வாழ்வின் விளிம்பில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2025
பார்வையிட்டோர்: 64 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாலாவின் கைகளில் தீப்பந்தத்தைத் திணித்தார்கள். 

அவளது கைகள் வெட வெடத்தன. கண்களிலிருந்து அருவியைப்போல் கொட்டிய நீர், கன்னத்தில் ஓடி சொட்டுச் சொட்டாக நிலத்தில் சிந்தின. 

உயிரையே வெறுத்தவளாக பெற்றோல் ஊற்றப்பட்ட பெற்றவர்கள், உடன்பிறந்தான் சடலங்களை நோக்கி தீப்பந்தத்துடன் நகர்ந்தாள். அவளது வெற்று உடல் பட படத்தது. 

“…ம்…” – எவனோ ஒருவன் ஆவேசத்துடன் அவளை நெருக்கித் தள்ளினான். 

மாலா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி. ஒரு வாரத்துக்கு முன்னால் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைச் சிங்கள மாணவர்கள் மூர்க்கத்தனமாகத் தாக்கத் தொடங்கிய போது முதலில் அவளது உடமைகள்தான் சின்னாபின்னமாக்கப்பட்டன. அதற்கொரு காரணமும் இருந்தது. 

அவள் பல்கலைக்கழகத்தில் படித்தாலும், சிங்களப் பெண்களைப் போலவோ அல்லது வேறு சில தமிழ்ப் பெண்களைப் போலவோ கவுனோ, மிடியோ, பாண்டோ அணிவது கிடையாது. எப்பொழுதும் புடவைதான். நெற்றியில் பொட்டு, கண்களில் மை, கைகளில் வளையல் என அசல் தமிழ்ப் பெண்ணாகவே எந்த நேரமும் காட்சியளிப்பாள். 

அவளது படிப்பு முடிந்த கையோடு இந்தியாவிலுள்ள தங்கள் உறவுக்காரப் பையனுக்கு அவளைத் திருமணம் செய்து கொடுக்கும் எண்ணம் பெற்றோருக்கு இருந்தது. அதனால் சிங்களவர்களின் பழக்கவழக்கங்கள் எதையும் அவள்மேல் பதியவிடாமல் அசல் தமிழ்ப் பெண்ணாகவே அவளை வளர்த்தார்கள். 

இன்றைக்கு அதுவே அவளுக்கு எதிரியாகிவிட்டது. எல்லாச் சிங்கள மாணவர்களுக்கும் அவளது உடையே அவளைச் ‘சட்’டென்று இனம் பிரித்துக் காட்டிக்கொடுத்து விட்டது. 

மாணவர்களுக்கிடையே திடீரெனக் கலவரம் மூண்டதற்கான காரணம் அங்குள்ளவர்களுக்கே புரியவில்லை. 

முதல்நாள் ஆண்கள் விடுதியில் ஏற்பட்ட கலவரத்தில் தமிழ் மாணவர்களை அடித்து உதைத்து சிங்கள மாணவர்கள் விரட்டிவிட்டார்கள் என்பதை அடுத்தநாள் கேள்விப் பட்டதிலிருந்து மாலா பயத்துடனேயே இருந்தாள். அவள் அறையிலிருந்த சிங்களப் பெண்ணும் முதல்நாள் காலையிலேயே இரண்டு நாள் ஊருக்குப் போய் வருவதாகக் கூறி விட்டுச் சென்றுவிட்டாள். 

பயத்துடன் படுக்கைக்குச் சென்றவள் காலையில் எழுந்து குளித்துவிட்டு உடை மாற்றும்பொழுது அறைக் கதவு தடதடவெனத் தட்டப்பட்டது. 

மனதிலெழுந்த மருட்சியுடன் கதவைத் திறந்தாள். சிங்கள மாணவர்கள் கும்பலொன்று அவளது அறைக்குள் காட்டுமிராண்டித்தனமாக நுழைந்தது. 

மாலா எப்படியோ அவர்கள் கையில் அகப்படாமல் ஓடி விட்டாள். 

அவளது புத்தகங்கள், நோட்டுக்கள் அனைத்தும் கிழித்து வீசப்பட்டன. புடவைகள், உடமைகள் அனைத்துக்கும் நெருப்பு வைக்கப்பட்டன. 

இத்தனையும் நடந்து முடிந்த பின்னர்தான் விடுதி ‘வார்டன்’ வந்து மாலாவைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றாள். 

பல்கலைக்கழகம் மூடப்பட்டது. 

அன்றிரவே ஒரு முஸ்லிம் குடும்பத்துடன் சேர்த்து அவளது ஊரான மாத்தளைக்கு அனுப்பி வைக்கப்பட் டாள். 

அவள் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்து இரண்டு நாள் ஆவதற்குள் நாடு முழுவதும் இனக்கலவரம் மூண்டு விட்டது. 

அதுவும் மாத்தளையில் இரண்டு தலைமுறைக்கும் மேலாக வாழ்ந்து, ஊரின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்த தமிழர் வீடுகள், உடமைகள் உட்பட அனைத்தும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டன. இந்துக்கோவில்கள், பாடசாலைகள் அனைத்தும் தரைமட்டமாக்கப் பட்டன. 

ஏறக்குறைய எல்லாத் தமிழர்களும் மாத்தளை ஸாகிராக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அகதிகள் முகாமுக்குச் சென்றுவிட்ட போதிலும் மாலாவின் தந்தை சிதம்பரம் மட்டும் வீட்டை விட்டு அசைய மறுத்து விட்டார். 

அவரது வீட்டுக்குப் பக்கத்திலுள்ள பார்ன்சாலையின் (சிங்களக் கோவில்) உள்புறம் புத்தர் சிலை வைத்துக் கட்டப்பட்டிருக்கும் தாமரை வடிவத்திலான தியான மண்டபம் அவர் செலவில் கட்டப்பட்டதுதான். வருடா வருடம் அங்கு நடைபெறும் வெசாக் (வைகாசிவிசாகம்) கின் போது மூன்று நாட்களும் தன் செலவிலேயே அன்னதானம் செய்விப்பார். ஏறக்குறைய ஐயாயிரம் சிங்களவர்கள் மட்டில் அங்கே வந்து சாப்பிடுவார்கள். 

அதனால் தனக்கு எதிராக அவ்வூரிலுள்ள சிங்களவர்கள் தாக்குதல்களில் ஈடுபடமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார். 

ஆனால் மாலா அதை நம்பவில்லை. தந்தையின் அந்த அசட்டுத்தனமான நம்பிக்கையை பல தடவை கடிந்து கொண்டாள். தந்தையிடம் மாறி அண்ணன்மார்களிடமும் சொல்லிப் பார்த்துவிட்டாள். யாரும் செவி சாய்க்கவில்லை. 

“அப்பா, இந்த விஷப் பரிசோதனை வேண்டாம். மாத்தளைப் பிள்ளையார் கோவிலைக் கூடத் தீக்கிரையாக்கி விட்டு, அங்கிருந்த பிள்ளையார் சிலையை எடுத்து வந்து நடு வீதியில் வைத்து, அதன் வாயில் ‘சிகரெட்’டைக் கொளுத்தி வைத்திருக்கிறார்களாம். மகாவலி ‘புற ஜெற்றில்’ வேலை செய்ய வந்திருக்கும் அந்த ஜேர்மன்காரர் வந்து சொல்லி விட்டுப் போகிறார். இதற்குப் பின்னாலும் நாம் இவங்களை நம்பலாமா? நேற்றுவரை கத்தரகம தெய்யோ… கத்தரகம தெய்யோ… என கதிர்காம முருகனுக்குத் தேங்காய் உடைத்தவர்கள் இன்று அந்தப் பெருமானையே இப்படி அவமானப்படுத்தி நடுவீதியில் போட்ட பின்னால்… சே… நினைக்கவே நெஞ்சு கொதிக்கிறது. உலகிலேயே நாகரீகமடையாத ஒரு காட்டுமிராண்டி இனம் இருக்குதென்றால் அது இவங்கதான்” மாலா ஆவேசம் வந்தவள் போல் தந்தையிடம் இரைந்தாள். 

“கொஞ்சம் பொறுமையாய் இரம்மா. மூன்று தலை முறைகளாய் நாம் வாழ்ந்த வீடு. எனக்குப் பின்னால் தான் சிங்களவர்களே இந்த இடத்துக்குக் குடி வந்தார்கள். இப்படி எத்தனை கலவரங்கள் ஏற்பட்டிருக்கு. ஒரு சமயம்கூட என் வீட்டில் கைவைக்கவில்லை. இந்த வருஷம் பார்ன்சாலைக்கு சுற்றுமதில் கட்டித் தருவதாகக் கூறியிருக்கிறேன். இப்பயிருக்கிற பிக்குவுக்கு இந்த இனப் பாகுபாடுகளே கிடையாது” மாலாவின் தந்தை இதையே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார். 

ஆனாலும் மாலாவின் நச்சரிப்புத் தாங்காமல் பகல் வேளையில் வீட்டில் சமைத்துச் சாப்பிட்டு விட்டு இரவில் வெளிநாட்டுக்காரர் ஒருவரின் ‘கராஜ்’ஜில் போய் படுத்துக் கொண்டார்கள். 

சிதம்பரம் கூறியது மாதிரி கலவரம் மூண்டு நான்கைந்து நாளாகியும் அவரது வீட்டுக்கு எதுவுமே நடக்க வில்லை. இலங்கை அரசு ராணுவத்தினரை வரவழைத்து விட்டது என வானொலியில் அறிவித்ததும் சிதம்பரத்துக்கு மீதி உற்சாகமும் வந்துவிட்டது. 

இனிமேல் எதுவும் நடவாது என்ற நம்பிக்கை அவருள் வேரூன்றியது. இரவில் வேறு இடத்துக்குப் போவதையும் விட்டுவிட்டு அன்றிரவு வீட்டிலேயே தூங்கினார்கள். எனினும் மாலாவுக்கு வெகு நேரம் வரை தூக்கம் வருவதாக இல்லை. மறுபடியும் நோட்சுக்களை யாரிடமாவது வாங்கிக் கொப்பி பண்ண வேண்டுமென்ற படிப்பைப் பற்றிய சிந்தனையிலேயே புரண்டு படுத்தாள். 

அச்சமயம் வெளியே பெரிய கூக்குரல் – இரைச்சல் கேட்டது. 

கட்டிலைவிட்டு துடித்தெழும்பினாள். பக்கத்து அறையில் தூங்கிய தந்தையையும், அண்ணன்மார்களையும் தட்டி எழுப்பினாள். 

தூக்கக் கலக்கத்துடனேயே பூட்டிய ஜன்னல் இடுக்குகளால் எட்டிப் பார்த்தார், சிதம்பரம். 

வீதி முனையில் தீப்பந்தங்கள் தெரிந்தன. மூத்த பையன் கதிரையொன்றில் ஏறி சுவர்க் ‘கிறில்’லின் ஊடாகப் பார்த்து விட்டு “அப்பா பார்ன்சாலைக்கு முன்னால் பெரிய கூட்டமே நிற்பது போல் இருக்கிறது. எதற்கும் போலீசுக்குப் ‘போன்’ பண்ணுவோம்” என்றான். 

சிதம்பரம் ஓடிப் போய் ‘டயல்’ செய்தார். அவரது அதிர்ஷ்டம் ஒரே தடவையிலேயே ‘லையின்’ கிடைத்தது 

‘ஹலோ’ என்றதும் தங்கள் நிலைமையை விளக்கிக் கூறினார். 

எதிர் முனையில் பேசிய சிங்கள போலீஸ் அதிகாரி ஏதாவது நடந்தால் வருகிறோம் என்று தட்டிக்கழித்தான். 

சிதம்பரம் விடவில்லை. மாலாவை நினைத்துப்பயந்தார். 

“அப்பா, அவர்கள் எங்கள் வீட்டை நோக்கித்தான் வருகிறார்கள் போல் தெரிகிறது…” ஜன்னல் இடுக்கால் பார்த்தபடி நின்ற பையன் கூறினான். 

“சார் …எங்களை அகதிகள் முகாமிலாவது கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்”… சிதம்பரம் டெலிபோனில் கெஞ்சினார். 

“வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்…? பெண்கள் எத்தனை…? ஆண்கள் எத்தனை..? ஆண்களின் வயதென்ன?” என போலீஸ் ஸ்டேசனில் முகாமிட்டிருந்த ராணுவத்தினர் விவரமாகக் கேட்டு விட்டு “இன்னும் சற்று நேரத்தில் அங்கு வருவோம்…எல்லோரும் ஒன்றாக இருங்கள்…அகதிகள் முகாமில் சேர்த்து விடுகிறோம்…” கரகரத்த குரலில் ஒரு அதிகாரி வாக்குக் கொடுத்ததும் சிதம்பரம் சிறிது நிம்மதியுடன் ‘போனை’ வைத்தார். 

வெளியே சத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தாயையும், மாலாவையும் கட்டிலுக்குக் கீழே ஒளிந்து கொள்ளச் சொன்னார்கள். 

“அப்பா, கூட்டத்தில் புத்த பிக்குகளும் வாறது மாதிரி யிருக்கு…” – சாவித் துவாரத்தில் கண்ணை வைத்திருந்த இரண்டாவது பையன் கூறினான். 

“யாரும் அங்கயிங்க ஓடவேண்டாம்… ஆர்மி வந்து விடும்…” சிதம்பரம் நம்பிக்கை யூட்டினார். 

அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. ராணுவ ‘டிரக்’ ஒன்று வேகமாக வந்து வீட்டு வாசலில் நின்றது. 

உள்ளேயிருப்பவர்களை வெளியே வந்துவிடும்படி ‘டிரக்’கிலிருந்தவர்கள் எச்சரித்தனர். 

சிதம்பரமும் பிள்ளைகளும் முன்னால் ஓடினார்கள். சிதம்பரத்தையும், அவரது ஐந்து பையன்களையும் ஒவ்வொருவராகக் கணக்கெடுத்து வரிசையாய் நிறுத்தினான் அதிகாரி. அதன்பின் ‘ம்…கானி தென்னக்…? பெண்கள் இருவரும் எங்கே…’ யென்று கேட்டான். 

‘…கம்மிங்…’ பையனில் ஒருவன் பதிலளித்தான். 

மாலா தன் வயதான தாயாரை கையில் பிடித்தபடி அப்பொழுதுதான் வெளியே வந்துகொண்டிருந்தாள். 

அதிகாரி ‘டிரக்’கில் ஏறினார். ஏதோ வெளியில் நின்ற கும்பலுக்கு சைகை செய்தார். 

‘டுமீல் டுமீல்’ எதிர்சாரியிலிருந்து குண்டுகள் பாய்ந்து வந்தன. வரிசையில் நின்ற ஆறுபேரும் பிணமாக வீழ்ந்தார்கள். 

தயங்கித் தயங்கி வெளியே வந்துகொண்டிருந்த மாலா தாயின் கையை உதறி விட்டு, ‘விர்’ரென வீதிக்குப் பாய்ந்து வந்தாள். 

அவள் வெளியே ஓடிவிடக்கூடாது என்பது போல் சுற்றி நின்ற சிங்களக் குண்டர்கள் அவளைப் பிடித்துக் கொண்டனர். 

‘போலீஸ்… போலீஸ் சேவ்மி’ – மாலா ‘டிரக்’ கைப் பார்த்துக் கதறினாள். 

மஞ்சள் காவியுடையணிந்த புத்த சந்நியாசியொருவன் அட்டகாசமாகச் சிரித்தபடி முன்னால் வந்து அவள் புடவையில் கையை வைத்தான். 

மாலா திமிறினாள். முடியவில்லை. அவள் கைகளைப் பின்னால் இருவர் வளைத்துப் பிடித்துக் கொண்டார்கள். 

‘முருகா, ஆண்டவனே என்னைக் காப்பாற்றுங்களேன்’ -மாலா இரத்த நரம்புகள் புடைக்கக் கதறினாள். 

அவள் உடலில் இருந்த கடைசித் துணியையும் அவர்கள் பிடுங்கி எடுத்தபோது… ‘டேய் இந்த அநியாயத்துக்கு ஒரு நாளைக்கு அனுபவிக்காமல் போகமாட்டீர் களடா… தெய்வம் கேட்காமல் விடாது…’ 

அவர்கள் கையிலிருந்த தன் புடவையை பறித்துத் தன் உடலைச் சுற்றிவிடும் ஆவேசத்தில் மிரண்டு போய் – எதுவும் செய்ய முடியாத அவலத்தில் கத்தினாள். அவர்கள் பெரிய வீரர்கள் போல் ஏளனமாகச் சிரித்தபடி புடவையைச் சுருட்டி ‘டிரக்’குக்குள் எறிந்தார்கள். 

இரத்தக் கண்ணீர் வடித்தபடி தன் கைகளைக் கொண்டே, தன் உடலை மறைக்க முயன்ற மாலாவின் கைகளில் தீப்பந்தத்தைக் கொடுத்து; 

“ம், உன் கையாலேயே உன் அப்பனுக்கும் சகோதரர்களுக்கும் தீ மூட்டு” எனச் சிங்களத்தில் கூறினான் ஒருவன். 

அவள் தன் கையை நீட்ட முடியாத நிலையில் கூனிக் குறுகிப்போய் நின்றாள். 

‘…ம்…’ – மற்றொருவன் அதிகார தோரணையில் விரட் டியபடியே மாலாவை நெருங்க முற்பட்டான். 

‘டோன்ற் கம் கியர்… டோன்ற்…கம் கியர்…’ – கிரீச் செனக் கத்திய மாலா ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவள் போல் பாய்ந்து சென்று தீப்பந்தத்தை வாங்கிய வண்ணம்; தந்தையினதும், சகோதரர்களதும் உடல்கள் கிடந்த பக்கம் திரும்பினாள். 

அவ்வுடல்களின் மேல் கார் ‘டயர்’களைப்போட்ட வண்ணம்; ஒரு ராணுவ வீரன் நின்றான். டயர்கள் மீது பெற்றோல் ‘டின்’னைக் கவிழ்த்தபடி நின்றர் புத்த பிக்கு ஒருவர். 

மாலா அழுகையால் உடல் பதறித் துடித்தபடி கண்களில் நெருப்பின் ஜுவாலை வீச விடு விடென்று நடந்து சென்று, அவ்வுடல்களுக்குத் தீயை வைத்ததும் – கையிலிருந்த தீப்பந்தத்தை பிக்குவின் முகத்தில் ஆவேசத்துடன் வீசிவிட்டு கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் பாய எத்தனித்தாள். 

‘டிரக்’ கிலிருந்து பாய்ந்து ராணுவ வீரர்கள் அவளைத் தர தரவென்று இழுத்து வந்து ‘டிரக்’குள் போட்டனர். 

அக்கினி வளையம் அக்கினி வளையம், ஈழத்துக் கண்ணீர்க் கதைகள் - ஆகஸ்ட் 1985 தமிழினத் தலைவர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அணிந்துரை  தென்னிலங்கைத் தீவில் தேம்பியழும் தமிழ் இனத்தினர் படும் சித்ரவதைக் கொடுமைகளைத் 'தேவி' இதழ் 'கண்ணீர்க் கதைகள்' என்ற தலைப்பில் வெளியிட்டது தொடர்ச்சியாக!  அதன் தொகுப்பே இந்த நூல்! நூல்அல்ல; நம் இதயத்தில் பாயும் வேல்!  இலங்கைத் தமிழ்க்குலத்தில் உதித்த எழுத் தாளர் ஞானப்பூங்கோதை அவர்கள் தாய் உள்ளத் தில் பொங்கிப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *