கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 6, 2025
பார்வையிட்டோர்: 43 
 
 

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பங்குனிமாதத்துப் பூர்ணிமையிரவு. சந்திரனுடைய படுக்கையறையில், ஜன்னல் வழியாகப் பாய்ந்து வந்த நிலவு அவனுடைய படுக்கையில் வியாபித்திருந்தது. 

படுக்கையில் படுத்திருந்த சந்திரனின் பார்வை, நீலவானில் ஊர்ந்து செல்லும் முழுமதியில் லயித்திருக்க, மனதிலே நினைவு களின் மோதுதல்கள்! 

சாந்தி நிகேதனத்தில் மாணவனாகக் கல்வி கற்றபோதும், காந்தி கிராமத்தில் ‘சேவக்’ காகப் பொதுநலத் தொண்டனாகப் பணியாற்றியபோதும் தனது எளிய வாழ்க்கையில் நிலவியிருந்த நிம்மதியும், நிறைவும் உற்சாகமும்… இப்போதுள்ள செல்வச் செழிப்பில், போக பாக்கியங்களில் காணமுடியாததோடு… 

படக், 

அறையில் வெளிச்சம் பரவியது ! 

தலைநிறைய மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு நெற்றியில் சாந்துப்பொட்டும், கொள்ளைச்சிரிப்புமாக உள்ளே வந்த சியாமளா கையிலிருந்த பால் செம்பை மேஜைமீது வைத்து விட்டு, “நிலாவைப் பார்த்தீர்களா, பட்டப்பகல் மாதிரி!” என்றாள் உவகையுடன். 

பார்வையைத் திருப்பாமலே, விளக்கை அணைத்துவிடு சியாமளா, நிலா வெளிச்சமே போதும், என்றான் சந்திரன். “பாலைச்சாப்பிட்டு, வெற்றிலை போட்டுக்கொள்ளுங்கள். பிறகு அணைக்கிறேன்.” என்று சொல்லி, பாலை டம்ளரில் விட்டுக் கொடுத்துவிட்டு, வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவி, நரம்பைக் கிழித்து வைத்துக்கொண்டு பாக்கு பொடியைக் கொடுத்து, வெற்றிலையை மடித்துக் கொடுத்துக் கொண்டே, ‘இந்தமாதிரி நிலாவிலே திருஷ்டியைச் செலுத்தி, நிலாவிலேயே படுத்துத் தூங்கினால் நிச்சயமாகப் பைத்தியம் பிடித்துவிடுமாம் ! எங்கள் தாத்தா சொல்லுவார்…” என்றாள் சியாமளா; 

சந்திரன் சாவகாசமாகத் திரும்பிப் பார்த்து, ”நிலவின் ஒளியிலே வாழ்க்கை முழுவதையும் செலவுசெய்து நிலவின் சௌந்தரிய விலாசங்களை வர்ணித்த வால்மீகி, காளிதாஸன், ரவீந்திரர் போன்ற ஞானிகளுக்குப் பிடித்த பைத்தியம் எனக்கும் பிடிக்காதா என்ற ஆசைதான்!” 

“போங்கள், கோணல்கட்சி பேசுவதே உங்கள் வழக்கமா கப் போய்விட்டது ! நான் பொய் சொல்லுகிறேன் என்றா நினைக்கிறீர்கள்? ” 

“நீ விளக்கை அணை முதலில். பிறகு பேசலாம்-இன்றிரவு ஒரு நல்லகதை சொல்லப்போகிறேன் உனக்கு,” என்றான் சந்திரன். 

விளக்கை அணைத்துவிட்டு வந்து அமர்ந்தாள். சந்திரன் தன்னை மறந்தான். 

“நிலாவையும், வானத்து மீனையும் 
காற்றையும் நேர்பட வைத்தாங்கே 
குலாவு மமுதக்குழம்பைக் குடித்தொரு 
கோலவெறி படைத்தோம். 
இந்த உலாவுமனச் சிறுபுள்ளினை எங்கணும் 
ஓட்டி மகிழ்ந்திடுவோம் 
பலாவின் கனிச்சுளை வண்டியிலோர் வண்டு 
பாடுவதும் வியப்போ!” 

நல்ல ராகஞானம் உண்டு சந்திரனுக்கு! பாடிமுடித்து விட்டுத் திரும்பிப் பார்த்தான். “சியாமளாம்பிகைக்கு ரொம்பக் கோபம் போலிருக்கிறதே !” என்றான் விளையாட்டாக. “ஆமாம்! என்னைவிட உங்களுக்கு அந்த நிலாத்தேவன்தான் உயர்த்தி,”

“நீதான் எனக்கு உயர்த்தி சியாமளா! நிலவுத்தேவனல்ல!” என்றான் மனமும், குரலும் நெகிழ. 

“ஆமாம், ரொம்ப நிஜம்!:”

“நிரூபித்துக் காட்டினால் சரிதானே?” 

“பேசவாவது கற்றுக்கொண்டிருக்கிறீர்களே-என்னை ஏமாற்ற என்று!” 

“குடலைக்கிழித்துக் காண்பித்தாலும் இது வாழைநார் • என்கிறவர்களை வைத்துக்கொண்டு எப்படி காலட்சேபம் செய்வது?” 

“நான் அவ்வளவு பொல்லாதவள்; அப்படித்தானே?” 

“சே! நல்ல மனதும், வாக்கும் இருப்பதால்தான் எனக்கு உள்ளபடியே இதுவரையில் பைத்தியம் பிடிக்காமலிருக்கிறது ! இது கிடக்கிறது, கதை சொல்லுகிறேன்…” 

“சொல்லுங்கள், சொல்லுங்கள்…!” 

“நிஜக்கதை வேணுமா, பொய்க்கதை வேணுமா?” 

“பொய்க்கதை ஒன்றும்வேண்டாம். நிஜக்கதையே சொல்லுங்கள்.” 

 ”என் சிநேகிதன் ஒருவன் கணேசன் என்று…”
 
“என்னவோ கதை என்றீர்கள்?” 

“அவன் கதைதான் உனக்கு இப்போது சொல்லப்போகிறேன்….” 

“ஐயோ பாவம், கதையாகிப்போய்விட்டதா உங்கள் நண்பர் வாழ்க்கை”. 

“ஆமாம்: சமுதாயம் தன் சட்டப்படி அவன் நடக்கவில்லை யென்று அவனைத் தண்டித்து விட்டது !” 

“அப்படியென்றால்?” 

“கேட்டுக்கொண்டே வாயேன், புரிந்து விடுகிறது!” கணேசனுடைய பாட்டனார் ஒரு புரோகிதர், 

“உங்கள் பாட்டனார் மாதிரி!” 

சாஸ்திரிக்கு ஒரே பேரன், செல்லமாக வளர்த்தார், படிக்கவைத்தார்… பையனுக்கு அரசியல் பித்துப் பிடித்துவிட்டது, காந்தி இயக்கத்தில் பற்றுக்கொண்டு, அதில் சேர்ந்து தொண்டனாகி விட்டான்… 

“கதையா இது? ” 

“ஏன், சுவாரசியப்பட வில்லையோ?” 

சியாமளா அவன் முகத்தைப் பார்த்தாள் ! அதைக் கவனியா மலே அவன் மேலே சொல்லிக்கொண்டு போனான்! 

“வந்து,-சேவக் காக-பல இடங்களுக்குப் போனான்…ஒரு இடத்தில் நோய்வாய்ப்பட்டதால் இரண்டு மாதம் தங்க நேர்ந்தது. கன்னிகா தானபலன் வேண்டுமென்று-ஒரு பணக்கார ஸனாதன தர்மசீலர் தன் பெண்ணுக்கு பாலியத்திலேயே விவாகம் செய்தாராம்- அதுவும் எதற்காக?” கன்னிகா தானம் சாஸ்திர விதிப்படி செய்தால் புத்திரபாக்கியம் உண்டாகு மென்று ஜோசியன் சொன்னதைவைத்து, அந்த ஆசையில் பண்ணிவிட்டார் ! 

புத்திரன் பிறக்காத தோடு-பதின்மூன்றுவயதிலேயே பெண் விதந்துவாகி நின்றாள்! மனசாட்சிக்குப்பதில் சொல்ல வழி தெரியாமல் அநியாயமாக அவர் பிராணனை விட்டார்! 

வீட்டிலே பொழுது போகவில்லை-உள்ளூர் காந்தி கிராமத் தில் சேர்ந்து பொதுப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள் அவர் பெண். 

சியாமளா-! நான் நோயுடன் போராடும் போது அந்தப் பெண்-எனக்குச் செய்த தொண்டும், பரிவும் என்னை-கட்டைப் பிரம்மசாரியாக வாழ நினைத்து உறுதி பூண்ட என் திட சித்தத்தைக் குலைத்து விட்டாள் ! 

தன்னுடைய நிர்க்கதி-சூனிய மான வாழ்க்கை சோகத் திலே நலிந்து கிடக்கும் தாய்க்குப்பின் நமக்குத் துணை யார் என்ற திகில், எல்லாவற்றுக்குமாக – அந்தப் பெண் மனத்துள் அழுது அலறுவதை உணர்ந்தேன் ! 

சியாமளா, உணர்ந்த பிறகு என்னால் ஒதுங்கிக் கொள்ள இயலவில்லை. ஒரு அபலைப் பெண்ணுக்கு வாழ்வளிக்க உறுதி பூண்டேன். 

“சியாமளா! அன்றும் இதே நிலா இரவுதான்! நான் நோய் தெளிந்து ஓய்வுக்காகத் தங்கியிருந்தேன் அந்த ஆசிரமத்தில்” 

“ஆசிரமத் தாழ்வாரத்தில் அமர்ந்து கண்ணீர் பொழிய மன மிழந்து தடுமாறினாள் அந்தப்பேதை !” 

“ஏன் ? தன் வரலாற்றைக் கேட்டு அறிந்து-ஒரு அபலைக்கு வாழ்வு கொடுக்க முன் வந்து தன்னை ஏற்றுக் கொள்வதாக உறுதி கூறும் ஆண்மகனை நம்பவும் விரும்பினாள்—ஆனாள் பயந் தாள் ! ஐயோ விதியே என்று அழுதாள் !” 

“என்னை மறந்து நான் எழுந்து ஓடினேன் ! அவளை ஏற்றுக் கொண்டேன் ! பிறகு-ஒரு மாதம் சென்ற பிறகு தான்- வயதான பெற்றோர்களைப்பற்றி நினைவு வந்தது !…” 

“இருங்கள்.-மீதியை நான் சொல்லிக் கதையை முடிக் கிறேன்! காந்தி மகானின் கொள்கைகளில் பற்றுள்ளதால் சீர்திருத்த மணம் செய்து கொண்டீர்கள். ஒரே பிள்ளையான தங்கள் பெற்றோர்கள் இதை ஆட்சேபிக்கிறார்கள்!” 

“ஆட்சேபிப்பதோடு இல்லை சியாமளா-” 

“நான் எதிர்பார்த்தது தான்! இரண்டு நாளாக எப்படிப் பட்ட எதிரியுடன் போராடி வெற்றி பெற்றிருக்கிறேன் தெரியுமா?” 

“எப்படி-கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன்!” 

“பெண்மையின் தன்மைப்படி!-நானும் மகாத்மாவின் அடிச்சுவடுபற்றி வருபவள் தானே? பிறர் மனம் நோக நான் சகிக்க மாட்டேன்…!” 

“நான் உன்னை இழக்க மாட்டேன் சியாமளா…” 

“காலம் வந்தால்-எல்லாம் ஏற்க வேண்டியதே… இருங்கள் என்ன சத்தம் கீழே…” 


உங்கள் நியாயம் உங்களோடு இருக்கட்டும். 

“அவன் வீட்டை விட்டுப் போகக் கூடாது!”

“அவனை நான் போகச் சொல்ல வில்லையே!” 

“அவன் வேண்டுமானால் அவளும் வேண்டும். என் குழந்தையை நான் இழக்க மாட்டேன்…” 

“யார் இழக்கச் சொன்னார்கள்? போயேன்  நீயும் அவனோடு!” 

“ஏன் போகணும்? சொத்துக்கு வாரிசுதான் அவன், பிதுர் ஆர்ஜிதம் என்பது ஞாபக மிருக்கட்டும். “

“அப்போ, நான் வெளியே போக வேண்டியது தான்!” 

“நீங்களும் போகக் கூடாது! என்ன வந்து விட்டது இப் போது ? அந்த நாட்களில் நீங்களும் தான்- காந்தியின் அஹிம்சை, சத்தியம்,  பரோபகாரம்,அஞ்சாமை, ஆகிய வற்றைப் பிரமாதமாகப் புகழ்ந்து கொண்டாடியவர் தானே?” 

அவன் முழுக்க முழுக்கக் காந்திக் கொள்கைகளைக் கடைப் பிடிப்பவன்- நல்லபெண்ணாக இருக்கவேதான் ஏதோ செய்து கொண்டான்! சந்தோஷமாக இருக்கட்டுமென்று விட்டுவிட வேண்டியதுதான்! காலத்தையும் அனுசரித்துத் தானே போக வேண்டும்? 

இருக்கிற ஒரு பிள்ளையை விட்டு விட்டு, நாம் எங்கே போனால் நமக்கு இருப்புக் கொள்ளும்—அவனுக்கும் தான் என்னமாக இருக்கும்? பார்த்தாயா என்று மனசு உடைந்து போகாதோ? 

எல்லாம் அவன் செயல்! என்று நிச்சிந்தையாக இருங்கள் -சமைத்துப் போடுகிறேன்-சாப்பிடுங்கள். ராம நாமாவை ஜபித்துக் கொண்டு இருந்தால் தன்னால் காலம் வரும் போது போய் விடப்போகிறோம்! 

என்ன வீராப்பும், வைஷம்மியமும் வேண்டியிருக்கிறது?… என்றாள் வேதாம்பாள் உரக்க! 

“அம்மா! மலைபோன்ற பிரச்னையை மிக சுலபமாகத் தீர்த்து விட்டாயே தாயே ! என்ன விருந்தாலும் தாய், தாய் தான்! நேற்று நான் வந்ததும் என் மனைவியைப் பார்த்து என்ன எது என்று விசாரித்த போது உண்மையை உரைப்பதே சரி! அதனால் என்ன நேர்ந்தாலும் சரிதான் என்று உன்னிடம் ஒளிக்காமல் சொன்னேன்! 

“கடைசியில் உண்மைதான் வெற்றி பெற்றிருக்கிறதே!” என்றான் சந்திரன் வாய்விட்டு! 

“வெற்றி தேடித்தந்ததோடு எதிர்பாராத ஆனந்தத்தையு மல்லவா தேடித் தந்திருக்கிறது” என்றாள் சியாமளா மெய் சிலிர்க்க! 

“ஆமாம்! இவ்வளவு சீக்கிரத்தில், இம்மாதிரி சுமுகமான முறையில் பிரச்னை தீர்ந்து விடும் என்று நான் எதிர்பார்க்க வில்லை?” 

அப்பா செய்த அமர்க்களத்தில், நான், உன்னைத் துறப் பதா—அவர்களைத் துறப்பதா என்ற நிலைமைக்கு வந்து- நான் பட்ட வேதனை…கலங்கிய கலக்கம்… 

என்கண் கண்ட தெய்வமாகி விட்ட அம்மா கச்சிதமாக நீதி வழங்கி விட்டாள் ! நம்முடன் கொண்டு வந்துள்ள மகாத் மாவின் படத்திற்கு நாளைக்கே கண்ணாடி போட்டுக் கொண்டு வந்து கூடத்தில் மாட்ட வேண்டும்!. 

“ஆமாம்! எனக்கு வாழ வழி வகுத்த மகான்…” 

“மடைச் சீ ! நமக்கு என்று சொல்!” என்று இடை மறித்துத் திருத்தினான் சந்திரன்!

– காந்தி வழிக் கதைகள் (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் புனைந்த காந்தி வழி காட்டும் ஐம்பது சிறு கதைகளின் தொகுப்பு), தொகுப்பாசிரியர்: கே.ஆர்.கல்யாணராமன் “மகரம்”, முதற் பதிப்பு: மார்ச் 1969, தமிழ் நாடு காந்தி நினைவு நிதி, மதுரை-13.

கு.ப.சேது அம்மாள் கு.ப.சேது அம்மாள் (1908 - நவம்பர் 5, 2002) ஒரு தமிழ் எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் தங்கை. வாழ்க்கைக் குறிப்புசேது அம்மாளின் முதல் சிறுகதை “செவ்வாய் தோஷம்” 1939 இல் காந்தி இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகத் தொடங்கின. 1940களில் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் குழுவிலும் சேது அம்மாள் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு இவரது நூல்களை தமிழக அரசு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *