மலரும் மணமும்




வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்.

திருமகள் திருமண மண்டபத்தில் வண்ணமயமான
மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன . நிகழ்ச்சிக்குச்
சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக வந்திருந்த பொதுத்துறை நிறுவன
அதிகாரி சுடர்விழி , ஏற்பாட்டாளர்களிடம் நன்றியைக் கூறி அவர்கள் தந்த பரிசினைப்
பெற்று நுழைவாயிலை நோக்கிச் செல்லும் போது , மெலிதான தேகம் கொண்ட ஓர் இளைஞி எதிரே வந்தாள் –
‘அம்மா மன்னிக்கவும் . தங்கள் சிற்றன்னையார் இந்த மண்டபத்தின் மாடியில் இருக்கிறார். தங்களைக் காண விழைகிறார்’ என்றாள்.
‘நன்றி நான் அவரைப் பார்க்கிறேன்’ என்று தூக்கிச் செல்லும் சாதனத்தில் ஏறாமல் , படிகளில் மெல்ல நடந்து அவளுடைய அன்னையின் தங்கை சுமதியைக் காணச் சென்றாள் .
அங்கே அவளுடைய சித்தி, சொகுசான ஆசனம் ஒன்றில் அமர்ந்து இருந்தார். மண்டபத்து நிர்வாகத்திற்கு சித்தி மிகவும் நெருக்கமானவர் போலும் என சுடர்விழி நினைத்தாள் .
அருகில் இருந்த சிறிய ஆசனத்தில் அமர்ந்த சுடர்விழி கேட்டாள் .
‘சித்தி நீ எங்கே இங்கே … ‘
சித்தியின் முகத்தில் மலர்ச்சி இல்லை என்பதை அறிந்தாள் சுடர்விழி .
சித்தி பேசலானார் –
‘நீ செய்வது எதுவும் உன் அம்மா அப்பாவுக்கும் பிடிக்கவில்லை . எனக்கும் பிடிக்கவில்லை..‘
‘நான் என்ன செய்து விட்டேன். நான் உண்டு என் வீடு உண்டு என் வேலை உண்டு என்று என் வாழ்நாள் செல்கிறது…’
‘உனக்குத் தகுதியற்றவனை மணம் முடித்தாய் பெற்றோர் சொல் கேளாமல்..‘
‘அந்தஸ்து வங்கி இருப்பு பார்த்துத்தான் பெண்ணாய்ப் பிறந்தவள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடு்க்க வேண்டுமோ? அதெல்லாம் கடந்த காலக் கதை அதற்கு இப்பொழுது என்ன?‘
‘அதற்கு இப்பொழுது என்ன தான் செய்ய இயலும் ? அவனைக் கைப்பிடித்ததோடு அவனைத் தாங்கு தாங்கென்று தாங்க வேண்டிய அவசியம் தான் என்ன? அவனுக்கு
உடல் சுகவீனம் என்றால் , நீ உன் பணிக்கும் போய்க் கொண்டு அவனுக்கும் விழுந்து விழுந்து பணிவிடை செய்ய வேண்டிய அவசியம்தான் என்ன ? இப்பொழுதெல்லாம் உடனிருந்து கவனிக்க ஆள் கிடைக்கிறார்களே அப்படி அவனைப் பார்க்க ஆளை அமர்த்தி விட்டு நீ உன் அம்மா வீட்டுக்கு வர வேண்டும் இதுதான் உன் அன்னையின் விருப்பம் . தாய் சொல்லைத் தட்டாதே…
சுடர்விழி எழுந்து நின்றாள் –
‘சித்தி … நீ என்னைத் தூக்கி வளர்த்தவள் என்பதால் என் கணவரை ஏக வசனத்தில் பேச உரிமை வந்திடாது. விபத்தால் உடல் நலிவடைந்த என் கணவனின் உடல் நலம் என் வருடல்களாலும் ஸ்பரிசத்தாலும் என்னுடைய கனிவான தெம்புரைகளாலும் தான் விரைவில் குணம் ஆகும் .
சில மருத்துவர்களின் கலகலப்பான பேச்சால் நோயாளியின் பாதி நோய் பறந்து விடுவது போல் தான் இது. தொடுதல் என்பது மகிழ்ந்து குலாவும் பொழுதுகளில் மட்டும் தானா? இன்பத்திற்கு மட்டும் தானா? கண்ணாளா துன்பத்தில் தோள் கொடுக்கிறேன் என்பதைத் தோளைத் தொட்டுத் தான் மனையாள் கணவனுக்கு உணர்த்த முடியும் …
கணவன் மருத்துவமனையில் இருக்க வீட்டில் தொலைக்காட்சியில் மூழ்கி இருக்கும் பெண்மணிகளைப் போல் என்னால் இருக்க முடியாது. என்னுடைய பாட்டியார், உங்களை எல்லாம் ஈன்றெடுத்தவர் ஒரு பழைய திரைப்பாடல் பாடுவார்:
என் அருகே நீ இருந்தால் உலகமெல்லாம் சுழலுவது ஏன்? –
இந்தப் பாடலில் கடைசி சரணம் – இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும் முழுமை பெற்ற காதல் எல்லாம் முதுமை வரை ஓடி வரும் …. அந்தப் பாடலைத் தேடிப் பிடித்துக் கேட்டுப் பார்.
மலரும் மணமும் போல் நாங்கள் என்றும் மணக்க மணக்க வாழ்வோம் . நான் விடை பெறுகிறேன் . சிற்றப்பாவுக்கு என் அன்பு விசாரிப்புகளைக் கூறிடு’
சுடர்விழி விடுவிடுவென படிகளில் இறங்கிச் சென்றாள்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |