வர்ம தேசத்து இளவரசி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: September 9, 2025
பார்வையிட்டோர்: 183 
 
 

இதுவரை பல நாடுகளில் நடந்த சுயம்வரங்களுக்குச்சென்றும், அந்த நாடுகளின் இளவரசிகள் தன்னைத்தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அமையாமல் போனது துரதிஷ்டமென நினைத்த பலவ தேசத்து இளவரசன் மலவன், இன்று வர்மதேசத்தில் நடக்கவிருக்கும் சுயம்வரத்துக்கு தனக்கு அழைப்பு வந்த போது இது வரை மணம் புரியாமல் இருப்பது அதிர்ஷ்டம் என நினைத்தான்.

ஏனென்றால் வர்ம தேசம் உலகிலேயே அழகுப்பெண்களின் பிறப்பிடம் என்பதை அனைவரும் தெரிந்திருந்ததாலும், அத்தனை குறுநில மன்னர்களின் பட்டத்து வாரிசுகளும், பெரும் வணிகர்களின் வாரிசுகளும், இனக்குழு தலைவர்களின் வாரிசுகளும் கலந்து கொள்ள வந்ததாலும் அரண்மனையே நிரம்பி வழிந்தது.

வெடித்து மலர்ந்த பருத்தி போல, வடித்து வைத்த சிலைபோல, மடித்துக்கட்டிய பட்டு போல, படித்து முடித்த கதை போல, முடித்து பின்னிய கூந்தல் போல, அடித்துத்துவைத்த துணி போல, நடித்து முடித்த நாடகம் போல, தடித்து வளர்ந்த மூங்கில் போல அரண்மனை வளாகத்தில் பார்த்த மாத்திரத்தில் மனதுக்கு பிடித்துப்போன பெண் தன்னை, தனது மெல்லிய, உடைந்து விடும் போலிருந்த சிற்றிடையால் இடித்துச்சென்றதும் ஒரு விநாழிகை பேச்சிழந்து, மூச்சிழந்து நின்றான்.

‘இளவரசியென்றால் வைர, வைடூரியங்களை அணிந்து தங்கத்தினாலான உடையில் வந்திருப்பாள். இவள் அரண்மனைப்பணிப்பெண்ணாக இருக்கலாம். இளவரசியின் தோழியாக இருக்கலாம்’ என நினைத்தான். 

‘சுயம் வர ஏற்பாடுகளைப்பார்த்தும், இளவரசர்களின் அழகினை ரசித்தும் இளவரசியிடம் ‘யாரைத்தேர்ந்தெடுக்கலாம்?’ எனும் யோசனையை சொல்ல வந்திருக்கலாம்’ என்பதாகப்புரிந்து கொண்டான்.

உடன் நான்கு பணிப்பெண்களைப்போன்றவர்களும் வந்தனர். அவர்களும் பேரழகிகளாகவே இருந்தனர். ‘இளவரசி கிடைக்காவிட்டாலும் இப்பணிப்பெண்களில் ஒருத்தியை மணம் முடித்திட வேண்டும்’ எனும் மன ஓட்டத்தில் சற்று பதற்றமாகவும் இருந்தான் மலவன்.

‘வேண்டும் என்று இடித்தாளோ….?தெரியாமல் இடித்தாளோ…? மனம் ஆனந்தக்கூத்தாடியது. கூட்டத்தில் பேர் தெரிந்து, யார் என்று அறிவதற்குள் கார் மேகம் போல வேகமாகக்கடந்து சென்று விட்ட பருவப்பெண்ணின் உருவம் மட்டும் அவன் மனதில் ஓவியமாய் வியாபித்திருந்தது. 

தூரிகையை எடுத்து ஒரு நாழிகையில் ஓவியமாக வரைந்தவன், அதையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். ஓவியமே உயிரைக்குடித்தது. ‘காவியத்தலைவி இவள்….’ என சிந்தித்தபோது சினம் தன்னுள் சீர் குலைந்தது கண்டு திகைத்து நின்றான். வீரன் கோழையானான். காதல் பிச்சையெடுக்கும் ஏழையானான்.

‘அழகிய பெண்களை அடைய இரண்டு தேசங்களின் மன்னர்களுக்கிடையே போர் நடந்தது’ எனும் உண்மையை வரலாற்று ஓலையில் படித்தபோது புரியாதது இப்போது புரிந்தது. 

‘இந்தப்பெண்ணை அடைய போர் எதற்கு? நம் நாட்டையே அவளது தந்தைக்கு பரிசாக கொடுத்து விட்டு சாதாரண பிரஜையைப்போல் வாழ்ந்து விடலாமே…?’

தனக்குத்தானே மனநிலை பாதிக்கப்பட்டவனைப்போல பிதற்றினான்.

‘சாதாரண தோழியோ, பணிப்பெண்ணோ இத்தனை கொள்ளை அழகுடன் இருக்கும் போது, நம்மை மனதால் நிலை குலையச்செய்த போது இளவரசி எப்படி இருப்பாள்? அவளை நேருக்கு நேராக பார்க்கும் சக்தி நமக்கு இருக்கிறதா? அழகில் தங்கமாக ஜொலிப்பாளா? வைரமாக பிரகாசிப்பாளா? வைடூரியம் போல் மின்னுவாளா? தேவலோகப்பெண் என்கிறார்களே…. ஒரு வேளை அப்படி இருப்பாளா?’ என வியந்தவன் பயந்தான்.

தன்னை விட அழகும், வீரமும் மிக்க பல வாலிபர்கள் தம்மைச்சுற்றிலும் இளவரசியின் தேர்வுக்காக அமர்ந்திருப்பதை ஒரு முறை பார்த்ததால் தான் பயமே வந்தது. மீண்டும் திகைத்தது அவனது மனம்.

திகைப்பு என்பது ஆச்சர்யத்தின் உச்சம். அது புத்தி சுவாதீனமற்ற நிலையல்ல. புத்திசாலித்தனத்தின், உண்மையை பூரணமாக அறிந்ததின் வெளிப்பாடு.

இன்னும் பல ஆச்சர்யங்களை சுயம்வரம் முடிவதற்குள் இந்த வர்ம தேசத்தில் காணத்தான் போகிறான். 

‘மண் வளத்தை விட பெண் வளம் மிக்கது வர்ம தேசம்’ என்பதை பலரும் கூற அறிந்தவன் தான் மலவன்.

திடீரென கூட்டம் சலசலத்தது. ‘இளவரசி கார்முகியைக்காணவில்லை’ எனும் செய்திதான் அது. கேட்டதும் மலவனுக்கு தலை சுற்றியது. அவனது நம்பிக்கை வீண் போனதாகக்கருதினான். அருகிலிருந்தவர் கையை இறுகப்பற்றினான். அஃது ஒரு வீரனுடைய கையை ஒத்திருக்கவில்லை. 

சற்று குழப்பமடைந்ததால் விட்டு விட்டான்.

‘இளவரசி வேறு யாராவது அரண்மனைக்காவலன் ஒருவனை விரும்பி சுயம்வரத்தைப்பிடிக்காமல் காதலனுடன் குதிரையில் ஏறி வெகுதூரம் சென்றிருப்பாளோ…? அல்லது தந்தைக்கு பயந்து அந்த காதலனுடன் அகழியில் விழுந்து உயிரை மாய்த்திருப்பாளோ….? அவளது அழகிய தேகத்தை இன்னேரம் முதலைகள் சுவைத்துக்கொண்டிருக்குமோ…?’ பலவாறு கற்பனையோட்டம் மனதில் ஓடியது.

அரண்மனையைச்சுற்றிலும் வீரர்கள் குவிக்கப்பட்டனர். சுயம் வரத்துக்கு வந்திருந்தவர்களை ஒவ்வொருவராக அழைத்து துருவி, துருவி விசாரித்தனர். அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் கூடுதலாக இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

அனுமதியின்றி அரண்மணைக்குள் பிரவேசித்தால் மரணதண்டனை உறுதி. இச்சட்டம் தெரிந்திருந்தும் ஒருவர் கூடுதலாக நுழைந்திருப்பதை அறிந்து மன்னர் கடும் சினம் கொண்டார்.

அழகுப்பெண் இடித்துச்சென்ற அடுத்த சில நாழிகையில் தன்னருகே உள்ள இருக்கையில் நெருக்கமாக வந்து அமர்ந்தவரிடமிருந்து அபூர்வ நறுமணம் வீசியது ஆளையே மயக்கியது. இதுவரை நுகர்ந்திராத அரிய பொருட்களால் தயாரிக்கப்பட்ட வாசனைத்திரவியம் அது என்பதாகப்புரிந்து கொண்டான்.

அந்த நபர் தனதருகில் இருப்பது மனதுக்குப்பிடித்ததால் எதுவும் பேசாமல் இருந்தான் மலவன். சிலரைகாணவே வெறுப்பாக இருக்கும். சிலரைக்கண்டதும் தொட்டுப்பேசப்பிடிக்கும். இவரைத்தொட்டுப்பேசத்தோன்றியது.

மகாவிஷ்ணுவின் மோகினி அவதார நாடகத்தில் வருபவரைப்போலவே அதிகமாக ஒப்பனையும் செய்திருந்தார். பலவ இளவரசனையே விழுங்குவது போல பார்த்துக்கொண்டும் இருந்தார்.

‘அந்த நபர் தன்னருகில் அமர்ந்து தன்னையே நோட்டமிடுவது எதற்காக…? ஒரு வேளை நம் எதிரி நாட்டவரோ…? ச்சீ ச்சீ… இருக்காது. அவர் பக்கத்தில் இருப்பதால் நம் மனம் அமைதியாகிறது. பகைவனென்றால் நம் உடலும், மனமும் காட்டிக்கொடுத்து விடும்..‌.’ என யோசிப்பதற்குள் அறுபதாங்கோழியை புலி அமுக்குவது போல் அரண்மனை காவலர்கள் போர்வையால் அவனது முகத்தை மூடி மன்னரின் இருப்பிடத்திற்கு அழைத்துச்சென்ற போது தான் ‘அவன் குற்றவாளி’ என்பது தெரிந்தது.  

அந்த நபரை சிறையிலடைத்து விட்டதாகவும், இளவரசி கார்முகி தாமரை தடாகத்தில் தனிமையை ரசித்துக்கொண்டு இருந்ததாகவும் கூட்டத்தில் கூறி நிலமையை சீராக்கினார் மந்திரி மாரகன்.

இளவரசியை பணிப்பெண்கள் அலங்கரித்து அழைத்து வந்தனர். ஒவ்வொருவராகப்பார்த்து வந்தவள் மலவனைப்பார்த்ததும் நின்றாள். 

அவளது காந்தப்பார்வை அம்பாகத்தாக்கியதில் சற்று நிலைகுலைந்து போன மலவனுக்கு குளிர் காலத்திலும் வேர்த்தது. 

‘இடித்துச்சென்ற பெண்ணின் அதே விழிகள்…. பக்கத்தில் வந்தமர்ந்திருந்த நபரிடமிருந்து வந்த அதே நறுமணம்…. உணர்வுகளின் அதே நிலை… அப்படியென்றால் பணிப்பெண்ணைப்போல பவனி வந்து தன்னை வேண்டுமென்றே, தெரிந்தே பிடித்துப்போனதால் இடித்துச்சென்றதும், தன்னருகே ஆணின் வேடத்தில் வந்து தம்மை ஆராய்ந்ததும் சாட்சாத் இளவரசியே தான்’ புரிந்தபோது விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

அரண்மனைக்குள் முதலாகப்பிரவேசித்த போதே மாடத்தில் நின்று ரகசியமாக இளவரசி பார்த்து முடிவு செய்திருந்தாள். சுயம் வரத்தில் கண்டதும் காதல் யாருக்கும் வருவதில்லை. முன் கூட்டியே முடிவு செய்யப்படுகிறது. ஒற்றர்கள் மூலம் விசாரிக்கப்படுகிறது. அருகில் வந்து ஆராயப்படுகிறது என்பதை முதலாகப்புரிந்து கொண்டு மலவனும் இளவரசியை நோக்கி மறுபார்வை நேசமாகப்பரிமாறிய அடுத்த கணம் இளவரசி கையில் இருந்த சுயம்வர மாலை அவன் கழுத்தில் விழுந்ததைக் கண்டபோது மகிழ்ச்சிக்கடலில் மிதந்தான். 

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *