அவிழ்படாத முடிச்சு






எந்தவொரு அவிழ்படாத முடிச்சுகள் எல்லாம் எனக்கு பெரிய சிரமத்தை கொடுத்து வாட்டி வதைத்தது போல தான் இதுவும் என்று நான் நினைத்து வாழ்வின் பயணத்தை தொடர்கிறேன்..
எதுவுமே எளிதில் இங்கே கிடைப்பது அரிது என்று தெரிந்த போதும் ஏன் இந்த மனது இப்படி குழம்பி தவிக்கிறது என்று யோசித்துக்கொண்டே அலுவலகத்தில் இருந்து கிளம்பினேன்… மேலதிகாரியின் இன்றைய யாரோவொருவரின் மேல் இருந்த குமுறல்கள் எல்லாம் என் மீது வடிந்ததில் இன்றைய அவரது மனம் இலேசாகி என் மனதின் அடி ஆழம் வரை சென்று பாரத்தை அதன் பங்கிற்கு ஏற்றி சிம்மாசனமிட்டு உட்கார்ந்து என்னை பார்த்து சிரித்தது…
இருக்கட்டும் இருக்கட்டும்… அதற்கும் என் மீது அளவுக்கடந்த பிரியம் இருப்பதை இதை விட வேறு எப்படியும் உணர்த்தி விட முடியாது தானே…
இப்படியே யோசித்துக் கொண்டே எனது புல்லட்டில் அந்த சன நெருக்கடிக்களுக்கு இடையே பயணித்தேன்…சாலையோ என் ஆக்ரோஷமான பயணத்தின் வலியை தன் மீது இவன் இறக்குகிறானே என்ன செய்வது என்று மௌனமாக தன் வலியை பொறுத்துக் கொண்டது…
போவோர் வருவோர் எல்லாம் என் வேகத்தை பார்த்து கொஞ்சம் மிரண்டும் திட்டியும் சென்றார்கள் என்பதை நான் உள்ளுணர்வு சொல்லி உணர்ந்துக் கொண்டேன்…
எதுவாகவோ இருந்து விட்டு போகட்டும்.. எனக்கான ஆறுதல் இங்கே எதுவும் இல்லை என்று முடிவான பிறகு எதன் மீதும் அவ்வளவு பரிவு எனக்கு தோன்றி விடக் கூடாது என்று நினைத்து மனதை கல்லாக்கி கொண்டேன்…
ஏன் இந்த வாழ்க்கை என்று நினைத்த போதும் நான் அவ்வளவு எளிதாக வாழ்வை வெறுப்பவன் அல்ல என்பதும் என் மனதின் ஒரு மூலையில் ஒரு எண்ணம் ஒதுங்கி பயணித்ததை மட்டும் என்னால் உணர முடிந்தது..
இத்தனை புலம்பல்களும் ஏன் என்று இங்கே வாசிப்பவர்கள் கேட்கலாம்… அதற்கான காரணம் இந்த கடவுள் போட்ட முடிச்சு என்கின்ற பெயரில் எனக்கு வாய்த்த வாழ்க்கை துணை தான் காரணம்…
வாழ்வின் ரசத்தை அவளால் எப்படி உணர முடியாமல் பயணிக்க முடிகிறது என்று நான் அடிக்கடி கேட்ட கேள்வியின் துளையை கேட்க சகிக்காமல் என்னை விட்டு பிரிந்து சென்று நேற்றோடு ஒரு வாரம் ஆகிறது… போனால் போகட்டும் என்று நான் பாட்டுக்கு எனது பணிகளை பார்த்து கொண்டு இருந்தாலும் விடாமல் அலைபேசியில் தொந்தரவு செய்து அவள் கற்பனை செய்து வைத்திருக்கும் வாழ்வின் சுவைக்கு என்னை மாற்ற முயற்சி செய்து வருவதை தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… மேலும் வெறுப்பு அவள் மீது ஏற்படுத்தி விடுவதை அவள் ஏன் உணர மாட்டேன் என்கிறாள் என்று யோசித்து முடிக்கவும் எனது இல்லம் வரவும் சரியாக இருந்தது… நான் எனது புல்லட்டை நிறுத்தி விட்டு சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று மின் விளக்கிற்கு உயிர் கொடுத்தேன்.. திடீரென வந்த வெளிச்சத்தின் கூச்சத்தில் நெளிந்து வேகமாக சுவரின் மீது நகர்ந்து ஒண்டிக் கொண்டது அங்கே புணர்ந்து கிடந்த இரு பல்லிகள்..
இதை பார்த்து விட்டு கொஞ்சம் எனது கோபத்தை குறைத்து கொஞ்சம் நிதானத்திற்கு வந்து மின் விசிறியை சுழல விட்டு அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்து கண்களை மூடினேன்.. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேன் என்று தெரியவில்லை.. அழைப்பு மணியின் சத்தத்தில் எழுந்து கதவை திறந்தபோது என் வாழ்க்கை துணை அங்கே நின்று என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தாள்… நானும் எதுவும் பேசவில்லை…
அவள் உள்ளே நுழைந்ததும் என்னிடம் இரவு உணவு என்ன செய்யலாம் என்று எதுவும் நடக்காதது போல கேட்டாள்… நானும் குளிர் சாதன பெட்டியில் உள்ள நானே அரைத்து வைத்திருந்த இட்லி மாவை அவளிடம் எடுத்து வந்து கொடுத்து இட்லி ஊற்றி பூண்டு சட்னி செய்து விடலாமா என்றேன்.. அவளும் அதையே தான் யோசித்து இருந்தாள் போலும்.. ஒரு புன்முறுவலோடு சிரித்து அந்த மாவை இட்லியாக்க ஆயத்தமானாள்… நானும் தொலைக்காட்சியில் அன்றைய செய்திகளை பார்க்க தயாரானேன்…
வாங்க கிருஷ்ணா சாப்பிடலாம் என்று அவள் இயல்பாக அழைத்ததில் தான் எத்தனை ஆயிரம் ஆயிரம் வாஞ்சைகள் என்று உணர்ந்துக் கொண்டு நான் சாப்பிட ஆயத்தமானேன்… நாங்கள் இருவரும் சேர்ந்து சாப்பிடுவதை அங்கே சுவரில் ஒண்டி இருந்த அந்த பல்லிகள் இரண்டும் பார்த்து கொஞ்சம் நிம்மதி அடைந்ததில் ஒரு காரணம் இருந்தது…இனி இவன் அலுவலகத்தில் இருந்து கதவை வேகமாக திறக்க மாட்டானே என்ற நிம்மதியாகவும் அது இருக்கலாம்..எது எப்படியோ கடவுளின் முடிச்சு எப்போதும் அவிழ்படாமலேயே என்னோடு பயணிக்கும் போது தான் நான் அதன் தாத்பரியத்தை உணர முடிகிறது என்று நினைத்து நிம்மதியாக உறங்க செல்வதற்கு முன் அந்த இறைவனுக்கு நன்றி சொன்னேன்…