தந்தையின் உள்ளம்




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சளுக்க அரசனொருவன் பாண்டியருட செய்த சண்டை யொன்றில் தன் ஒரே புதல்வனை இழந்தான். பாண்டி நாட்டினரிடையே அவன் சிறை பிடித்த வீரருள் ஒருவன், கிட்டத்தட்ட தன் மகனை யொத்த அகவையும் சாயலும் உடைய வனாய் இருப்பது கண்டு, அவனைத் தன் மகனாகக் கொண்டு போற்றிவந்தான்.
சில ஆண்டுகள் கழிந்தபின் சோழ அரசனும் பல்லவ அரசனும் சளுக்க நாட்டின்மீது படை யெடுத்தனர். அவர்களுடன் சண்டை செய்யப் பாண்டி நாட்டரசனும் தன் படைகளை உதவியாக அனுப்பியிருந்தான். இருபுறப் படைகளும் நெருங்கி வந்து போர் புரிவதற்காகப் பாசறைகள் அமைத் துக் காத்து நின்றன. அப்பொழுது முழு நிலாக் காலமானதால் சளுக்க அரசன், பாசறைக்கு வெளி யில் வந்து உலாவிக் கொண்டிருந்தான். அவன் காதுகளில் தமிழ்ப்படைகளின் போர் ஆரவாரமும், போர் வீரமிக்க பாடல்களின் இனிய பண்களும் தென்றல் காற்றுடன் கலந்து வந்து இடை யிடையே மோதின.
திடுமென அரசன்ஏதோ நினைத்தவனாய்ப் பாண் டிய வீரனை அழைத்து வரும்படி ஏவினான். ‘அரசனுக்கு யாது பிழை செய்து விட்டோமோ’ என்ற அச்சத்துடன் வீரன் அவன்முன் வந்து நின்றான்.
அரசன் அவனை நோக்கி, “மைந்தா, நான் இதுகாறும் உன்னை அன்புடன் பேணி வந்திருக் கிறேன். இப்போது என் கேள்வி ஒன்றிற்கு விடை கூறுக! உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?”
வீரன்:-ஆம், ஐயனே!
அரசன்:-உனக்கு உடன் பிறந்தார் உண்டல்லவா?
வீரன்:-அத்தகைய நற்பேறு எனக்கில்லை ஐயனே! என் தந்தைக்குப் புதல்வன் நான் ஒரு வனே, புதல்வியும் வேறில்லை.
இதைக் கேட்டதும், அரசன் பெருமூச்சுவிட்டு, ” அதோ பக்கத்தில் உன் நாட்டுப் படைஞர் பாடி யாடி இன்புறுகின்றனர். அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டால் எளிதில் நீ உன் பெற்றோரி டம் சென்று சேரலாம்,” என்று நாத் தழுதழுப்பக் கூறினான்.
வீரனும் பிறரும் ஒன்றும் தோன்றாமல் திகைத்தனர்.
அரசன், “மைந்தனே! உன்னை ஒத்த மைந்த னொருவனை இழந்த பின் எனக்கு உலகில் எதி லுமே இன்ப மில்லாமல் போயிற்று. போரில் எத் தனை வெற்றி கிட்டினாலும் என்னளவில் இனி மன நிறைவேற் படுவதற்கில்லை. என் போன்ற அரசர் எத்தனையோ பேருடைய வாழ்க்கைகளை இங்ஙனம் எளிதில் வெறுமையாக்கிவிட முடியும். ஆனால் உன்னை உன் பெற்றோரிடம் அனுப்புவதன் மூலம் என் துயர் தீராவிடினும் இன்னொருவர் துய ரையாவது குறைத்தவனாவேன்,” என்றான்.
அரசன் நல்லெண்ணங் கண்டு, கனிவும் நன் றியும் உடையனாய்த் தமிழ் வீரன் அவனை வணங்கி, “தங்கள் தந்தை யுள்ளத்திற்கு இறைவன் நிறை வளிப்பானாக! என் தாய் தந்தையரை இழந்த பின் பும் தந்தையைத் தந்த தந்தையாகிய உம்மை மற வேன்” என்று கூறித் தன் நாட்டுக்கு விடை கொண்டு சென்றான்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.