நம்பிக்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 4, 2025
பார்வையிட்டோர்: 62 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரொம்ப நாட்களாக ஒரே இடத்தில் கிடந்த பெரிய கல் ஒன்றை அசைத்து நகர்த்தினான் ஒரு மனிதன். 

அவன் ஆச்சரிய மடைந்தான். 

மண்ணோடு அழுந்தப் பதிந்து கிடந்த கல்லின் அடியிலே, அங்கு வதிந்த இருளிலே, வெட்பமும் தட்பமும் நிறைந்து நின்ற  இடத்திலே கூடச் சில பூச்சிகள் பிறந்து வாழ்ந்தன. திடீரெனப் பிரவகித்த வெளிச்சத்தைக் கண்டு அவை திணறின. பழக்கமான சூழ்நிலை அகற்றப்பட்டு விட்டதால் அவைகளுக்கு ஒரே குழப்பம். அப்படியும் இப்படியும் அலைந்து சுழன்றன. 

அவன் கவனத்தைக் கவர்ந்த மற்றொரு பொருளும் அங்கிருந்தது. 

ஒரு புல், மஞ்சள் என்றோ வெள்ளை யென்றோ சொல்ல முடியாமல் ஒருவிதமாக வெளிறிப் போய்த் தரையோடு தரையாகப் பதிந்து கிடந்தது புல்லின் கீற்று. புதிதாகத் தான் முளைத்திருக்க வேண்டும். 

போஷாக்கும் சீராட்டும் தாலாட்டும் அதிக மிருந் தும்கூட நன்கு வளராமல் வெளுத்துப் போயிருக்கும் பணக்கார வீட்டுச் சோனிக் குழந்தையை அந்தப் புல் அவனது நினைவுக்கு இழுத்து வந்தது. 

அந்த மனிதன் தனது அலுவல்களைக் கவனிக்கப் போய்விட்டான். 

மூன்று நான்கு தினங்களுக்குப் பிறகு அவன் அந்த இடத்திற்கு வந்து கவனித்த போது, மீண்டும் ஆச்சரியமடைந்தான். 

அந்தப் புல் அங்கேயே நின்றது. ஆனால் ஒடுங்கிக் கிடக்கவில்லை. ளுகுளுவென நிமிர்ந்து  நின்றது. அதன் வெளிறல் மறைந்து பசுமை பற்றி யிருந்தது. சூரிய வெளிச்சமும் ஆகாயமும் செய்த மாயாஜாலம் அது என்று எண்ணினான் அவன். 

அந்த அற்புதம் தினந்தினமும் நவநவமாய்த் திகழ்ந்து கொண்டிருந்தது. உருவி ஓங்கிய வாள் முனைகள் போல் கூரான புல்லிதழ்கள் கிளைத்தன. வளர்ந்தன. நீண்டு பரந்து வியாபித்தன. 

உயிர் வளர்ச்சியைக் கவனித்தான் அவன். அதிசயித்தான். 

ஒருநாள் அவ் வழியே அசைந்த கன்றுக்குட்டி ஒன்று அந்தப் புல்லைக் கண்டது. பல்லால் நறுக்கென்று கடித்து, உற்சாகத்தோடு தலையை ஆட்டி ஆட்டித்தின்றது. போயிற்று. கடல் மணலிலே குழந்தைகள் ஆசையோடு கட்டுகிற சிற்றிலைச் சிதைத்து விட்டுச் சிரித்துப் புரண்டு ஓடுகிற அலையைப் போல; வாழ்க்கை வெளியிலே மனிதர்கள் கட்டுகிற ஆசைக் கோட்டைகள் அழகாக உருவாகி வருகையிலே அவற்றைச் சிதைத்து விட்டுத் தன் வழியே செல்லும் காலத்தைப் போல! 

சில நாட்களுக்குப் பிறகு அந்த மனிதன் அதே இடத்தைக் கவனித்த போது மறுபடியும் அதிசயிக்க நேர்ந்தது. 

கடிபட்ட புல் கருகிப் பட்டு மண்ணாகி விடவில்லை. புதிய புதிய குருத்துக்கள் தலைதூக்கி நின்றன; கலியுள்ளத்தின் அழகிய கருத்துக்கள் போல. குழந்தையின் பிஞ்சு விரல்களின் மென்மையும் ஜீவத் துடிப்பும் அவற்றிலே இருப்பதை உணர்ந்தான் அவன். தடவித் தடவி அவ் வின்பத்தை ரசித்த அவன் கை விரல்கள் புல்லிதழ்களை ஒவ்வொன்றாகக் கிள்ளி எறிந்தன. விரல்களின் விளையாட்டு அது. வேண்டுமென்று செய்ததல்ல. 

அதற்காக வருந்தினான் அவன். 

திட்டமிட்டுச் செயலாற்றிய முயற்சிகள் சந்தர்ப்பச் சதிகளினாலே சிதைந்து சீரழிந்து கிடப்பதுபோல் அலங்கோலமாகக் கிடந்த பசிய புல் இதழ்களைக் கண்டு அவன் வருந்தினான். போனான். 

பிறகு ஒரு நாள் வந்த போதும், அவன் அதிசயிக்க நேர்ந்தது. 

யாரோ சிறுவர்கள் சில செங்கல்களை வரிசையாக வைத்தும், மேலே மேலே அடுக்கியும், விளையாடிக் களைத்துப்போய் அப்படி அப்படியே போட்டுச் சென்றிருந்தார்கள். அந்தப் புல்லின் மேலும் சில செங்கற்கள் கிடந்தன. ஆயினும் இரண்டு செங்கற்களுக்கு நடுவேயுள்ள இடைவெளி வழியாக புல் இதழ் நீட்டி வளர முயன்றது. அதன் நெடிய இதழ், கிடைக்கிற சிறு வழியினூடும் புகுந்து பாய்கிற ஒளிக் கதிர் மாதிரி, கூர்மையாய் வளர்ந்திருந்தது. 

அவன் அதிசயித்தான். சிருஷ்டி யினங்களிலே உயிரின் உள்ளுறையாய்க் கலந்திருக்கும் உயிராசை வாழ்வின் பற்றுதல் – அவனுக்கு வியப்பளித்தது. தடை கள் பல நேரினும் சோர்வுறாது திரும்பத் திரும்ப தலை தூக்க முயலும் புல்லின் உயிர்ப்பற்று வாழ்வதில் கொண்ட நம்பிக்கை மனிதனுக்கும் இருந்தால்? ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்தால்? 

அவன் எண்ணினான். 

பெருமூச் செறிந்தான். 

– வல்லிக்கண்ணன் கதைகள், முதல் பதிப்பு: ஜூன் 1954, கயிலைப் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *