சுடரொளி





முன்னுரையாக ஒரு குறிப்புரை
“மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” – கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்கள்
பல்வேறு சூழல்களை கலங்காமல் எதிர்கொள்ளும் பெண்களைப் பற்றிய நாடகமாக இந்த நாடக நூல் படைக்கப்பட்டுள்ளது. வாசகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் சமர்ப்பிக்கிறேன் .
எஸ். மதுரகவி
குறிப்பு : இந்த நாடகத்தின் கதையும் கதைப் பாத்திரங்களும் கற்பனையே . யாரையும் குறிப்பிடுவன அல்ல.
காணிக்கை
நாடகத் தமிழை வாழ வைத்துக் கொண்டிருக்கும்
நாடக கலைஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும்.
முதற் காட்சி
(திரை எழுகிறது. மேடையில் சற்றே மங்கலான மஞ்சள் ஒளி. சுடரொளி காபி ஷாப் என்ற பதாகை பின்னணியில் காணப்படுகிறது. இரண்டு ஆண் குரல்களின் உரையாடல் பார்வையாளர்களுக்குக் கேட்கிறது )
முதல் ஆண் குரல் : என்ன மாப்ளே ஏன் பேசறதுக்கு இங்க கூட்டிகிட்டு வந்தே? சுடரொளி ன்னு பேர் வெச்சு இருக்காங்க டிம் லைட்டா இல்ல இருக்கு …
இரண்டாவது ஆண் குரல் : மாமா இது ஒரு மாதிரி அட்மாஸ்பியர் … இங்க காதலர்கள் மணிக்கணக்கா பேசலாம் .. பிசினஸ் விசயமா பேசறவங்க பேசிக்கிட்டே இருக்கலாம். மெழுகுவர்த்தி ஒளியில் உரையாடல் . அது ஒரு தனி விதம் …
முதல் ஆண் குரல் : அப்படியா … வாழ்க்கையிலே இதெல்லாம் பார்க்காமலே ஐம்பது வருசம் ஓடிப் போச்சு பாரு மாப்ளே .
இரண்டாவது ஆண் குரல் : உங்களுக்கு அறுபது முடிஞ்சுடுச்சுன்னு அக்கா சொன்னாளே…
முதல் ஆண் குரல் : உனக்கு தகவல் வந்திடுச்சா ?
இரண்டாவது ஆண் குரல் : ஏன் மாமா என் கிட்ட சொல்லியிருந்தா ஜோரா பங்க்சன் நடத்தி இருக்கலாமே ..
முதல் ஆண் குரல் : எப்படி நடத்திக்க முடியும் ? நீ பிசினஸ்ல பிசியா இருக்கே . எங்க பொண்ணும் மாப்பிள்ளையும் அமெரிக்காவுல இருக்காங்க . ஒங்க அக்காவுக்கு உடல் சுகவீனம் நான்தான் அவளுக்கு பணிவிடை செய்யறேன். உணவு சமைக்கிறேன். வீட்டை பராமரிக்கறேன்.
இரண்டாவது ஆண் குரல் : எந்த நிலைமையிலயும் நீங்க அக்காவை நல்லா பார்த்துப்பீங்கன்னு தானே உங்களுக்கு பொண்ணு கொடுத்தோம்.
முதல் குரல் : நான் ஒங்க அக்காவை காதலிச்சப்ப எனக்கு பொண்ணு கொடுக்க கூடாதுன்னு முதல் குரல் நீ கொடுத்தேன்னு ஒங்க அப்பா என் கிட்ட சொன்னாரே … இத்தனை வருசம் கழிச்சு நீ இப்படி பேசற …
இரண்டாவது குரல் : எங்க அப்பா தவறான தகவலை சொல்லி இருக்காரு ..
முதல் குரல் : அப்படியா ? நாம ரெண்டு பேரும் நெருக்கமாயிட கூடாதுன்னு அப்படி சொல்லி வெச்சிருக்காரு இல்ல ..
இரண்டாவது குரல் : கரெக்ட்டா பிடிச்சுட்டிங்க மாமா ..
முதல் குரல் : நீ எப்படி ஒரு பிக் ஷாட்டோட பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணி அவங்க வீட்ல எப்படி செட்டில் ஆனே ங்கறது இப்ப புரியுது மாப்ளே … அதென்னப்பா ..உங்கள் கவிதையை அரங்கேற்றுங்கள் ஒரு பலகையில எழுதி வைச்சிருக்காங்க ..
இரண்டாவது குரல் : அது .. இந்த காபி ஷாப்போட ஓனர் எழுத்தாளர் ரங்கநாதன் . விட்ட குறை தொட்ட குறையா இந்த பிசினஸ்சுக்கு வந்தும் அந்த பைத்தியம் விடல சாரி ஆர்வம் விடல . இங்க வர்றவங்க அவங்களுடைய கவிதை , துணுக்கு , தகவல் , சின்னஞ்சிறு கதை எல்லாம் அரங்கேற்றலாம்னு எழுதி வைச்சிருக்காரு ..
முதல் குரல் : ஆடியன்ஸ் யாரு ? இங்க ஒருத்தர ஒருத்தர் பார்த்துகிட்டு சன்னமான குரல்ல பேசிகிட்டு இருக்கற இவங்களா ? இவங்க காது கொடுத்து கேட்பாங்களா ? இந்த மங்கலான வெளிச்சத்துல கவிதை பாடறவங்க முகமே தெரியாதேப்பா …
இரண்டாவது குரல் : அதோ பாருங்க . சின்ன மேடை மாதிரி இருக்கு . நீங்க அங்க போய் நின்னதும் பிரைட் லைட்டிங் வரா மாதிரி செட் பண்ணி இருக்காங்க ..
முதல் குரல் : வருசக் கணக்கா எனக்கு வாய்ப்பே கிடைக்கல. இப்படி ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தாம விடலாமா ? நான் போய் என் கவிதையை , அதான் நான் கவிதைன்னு நெனச்சு எழுதி வெச்சிருக்கறதை அரங்கேற்றிட்டு வரேன் …
இரண்டாவது குரல் : மாமா நில்லுங்க விஷப் பரீட்சை வேணாம் …
(விளக்குகள் ஒளிர்கின்றன. சின்ன மேடை போன்ற அமைப்பில் வாட்ட சாட்டமான தேகமும் நரைத்த தலையும் கொண்ட வேட்டி சட்டை அணிந்த நபர் நின்று கொண்டிருக்கிறார். ஒலி வாங்கியை கையில் வைத்துக் கொண்டு பேசுகிறார். )
அனைவருக்கும் மாலை வணக்கம். இங்கே உள்ளேயே இருப்பதால் மாலையும் இரவும் சந்திக்கும் வேளை வந்து விட்டதா என்று தெரியவில்லை . நான் என்னுடைய கவிதை ஒன்றை தங்கள் முன் அரங்கேற்ற விரும்புகிறேன். நான் தொழிலதிபர் ஆர்.கே. பிரசாத்தின் மாப்பிள்ளை … நான் அவரோட மாப்பிள்ளை இல்ல அவரோட மாப்பிள்ளை பிரதீப் குமாரின் அக்கா மேடம் சுகந்தியின் கணவர் நான். என்னுடைய பெயர் மதிவாணன் . என் மைத்துனரும் இங்கே வந்திருக்காரு … பிரதீப் வாப்பா .. (நடுத்தர வயது கோட்சூட் உடை அணிந்த கனமான தேகம் கொண்ட நபர் அருகில் வந்து நின்று பார்வையாளர்களைப் பார்த்து வணக்கம் என்று கூறி விட்டு நகர்ந்து விடுகிறார்.)
மதிவாணன் : என்னுடைய கவிதை ஒன்றை இங்கே அரங்கேற்றுகிறேன் அடியேன் இப்பொழுது .
(பார்வையாளர்களிடமிருந்து ஒரு குரல் – அந்தக் காலத்தில் ரோட்டில் வித்தை காட்டுபவர் போல் சொல்லிகிட்டே இருக்கீங்களே தவிர கவிதையை விட மாட்டேங்கறீங்களே…)
மதிவாணன் : இதோ என்னுடைய கவிதை .. இது மரபுக் கவிதையும் அல்ல .. புதுக்கவிதையும் அல்ல ..
(பார்வையாளர் குரல் – மனம் போன போக்கில் கிறுக்கியதா சாரி எழுதியதா ? )
மதிவாணன் : என் மனதில் உதித்தது …
படிப்பும் நடிப்பும்
வாழ்வில் நடிப்பது நீடிக்கும்
வேடம் கலையும் வரை அல்லது
தேவை முடியும் வரை
படிப்பது நீடிக்கும் ஆர்வம் உள்ள வரை
அல்லது ஆயுள் முடியும் வரை
நடிப்பதால் காரியம் சாதித்துக் கொள்ளும்
சாமர்த்தியசாலிகள் நிறைந்த உலகில்
படிப்பதால் சாதனைகள் படைத்தவர்களும் உள்ளனர் .
நடிப்பதால் பிறரை வசப்படுத்தலாம்
வாசிப்பதால் புது உலகம் நம்மை வசப்படுத்தும்
வாழ்வில் நடிப்பதற்கு தனித் திறமை தேவை
படிப்பதற்கு ஆர்வம் இருந்தால் போதும்
ஔவைப் பாட்டியும் ஓதுவது ஒழியேல் என்று
நம் காதில் ஓதி வைத்தார்
(கரவொலி )
மதிவாணன் : மிக்க நன்றி
(பார்வையாளர் குரல் – இன்னொரு கவிதை கைவசம் இருந்தால் சொல்லுங்கள் கேட்போம்)
மதிவாணன் : நன்றி . செவி மடுக்க நீங்கள் ஆர்வம் காட்டுவதால் என்னுடைய இன்னோர் ஆக்கத்தைத் தங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
யதார்த்தம்.
கோவலன் – ஆடல் அழகி மாதவி தம்பதியின் அருமைப் புதல்வி
மணிமேகலையின் வசம் ஆபுத்திரனின் கையில் இருந்த அமுத சுரபி இறையருளால் வந்து சேர்ந்தது.
அள்ளி அள்ளி வழங்கும் அமுத சுரபியைக் கொண்டு
தான் மட்டும் பசியாறினால் போதும் என எண்ணாத
ஏந்திழை மணிமேகலை , பசிப்பிணியால் வாடும்
அனைவருக்கும் அமுதசுரபி வாயிலாக பசியாற உணவு படைத்தாள்
ஒரு தருணத்தில் நாட்டில் வளம் பெருகி
மக்களின் தேவைகள் நிறைவேறியதால்
மாதவி பெற்றெடுத்த மணிமேகலையை நாடி
எவரும் வரவில்லை . அதனால் , மணிமேகலை
அமுதசுரபியைத் தூக்கி எறிந்தாள் . கேட்டதை எல்லாம்
தந்த அமுதசுரபிக்கு இந்த நிலை என்றால் , மனிதர்கள் ,
தங்கள் தேவை முடிவுற்றதும் நம்மைப் புறக்கணிப்பதில் வியப்பு ஒன்றும்
இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
(கரவொலி )
( பார்வையாளர் குரல் : இப்ப தான் மைக் கிடைச்சா எல்லாரும் கதை சொல்றாங்களே .. நீங்க ஒரு கதை சொல்லுங்க .. )
மதிவாணன் : நேயர் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். இது என்னுடைய கதை அல்ல . அமெரிக்க ஆங்கில நாவலாசிரியர் , சிறுகதை எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய ஆறு சொல் சிறுகதை ….
தமது நண்பர்களின் சவாலை ஏற்று அவர் எழுதிய ஆறு சொல் சிறுகதை இதுதான் – For Sale : Baby shoes never worn ஆறு பதங்களில் வரி விளம்பரம் போல் இருக்கும் இந்த கதையில் பொதிந்துள்ள கதைகளோ ஏராளம் . ஆசை ஆசையாய் பிறக்க உள்ள குழந்தைக்கு வாங்கி வைத்திருந்த ஷூக்கள் . அந்தக் குழந்தை குறைப் பிரசவமாய் மண்ணுக்கு வராமல் இருந்திருக்கலாம் . பிறந்த உடன் நம்முடைய இந்த உலகம் பிடிக்காமல் இறந்திருக்கலாம் . இப்படி எல்லாம் படிக்கும் வாசகர்கள் பொருள் கொள்ளலாம். ஹெமிங்வே தமது இளமைக் காலத்தில் எழுதிய இந்தக் கதையை 1990
ஆம் ஆண்டு மில்லர் என்பவர் அவர் தொகுத்த சிறுகதைகளின் தொகுப்பில் சேர்த்திருந்தார்.
(கரவொலி)
மதிவாணன் : நன்றி வணக்கம் வாய்ப்புக்கு நன்றி . செவிமடுத்த உங்களுக்கும் நன்றி விடைபெறுகிறேன்.
(விளக்குகள் அணைந்து மீண்டும் மங்கலான வெளிச்சம் காண்பிக்கப்படுகிறது. மேடையின் வலப்பக்கம் ஓரம் மட்டும் வெளிச்சம் நன்றாக காண்பிக்கப்படுகிறது. அங்கு மதிவாணனும் பிரதீப் குமாரும் நின்று கொண்டிருக்கின்றனர். )
பிரதீப் : என்ன மாமா , ஒங்க கிட்ட மனம் விட்டுப் பேசலாமன்னு இங்கு அழைச்சுகிட்டு வந்தேன். நீங்க என்னடான்னா ….
மதிவாணன் : சரி சொல்லு . ஆள் இல்லாத இடத்துக்கு வந்துட்டோமே ..
பிரதீப் : பத்து வருசமா என் மனதை உறுத்திக்கிட்டிருக்கு .. நான் செய்த தகாத செயல் .. என் மன பாரத்தை உங்களிடம் இறக்க்கி வைக்கத்தான் …
மதிவாணன் : மாப்ளே பிரதீப் … தகாத செயல்ன்னு சொல்றியே .. தவறா ? குற்றமா ?
பிரதீப் : மாமா …. வந்து ..
மதிவாணன் : தண்டணைக்குரிய குற்றம் ஏதும் செஞ்சுட்டியா ?
பிரதீப் : அது .. வந்து … நீங்க சொல்றா மாதிரி தண்டனைக்குரிய குற்றத்தை .. நம்பிக்கை துரோகத்தை செஞ்சுட்டேன்.. ஒரு குடும்பத்தை …
மதிவாணன் : குற்றம் செஞ்சிருந்தா .. அதுக்காக சட்டத்தின் முன் சரண் அடைஞ்சு தண்டனை தான் பெறணும். என் கிட்ட சொல்லி , என் கிட்ட பகிர்ந்துக்கிட்டு என்ன ஆக போகுது ? பத்து வருசம் ஓடிப் போச்சுங்கற ..
நீ என் கிட்ட சொன்னா நம்ம பிரதீப்பா இப்படின்னு எனக்கு மனசு உறுத்தும் . நீ என் மனசுலேந்து இறங்கிடுவ .. மேலும் ஒங்க அக்கா கிட்ட சொல்லாம இருந்தா எனக்கு தலை வெடிச்சிடும் .. அதனால என் கிட்ட ரிவில் பண்ண வேணாம். சட்டப்படி என்ன செய்யணுமோ செய் .. அதுக்கு ஒனக்கு மனசு இல்லேன்னா சட்டத்தின் கைகள்ல நீ சிக்கும் வரை இந்த வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இரு … நான் வரேன் … ஒங்க அக்கா எனக்காக சாப்பிடாம காத்துகிட்டு இருப்பா .. பார்ப்போம் ..
(மதிவாணன் செல்கிறார்)
பிரதீப் : மாமா மாமா ….
(திரை )
இரண்டாம் காட்சி
(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. பின்னணியில் சுபா அண்ட் சுதா டிடெக்ட்டிவ் ஏஜன்சி என்ற பதாகை . அலுவலக அமைப்பு . நாற்காலியுடன் கூடிய ஒரு மேசையில் லேப்டாப் . சூரிதார் அணிந்த இரண்டு இளம்பெண்கள் . ஒரு பெண் நின்று கொண்டிருக்கிறாள். ஒரு பெண் நாற்காலியில் அமர்ந்து இருக்கிறாள் .
உட்கார்ந்திருக்கும் பெண் : என்ன சுதா … நிக்கற நடக்கறே . ஏன் இப்படி அலை பாயறே?
சுதா : உனக்கென்ன சுபா ஏன் பேச மாட்டே .. ஐடி கம்பெனில வேலைக்குப் போறதா இருந்த என்னை வா நாம டிடெக்ட்டிவ் ஸ்டார்ட் அப் நடத்துவோம்ன்னு கூப்பிட்டு வந்து இங்க என்னை உட்கார வைச்சுட்டே ..
சுபா : நீ நின்னுகிட்டு தானே இருக்கே ..
சுதா : நாலு மாசத்துல நாலு கிளெயின்ட் தானே வந்தாங்க ..
சுபா : பீஸ் வெயிட்டா வந்துச்சு இல்ல அப்புறம் என்ன ? இந்த ஆபீஸ் எங்க சித்தப்பாவோடது . சித்தப்பா , பொண்ணு கிட்ட ரென்ட் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. நாம கரண்ட் பில்லும் மெயின்டென்ன்ஸ் பில்லும் தான் கட்டணும் .
சுதா : இல்ல சில சமயம் யாருமே நம்ம கதவைத் தட்டலையேன்னு நினைக்கும் போது பக்ன்னு இருக்கு .
சுபா : நம்ம அருமை பெருமை வெளியே பரவினா நமக்கு கான்டாக்ட்ஸ் அதிகரிக்கும் . ஆறு மாதங்கள் ன்னு பிக்ஸ் பண்ணிப்போம் . ஜெயிக்க முடியலைன்னு வை .. நீ ஒங்க அத்தைப் பையனைக் கல்யாணம் கட்டிகிட்டு மலேசியாவுக்கு பறந்துடு . அத்தானை எத்தனை நாள் காக்க வைப்ப … ?
சுதா : அப்படியா ? நீ என்ன பண்ணுவியாம்?
சுபா : அதைப் பத்தி நான் ஒண்ணும் யோசிக்கலை . என் ஸ்கூல்மெட் சாந்தி வரப் போறா … இப்ப இருக்கற மாதிரி கவலை தோய்ந்த முகமா முகத்தை வெச்சுக்காதே மலர்ந்த முகத்தோட இரு ..
சுதா : நமக்கு துப்பறியும் வேலை வருதா?
சுபா : ஆமா. இந்த அசைன்மென்ட்டை நீ எடுத்து செய். நீ தானே சொன்ன தனியா ஒரு அசைன்மென்ட் பண்ண கொடுன்னு …
(மேடையின் வலப் பக்கத்திலிருந்து நீலச் சேலை அணிந்த சற்றே பருமனான தேகம் கொண்ட இளம்பெண் சாந்தி வருகிறாள் . சுபா எழுந்து நிற்கிறாள்)
சுபா : வாம்மா .. நீலச்சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணு … வெல்கம் இது என்னோட பார்ட்னர் சுதா
சாந்தி : (புன்னகையுடன் ) வணக்கம்
சுதா : வணக்கம் .. வாங்க உட்காருங்க
(சாந்தி நாற்காலியில் அமர்கிறாள். பார்வையாளர்களை நோக்கிய விதத்தில் மூன்று பேரும் இருக்கைகளில் அமர்ந்து இருக்கிறார்கள் )
சுபா : சுதா … சாந்தி சின்ன வயசுலேயே போராடி ஜெயித்த சிங்கப் பொண்ணுதான்னு சொல்லணும்
சுதா : கிரேட் வாழ்த்துக்கள் மேம்
சுபா : நாங்க பத்தாவது படிக்கும் போது இவங்க அம்மாவும் போயிட்டாரு .அப்பாவும் போயிட்டாரு. இவ அப்ப இடிஞ்சு போகாம துவண்டு போகாமா டீன் ஏஜ்ல குடும்பத் தலைவியா ஆயிட்டா .. தவறான வழில போன மாமன்கள் ரெண்டு பேரையும் அன்பா பேசி திருத்தினா .. சின்ன சின்ன பிசினஸ் ல மாமாக்களை ஈடுபடுத்தி அவங்களுக்கு சமூக அந்தஸ்து உண்டாக்கினா .. அவங்களுக்கு பெரிய மனுஷி மாதிரி திருமணமும் பண்ணி வெச்சா .. நாம எல்லாம் ஸ்கூல்லயும் காலேஜ்லயும் இருந்தப்ப இவ தொழில்முனைவோர் ஆயிட்டா .. தாய் மாமன்களுக்கும் தாயுமானவள் ன்னா உலகத்துலேயே இவ தான்னு சொல்லணும் ..
சாந்தி (புன்னகை பூக்கிறாள்) : துப்பறியும் நிறுவனத்தை ஆரம்பிச்சு என்னைப் பத்தி தான் தகவல் சேகரிச்சிருக்கே போல … இத்தனை வருசம் தொடர்பு எல்லைக்கு அப்பால தானேடி நீ இருந்தே …
சுபா : அப்படி இல்லப்பா .. நான்தான் சொன்னேன் இல்ல .. நீ கடை , மைக்ரோ பைனானஸ் ன்னு பிசி ஆயிட்டே .. சரி உன்னை தொந்தரவு செய்யக் கூடாது ன்னு …
சாந்தி : போடி .. ஒரு போன் இல்ல மெசேஜ் இல்ல .. பார்க்கவும் வரலை … இது ஒரு காரணம்ன்னு நான் ஏத்துக்கணுமா ?
சுபா : செல்ல சண்டையை அப்புறம் வெச்சுக்கலாம் … நீ இந்த நீல சாரியில அழகா இருக்கே …
சாந்தி : நீங்க ரெண்டு பேர் கூட இந்த ட்ரெஸ் இல்லாம ….
சுபா : அய்யிய்யோ
சாந்தி : சேலை உடுத்தினா அழகா இருப்பீங்கன்னு சொல்ல வந்தேன் .
சுபா : நான் வேற என்னவோ நெனச்சுட்டேன் . சரி தாத்தா பாட்டி எப்படி இருக்காங்க .. ?
சாந்தி : அம்மா வழி தாத்தா பாட்டி என் கூட தான் இருக்காங்க .. நான்தான் பார்த்துக்கறேன் ..
சுபா : பாசமுள்ள பேத்தி அவங்களுக்கு கிடைச்சு இருக்கா .. அப்பாவோட அப்பா தொழிலதிபர் ஆர்.கே.பிரசாத் சார் … அவரைப் பார்த்துகிட்டு இருக்கியா ?
சாந்தி ( மும் மாறுகிறது) : அவரைப் பத்தி பேசாதே ..
(சில நொடிகள் அமைதி)
சுபா : சரிப்பா .. அவரைப் பத்தி பேசலை …
சாந்தி : தழுதழுத்த குரலில் )
எங்க அப்பா .. ஏதோ காரணத்தாலே தாத்தாவோட கம்பெனில இருக்க மாட்டேன்னு பிரைவேட் காலேஜ்ல புரபசரா ஒர்க் பண்ணப் போனாரு… அந்த காலேஜ்ல அவர் மேல பாலியல் புகார் சுமத்தி அதனால அவர் உள்ளே போகும்படி ஆச்சு..
சுபா : அப்பவே கேள்விப்பட்டேன் அந்த வயசல ஒண்ணும் புரியல ..
சாந்தி : ஏரியாவுல பைனானஸ் செண்பகம்ன்னு கம்பீரமா வலம் வந்த எங்க அம்மா , அப்பாவுக்கு ஏற்பட்ட நிலையால நிலை குலைஞ்சு ஆவிய விட்டுட்டா .. ஜெயில்ல போட்டாலும் சூழ்ச்சி கேஸை உடைச்சுகிட்டு வெளியே வந்து விடலாம்னு தைரியமா இருந்த எங்க அப்பா தான் , பரோல்ல வந்து அம்மாவுக்கு இறுதிச் சடங்கு பண்ணாரு… மனம் ஒத்த தம்பதிகள் ங்கறதை நிரூபிக்கறா மாதிரி , அப்பா , அம்மா சடங்கை முடிச்சுட்டு திரும்ப போகும் வழியிலயே உயிரை விட்டுட்டாரு.. பத்து வருசம் ஓடிப் போச்சு .. அவ்வளவு பெரிய தொழிலதிபரோட மகனான எங்க அப்பா விஜய பிரகாஷ் மேல வீண் பழி சுமத்தி ஒரு ஜோடிப் பறவைகள் அல்பாயுசுல மேல போக காரணமானவங்க யாருன்னு கண்டுப்பிடிக்க முடியல .. மகிழ்ந்து குலாவி இருந்த எந்தையும் தாயும் என்னை விட்டுப் போறதுக்கு காரணமானவங்கள நீ கண்டுபிடிச்சு சொல்லுடி … அப்புறம் அவங்கள சட்டத்தின் முன்னால நிறுத்த வேண்டிய வேலையை நான் பார்த்துக்கறேன்….
சுபா : நீ இதுக்கு முன்னால இது பத்தி ..
சாந்தி : நானும் என் மாமாக்களும் இத்தனை வருசமா பல பேரை சந்திச்சு பேசிப் பார்த்தோம் .. ஒண்ணும் துப்பு கிடைக்கல . அந்த காலேஜ்ல முதல்வரா இருந்தவர் கிட்டயும் கெஞ்சிக் கேட்டுக்கிட்டோம். அவரு நான் எந்த சதிலயும் ஈடுபடலை .. எனக்கு வேற வழி இல்லாம போயிடுச்சு . கை மீறிப் போச்சுன்னு சொன்னாரு …
சுபா : இத்தனை வருசமா இந்த சின்ன வயசுல உனக்கு இவ்வளவு கஷ்டம் ..
சாந்தி : பச்சாதாபம் வேணாம் . சீக்கிரம் இதில இறங்கு .. ஏதாவது சந்தேகம்னா போன் பண்ணு … நான் வரேன்
(எழுந்து நிற்கிறாள் )
சுதா : மேடம் சாந்தி .. கேட்கறேன்னு தப்பா நெனக்காதீங்க .. ஒங்க அப்பா , ஒங்க அம்மாவை காதல் திருமணம் பண்ணிகிட்டவர்ங்றதால , சாதாரண குடும்பத்துப் பொண்ண வாழ்க்கை துணையா தேர்ந்தெடுத்துட்டாரே மகன்னு ஒங்க பிரசாத் தாத்தா இது மாதிரி சதி வேலைல… சாரி பெரியவரைப் பத்தி தப்பா பேசணும் ங்கறது என் நோக்கம் இல்ல.
சாந்தி : நீங்க தயக்கம் இல்லாம கேட்டீங்க .. எனக்கும் அந்த சின்ன வயசுலயே அந்த சந்தேகம் இருந்துச்சு .. எங்க அப்பாவுக்கு தீ மூட்டினது எங்க பிரசாத் தாத்தா தான் … அவர் கிட்ட மயானத்துலயே நான் கேட்டேன். எல்லார் எதிரயும் கேட்டுட்டேன். அவரு சொன்னது வேற .. அப்பா சம்பந்தப்பட்ட சம்பவம் நடந்த அன்னிக்கு முதல் நாள் தான் எங்க அத்தை சாந்தாவும் பிரசாத் தாத்தாவும் காலேஜ்ல போய் பார்த்து இருக்காங்க .. அப்பாவும் எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டுகிட்டு தாத்தா வீட்டுக்கே வரேன்னு ஒத்துகிட்டாராம். வேலைக்கும் பிரசாத் தாத்தா ஆபீசுக்கே வந்துடறேன்னு சொன்னாராம். அதுக்குள்ளே விபரீதம் எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சுன்னு அழுதாரு பிரசாத் தாத்தா … எங்க மாமாக்கள் , பெரியவர் புத்திர சோகத்துல இருக்காரு அவரை கோபிச்சுக்காதே … அவர் உடைஞ்சு போயிருக்காரு அவருக்கு ஏதாவது ஆயிட்டா , கம்பெனிய தனியா ஒங்க அத்தையால சமாளிக்க முடியாதுன்னு சொல்லி என்னை அங்கிருந்து என்னை நகர்த்திகிட்டு போயிட்டாங்க ..
சுபா : சரி அந்த அநியாயமான புகார் கொடுத்தது யாருப்பா ?
சுதா : நாம ஸ்டடி பண்ணிக்கலாம் அவங்கள குடையாதே ..
சாந்தி : இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் …சரி நான் வரேன்டி .வரேன் சுதா மேடம் ..
(சாந்தி செல்கிறாள். சுபாவும் சுதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்)
(திரை )
மூன்றாம் காட்சி
(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன . சாலை ஓரப் பின்னணி. மாலை நேரம் . பிரதீப் குமார் நின்று கொண்டிருக்கிறார். மேடையின் வலப் பக்கத்திலிருந்து சலவை செய்து இஸ்திரி செய்யப்பட்ட வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த , தலைமுடியும் வெள்ளையாக இருக்கும் ஒல்லியான நபர் வருகிறார்)
வந்தவர் : வணக்கம் பிரதீப் சார் . என்ன இங்க நி்க்கறீங்க … அன்னிக்கு ஒங்க மாமா சொன்ன கவிதை நல்லா இருந்துச்சு … அவர் கிட்ட சொல்லுங்க ..
பிரதீப் : வணக்கம் ரங்கநாதன் சார். மாமா கிட்ட சொல்றேன். இங்க ஒங்க காபி ஷாப்புக்குத் தான் பிசினஸ் மீட்டிங்குக்கு வந்தேன் . என்னை அழைச்சுகிட்டு வந்த நபரோட கார் பிரேக் டவுன் ஆயிடுச்சு. எங்க ஆபீஸ்ல கார் எதுவும் ப்ரீயா இல்லன்னுட்டாங்க .. கால் டாக்சி புக் பண்ணி இருக்கேன் . வெயிட் பண்றேன் ..
ரங்கநாதன் : கார் வர்றப்ப வரட்டும் . நம்ம காபி ஷாப்ல வந்து உட்காருங்க .
பிரதீப் : இல்ல சார் திறந்தவெளில … இயற்கை காத்துல …
ரங்கநாதன் : அதுவும் சரிதான் சார்
பிரதீப் : ஐயா , ஒங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கலாமா ?
ரங்கநாதன் : நான் எழுதின கதைப் புத்தகங்கள் வேணுமா ?
பிரதீப் : அது இல்ல .. என்னோட மைத்துனர் லேட் விஜய பிரகாஷோட பொண்ணு தான் ஓங்க காபி ஷாப்ல நிர்வாகம் பண்றாங்க போல …
அவங்க தாத்தா கம்பெனியான எங்க கம்பெனிக்கு வரலை ..
ரங்கநாதன் : என்ன சொல்றீங்க .. ஓ .. பூர்ணிமாவைப் பார்த்து
குழம்பிட்டிங்களா … அது பெங்களூருல இருக்கற என் தங்கை வசந்தி – கணேஷ் குமாரோட பொண்ணு பூர்ணிமா … உண்மையை சொல்லணும்னா இது என்னோட காபி ஷாப் இல்ல … எங்க மாப்பிள்ளை பூர்ணிமாவுக்கு வெச்சு கொடுத்து இருக்காரு .. நான் .. அது என்ன சொல்வாங்க .. . மாரல் சப்போர்ட் அவ்வளவுதான் …
பிரதீப் : அந்தப் பொண்ணு எங்க மைத்துனர் பொண்ணு சாந்தி மாதிரியே இருந்துச்சு அதான் கேட்டேன். (மொபைலைப் பார்க்கிறார் ) கார் வந்திடுச்சு நான் வரேன் ஐயா
(பிரதீப் செல்கிறார் )
(மேடையின் இடப் பக்கத்திலிருந்து பருமனான உடல்வாகு கொண்ட சூரிதார் அணிந்த இளம்பெண் வருகிறாள்)
இளம்பெண் : மாமா … அத்தை போன் பண்ணிகிட்டே இருக்காங்க .. வீட்டுக்குப் போங்க…
ரங்கநாதன் : இல்ல பூர்ணிமா .. அதோ போறாரே அவரு தொழில் அதிபர் பிரசாத்தோட மாப்பிள்ளை பிரதீப் குமார் . உன்னை காபி ஷாப்ல பார்த்தாராம் . நீ அச்சு அசலா பிரசாத் சாரோட பையன் வயிற்றுப் பேத்தி சாந்தி மாதிரியே இருக்கேன்னு சொன்னாரு..
பூர்ணிமா : அதுக்கு என்ன மாமா ?
ரங்கநாதன் : இல்ல சினிமாவுல எல்லாம் வர்றா மாதிரி நீ அந்த தொழில் அதிபரோட பேத்தியா அவரு வீட்ல போய் செட்டில் ஆயிட்டேன்னு வை ..
பூர்ணிமா : நீங்க எழுதி வெச்சிருக்கற கதையை எல்லாம் பிரம்மாண்ட சினிமாவா வெப் சீரிசா எடுக்கலாம் அதானே ஒங்க ஆசை …
ரங்கநாதன் : கரெக்ட்டா சொல்லிட்டியே ராஜாத்தி
பூர்ணிமா : ஒங்க தங்கச்சி எங்க அம்மா எப்ப பார்த்தாலும் சொல்லும் நெனப்பு தான் பொழப்பை கெடுக்கும் னு. இருட்டப் போவுது வீட்டுக்கு போங்க .. இந்தாங்க டூ வீலர் சாவி . ஆள் மாறாட்ட கதை , ட்வின்ஸ் கதை , உருவ ஒற்றுமை கதைகள் எல்லாம்
கதையோட நிறுத்திக்கங்க. .. என்னை வெச்சு நிஜமா நடத்தப் பார்க்காதீங்க .. கிளம்புங்க …
ரங்கநாதன் : வாய்ப்பு கதவைத் தட்டும் போது சில பேர் போர்வையை இழுத்துப் போர்த்துகிட்டு தூங்குவாங்களாம் …
பூர்ணிமா : (அதட்டலாக ) என்ன முணுமுணுக்கறீங்க ..
ரங்கநாதன் : எனக்கு நானே பேசிக்கறேன் .. வரேன் ..
(செல்கிறார்)
(மேடையின் வலப் பக்கத்திலிருந்து இரண்டு வாட்டசாட்டமான இளைஞர்கள் பூர்ணிமாவின் அருகில் வருகிறார்கள்)
முதல் இளைஞன் : வணக்கம் மேம் . என் பேரு ராஜேஷ் .. இவுரு பேரு மகேஷ் ..
பூர்ணிமா : வணக்கம் சொல்லுங்க என்ன வேணும் ?
ராஜேஷ் : மகேஷ் நீ சொல்லு மச்சி …
மகேஷ் : மேடம் .. நாங்க கதம்பம் யூட்யூப் சேனல்லேந்து வரோம். இளம் பெண் சாதனையாளர்களை பேட்டி எடுக்கறோம் . ஒங்கள மாதிரி தொழில் முனைவோரை பேட்டி எடுக்கிறோம் … எங்க அலுவலகத்திற்கு ஒங்கள அழைச்சுகிட்டு போக வந்திருக்கோம்.
பூர்ணிமா : பேட்டி எடுக்கற அளவுக்கெல்லாம் நான் ஒண்ணும் செய்யலயே ..
எங்க மாமாவோட காபி ஷாப்ல மேனேஜர் ஆக இருக்கேன் . அவ்வளவுதான் . சாதனை படைச்ச இளம் பெண்கள் , நடுத்தர வயது பெண்கள் , முதிய பெண்கள் பல பேரு இருக்காங்க அவங்கள பேட்டி எடுங்க …
(பூர்ணிமா நகர முற்படுகிறாள் . மகேஷ் அவளுடைய கையைப் பிடிக்கிறான். )
பூர்ணிமா : (கோபத்தைக் காட்டாமல் ) என்ன தம்பி கையைப் பிடிக்கறே …
ராஜேஷ் : அவன் பாசக்காரன் பாசத்தோட கையைப் பிடிச்சிட்டான். அக்கா எங்க ஸடூடியாவுக்கு வரணும்ங்கறதுக்காக.
பூர்ணிமா : வரலேன்னா …
மகேஷ் : வரலைன்னா என்னன்னு கேட்காதீங்க வர்றீங்க
பூர்ணிமா : இல்லேன்னா பலவந்தமா என்னை இழுத்துகிட்டு போவீங்க அதானே ஒங்களுக்கு எதுக்கு சிரமம் … வாங்க போவோம் ..
(மூவரும் மேடையின் வலப் பக்கத்தை நோக்கி நடக்கின்றனர்)
(விளக்குகள் அணைகின்றன)
(காட்சி மாற்றம்)
(விளக்குகள் மீண்டும் ஒளிரும் போது – அங்கே அலுவலக வரவேற்பறை போன்ற அமைப்பு . சபாரி அணிந்த வாட்டசாட்டமான வயதான பெரிய மீசை உடைய நபர் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கிறார் . மேடையின் இடப் பக்கத்திலிருந்து ராஜேஷ் , மகேஷ் , பூர்ணிமா மூவரும் வருகின்றனர்)
ராஜேஷ் : செல்லப்பா அண்ணே …
மீசைக்காரர் : பேரை சொல்லாம கூப்பிட முடியாதா ?
ராஜேஷ் : அதை விடுங்க அண்ணே . நீங்க சொன்னவங்கள அழைத்து வந்துட்டோம்.
மகேஷ் : எங்கள கஷ்டப்படுத்தாம அவங்களே வந்துட்டாங்க ..
செல்லப்பா : போங்கடா முட்டாப் பசங்களா .. இந்த பொண்ண அவங்க வீட்டு கிட்ட விட்டுட்டு திரும்பி பார்க்காம வந்துடுங்க .. இது பாரதி நகர் சாந்தி இல்ல ..
ராஜேஷ் : நீங்க அனுப்பின இமேஜ்ல இருக்கற லேடி இவங்கதான் அண்ணே
செல்லப்பா : சாந்தியோட எத்தனை போட்டோ ஷேர் பண்ணேன் .. அவ ஒரு நாளும் சேலையைத் தவிர வேற காஸ்ட்யூம் போட மாட்டா .. லூஸ் ஹேரோட இருக்க மாட்டா அவளைக் கடத்தினா அவங்க தாத்தா கிட்ட பணம் பறிக்கலாம் … .. யாரும்மா நீ ?
ஒங்கள தெரியாமல் கடத்திட்டாங்க வீட்டு கிட்ட விட சொல்றேன் …
பூர்ணிமா : என் பேரு பூர்ணிமா . ஆள் மாறிப் போச்சா ? அப்ப எனக்கு நஷ்ட ஈடு கொடுங்க ..
செல்லப்பா : நஷ்ட ஈடு எல்லாம் எதுக்கு ? உன் மேல விரல் கூட படாம தானே அழைச்சுகிட்டு வந்தாங்க .. நம்ம பசங்க அப்படியே ஒங்க ஏரியால விட்டு விடுவாங்க .. நம்பு .. ஸ்கெட்ச் தப்பா போச்சு ..
பூர்ணிமா : இந்த பொடிப் பையன் என் கையை பிடிச்சு இழுத்தான். யூட்யூப் பேட்டி ன்னு எல்லாம் கதை அளந்தாங்க சரி என்னதான் நாடகம் இதுன்னு பார்க்க தான் இவங்க கூட வந்தேன் .
செல்லப்பா : இப்ப என்ன பண்ணணும் ங்கற .. சாந்தியை கடத்தி பணம் கிடைச்சா ஒனக்கு ஒரு பங்கு அனுப்பி வைக்கறேன். போதுமா ? ராஜேஷ் இந்த பொண்ண அழைச்சுகிட்டு போ ..
பூர்ணிமா : ஒங்க பாவத்துல எனக்கு பங்கு தர்றேன்னு சொல்றீங்க .. ஒங்க கிட்டேந்து என்ன ரீயாக்ஷன் வருதுன்னு பார்க்கத்தான் நஷ்ட ஈடு ன்னு பேசினேன். ஒங்க பாவப் பணம் எனக்கு எதுக்கு ? பணத்தினைப் பெருக்கு ன்னு பாரதியார் புதிய ஆத்திசூடியில் சொல்றாரு … ஆனா.. இப்படி தகாத செயல் செஞ்சு பணத்தை பெருக்க கூடாது. இன்வெஸ்ட்மென்ட் கன்சல்டன்ட் ன்னு போர்டு வெச்சுகிட்டு இந்த வேலையைத் தான் பார்க்கறீங்க போல . இதை நான் வெளியே சொன்னா என்னை ஒரு வழி பண்ணிடுவே ..யோவ் ராஜேஷ் . நீ வர வேணாம் . நான் ஆட்டோ புக் பண்ணிட்டேன் . மாடி படில எல்லாம் லைட் ஆப் பண்ணி இருட்டா வெச்சிருந்தீங்களே … லிப்ட் எங்கேன்னு காட்டு வா ..
(பூர்ணிமா செல்கிறாள். ராஜேஷ் அவளுடன் செல்கிறான் . சில நிமிடங்களில் மீண்டும் வருகிறான்)
செல்லப்பா : என்னய்யா ரெண்டு பேரும் இப்படி சொதப்பிட்டிங்க ?
மகேஷ் : அப்ப இந்த பொண்ணு யாரு அண்ணே ..
செல்லப்பா : யாருன்னு இனிமேல்தான் கண்டுபிடிக்கணும். இந்த பொண்ணு சுடரொளி காபி ஷாப்ல மேனேஜர் ஆக இருக்கு . நான் ஒங்கள அலர்ட் பண்ண மறந்துட்டேன்.
ராஜேஷ் : இந்த பொண்ணு அச்சு அசலா சாந்தி மாதிரி இருக்கறதால , எப்படியோ பிரசாத் சாருக்கு உறவா தான் இருக்கணும் இல்ல ..
செல்லப்பா : அப்படின்னு ஒன்னோட ஏழாம் அறிவு சொல்லுதா ? அப்ப ஒங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு நாள் டைம் . இந்த பூர்ணிமா பத்தி எல்லா தகவலும் சேகரிச்சுகிட்டு வாங்க …
மகேஷ் : ரெண்டு நாள்ல எப்படி அண்ணே ..
செல்லப்பா : சதா சர்வகாலமும் மொபைல்ல தானே மூழ்கி இருக்கீங்க .. ரெண்டு பொண்ணுங்களோட சோசியல் மீடியா பக்கங்கள்ல போய் பாருங்க .. ரெண்டு பேரும் இருக்கற ஏரியா பசங்க கிட்ட பேசுங்க இதெல்லாம் நான் சொல்லிக் கொடுக்கவா முடியும் ? ரெண்டு நாள்ல தகவல் வரலைன்னா உங்களுக்கு இந்த வேலை போயிடும் சரி போங்க ஏன் நிக்கறீங்க ?
மகேஷ் : இல்ல இப்ப உங்களுக்கு மதுபான நேரம் … எங்களுக்கும் …
செல்லப்பா : குடிப் பழக்கம் குடியைக் கெடுக்கும் . மது அருந்துவது உடலுக்கு கேடு போய்ட்டு வாங்க …
(இருவரும் செல்கிறார்கள் . செல்லப்பா மேசைக்கு கீழே மறைத்து வைத்திருந்த புட்டியையும் கோப்பையையும் எடுக்கிறார் )
(திரை)
நான்காம் காட்சி
( திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன .பேருந்து நிறுத்தம் போன்ற அமைப்பு . எழுத்தாளர் ரங்கநாதன் நின்று கொண்டிருக்கிறார். மேடையின் வலப் பக்கத்திலிருந்து பூர்ணிமா வருகிறாள் )
பூர்ணிமா : மாமா , கொளுத்தற வெய்யில்ல எங்கே கிளம்பிட்டீங்க ?
ரங்கநாதன் : தாம்பரத்துக்கு என் தம்பி ஒங்க சின்ன மாமா வீட்டுக்குப் போறேன். ஏன் ?
பூர்ணிமா : அத்தை கூட சண்டை போட்டா விர்ருன்னு எங்கேயாவது கிளம்பிப் போயிடணும்மனு வெச்சுகிட்டு இருக்கீங்க … சின்ன மாமா ஊர்ல இல்லை . வாங்க நம்ம காபி ஷாப்ல ஏசில உட்காருங்க .. கோபம் எல்லாம் பறந்து போயிடும் ..
ரங்கநாதன் : வாசன் ஊர்ல இல்லேன்னு உனக்கு யார் சொன்னா ?
பூர்ணிமா : அவரே தான் போன் பண்ணி சொன்னாரு… ஒங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் வாங்க …
ரங்கநாதன் : அங்க போனா நீ வேலைல மூழ்கிடுவ … இங்க நிழலா தான் இருக்கு … இங்கேயே சொல்லு …
பூர்ணிமா : அதுவும் சரிதான் இங்கேயே சொல்றேன்…… நீங்க சொன்னது உண்மைதான் என்னோட தோற்றத்தில் இன்னொரு பொண்ணு இருக்காங்க ..முந்தா நாள் அந்தப் பொண்ணுன்னு நெனச்சு என்னை கடத்திட்டாங்க …
ரங்கநாதன் : என்னம்மா சொல்றே கேட்கவே பகீர்ன்னு இருக்கே … அதான் அன்னிக்கு வீட்டுக்கு லேட்டா வந்தியா … அத்தை என்னை திட்டிகிட்டு இருந்தா … வயசு பொண்ண தனியா விட்டுட்டு வந்து இங்க டிவி பார்த்துகிட்டு இருக்கியேன்னு … நீ தான் அத்தை தனியா இருக்கான்னு என்னை வீட்டுக்கு அனுப்பி வெச்ச … ஒங்க அப்பா அம்மாவுக்கு இது தெரிஞ்சா என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க … ஒனக்கு ஒண்ணும் ஆகலையே …
பூர்ணிமா : பேனிக் ஆவாதீங்க … அவங்க என்னை ஒண்ணும் பண்ணலே . நீங்க எழுதற கதைல வர்றா மாதிரி பாரதி நகர் சாந்தின்னு நெனச்சு என்னை கடத்திட்டாங்க … என்னைக் கடத்திட்டுப் போனவங்களோட பாஸ் , என்னைப் பார்த்த உடனே சொல்லிட்டான் இது சாந்தி இல்லைன்னு .. சாந்தியை கடத்தி பணம் பறிக்கற திட்டத்தை அவங்க தாத்தா கிட்ட சொல்லி அவளுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லணும்
ரங்கநாதன் : அந்தப் பொண்ணுக்கும் பிரசாத் சாருக்கும் அதிகமா தொடர்பு இல்லை. அது அவங்க அம்மா வழி தாத்தா பாட்டியோட இருக்குன்னு தான் கேள்விப்பட்டேன்.
பூர்ணிமா : நம்ம காபி ஷாப்புக்கு வர்ற பிரதீப் குமார் கிட்ட சொல்றதும் சரியா இருக்காது .. அவரே ஒரு வில்லன் மாதிரி தெரியறாரு ..
ரங்கநாதன் : எனக்கு தெரிஞ்சு சாந்தி உன்னை மாதிரி தைரியமான பொண்ணு தான் . அது எந்த பிரச்சினையையும் தானா சமாளிச்சுக்கும் .
பூர்ணிமா : அப்படின்னு விட்டுடணும்னு சொல்றீங்க
ரங்கநாதன் : வேற வழி ?
பூர்ணிமா : இது மாதிரி மத்தவங்களுக்கு என்ன ஆனாலும் நாம பாட்டுக்கு நம்ம வேலையை பார்த்துகிட்டு போயிடணும் ..
ரங்கநாதன் : யதார்த்தம் அப்படித் தான் இருக்கு. உதவி செஞ்சா உபத்திரவம் வந்து சேரும்னு சொல்வாங்களே …
பூர்ணிமா : நல்லா இருக்கு ஒங்க கொள்கை … மாமா அங்க பாருங்க ஒரு பெண்மணி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க … மாமா
போய் ஒரு ஆட்டோ பிடிச்சுகிட்டு வா … (பூர்ணிமா ஓடுகிறாள்)
ரங்கநாதன் : அவசரத்துல மாமனுக்கு மரியாதை போயிடும் போல
(சொல்லிக் கொண்டே மேடையின் இடப் பக்கம் நோக்கிச் செல்கிறார்.)
(திரை)
ஐந்தாம் காட்சி
(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. மருத்துவமனையின் ஓர் சிறிய அறை போன்ற அமைப்பு . படுக்கை இருக்கிறது. ஆனாலும் , ஒரு நடுத்தர வயது பருமனான உடல்வாகு கொண்ட சாதாரண புடவை உடுத்திய பெண்மணி நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார் . மேடையின் வலப் பக்கத்திலிருந்து வயதான , ஒல்லியான நபரான மருத்துவரும் ஒல்லியான நடுத்தர வயது செவிலிப் பெண்மணியும் வருகிறார்கள்.)
டாக்டர் (கலகலவென பேசுகிறார்) : மேடம் சாந்தா.. ஒங்களுக்கு ஒண்ணும் இல்ல .. காலைல டிபன் ஸ்கிப் பண்ணா இப்படித்தான்.. விஜி சிஸ்டர் அவங்களோட பர்ஸ், மொபைல் எல்லாம் கொடுங்க..
சாந்தா : தாங்க்ஸ் டாக்டர் ஒங்க கனிவான கலகலப்பான பேச்சுலயே தெம்பு வந்துடுமே … டாக்டர் என்னை யார் இங்க கொண்டு வந்தாங்க .. எனக்கு ஒண்ணும் இல்லையே ..
டாக்டர் : கூட ஆள் இல்லாம வெளியே வர மாட்டீங்களே .. ஒரு பெரியவரும் ஒரு யங் லேடியும் ஒங்கள இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க ..கரெக்ட்டா கைலாசம் ஆஸ்ப்பிட்டலுக்கு அழைச்சுகிட்டு வந்தாங்க நல்லதா போச்சு ..
சாந்தா : ஆள் அம்பு சேனை எல்லாம் ஒரு கட்டத்துல வேணாம்னு தோணுது டாக்டர் . பக்கத்துல இருக்கற கோயிலுக்குப் போகணும்னு தனியா புறப்பட்டேன்.
டாக்டர் : பிரேக்பாஸ்ட் எப்பவும் ஸ்கிப் பண்ணாதீங்க. விஜி சிஸ்டர் , இவங்களுக்கு டிபன் கொடுத்தீங்களா?
விஜி : இப்பதான் எழுந்து உட்கார்ந்தாங்க டாக்டர் . எடுத்துகிட்டு வரேன் .
(செல்கிறார்)
சாந்தா : டாக்டர் என்னை அட்மிட் பண்ணவங்க இருக்காங்களா ?
டாக்டர் : இங்க தான் இருந்தாங்க . நான் எங்களுக்கு தெரிஞ்சவங்கன்னு சொன்னதும் கிளம்பிட்டாங்க . இன்னிக்கு முழுவதும் இங்கேயே இருங்க . ரெஸ்ட் எடுங்க . இந்த ரூம் உங்களுக்குத்தான். சாயங்காலம் வீட்டுக்குப் போகலாம். என்ன வேணும்னாலும் விஜி சிஸ்டர் கிட்ட சொல்லுங்க
சாந்தா : எதுக்கு டாக்டர் நாள் முழுக்க இங்கேயே இருங்கன்னு சொல்றீங்க ..
டாக்டர் : நீங்க நெனச்சாலும் வீட்டுக்கு போக முடியாது . எல்லா முக்கியமான சாலைகளிலும் சாலை மறியல் பண்ணிகிட்டு இருக்காங்க . போய் சாலைல மாட்டிக்கறதுக்கு இங்கேயே இருங்க . ஈவினிங் சகஜ நிலை திரும்பியதும் போகலாம். ஒங்க டாடி கிட்டயும் ஹபி கிட்டயும் பேசிடுங்க .. நான் வரேன் .
சாந்தா : தாங்க்ஸ் டாக்டர்
டாக்டர் : இதுல என்ன இருக்கு ? (டாக்டர் செல்கிறார். உணவுப் பொட்டலத்துடன் விஜி வருகிறார் )
விஜி : சாப்பிடுங்க மேடம்
சாந்தா : என்ன மேடம்ன்னு சொல்றே … நாம ரெண்டு பேரும் டீன் ஏஜ்ல பரத நாட்டியம் கிளாஸ்ல ஃப்ரெண்ட்ஸ் ஆனதை மறந்துட்டியா ? நட்பு கால வெள்ளத்தில் அழிஞ்சு போயிடும் போல .
விஜி : அது இல்ல மறக்கல … நீ சாரி நீங்க பெரிய புள்ளியோட மகள் .. கம்பெனில ஜேஎம்டி ஆக இருக்கீங்க .. அப்படிப்பட்ட அந்தஸ்துல இருக்கறவங்க கிட்ட
சாந்தா : சர்வ ஜாக்கிரதையா இரு்கணும் இல்ல … அதானே புரியுது சிஸ்டர்
விஜி : சரி கோபிச்சு்காதே … சாந்தா .. முதல்ல நீ சாப்பிடு
(விஜி , சிறிய மேசை மீது உணவுப் பொட்டலத்தைப் பிரித்து வைக்கிறார் . தண்ணீர் புட்டியைத் திறந்து வைக்கிறார்.)
சாந்தா : (சிற்றுண்டியை சாப்பிட்டுக் கொண்டே ) எனக்கு பிபி நார்மலா தானேடி இருக்கு?
விஜி : கொஞ்சம் அதிகமாயிருக்கு … உனக்கு வேலையால ஸ்ட்ரெஸ் .. .. வேலை எல்லாம் பிரிச்சு கொடுத்துட்டு பணிச்சுமையை குறைச்சுக்க பாரு
சாந்தா : நடக்கிற கதையா ? உன் கணவரும் பையனும் நலமா ? கணவர் எங்கே ஒர்க் பண்றாரு ?
விஜி : என் வீட்டுக் காரர் , ரெண்டு மூணு காலேஜ்ல அட்மின்ல ஒர்க் பண்ணாரு. கொரோனா காலத்துல ஆட்குறைப்புல வேலை போயிடுச்சு. அப்ப டாக்டர் கைலாசம் , இந்த ஆஸ்பத்திரியில வேலை கொடுத்தாரு ..நிர்வாகிகள் சொல்ற வேலையை செய்வாரு. பார்மசியையும் பார்த்துப்பாரு பையன் சதீஷ் எங்க ரெண்டு பேரோட நிம்மதிய கெடுத்துட்டான் . பிள்ளையை பெத்தா கண்ணீரு ங்கறதை நிரூபிச்சுட்டான். சாரி என் சோக கதையை ஒன் கிட்ட சொல்லிட்டேன்.
சாந்தா : ஏன் வேலைக்கு போக மாட்டேங்குதா பையன் ?
விஜி : வேலைக்கு போகாமல் இருந்தா பராவாயில்லையே இப்ப இருக்கிற சூதாட்டத்துக்கு அடிமையாக ஆயிட்டேன். அவனுக்காகவே , எங்க அப்பா போட்ட நகைகள் , அவரு வாங்கி கொடுத்த நகைகள் , நான் வாங்கின நகைகள் எல்லாத்தையும் ஒளிச்சு வைக்க வேண்டியதா இருக்கு .. அவனைப் பத்தி எனக்குத் தான் கவலையா இருக்கு அவரு அலட்டிக்கறதே இல்ல ..
சாந்தா : அவனை என்னை ஆபீஸ்ல வந்து பார்க்க சொல்லு . நான் பேசற விதத்தில் பேசி பார்க்கறேன் ..
விஜி : நான் சொன்னா கேட்குமா சொல்லி வைக்கறேன். தாங்க்ஸ் .. அது போகட்டும் … சினிமால எல்லாம் காட்றா மாதிரி ஒங்க அண்ணன் விஜய பிரகாஷுக்கு ட்வின்ஸா ?
சாந்தா : இல்லையே ஏன் கேட்கற ?
விஜி : உன்னை இங்க அழைச்சுகிட்டு வந்த பொண்ணு பாரதி நகர் சாந்தி மாதிரியே இருந்துச்சு . ஆனா .. நடை உடை பாவனை எல்லாம் வேற .. அதான் கேட்டேன் . சரி . நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு …. நான் மத்த வார்டுக்கு எல்லாம் போகணும் . அங்க வாஷ் பேசின் இருக்கு .. நான் வரேன் …
(விஜி செல்கிறார்)
(திரை)
ஆறாம் காட்சி
(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன . சுபா , சுதாவின் அலுவலகம் . சுபாவும் கட்டுடல் கொண்ட ஒரு தாடி இளைஞனும் நின்று கொண்டிருக்கின்றனர். அந்த இளைஞன் – செவிலிப் பெண்மணி விஜியின் மகன் சதீஷ்)
(சுதா மேடையின் இடப் பக்கத்திலிருந்து வருகிறாள்.)
சுதா : (உற்சாத்துடன் ) குட் மார்னிங் பா ..
சுபா : குட் மார்னிங் குட் டே …
(சதீஷிடம் ) சரி நீங்க போய்ட்டு வாங்க .. நான் மெசேஜ் பண்றேன். அத்தையை கேட்டதா சொல்லுங்க ..
(சதீஷ் மேடையின் வலப் பக்கம் நோக்கி செல்கிறான்)
சுதா : யார் இந்த இளைஞன் ?
சுபா : பேரு சதீஷ் … எங்க அப்பாவோட கசின் சிஸ்டர் மகன் . நாம கம்பெனி ஆரம்பிச்சு இருக்கோம்னு கேள்விப்பட்டு இங்க வேலை கேட்டு வந்திருக்காரு ..
சுதா : வேலைக்கு எடுத்துக்க வேண்டியதுதானே ?
சுபா : என்ன வேலை கொடுக்கறது ? அவனுக்கு வேலையா முக்கியம் ? என்னை சுத்தி சுத்தி வந்து என்னை வலைல விழ வைச்சு கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிடலாம்னு திட்டம் .
சுதா : என்னடி சொல்றே?
சுபா : ஆமாம் . எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பொண்ணு . ரெண்டு பேரும் சம்பாதிக்கறாங்க.. சித்தப்பாவுக்கு குழந்தை இல்லே . நான்தான் . எல்லா பக்கத்திலேயும் எனக்கு செய்வாங்க … என்னை விழ வைச்சு செட்டில் ஆயிடலாம்னு பிளான். அதுக்கு முதல் செங்கல் இன்றைய சந்திப்பு …
சுதா : பலே ஸ்கெட்ச்சா இருக்கே!
சுபா : இங்க எங்க ரெண்டு பேருக்கே பட்ஜெட் கரெக்ட்டா இருக்கே . என்னோட கான்டாக்ட்ஸ் ல வேற எங்கேயாவது வேலை பார்த்து தரேன்னு சொல்லி அனுப்பி வைச்சேன் . நீ வந்தது னால போய்ட்டான். லேசுல நகர மாட்டேன்னு மொக்கை போட்டுகிட்டு இருந்தான் . சரி அதை விடு சாந்தி கொடுத்த அசைன்மென்ட் ல ஏதாவது தகவல் கிடைச்சுதா?
சுதா : துப்பறிஞ்சு நிறைய கண்டுபிடிச்சு இருக்கோம். பெரியவருக்கு ரெண்டு மகன்கள் . சாந்தி அப்பாவோட அண்ணன் . அவர் பேரு சந்திர பிரகாஷ் . அவரையும் ஏதோ சூழ்ச்சி பண்ணி ஓட ஓட விரட்டி இருக்காங்க … அவரும் அவரோட மனைவியும் என்ன ஆனாங்கன்னு இன்னிக்கு வரைக்கும் தெரியல
சுபா : முதல்ல சாந்தி அப்பா பத்தி கிடைச்ச செய்திகளை சொல்லு .. அவங்க பெரியப்பா பத்தி அப்புறம் பார்ப்போம் . தகவல்களை சொல்லு . அவ கிட்ட எப்படி சொல்லணும்னு பார்த்துக்கறேன்.
சுதா : எல்லாத்துக்கும் காரணம் சாந்தியோட அத்தை கணவர் பிரதீப் குமார் தான். அவர்தான் பிரிஞ்சு இருந்த அப்பா பிள்ளை தங்கை எல்லாம் ஒண்ணா இருக்கப் போறாங்கன்னு தெரிஞ்சுகிட்டு அந்த கல்லூரியில் ஒரு பெண் ஊழியரை … பெண்கள் யாரும் இப்படி பொய்ப் புகார் கொடுக்க மாட்டாங்க . என்ன மிரட்டினாங்க என்ன நிர்பந்தம் கொடுத்தாங்கன்னு தெரியல அவங்கள புகார் கொடுக்க வெச்சு உள்ளே தள்ளி இருக்காரு . ஃபேபரிகேட் செய்யப்பட்டது உடைச்சு வெளில வந்துடலாம்னு சாந்தி அப்பா தைரியமா இருந்திருக்காரு .. ஆனா , தன்னோட மனைவி மனசு உடைஞ்சு இறந்துட்டதைப் பார்த்து அவரும் மனசு குன்றிப் போய் வில் பவர் , மன தைரியம் எல்லாம் போய் ஆவியை விட்டுட்டாரு. நம்பி வந்த மனைவிக்கு நம்மால இப்படி நிலைமை வந்துடுச்சு ங்கற குற்ற உணர்ச்சி ஏற்படுத்தின மனப் போராட்டம் அவரோட உயிரை மாய்ச்சிடுச்சு. மாமனார் வீட்ல அதிகாரத்துக்கு வேற யாரும் வந்திடக் கூடாது . எப்படியாவது இந்த பிசினஸ் சாம்ராஜ்யத்தை கைவசப்படுத்தணும்ங்கற பேராசையால ஒரு குடும்பத்தை திட்டம் போட்டு நாசமாக்கிட்டாரு …
சுபா : அவரு என்ன அவரு … கொலை பாதகச் செயல்ன்னு சொல்லும் எங்க பாட்டி அதைத்தானே செஞ்சு இருக்கான் . அவன்னு சொல்லு .
சுதா : இன்னிக்கு வரைக்கும் இந்த நிமிஷம் வரைக்கும் சமுதாயத்துல பெரிய புள்ளிதானே … அவரை சட்டத்தின் முன்னால் நிறுத்தறதும் கஷ்டம் அவரே ஒத்துகிட்டு சட்டத்தின் முன் சரண் அடைஞ்சாதான் உண்டு .. புகார் கொடுத்த பெண் ஊழியர் இப்ப அந்த கல்லூரியில இல்ல . அவங்க சம்பவம் நடந்த காலத்துல தங்கி இருந்த லேடீஸ் ஹாஸ்டல்ல போய் விசாரிச்சு பார்த்தேன் . அவங்களோட வேர் எபவுட்ஸ் தெரியல . .. இப்ப இன்னிக்கு ஒரு பரபரப்பு .. பிரதீப்போட டார்க் சைடு அவங்க மனைவி சாந்தாவுக்கு தெரிஞ்சுடுச்சான்னு தெரியல .. அவங்க காலைலேந்து மிஸ்ஸிங் …
சுபா : என்னடி சொல்றே … ?
சுதா : ஆமாம் ஆர்.கே. பிரசாத்தோட கம்பெனி ஸ்டாப் அவங்கள தேடிக்கிட்டு இருக்காங்கன்னு நியுஸ் எவ்வளவு தூரம் உண்மைன்னு தெரியல ..
சுபா : நீ கில்லி மாதிரி உன் வேலையை முடிச்சுட்டே… சாந்தி கிட்ட எப்படி சொல்லப் போறேன்னு தான் தெரியல. பார்ப்போம் கடவுள் மேல பாரத்தைப் போட்டு சொல்லித்தானே ஆகணும்
(திரை)
ஏழாம் காட்சி
(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன . சுபா , சுதாவின் அலுவலகம். முற்பகல் நேரம் . பெரிய சொகுசு நாற்காலி ஒன்றில் சாந்தா அமர்ந்து இருக்கிறார். மேடையின் வலப் பக்கத்திலிருந்து உயரமான , வாட்டசாட்டமான , முகத்தில் பெரிய மீசை
கொண்ட , வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்த நடுத்தர வயது நபர் வருகிறார். சாந்தாவைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். )
வந்தவர் : அம்மா .. .. மேடம் … வணக்கம் ( நின்றபடியே பேசுகிறார் )
சாந்தா : என்ன மிஸ்டர் சின்னத்தம்பி .. என்னை நீங்க இங்க எதிர்ப்பார்க்கலை இல்லை ? உட்காருங்க (நாற்காலியைக் காட்டுகிறார் )
டாக்டர் கைலாசம் சார் கிட்ட ஆஸ்பிட்டலையும் பின்னாடி இருக்கற இடத்தையும் கொடுங்க ன்னு கேட்டீங்க .. அவரு இந்த அட்ரஸ்ல இருக்கிற ஆபீஸ்ல என் ப்ரெண்ட் , பிலாசபர் , கைடு இருக்காரு அவரைப் போய் பாருங்கன்னு அனுப்பினாரு .. சரியா ?
சின்னத்தம்பி : ( அமர்கிறார் ) அப்படின்னா … அந்த ப்ரெண்ட் , பிலாசபர் , கைடு நீங்கதானா மேடம் ?
சாந்தா : தெரியாத்தனமா வந்துட்டோமே ங்கற ஒங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது ..
சின்னத்தம்பி : கேட்டுடுச்சா மேடம் ?
இந்த யங் லேடீஸ் நடத்தற துப்பறியும் கம்பெனி ஒங்களோடதா மேடம் ?
சாந்தா : இல்ல இது இந்த பொண்ணுங்களோட உழைப்பு … இவங்க பிரெயின்சைல்ட் நான் இவங்கள பார்க்க வந்தேன். டாக்டர் பேசினாரு ..ஒங்கள இங்க அனுப்பி வைங்கன்னு சொன்னேன் .
சின்னத்தம்பி : ஒரு கேள்வி கேட்கலாமா மேடம் ?
சாந்தா : நான்தான் ஒங்கள துருவி துருவி கேட்கணும்னு திட்டமிட்டேன். சரி நீங்க ஒரு கேள்வி கேளுங்க ..
சின்னத்தம்பி : மன்னிக்கணும் நீங்க மிஸ்ஸிங்ன்னு ..
சாந்தா : என்ன … ?
சின்னத்தம்பி : இல்ல சாரி நீங்க ரெண்டு நாளா வீட்ல இல்ல கம்பெனிக்கு வரலை .. உங்களை தேடிக்கிட்டு இருக்காங்கன்னு …
சாந்தா : செவி வழிச் செய்தி அதுதானே … ?
சின்னத்தம்பி : சோசியல் மீடியால .. இணையதள பத்திரிகைல அதைப் பத்தி தான் .. அதனால
சாந்தா : வதந்திகள் வேகமாகத் தான் பரவும்
சின்னத்தம்பி : அப்படியா ? மறுப்பு அறிக்கை உங்களிடமிருந்து வரவில்லையே … மேடம் ..
சாந்தா : அதை நான் பார்த்துக்கறேன். நீங்க மேட்டருக்கு வாங்க .. கைலாசம் சார் மருத்துவமனையை விற்பனை செய்யறேன்னு யார் கிட்டயாவது சொல்லி இருந்தாரா ?
சின்னத்தம்பி : இல்லை மேடம்
சாந்தா : நாளிதழ்ல , சோஷியல் மீடியால அறிவிப்பு போட்டு இருந்தாரா ?
சின்னத்தம்பி : இல்லீங்க மேடம் ..
சாந்தா : அப்புறம் ஏன் .. அவர்கிட்ட ஆஸ்பத்திரியையும் பின்னால உள்ள இடத்தையும் கொடுங்கன்னு கேட்கறீங்க ?
சின்னத்தம்பி : அது வந்து கைராசி டாக்டராக இருந்தாலும் வயசாயிடுச்சு … பசங்க அமெரிக்கால இருக்காங்க .. ஓயாமல் உழைக்கிறாரு
சாந்தா : ( புன்னகை பூக்கிறார் )
அவரு உடம்புல தெம்பு இருக்கற வரைக்கும் இல்ல உடம்புல மூச்சு இருக்கற வரைக்கும் வேலை செய்யப் போறாரு .. அவருக்கு ஓய்வு கொடுக்கணும்னு உங்களுக்கு ஏன் அக்கரை ?
சின்னத்தம்பி : எனக்கு என்ன மேடம் ? அந்த இடத்தை ஒரு பெரிய புள்ளி பார்த்துட்டாரு .. … அதனால ..
சாந்தா : அந்தப் பெரும் புள்ளி தான் ஒங்கள இறக்கி விட்டாரா ?
சின்னத்தம்பி : அந்த அளவுக்கு எனக்கு பெரிய கான்டாக்ட்ஸ் இல்லை .. அவரோட தொடர்பில் உள்ள ஒரு பிசினஸ்மேன் என்னை இதுல …
சாந்தா : டாக்டர் மனசுல என்ன ஓடுதுன்னு பார்க்கச் சொன்னாரா ?
சின்னத்தம்பி : அது வந்து ..
சாந்தா : என் கணவர் பிரதீப் குமார் தானே ?
( அதட்டல் குரல் )
சின்னத்தம்பி : ஆமாங்க அம்மா .. அந்த பெரிய புள்ளியும் ஒங்க வீட்டுக் காரரும் ரொம்ப குளோஸ் ஆயிட்டாங்க .. இந்த மாசம் முடிவுல அவரு ஒங்க கம்பெனிய விட்டு விலகி அந்தப் பெரிய மனுஷரோட கம்பெனில பெரிய பொசிசன்ல உட்காரப் போறாரு ..ஒங்க கணவர் ஒண்ணும் பகிர்ந்துக்கலையா .. நான் பயத்துல ஓட்டை வாயா உண்மைய உளறிட்டேன் .
சாந்தா : அச்சப்படற ஆளா நீங்க ?
சின்னத்தம்பி : மேடம் அந்த இடம் ..
சாந்தா : டாக்டர் கைலாசம் சார் அவரோட கன்சல்டன்ட் கிட்ட பேச சொன்னாரு கன்சல்டன்ட் , விற்பனைக்கு கொடுக்கறதா இல்லைன்னு சொல்லிட்டாருன்னு சொல்லிடுங்க ( மேடையின் இடப் பக்கத்திலிருந்து சுபா வருகிறாள் )
சின்னத்தம்பி : யார் அந்த கன்சல்டன்ட் ன்னு கேட்டா இந்த யங் லேடியோட பெயரை சொல்லிடட்டுமா ?
சாந்தா : அந்தப் பொண்ணு மேல என்ன கோபம் ? அவங்கள ஏன் கோத்து விடறீங்க ? ஒங்க மனைவியார் சாந்தா மேடம் தான் அந்த கன்சல்டன்ட் ன்னு அந்த மீடியேட்டர் நபர் கிட்ட சொல்லுங்க …
சின்னத்தம்பி : சரிங்க மேடம் நான் வரேன்
(மேடையின் வலப்பக்கம் நோக்கி சின்னத்தம்பி செல்கிறார் )
சுபா : ஆன்ட்டி எல்லாம் கேட்டுகிட்டுதான் இருந்தேன். சாந்தமான சாந்தா மேடமா இருந்த நீங்க …
சாந்தா : ரௌத்திரம் ஆயிட்டேனா ? ரௌத்திரம் பழகு ன்னு பாரதியார் சொல்லி இருக்காரு இல்ல . அதை நான் கடைப்பிடிக்காமல் விட்டதால் தான் என்னை சுத்தி என்னென்னமோ நடக்குது .. சரி நான் வரேன் … இந்த மீட்டிங்குக்கு இடம் கொடுத்தற்கு நன்றி … ( எழுந்து நின்று செல்ல முற்படுகிறார் )
சுபா : ஆன்ட்டி ஊரெல்லாம் ஒங்கள காணோம்ன்னு வதந்தி பரவினப்ப நீங்க என்னைத் தேடி வந்தீங்க .. சந்தோஷம் … என்னவோ அசைன்மென்ட்டுன்னு சொன்னீங்க அதுக்குள்ள இந்த நபர் வந்துட்டாரு.. இங்க நீங்க இங்க வந்ததால ஒங்க கிட்ட ..
சாந்தா : என்ன .. என் கணவர் பத்தி நீ ஏதாவது அதிர்ச்சி தகவல் வெச்சிருக்கியா ?
சுபா : ஆமாம் … ஒங்க மனசை திடப்படுத்திக்கங்க … அது வந்து …
சாந்தா : என்ன தயக்கம் … சொல்லும்மா ..
(மேடையின் வலப் பக்கத்திலிருந்து சாந்தி வருகிறாள் )
சாந்தி : குருவிக் கூட்டை குண்டு வெச்சு தகர்த்தவன் தான் இவங்க புருசன்னு சொல்லு சுபா … ஏன் மென்னு முழங்கறே …. ?
சாந்தா : சாந்தி என்ன சொல்றே கண்ணு
சாந்தி : என்ன கண்ணுன்னு கொஞ்சல் … என்னோட அப்பா மேல ஒரு பெண்மணி மூலமா வீண் பழி சுமத்த வைச்சு அவரை ஜெயில்ல தள்ளி , என் அப்பாவும் அம்மாவும் என்னோட பதினைந்து வயசுல என்னை விட்டுப் போனதுக்கு யார் காரணம் தெரியுமா ? நீ தேர்ந்தெடுத்து காதலிச்சு கட்டிக்கிட்டியே அந்த ஆள் தான் …
சாந்தா : என்னம்மா சொல்றே ?
சாந்தி : சொல்றாங்க சுரைக்காய்க்கு சால்ட் இல்லேன்னு … … சுபா .. இவங்க இங்க இருக்காங்கன்னு மெசேஜ் அனுப்பி இருந்தா நான் வந்திருக்க மாட்டேன் இல்ல .. உனக்கு மூளை வேலை செய்யாதா ?
சுபா : சாந்தி ஆத்திரப்படாதே .. அவங்க உனக்கு அத்தை தானே … உனக்கு அத்தைங்கறதாலே நானும் அவங்கள ஆன்ட்டின்னு தான் கூப்பிடறேன். அவங்கள சுத்தி நடப்பதெல்லாம் அவங்களுக்கு தெரியாது …
( சாந்தி அருகிலுள்ள நாற்காலியில் அமர்கிறாள் )
சாந்தி : ( உடைந்து போய் பேசுகிறாள் ) நீ அவங்கள எப்படி கூப்பிட்டா எனக்கு என்ன ?
சுபா : நீ பெரிய பெரிய சவால்களை எல்லாம் சமாளிச்சவ சாதிச்சவ .. புரிஞ்சுக்க … ஒங்க அத்தை வீட்டுக்காரர் செஞ்ச சதி வேலையெல்லாம் அத்தைக்கு தெரியாது …. எமோஷனல் ஆகாதே …
சாந்தி : உனக்கு என்ன வாய் இருக்குன்னு என்னவேணா வாய் கிழிய பேசுவ ..கஷ்டத்தை எல்லாம் அனுபவிச்சவ நான்தானே .. அனுபவிக்கறவ நான்தானே ..
( குலுங்கி குலுங்கி அழுகிறாள் . சுபா தரையில் அமர்ந்து அவளுடைய முதுகை வருடிக் கொடுக்கிறாள் )
( சாந்தாவும் நாற்காலியில் அமர்கிறார். சாந்தாவின் கைபேசி ஒலிக்கிறது. )
சாந்தா : நீ பேசு சுபா .. என்னன்னு கேட்டுக்க .. நான் அப்புறம் பேசறேன்னு சொல்லு ( கைபேசியை அவளிடம் தருகிறார் )
( சுபா , மேடையின் ஓர் ஓரமாகப் போய் விட்டுத் திரும்பி வருகிறாள் ) –
சுபா : ஆன்ட்டி … உங்க ஆபீஸ் கான்டீன் கான்ட்ராக்ட்டர் சதாசிவம் நாயர் பேசினாரு.. பேக்ட்டரில மின்சார கசிவுன்னால விபத்து ஏற்பட்டு ஒரு ஊழியருக்கு பிரச்சினையாம் மத்த ஸ்டாப் எல்லாம் பெரியவர் அதான் ஒங்க அப்பாவை சூழ்ந்துக்கிட்டாங்களாம் .. ஒங்க ஹஸ்பெண்டு அங்கிருந்து நழுவிட்டாராம் .. சதாசிவம் ஒங்கள உடனே வர சொல்றாரு …
(கைபேசியைத் தருகிறாள் )
(சாந்தா எழுந்து நிற்கிறாள். சாந்தியும் எழுந்து நிற்கிறாள் . )
சாந்தா : சரி நான் கிளம்பறேன் …
சாந்தி : சுபா .. ஒரு நிமிடம் அவங்கள இருக்க சொல்லு. நான் , முகம் கழுவிக்கிட்டு வரேன். நானும் அவங்களோட பேக்ட்டரிக்கு வரேன் . நான் வந்த கால் டாக்சி இருக்கு …
சுபா : சரி சீக்கிரம் வா …
( சாந்தி மேடையின் நடுப்பக்கம் வழியாகச் சென்று சில நொடிகளில் திரும்புகிறாள் )
சாந்தி : சுபா நீயும் வா
( சுபா பூட்டைக் கையில் எடுக்கிறாள் . மூவரும் மேடையின் வலப் பக்கத்தை நோக்கி வேகமாகச் செல்கின்றனர். )
(திரை )
ஏழாம் காட்சி
(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. பூங்கா போன்ற அமைப்பு . காலை நேரம் . வேட்டி சட்டை அணிந்த ஒல்லியான தேகம் , மழித்த முகம் கொண்டவர் திண்ணையில் அமர்ந்திருக்கிறார். அவர் அருகில் பருமனான தேகம் கொண்ட , டிசர்ட் பேண்ட் அணிந்த மீசைக் காரர் வந்து நிற்கிறார். )
குண்டு நபர் : என்ன சதாசிவம் நாயர் … எப்படி இருக்கீங்க ?
சதாசிவம் : (எழுந்து நிற்கிறார் ) வணக்கம் ஆடிட்டர் ராஜாமணி சார் … நான் நல்லா இருக்கேன் .. உட்காருங்க
ராஜாமணி : நின்னுகிட்டே பேசுவோம் ஆபீஸ்ல இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்துகிட்டே தானே இருக்கேன். நீங்க நல்லா இருக்கறதுக்கு என்ன ? எங்களாலேயே சேர்மன் கூடவும் சாந்தா மேடம் கூடவும் க்ளோஸ் ஆக பழக முடியலை
நீங்க கேன்டின் கான்ட்ராக்ட்டர் .. எப்படி பெரிய இடத்தை கைல போட்டுக்கிட்டிங்க .. அந்த சொக்குப்பொடி ரகசியத்தை சொல்லுங்களேன் ….
சதாசிவம் : ரகசியம் எல்லாம் ஒண்ணும் இல்ல … சில முக்கியமான வேலைகளுக்கு ரெண்டு பேரும் என்னைத் தான் நம்புவாங்க .. நான் முடிச்சுக் கொடுப்பேன்.
ராஜாமணி : கேன்டின் வேலையை தம்பி கிட்ட கொடுத்துட்டு இந்த வேலையை எல்லாம் தான் பார்க்கறீங்க போல .. அதனால தான் அவங்க மனசுல பெரிய இடத்தை பிடிச்சுட்டிங்களா ?
சதாசிவம் : நீங்க பெரிய மனுசன் .. சாதாரண ஆளு என்னைப் பார்த்து பொறாமைப்படறீங்க போல
ராஜாமணி : வடிவேலு ஒரு படத்துல சொல்றா மாதிரி லைட்டா …
அதை விடுங்க பேக்ட்டரில அன்னிக்கு ஏற்பட்ட அன்ரெஸ்ட்ட பெரியவர் பேத்தி சாந்தி ஊழியர்கள் கிட்ட பேசி தணிச்சிடுச்சாமே …
சதாசிவம் : சாந்தா மேம் பேசியும் கேட்கல சேர்மன் பேசியும் கேட்கல பாரதிநகர் சாந்தி அமைதியா பேசி அவங்க கோபத்தை தணிச்சு , பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டையும் உடனே அறிவிச்சுடுச்சு. யூனியன் லீடர்ஸ் அவங்க ஹேண்டில் பண்ண விதத்தை பார்த்து ஆச்சர்யப்பட்டாங்கன்னா பாருங்களேன்… .. மாப்பிள்ளை பிரதீப் குமாருக்கு நீங்க தான் வேற கம்பெனியோட லிங்க் ஏற்படுத்தி கொடுத்தீங்களாமே ….
ராஜாமணி : யோவ் நீ இது மாதிரி சொல்லிகிட்டு அலையாதேய்யா அப்புறம் பெரியவர் என்னை ஒதுக்கிடுவாரு … அவன் மனைவி சாந்தாவையும் மாமனாரையும் வெறுப்பேத்தணும் என்னென்னவோ பண்றான் …
சதாசிவம் : அந்த கம்பெனில சேர்ந்து ஒரு வாரம் ஆகுதாமே … ஒங்களுக்கு தெரியாமாலா இருக்கும்னு பார்த்தேன்.
சதாசிவம் : நல்லா பார்த்தே …
(சதாசிவத்தின் கைபேசி ஒலிக்கிறது )
ராஜாமணி : பேசு ..
சதாசிவம் : சொல்லு பரமு … அப்படியா ? .. நான் உடனே வரேன் பா ..
ராஜாமணி : என்ன ஆச்சு … ?
சதாசிவம் : சார் பிரதீப் குமாரோட ப்ரெண்டு அசோக் குமாரோட கஸ்ட் ஹவுஸ் செக்யுரிட்டி என் சொந்தக் காரன் பரமேஸ்வரன் பேசினான். அவங்க முதலாளி வெளிநாட்ல இருக்காராம் . இவருக்கு பங்களாவை திறந்து விட சொன்னாராம் பிரதீப் ராத்திரி முழுக்க குடிச்சிருப்பாரு போலிருக்கு பேச்சு மூச்சு இல்லாம இருக்காராம் அக்கம் பக்கத்து ஆளுங்க போய்ட்டாருன்னு சொல்றாங்க ஒரு டாக்டரோட உடனே வான்னு சொல்றான் ….
ராஜாமணி : என்னய்யா காலைல இப்படியா செய்தி வரணும் . சரி வா நான் கார்ல வந்திருக்கேன் … அதோ டாக்டர் நாகா போறாரு பாரு அவரை அழைச்சுகிட்டு போகலாம் … வா ..
(இருவரும் விரைந்து செல்கின்றனர்)
(திரை எழுகிறது)
எட்டாம் காட்சி
(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன . மாலை நேரம் . ஏழுமலை சுவாமிகளின் ஆசிரமம். தோட்டம் போன்ற இடத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பூர்ணிமாவும் ரங்கநாதனும் அமர்ந்து இருக்கின்றனர்)
ரங்கநாதன் : ஏம்மா எனக்கு பிறந்த நாள்ன்னு சொன்னேன் … இங்க அழைச்சுகிட்டு வந்துட்டே …
பூர்ணிமா : சிட்டிலேந்து ரொம்ப தூரத்துல அமைதியான இந்த குடில் நல்லா தானே இருக்கு .. மாமா
ரங்கநாதன் : நல்லா இருக்கு … திரும்பி போக இந்தப் பகுதில இருட்டிட்டா பஸ் வராது போல …. கால் டாக்சி ஆட்டோ எல்லாம் புக் பண்ணா வருவாங்களா ….
பூர்ணிமா : இருட்டறதுக்கு முன்னாலேயே உங்களுக்கு ஏன் அந்த கவலை … வண்டி புக் பண்ணி வரலேன்னா தாம்பரம் வரைக்கும் நடந்தே போயிடுவோம் …
ரங்கநாதன் : அய்யிய்யோ ..
பூர்ணிமா : இந்த இடத்துல கத்த கூடாது. ஒங்கள நடக்க வைக்காம திரும்ப வீட்டுக்கு நான் கூட்டிட்டு போறேன் மாமா …
ரங்கநாதன் : அப்ப சரி …
பூர்ணிமா : பிறந்த நாளுக்கு அத்தைய பால் பாயசம் வைக்க சொல்லி சாப்பபிட்டிங்களே என் பிறந்த நாள் எப்பன்னு கேட்டிங்களா ?
ரங்கநாதன் : திருத்தம் … பால் பாயசம் பண்ணது மாமாதான் அத்தை இல்ல சரி இப்ப கேடகறேன் .. உன் பிறந்த நாள் எப்பம்மா ?
பூர்ணிமா : ஸ்கூல்ல சேர்க்கும் போது எங்க அப்பா அம்மா ஒரு தேதிய கொடுத்து இருக்காங்க … அது என் பிறந்த நாள் இல்ல நான் எப்ப பிறந்தேன்னு எங்க அப்பா அம்மாவுக்கே தெரியாது …
ரங்கநாதன் : இன்னிக்கு காபி ஷாப்லேயே தானே இருந்தே … வெய்யில கூட போகலையே ஏன் இப்படி பேசறே …
பூர்ணிமா : சொல்ல வர்றத இன்டரப்ட் பண்ணாம கேட்டா புண்ணியமா போகும் … என்னோட மன நலத்தை பத்தி எல்லாம் சந்தேகப்பட வேண்டாம் மாமா
ரங்கநாதன் : சரி சொல்லு …
பூர்ணிமா : ஒங்க தங்கை வசந்தியும் மாப்பிள்ளை கணேஷ்குமாரும் என்னைப் பெத்தவங்க இல்ல வளர்த்த பெற்றோர் … நடுல பேசக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன். ஒங்க தங்கச்சியும் மாப்பிளையும் அவங்களா கல்யாணம் பண்ணிகிட்டு பெங்களூர் வந்து செட்டில் ஆயிட்டாங்க .. கோபத்துல இருந்த நீங்களும் ஒங்க தம்பியும் அவங்க பெங்களூர் வந்து அஞ்சு வருசம் கழிச்சு ஒங்க அம்மா போறப்ப தங்கச்சியோட உறவுல இருங்கன்னு சொன்னதால பார்க்க வந்து போக்குவரத்தா இருந்தீங்க ..
இந்த ஊர் சாந்தியும் நானும் ஒரே தோற்றத்துல இருக்கற காரணத்தைக் கண்டுபிடிக்கணும்னு நான் நெனச்சேன் .. நம்ம காபி ஷாப்புக்கு வருவாரே துப்பறியும் நிபுணர் திலக் … அவர்கிட்ட …
ரங்கநாதன் : உனக்கு காதல் வந்திடுச்சா ? ரொம்ப வயசானவரா இருக்காராமே …
பூர்ணிமா : மாமா …
ரங்கநாதன் : சாரி இடை மறிக்கல சொல்லு .. என்ன ப்ளோ போயிடுச்சா ?
பூர்ணிமா : இந்த ஊர் சாந்தியும் நானும் ஒரே மாதிரி இருக்கறது பத்தி கண்டுபிடிக்க சொல்லி அவர்கிட்ட நான் அசைன்மென்ட் கொடுத்தேன். அவரு இதே வேலையை தொழிலதிபர் பிரசாத் சாரும் கொடுத்திருக்காருன்னு சொன்னாரு … அவர் கண்டுபிடிச்சது என்னன்னா .. நான் தொழிலதிபர் பிரசாத்தின் முதல் மகன் சந்திர பிரகாஷோட மகள் …
ரங்கநாதன் : எனக்கு தலை சுத்துது .. சரி மேல சொல்லு .
பூர்ணிமா : சந்திர பிரகாஷ் , அவரோட அப்பா இவ்ளோ பெரிய பிசினஸ் சாம்ராஜ்யம் வைச்சிருக்கும் போது அவரோட கம்பெனில வேலை செய்யாம , பெங்களூர்ல ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனில வைஸ் பிரசிடன்ட் ஆக போய் சேர்றாரு பிரசாத் சார் ஒன்னோட ஒய்பும் குழந்தையும் சென்னையில இருக்கட்டும்னு சொல்றாரு அப்பா
சொல் பேச்சு கேட்காம மனைவியையும் குழந்தையையும் கூட்டிகிட்டு பெங்களூர்ல போய் செட்டில் ஆறாரு…சந்திர பிரகாஷ் . அந்த ரியல் எஸ்டேட் கம்பெனில இருந்த ஒரு டைரக்டர் பைனான்ஸ் கம்பெனி நடத்தி ஜனங்கள ஏமாத்திடறான் … சென்னையிலேந்து ஒரு வில்லன் புறப்பட்டு வந்து அந்த டைரக்டர் பணத்தை எல்லாம் சந்திர பிரகாஷ் கிட்ட கொடுத்து வைச்சிருக்கான் னு ஒரு புரளி கிளப்பி ஜனங்கள சந்திர பிரகாஷுக்கு எதிரா திருப்பி விடறான். ஜனங்க கோபத்தில என்ன வேணாலும் பண்ணுவாங்கன்னு சந்திர பிரகாஷ் , அவரோட ஐந்து வயது பெண் குழந்தையை ஒங்க தங்கச்சி வீட்டுக்காரர் கிட்ட ஒப்படைச்சிட்டு நீயே வளர்த்துக்க ன்னு சொல்லி தலைமறைவாயிடுறாரு …ஒங்க தங்கச்சியும் மாப்பிளையும் என்னை சீராட்டி பாராட்டி வளர்த்தாங்க … .. நான் வந்தப்புறம் வேலைக்கு போயிட்டு இருந்த ஒங்க மாப்பிள்ளை பிசினெஸ் தொடங்கி ஓகோன்னு ஆயிடறாரு… நான் வந்த ராசின்னு என்னை கொண்டாடி அன்பைப் பொழிஞ்சாரு.. ரெண்டு பேரும் ஒரு நாள் கூட என் கிட்ட இதெல்லாம் சொன்னது இல்ல… அவங்க கிரேட் …
ரங்கநாதன் : ( அவளுடைய முதுகை வருடுகிறார் )
இதை எல்லாம் நீ எப்படித்தான் தாங்கிகிட்டியோ ? சந்திர பிரகாஷ் சாரி ஒன்னோட பயோலாஜிக்கல் பேரண்ட்ஸ் என்ன ஆனாங்கன்னு சொன்னாரா டிடெக்ட்டிவ்?
பூர்ணிமா : (கண்ணில் வழிந்தோடும் கண்ணீரை கைக்குட்டையால் துடைத்துக் கொள்கிறாள் )
இந்த ஆசிரமத்துல நமக்கு பிரசாதம் கொடுத்த கப்பிள் – வெள்ளைக் கூந்தல் பெண்மணி வெள்ளைத் தலை பெரியவர் …. அவங்க தான் என்னை இந்த உலகத்திற்கு கொண்டு வந்த என்னை பெத்த அம்மா அப்பா … சுசீலா சந்திர பிரகாஷ் ….
ரங்கநாதன் ( எழுந்து நிற்கிறார் ) வா… அவங்கள போய் பார்த்து பேசலாம் …
பூர்ணிமா : (எழுந்து நிற்கிறாள் ) வேண்டாம் மாமா ….அவங்கள தூரத்துலேந்து பார்த்துட்டேன் இல்ல அது போதும் …. அவங்க ஆய்ஞ்சு ஓய்ஞ்சு இங்க அடைக்கலம் ஆகி இருக்காங்க … பாசத்தை காட்டி நம்ம உலகத்துக்கு அவங்கள அழைச்சுகிட்டு வர வேணாம் .. நான் என்னிக்கும் கணேஷ் குமார் வசந்தியோட பொண்ணாவே இருந்துடறேன் அதைத்தான் நான் விரும்பறேன்… இதை எதையும் அம்மா அப்பா கிட்ட நீ சொல்லக் கூடாது …
ரங்கநாதன் : உன்னோட பக்குவம் என்னை நெகிழச் செய்யுதும்மா
(அவளுடைய கைகளைப் பிடித்துக் கொள்கிறார் )
பிரதீப் குமார் போய்ட்டாருன்னு நான் சொன்னப்ப உன் முகத்துல குரூர புன்னகை தெரிஞ்சுது அதுக்கு அர்த்தம் இப்ப தான் புரியுது …
பூர்ணிமா : அத்தை கிட்ட , அம்மா அப்பா கிட்ட உளறி வைக்க கூடாது . இதை கதையா எழுதக் கூடாது … சரியா ? வாயைத் திறத்து சொல்லு மாமா
ரங்கநாதன் : சரிம்மா என் மனசுக்குள்ளேயே வெச்சுக்கறேன்…
பூர்ணிமா : தோண்டி துருவி எடுத்த கதை எல்லாம் பேசினதுல நேரம் போனதே தெரியலை … டாக்சி புக் பண்ணிப் பார்க்கறேன். ..
(திரை )
ஒன்பதாம் காட்சி
(திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. கார்ப்பரேட் அலுவலகத்தின் மாநாட்டுக் கூடம் போன்ற காட்சி அமைப்பு . நாற்காலிகள் இருக்கின்றன.)
(பின்னணியில் ஓர் இளைஞரின் குரல்)
நம்முடைய சேர்மன் பிரசாத் அவர்களின் எழுபதாவது பிறந்த நாளை ஒட்டி அவர் சில அறிவிப்புகளை உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்படி எனக்கு கட்டளையிட்டிருக்கிறார். நாளை முதல் அவர் இந்த நிறுவனத்தின் வழிகாட்டியாக மட்டுமே இருப்பார். அவருடைய புதல்வி மேடம் சாந்தா அவர்கள் சேர்மன் பொறுப்பில் அமர்த்தப்படுகிறார். அவருக்கு உறுதுணையாக பிரசாத் சாரின் பேத்திகள் சாந்தி மற்றும் பூர்ணிமா இருவரும் இணை இயக்குநர்களாக பொறுப்பேற்றுக் கொள்வார்கள் .
(கரவொலி)
தாங்கள் அனைவரும் விருந்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்
(விளக்குகள் சில நிமிடங்கள் அணைக்கப்பட்டு மீண்டும் ஒளிர்கின்றன)
இப்பொழுது மேடையில் ஒரு பெரிய ஆசனத்தில் சாந்தா அமர்ந்து இருக்கிறார். அருகில் ஒரு சிறிய நாற்காலியில் சுபா அமர்ந்து இருக்கிறாள் .
சதாசிவம் , மேடையின் இடப்பக்கத்திலிருந்து வருகிறார்)
சதாசிவம் , பூங்கொத்தை சாந்தாவிடம் கொடுக்கிறார்
சதாசிவம் : வாழ்த்துக்கள் மேடம் …
சாந்தா : நன்றி … சந்தாஷமான நேரம் தான் .. எங்க பெரிய அண்ணன் சந்திர பிரகாஷும் அண்ணியும் வந்து சேர்ந்து இருந்தாங்கன்னா நல்லா இருந்து இருக்கும்
சதாசிவம் : அதுக்கு ஏழுமலை சுவாமிகள் தான் மனசு வைக்கணும்
சாந்தா : என்ன …
சதாசிவம் : அது ஏழுமலையான் அருள் கிடைக்கணும்னு சொன்னேன்.
சாந்தா : சுபா , இவர் மிஸ்டர் சதாசிவம் … பலன் கருதாம எதிர்பார்ப்பு இல்லாம எங்களுக்கு பலவிதத்துல சகாயம் செஞ்சு இருக்காரு … இது வேணும் அது வேணும் கேட்டதே இல்ல…
சதாசிவம் : இப்ப நீங்க தலைமை பொறுப்பு ஏத்துக்கறப்ப கேட்கலாம்னு பார்த்தேன் மேடம் ..
சாந்தா : கேட்காதவங்க கேட்கறீங்க … .. கேளுங்க தரேன் ..
சதாசிவம் : திருமண வாழ்க்கையில இறங்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் மேடம்
சாந்தா : காலம் போன காலத்துலயா ? சரி அதுக்கு நான் என்ன பண்ணனும் ?
சதாசிவம் : இப்ப எல்லாம் இறுதிச்சுற்றுல தான் எல்லாம் நடக்குது. ஒங்க பக்கத்துல உட்கார்ந்து இருக்காங்களே … சுபா அவங்க மதர் எங்க ஸ்டேட் தான் அதனால சுபாவை
சாந்தா : சுபாவை .. .
சதாசிவம் : எனக்கு கட்டிக் கொடுக்க சொல்லி அவங்க அப்பா அம்மா கிட்ட நீங்க பெண் கேட்கணும் மேடம் ….
சாந்தா : சுபா … அப்பாவோட ஸ்டிக் அந்த மூலைல இருந்தது பாரு அதை எடுத்துகிட்டு வா …
சதாசிவம் : அந்த ஸ்டிக் நான் பார்த்திருக்கேன் .. மேடம் … வரேன் …
(சதாசிவம் மேடையின் இடப்பக்கத்தை நோக்கி விரைந்து நடக்கிறார். சுபா புன்னகை பூக்கிறாள்.)
(திரை)
(நிறைந்தது)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |