அட்சய திருதியை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 5, 2025
பார்வையிட்டோர்: 1,620 
 
 

அந்த நகரத்தில் ‘வள்ளி நகை மாளிகை’ என்ற நகைக்கடைத் திறந்த பிறகு வந்த முதல் ‘அட்சய திருதியை’ நாள், கடையில் கூட்டம் அலை மோதியது.

ஒரு வினாடி நிற்கக் கூட நேரமின்றி, வரும் வாடிக்கையாளர்களையெல்லாம் இன்முகத்துடன் வரவேற்று, அவர்கள் தேவை அறிந்து, பம்பரமாய்ச் சுழன்று வியாபாரம் கவனித்த கடை ஊழியர்கள் ஒவ்வொருவரையும்,  பார்த்துப் பார்த்துப் பூரித்தார் கடை உரிமையாளர்.

புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல், தீபாவளி போன்ற சிறப்பு நாட்களில், இந்த அளவிற்குக் கூட்டம் வராது என்றாலும், ஓரளவு கூட்டம் வரும் நாட்கள்தான் அவையும். அந்த நாட்களிலும் அனைத்து ஊழியர்களும் ‘ஓவர் டைம்’ வேலை பார்த்தால்தான் அந்தக் கூட்டத்தையேச்  சமாளிக்க முடியும்.

ஓவர்டைம் வேலைக்கு, பொதுவாக இரண்டு மடங்கு சம்பளம் தந்தார்கள் மற்ற கடைகளில். ஆனால், இந்த நகைக்கடை முதலாளி ‘பாதி சம்பளம்தான் கொடுப்பேன்’ என்று தொடக்கத்திலேயேக் கறாராகச் சொல்லிவிட்டார்.

ஒரு சில பேர், பொதுவாக கடைத் தெருவின் பொதுவான, நடை முறைகளை சொல்லி “ஒரு நாள் சம்பளமாவதுக் கொடுங்கள்..” என்று கேட்டுப் பார்த்தார்கள்.

“இப்போதானே கடை தொடங்கியிருக்கோம். போகப் போகப் பார்ப்போம்..! நம்ம கடையில விற்கிற ‘தங்கத்தோட தரத்தை’ எடுத்துச்  சொல்லி நீங்களும் நிறைய கஸ்டமர் சேருங்க என்றார்?” முதலாளி சிரித்துக்கொண்டே.

‘நகைச் சீட்டு’ சேர்க்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். கடை ஊழியர்களின் முயற்சியால், அதிலும் கனிசமாக ஜனங்கள் சேர்ந்தனர்.

ஓவர்டைம் பார்க்கும் நாளில், வியர்வை உலரும் முன் கையில் முதலாளி தரும்  அரை நாள் சம்பளத்தை சந்தோஷத்தோடு வாங்கிச் சென்றார்கள் ஊழியர்கள்.


முதல் அட்சய திருதியை நாளை முன்னிட்டு ஆட்டோ விளம்பரம், சுவர் விளம்பரம், நாளிதழ்களில் வைத்து அனுப்பும் அச்சு விளம்பரங்கள், எனத் திட்டமிட்டுச் செய்யப்பட்டதன் பலன். ஊசி முனைக்கும் இடம் இல்லாத  வகையில் கடை முழுதும் நிறைந்திருந்தது கஸ்டமர்களின் கூட்டம். எதிர்ப் பார்த்த இலக்கைவிடப் பன் மடங்கு வியாபாரம் செழித்தது. இதையெல்லாம் கண்ட நகைக்கடை உரிமையாளர் சரவணனுக்கு மகிழ்ச்சிப் பிடிபடவில்லை.

தன் தனி அறையில் அமர்ந்து கணினியின் மூலம் அட்சய திருதியை நாளில் கிடைத்த எல்லையில்லாத வருமானத்தைக் கண்டுப் பூரித்தார். தங்கள் சொந்தக் கடைப் போல, மகிழ்ச்சியுடனும், அற்பணிப்புடனும் வியாபாரத்தை கவனிக்கும் ஒவ்வொரு தொழிலாளியையும் சி சி டி வி கேமரா மூலம் பார்த்துப் பார்த்து அகம் மகிழ்ந்தார்.


கஸ்டமர்கள் அனைவரும் சென்றபின் கடை ஊழியர்கள் வழக்கம் போல, முதலாளியின் அறை வாயிலில் ஓவர்டைம் சம்பளத்துக்காகக் கூடினார்கள்.

கடை முதலாளி சரவணன், தன் அறையிலிருந்து வெளியே வந்தார்;

அனைத்து ஊழியர்களையும் மனதாரப் பாராட்டினார்;

வழக்கம்போல் வரிசையாய் அனைவரும் வந்த போது, ஒவ்வொருவர் கையிலும், இனிப்புப் பொட்டலம் ஒன்றை வழங்கினார்.

‘ஓவர் டைம் பணம் ஒரு வேளை இந்த இனிப்புப் பார்ஸலுக்குள் இருக்குமோ?’ என்று சிலர் நினைத்தார்கள்.

‘எப்பவும் ஓவர் டைமுக்குப் பாதிச் சம்பளம் தருவாரு. இன்னிக்கு வெறும் ஸ்வீட் பாக்கெட்தானா..?’ என்றும்  நினைத்தார்கள் சிலர்.

“நாளைக்கு உங்களுக்கு விடுமுறை. விடிய விடிய உழைச்சிருக்கீங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க. கல்லாவுல அம்மா உட்கார்ந்திருக்காங்க. சொல்லிட்டுப் போங்க.. ரொம்ப சந்தோஷம்..!” என்று சொல்லிவிட்டு “டக்” கென தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக் கொண்டு விட்டார் சரவணன்.


ஊழியர்களுக்குக் கும்பிடு போட்டார் கல்லாவிலிருந்த முதலாளியம்மா. “வரிசையா ஒவ்வொருத்தரா வந்து வாங்கிக்கங்க..” என்றார்.

“சம்பளம் அம்மா கையால தருவாங்க போல..?” – என்று எண்ணிக் கொண்டே பரபரப்பாய் வரிசையில் நின்று நகர்ந்தனர்.

‘அட்சய திருதியை’ நாள்ல தங்கம் வாங்குறது சிறப்புன்னு, வந்த வாடிக்கையாளர்களுக்கு எல்லாம் பார்த்துப் பார்த்து செய்த உங்களுக்கு இரண்டு கிராம் ‘தங்கக் காசு’ தரச் சொல்லியிருக்காங்க முதலாளி.!” என்று சொல்லியபடியே, சிரித்த முகத்தோடு லேமினேட் செய்யப்பட்ட இரண்டு கிராம் தங்கக் காசு அட்டையை முதலாளியம்மா தந்தார்.

ஓவர் டைமுக்கு மற்ற கடைகளைப் போலவே இரண்டு மடங்கு சம்பளம் நிர்ணயித்து விட்டு, ஊழியர்களுக்குக் கொடுத்த அரைச் சம்பளம் போக , மீதியைக் கணக்கில் வைத்து, தொழிலாளர்களுக்கு இரண்டு கிராம் தங்கக் காசு தந்து சர்ப்ரைஸ் கொடுத்த முதலாளியின் தங்கமான குணம் அந்தக் காசில் பளிச்சிட்டது.

– விகடகவி 24.08.2024

ஜூனியர்-தேஜ் இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *