான் வரணுமா? வேண்டாமா? என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது அப்பா.”

“என்ன சொல்கிறாய் நீ”

“நான் உங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை கட்டிக் காக்க வரவில்லை. நான் என் காலில் சுயமாக நின்று சம்பாதிக்க வேண்டுமென்று ஏற்கனவே இரண்டு மூன்று முறை சொல்லி விட்டேன்.”

“ஓ! நீ இன்னும் அதிலேயிருந்து வெளியே வர வில்லையா. இத்தனை பெரிய பிஸினஸ் சாம்ராஜ்யம் உருவாக்கினதே உனக்காகத்தானே.”

“அய்யோ கேட்டுக் கேட்டுப் புளிச்சுப்போச்சு.”

”கஷ்டப்பட்டு சம்பாதித்திருந்தால் அதன் அருமை புளித்திருக்காது மகனே.”

“நீங்கள் எனக்கு ஒரு முடிவு சொல்வதாக இருந்தால் மட்டுமே நான் வீட்டிற்கு திரும்புவதாக உத்தேசம்.”

“இதெல்லாம் போனில் பேசுகிற பேச்சாடா?”

“அப்பா….. பேச வைபது நீங்கள். இதைப்பற்றி எப்போதே பேசி முடிவெடுத்திருக்கலாம்.”

“உன்ன அந்த செங்குப்தா தூண்டி விடுகிறானோ என்று எனக்குள்ளே சந்தேகம் வலுத்துக்கொண்டே போகிறது.”

“ஏன் வீணாக மாமாவைச் சந்தேகப்படுகிறீர்கள். அவரிடம் இதைப்பற்றி நான் பேசியது கூட கிடையாது.”

“சரி, வீட்டிற்கு வா. கலந்தாலோசிக்கலாம்.”

“ஆலோசனைக் கூட்டமெல்லாம் நிறைய முடிந்து விட்டது. இன்றைக்கு முடிவிற்கு வந்தாக வேண்டும்.”

“சரி..வா…” போனை துண்டித்து யோசனை செய்தவாறே வண்டியை ஓட்ட ஆரம்பித்தார்.”

மும்பைக்கு வந்து ஒவ்வொரு பைசாவிற்காக, ஒரு நேர சாப்பாட்டிற்காக பட்ட பாட்டினை ஒருமுறை நினைவுத் திரைக்குக் கொண்டு வந்தார். இத்தனை கஷ்டப்பட்டு எத்தனை தடைகளை உடைத்து… எத்தனை இன்னல்களை கடந்து…ஒரு பெரிய வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்துள்ள என்னிடமிருந்து தனித்துப் போக விரும்புகிறான் என் ஒரே மகன் தமிழரசு.

அப்புறம் யாருக்காக?…. எதற்காக ஓடி ஓடி அலைந்து இவ்வளவு சொத்துக்களும் வியாபார விரிவுகளும்…. இந்த விரிவுகளுக்காக உறங்காத இரவுகள் எத்தனை…. எத்தனை முறை மூளையைப் பிழிந்து யோசித்துக் கணக்குப் போட்டு ஆண்டுக் கணக்கில் அடித்தளமிட்டு ஒவ்வொரு கம்பெனியாக ஆரம்பித்து மும்பை மட்டுமின்றி சென்னை, பெங்களூர், கல்கத்தா, ஹைதராபாத், டெல்லி என்று ஏறக்குறைய எழுபது நகரங்களில் விரித்து ஒவ்வொரு இடங்களிலும் அந்தந்த வியாபாரத்தை விருத்தியடையச் செய்ய இரவென்றும் பார்க்காமல் விழித்துக் கொண்டே பயணம் செய்து, எதற்காக…. எனக்கும் என் மனைவிக்கும் மூன்று வேளை உணவிற்காக மட்டுமென்றால் எப்போதே இந்த ஓட்டத்தை நிறுத்தியிருக்கலாம்.

நாளைக்கே என் மகனுக்காக ஒரு அலுவலகம் அமெரிக்காவிலும் இருக்க வேண்டும் என்பதற்காக இன்று அவசர அவசரமாக மேலதிகாரிகள் கூட்டத்தை முடித்துக் கொண்டு நாளைய பயணத்திற்காக இப்படி ஓட வேண்டுமா?

ஜப்பானிலும் கால் வைக்க வேண்டும். என் மகன் தமிழரசு உலகளவில் வியாபாரம் நடத்த வேண்டுமென்று ஒரு பெரிய அளவு பணம் செலவழித்து பெரிய மாநாடு ஒன்றை நடத்தி புதிய வகையான மின் பொருட்கள் செய்ய ஒரு பெரிய தொழிற்சாலையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கும் வேளையில் இப்படி ஒற்ரைக்காலில் நின்று கொண்டிருக்கிரானே.

இன்று எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லலாம். நான் ஒரு நாளைக்கு சாப்பாட்டிற்கு மூன்று வேளையும் வெறுமெனே தண்ணீர் மட்டும் சாப்பிட்டு விட்டு மழைக்கு ஒதுங்க முடியாத இடங்களில் கூட தூறலில் சாரலை வெறுத்துக் கொண்டே தூங்கிய கதைகளை… திருமணமாகி மருத்துவர் செலவிற்கு பணமில்லாமல் டாக்டரின் காலைப் பிடித்து விட்டு… அவருடைய காலில் விழுந்து மன்றாடியதைச் சொல்லலாம்.

எதைச் சொன்னாலும் கேட்க மறுக்கின்ற பிள்ளையை என்ன செய்வது? அடித்து திருத்துகிற வயசில்லை. சொன்னால் கேட்கிற இரகமில்லை. இவனை என்ன சொல்ல. என்ன செய்ய…’

வீட்டிற்கு வந்து காரை நிறுத்திவிட்டு வாசலுக்கு வந்ததும் பொங்கும் மகிழ்ச்சியுடன் அவருடைய மனைவி ராணி வேகமாக வந்து “அரசு வந்தாச்சு, மூணு நாலைக்குளே இளைத்துப் போய்விட்டான்.” என்றாள்.

“என்ன செய்கிறான்.”

“டிபன் சாப்பிடச் சொன்னேன். அப்பா வரட்டும் என்று சொல்லிக் கொண்டு துணி கூட மாற்றாமல் இருக்கிறான்.”

“சரி, வா. எனக்கும் அவனுக்கும் காபி கொண்டு வா.” என்று சொல்லி விட்டு உள்ளே வந்த ஜே.கே. “வா அரசு எப்போது வந்தாய்” என்று சொல்லி விட்டு “வசந்தா காபி கொண்டு வா” என்றார் வேலைக்கார பெண்ணிடம்.

“காபி எல்லாம் அப்புறம் சாபிடலாம். நான் கேட்டதற்கு முடிவு சொல்லுங்கள்.”

“அரசு கொஞ்சம் யோசித்துப் பார். இந்த வியாபார சாம்ராஜ்யம் உருவாக்க எத்தனைக் கனவுகள் எத்தனை உழைப்புகள்… யாருக்காக உன்னிடம் ஒப்படைப் பதற்காக நீ கஷ்டப்படாமல் இருப்பதற்காக.”

“அய்யோ அப்பா திரும்பவும் ஆரம்பித்து விட்டீர்களா? இனி அந்தப் பழைய ஒரு வேளை சாப்பாடு கிடைக்காத கதை…… எனக்கு சலித்து விட்டது. வருகிறேன்.” என்று கிளம்பினான்.

அத்தியாயம் 3 – நிழல்யுத்தம்

“காபி எடுத்துக் கொண்டு வந்த ராணி அவன் எங்கே போகிறான்? “ என்றவள் வேகமாக வாசலுக்கு வந்த “அரசு நீ எங்கேயும் போக வேண்டாம். உனக்கு என்ன வேண்டும் சொல். நான் தருகிறேன்.” என்றாள்.

“அம்மா நான் சொல்கிறபடி இந்த வீட்டில் எதுவும் நடக்கப் போவதில்லை.நீங்கள் வழியை விடுங்கள்.” அம்மாவின் கையைத் தட்டி விட்டு வெளியே நடந்தான் அரசு.

“அரசு… நீ போகாதே. அம்மா ரொம்பா தவித்துப் போவாள். உன் வழிக்கே நான் வருகிறேன். வீட்டிற்குள் வா.” என்ற படி அவனருகில் வந்தா ஜே.கே.

ஒரு நிமிடம் நின்று தந்தையை நின்று பார்த்த தமிழரசு,”இந்த யுத்தம் ஆரம்பித்து ஒரு வருடமாகிவிட்டது அப்பா. நான் கல்லூரி முடிநத்தவுடன் உங்களிடம் கேட்டேன். அன்று நீங்கள் தனித்துச் செயல் பட அனுமதித்திருந்தால் நான் இன்று ஒரு அஸ்திவாரமாவது அமைத்திருப்பேன். இப்படியே நீங்கள் உங்கள் பிஸினஸ் சாம்ராஜ்யத்திற்குள் இழுத்துப் போட்டுவிடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள்.”

“ஒன்று உங்களுக்குத் தெரியுமா? நான் எங்கே போனாலும் ஜே.கே. அங்கீகாரம் என்னைத் துரத்துகிறது. ஜே.கே.சாரின் மகன் என்பதால் பல சலுகைகள் எதிர் பார்க்காமலே மடியில் வந்து விழுகிறது. எனக்காக என்று விருத்தியடையச் செய்த உங்கள் வியாபார சாம்ராஜ்யத்தை நீங்களே கட்டிக் கொண்டு கொண்டாடுங்கள். நான் தமிழரசாக அடையாளப்பட வேண்டும்.அதற்கு எனக்குள்ள அத்தனையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.” என்றான் அரசு.

“தனியாகப் போனால் செத்துப் போவாய் அரசு. அப்பாவிடம் சவால் விட்டு வந்தோமே.. இனி எந்த முகத்தோடு போவோம் என்று வருந்தியே காணமல் போய்விடுவாய். உனக்காக நான் வளர்த்து வைத்திருக்கின்ற சாம்ராஜ்யத்தை விரிவாக்கு. ஜெயக்குமாரின் பெயரைத் தகர்த்தெரிந்து விட்டு புதிய சாதனைகளை செய்து காட்டு. எந்த நாடுகளிலெல்லாம் இன்றும் உன் தந்தையால் காலடி வைக்க முடிய வில்லையோ அங்கே போய் கொடி நாட்டு. அதை விட்டு விட்டு ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறாய் என்றுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” சிரித்துக் கொண்டே சொன்னார் ஜே.கே.

“அந்த மாதிரி எதுவும் வேண்டாம். நான் தனியாக என் காலில் நிற்க வேண்டும்.”

“சும்மா கதை விடாதே அரசு! நீ ரோட்டிலே போய் பிச்சை எடுத்தால் கூட ஒரு நாளைக்கு அம்பது ரூபாய் சம்பாதிக்க முடியாத நிலைதான் இன்று.”

“நான் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். என் தந்தை பெரிய கோடீஸ்வரர். மும்பை பெரும் புள்ளிகளில் ஒருவர். அவரிடம் இல்லாத பணமா? ஒரு பத்துகோடி ரூபாயை வாங்குக் கொண்டு போய் பிஸினஸ் பண்ணப் போகிறேன்.”

“அப்படி வா அரசு வழிக்கு! நீயோ உன் காலிலே நின்று தமிழரசின் பெயர் நிலைக்க வேண்டும். அந்தப் பெயரின் விரிவில்தான் உன் உயரம் இருக்கிறது என்று கருதுகிறாய். அதற்கு என் அஸ்திவாரம் எதற்கு? நீ உன் காலில் நிற்க விரும்புகிறாய். போ…போய் நில். என்னிடமுருந்து ஒரு சல்லிக்காசு கூட எடுக்காமல் எதிர்பார்க்காமல் போய் சம்பாதித்து உன் பெயரை நிலை நிறுத்து.” தன் அஸ்திரத்தை உபயோகித்தார் ஜே.கே.

“இப்படி வெளியே நின்று பேசிக் கொண்டு விவாதம் பண்ணிக் கொண்டிருக்கப் போகிறீர்களா? உள்ளே வந்து அமர்ந்து கொண்டு பேசலாமே” பதட்டமாகச் சொன்னாள் அம்மா.

“இப்போது தான் சூடு பிடித்திருக்கிறது. வாங்க அப்பா உள்ளே போய் அமர்ந்து தர்க்கம் பண்ணாலாம்” என்று அரசு உள்ளே வர பின்னாலே ஜே.கே.வும் உள்ளே வந்தார்.

“அம்மா டிபன் என்னது?” என்றான் அரசு.

“பக்கோடாவு லட்டும் இருக்கிறது. காபியை சூடாக்கித் தருகிறேன்.”

“அரசு தனியாக நிற்க விரும்பி பிடிவாதம் பண்ணிய பிறகு இங்கே பச்சைத் தண்ணீர் குடிப்பது கூட தவறுதான் என்று புரியவில்லையா? “ ஜே.கே. உண்மைகளை உணர்த்த விரும்பினார்.

“அதுவும் சரிதான். இப்போது என்னைத் தனியாய் என் காலில் நிற்க அனுமதிக்கிறீர்கள் அப்படித்தானே.”

“இவ்வளவு பிடிவாதமாக இருக்கும் என் மகனை விட்டுப் பிடிப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன். ஒன்று மட்டும் சொல்கிறேன் அரசு. இரண்டு நாளிலே அல்லது நாளைக்கே நீ வீடு திரும்ப வேண்டிய இக்கட்டான நிலை வரும். அப்போது தன்மானம் எல்லாவற்றையும் கழற்றிப் போட்டு விட்டு வா. நீ எப்போதும் இந்த வீட்டுப் பிள்ளை.என் மகன் காபி சாப்பிடு.” என்றார் உள்ளுக்குள்ளே சிரித்துக் கொண்டு.

“இந்தாம்மா.. பசியாய் இருப்பாய் டிபன் சாப்பிடு” என்றாள் அம்மா.

“அப்புறம் சாப்பிடுகிறேன்.” என்று அம்மாவிடம் சொன்னவன் “அப்பா உங்கள் வருமானத்தில் வந்த டிபன், காபி நீங்களே சாப்பிடுங்கள். எனக்கு உங்கள் வருமானத்தில் ஒரு தம்படி கூட தேவையில்லை.” என்றவன் கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட், விரல்களில் கிடந்த வைர மோதிரங்கள், கழுத்தில் கிடந்த செயின், பாக்கெட்டிலிருந்த செல்போன் எல்லவற்றையும் எடுத்து மேஜையில் வைத்து விட்டு ”மோட்டார் பைக், கார் இரண்டுமே

நிற்கிறது. உடுத்த உடையோடு போகிறேன். முடிந்தால் புதிய துணி வாங்கியதும் இந்த உடைகளையும் அனுப்பி வைக்கிறேன்.”என்றவாறு கிளம்பினான்.

– தொடரும்…

– முகவரி தேடும் காற்று (நாவல்), முதல் பதிப்பு: 2020, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்ற வெளியீடு.

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *