புத்தகப் புழு




வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்.

தனியார் பண்பலைகளுள் ஒன்று ரோஜா பண்பலை.
இன்று மாலைத் தென்றல் நிகழ்ச்சியில் நெறியாளர் இளைஞி
மல்லிகை , இரண்டு கவிஞர்களை – இரட்டைக் கவிஞர்களைச்
சந்தித்து அளவளாவுகிறாள் … .. செவி மடுப்போம் வாருங்கள் ..
மல்லிகை : மாலைத் தென்றல் நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்பது உங்கள் அன்பு நெறியாளர் அடியாள் மல்லிகை . இன்று நாம் சோழ நிலத்தோன் , வேழ முகத்தோன் என்ற பெயரில் கவிதைகள் எழுதி வரும் இரட்டையரைச் சந்தித்து உரையாட உள்ளோம் … அதற்கு முன்பாக ஒரு திரைப்பாடல் …
மல்லிகை : சோழ நிலத்தோன் அவர்களே நீங்கள் கூறுங்கள் … உங்கள் இயற்பெயர் என்ன ?
சோழ நிலத்தோன் : அடியேனுடைய பெயர் – தஞ்சை மகேஷ் . சோழ நிலத்தோன் என்ற புனை பெயரைச் சூட்டிக் கொண்டேன். நண்பருடைய பெயர் – கணேசன் அவர் எழுதுவதற்காக தமது பெயரை வேழ முகத்தோன் என்று மாற்றிக் கொண்டார். இருவரும் சேர்ந்து கவிதை நூல்களைப் படைத்துள்ளோம் .
மல்லிகை : தமிழில் இருவர் இணைந்து புனைகதைகளைப் படைப்பதைப் பார்த்து இருக்கிறோம். எடுத்துக்காட்டாக – சுந்தர் பாலா இருவர் , சுபா என்ற ஒற்றைப் பெயரில் எழுதி வருகிறார்கள். சிட்டி என்ற எழுத்தாளர் , வெவ்வேறு எழுத்தாளர்களுடன் இணைந்து புனைவு அல்லாத கட்டுரை நூல்களைப் படைத்துள்ளார்.
சோழ நிலத்தோன் : தி. ஜானகிராமன் உடன் இணைந்து நடந்தாய் வாழி காவேரி என்று காவிரி பாயும் இடங்களைப் பற்றிய பயணக் கட்டுரை நூல் எழுதி உள்ளார் .
மல்லிகை : எடுத்துக்காட்டை எடுத்துக் கொடுத்ததற்கு நன்றிகள் . இருவர் இணைந்து கவிதை என்பது …
வேழ முகத்தோன் : தமிழ் இலக்கியத்தின் இடைக் கால வரலாற்றை நோக்கும் போது நம் கண்ணில் படுபவர்கள் – இரட்டைப் புலவர் – இளம் சூரியர் – முது சூரியர் – ஒருவர் கால் முடியாதவர் மற்றொருவர் கண் பார்வையற்றவர். ஒருவர் வெண்பாவின் முதல் இரண்டு அடிகளைச் சொல்ல மற்றொருவர் முடித்து வைப்பார் என்பார்கள் .
மல்லிகை : இலக்கியத் தகவலுக்கு நன்றிகள் . நேயர்களே இரட்டைக் கவிஞர்களுடன் நாம் உரையாடுகிறோம். லார்ட் பைரன் அவரது கவிதைகளை மடமடவென கூறுவாராம் தாங்கள் இருவரும் இணைந்து இயற்றிய கவிதை ஒன்றை இங்கு நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
வேழ முகத்தோன் : கடற்கரை அருகில் ரோஜா பண்பலை அரங்கு உள்ளது. கடல் பற்றிய கவிதை …
கடல் என்னும் அற்புதம்
கடல் சூழ்ந்த உலகம் என்பர் முன்னோர்
எனினும் உலகப் பரப்பில் கடல் ஓர் உலகம் ..
கடல் ஓர் அன்னை என்றனர்
அலையால் அணைப்பதால்
வேண்டியதை அள்ளிக் கொடுப்பதால்
வாழ வழிவகை தருவதால் வர்த்தகம் தருவதால்
கடல் ஓர் தனி உலகம்
பேரிடர் , கொள்ளை , சண்டை
நிலப்பகுதியில் உள்ளதெல்லாம் இங்கே
கடல் ஓர் தனி உலகம் உள்ளே செல்பவருக்கு புது உலகம்
கரையில் உள்ளவர் மனம் குளிரும்
கடல் ஓர் தனி உலகம்
உள்ளே ஓர் இயக்கம்
கரையிலும் ஓயாத இயக்கம்
பலருக்கும் வாழ்வு அளிக்கும்
கடல் ஓர் தனி உலகம்
வியப்புகளின் மொத்த வடிவம்
மல்லிகை : நன்று நன்றி என்னுடைய கரவொலி உங்களுக்காக … ஒரு நேயர் தொடர்பில் வந்துள்ளார் … அவருடன் உரையாடுவோம் …
குரல் : வணக்கம் நெறியாளர் அம்மா … ..நான் தீனதயாளன் .. ஆடல் அரசன் அருள்பாலிக்கும் சிதம்பரத்திலிருந்து பேசுகிறேன்.
மல்லிகை : சொல்லுங்கள் உங்கள் கேள்வியை …
தீனதயாளன் : என்னவென்று நான் சொல்வேன் …
மல்லிகை : ஏன் ஐயா அலுப்பும் சலிப்பும் ..
தீனதயாளன் : உங்கள் அரங்கத்திற்கு வந்துள்ள சோழ நிலத்தோன் , எங்கள் ஊருக்கு , எங்கள் தமக்கையார் வீட்டுக்கு வந்துள்ளார்.வந்தவர் சும்மா போகாமல் அங்கு இருந்த என் மகள் மங்கையிடம் புத்தக வாசிப்பு பற்றி சில மணித்துளிகள் உரையாற்றாத குறையாகப் பேசியுள்ளார். அன்று முதல் என் புதல்வி புத்தகங்களாக வாங்கிக் குவிக்கிறாள்.
மல்லிகை : நானும் படிக்க வேண்டும் என்று வாங்கி அடுக்குவேன். ஆனால் ..
தீனதயாளன் : மங்கை அப்படி இல்லை … தேர்வுக்குப் படிப்பது போல் விழுந்து விழுந்து படிக்கிறாள். ஈட்டும் பொருளைக் கொண்டு ஆடை அணிகலன் , அழகு சாதனங்கள் வாங்குவதைக் காட்டிலும் புத்தகங்களையே வாங்குகிறாள் நான் பெற்றெடுத்த ஏந்திழை …
மல்லிகை : நூல் பல கல் என்று ஔவைப் பாட்டி நமக்கு அறிவுரை சொல்லி இருக்கிறாளே ஐயா ….
தீனதயாளன் : அதெல்லாம் சரிதான்… என் மகளுடைய புத்தகப்பித்து பற்றிய சேதிகள் , ஊரெல்லாம் பரவி , அவளுக்கு என்று இருந்த முறைப் பையன்களும் முறைத்துக் கொண்டு போய் விட்டார்கள் . அசலாரும் பெண் கேட்டு வரத் தயக்கம் காட்டுகிறார்கள் . அவளை எப்படி கரை சேர்ப்பேன் என்று எனக்குப் புரியவில்லை. மன்னிக்கவும் உணர்ச்சி மிகுதியில் பொது ஊடக நிகழ்ச்சியில் ஆதங்கத்தால் , கையறு நிலையால் , என் சொந்தக் கதையை உரைத்து விட்டேன். நன்றி .. விடை பெறுகிறேன் ..
மல்லிகை : நேயரின் அழைப்புக்கு நன்றி தெரிவித்து … இப்பொழுது ஒரு திரைப்பாடலைக் கேட்போம் ..
மல்லிகை : நீங்கள் இருவரும் இணைந்து நிறைய எழுதி உள்ளீர்கள் . தங்கள் முன்னிலையில் என்னுடைய ஆக்கம் ஒன்றை வாசித்துக் காட்டட்டுமா ?
சோழ நிலத்தோன் : வாசியுங்கள் . நேயர்களுடன் நாங்களும் கேட்கிறோம் .. ஏதேது எங்களுக்கு எல்லாம் போட்டியாக நீங்கள் வந்து விடுவீர்கள் போலவே ..
மல்லிகை : அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை . அந்த அளவுக்குத் தகுதி அடியாளுக்கு இல்லை . என் மனதில் தோன்றியதை எழுதி வைத்தேன் ..
யதார்த்தம் என்ற தலைப்பிலான கவிதை
கோவலன் – மாதவி தம்பதியரின் புதல்வியான இளம்பெண்
மணிமேகலை வசம் ஆபுத்திரனின் கையில் இருந்த அமுத சுரபி வந்து சேர்ந்தது
அள்ளி அள்ளி வழங்கும் அமுத சுரபியைக் கொண்டு தான் மட்டும்
பசியாறினால் போதும் என்று எண்ணாத ஆயிழை மணிமேகலை ,
பசிப் பிணியால் வாடும் அனைவருக்கும் அமுதசுரபி வாயிலாக
உணவை அள்ளித் தந்தாள்.
ஒரு தருணத்தில் நாட்டில் வளம் பெருகி மக்கள் தேவைகள்
நிறைவேறியதால் , ஆடல் அழகி மாதவி பெற்ற மணிமேகலையை நாடி
எவரும் வரவில்லை . அதனால் , மணிமேகலை அமுதசுரபியைத் தூக்கி
எறிந்தாள் .
கேட்டதைத் தரும் அமுதசுரபிக்கே இந்த நிலை என்றால் , தேவை நிறைவுற்றதும் ,
மற்றவர் நம்மைப் புறக்கணிப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை
என்பதை நாம் புரிந்து கொள்ளத் தான் வேண்டும் .
வேழ முகத்தோன் : இப்பொழுது நாங்கள் இருவரும் உமக்கு கரவொலியைப் பரிசாகத் தருகிறோம் . அதுதானே விலை இல்லாத ஒன்று ..
மல்லிகை : அப்படி கருத இயலாதே .. பாராட்டும் மனம் பலருக்கும் இருப்பது இல்லையே … …ஆங்கிலத்த்தில் openness to appreciation என்பார்களே ..
சோழ நிலத்தோன் அவர்களே மிகுந்த தயக்கத்துடன் உங்கள் முன் ஒரு கருத்தை முன் வைக்கிறேன். இது என் நெஞ்சில் தோன்றியது அல்ல. எங்கள் பண்பலையின் சமூக வலைதள பக்கங்களில் , இந்த நிகழ்ச்சியை செவி மடுத்த நேயர்கள் பலரும் தீனதயாளன் அவர்களின் மகளைத் தாங்கள் மணம் முடிக்கலாம் என்று பின்னூட்டத்தில் வெளிப்படுத்தி உள்ளார்கள் . இது முற்றிலும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியது. நேயர்களின் எண்ணத்தைத் தங்கள் முன் வைத்தேன்.
சோழ நிலத்தோன் : மாறி வரும் சூழலில் திருமணங்கள் பண்பலையிலும் நிச்சயம் ஆகும் போலிருக்கிறது. நான் தங்களைத் தவறாக நினைக்கவில்லை.
அவருடைய புதல்விக்கு சம்மதம் இருப்பின், நான் அவளை வாழ்க்கைத் துணையாக அடைய எனக்கு விருப்பம் தான். நாளையே என் நண்பர் வேழ முகத்தோன் பெண் கேட்டுச் செல்வார்.
மல்லிகை : வாழ்த்துக்கள் . நன்றி . தங்கள் இருவரின் இல்லறம் சிறக்க வாழ்த்துக்களை நேயர்களுடன் இணைந்து தெரிவித்துக் கொள்கிறேன். இப்பொழுது திருமணம் பற்றிய திரைப்பாடல் ஒன்றைக் கேட்போம் ….
– கூண்டை விட்டு வெளியே வந்த பறவை, வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |