இவரைத் தெரியுமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2025
பார்வையிட்டோர்: 179 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உலகில் தர்மசங்கடமான சில காரியங்கள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அதனால் உண்மைகள் சிற்சில சமயங்களில் வாயடைத்துப் போவதும் உண்டு. இதற்குப் பெயர் தான் காலத்தின் கோலம்….! நாளார்ந்த வட்டத்தில் நாமறிந்து கொள்ளும் நயத்தகு பட்டறிவுகள்; நானிலம் நமக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நாண்மலர்ப் பாடங்கள்….!

முன்பெல்லாம் ஒரு சொற்றொடரின் மூலம் “இவரைத் தெரியாதார் இருக்க முடியாது” என்னும் பொருளை உணர்த்துவார்கள். “இவர் பேரைச் சொன்னால் அழுத பிள்ளை வாய் மூடும்” என்பதே அந்த மரபுச் சொற்றொடர். ஆம்; இவர் இந்தப் பகுதியில் மிகப் “பிரபல்யம்” என்பதை இவ்வாறு சொல்லிக் கொள்வார்கள்.

இப்போது கூட அத்தகைய “பிரபல்யங்களுக்கு” உரிய தனிச் சொற்றொடர் உண்டு. “இவரைப் பற்றித் தெரியாதார் இந்த வட்டாரத்தில் இருக்க முடியாது” என்பதே அந்த மாற்றுச் சொற்றொடர்.

வாக்கியங்களின் வார்த்தை அமைப்புகளில் தான் வித்தியாசமே தவிர, பொருள் என்னவோ இரண்டும் ஒன்றுதான்.ஒவ்வொரு காலக் கட்டத்திலும் புதுப்புது சொல் நயங்கள் ஏற்படுவதுண்டு. அடிப்படையை எண்ணிப் பார்த்தால் கருத்து அமைவுகளில் மாறுபாடில்லை.

“இவரைத் தெரியுமா?” நாளிதழ்களில், ஒவ்வொரு நாளும் என்று சொல்லி விட முடியாது; அவ்வப்போது செய்திகள் பிரசுரமாகிக் கொண்டே இருக்கின்றன. சிங்கப்பூரில் வெளியாகும் ஒரே ஒரு தமிழ் நாளிதழ் ‘தமிழ் முரசில்’ அறிவிப்புச் செய்தி புகைப்படத்துட அல்லது புகைப்படம் இல்லாமலும் அவ்வப்போது வெளிவருவதுண்டு.

அதிகாலை ஆறு மணியளவில் துயில் நீங்கி எழுந்து “பெட் காப்பி’ அருந்திக் கொண்டே செய்தித்தாள் படிக்கும். பழக்கமுடைய சிவராமன், அன்றைய “தமிழ் முரசு நாளிதழில் பிரசுரிக்கப்பட்டிருந்த “இவரைத் தெரியுமா?” என்ற புகைப்படத்துடன் இருந்த அறிவிப்புச் செய்தியைப் பார்த்தவுடன் அதிர்ந்து போனார். அந்தப் படத்தையும் அதனடியில் எழுதப்பட்டிருந்த வாசகங்களையும் பலமுறை படித்துக் கொண்டே இருந்தார். அவர்தம் முகமும் மனமும் என்றுமே இல்லாத அளவுக்குச் சூம்பிக் கருகிக் காய்ந்தது.

“ஏறக்குறைய எழுபது வயது மதிக்கத்தக்க இவர் ஜுரோங் பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். தகவல் கிடைக்கப் பெற்று விரைந்து சென்ற போலீசார் இவரை அணுகி விசாரித்த போது, அவரிடம் அடையாளக் கார்டும் இல்லை; அவருக்கு முன்னாளைய வாழ்வு நிலைகள் பற்றிய எந்த நினைவும் இல்லை. இவரது உறவினர்கள் – நண்பர்கள் அல்லது இவரைப் பற்றித் தெரிந்தவர்கள் இருப்பாராயின் தயைகூர்ந்து தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம். இப்போது இவர், சமூக விவகார அமைச்சின் கண்காணிப்பில் முதியோர். இல்லத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். விபரங்களுக்குக் கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்”.

“தமிழ் முரசு” நாளிதழில் பிரசுரமாகியிருந்த அறிவிப்புச் செய்தியையும் தணிகாசலம் அவர்களின் புகைப்படத்தையும் மாறி மாறிக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். சிந்தனைக் கடலில் மூழ்கியிருந்த சிவராமனின் கண்களில் நீர்த்துளிகள் தளும்பிக் கொண்டிருந்தன. ஆம்; சிவராமன் தன்னையுமறியாமல் கலங்கிக் கொண்டிருந்தார். கலங்கியிருந்தாரா? புழுங்கியிருந்தாரா? என்பது கடவுளுக்கே வெளிச்சமாகும்.

சிவராமன் அவர்களின் சிந்தனை கட்டறுந்து சிற்சில ஆண்டுகளுக்குப் பின்னால் சிறகடித்துப் பறந்து சென்று நின்றது. துயில் நீங்கி எழுந்து, தூக்கக் கலக்கத்தைக் கலைக்கும்”கடுங்காப்பி” அருந்தி, ஓர் அரைமணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம் செய்தித்தாளினை மேலோட்டமாகப் பார்த்து முடித்து விட்டு, காலைக் கடன்களுக்குச் செல்லும் வழக்கம் உடையவர் சிவராமன். இன்று ஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஆகியும்; அதாவது எட்டு மணி ஆகிவிட்ட பின்னரும் அசையாமல் உட்கார்ந்து கொண்டு, ஏதோ ஓர் “செயின் ஸ்மோக்கர்” போல் தொடர்ந்து புகைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு திகைப்பில் ஆழ்ந்து போனார் சிவராமனின் மனைவி சிவகாமி.

ஆழ்ந்த சிந்தனைக்குரிய அடைப்படைகள் இருந்தாலன்றி, சிவராமன் அவ்வாறு காலம் கடத்த மாட்டார் என்பது அந்த அம்மாளுக்கு நன்கு தெரியும். ஆத்மார்த்தகரமான அமைவுகள் பற்றி அறிந்து வைத்திருப்பவள் தானே மனைவி….! அன்புக் கணவரின் அடுத்தபடியான “தேவை” பற்றி அனுபவ பூர்வமாக அறிந்திருந்த சிவகாமி அம்மையார் இன்னுமொரு கண்ணாடி டம்ளரில் “கடுங்காப்பி” கலந்து கொண்டு வந்தார்கள்.

பிரச்சினை என்று எது வந்தாலும் சிவராமன் தனித்துத் துன்படுவதில்லை. தன் மனைவி சிவகாமியுடன் கலந்தாலோசிப்பது தான் வழக்கம். இந்த முதிய தம்பதியர்களுக்கிடையே ஒளிவு மறைவு என்பது எந்தக் காலத்திலும் இருந்ததே இல்லை. சிந்தனைக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் சிவராமனைத் தனித்து விட விரும்பாத சிவகாமி அம்மையார் அந்தச் சிந்தனைக் கடலின் எண்ண ஆர்ப்பரிப்பு அலைகளில் தானும் இரண்டறக் கலக்கும் நினைப்பில் இணைந்தார்கள்.

இரண்டாந் தடவையாகக் கொண்டு வந்த காலைப் பொழுதின் துயில் நீக்கக் கடுங்காப்பியின் ஆவி பறக்கும் அழகுமிளிர் பளிங்குக் கண்ணாடி டம்ளரைச் சிவராமனின் அருகில் வைத்துக் கொண்டே பக்கத்து “சோபாவில்” அமர்ந்து கொண்டு, மிகவும் பதனமாக சிவராமனின் சிந்தனைகளை மெல்ல – மென்மையாக அணுகினார்கள். சிற்சில சமயங்களில் எரிந்து வீழும் சிவராமன், இன்று மிகவும் அமைதியாக; ஆனால் கலக்கத்தோடு, தன்னுடைய இதயத்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள எண்ணுகின்றார் என்பதை அவரது தோற்றம் புலப்படுத்திக் கொண்டிருந்தது.

சிவராமன் அவர்கள் தன் கையிலிருந்த அன்றைய “தமிழ் முரசு’ நாளிதழை மெல்லத் தன் மனைவியிடம் நீட்டினார். தணிகாசலத்தின் புகைப் படத்தைப் பார்த்து, அந்த நபரை அடையாளந் தெரியாத அமைப்பில், அடியில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் செய்தியில் கண்ணோட்டமிட்டார். அதற்குப் பிறகும் அந்தத் தார்மீகத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆவி பறக்கும் கடுங்காப்பியில் ஒரு சில “அவுன்சுகளை’ உறிஞ்சிக் குடித்த பின்னர்; ஒரு சிகரெட்டும் பற்ற வைத்துப் புகைத்துக் கொண்டே, தன்னுடைய உயிர் நண்பர் தணிகாசலத்தை நினைவுபடுத்திக் கூறினார். சிவகாமி அம்மையார் மீண்டும் அந்தப் புகைப்படத்தைக் கூர்ந்து கவனித்துக் கண்கலங்கிப் போனார்கள்.

நண்பகல் பத்துமணி ஆகி விட்டதைச் சுவர்க்கெடிகாரம் மணியொலித்து உணர்த்தியது. சிவராமன் தம்பதியர் தமிழ் முரசு நாளிதழுடன், தணிகாசலம் சேர்க்கப்பட்டிருக்கும் முதியோர் இல்லம் செல்வதற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பேருந்துப் பயணத்தின்போது இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. பெரிதும் கலங்கிப்போயிருக்கிறார்-தன் கணவர் என்பதறிந்து, சிவகாமி அம்மையாரும் பேசா மடந்தையாகவே பின்தொடர்ந்தார்கள். பேருந்து நிலையம் வந்து சேர்ந்து இருவரும் இறங்கி நடந்து கொண்டு இருந்தார்கள்.

குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு, நோயாளிகளைப் பார்க்க மருத்துவமனைக்குச் செல்லும் போது “வெறுங்கையோடு” செல்லக் கூடாது என்பது நமது பழந்தமிழர் பண்பாடு. இதனைக் கலக்கத்தில் இருக்கும் தன் கணவருக்கு நினைவு படுத்த வேண்டியது தன் பொறுப்பு என்று எண்ணிய அம்மையார்; “ஏதாவது பழங்கள் வாங்கிக் கொள்ளலாம்” என்று மெல்லக் கூறியபோது, சிவராமன் பதிலேதும் சொல்லாமல் அம்மையாரை ஏறிட்டு நோக்கினார். அந்த “ஏறு கொண்ட பார்வைக்கு என்ன பொருள்…? அம்மையார் “ஐந்தடக்கல் ஆமை போல்” ஆகினார்.

முதியோர் இல்லத்திற்குச் சென்றடைந்த பின் முறைப்படியாக அணுகுமுறைப் படி அங்கிருந்த அலுவலக அதிகாரிகளின் அனுமதி பெற்று, தணிகாசலம் அவர்களைத் தனித்துக் காணும் வாய்ப்பு பெற்றனர் சிவராமன் தம்பதியினர்.

தணிகாசலம் அழைத்து வரப்பெற்று தனித்துப் பேசும் வாய்ப்பிலும், சிவராமன் வாழ்விணையரைப் பார்த்தும்; வாய் திறவா மௌன விரதமே “அனுஷ்டித்து”க் கொண்டிருந்தார். ஆழ்ந்து சிந்திக்கும் அறிவு நுட்பத் திறமுடையார் சிவராமன் தன் மனைவி சிவகாமியை எதிர்ந்து நோக்கினார். பொருள் புரிந்து புண்ணியவதி விலகிச் சென்றார். இப்போதும் ஏதுமறியாப் பேதை போல் நடித்துக் கொண்டிருந்தார் தணிகாசலம்,

“அஷ்டாவதனச் சிறப்பு” பெற்றவர் அல்லர் எனினும், சிவராமன் ஓரளவுக்கு “முகக் குறிப்பு” உணரும் வல்லவர் என்று கூறலாம். தன் சந்திப்பை எதிர்கொண்ட போது தணிகாசலத்துக்கு ஏற்பட்டதொரு முக மலர்ச்சியை” மிகவும் உன்னிப்பாகக் கூர்ந்து கவனித்ததால்தான் தன் மனைவியைப் பார்வையின் மூலமாகவே பரிந்து விலகக் கூறினார்.

எல்லோருக்கும் “டிமிக்கி” கொடுத்துக் கொண்டிருப்பது போலத் தன்னிடமும் தணிகாசலம் நடிப்பு காட்ட மாட்டார் என்று சிவராமன் முழுமையாக நம்பினார். சிவகாமியார் சென்று மறைந்து சில மணித்துளிகள் ஆகிவிட்ட போதும் தணிகாசலம் வாய் திறக்கவே இல்லை. அவர் நினைவுத் தடுமாற்றத்தில் இல்லை என்பதைச் சிவராமன் இப்போது தெளிவாக உணர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆம்; தணிகாசலத்தின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய்க் கன்னங்களின் கன்னங்களின் வழி கரைந்தோடிச் சென்று நீண்டு வளர்ந்திருந்த தாடியில் சங்கமமாகிக் கொண்டிருந்தது. சிவராமனும் அழத் தொடங்கி விட் டார். கசிந்துருகும் கண்ணீர் பிரவாகத்தில் நண்பர்கள் இருவரும் திக்குமுக்காடிக் கொண்டிருந்தனர். இருவரும் சொல்லி வைத்தாற் போலத் தங்களின் சுந்தர முகங்களை இரு கரங்களாலும் அழுந்தத் துடைத்துக் கொண்டார்கள். இவ்வளவுக்குப் பிறகும் தணிகாசலம் திருவாய் மலரவில்லை.

சிவராமன் பொறுமையின் விளிம்பைக் கடந்து விட்டவர் போல, ஒரு பொய்க் கோபம் காட்டி, “டேய்… தணிகாசலம்; பேசுடா… பேசுடா….” என்று மனம் புழுங்கித் தணிவான குரலில் கத்தினார். இதற்கு மேலும் இவனை ஏமாற்ற முடியாது:ஏமாற்றக்கூடாது என்று எண்ணியோ என்னவோ, தணிகாசலம்: “சிவராமா…?” என்று தன்னை மறந்து கத்தி விட்டார்.

உணர்ச்சிக் கொந்தளிப்பில் மற்றவர்கள் மத்தியிலே நடித்துக் கொண்டிருக்கும் தணிகாசலம் தன்னை மறந்து கூச்சலிட்டு விடுவார் என்பதைச் சற்றும் எதிர்பார்க்காத சிவராமன் சட்டெனத் தன் வலது கையால் தணிகாசலத்தின் இதழ்களை மூடிக் காத்தார். அடுத்ததோர் இமைப் பொழுதில் உயிர் நண்பர்கள் இருவரும் “ஆலிங்கனத்தில்” தோய்ந்து மூச்சுத் திணறிக் கொண்டு இருந்தார்கள். “பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ?” இம்மொழி “காதலர்களுக்கு” மட்டும் தானா…? இல்லையென்பதை இவ்விரு உயிர்த் தோழர்களின் அன்புப் பிணைப்பு புலப்படுத்திக் கொண்டிருந்தது. அரவணைப்பின் இறுக்கம் மெல்ல மெல்ல விலகி ஆசுவாசம் பிறந்ததொரு நிலை நீடித்துக் கொண்டிருந்தது. பேச்சைத் தொடங்குவது யார்?

*தணிகை… என்னடா நடந்தது?” என்று சிவராமன் தான் பேச்சைத் தொடங்கி வைத்தார். மருத்துவ மனைக்குச் சென்று நோயாளியைப் பார்ப்போர் தானே நலம் விசாரித்துப் பேச்சைத் தொடங்க வேண்டும். அந்த ஆத்மீகந்தான் இப்போது செயல்பட்டுக் கொண்டிருந்தது. தணிகாசலத்தின் விம்மலும் விக்கலும் அடங்குவதற்குச் சில மணித்துளிகள் ஆகின.

தணிகாசலம் தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்துக் கொண்டு, இதற்கு மேலும் தன் உயிர் நண்பர் சிவராமனின் பொறுமையைச் சோதிக்கூடாது என்று தனக்குள் எண்ணிக் கொண்டார்.

சிங்கப்பூரிலிருந்து பிரசுரிக்கப்படும் அனைத்து மொழி நாளிதழ்களும் முதியோர் இல்லங்களுக்கு வரப் பெறுகின்றன. தணிகாசலம் சுய நினைவற்றவர் போல் நடித்துக் கொண்டே “தமிழ் முரசு” நாளிதழையும், “ஸ்டேய்ர்ட் டைம்ஸ்” எனும் ஆங்கில நாளிதழையும் பார்த்து படித்து முடித்து விடுவார். இன்றைய தமிழ் முரசு நாளிதழில் தன்னைப் பற்றியே வந்துள்ள செய்தியினைக் கண்ணோட்டமிட்டு தன் உள்ளத்துக்குள்ளேயே சிரித்துக் கொண்டு – உதட்டளவில் கூட அந்தத் துன்பச் சிரிப்பின் எதிரொலிகள் உதிர்ந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகத் தன்னுடைய நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.

அந்த உள்ளார்ந்த வேதனைச் சிரிப்பின் அறிவார்ந்த பொருள் என்ன? இந்த அறிவிப்பினால் தன்னைத் தேடி வருவார் எவரும் இருக்க முடியாது; இருக்கவே முடியாது என்ற அறுதியிட்டதொரு இறுதியான் முடிவுக்கு அதிகாலையிலேயே வந்து விட்டபோது; அதற்கு எதிர்மாறாக இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயலாக்கங்களை அவ்வளவு எளிதில் தணிகாசலம் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் ஏற்பட்ட விம்மல் – விக்கல் – விழுமியதோர் மனத் தாக்குதல் ஆகியவற்றைச் சமாளித்துக் கொள்ள தணிகாசலத்துக்குச் சிறிது காலப் பொழுது தேவைப்பட்டது. இதனைச் சிவராமனின் பட்டறிவுத் துலக்கம் அறியும். காத்திருந்தார்; தணிகாசலம் பேசத்தொடங்கினார்.

சிவராமன் தன்னுடைய காற்சட்டைப் பையிலிருந்து சிகரெட் – தீப்பெட்டிச் சகிதம் எடுத்து, ஒரு வெண் சுருட்டைப் புகைத்த வண்ணம் மேற்சட்டையின் மெலிந்துறையும் சிறு பையைத் துழாவிக் கொண்டார். அவருடைய எழுதுகோல் மட்டும் தான் தட்டுப்பட்டது. தணிகாசலம் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சொல்லக் கூடியனவற்றை  மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார். சொல்லக் கூடாதன என்னவோ…?

சிவராம….! உன்னைப் பார்த்தவுடன் கட்டித் தழுவிக் கொள்ள வேண்டும் போல் என்னுடைய கரங்கள் துடித்தன. இப்போதும் துடிக்கின்றன. உள்ளத்துணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டாக வேண்டும். என்றதொரு கட்டாயத்துக்குள்ளாகி விட்டிருக்கின்றேன். அது உனக்குப் புரிகிறதா சிவராமா…?

சிவராமன் சிகரெட் புகையை வான் வெளியில் ஊதித் தள்ளியவாறே மெல்லத் தலையசைத்துக் கொண்டார். அவர்தம் இதழ்க்கடையோரத்தில் ஒரு சிறுநகை ஒளிர்ந்து, மெலிந்து மறைந்தது.

சிவராமன் வெறுமனே சிரிக்க மாட்டார் என்பது தணிகாசலத்துக்குத் தெரியும். தன்னுடைய மனக் கருத்தைச் சிவராமன் புரிந்து கொண்டார் என்பதில் தணிகாசலத்துக்கு ஓர் ஆத்ம நிறைவு. “நாய் வேஷம் போட்டால் குரைத்துத் தானே ஆக வேண்டும்” என்ற பழம்பெரும் பழமொழியொன்றை நினைவு கூர்ந்து கொண்ட தணிகாசலத்துக்கு வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போல் தோன்றியது. சுற்றுச் சூழலை மறந்து விடாமல் உணர்சியின் உந்துதலுக்கு ஆளாகாது, நெளிந்தோடும் ஒவ்வொரு மணித்துளி இழையோடலையும் நிதானத்துடன் நெழிந்தோடச் செய்தார்.

சிவராமா….! என்னுடைய மனைவி இறந்து போனாள் என்பது உனக்குத் தெரியும்; அதற்குப் பிறகு அவளைப் பிரிந்து வாழும் ஒவ்வொருநாளும் எனக்கு வேம்பாய்க் கசந்து கொண்டேயிருந்தது. என்னுடைய ஒரே மகனுடைய இன்ப வாழ்வு நுகர்வுக்கு ஒரு தடையாக இருந்து கொண்டிருக்க வேண்டாம் என்று எண்ணினேன். பல நாட்களின் ஆழமான சிந்தனைக்குப் பின்னர்தான் இந்த முடிவுக்கு வந்தேன். முதியோர் இல்லத்தில் என்னைச் சேர்த்து விட வேண்டும். என்றால் என் ஒரே மகன் அரசியாலாருக்குப் பல விளக்கங்கள் சொல்லியாக வேண்டும்; அவமானப்பட்டாக வேண்டும். அதைவிடுத்து எவருடைய பரிந்துரையாவது பெற்றுக் கொண்டு நான் வந்தடைதல் வேண்டும். ஏனிந்த வேண்டாத கைங்கர்யங்கள்…? மிகச் சுலபலாக முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடுவதற்கான வழிகளை எனக்கு முன்னே சில வழிகாட்டிகள் செய்து காட்டி உள்ளனர்.

அவ்வப்போது நாளிதழ்களில் பிரசுரமாகிக் கொண்டிருந்த செய்திகள்; இன்றைக்கு என்னைக் குறித்து வந்திருக்கின்றதே இதுபோன்ற செய்திகள் எனக்குச் சிறந்த வழிகாட்டிகளாய் அமைந்தன. நானும் “திக்பிரமை’ வேடத்துக்குத் தயாரானேன். நடிப்பை நடப்பாக்கிக் கொண்டேன்; அவ்வளவுதான்….!

தணிகாசலம் தன்னுடைய சோகக் கதையைச் சொல்லி முடித்து விட்டார். சிவராமனைப் பார்த்துச் சிரித்தார். தான் சுய நினைவுடன் இருப்பதையோ, தன்னிலையறிந்து பேசுவதையோ யாரும் பார்த்து விடக் கூடாது; தன் “வேடம்” கலைந்து விடுமே என்பதில் கவனமாக இருந்ததோடு, சிவராமனும் தன்னை “ஏடாகோடமாய்” இரைந்து பேசி விடக்கூடாதே என்றொரு ஆதங்கத்திலும் தணிகாசலம் இடையிடையே சுற்றுச் சார்பில் கண்ணோட்டமிட்டுக் கொண்டார்.

சிவராமனுக்குத் தணிகாசலத்தின் சூழ்நிலை புரிந்தது தணிகாசலத்தின் இந்த முடிவுக்கு, அவர்தம் மனைவியின் மறைவு ஒன்று மட்டும் தான் ஒரு தலையாய காரணம் என்பதைச் சிவராமனின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனை அடியொற்றி வேறு ஏதோ நடந்திருக்க வேண்டும் என்பது மட்டும் சிவராமனுடைய சிந்தனைக்குத் தெளிவாகியது. தணிகாசலம் நாற்புறமும் கண்களை வளைய விட்டுக் கொண்டு மிகவும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்த நலிவார்ந்த நிலைமையினை மிகவும் நாகரிகமாகப் புரிந்து கொண்டு, பொங்கியெழும் உள்ளத்து எழுச்சிகளைப் பொதிந்து வைத்துக் கொண்டு, அழாக் குறையாக அல்ல: அழுது கொண்டே: “டேய்… தணிகை; போடா; போய்ப் படுத்துக் கொள்” என்று மட்டும் மிகவும் மென்மையான குரலில் கூறினார். தணிகாசலம் தன்னுடைய நடிப்பின் வெற்றிப் பெருமிதத்தோடு “பேதமைத் திருக்கோலத்துடன்” ஏதோ ஓர் உணர்ச்சியற்ற பிம்பம் போல் மிகவும் “ஜாக்கிரதையாக” நடந்து உள்ளே சென்றார்.

சிவராமன் முதியோர் பராமரிப்பு இல்ல அதிகாரிகளைச் சந்தித்து, “மன்னித்துக் கொள்ளுங்கள்; அவர் சுய நினைவில் இல்லை; என்னைப் புரிந்து கொள்ள அவரால் இயலவில்லை; நீங்கள் அனுமதித்தால் என் மன நிறைவுக்காக, கொஞ்சம் பழங்களும் அவருக்குப் பிடித்தமானதொரு “பிஸ்கட் டின்னும்” வாங்கி வந்து கொடுத்து விட்டுப் போகிறேன் என்று பணிவன்போடு கேட்டார். அதிகாரியவர்களும், சிவராமன் அவர்களின் அறிவார்ந்த அணுகுமுறையையும் பணிவன்பையும் வியந்து போற்றி அவர்தம் வேண்டுகோளுக்கு இசைந்தார்.

“இதையும் நாம் ஏன் திருட்டுத் தனமாகச் செய்ய வேண்டும்” என்று எண்ணினாரோ என்னவோ, தான் நினைத்த அந்த ஒரு நிகழ்வுக்கும் அதிகாரிகளின் அங்கீகாரம் பெற்றுக் கொண்டார்.

சிவராமன் அதிகாரிகளிடம் மிகவும் சாமார்த்தியமாகத் தான் பேசினார். பழங்கள் வகையறாக்களுடன் “ஒரு கடிதமும் அவர் பதில் எழுதும் வண்ணம் சில தாள்களும் இணைத்து வைக்கும் உரிமையைப் பெற்றார். அதற்கு அவர் கூறிய காரணம் ஒரு மனோதத்துவ அடைப்படையாகும்.

ஆத்மார்த்த நினைவுகளின் தூண்டுதலால் ஒரு வேளை “சுய நினைவு” திரும்பக் கூடும்….! என்பது தான் சிவராமன் கூறிய அந்த உளவியல் அணுகுமுறையாகும். முதியோர் இல்ல அதிகாரிகள் சிவராமனின் சிந்தனை பூர்வமான விழைவுகளை அங்கீகரித்தனர்.

சிவராமன் வெளியில் வந்து தன் இல்லத்தரசி சிவகாமியை அழைத்துக் கொண்டு, கடை வீதிக்குச் சென்றார். சிவகாமி அம்மையார் நினைவூட்டிய அந்தக் கையுறைப்” பொருட்களை வாங்கிக் கொண்டு, தணிகாசலம் படுத்திருக்கும் உரிமைக் கட்டில் பக்கம் சென்றனர்.

சிவராமனும் தணிகாசலமும் விழிகளால் பேசிக் கொண்டதைச் சிவராமனின் தர்ம பத்தினி சிவகாமியால் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால்; சுற்றுச் சூழல் பற்றிய பயம் தேவையே இல்லையல்லவா? அந்த “பொலிதீன்” பைக்குள் பழங்கள் ‘பிஸ்கட்டுகள் ஆகியவற்றுக்கிடையில் சிவராமனின் ஒரு கடிதமும் தணிகாசலம் அதற்குப் பதில் எழுதியனுப்புவதற்குரிய “லெட்டர் பேடும் கவரும், ஸ்டாம்பும்” வைக்கப் பட்டிருந்தது. சிவராமன் தம்பதியினர் மிகவும் நாசூக்காக அவற்றை அவர்தம் தலைமாட்டில் இருக்கின்ற “சிறு பேழைக்குள் வைத்து விட்டு, வணக்கம் கூறி விடை பெற்ற போதும், தணிகாசலம் தன் நினைவு அற்றவர் போலவே நடித்துக் கொண்டிருந்தார்.

சிவராமன் தம்பதியினர் விடை பெற்றபோது, “பேந்தப் பேந்த” விழித்து சுய நினைவற்றவராய் நடித்துக் கொண்டிருந்த தணிகாசலம் மேலும் சில மணித்துளிகள் அந்த நடிப்பை மிகுந்த சிரமத்தோடு தொடர்ந்து கொண்டிருந்தார்.

பிற்பகல் பன்னிரண்டரை மணி ஆகியிருந்தது. மதிய உணவு வழங்கும் நேரம். ஆள் அரவம் – அதிகாரிகளின் கண்ணோட்டம் மிகுந்திருக்கும் நேரம்.

சிவராமன் தம்பதியினர் வந்து தன்னைப் பார்த்துச் சென்றதினால் மனமும் நிறைந்திருந்தது; வயிறும் கூட அப்படித்தான் அவருக்கு இப்போது பசிக்கவே இல்லை. பரிமாறகரின் கட்டாயத்துக்காகப் பசியை வரவழைத்துக் கொண்டவர் போல் பேருக்குச் சாப்பிட்டு முடித்தார். கை கழுவிய வேகத்தில் வந்து படுக்கையில் சாய்ந்து இறுகக் கண்ணை மூடிக் கொண்டார்.

சிவராமன் தம்பதியினரின் வருகையினால் ஏற்பட்ட மகிழ்ச்சித் துன்பத்தின் “கரைசல்” கண்களின் கடை மணிகளில் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அதனை மற்றவர்கள் பார்த்து விடக் கூடாது என்பதில் மிகவும் நிதானமாகச் சிந்தித்துக் கொண்ட தணிகாசலம் குப்புறப் படுத்துக் கொண்டு, தலையணையை நனைத்துக் கொண்டிருந்தார். நடமாட்டங்கள் என்பது அறவே இல்லாமல் இருக்கும் ஒரு நேரம் பிற்பகல் மூன்று மணியாகும். ஆம்; எல்லோரும் அயர்ந்து உறங்கும் நேரம்…!

தணிகாசலம் மிகவும் சாமார்த்தியமாக: கழிவறை செல்வது போலப் பாசாங்கு” செய்து விட்டு, வந்து தன் கட்டிலில் அமர்ந்து கொண்டு, சிவராமன் தம்பதியினர் சிறு பேழைக்குள் வைத்து விட்டுச் சென்ற பொலிதீன் பையைத் துழாவிக் கொண்டிருந்தார்.பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே…..!

தணிகாசலத்தின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் எதிர்பார்த்த அந்தப் “பழச்சுவைக்” கடிதம் பழங்களுக்கிடையே இருந்தது. பல்வேறு வகையான உணர்ச்சிப் பிரளயங்களுக்கு இடையே கடிதத்தைப் படித்து முடித்தார். “வினாக்களுக்கு விடையளித்துத்தான் ஆக வேண்டும்; அது தான் அறிவுடமை” என்பது தணிகாசலத்தின் தனிப் பெருங் கொள்கை….! இதனை நன்கு உணர்ந்திருந்த சிவராமன் தன் கடிதக் கருப் பொருளைக் கேள்விக் கணையாகவே தொடுத்திருந்தார். தணிகாசலம் ஒரு சில மணித் துளிகள் திக்குமுக்காடிப் போனார்.

சிவராமன் நினைவு பூர்வமாக எல்லாவற்றையும் தான் வைத்திருந்தார். ஆனால் மிகவும் முக்கியமான ஒன்றை மறந்து விட்டிருந்தார். தணிகாசலம் தன் மனத்துள் சிந்தித்துச் சிரித்துக் கொண்டே “சிவராமன் எப்போதும் போலவே இப்போதும் ஒரு மடத்தனத்தைச் செய்திருக்கிறான்” என்று ஓசையெழாமல் முணுமுணுத்துக் கொண்டார்.

தணிகாசலம் சுய நினைவு அற்றவர் போலவே நடித்துக் கொண்டு, அதிகாரிகளின் மேசைக்குச் சென்று, ஒரு “பால் பாயிண்ட்’ பேனாவை எடுத்து வந்து, ஆங்கு குப்பைத் தொட்டியில் இருந்த வெற்றுத் தாள்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு வந்து “கிறுக்கிக்” கொண்டிருந்தார். அதிகாரிகள் அதைப் பொருட்படுத்தவில்லை.

தெருக்களில் பல நாட்கள் நடித்துப் பயிற்சிப் பெற்றதன் பட்டறிவு இன்று முதியோர் இல்லத்தில் அரங்கேற்றம் பெற்றுக் கொண்டிருந்தது. ஆம்; “கிறுக்கலை”ப் போலவே தன் உயிர் நண்பன் சிவராமனின் கேள்விகளுக்குப் பதில் எழுதி முடித்துத் தபாலில் சேர்த்தற்குரிய அளவில் எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டார். தபாலில் சேர்ப்பது எப்படி…? ஏதுமறியாப் “பேதலிப்புக்குள்’ ‘பேதலிப்புக்குள்” இந்தச் சிந்தனையும் உள்ளடக்கம். தணிகாசலம் சிந்தித்துத் தளர்ந்தார்.

உலக நடவடிக்கைகளில் எதிர்பார்ப்பது நடந்தேறுவதை விட, எதிர் பாராதவைகள் எதிர்ந்து கொண்டிருப்பதே அதிகம் அதிகமாகும் என்று கூறலாம். தணிகாசலம் சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் அந்த முதியோர் இல்லத்தில் செயலாக்கம் பெற்றுக் கொண்டிருந்தது. இப்படி ஒரு வாய்ப்பு தனக்குச் சாதகமாக ஏற்படும் என்று தணிகாசலம் அவர்களின் “பேதமை’ நடிப்புச் சிந்தைனைக்குள் தோன்றவே இல்லை.

அறநெறிக் கல்வி தொடர்பாக மாணவர்களை முதியோர் இல்லங்களுக்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தும் செயல்பாடுகள், தொடக்கப் பள்ளி, உயர் நிலைப் பள்ளிகளில் வரை முறையாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன; அத்தகையதோர் நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அன்று ஓர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வருகை புரிந்து முதியோர் இல்லம் செயல்படும் முறைகள் பற்றியும் தத்துவார்த்தங்கள் பற்றியும் முதியோர் இல்லத்தின் மூத்த அதிகாரிகள் விளக்கிக் கூறிய பின், மாணவர்கள் முதியோர்களிடம் அணுக்கமாகப் பேசி மகிழ்விக்கும் “படலம்” அச்சாகிக் கொண்டிருந்தது.

தணிகாசலத்தை நாடி வந்தாள் ஓர் அழகிய சீனப் பெண்; அவள் பெயர் லீ வென். அவள் ஒரு சீனப் பெண் போல இல்லாமல் அழகுறத் தன் தலைக் கூந்தலை வழித்துச் சீவி, நீண்ட சடை போட்டிருந்தாள். சிரித்த முகப் பெண்ணழகி. பூவும் பொட்டும் இல்லாத ஒரு குறை….! இல்லையேல் ஒரு தமிழர் “வளர்ப்புப் பெண்ணாகக் கருதிக் கொள்ளலாம். ஏன் அப்படி…? அந்தச் சின்னஞ்சிறு கன்னிப் பெண்ணாள் செந்தமிழில் பேசினாள்…..! தணிகாசலத்தின் வியப்புணர்ச்சியா? மொழிப்பற்று காரணமாகத் தன்னையுமறியாமல் ஏற்பட்டு விட்ட விழிப்புணர்ச்சியா…? தணிகாசலம் “சுற்றும் முற்றும்” பார்த்துக் கொண்டு ஒரு சில வார்த்தைகள் திருவாய் மொழிந்தருளினார். கண்ணிமைப் பொழுதே கடந்து விட்டிருக்கும்….! “சமிக்ஞை” மட்டுமே காட்டி, அந்தச் சிறுமியை வெளி வராந்தாவுக்கு அழைத்து வந்து விட்டார்.

தணிகாசலம் தன் மனக்குறையை, ஒரு தெய்வீகப் பிறப்புக்கு முன் முறையிடுவது போல ஒன்று விடாமல் சொல்லி முடித்தார். எத்தனையோ நாட்களுக்குப் பின் இன்று தான் வாய் நிறைய மொழி பேசி, முகம் நிறைய மலர்ச்சி காட்டிப் பேசி மகிழ்ந்தார். இறுதியாக, நாளிதழ்களின் மடக்கத்தில் மறைத்து வைத்துக் கொணர்ந்த கடிதத்தைத் தபாலில் சேர்த்துவிடும் தயவு பற்றிக் கேட்டுக் கொண்டார். தபாலைத் தன்கரம் பணிந்து பற்றிய லீ வென் முகவரியைக் கண்ணோட்டமிட்டாள். சிரித்த முகப் பெண்ணழகி கன்னங் குழியச் சிரித்தாள். அந்தப் பேரழகின் மாட்சி கண்டு தணிகாசலம் தன்னை மறந்ததொரு புன்னகையில் ஆழ்ந்து போனார்.

தணிகாசலத்தின் மகிழ்ச்சித் திருமுகத்தைப் பார்த்து நெகிழ்ந்த லீ வென் அவரிடம் ஓர் உண்மையைச் சொன்னாள். அதைக் கேட்டு தணிகாசலம் அளவில்லா மகிழ்ச்சியடைந்தார். ஆம், அவள் சிவராமனின் எதிர் வீட்டில் குடியிருப்பவள்; நெருங்கிய நட்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவள். இன்றே “அங்கிள்” சிவராமனிடம் இந்தக் கடிதத்தைச் சேர்ப்பித்து விடுகின்றேன் என்று கூறியதோடு, சிவரமான் வீட்டின் தன்னுடைய இல்லத்தின் தொலைபேசி எண்களையும் எழுதிக் கொடுத்தாள். “பொதுத் தொலைபேசி”யிலிருந்து பேசுவதற்குப் போடும் பத்துக் காசு “சிலிங்குகள்” பலவற்றையும் தன் அன்பளிப்பாகக் கொடுத்து விட்டு விடை பெற்றுச் சென்றாள். பள்ளிப் பிள்ளைகளின் “முற்றுகை”யிலிருந்து “யிலிருந்து விடுபட்டு, முதியோர் இல்லம் இயல்பான தனிமைச் சூழல் வெறுமையில் ஆழ்ந்து கொண்டிருந்தது. சித்த சுவாதீனம் இல்லாதோரும் சிந்தனையின் மூழ்குதலில் சிரித்துக் கொள்வார்களே..? இப்படி தணிகாசலத்தின் பக்கத்துப் படுக்கையினர் பெரிதும் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். தணிகாசலம் நடிப்புலகின் மாமன்னராய் இலங்கிக் கொண்டிருந்தார்.

நடிப்புக்குரிய காலப் பொழுது கடந்து தணிகாசலத்தைப் பொறுத்த வரையில் நடப்புலகு ஆகும் நடுநிசிப் போழ்தில் மிகவும் ஆழமாக அந்தச் சிறுமியைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

தணிகாசலம் தணிகை அசலமாகத் தனது படுக்கையில் உழன்று கொண்டிருந்தார். விடிகாலைப் பொழுது வரை தூக்கம் வரமால் விழித்துக் கொண்டிருந்தவர் விடியற்காலையில் சிறிது நேரம் கண் துயின்றார். தூக்கம் போதாக் குறையிருந்தும் தூங்கியெழும் துயில் புலர் காலைப் பொழுதின் பழக்கத்தில் விழித்தெழுந்து, காலைக் கடன் முடித்துக் கடும்பசி ஆறுதலையும் கனிவாய்க் கொண்டார்.

நண்பகல் ஆகிவிட்ட நல்ல பொழுது…! முதியோர் இல்லத்தின் அங்கத்தினர்கள் “மெது நடை”ப் பயிற்சிக்குச் செல்லும் நேரம் “நல்ல சமயமிதை நழுவ விடுவாயோ…?” என்ற நாசுக்கான பொன்மொழி ஒன்று பாடலாகத் தணிகாசலத்தின் தமிழறிவுக்குத் தோன்றியது.

சித்தக் குழப்பம் உள்ளோர் சிறு பிள்ளைத் தனமாகக் கையாள்வது போல் போல் பொதுத் தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டார். முதியோர் இல்லத்தின் முகாமுக்குச் சனிக்கிழமை வந்து சென்றாள் லீ வென்….! அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை தானே….? தணிகாசலம் சற்றும் எதிர்பாராத நிலையில் லீ வென் தான் பேசினாள். அலோ… முதியோர் இல்லத்திலிருந்து தணிகாசலம் பேசுகிறேன். அங்கு பேசுவது அன்புக்குரிய லீ வென்னா? எனத் தொடங்கியவர் சற்று நேரம் பேசாமல் இருந்தார். லீ வென் தொலைபேசியில் “அங்கிள் தணிகாசலத்திடம் பேசி மகிழ்ந்தாள். தணிகாசலத்துக்கு ஒரே பூரிப்பு…!

அடுத்து அவர் தன் உயிர்த் தோழர் சிவராமனுடன் பேசிக் கொண்டிருந்தார். முதியோர் இல்லச் சுகவாசிகள் “ஐயோ பாவம்: தொலைபேசியின் அமைதியைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றார் என்று உள்ளார்ந் ‘அனுதாபப்பட்டுக் கொண்டார்கள்.

அதற்குப் பெயர் தானே இயற்கை…! அதாவது ரியலிசம்”…! அனைவரும் “சித்தக் குழப்பத்தின் செயல்” என்று நம்புகின்ற அளவுக்கு நடிப்பு வழங்கிக்கொண்டே, தன் உயிர் நண்பர் சிவராமனுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார். லீ வென் அன்பளிப்பாகக் கொடுத்துச் சென்ற பல பத்துக் காசுகளைத் தொலைபேசிக்கு அர்ப்பணம் செய்து கொண்டிருந்தார். மனத்தை அழுத்திக் கொண்டிருந்த துன்பச்சுமையைச் சுமை தாங்கி ஒன்றில் இறக்கிவிட்டு இளைப்பாறும் ஒரு வித மனோ நிலையைத் தொலைபேசித் தொடர்பின் மூலம் தணிகாசலம் பெற்றார். அந்தத் துன்ப நீக்கச் சிறு பொழுது மகிழ்ச்சியையும் வெளிப்படையாகக் கொண்டாடிக் கொள்ள முடியாத அவல நிலையில் “நடிப்பை” நினைவு கூர்ந்து கொண்டார். அதனால் தணிகாசலம் பாவம்: ஒரு “பாவமும்” முகத்தில் காட்டிக் கொள்ளாததொரு ‘ஜாக்கிரதையோடு” தன் படுக்கையில் போய் விழுந்து புரண்டார்.

சிவராமன் தணிகாசலத்தின் தொலைபேசித் தொடர்பு கிடைக்கும் என்பது சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. எதிர்வீட்டு எழிற்பெண் லீ வென் கொண்டு வந்து கொடுத்த தணிகாசலத்தின் கடிதக் கருத்துக்களைத் தன் இல்லாளுடன் பகிர்ந்து கொள்ள முடியாத ஒரு நிலை. சிவராமனின் ஏக புதல்வி சித்தராதேவி தன் குடும்ப சகிதம் சனிக்கிழமை இரவே வந்து, ஞாயிறன்று இரவுச் சாப்பாடும் முடித்துக் கொண்டு தான் போனாள்.

எப்போதும் சனிக்கிழமை மாலைப் பொழுதை இன்ப நினைவுகளுடன் எதிர்பார்த்திருக்கும் சிவராமன் இன்றைய சனி, ஞாயிறுகளில் தன்னுடைய அன்பு மகள் சித்திரா தேவி இல்லத்தாரின் வருகையை அவ்வளவாக ரசித்து வரவேற்கவில்லை; அதனை ஒரு “கழுத்தறுப்பாகவே” கருதிக் கொண்டிருந்தார். சிவகாமி அம்மையார், தன் கணவரின் சிரத்தையில்லா வரவேற்பினை மிகவும் நுட்பமாக ஊடுருவிப் புரிந்து கொண்டிருந்தார்கள். ஆத்மார்த்தமாக உணர்வுகளைப் புரிந்து கொள்பவள் தானே அன்பு மனைவி.

சிவராமனின் மகள் சித்திராதேவி குடும்பத்தாரின் “புடை சூழல்” நீங்குவதற்கு, இந்தா இந்தா என்று இரவு பத்தரைக்கு மேல் ஆகி விட்டது. அதற்குப் பின்னர் அருமைத் தம்பதிகள் இரவு உணவைக் கூடப் பொருட்படுத்தாமல் பேசத்தொடங்கினார்கள். தனித்திருக்கும் சூழலில் தான் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் தனிப்பண்பு வாய்ந்தவர்கள் என்றால் அஃது மிகையாகாது.

சிவராமன் லீ வென் மூலம் கிடைக்கப் பெற்ற கடிதத்தைச் சிவகாமி அம்மையாரிடம் கொடுத்து விட்டுச் சிந்தனையில் ஆழ்ந்து கொண்டே ஒரு சிகரெட் எடுத்துப் புகைத்துக் ‘கொள்ளத் தொடங்கினார். கடிதத்தைப் படித்து முடிக்கப் பத்து நிமிடம் ஆகும்; சிவராமனின் சிகரெட் கனிந்து முடியவும் அந்த அளவுக்கு நேரமாகும்.

“இப்படியும் ஒரு பிள்ளை இருப்பானா?” என்று சிவகாமி அம்மையார் வியந்து கேட்டார். “இப்படியுந்தான் உலகம்; இதனை நீ புரிந்து கொள்ள வேண்டும்” என்று, சிவராமன் கூறினார். இதனில் ஏதோ ஓர் இரட்டைப் பொருள் இருப்பதாகச் சிவகாமியார், சிந்தித்துக் கொண்டார்கள்.

சிங்கப்பூரில் இந்தியர்கள் நெருக்கமாக வாழ்ந்த பகுதிகளுள் ஜாலான் காயு வட்டாரமும் ஒன்று. ஆங்கில ஏகாதிபத்திய இராணுவ விமானத்தளம் இயங்கிக் கொண்டிருந்த ஒரு பகுதியாதலால் வளமான தொகுதிகளுள் அதுவும் ஒன்று. “ஆர்.ஏ.எப் சிலேத்தாரில்” சிவராமன் ஒரு துறையின் இயக்குநராகப் பணி புரிந்தார். அந்தத் தொழில் துறையில் இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில், அந்தவொரு காலக் கட்டத்தில் அப்பகுதி வாழ் தமிழர்களின் வாழ்வு நல மேம்பாட்டுக்காக அமைக்கப் பெற்ற “தமிழர் நலனபிவிருத்திச் சங்கம்” என்ற சமூக சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தார்.

தணிகாசலமும் அதே இராணுவ விமானத் தளத்தில் மற்றுமோர் துறையின் மானதிகரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அலுவகத் தொடர்புகளில் அறிமுகமாகி, சமூகப் பொதுப் பணிகளில் சங்கமமாகிச் சமத்துவ நண்பர்களாகத் தொடர்ந்த நட்பு…!

இருவரும் திருமணத்துக்கு முன்பே தொடர்ந்த இளமைத் தொடர்பு நட்பாதலால் சரி சமமாக “வா போ; வாடா போடா” என்று ஏகதேசமாகப் பேசிக் கொள்ளும் இயல்புடைய நட்புக்குரியவர்களாகி, பின்னர் குடும்ப நண்பர்களாகவும் திகழ்ந்தார்கள். காலத்தால் அழியாத கருத்துக் கருவூலங்காய்க் கனிந்து மகிழ்ந்தார்கள்.

காலப்போக்கில் தம்முள் “சம்மந்திகளாய்” ஆகிவிடவும் எண்ணினார்கள். ஆம்; தணிகாசலத்துக்கு ஒரே பையன்; சிவராமனுக்கு ஏக புதல்வி….! “ஜாதகப் பொருத்தம்” சாதகமாக அமையவில்லை. இருதரப்பிலும் “புரிந்துணர்வின்” தலை தூக்குதலால் ஆத்மார்த்த நட்புக்கு எந்தவிதக் குந்தகம் ஏற்பட்டுவிடவில்லை.

காலச் சக்கரத்தின் சுழற்சி….! பல ஆண்டுகள் மறைந்து விட்ட மாயங்கள்….! அரசியல் வரலாற்றுப் பின்னணிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்திட்ட வாழ்க்கைச் சூழல்- பொலிந்து வந்த “அடுக்குமாடி” வீடமைப்பு வாழ்க்கை வேலை வாய்ப்புகள் ஆகிய இந்த அடிப்படையில் சிவராமன் – தணிகாசலம் ஆகியோர் திசைமாறிச் சென்றனர்.

“அடுத்தடுத்து” வாழ்கின்ற அமைவுச் சூழல்களை இழந்து விட்ட போதிலும் ஆத்மார்த்தங்களுக்கு அழிவே இல்லாதவாறு அவ்வப்போதுள்ள சந்திப்பின் மூலம் ஆன்மீக உணர்வுகளை பரிமாறிக் கொண்டிருந்தனர்.

தணிகாசலம் தன்னுடைய சம்பாத்தியங்களில் செலவு போக எஞ்சிய “சாமர்த்தியங்களை” மாதா மாதம் தன்னுடைய மகன் பேரால் அஞ்சலகச் சேமிப்பில் சேர்த்து வந்தார். “தணிகை…. உனக்கென்று என்னடா? எனக்குப் பின் என் பிள்ளைக்கு என்று உரிமைப் பத்திரம் எழுதி வைக்கலாம்…” என்று ஆலோசனை கூறிய போது, “போடா மடையா எங்களுக்கிருப்பவன் அவன் ஒரே பிள்ளை. எங்கள் இறப்பு பரியந்தம் நாங்கள் அவனோடும் அவன் எங்களோடும் தானே. அவன் பேரில் இருந்தாலும் என் பேரில் இருந்தாலும் ஒன்றுதான். சிவராமா; எனக்குப் பின் அவன் தானே எல்லாமும்….!” என்று, தணிகாசலம் கூறிய போது, எதிர்த்துப் பேச ஏதுமில்லா நிலையில் சிவராமன் வாயடைத்துப் போனார். தாயும் பிள்ளையுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு வேறு தானே என்ற நமது முன்னோர்களின் மரபுவழிச் சொற்றொடர் ஒன்று சிவராமனின் நினைவுக்கு வந்து, எதிர்த்துச் சொல்லத் தோன்றினாலும் அந்தக் கருத்தமைவினைத் தன் தொண்டைக் குழியோடு நிறுத்திக் கொண்டார்.

பகுதிகள் மாறிப் போய் வாழ்ந்து கொண்டிருந்தாலும் பழக்கங்கள் மாறுபடாமல் அவ்வப்போது தொடர்பு கொண்டு கொண்டிருந்த நிலை படிப்படியாக அருகிக் கொண்டே வந்து தொடர்பற்றுப் போயிருந்த நிலை…!

தொடர்பைத் துண்டித்துக் கொண்டிருந்த தணிகாசலத்தின மனோ நிலையை சிவராமன் தன் மனத்துக்குள் அசை போட்டுக் கொண்டிருந்தார். இன்பத் துள்ளல்களை இறுமாந்து எதிர்கொள்ளும் போது இணை பங்கிட்டுப் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில் துன்பத்தின் சோர்வுகளை மற்றவர்க்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டு, தான் மட்டுமே அனுபவித்துச் சிரித்துக் கொள்ளும் மனோபலம் வாய்ந்தவர் தணிகாசலம் என்பதை நன்குணர்ந்தவர் சிவராமன். தொடர்பின் துண்டிப்புக்குத் துன்பங்களின் தொடர்ச்சிகளே காரணமாக அமைந்திருக்கின்றன என்பதைத் துல்லிதமாகச் சிவராமன் இப்போது சிந்தித்துக் கொண்டார்.

தணிகாசலம் எண்ணியது போல் அவர்தம் ஏக புதல்வன் பெற்றோரைப் பேணும் பிள்ளையாக இல்லாமல் தன்னலவாதியாகத் திகழ்ந்த நிலை. கை நிறையச் சம்பாதித்தக் கை நிறையச் செலவும் செய்து வாழ்ந்தவர் “கை முடக்கம்” ஏற்பட்ட போது கரைந்துருகினார். தணிகாசலம் தன் மகன் பள்ளிக்குப் போகும் போது மாதாந்தரம் ஒதுக்கிக் கொடுப்பது போல அவர் மைந்தன் இப்போது மாதாந்திரம் “ஒதுக்கீடு” செய்தான். அந்த ஓர் ஒதுக்கீட்டில் சுய தேவைகளைச் சமாளித்துக் கொண்டிருந்த நிலை.

இப்போது தான் இறைவனின் திருவிளையாடல் இனிது ஓங்கி “இனிய பந்தத்தின்” அருமையை உணர்த்தியிருக்கிறது. தணிகாசலத்தின் மனைவி நோய்வாய்ப்பட்டு விட்டார்கள். ‘அமெரிக்கன் தனியார் மருத்துவ மனையில் (யாங் பெர்க் ஹாப்பிட்டலில்) சேர்த்து, மருத்துவத்துறை வல்லுநர்களின் தனிக் கவனச் சகிச்சை அளித்துக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பு தணிகாசலத்துக்கு ஏற்பட்டது. தணிகாசலம் தன் விருப்பத்தைத் தன் மகனிடம் கூறினார்.

இங்கே தான் இப்போது தான் தணிகாசலத்தின் மனத்துள் ஒரு ‘பிரளயமே” ஏற்பட்டிருக்கின்றது. தணிகாசலத்தின் தனிப்பெரு மைந்தன் சொன்ன சொல் அவர்தம் இதயத்தில் ஈட்டியாய்ப் பாய்ந்து விட்டது.

அப்படி என்ன அந்தச் சொல்…? உங்கள் மனைவியைக் காப்பாற்ற ஒரு பெருந்தொகை எங்கே இருக்கிறது..? சேமித்து வைத்திருக்கிறீர்களா? என்று அவன் கேட்ட போது. “சேமிப்பா; என்னுடைய சம்பாத்தியத்தை எல்லாம் உன் பேரால் தானே சேமித்தேன்” என்று, தணிகாசலம் கூறியபோது; அவர் படிக்க வைத்துக் கற்றுக் கொண்ட ஆங்கில மொழியை அவரிடமே திறம்பட ஒப்புவித்திருக்கின்றான்.

“அது என்னுடைய பணம்; அதைத் தொடாதீர்கள்” (தேட் இஸ் மை மணி: டோன்ட் டச் இட்) என்பதுதான் அவன் கூறிய அந்தச் சொல். தணிகாசலம் தன்னுடைய அருமைப் புதல்வனிடமிருந்து இந்தச் சொற்றொடர்களைக் கேட்டவுடன் மனம் தளர்ந்து போய் விட்டிருக்கின்றார்.

“இடுக்கண் வருங்கால் நகுக” என்றான் வள்ளுவன். இந்தப் பண்பு எல்லோருக்கும் எளிதில் வந்து விடுவதில்லை தணிகாசலம் மிகவும் மென்மையாகச் சிரித்துக் கொண்டே சென்று, அவர் அன்றாடம் சிறுகச் சிறுகச் சேர்த்து வைக்கும் சில்லறைக் காசுகளைப் போடும்”யானை உண்டியலை உடைத்து எண்ணி முடித்திருக்கின்றார்.

தணிகாசலம் தன்னுடயை அறையில் இருந்து கொண்டு, நிசப்தமாக எண்ணி முடித்த சில்லறைக் காசுகளை “யானை விழுங்கலை” எண்ணி தனக்குள் தானே வியந்து கொண்டார்.

இந்தத் தைரியத்தில் எவர் பொருட்டையும் எண்ணாமல் தன்மனைவிக்கு முன் கூட்டியே பிணப் பெட்டிக்கு “ஆர்டர்” கொடுத்து விட்டார். காப்பாற்ற முடியாத போது “கை கழுவுவதற்காகவாவது” தயாராக இருக்க வேண்டுமே என்பது தணிகாசலத்தின் தத்துவமாக இருந்திருக்கிறது.

தணிகாசலம் தாரமிழந்தார். தன் சுகம் – தன்னுரிமை இழந்தார்.நான் அன்றொரு நாள் விவாதித்த தொலை நோக்கு அறிவு தனக்கு ஏற்படாமைக்காக இப்போது து வருந்துகின்றார். “தன் மானம்’ தலையோங்கிய போது, தன்நினைவு அற்றவராக நடித்துக் கொண்டிருக்கின்றார்.

சிவராமன் தன் சிந்தனைத் தேரோட்டத்தில் சில மைல் கற்களின் பயண அனுபவங்களைத் தன் மனைவி சிவகாமிக்குச் சித்திரித்துக் கொண்டிருந்தார்.

“இவரைத் தெரியாதார் சிங்கப்பூரில் இருந்ததில்லை. இவரைத் தெரியுமா? கேள்விக் குறியுடன் செய்தித்தாள் விளம்பரம்…! இறைவா…! இப்படியும் ஒரு திருவிளையாட்டைச் செய்து மகிழ்கின்றாயா…?” – சிவகாமி அம்மையார் உணர்ச்சிப் பிழம்பாக உதிர்த்த போது இரவு மணி பன்னிரெண்டு; தொலைபேசி மணி ஒலித்தது; தன் நினைவு இல்லாத தணிகாசலம் சிவரமானுடன் பேசிக் கொண்டிருந்தார். தொலைபேசித் தொடர்பு முடிந்து வந்த சிவராமனின் முகத்தில் ஈயாடவில்லை.

சிவராமன் தன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்ட வேகத்தில் நெற்றியில் மூன்று நான்கு முறை அடித்துக் கொண்டார். சிவகாமி அம்மையார் அமைதிப் படுத்திக் கொண்டிருந்தார்.

“எனக்கு எதுவும் பிரச்சினை இல்லை; நானும் என் மனைவியும் தான். நான் வந்து அதிகாரிகளிடம் பேசி அழைத்து வந்து விடுகிறேன்” என்று சிவராமன் கூறியதற்குத் தணிகாசலம் மறுப்பு தெரிவித்து விட்டார்.

“என்னுடைய ஒரே மகனின் தன்மானத் தலை குனிவுக்கு நான் காரணமாக இருக்கக்கூடாது. முதியோர் பராமரிப்பு இல்லத்தில் எனக்கு ஒரு குறைவும் இல்லை; “ராஜபோக’ வாழ்க்கைதான். ஆகவே; என்னைப் பற்றிக் கவலைப்படாதே.. உன்னுடைய வேண்டுகோளை மறுத்துவிட்ட நான் உன்னிடம் ஒன்றை எதிர்பார்க்கிறேன். அதைச் செய்வாயா…? அது வேறொன்றும் இல்லை; அடுத்த படியாக உனக்கு ஓய்விருக்கும் போது ஒருநாள் இங்கே வந்து, முதியோர் இல்லப் பராமரிப்பு அதிகாரிகளிடம் பேசி,நான் இறந்து விட்டால் என் சடலத்தை உன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாறு பதிவேட்டில் ஒரு குறிப்பு எழுதி வைத்து விட்டுச் செல். என்னுடைய இறப்பை என் மகனுக்குத் தெரிவிக்காதே. பிள்ளை இல்லாதவனுக்கு யாரும் கொள்ளி வைக்கலாம். உனக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் அனாதைப் பிணமாக நான் போக விரும்பவில்லை. ஆத்மார்த்த நண்பனே…! நீ எனக்குக் கொள்ளி வை.”

தணிகாசலம் இவ்வாறு கூறித் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டதால் ஆருயிர் நண்பனின் அவலத் துடிப்பைத் தாங்கிக் கொள்ள இயலாதத் துடிப்பில் சிவராமன் நிலை குலைந்து போய்த்தான் தன் மண்டையில் அறைந்து கொண்டார்.

சிவராமன் தணிகாசலத்தின் விருப்பத்தைச் சிவகாமிக்குச் சொல்லி முடித்த போதும் நான்கைந்து முறை வழுக்கை நெற்றியை வருடி அறைந்து கொண்டார். சிவகாமி அம்மையார்க்குத் தர்ம சங்கடமாகி விட்டது.

தற்கொண்டான் தனிநலம் பேணும் சிவகாமியார். சிவராமனைச் சாப்பிடுவதற்கு அழைத்தார். “எனக்குப் பசிக்கவில்லை: நீ போய்ச் சாப்பிட்டு விட்டுப் படு: ஒரு “டிப்போ குவளை” நிறைய கடுங்காப்பி கலந்து கொண்டு வா; ஏன் தெரியுமா? இன்று எனக்கு மட்டும் “சிவ ராத்திரி” என்று கூறினார்.

இன்றுவரை, தான் சாப்பிடாமல் தன் மனைவி சாப்பிட்டு அறிந்ததில்லை என்பதைச் சிவராமன் மறந்து போய் விட்டார். ஆத்மார்த்த நண்பனின் அமைதியற்ற வாழ்வுச் சூழலை எண்ணி வருந்தினார்.

சிவகாமி அம்மையார் ஒரு பெரிய சுடுநீர்ப் பாட்டலுடன் கொஞ்சம் ஓமப்பொடி கடலை முதலான கொரிப்புப் பொருட்களுடன் வந்து சேர்ந்தார். துக்கம் மறந்து தூக்கம் மறந்து தன் கணவனுடன் “ஜாலியாக” அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் ஓர் இன்ப நினைவுகளுடன் வந்தார். ன்

சிவராமன் கூறிய அந்தச் சிவராத்திரி தொடக்கத்தின் போது சிவராமன் சிந்தனையிலிருந்து மீண்டு கொண்டிருந்தார்.

“சிவகாமி……! என்னை வாரிப் போட்டு விடு….!” என்று சுலபத்தில் தணிகாசலம் சொல்லி விட்டான். “யாருக்கு யார் முந்தி” என்று நான் இப்போது சிந்தித்துக் கொண்டிருந்தேன்…..! என்று சொல்லிக் கொண்டே கடுங்காப்பியைக் கையில் எடுத்தார். இடியுண்ட மஞ்ஞை போல் சிவகாமி அம்மையார் “ஏக்கற்று” நின்றார்.

சிவகாமி அம்மையாரின் முகத் தோற்றத்தை மிக நுட்பமாக ஊடுருவிப் பார்த்தபோது, தான் சொன்ன அமங்கலச் சொற்களினால் அதிர்ந்து போய் விட்டிருந்த நிலையை உய்த்துணர்ந்து கொண்டு, “சிவகாமி… நான் ஒரு வார்த்தைக்காகச் சொன்னேன்; இதற்குப் போய் இப்படிக் கலங்கலாமா..” என்று கூறிக் கொண்டே தன் மனைவியை ஆறத் தழுவி, கண்ணீரைத்தன் கையால் தடவி உதிர்த்து, அன்பு முத்தமிட்டுக் கொண்டே, “நெருப்பு என்றால் வாய் சுட்டு விடாது. விடாது சிவகாமி; என்று சொன்ன போது. சிவகாமியாரும் மெய்மறந்து சிவராமனைத் தழுவிக் கொண்டார்கள். ‘முதுமைக் காதலின் முழுமையை, “பௌர்ணமி” வானிலிருந்து ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஓமப் பொடியும் கடலையும் ஒசிந்து நொறுங்கிக் கடுங்காப்பிச் சுவை நீரில் கரைந்து செரிமானம் ஆகிக் கொண்டிருந்தது.

– மனங்கமழும் பூக்கள், முதல் பதிப்பு: நவம்பர் 1997, மலர்மாமணி பதிப்பகம், சென்னை.

மு.தங்கராசன்2 மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார். 1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1955ல் தமிழ்முரசில் பிரசுரமான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *