கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2025
பார்வையிட்டோர்: 6,868 
 
 

(2007ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

அத்தியாயம் – 4

புது பிராஞ்ச், புது ப்ராஜெக்ட், அக்ரிமென்ட். ஆபிஸ் – என்று எந்நேரமும் அதே சிந்தனையாய் இருப்பவன்… இப்போது அத்தனையும் ரப்பர் கொண்டு அழித்ததுப் போல் நினைவெல்லாம் அவளைச் சுற்றியே ஓடியது. 

போலீஸ் ஸ்டேஷனில் சில பார்மாலிட்டியை முடித்துக் கொண்டு காரில் ஏறிக் கிளம்பினான். 

தனக்கு முன்பே அனுப்பி வைக்கப்பட்ட அவளை சாலையில் தேடினான். 

சற்று தூரத்திலேயே கண்களுக்கு தென்பட்டாள். கிழிந்திருந்தப் புடவையை போர்த்திக் கொண்டு, விந்தியபடி மெல்ல நடந்து கொண்டிருந்தாள். 

காரை ஓரமாய் நிறுத்தி விட்டு, அவளருகே சென்றான். 

“சத்யா!” 

திரும்பவே சிரமப்பட்டாலும், அந்த குரலுக்கு ஆச்சர்யத்துடன் திரும்பினாள். 

“ஏன்… எதுக்காக இப்படியெல்லாம்?” 

“….?”

“எப்ப இங்கே வந்தே?” 

“….?!”

“எப்படியிருக்கே?” 

“….?!”

எதற்குமே பதிலே தராமல் விரக்தியுடன் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு திரும்பி நடந்தாள். 

“ஏன் பேச மாட்டேங்கிறே சத்யா? வா.., எங்கே போகணும்னு சொல்லு… நானே கொண்டு போய் விட்டுர்றேன்!”

மெல்லத்தலையசைத்து விட்டு நடந்தாள். 

“ரொ… ரொம்ப அடிச்சிட்டாங்களா சத்யா?” 

“நல்லா கவனிக்கச் சொல்லி மேலிடத்து உத்தரவாச்சே? வலி கூடப் பரவாயில்லே… தாங்கிக்க முடிஞ்சுது. ஆனா, ஒவ்வொரு முறையும் என் அன்புக்காகவே அடிவாங்கிட்டிருக்கேனே… அதை தான் தாங்கிக்க முடியலே..!” 

அந்த வார்த்தைகள் அவனை சாட்டைக் கொண்டு அடிப்பதுப் போலிருந்தன. அவன் கால்கள் கட்டிப்போட்டதுப் போல் நின்றன. 

அவள்… திரும்பிப் பார்க்காமல் நடந்து கொண்டிருந்தாள். 


அவனுக்காகவே காத்திருந்தாள் ஹேமா! 

“என்னங்க ஆச்சு? அவளைப் பத்தி விஷயம் ஏதாவது தெரிஞ்சுதா?”

”சூடா காபி வேணும் ஹேமா… தலை வலிக்குது..”

“வள்ளி” என்று சமையல்காரம்மாவை அழைத்தாள். 

“வேணாம்… நீயே போட்டுக் கொண்டு வாயேன்! அவளை விட நீ தான் நல்லாப்போடறே!” 

“இதோ வந்துட்டேன்!” திருப்தியுடன் நகர்ந்தாள். 

‘மனைவியிடம் என்ன பதில் சொல்வது என்று சுத்தமாக யோசிக்கவே யில்லை. அவள் வருவதற்குள் பதிலை தயாரித்து விடலாமே!’ 

பத்து நிமிடத்தில் காபி கோப்பையுடன் வந்தாள். 

“ஸ்ட்ராங்கா… கொஞ்சம் ஷுகர் குறைச்சு போட்டு எடுத்து வந்தேன். குடிங்க!'” 

உறிஞ்சியவன், “எக்ஸலண்ட் ஹேமா!” என்றான். 

“சொல்லுங்க… அவ மேல கேஸ் ஃபைல் பண்ணியாச்சா?”

“இல்லே ஹேமா!” 

“பின்னே?” 

“கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கிட்டேன்!” 

“எ…ன்…ன?”

“ஆமாம் ஹேமா… அவ.. கடத்திட்டுப் போக வரலே… அவளோட குழந்தைய மாதிரியே நம்ம அபிலாஷும் இருந்ததால சாக்லேட் குடுத்திருக்கா?” 

“அதெப்படி? கரெக்டர் அபியோட பேரைச் சொல்லியில்லே கூப்பிட்டிருக்கா?”. 

“இந்த மேட்டரை இத்தோட விட்டுடேன் ஹேமா! அவ தப்பானவ இவ்லேன்னு தெரிஞ்சப்பிறகும் தண்டிக்கறது ரொம்ப தப்பு. அவ ஏற்கனவே செய்யாத தப்புக்கு நிறையவே அடிவாங்கிட்டா… பாவம் நடக்கக் கூடமுடியலே!” 

“செத்து ஒழியட்டும்!” 

“ஹே..மா!” 

“ஏன் கத்தறீங்க? என்னாச்சு உங்களுக்கு? அவளைப் பார்த்தா சின்னப்பிள்ளைக் கூடச் சொல்லும்… அவகிட்டேதப்பு இருக்குன்னு. மூணு நாளா தூக்கமில்லாம செத்துக்கிட்டிருந்தேன். நீங்க என்னடான்னா கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கிட்டேன்னு வந்து நிக்கறீங்க. அபிலாஷ் மேல எனக்கிருக்கிற பாசம் கூட உங்களுக்கு இல்லிங்க.” 

“என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு உயிரை வாங்காதே. என்னைக் கொஞ்சம் தனியா விடேன்…ப்ளீஸ்!” 

அந்த கத்தலில் ஸ்தம்பித்தவள் விருட்டென உள்ளே போய் விட்டாள்.

அவனும் சொல்லிக் கொள்ளாமலே… அலுவலகம் கிளம்பிப் போனான். ஆனால் அங்கேயும் மனசு வெள்ளாடு மாதிரி சத்யாவைச் சுற்றியே ஓடியது. 

என்றும் இல்லாத அதிசயமாக அன்று சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டான். 

பணத்தால் இழைத்து கட்டப்பட்ட வீடு! 

கிரானைட்டும், குழல் விளக்குகளும், இம்போர்டட் சோபா, நாற்காலிகளும், தேக்கு, ரோஸ்வுட்டால் செதுக்கப்பட்ட சிலைகளும் என… ஹரி தன் விருப்பப்படி கட்டிய கனவு வீடு! 

அழகான, அன்பான மனைவி நேஹமாவால் இன்னும் பிரகாசமாயிருந்தது. 

ஹேமா, அபியை மடியில் அமர்த்தி என்னவோ ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள். 

அவளின் வாஞ்சையும், அன்பும் அவனை நெகிழ்த்தின.

இவனைப் பார்த்தும் பார்க்காமல் அமர்ந்திருந்த அவளின் பக்கத்தில் போய் அமர்ந்து தோளை அழுத்தினான். 

“கைய எடுங்க….” 

“ஹேமா!” 

“எடுங்கன்னு சொல்றேனில்லே?” 

“ஏன் இப்படி…” 

“ப்ளீஸ்… உங்கக்கிட்டே பேச எனக்குப் பிடிக்கலே…. என்னைக் கொஞ்சம் தனியா விட்டா புண்ணியம்!” 

முகத்திலடிப்பதுப் போல் பதிலடி!

திகைத்து தான் போனான். 

இத்தனை வருடதாம்பத்யத்தில் அதிகப்படியான கோபமும், எரிச்சலும் இன்று தான் வெளிப்பட்டிருக்கிறது. அது பிள்ளையின் பொருட்டு என்று சமாதானம் பண்ணிக் கொண்டாலும்… வலித்ததை மறுக்க முடியாதே? 

ஒதுங்கிப் போனான். 

ஹேமாவும் விலகிப் போனாள். 

நாட்கள் கடந்தன. ஒதுங்கலும், விலகலும் ஒட்டிக் கொள்ளவேயில்லை. 

ஹரியினுள் நிம்மதியற்ற அவஸ்தை! ஊடுருவிப் பார்த்தால்… அது ஹேமாவினால் ஏற்பட்டதல்ல எனப் புரிந்தது. 

சத்யா…. சத்யாவினால்! 

தவித்த மனதிற்கு ஆறுதல் தேடி கோவிலுக்குச் சென்றான்.

சௌடேஸ்வரி அம்மன் கோவில் அது! 

அவன் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர்துரத்தில் இருந்தது. திருமணமான புதிதில் வந்தது. அதோடு இப்போது தான் வருகிறான். 

கோவில் இன்னும் விரிவாக்கப்பட்டு புதிதாய் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன. 

சன்னதியின் பின்புறம் பெரிய நாகலிங்க மரமும், நாவற்பழ மரமும் இருந்தது. மரத்தினடியில் பாம்புப்புற்று இருந்ததால் பாலும், முட்டையும் வைக்கப்பட்டு கெட்ட வாடை வீசும். 

ஆனாலும் ஹரிக்கு அந்த இடம் ரொம்பவேப் பிடிக்கும். புது மனைவியுடன் கடவுள் சன்னதியில் மனம் விட்டுப்பேசி மகிழ்ந்த இடமல்லவா? 

அந்த இடம் நோக்கிச் சென்றவனை அதிர்ச்சி அறைந்தது.

அந்த இடத்தில் சத்யா அமர்ந்திருந்தாள். 

கண்களில் நீங்காத சோகம். அடிபட்ட காயங்களின் வீக்கமும், தழும்பும் மிச்சமிருக்க… எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள். 

“சத்யா!” 

ஒரு திடுக்கிடலோடு அவனைப் பார்த்தவள் அதே வேகத்தில் எழ முற்பட… சேலைக்குள்ளிலிருந்து வெளியே வந்தது… 

தாலி! 

கயிறில் எண்ணெய் பிசுக்குடன் அரைப் பவுன் தாலி கண்களில் பட… சட்டென எடுத்து உள்ளே மறைத்துக் கொண்டாள். 

அவளையே கண்கள் விரியப் பார்த்தவனுக்கு நெஞ்செல்லாம் அரித்தது. கண்கள் கரித்தது. 

சத்யாவைப் பற்றிய கடந்த காலம் கண் முன் நின்றது. 

அத்தியாயம் – 5

மண்டபத்தில் திருமணம்! 

உறவினர்களாலும், நண்பர்களாலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

புரோகிதர் தனக்கு நினைவிற்கு வந்த மந்திரங்களை எல்லாம் சொல்லி நெய் ஊற்றி புகையை உற்பத்தி பண்ணிக்கொண்டிருந்தார். 

பட்டு வேட்டி சட்டையில் அமர்ந்திருந்த ராம், யாருக்கும் தெரியாமல் இடக்கையால் சத்யாவின் காலை கிள்ளிக் கொண்டிருந்தான். 

யாராவது பார்த்து விடப் போகிறார்களோ என்ற பதைப்புடன் சத்யா தவித்ததை ஓரக்கண்ணால் ரசித்தான். 

மணப்பந்தலை சுற்றி ராமின் உறவினர்களே ஆக்கிரமித்திருக்க, ராம் அம்மாவைத் தேடினாள். 

நெற்றியில் பட்டையாய் விபூதிப் பூசியிருந்த மைனாவதியம்மாள் கண்ணாடியணிந்த சுண்களில் வழியே மனமேடையை பார்த்தபடி கீழே முன் வரிசையில் அமர்ந்திருந்தார். 

பார்த்து விட்ட ராம் சங்கடப்பட்டால். 

அம்மாவிற்கு திருமணத்தில் விருப்பமில்லை. அவனுக்கென்று ரதி தேவி மாதிரி பெண்ணைப் பார்த்து முடிவு செய்திருத்தார் ரகசியமாக! நல்ல வசதி, கார், வீடு, ரொக்கம் என்று நிறைய அள்ளிக்கொண்டு வர பெண் தயாராய் இருந்த நிலையில், மட்டமான நிறமும், சுமாரான அழகும், வக்கற்ற குடும்பமுமாய் இருந்த சத்யாவை தான் திருமணம். செய்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்து சம்மதம் வாங்கினான். 

சத்யாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே கொஞ்சமும் பிடிக்காமல் போனது மைனாவதிக்கு. 

சத்யாவின் பெற்றோருக்கும் இந்தத் திருமணத்தில் உடன்பாடில்லை. அவர்கள் குடும்பத்தில் முதல் காதல் திருமணம். அதுவும் வேறு ஜாதியில்! மைனாவதியின் அலட்சியமானப் பார்வையும், பேச்சும் கலக்கத்தைத் தந்தது. 

பெண் சந்தோஷமாய் வாழ்வாளா? மாப்பிள்ளை அருமையானவர் தான். ஆனால் நல்ல குடும்ப வாழ்க்கை அமைய அது மட்டும் போதுமா என்ன? அதுவும் சத்யா அந்தளவுக்கு திறமைசாலி அல்லவே! 

திருமணம் எங்கள் முறைப்படி தான் நடக்க வேண்டும் என்று ஸ்ட்ரிட்டாக சொல்லி லிட்டான் மைனாவதி. அதனால் மனம் சுருங்கிப் போன, சத்யாவின் பெற்றோர் வைகுந்தனும், மகாலட்சுமியும் நான்கு பேரைப் போல கும்பலோடு கும்பலாய் அமர்ந்து விட்டனர். 

அண்ணன் தீபன் வாசலில் நின்று வருகிறவர்களை வரவேற்பது போல் பாவ்லா செய்ய… அண்ணிதான் ஓடி ஓடி குளிர்பானங்களை சப்ளை செய்து கொண்டிருந்தாள். 

சத்யாவின் குடும்பம் வாழ்ந்து கெட்ட ரகம். தங்களால் முடிந்தளவு பொன் வைக்கிற இடத்தில் பூவைத்து ஒதுங்கிக் கொண்டனர். உறவினர்கள் சூழ்ச்சியால் வீட்டின் மேல் கேஸ் போட்டு, ஏலமும் போட்டு கை விட்டுப் போயாச்சு. பிள்ளையின் தயவில் காலம் ஓடிக் கொண்டிருந்தது. 

எதோ பிள்ளையாய் பார்த்து தங்கள் சக்திகேற்ப தங்கையை திருமணம் செய்துக் கொடுப்பார் என்று நினைத்திருந்த வேளையில் வசதியான வீட்டுப்பிள்ளையை காதலித்துத் தொலைந்து விட்டால்… பாவம் தீபனும் தான் என்ன செய்வான்? 

நண்பன் விக்னேஷை அனுப்பி அம்மாவை மேடைக்கு வரச் சொன்னான். கொஞ்சம் பிகு பண்ணி பிறகு மேடை ஏறி விட்டாள் மைனால்தி.

“உங்கம்மா, அப்பா எங்கே சத்யா?” மெல்லக் கேட்டான்.

“தெரியலையே!” 

பார்வையால் தேடியவனுக்கு அகப்பட்டார்கள் இருவரும்.

“என்ன லட்சணம் இது? பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க? விக்னேஷ் அவங்களையும் கூட்டிட்டு வா!” 

புரோகிதர் இருவருக்கும் தட்டில் கூரைச்சேலை, வேட்டி, சட்டை வைத்து உடை மாற்றிக் கொண்டு வர அனுப்பி வைத்தார். 

இதற்கென்றே காத்திருந்தது போல் உறவினர் கும்பலொன்று ராமின் பின்னாடியே சென்றது. 

“ராம்… உன்னை நினைச்சா ஆச்சர்யமாயிருக்கு!'” என்றாள் கும்பகோணத்திலிருந்து வந்திருந்த சீதா சித்தி. 

“ஏன் சித்தி?” உடை மாற்றிக் கொண்டேக் கேட்டான். 

“ஒரு சட்டைன்னாக் கூட எங்கண்ணனோட செலக்ஷன் பெஸ்ட் செலக்க்ஷனா இருக்கும்னு உன்னைப்பத்தி பெருமையா சொல்லுவான் என் பிள்ளை வாசு. ஆனா, பொண்ணு விஷயத்தில் வொர்ஸ்ட்டா இருக்கே ராம்!” 

“….?”

“நானும் அதைத் தான் சொல்ல நினைச்சேன்! நம்ம சொந்தத்துல இல்லாதப் பொண்ணுகளா? என்னன்னு நினைச்சி இவளைப் பிடிச்சே? உன் கலருக்கும், அழகுக்கும் அவ உன் பக்கத்துல இருக்கறதேத் தெரியலே. மனசுக்கு திருப்தியாவே இல்லே. மைனா இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டான்னு தான் ஆச்சர்யமாயிருக்கு.” என்றாள் திருச்சி அத்தை காமாட்சி. 

“….?”

”நான் கூட ஒரு வேளை பொண்ணு வசதி போல… பணத்துக்கு ஆசைப்பட்டுதான் கல்யாணம் பண்ணிக்கிறான் போலன்னு நினைச்சா… அதுவுமில்லே. கல்யாணப்பொண்ணு போட்டிருக்கிறதில பாதி கவரிங் நகை தான்.” 

”சித்தி ப்ளீஸ்… நிறுத்தறீங்களா?” என்றான் ராம் கோபமாக. 

”எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. அவளுக்கு என்னைப் பிடிச்சி ருக்கு. பணம் எனக்கு அவசியமில்லே. என் சத்யா அப்படியொன்னும் மோசமாயில்லையே! தேவையான அழகோட லட்சணமாகவே இருக்கிறா. கோளாறு நீங்க பார்க்கிறப் பார்வையிலே தான் இருக்கு, மனசிருந்தா ஆசிர்வதியுங்க. இல்லேன்னா கம்மாயிருங்க. 

இப்படி இந்த நேரத்திலே என்கிட்டே வந்து பேசறது அநாகரீகமாத் தெரியலேயா? உங்க பிள்ளைங்களுக்கு உங்க ஆசைப்படி பண்ணி வையுங்க. அதை விட்டுட்டு…” 

“அது சரி…. இப்பவே இவ்ளோ சப்போர்ட்டா. மைனா பாடு திண்டாட்டம் தான்!” நமுட்டுச் சிரிப்புடன் வெளியேற… கசப்புடன் அவர்களைப் பார்த்தான். 

ஒரு வழியாய் பலரின் வாழ்த்தோடு, கெட்டி மேளம் முழங்க, அட்சதை மழைப்பொழிய சத்யா கழுத்தில் தாலிக்கட்டினான் ராம். 

சத்யா முகத்தில் தான் என்னவொருப் பரவசம்? லேசாய் கண்கள் மினுக்க காதல் கணவனை நன்றிப் பெருக்குடன் பார்த்தாள். 

கனிவான கண்களும், நேர்த்தியான புருவங்களும், ஒற்றைக்கல் மினுக்கிய கூர்மையான நாசியும், புன்னகையை தேக்கி வைத்த உதடுகளுமாய்… என்னக் குறை என் சத்யாவிற்கு? 

வசதி வாய்ப்பற்ற நடுத்தர வர்க்கத்தில் பிறந்ததால் எல்லாமே குறைகளாய் தெரியுமோ? 

சித்தியும், அத்தையும் சும்மாயிருக்கவில்லை என்பதை வீட்டிற்கு வந்து பால், பழம் சாப்பிட்ட உடனே தெரிந்து போயிற்று. 

‘அம்மா மயங்கி விட்டாள்’ என்ற செய்தி கேட்டு பதறி ஓடி வந்தான்.

“என்னாச்சும்மா?” அதற்குள் தண்ணீர் அடித்து புகட்டி எழுப்பி அமர்த்தியிருந்தனர். 

”காலைலேர்ந்து ஒண்ணுமே சாப்பிடலே ராம். பெரியம்மா அழுதுக்கிட்டே இருந்தாங்க.” என்றான் வாசு. 

“காலைலேர்ந்து சாப்பிடலியா? என்னம்மா… என்னம்மா… என்ன இதெல்லாம்?” 

“…?!”

“அழுதியாமே… ஏன்?” 

“…?!”

“இப்ப பதில் சொல்லப்போறியா இல்லையா?” 

மைனாவதி, அவளையே கலவரமாய் பார்த்தபடியிருந்த சத்யாவையும், மற்ற உறவினர்களையும் சங்கடத்துடன் பார்த்தாள். 

“சத்யா… நீ பக்கத்து ரூம்ல இரேன். வாசு எல்லோரையும் கூட்டிட்டுப்போ” 

அனைவரும் அகல… அம்மாவின் தோளை பாசத்துடன் தடவிக் கொடுத்தான். 

“சொல்லும்மா… என்ன பிரச்சனை உனக்கு?” 

“என்னை மறந்துடுவியா ராம்?” 

“எதுக்கு?” தூக்கி வாரிப்போட்டது. 

“இப்பவே உன் பொண்டாட்டிய தலைல தூக்கி வச்சிட்டு ஆடறியாம். உன் பொழைப்பு நாறப்போகுதுன்னு காது படவே பேசறாங்க ராம். என்னை கை விட்ருவியா? உன்னைப் பிரிஞ்சு ஒரு நாள் கூட இருந்ததில்லையே… என்னை முதியோர் இல்லத்துக்கு அனுப்பிடுவியா?” 

“ஐய்யோ.., என்னம்மா பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு? எனக்கு எப்பவுமே நீதாம்மா முக்கியம்! சத்யாவை விடவும் நீ தான் எனக்கு முக்கியம். இந்த வீட்டுக்கு எப்பவுமே நீ மட்டும் தாம்மா மகாராணி. நீ விரும்பாத எந்த விஷயமும் நடக்காது. எனக்கு தெய்வமே நீதானம்மா. நீ நிம்மதியா இருக்கறது சொந்தக்காரங்களுக்கு பிடிக்கலே… உன் மென்மையான மனசைப் புண்படுத்திட்டாங்க. மறுபடியும் சொல்றேன். எங்கம்மாதான் எனக்கு எல்லாமே…. போதுமா?” 

“போதும் ராம்!” நிம்மதியாய் மூச்சு விட்டாள் மைனாவதி. 

அத்தியாயம் – 6

இரண்டு அறைகள் கொண்ட சாதாரண வீடு தான் அது.

வைகுந்தன் எல்லாம் இழந்து நொடித்துப் போன பின் வேறு வேலையைத் தேடிக்கக்கூட திராணியற்றுப் போனார். சின்னப்பிள்ளை தனிக்குடித்தனம் போய்விட்டான். பெரியவன் கூட தான் மூவரும் இருந்தனர். சும்மா சொல்லக் கூடாது தன் சக்திக்கேற்றார் போல பெற்றவர்களை நன்றாகவே பார்த்துக் கொண்டான். தங்கையைப் படிக்க வைத்தான். தங்கைக்கு தான் பார்க்கும் அலுவலக நண்பர்களிடம் மாப்பிள்ளை பார்க்கும்படி சொல்லியும் வைத்திருந்தான் தீபன். அதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. அவன் மனைவி சாந்தினியும் நல்ல பெண். ஆனாலும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் மட்டந்தட்டி பேசும் ரகம். 

அன்று முதலிரவு! 

தரையில் பெட்டை விரித்து அதன் மேல் கொஞ்சம் பூத்தூவி, ஒரு தட்டில் ஸ்வீட், பழங்கள், பக்கத்தில் குவளையில் பால்! 

அறைக்குள் நுழைந்த ராமிற்கு என்னவோ போலாகி விட்டது.

கட்டில் கூடவா கிடையாது? 

ஆயிரம் கனவுகளுடன் உள்ளே வந்த சத்யாவை அனைத்து கீழே சம்மணம் போட்டு அமர்ந்து விட்டான். 

“நீ சினிமாவெல்லாம் பார்ப்பியா சத்யா?” 

“ம்…!” 

“அப்ப கண்டிப்பா பர்ஸ்ட் நைட் சீனெல்லாம் பார்த்திருப்பியே…!” 

“ம்!” என்றாள் நாணத்துடன். 

“ஆனா, கண்டிப்பா நம்மளை மாதிரி தரையில் பர்ஸ்ட் நைட் கொண்டாடி இருக்க மாட்டாங்க” 

சத்யா சங்கடத்துடன் கணவனை ஏறிட்டாள். 

“ஏன் இவ்ளோ மட்டமா நடந்துக்கறாங்க உங்க வீட்லே?” 

“ஸாரிங்க… உங்களுக்கு தான் தெரியுமே… நாங்க அண்ணனை சார்ந்து தான் வாழறோம். நாங்க எல்லோருமே தரையில தான் வாழறோம். நாங்க எல்லோருமே தரையில தான் படுத்துப்போம். அண்ணன் ரூம்லே மட்டும் ஒரு கட்டில் இருந்தது. அதுவும் உடைஞ்சுப் போய்ட்டதால தான்… எ… எனக்குப் புரியுதுங்க. ஆனா தப்ப நினைச்சுக்காதீங்க…” 

”ப்ச்.. அதில்லே சத்யா, நான் தான் என் வீட்லே இல்லாத பொருளான்னு எந்த சீரும் வேண்டாம்னுட்டேனே! அந்தப் பெருந்தன்மை ஏன் இங்கே இல்லே? நம்ம பர்ஸ்ட் நைட்டுக்காகவாவது ஒரு புதுக்கட்டில் வாங்கியிருக்கலாமே!” 

“ஸ… ஸாரிங்க!” 

“மூடே ஸ்பாயில் ஆகிடுச்சு சத்யா. எனக்குத் தரையிலே படுத்தே பழக்கமில்லே. இதிலே நமக்கு பர்ஸ்ட் நைட்ங்கறது நினைச்சே பார்க்க முடியலே. குட்நைட்!” 

அவள் கன்னத்தில் இயந்திரத்தனமாய் முத்தமிட்டு திரும்பிப் படுத்து விட்டான். 

அத்தனை பலூன்களும் ஒரு சேர ஊசி கொண்டு உடைக்கப்பட்ட தினுசில் மனசு வலித்தது சத்தியாவிற்கு. 

பாலும் பழமும் அவளைப் பரிதாபமாய் பார்த்தன. 


மறுவீடு வந்திருப்பதால்… ஒரு வாரம் ராம் மாமியார் வீட்டில் இருந்தாக வேண்டிய கட்டாயம். அறைக்குள் நடந்த மனத்தாங்கலை சத்யா யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. 

காலை டிபன் சாப்பாடு முடித்ததும் தீபன், ராமிடம் இரண்டு சினிமா டிக்கட்டுகளை தந்தான். 

“இந்தாங்க மச்சான். சத்யாவும் நீங்களும் சினிமாவுக்கு போய்ட்டு வாங்க”. 

வாங்கிப் பார்த்தான். முதல் வகுப்பு டிக்கட் தான். நல்ல படம் தான். ஆனால் தியேட்டர்? 

சத்யாவுடன் கிளம்பியவன் வேறு படத்துக்குப் போனான்.

“என்னங்க… இந்தப் படத்துக்கா அண்ணன் டிக்கட் வாங்கியிருந்தார்?” 

“இல்லே!”

“பின்னே?” 

“ஸாரி சத்யா. திரும்பவும் உன்னை சங்கடப்படுத்தறேன் இவ்லே? அந்த தியேட்டர் ரொம்ப பழசு, மூட்டைப் பூச்சி கடிக்காம யாரும் வெளியே வரமுடியாது. எனக்கு இந்த அபிராமி, சத்யம், மாயாஜால்னு போய் தான் பழக்கம். உங்க வீட்லே மாப்பிள்ளைன்னா, எவ்வளவு முக்கியமானவர், எப்படி கவனிச்சுக்கனும்ங்கற இங்கிதம் தெரியலேன்னு நினைக்கிறேன். சரி! பரவாயில்லே விடு!”

கூனிக்குறுகிப் போனாள் சத்யா. 


இரவு உணவானதும் “வர்றேன் சத்யா” என்றான்.

“எங்கே புறப்படறீங்க?” 

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். நான் அவங்க பக்கத்தில் இருந்தால் தான் தெம்பாயிருப்பாங்க. நீ எங்கே போய்டப் போறே? நான் எங்கே போய்டப் போறேன்? காலைல வர்றேன். மனசுல எதையும் வச்சுக்காதே!” 

“ம்…!” என்றாள் எதிர்பார்ப்புகள் பொடிப் பொடியாக. சத்யாவின் பெற்றோர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

“எ… என்ன மாப்ளே… வீட்டுக்குக் கிளம்பறீங்களாம். அப்படி போகக் கூடாது மாப்ளே!” என்றார் புரியாத பார்வையுடன் வைகுந்தன். 

“சம்பிரதாயமெல்லாம் நம்ம சூழ்நிலைகளுக்காக தான் மாமா! அம்மாவுக்கு உடம்பு சரியில்லே. நான் பக்கத்துல இருக்கணும். சத்யாவே, ‘முதல்ல அத்தைய சுவனிங்கன்னு’ வற்புறுத்தினா. காலைல வந்துடறேன். வர்றேன் மாமா. அத்தை வர்றேன். தீபன்…” கண்களால் விடை பெற்றுச் சென்று விட்டான். 

அன்று மட்டுமல்லாமல் அதற்கடுத்து வந்த நாட்களிலும் இரவானதும் அம்மா வீட்டிற்குச் சென்று விடுவான். 

தெருவில் உள்ளவர்களுக்கு விஷயம் கசிய, சத்யாவின் தலை தெரிந்தாலே நமுட்டு சிரிப்புடன் கிசு கிசுத்தனர். 

சாந்தினி ஒரு படி மேலே! 

“ஏன் சத்யா… நிஜமாகவே ரெண்டு பேரும் லவ் பண்ணீங்களா? இல்லே ஒன் சைட் லவ்வா?” 

“என் அண்ணி அப்படி கேக்கறீங்க?” 

”அவர் சைட்ல அப்படி ஒண்ணும் தெரியலியே! ஆளைப் போட்டு அம்மாவைப் பார்த்துக்க முடியாதா? இவர்தான் ஓடணுமா? விநோதமா யிருக்கு, புதுசா கல்யாணம் ஆனவங்க எப்படியிருப்பாங்க? அதுவும் ஆம்பளைங்க… காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பாயற கணக்குல அட்லீஸ்ட் குறைஞ்சது மூணு மாசமாவது இருப்பாங்க. ம்… பார்த்துக்க சத்யா. நீதான் புத்தி உத்தியா நடந்துக்கணும். அவர் எப்பவும் உன்னையே சுத்தி வர்ற மாதிரி மந்திரம் போடு… தலையணை மந்திரம் தான்!” 

அண்ணி கிண்டலாய் மனதை நோகடித்தாலும் அவள் சொன்னதிலும் உண்மை உறைந்திருப்பதை உணர்ந்தாள். கவலைப்பட்டாள்… யோசித்தாள்.


“ஏம்ப்பா இங்கே வந்துட்டே?” என்று உள்ளூரப் பொங்கி சந்தோஷத்தை மறைத்துக் கேட்டாள் தாய் மைனாவதி. 

“நேற்று நீ மயங்கி விழுந்ததிலேர்ந்து என் மனசு எதிலேயும் ஒட்டலேம்மா. ”அத்தை உடம்பு சரியில்லாம இருக்கறப்ப நீங்க அங்கே இருக்கறது தான் நல்லது’ன்னு என்னை அனுப்பி வச்சவளே உன் மருமகள் தாம்மா. அவளுக்கு இப்பவே உன்மேல எவ்வளவு அக்கறை தெரியுமா?” என்றான் சத்யாவையும் விட்டுத்தராமல். 

“அப்படியா?” என்றதோடு சரி. 

அதன் பிறகும் தினமும் இரவில் வந்துவிட கிஞ்சித்தும் தடுக்க முற்படாத மைனாவதி உற்சாகமானாள். 

சம்பிரதாயங்கள் முடிந்து சத்யா கணவனுடன் புகுந்த வீட்டிற்கு சென்றாள்.  

நிஜத்தில்… அன்று தானே அவர்கள் முதலிரவு? பலவித எதிர்பார்ப்புடன் உடல் முழுக்க ஒருவித அவஸ்தையுடன் நடமாடினாள் சத்யா.. 

அதே சமயம்… ஒரு பக்கம் பயமாகவும் இருந்தது. இப்போதும் ஏதாவது காரணம் சொல்லி ராம் அம்மா கூடவே படுத்துக் கொண்டு விடுவானோ என்று! 

ஆனால், அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை. ராம்… ரொம்பவே ஆசையுடன், நேசமுடன், காதலின் மூர்க்கமுடன் நடந்து கொண்டான். 

மனதிலிருந்த பாரமெல்லாம் காணாமல் போனது. திருப்தியும், களைப்பும் அவளை பேரழகியாக காட்டியது. கணவனின் நெஞ்சின் மீது தலை வைத்திருந்தவள் அவன் கன்னத்தை ஆசையுடன் கடித்தாள். 

“எப்பங்க போகலாம்?” 

“எங்கேடா?”

“கல்யாணத்துக்கு முன்னாடியே நாம ப்ளான் பண்ணினோமே… ஹனிமூனுக்கு போகலாம்னு! எப்ப, எங்கே போறதுன்னு டிசைட் பண்ணிட்டீங்களா?” 

“போகலாம்…!” 

“அதான் எப்ப?” 

“அம்மாவுக்கு உடம்பு குணமானதும்!” 

“அவங்களுக்கு என்ன உடம்புக்கு?” என்று கேட்க நினைத்து, அமைதியானாள். 

‘அத்தை ஆரோக்கியமாத்தானே இருக்காங்க. பிறகேன்… இவர் இப்படி சொல்றார்?’ 

திருமணத்திற்கு முன்பு ராமுவுக்கும் சத்யாவுடன் ஹனிமூனுக்கு குறைந்தது இருபது நாட்களாவது காதல் வானில் சிறகடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான் தான். ஆனால், திருமணமானதும், ‘என்னை மறந்துடுவியாராம்?’ என்று கேட்டது அவன் உயிர் வரை வதைத்தது. 

எந்த சந்தர்ப்பத்திலும் அம்மாவின் மனதில் அப்படியொரு எண்ணம் மறுபடி வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அதனால் அடக்கி வாசிக்க வேண்டும் என்று முடிவு செய்தவன், தன்னை அம்மா ‘சத்யாவிடம் அடங்கிப் போய் விட்டான்’ என்று எண்ணம் வந்து விடக்கூடாது என்பதற்காக… 

ஹனிமூன் போக வேண்டும் என்ற ஆசையை வழித்தெறிந்து விட்டான்.

– தொடரும்…

– என் பிரியசகி (நாவல்), முதற் பதிப்பு: ஜனவரி 2007, தேவியின் கண்மணி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *