கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 18, 2025
பார்வையிட்டோர்: 5,812 
 
 

மறுபிறவியில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கான்னு எனக்குத் தெரியாது. எனக்கே இதுவரைக்கும் நம்பிக்கை இருந்துதான்னும் தெரியாது. ஆனால், மறுபிறவி உண்டு என்கிறதை சமீபத்துல நடந்த ஒரு நிகழ்ச்சி நிச்சயமாக்கிடுத்து.

ஒரு நாள் காலை வழக்கமான மூணு கி.மீ. வாக்கிங் போயிட்டு, பிளாட் கதவைத்திறந்து உள்ளே வந்தேன். கோகிலா சோபாவில் சாய்ந்தபடி, கொஞ்சம் மூச்சு திணறியவாறு, கையில் ஐஃபோனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சரி, இன்னிக்கி நமக்கு இரண்டாம் காஃபி கிடையாதுன்னு முடிவுக்கு வந்தேன். கோகிலாவுக்கு என்ன ஆச்சு?

“என்ன கோகிலா? ஏன் இப்படி சரிஞ்சுட்டே?”

“நீங்க திரும்பி வந்துட்டீங்களா?” என்று சொல்லி ‘ஓ’ ன்னு அழுதுட்டா.

“நான் திரும்பி வந்துட்டேன்னு இவ்ளோ அழறியா என்ன?” குழப்பத்தில் கேட்டேன்.

“நீங்க வாக்கிங் போயிட்டு நல்லபடியா திரும்பினீங்கன்ற சந்தோஷத்துல அழுதுட்டேன்”

“திரும்பாம வேறே எங்கே போவேன்? கையிலே மாத்து துணிகூட நான் எடுத்துண்டு போகலயே…”

“சிங்கப்பூர் போனாளே என் ப்ரெண்ட் சரசு…”

“ஆமா, அவளுக்கு என்ன இப்போ? போயிட்டாளா?

“போனது அவ இல்லே…இந்தாங்கோ, அவ எனக்கு வாட்சப் ல அனுப்பின மெசேஜ் பாருங்கோ…தெரியும்…”

கோகிலாவிடமிருந்து ஐஃபோனை வாங்கிப்பார்த்த மூர்த்திக்கு மூச்சு முட்டியது. நான்தான் அந்த மூர்த்தி என்கிறதே பிறகுதான் உதித்தது.

சரசு அனுப்பியிருந்த செய்தி…இதோ…

‘உனக்கு இப்படி ஆயிடுத்தே? நான் சென்னையைவிட்டு கிளம்பச்சே உன் வீட்டுக்காரர் நன்னாதானே இருந்தார்? தினம் காலையிலே மூணு கிலோமீட்டர் நடப்பார், காய்கறி வாங்கிண்டு வீட்டுக்கு வருவார். சாயங்காலம் ஒரு நடை… இப்படி இருந்த மனுஷன் திடீர்னு ஹார்ட் அட்டாக் ல போயிட்டார்னு சொன்னா…யாரால நம்ப முடியும்? ரொம்ப நல்ல மனுஷன்…ரொம்ப சாது…நீ சொல்றது எல்லாத்தையும் கேட்டுப்பார், செய்வார். அவரோடா ஆத்மா சாந்தி அடையணும்னு நான் வேண்டிக்கறேன். சென்னைக்கு திரும்பச்சே நேரா உன் வீட்டுக்கு வந்து பாக்கறேன்…மனசே திடமா வைச்சுக்கோடி…’

படித்துவிட்டு எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னே தெரியலே. கோகிலாவுக்கு கோவம் வந்தது; எனக்கு முதலில் குழப்பம் வந்தது, பிறகு ரெண்டு விஷயத்துல நல்ல தெளிவு வந்தது – ஒண்ணு, நான் ‘ரொம்ப நல்ல மனுஷன்…ரொம்ப சாது… சொன்ன வண்ணம் செய்யும் புருஷன்’ ; இன்னொண்ணு, மறுபிறவி உண்டு.

“சரி, கோகிலா…சரசுவுக்கு எப்பவுமே மெசேஜ் அனுப்பறதுல அவசரம் அதிகம். யாருக்கோ அனுப்ப வேண்டிய அனுதாப செய்தியை உனக்கு தப்பா அனுப்பியாருக்கா…நான் அதுக்கு பலி ஆயிட்டேன்…அவ்ளோதான்…விடு, விடு”

அடடா, அந்த சரசுவுக்குத்தான் எவ்ளோ நல்ல மனசு… என்னை ‘ரொம்ப நல்ல மனுஷன்…ரொம்ப சாது…’ அப்படின்னு நினைச்சாளே…மறுபிறவி எடுத்த நான், சரசு சென்னைக்கு திரும்பினவுடனே நேர்ல போய் அவளுக்கு நிச்சியமா நன்றி சொல்லணும்னு முடிவு பண்ணினேன்.

Washington Sridhar பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *