கம்பளிப் பூச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 7, 2025
பார்வையிட்டோர்: 2,744 
 
 

அந்த ஜன்னலை திறக்கக் கூடாது என்பது அம்மாவின் எழுதப்படாத சட்டம். இதே வீட்டில்தான் நான் பிறந்து வளர்ந்திருக்கிறேன். வீட்டின் வரைபடமும், தெருக்களும் நன்றாக தெரியும். ஏனோ தெரியவில்லை நான் பருவமடைந்த பின் எங்கள் சமையலறையின் இடது புறம் இருக்கும் ஜன்னலை திறக்க வேண்டாம் என அம்மா கட்டளையிட்டிருந்தாள். அந்த ஜன்னலுக்கு வெளியே முருங்கை மரமும் பின் சுற்றுச் சுவரும், சுவற்றை தாண்டி முட்டுச் சந்தும் உள்ளது. அந்த முட்டுச் சந்தில் எங்கள் தாத்தாவின் கைவிடப்பட்ட பழைய அம்பாசிடர் காரும் அதை பின்னியிருக்கும் காட்டுச் செடிகளும் உள்ளது அவ்வளவே. ஏதேன்ஸ் தோட்டத்தின் குறிப்பிட்ட மரத்தின் கனிகளை மட்டும் உண்ணக் கூடாது என கட்டளை பிறப்பித்த பின் அதன் மீதான மர்மமும் சந்தேகங்களும், கற்பனைகளும் விரிந்து அதை தெரிந்து கொள்ளும் ஆவல் முதல் மனுஷிக்கு ஏற்பட்டது போல்தான் எனக்கும் ஆவல் ஜன்னலின் மீது குவிந்திருந்தது. அம்மா இல்லாத ஒரு மாலை வேளையில் மிகவும் கஷ்டப்பட்டு ஜன்னலை திறந்தேன். தூசி நாசியை துளைத்ததால் பலமாக தும்மிவிட்டேன். முட்டுச் சந்தில் பழைய எங்கள் காருக்கு அருகில் இரு இளம் காதலர்கள் மிக அருகருகே நெருக்கமாக நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை பார்த்துவிட நானும் அவர்களை பார்த்துவிட சில கணங்களுக்குள் வெட்கப்பட்டு ஜன்னலை சாத்திவிட்டேன். எதுவும் தெரியாதவள் போல் எனது படுக்கையறையில் போய் படுத்துக் கொண்டேன். குறைந்த வயதே உள்ள அந்த இளம் காதலர்களின் நெருக்கம் என் மனதை நெருடியது. நீயும் ஏன் காதலிக்க கூடாது என கேட்டது என் உள்மனது. என்மூளை என் உணர்வுகளுடன் கை கோர்த்துக் கொண்டு எனக்கான தேடலை முடுக்கியது.

அம்மாவும் அப்பாவும் அரசு அதிகாரிகள். நல்ல சம்பளத்தில் உள்ளவர்கள். மிகவும் கண்டிப்பானவர்கள். அதனால் மிகவும் பயந்தே செயல்பட்டேன். எனக்கு ‘அன்னா ‘ என்று பெயர் வைத்தவள் அம்மாதானாம்.ஏன் என்று எனக்கு புரியவில்லை. ஆனால், அந்த அன்னாகரினீனாவைவிட இரண்டு மடங்கு அழகுதான் நீ என்பாள். வீட்டில் இருக்கும் போது நல்ல உடை உடுத்த விடமாட்டாள் அம்மா. குடும்பத்துடன் எல்லோரும் வெளியே செல்லும் போதுதான் நல்ல உடையில் இருப்பேன் நான். என்னை பார்த்து முதலில் பொறாமை படும் நபராக அம்மாதான் இருப்பாள். என் புத்தக மயில் இறகு குட்டி போடுவதில்லை ஏன் என என் தோழி கேட்பாள். என் அம்மாதான் அதற்கும் கட்டுப்பாடு விதித்திருப்பாள் என சொல்லி இருவரும் சிரித்துக் கொள்வோம்.

வெளி நாடுகளிலெல்லாம் காதலிக்காத பிள்ளைகளை மன நோயாளியாகத்தான் பெற்றோர்கள் பார்ப்பதாக அறிந்திருக்கிறேன்.’கற்புள்ள பெண் சாதிப்பதில்லை’-இது பிரபல பூப்பந்தாட்ட வீராங்கனை சொன்னதாக ஞாபகம். கூத்துவானுக்கு ஆயிரமாயிரம் மனைவிகள். அந்த அரங்கனையே நினைத்து மனமுருகி வந்தாள் ஆண்டாள். ‘கிரிதர கோபாலா’ என தேகம் தேய பாடினாள் மீரா.பூமியில் நான் பிறந்தவுடன் எனக்கான காதலனும் பிறந்திருப்பான். என் துரதிஷ்டம் அவனை அடைய முடியவில்லை. ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பான வாழ்க்கைதான் முக்கியம் காதல் அல்ல. இது அம்மாவின் அறிவுரை.

பள்ளிப் பாடங்களை படித்துப் போக மீதி நேரத்தில் துணிகளை துவைக்கும் பணி என்னுடையது. அப்படி ஒரு நாள் துணிகளை காயபோட மாடிக்கு போன போது, பக்கத்து வீட்டு கொடியில் உள்ள வெள்ளை சட்டை எங்கள் மாடியில் விழுந்து கிடந்ததையும் அலசி காயப் போட்டுவிட்டேன். சிறிது நேரங்கழித்து கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு கதவை திறந்தேன். பக்கத்துவீட்டு அண்ணா தன் சீருடை சட்டையை கேட்டு நின்றார். நான் காய்ந்தவுடன் தருவதாக சொல்லி அனுப்பிவிட்டேன். மாலையில் மீண்டும் அந்த அண்ணன் கதவை தட்டும் போது அவர் சட்டையை மடித்து நன்றாக தேய்த்து தந்தேன். சரியாக அந்த நேரத்தில்தான் அப்பாவும் வீட்டுக்குள் வந்தார். அன்று முதல் என் அம்மாவும், அப்பாவும் என்னை தீவிரமாக கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

மாலையில் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் என் தம்பி தான் உடன் வருவான். தொளதொளா பேண்ட்டும்,அப்பாவின் பழைய டி சர்டும் அம்மாவின் பழைய கண்ணாடியும்தான் நான் அணிந்து கொண்டு செல்ல கட்டாயப்படுத்தப்படுவேன்.

காலையில் பள்ளிக்கு அப்பாவுடனும் மாலையில் வீட்டுக்கு அம்மாவுடனும் செல்வேன். இத்தனை கட்டுப்பெட்டிதனமான வாழ்க்கை ஏன்? காரணங்களை அம்மாதான் அடுக்குவாள். குறைந்த வெளிச்சம் உள்ள முட்டுச் சந்தில் தினமும் மூன்று மணி நேரம் நின்று பேசும் காதலர்களுக்கு பேசுவதற்கு அத்தனை காரணங்களும் வார்த்தைகளும் இருந்தும் கூட கல்யாணத்திற்குப் பின் அவர்கள் ஒரு வருடம் கூட சேர்ந்து வாழ்வதில்லையாம். பேசியபடி வாழ்க்கை அமைவதில்லை. வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்.அதில் அநேகர்கள் விளக்கு விட்டில்களாக விழுந்து வீணாகிவிடுகிறார்கள் என்பாள் அம்மா. அம்மாவின் காதல் தோல்விக்கு பின்தான் அப்பாவை கைபிடித்தாள் போல. முருங்கை மரத்திலிருந்து கம்பளிப் பூச்சிகள் வருவதாக ஒரு காரணம் சொல்லி ஜன்னலை சாத்தியே வைத்ததற்க்கான உண்மை காரணம் எனக்கு இப்போதுதான் விளங்கியது. ஒரு நீரூற்றைப் போல் சுரக்கும் காதல் மனிதர்களுக்கு நல்ல வாழ்வை காட்டாதா? நீரூற்றுகள் ஓடையாகி ஓடைகள் ஆறாகி கடலில் கலந்தால் வீண்தானே.அந்த நீரை தேக்கி சில காலங்கள் வைத்து நிதானமாக பயன்படுத்தும் போது பலன் இரட்டிப்பாகிறதே என்பாள் அம்மா. காதலை இளம் வயதிலே வீணடித்துவிடக் கூடாது. உரிய நேரத்தில் நல்ல வழியில் பயன்படுத்துவதில் தான் நல்ல பயன் கிடைக்கும் என்பது அவள் கட்சி. அது உண்மைதானா? 

என்னுடன் படிக்கும் இளம் காதலர்கள் தினமும் நவீன தேநீர் விடுதிகளில் சந்தித்து பேசிக் கொள்வார்கள். பையன் பணக்காரன். பெண்ணோ மிடில்கிளாஸ். அழுது அழுது அவனிடம் ஒரு இருசக்கர மின் வாகனம் வாங்கிக் கொண்டாள். பின் அதோடு நிற்கவில்லை. அந்த இள வயதிலே ஒரு படி மேலே போய் அவனது சொத்துக்களில் கொஞ்சம் தன் பெயருக்கு மாற்றவும் பிடிவாதமாக கேட்டாள். இறுதியில் அவன் தன் பெற்றோர்களால் வீட்டைவிட்டு வெளியேறும்படி ஆகிவிட்டது. அவன் சில காலம் அவள் வீட்டில் தங்கியதில் அவள் கர்பமும்மானாள். இப்போது அவன் போக்சோவில் சிறார்கள் சிறை எனப்படும் சீர்திருத்த முகாமில் இருக்கிறான். அவள் பள்ளிக்கு வருவது நின்று போனது. உயர் மின்னழுத்த பெட்டிகளில் இருக்கும் எச்சரிக்கை எலும்புகூடு போலத்தான் காதலும். இது அம்மாவின் விளக்கம். ஒரு கோடை காலத்தில் சப்பிப் போட்ட மாங்கொட்டை மழைக் காலத்தில் துளிர்த்து காலை இளம் வெயிலில் பளபளப்புடன் பசுமையாக நிற்பதைப் போலத்தான் கள்ளம் கபடமின்றி என்னுள் காதலும் அரும்பி இருக்கும். என் காதலுக்கு அம்மா அமிலத்தை ஊற்றுகிறாள்.

எங்கள் பள்ளிக்கு எதிரே அரசு பார்வையற்றோர் பள்ளி இருக்கிறது. இதில் படிப்பவர்கள் ஜோடியாகதான் இருப்பார்கள். அவர்களின் சம்பாஷனையை கூர்ந்து கேட்டிருக்கிறேன். விரசம் என்பதே இல்லை.அன்புதான் மிளிர்கிறது.ஆம்!காதலுக்கு கண் இல்லைதான்.

பக்கத்து வீட்டு அண்ணா பிளஸ்டுவில் பாஸாகி கல்லூரிக்கு போய்விட்டான்.நான் தோற்று வீட்டில் முடங்கி விட்டேன். தொடர்ந்து முயன்று படித்திருந்தால் என்னுள் பொங்கி வந்த காதல் சரக்கொன்றை மரம் போல் பூத்து குலுங்கி இருக்கும். என் காதல் செடி விஷச் செடியாக வளர்ந்துவிட்டதையே உணர்கிறேன்.

சரியாக ஒரு வருடத்திலேயே எங்கள் உறவினர்களில் ஒருவரை என் அம்மாவும் அப்பாவும் பேசி முடித்து ஊர் உறவுகள் ஒன்றுகூட விமரிசையாக என் கல்யாணத்தை நடத்தி வைத்தார்கள். என்னை விட வயதில் மூப்பு அவர். நல்ல ஆஜானுபாகுவான தோற்றம். கருணை கருணையான தேககட்டு. அதில் கருத்த சுருள் சுருளான மயிர். நடுவன் அரசு உத்யோகம். நான் சிறு வயதிலிருந்தே தூங்கி எழுந்த என் படுக்கையறையில் தான் முதலிரவாம். இந்த அறையில்தான் என் இளம் காதல் சிறகடித்து பறந்திருக்கிறது. நனவாகாத கற்பனைகள் அறை முழுவதும் விரவிக்கிடக்கிறது. ஒரு தலை காதலாக நான் விட்ட வெப்ப மூச்சுகள் இந்த அறையெங்கும் நிறைந்திருக்கும். என் முன் அமர்ந்து என்னைப் பார்த்து புன்னகைப்பவர் எனக்கு கம்பளிப் பூச்சியாக தான் தெரிகிறார். எழுந்து ஓடிவிடலாம் போல் எனக்கு இருந்தது. 

கதவை திறந்து வந்து என் கையில் இளஞ்சூட்டினால் ஆன பால் டம்பரை கொடுத்துவிட்டு என் காதில் மெதுவாக ஓதினாள் அம்மா.

‘கம்பளிப்  பூச்சிகள் பட்டாம் பூச்சியாக மாறும்..அப்போது அழகாக இருக்கும்!’ – என்று!

– தங்கமங்கை ஜூலை 2025 இதழில் பிரசுர கண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *