நாளைய மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 16, 2025
பார்வையிட்டோர்: 1,781 
 
 

(2003ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 13

மெலனியின் முகம் வாடியிருந்தது. ஆனால் கண்களில் சித்தி ராவை ஆராயும் கேள்விக்குறி தொக்கிக் கிடந்தது.நீலக் கண்கள் சித்திராவை ஆழம் பார்த்தன. 

மெலனிக்காகச் சித்திரா காத்திருந்தபோது மெலனிவந்ததும் எப் படிப் பேச்சைத் தொடங்குவது என்று ஒரு சில நிமிடங்கள் யோசித்தாள். 

“மெலனியை நேரடியாகச் சந்தித்தது ஒரே ஒருதரம் தான். அந்த உறவின் ஆழம் என்ன? தனது மைத்துனன் ரவியுடன் ஒன்றாகக் கண்ட படியால் அவர்களின் உறவின் நெருக்கத்தைத் தவறுதலாக எடை போட்டு விட்டேனா?” 

“என்னவிதமான சைனிஸ் சாப்பாடு உனக்குப் பிடிக்கும்?” மெலனியின் குரல் சித்திராவை சாதாரண நிலைக்கு இழுத்து வந்தது, சாப்பாட்டுக்காக சித்திரா தன்னை அழைக்கவில்லை என்பதை மெலனி புரிந்து கொண்டாள் என்பது சித்திராவுக்குத் தெரியும். 

“எதுவும் ஸ்பெஸலாகத் தேவையில்லை.” சித்திரா மெலனியின் முகத்தைப் பார்க்காமல் சொன்னாள். 

மெலனியிடமிருந்து ஒரு சில வினாடிகள் ஒரு பதிலும் வராததால் சித்திராதன் பார்வையை மெலனியின் முகத்தில் படரவிட்டாள். 

மெலனியின் லிப்ஸ்டிக் தடவிய இதழ்களில் ஒரு மெல்லிய புன் சிரிப்பு. அந்தப் புன்சிரிப்பு சித்திராவின் மனதில் முள்ளாகத் தைத்தது. 

“என்ன போய் பிரண்ட் வேறு பெண்னைப் பார்த்து விட்டாரா? அல்லது அப்பா அவசரமாகக் கல்யாணம் பேசுகிறாரா?” இந்த மெலனி என்ன ஆறறிவுக்கு அப்பால் ஏதோ அற்புதங்களைத் தெரிந்தவளா? உண்மையை அப்படியே அப்பட்டமாகக் கேட்கிறாளே? 

சித்திராதர்ம சங்கடப்பட்டாள். 

“நான் சைக்கியாட்ரிஸ்ட் என்பது உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.”

சித்திராவின் முகத்திலிருந்து தன் பார்வையினை எடுக்காமல் சொன்னாள் மெலனி. வெயிட்டர் வந்து நின்றான். மெனு அட்டையை மெலனி பார்த்தாள். “டைகர் பீர் நல்லது,”மெலனியின் குரலில் குறும்புத் தனம். 

“என்ன?” சித்திரா குழப்பத்துடன் கேட்டாள். ஒரு சில வினாடிகளுக்கு முன் போய் பிரண்ட் பற்றிப் பேசியவள் இப்போது டைகர் பீர் பற்றிக் கேட்கிறாள். 

“சித்திரா, நீ ஏன் என்னைச் சந்திக்க விரும்பினாய் என்று தெரியாது. ஆனால் உன்னைச்சந்திப்பதில் மிகவும் சந்தோசப் படுகிறேன். ‘மெலனி மிக ஆறுதலாகச் சொன்னாள். 

சித்திரா குழப்பத்துடன் மெலனியைப் பார்த்தாள். 

“டைகர் பீர் ஆடர் பண்ணட்டுமா? மிகவும் மைல்ட் ஆனது. மனம் விட்டுப் பேச உதவி செய்யும்.” மெலனி சைனாக் கடையில் கிடைக்கும் டைகர் பீர் பற்றிச் சித்திராவுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். சித்திரா தலையாட்டினாள். 

வெயிட்டரிடம் இரண்டு டைகர் பீர் ஆர்டர் கொடுத்தாள் மெலனி. சித்திராவுக்கு பீர் பற்றி ஏதும் புரியாது. சிவப்பு வைன் மட்டும்தான் அவளுக்குத் தெரிந்த விடயம். 

“செத்த வீட்டுக்குப் போய் வந்தேன். மனம் மிகவும் சோர்ந்து போயிருக்கிறது.” மெலனி பேச்சைத் தொடர்ந்தாள். 

“செத்த வீடா?” சித்திராவின் குரலில் பரிதாபம். தன் துன்பம் சொல்லி அழ வந்தவளுக்கு மெலனி சொல்வது ஆச்சரியமாக இருந்தது. 

“ஆமாம் எங்களுடன் வேலை செய்யும் மார்க்கரெட் என்ற நேர்ஸின் மகன் கொலை செய்யப்பட்டு விட்டான். மகனை இப்படி அநியாயமானமுறையில் பறிகொடுத்த மார்க்கரெட்டைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது எத்தனை கஷ்டம் என்பது எத்தனையோ பேருக்குத் தெரிவதில்லை. அப்படி வளர்க்கும் குழந்தைகளை அநியாயமாகப் பறிகொடுக்கும் போது ஒரு தாய் துடிக்கும் துடிப்பை எத்தனைபேர் புரிவர்”.

“ஐயாம் சொறி மெலனி” சித்திராவின் குரலில் கனிவு, மெல்லமாக மெலனியின் கைகளைத் தடவி விட்டாள். மெலனியின் முகத்தில் படர்ந்திருந்த களைப்பின் காரணம் இப்போது தெரிந்தது. 

மார்க்ரெட்டின் மகன் எப்படிக் கொலை செய்யப்பட்டான் என்று சித்திரா கேட்கத் தேவையில்லை. லண்டனில் பல இடங்களில் கறுப்பு வாலிபர்கள் தங்களுக்குள்ளே நடக்கும் கோஷ்டிச் சண்டைகளால் படுமோசமாக ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக் கொள்கிறார்கள். கொலை செய்யப் படுகிறார்கள். போதைப் பொருள் விற்பனையும் விபச்சாரத் தொழிலும் மூலகாரணங்கள் என்பது பகிரங்க விடயம். 

”பாவம் மார்க்கரெட்” மனப்பூர்வமாகத் தன் ஆழ்ந்த அனுதாபத்தைச் சொன்னாள் சித்திரா. 

“ரவியின் மீது மார்க்ரெட்டுக்கு மிக மிக அன்பு. அவன் அங்கு இப்போது நிற்கிறான். அவனைக் கட்டிக் கத்துகிறாள் மார்க்ரெட் லண்டனில் இருக்க வேண்டாம். உடனடியாக இலங்கைக்குத் திரும்பிப் போ என்று சொல்கிறாள் மார்க்ரெட்”. 

ரவியின் பெயரைக் கேட்டதும் சித்திராவின் முகத்தில் சூடேறியது. அவனைப் பற்றிப் பேசத் தானே வந்தாள் சித்திரா? வெயிட்டர் பீர் கொண்டு வந்தான். 

டைகர் பீர் அவள் உணர்வை மிகவும் இலகுவாக்கிக் கொண் டிருந்தது. தன்னைப்பற்றி, ரவியைப்பற்றி, தன் எதிர்காலம் பற்றிய குழப்பங்களைப் பேச வந்தாள் சித்திரா. இப்போது மெலனியே அந்தப் பேச்சை எடுத்தது சந்தோசமாக இருந்தது. 

“நீ ரவியைக் காதலிக்கிறாயா’?” சித்திரா சட்டென்று கேட்டாள். அப்படி நேரடியாகக் கேட்டதை அவளே ஆச்சரியத்துடன் உள் வாங்கிக் கொள்டாள். 

மெலனி சித்திராவை உற்றுப் பார்த்தாள். ஒரு சில விநாடிகள் பார் வையை சித்திராவின்கண்களில் புதைத்துக் கொண்டாள். உண்மையாகத் தோண்டும் பார்வையது. மெலனியின் கூர்மையான பார்வை சித்திரா வைத் திக்குமுக்காடப் பண்ணியது. 

மெலனிடைகர் பீர் முழுவதையும் குடித்து முடித்து விட்டாள். முகம் சிவந்துபோய் விட்டது. சித்திராவின் இரு கண்களையும் இறுகிப் பிடித்துக் கொண்டாள். சொல்லப் போவதின் அழுத்தம் அந்தப் பிடியில் புலப்பட்டது. 

“ரவியை எனக்கு மிகவும் பிடிக்கும்….. என்னைக் கல்யாணம் செய்து கொண்டு லண்டனிலேயே இருந்து விடேன் என்று ரவியைக் கேட்டேன். மெலனி மிக மிக ஆறுதலாக இந்த வார்த்தைகளைச் சொன்னாள். 

இப்படி மெலனியை பேசு வைக்குமளவுக்கு நெருங்கிப் பழகிய வன் தன் தகப்பன் விரும்பினால் சித்திராவைத் திருமணம் செய்யலாம் என்று அம்மா சொல்கிறாளே! சித்திராவின் கண்கள் பனித்தன். உதடுகள் நடுங்கின “உஷ் உஷ், இது என்ன? பிளீஸ் சித்திரா அழுவதை நிறுத்திவிடு. நான் அவளைக் கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்டால் நீ ஏன் ஒப்பாரி வைக்கிறாய்? பொறாமையா” 

மெலனி குறும்புத் தனமாகக் கேட்டாள். சித்திரா அழுகையுடன் மெலனியைப் பார்த்தாள். “மெலனி அவன் துரோகி நம்பாதே.’ சித்திராவின் குரல் உணர்ச்சியில் கொந்தளித்தது. 

மெலனி இன்னொரு தரம் அமைதியானாள். 

வெயிட்டர் சாப்பாடு கொண்டு வந்தான். 

“சாப்பாடு – சூடாற முதல் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது. சமிகரணம் நன்றாக இருக்கும்.’ சித்திரா உண்மையாகக் குழம்பி விட்டாள். மெலனியை அவளால் புரிந்து கொள்ளமுடிய வில்லை. எவளிடம் தன் மனத்துயரைக் கொட்டி முறைப்பாடு செய்ய வந்தாளோ அவளே தன்னை குழப்பி விடுவதாகத் தெரிந்தது. 

சாப்பாடு இறங்கவில்லை.. நேற்றிலிருந்து அவள் மனம் கொதித்துக் கொண்டிருந்ததால் சாப்பாட்டில் மனம் இறங்கவில்லை. ஏன் மெலனியிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று பட்டது. 

“சாப்பிட்டபின் எங்காவது போவம். சாப்பாட்டுக் கடையிலிருந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருக்க விடமாட்டார்கள். ஏதாவது லைன் பாருக்குப் போவமா?: மெலனி ஆறுதலாகக் கேட்டாள். 

அவள் நடத்தையில், பேச்சில் அந்தச் சூழ்நிலையைக் கையாளும் விதத்தில் இருந்த முதிர்ச்சி சித்திராவைத் திக்கு முக்காடப் பண்ணியது. ரவியை மிகவும் விரும்பும் மெலனியிடம் சித்திரா ரவியைத் திட்ட வந்திருக்கிறாள். “சீனாச் சாப்பாட்டில் எனக்குப் பிடித்தமானது இறால் புரட்டிய நூடல்ஸ்.” மெலனி சாதாரணமாகச் சொல்வதுபோல் சொன்ன தும் அவள் கண்கள் தன் உணர்ச்சிகளை எடைபோடுகிறது என்பதை சித்திரா மறக்கவில்லை. 

தான் சரியாகச் சாப்பிடாவிட்டால் ஏதோவெல்லாமோ சொல்லி மெலனி தன்னைச் சாப்பிடப் பண்ணுவாள் என்று தெரிந்தது. கிட்டத் தட்ட எல்லாச் சாப்பாடும் முடியவிட்டு மெலனியை ஏறிட்டுப் பார்த்தாள். 

“புடிங் ஓர்டர் பண்ணட்டா?” மெலனி ஒரு குழந்தையைக் கேட்பது போல சித்திராவைக் கேட்டாள். 

ரோம் நகரம் எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனின் கதைக்கும் மெலனிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதா? சித்திரா மெலனி யை ஏறிட்டுப் பார்த்தாள். 

‘டைகர்பீர், சீனா சாப்பாடு, இனிப்பு புடிங்…’ சித்திரா தன் சூழ்நிலையை எடை போட்டாள். மெலனி என்ன செய்கிறாள். 

“வயிற்றில் ஒன்றுமில்லாதபோது மனத்தில் பாரங்கள் ஏறும். அது உடம்புக்கும் மூளைக்கும் கூடாது. மூளை சரியாக வேலை செய்ய வயிற்றில் சாப்பாடு தேவை. டாக்டர்கள் உடம்பு வைத்தியர்கள். சைக்கியாட்ரிஸ்டுகள் மனவைத்தியர்கள்” மெலனியின் குரலில் குறும்பு. 

சைனாத் தெரு வழக்கம் போல் பரபரப்பாக இருந்தது. உலகம் இன்னும் இருளத் தொடங்கவில்லை. 

பாலியல் இன்பத்திற்கு இரைதேடும் ஆண்கள் எந்தப் பெண்கள் நேரில் வந்தாலும் இழித்த வாயுடன் பார்ப்பதுபோல் மெலனியையும் சித்திராவையும் பார்த்தார்கள். 

“பெண்கள் தனியாகப் போனால் ஏறிட்டுப் பார்க்காத எத்தனை ஆண்கள் இந்த உலகில் இருக்கிறார்கள்?” சித்திரா கேட்டாள். 

“ரவி இருக்கிறானே”, பட்டென்று மறுமொழி சொன்னாள் மெலனி. 

மெலனி ரவியின் பெயரைச் சொன்னதும் சித்திராவுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. 

“நாராயணன் உறவு முறிந்ததும் லண்டன் பிடிக்காமல் கேம் பிரிட்ஜில் தஞ்சம் புகுந்தாயா?” 

மெலனி எதையும் நேரடியாகப் பேசுவது மிக மிகத்தர்மசங்கடமாக இருந்தது. 

”சாரி, சொந்த விஷயத்தில் கை வைத்து விட்டேன். றியலி சாரி” மெலனி உண்மையில் மன்னிப்பு வேண்டினாள். அதே நேரம் உன்னைப் பற்றிய முழுவிபரத்தையும் ரவி என்னிடம் சொல்லிட்டான் என்று மெலனி மறைமுகமாகச் சொல்வதும் தெளிவாகத் தெரிந்தது. ‘எல்லாவற்றையும் சொல்லிவிட்டானா “உங்கள் புராணங்களில் இதிகாசங்களிலும் காட்டுக்குப் போனவர்கள் திரும்பித்தானே வந்தார்கள்” மெலனி சித்திராவைக் கேட்டாள். 

மெலனி எவ்வளவு தூரம் இந்துத் தத்துவங்கள் புரிந்து வைத் திருக்கிறாள் என்று தெரியாமல் விட்டாலும் அவளின் அறிவு முதிர்ச்சிக்கு சித்திரா கெளரவம் கொடுத்தாள். 

“நாராயணனின் தொடர்பை ஒரு நல்ல பாடமாக எடுத்துக் கொள்ளலாமே? தோல்வியின் ஆரம்பம் என்று எடுத்துக் கொள்ளாமல் அனுபவங்களின் ஆரம்பம் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?”

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டுபோய்க் கொண்டிருந்தபோது இரண்டு தடியர்கள், இவர்களில் வேண்டுமென்று வந்து மோதிவிட்டுச் ‘சாரி’ சொன்னார்கள். 

மெலனி சட்டென்று திரும்பினாள். மோதியவனின் சேர்ட்டை இருக்கிப் பிடித்து அவனை தன் முகத்தருகே இழுத்தாள். “ஏய் நாயே, பெண்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாவிட்டால் நான் எப்படி மரியாதை கொடுப்பது என்று சொல்லித் தரட்டா?” அடுத்த கணம் தன் முழங்காலை உயர்த்தி அவனின் கால்களுக்கிடையில் ஒரு உதை விட்டாள். 

அவன் முகம் வேதனையில் சிவந்தது. பக்கத்திருந்தவன் கையை உயர்த்த முதல் மெலனி சொன்னாள், “இதோ பார் நான் கூச்சலிட்டால் கூட்டம் வரும் போலிஸ் வரும், இப்போது உனது சினேகிதனின் ஆண் குறியில் நான் கொடுத்த உதை உங்கள் இருவருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.உங்கள் இருவரையும் போலிசாரிடம் ஒப்படைத்து எனது நேரத்தை வீணாக்க நான் தயாராயில்லை. நான் நாளைக்குக் காலையில் பாரிசில் ஒரு காண்பிரன்சில் கலந்து கொள்ள வேணும் அவசரமாக வீட்டுக்குப் போக வேணும்.” மெலனி இப்படிச் சொன்னதும் ஒருத்தன் முறைத்தான் மெலனி தன் பிடியைத் தளரவிட்டாள். சித்திரா தாங்க முடியாத ஆச்சரியத்துடன் தனக்கு முன்னாள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“சில ஆண்களுக்குத் தங்கள் ஆண் குறியைத் தாண்டி உலகம் விரிந்து கிடக்கிறது என்ற தெரியாமல் போகிறது”, எரிச்சலுடன் சொன்னாள் மெலனி. 

குறும்புத் தனத்துடன் தன்னுடன் பேசிக் கொண்டிருந்த மெலனி யின் பல தரப்பட்ட முகங்களையும் சில மணித்தியாலங்களில் காண முடிந்ததை ஆச்சரியத்துடன் அவதானித்தாள் சித்திரா. 

லெஸ்டர் சதுக்கம் பின்னேர கோலாகலத்தில் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. “கிவேஸ் இன் ரோட்டில் எனது சினேகிதியின் வீடு இருக்கிறது போவமா?” மெலனி கேட்டாள். 

சித்திராவுக்கு எதிர்ப்பில்லை. இருவரும் பேசிக் கோண்டே நடந்து சென்றார்கள்.சீனாநகர்ப் பகுதியிலிருந்து கிரேய்ஸ் இன்ரோட் வரைக்கும் நடந்து கொண்டிருந்தபோது மெலனியிடம் தான் சொல்ல வேண்டிய விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருப்பது போல பட்டது சித்திராவுக்கு. 

“அந்த முரடர்களை எதிர்த்துக் கொண்டாயே உனக்கும் பயம் இல்லையா?” சித்திரா தன்னுடன் நடந்து வரும் அந்த உயர்ந்த, உறுதி யான ஆங்கிலப் பெண்ணான மெலனியிடம் கேட்டாள். 

மெலனியுடன் தன்னை ஒப்பிடும்போது, தான் மிகவும் உணர்ச்சி வசப்படும் பெண்ணா இருப்பதாகப் புரிந்து கொண்டாள் சித்திரா. வெட்கப்பட்டாள், தான்சாப்பாட்டுக்கடையில் அழுதது வெட்கத்தைத தந்தது, ஜேன் என்ற தனது சினேகிதிக்கும் மெலனிக்கும் எத்தனை ஒற்றுமைகள், வேற்றுமைகள் இருக்கின்றன என்று அவள் மனம் கேள்வி கேட்டது. 

“நாங்கள் பயப்படும் வரையும் தான் மற்றவர்கள் எங்களைப் பயப்படுத்துவார்கள். பெரும்பாலான ஆண்கள் மிகவும் பெலலீவின மானவர்கள். பாலியல் வன்முறைகளைப் பெண்கள் மூலம் பிரயோகிப் பதால் தங்களை வலிமையுள்ளவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். அதைப் பெரும்பாலான பெண்கள் சகித்துக் கொள்கிறார்கள். சமயக் கட்டுப்பாடுகள், சமுதாயக் கோட்பாடுகள் என்பன ஆணின் வன்முறை களை ஏதோ ஒரு விதத்தில் நியாயப் படுத்துகின்றன”. 

சித்திராதலையாட்டிக் கொண்டாள். 

மெலனியின் சினேகிதியின் பிளாட் மிகவும் வித்தியாசமாக இருந்தது. பெண்கள் பற்றிய புத்தகங்கள் நூற்றுக்கணக்காகக் காணப்பட்டன. 

“எனது சினேகிதி பெண்கள் கல்வி, சுதந்திரம், சமத்துவம் என் பதைப்பற்றி எழுதுபவள் நிறைய வாசிப்பாள். நிறையப் புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கிறாள்.” பிளாட்டில் பெருகிக்கிடந்த புத்தகங்களைப் பார்த்து மெலனி சொன்னாள். 

மெலனியின் குரலில் தொனித்த இனிமை, குழைவு, சந்தோசம் என்பன மெலனியும் அந்த பிளாட்டில் வசிப்பவளும் நெருங்கிய சினேகிதிகள் என்று புலப்படுத்தியது. 

மெலனி உரிமையுடன் நடமாடினாள். “எனது சினேகிதி ஒரு ஆராய்ச்சி விஷயமாகச் சீனாவுக்குச் சென்று விட்டாள்”. 

சித்திரா கேட்கமுதலே மெலனி சொன்னாள். 

இருவருக்கும் தேனீர் தயாரித்துக் கொண்டு வந்தாள் மெலனி. இருவரும் ஆறுதலாக உட்கார்ந்தார்கள். 

சித்திரா மௌனமாக இருந்தாள். இவளிடம் எவ்வளவோ சொல்லி,எத்தனையோ கேள்விகள் கேட்க வேண்டும் என்று வந்தவள் வாயடை டத்துப் போயிருந்தாள். 

“சரி, சித்திரா ஏதோ பேச வேண்டியிருந்த படியால்த்தானே எனக்குப் போன் பண்ணினாய். என்ன விஷயம்”. 

“இரவு சுமதி வீட்டுக்குப் போயிருந்தேன்…” 

சித்திரா தொடங்கினாள் ஆனால் தொடரமுடியவில்லை. 

“சுமதி என்பது ரவியின் அக்கா, புருசனிடம் அடி வாங்கிக் கொண்டிருப்பவள். ரவி அவளைக் கணவனிடமிருந்து பிரிந்து வாழச் சொன்னதாகச் சொன்னான்” மெலனி விளக்கினாள். 

ரவி மெலனியிடம் ‘எல்லாவற்றையும் சொல்லி’ யிருக்கிறான் என்பதை இன்னொருதரம் ஞாபகப்படுத்திக் கொண்டாள். 

“கொஞ்ச காலமாக என்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் ரொம் பவும் கஷ்டப்படுகிறார்கள். எனது பக்கத்து வீட்டுச் சினேகிதி குழந்தையை வயித்தில் சுமக்கிறாள். எனது மைத்துனி கணவனிடம் அடிவாங்கிக் கொண்டிருக்கிறாள். 

சித்திரா முடிக்க முன்மெலனி கேட்டாள் “உனக்கு என்ன பிரச்சனை ஜோர்ஜ் யாரோ ஒரு பெண்ணைப் பார்க்கிறானா?” 

இவளிடம் எதையும் மறைக்க முடியாது என்று சித்திராவுக்குத் தெரியும். 

“அப்படித்தான் அப்பா சொல்கிறார். அமெரிக்கா போயிருந்த போது அவர் ஜோர்ஜுடன் இன்னுமொரு பெண்ணைப் பார்த்ததாகச் சொன்னார். 

“உனக்கு உலகம் வெறுத்துப் போய்விட்டதா அந்தச்செய்தியைக் கேட்டு?” மெலனி அன்பாகக் கேட்டாள். அதே நேரத்தில் அவள் குரலில் ஒரு விதமான நையாண்டித்தனம் இருப்பதையும் சித்திராவால் உணர முடிந்தது. மெலனிக்குக் காதலின் வேதனை புரியாதா? அல்லது அவள் தொழிலில் இதெல்லாம் சகஜமாக எடுக்கப் பழகிவிட்டாளா? 

“சித்திரா உன்னைப் பார்த்தால் நீ மிக மிகக் குழம்பிப் போயிருக் கிறாய் என்று தெரிகிறது. அதன் மூலம் நீ எவ்வளவு தூரம் ஜோர்ஜில் மனதைக் கொடுத்திருக்கிறாய் என்றும் தெரிகிறது. அப்பா கண்டது, சொன்னது எல்லாம் ஏன் பொய்யாக இருக்கக் கூடாது?” 

மெலனி ஆறுதலாகக் கேட்டாள். 

சித்திராவின் இருதயம் அலறியது. 

“ஏன் ஜோர்ஜ் வரும் வரையும் பொறுமையாய் இருக்கக் கூடாது?” மெலனிதன் உத்தியோகத் தோரணையுடன் கேட்டாள். 

“மனித உறவுகள் சாசுவதமானதல்ல, மாறக் கூடியது. ஏமாற்றக் கூடியது. துரோகம் செய்யக் கூடியது. மனிதர்கள் பலவீனமானவர்கள். சுய நலமானவர்கள், பெரும்பாலானவர்கள் தங்கள் லாபத்தின் அடிப் படையில் உறவுகளைப் படைக்கிறார்கள். பெண்கள் சில வேளைகளில் பேய்த்தனமாக அல்லது முட்டாள்த் தனமாகத் தெய்வீகம், தூய்மை, தியாகம் என்ற பெயர்களில் தங்கள் உணர்வுகளை அழித்துக்கொள் கிறார்கள். இந்தப் பலவீனமான தத்துவத்தை இன்றைய சினிமாப் படங்களும் அன்றைய புராண இதிகாசங்களும் மேன்மையான, பெண்மையின் அதியுன்னத வாழ்க்கையாகச் சித்தரிக்கின்றன”. 

சித்திராவுக்குத் தெரியாத உண்மைகள் அல்ல இவை. ஆனால் இன்னொருத்தர் மூலம் கேட்கும்போது அந்த உண்மையின் வேகம் உள்ளத்தை ஊடுருவியது. 

“காதல் என்பது இயற்கையான உணர்வு. எங்கள் உடம்பின் சுரப்புகளும், எங்கள் மனத்தின் உணர்வுகளும் ஒன்றுசேர்ந்த ஒரு பரிமாணத்தின் மலர்ச்சிதான் காதல். காதலை அனுபவிக்காதவன் முழு மனிதனாக இருக்க முடியாது. கல்யாணங்களுக்குள் காதல் என்ற பெயரில் கடமை வளர்கிறது. இதைப் பெரும்பாலும் செய்பவர்கள் பெண்கள். ஆண்களின் எல்லாவிதமான தேவைகளையும் பரிபூரணப் படுத்துவதன் மூலம் ஒரு பெண் கற்புள்ள பெண், பத்தினிப் பெண், குடும்பத்தலைவி, நல்ல பெண்என்றெல்லாம் புகழப்படுகிறாள். ஆனால் நல்ல ஆண்கள் என்று பெயர் எடுக்க ஆண்கள் பெண்களுக்காகச் செய்யும் கடமைகள் என்ன? இதையாரும் கேட்பதில்லை” மெலனியின் பேச்சை சித்திரா கேட்டுக் கொண்டேயிருந்தாள். 

நல்ல ஆண் என்று பெயர் எடுக்க டேவிட், ஜேனின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமா? சட்டென்று நினைத்துக் கொண்டாள் சித்திரா. “ரவியைத் துரோகி என்று திட்டினாயே, உனக்கு அவன் என்ன செய்தான்” 

மெலனியின் அடுத்த கேள்வி 

“எனக்கல்ல…” சித்திராதயங்கினாள், மெலனியிடம் நேரே கேட்க முடியாமலிருந்தது. 

”யாருக்குத்தான் துரோகம் செய்தான்?” 

மெலனி மிக ஆறுதலாகக் கேட்டாள் 

“உன்னைக் கல்யாணம் செய்யச்சொல்லி அவனை நீ கேட்டதாகச் சொன்னாயே,” சித்திராவின் குரலில் எரிச்சல். 

“அவன் என்னைக் காதலித்துக் கைவிட்டதாக நீ ஏன் நினைத்துக் கொள்கிறாய்?” மெலனி ஆச்சரியத்துடன் கேட்டாள், மெலனி சித்தி ராவை உற்று நோக்கினாள். சித்திரா தொடர்ந்தாள். 

“என்னைக் கல்யாணம் செய்து கொள் என்று நீ கேட்குமளவுக்கு உன்னுடன் நெருங்கிப் பழகியதை என்ன வென்று சொல்வது?’ 

சித்திராவின் இந்தக் கேள்விக்கு மெலனி சிரித்தாள். 

“ரவி எனக்கு மிகவும் பிடித்தமான மனிதன். நான் சந்தித்த ஆண்களில் மிக மிகக் கௌரவமானவன். அவன் சந்தித்த அனுபவங்கள் அவனை ஒரு மிக மிக நல்ல மனிதனாக மாற்றியிருந்தது. அவன் தனது நோயாளிகளுடன் பழகும் விதம், அவன் தன் கடமையாகச் செய்யும் விதமெல்லாம் எனக்குப் பிடித்திருந்தது.” 

“அதற்காக உன்னைக் கல்யாணம் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தாயா?” சித்திரா உண்மையாகக் குழம்பி விட்டாள். 

“என்ன சித்திரா குழம்பிப்போய் இருக்கிறாய், நான் அவனை எனக்குப் பிடித்தமான மனிதன் என்று சொன்னேனே தவிர கட்டிலுக்கு வரத் தயாரானவன் என்று சொன்னேனா?” மெலனி வெடித்தாள். 

“பிடித்தவன் என்றால் ஏன் கல்யாணம் செய்யக் கூடாது?” சித்திராவின் இந்தக் கேள்விக்கு மெலனிமறு மொழிசொல்லவில்லை. ஒரு சில வினாடிகள் கண்களை மூடிக் கொண்டாள். பின்னர் சித்திராவைப் பார்த்துக் கேட்டாள். “ஜோர்ஜ் சரிவராவிட்டால் ரவியைச் செய்து கொள்வாயா?” மெலனி இந்தக் கேள்வியைக் கேட்டபின் சித்திராவை ஏறிட்டு நோக்கினாள். 

ஒரு சில வினாடிகள் யோசித்தபின் பெருமூச்சுடன் “இல்லை” என்றாள் சித்திரா. 

“ஏன் மாட்டாய்?” 

“அவன் என்னை விரும்ப மாட்டான்.” சித்திராவுக்கு இதைச் சொன்னபோது உலகமே இருண்டு கொண்டு வந்தது, நாராயணன் போய்விட்டான். ஜோர்ஜ் அமெரிக்காவிலேயே தங்கிவிடலாம். ரவி மெலனியில் மிகவும் விருப்பமுள்ளவன். “எனக்கு என்ன நடந்தது’? சித்திரா வாய்விட்டுக் கேட்டாள். 

மெலனிசித்திராவின் அருகில் வந்தாள். அணைத்துக் கொண்டாள். ஒரு சகோதரியின் பாசம். 

“சித்திரா நீ ஒரு சோசியல் வேர்கர். மற்றவர்களுக்கு உதவி செய்பவள். மற்றவர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பவள். ஆழ்ந்து யோசித்துப் பார். உனக்கு எத்தனையோ வெற்றிகள் வாழ்க்கையில் இருக்கின்றன. ஆண்களின் அன்பில், உறவில் மட்டும்தான் வாழ்க்கை யின் முழுமை இருக்கும் என்று நினைக்காதே.” 

“நீ மட்டும் ஏன் ரவியைத் திருமணம் செய்யச் சொல்லிக் கேட்டாய்?” 

இலங்கையில் இப்போது நடக்கவிருக்கும் சமாதானப் பேச்சுகள் சரிவராவிட்டால் தமிழன் என்ற பெயரில் ரவி துன்பங்களை அனுபவிக்க நேரிடலாம். அவனைப்போல் ஒரு நல்ல டாக்டரின் சேவை நீடிக்க வேண்டும். தமிழன் என்ற பெயரில் கொலை செய்யப்படாமல் எங்காவது தப்பியிருக்கட்டும். அவனுக்கு இங்கிலாந்தில் இருக்க விருப்பமென்றால் அவன் இருக்கும் வசதிக்கு விசா எடுப்பதற்காக அவனைத் திருமணம் செய்ய யோசித்தேன். “ரவியில் எனக்குள்ள அன்பு மிக வித்தியாசமான அன்பு. காமமோகாதலோ அல்ல.” 

“அவனில் உள்ள மதிப்பில், பரிதாபத்தில் அவனைக் கல்யாணம் செய்யச்சொல்லிக் கேட்டாயா?” 

சித்திரா மெலனியிடமிருந்து இன்னும் என்ன புதினங்கள் வெளி வரப்போகுதோ என்பது தெரியாமல் கேட்டாள். 

“ஆமாம் ஒரு ஆண் என்ற முறையிலோ ஒரு ஆணுடன் குடும்ப மாயிருக்க வேண்டும் என்றோ நான் ரவியைத் திருமணம் செய்ய விரும்பவில்லை. ஒரு பெண் ஒரு ஆணுக்கும் ஒரு ஆண் ஒரு பெண் ணுக்கும் உதவி செய்வதாயிருந்தால் அதன் அடிப்படை எப்போதும் செக்ஸ் அடிப்படையிற்தான் இருக்க வேண்டும் என்றா நினைக்கிறாய்?” 

சித்திராபதில் பேசவில்லை. 

“சித்திரா இந்த பிளாட்டில் நான் மிகவும் சுதந்திரமாக இருக்கிறேன். இதிலிருந்து ஏதும் உனக்குப் புரிகிறதா” 

”உனக்கு நெருக்கமான சினேகிதியின் பிளாட் என்று நினைக் கிறேன்.”சித்திரா கொஞ்சம் கொஞ்சமாக என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்து கொண்டாள். 

“தனிப்பட்ட பிரச்சினை காரணமாக நான் வேலையை விட்டு ஸ்கொட்லாந்து போகிறேன். அதன் பின்னணிக் காரணம் என்னால் ரவி பிரச்சினைப் படக்கூடாது என்பதுதான்” 

மெலனியின் பெருந்தன்மை சித்திராவின் மனதைத் தொட்டது. 

“சித்திரா நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எனக்கும் ரவிக்கும் உள்ள அன்பையும் நெருக்கத்தையும் பார்த்துச் சிலர் தவறாக முடிவு கட்டுகிறார்கள். படித்த பெண்ணான நீயும் ஜோர்ஜ் விடயத்தில் ஆற அமர யோசிப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஜோர்ஜ் வரும் வரைக்கும் பொறுமையாக இருக்க முடியாதா?” 

“நன்றி” சித்திரா மனமாரச் சொல்லிக் கொண்டாள். 

“சித்திரா எனக்கும் உனது மைத்துனருக்கும் உள்ள உறவு உத்தியோக சம்பந்தமாகத் தொடங்கி வளர்ந்தது. அதற்குக் காரணம் ரவி ஒரு நல்ல மனிதன் என்பதுதான். நான் அவனைச் செக்ஸ் தேவைக்காகப் பாவிக்கவில்லை”. 

அத்தியாயம் – 14

நாட்கள் பறந்து கொண்டிருந்தன. ஒரு கிழமைக்கு இரண்டு தரம் என்றாலும் ஜோர்ஜ் வழக்கம்போல் போன் பண்ணினான். தவிர்க்க முடியாத காரணத்தால் தான் அமெரிக்காவிலிருந்து உடனடியாக வரமுடியவில்லை என்றான். அவன் குரலில் சந்தோசம். சாதாரணமாகவே ஜோர்ஜ் மிகவும் அடக்கமான பேர்வழி. அவனை மாற்றிய விடயம் என்ன? மனிதர் யார்? 

“இப்படிச் சந்தோசப் படுகிறாயே அப்படி என்ன விசேடம் அமெரிக்காவில்?” அப்பட்டமாகக் கேட்டாள். 

”உம் உனக்கு சேர்பிரைஸ் தருவதாக இருக்கிறேன்.”அவன் குதூகலத்துடன் சொன்னான். 

“உன்னைச் சந்தோசப்படுத்திய பேர்வழி மிகவும் ஸ்பெசல் என்று நினைக்கிறேன்”, தனது குரலைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு கேட்டாள். மெலனி சொன்னதுபோல் ஆண்களின் தயவில் தன் வாழ்வின் நிறைவை அவள் எதிர்பார்க்கவில்லை. அவன் ஒரு கொஞ்ச நேரம் மௌனமாயிருந்தான். எனது சித்திராதான் எனது ஸ்பெசல் பேர்வழி என்று அவன் சொல்வான் என்று நினைத்தாள். 

“ஆமாம் ஒரு விதத்தில் ஸ்பெசல்தான்… உனக்கு நேரில் எல்லா வற்றையும் சொல்கிறேன். அதுவரைக்கும் என்னை மன்னித்துவிடு. ஜோர்ஜ் ஒரு நல்ல சினேகிதன் என்பதை சித்திரா உணர்வாள். ஜோர்ஜ் மிக மிக நேர்மையானவன் என்பது அவனைச் சுற்றியிருப் போரின் கருத்து. அவளுக்கு அவன் பொய் சொல்ல மாட்டான் என்று சித்திராவுக்குத் தெரியும். விரைவில் லண்டனில் நடக்கவிருக்கும் அமைதிப் போராட்டத் திற்கான ஆயத்தங்களை டேவிட் செய்து கொண்டிருந்தான். இங்கி லாந்தில் அறுபது வீதத்திற்கும் மேலான மக்கள் அமெரிக்க ஜனாதிபதி யுடன் பிரதமர் டோனி பிளோர் சேர்ந்து ஈராக் நாட்டுக்கு எதிராகப் போர் தொடுப்பதை வெறுத்தனர். ஆனாலும் அரசாங்கம் அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு போருக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தது. 

“ரஷ்யா தனது விரோதி என்று அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர்களைச் செலவழித்து நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்தது. அந்த ஆயுத பலத்தில் இப்போது உலகை ஆட்டிப் படைக்கிறது. இஸ்ரேலின் கொடுமையான செயல்களைப் பார்த்தும் பாராமல் இருந்து கொண்டு ஈராக்கை உதைத்து அழித்து அந்த நாட்டைக் கூறுபோட அமெரிக்கா முனைகிறது, தடுப்பார்யாருமில்லை”, டேவிட் வழக்கம்போல் போருக்கு எதிரான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தான். 

ஜேன் அவனுக்கு ஓடி ஆடி உதவி செய்து கொண்டிருந்தாள். ஜேனின் வயிற்றில் வளரும் குழந்தையால் ஜேன் வாந்தி எடுத்துக் கொண்டு கஷ்டப்பட்டபோது டேவிட் மிக மிக அன்புடன் பார்த்துக் கொண்டான். 

ஆரம்பத்தில் அவன் “ஏன் இப்போது எங்களுக்குக் குழந்தை தேவை என்று முணுமுணுத்தபோது நானும் அவசரப்பட்டு ஏதும் செய்யாமலிருந்ததன் பலன் இப்போது தெரிகிறது. பெரும்பாலான மனிதர்கள் மிகவும் நல்லவர்கள். தற்செயலாகப் பிரச்சினைகள் தலையில் ஏறும்போது குழம்பிப் போவார்கள்.” ஜேன் டேவிட்டுக்காகப் பரிந்து பேசினாள். 

செப்டம்பர் மாதம் இருபத்தெட்டாம் தேதி லண்டனில் நடந்த ஈராக் போருக்கு எதிரான அமைதி ஊர்வலத்தில் ஐந்து லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள். 

டேவிட், ஜேன் மற்றும் பல நண்பர்களுடன் லண்டன் வந்திருந்த சித்திரா அந்த அமைதிப் படையைப் பார்த்துப் பிரமித்து விட்டாள். ஜோர்ஜ் இருந்தால் அவனும் சேர்ந்து வந்திருப்பான். மூன்றாம் நாட்டு மக்களில் அக்கறையுள்ளவன் அவன். அமைதிக்காகப் போராடும் மக்களுடன் தன்னையிணைத்துக் கொண்டபோது பெருமிதமாக இருந்தது. 

அன்று பின்னேரம் தாய் தகப்பனிடம் போனாள். எதிர்பாராத விதமாக ரவியைச் சந்தித்தாள். 

அவனுடன் பட்டிக்காட்டுப் பெண்போல் நடுச்சாமத்தில் விம் பிள்டன் சந்தியில் வைத்துச் சண்டை போட்டது ஞாபகம் வந்ததும் அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் சுயமரியாதை விடவில்லை. 

இவளைக் கண்டதும் திலகவதியின் முகத்தில் இருள் படர்ந்தது. ஜோர்ஜ் பற்றி அப்பா அவளிடம் என்ன சொல்லியிருப்பாரோ தெரியவில்லை. மகளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள் திலகவதி. 

உன் தலைவிதி இப்படியாகிப் போய்விட்டதே என்ற பெருமூச்சு. அப்பாவழக்கம்போல் மகளை அணைத்துக்கொண்டார். ரவியுடன் அவள் எப்படிப் பழகுகிறாள் என்பதைத் தாயும் தகப்பனும் கடைக் கண்ணால் கவனிக்கிறார்கள் என்று தெரிந்தது. 

“அம்மா இரண்டு கிழமை லீவில் லண்டனில் நிற்கப் போகிறேன் சந்தோசமா?” சித்திராதாயைக் கேட்டாள். 

சித்திரா எல்லோர் முன்னிலையிலும் இப்படிச் சொன்னது எல் லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் யாரும் சினேகிதி களுடன் சேர்ந்துகொண்டு ஊர் சுற்றும் சித்திரா எப்படி மாறிவிட்டாள் என்று அவர்கள் யோசிப்பது தெரிந்தது. 

“ஒன்றிரண்டு நாட்கள் எனக்குத் துணையாக லண்டன் நகர் பார்க்கலாமா?” ரவி கேட்டதும் எல்லோர் பார்வையும் சித்திராவில் திரும்பியது. 

மெலனி ஸ்காட்லாந்து போய்விட்டாள் என்று சித்திராவுக்குத் தெரியும். ஸ்காட்லாந்து தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக மெலனி சித்திராவுக்குச் சொன்னாள். 

“அதற்கென்ன”, மரியாதைக்குச் சொல்லி வைத்தாள். 

நாராயணனுடன் போன பூங்காக்கள், தியேட்டர்கள், ரெஸ்ட் ரோண்டுகளுக்கு ரவியுடன் போகும்போது தன் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்தாள். 

“டாக்டர் குப்தா இந்தியா திரும்பிவிட்டார்.நீ வேண்டுமானால் எனது பிளாட்டிலேயே நிற்கலாம்.” 

ஒளிவு மறைவின்றி ரவி அழைப்பு விடுத்தது அங்கிருந்தவர்களை இன்னொருதரம் ஆச்சரியப்படுத்தியது. 

என்ன சொல்கிறான்? என்ன நினைத்துக் கொண்டு சொல்கிறான்? நாராயணனை நம்பி ஏமாந்தாய், ஜோர்ஜ் பற்றி ஏங்குகிறாய் அதற்கப்பால் நான் இருக்கிறேன் என்கிறானா? அல்லது உன்னைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது என்று மறைமுகமாகச் சொல்கிறானா? 

“லண்டனில் சில இடங்களைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.” 

ரேட் கலறி – கலாச்சார நிலையத்திற்குப் போகும்போது ரவி சொன்னான். சித்திராவுக்கு வயிற்றை ஏதோ செய்தது. 

“நீ சென்னைக்கு வந்தால் ஆர்ட்டிஸ்ட் காலனிக்கு உன்னை அழைத்துச் செல்வேன். வாழ்க்கை எல்லாம் நீ என்னை நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு கலைப்பொருளை வாங்கித் தருவேன்” என்று நாராயணன் சொல்லிய வார்த்தைகள் நாராசமாய் அவள் மனத்தில் எதிரொலித்தது. 

ரவி ஒவ்வொரு கலைப் பொருட்களையும் ரசித்தான். மாடர்ன் ஆர்ட்டில் மறைந்து கிடக்கும் தத்துவங்களை விளக்கினான். 

சித்திரங்களைப்பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென்று சித்திராவின் பக்கம் திரும்பினான். அவளை ஏறிட்டு நோக்கினான். ஏதோ சொல்லப் போகிறான் என்று ஊகித்துக் கொண்டாள். 

“சுமதி எப்போதாவது ஏதாவது ஆர்ட் கண்காட்சிக்கு வந்திருப்பாள் என்று நினைக்கிறாயா?” அவன் குரலிலிருந்த சோகம் அவளின் இருத யத்தின் அடியில் உறைந்தது. உணர்வுகளைக் குழப்பியது. தமக்கையில் இத்தனை பாசம் வைத்திருக்கும் ஒரு தம்பியை அவள் சந்தித்ததில்லை. அவளுக்கு எந்தச் சகோதர சகோதரிகளுமில்லை. அந்த அனுபவம் எவ்வளவு நெருக்கமானது என்பது அவனின் நெகிழ்ந்த குரலிலிருந்து தெரிந்தது.ரவிதனது மைத்துனன் என்பதற்கு அப்பால் அவன் ஒருநல்ல மனிதன் என்பதை அங்கீகரித்தாள். மெலனி இவனைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதின் பின்னணியில் அவர்களின் உறவு எப்படி வளர்ந்திருக்கும் என்று கற்பனை செய்தாள். 

உறவினர் என்பவர்களைத் தவிர அவள் வாழ்க்கையில் சினேகி தர்கள் சினேகிதிகள் நிறையப்பேர் குறுக்கிட்டிருக்கிறார்கள். தமயன் என்ற ஸ்தானத்தை அவள் கொடுப்பதானால் டேவிட்டுக்குக் கொடுப்பாள். ஜேனும் டேவிட்டும் அவளின் நீண்ட கால நண்பர்கள். நாராயணனின் துயர ஞாபகங்களை அவர்களின் அன்பிலும், பரிவிலும் கொஞ்சம் கொஞ்சம் மறக்க உதவினார்கள். 

இப்போது தனது தமக்கையின் வாழ்க்கை பற்றி துயர்படுகிறான். “தனக்குத் துரோகம் செய்யும் ஒரு ஆணுடன் எப்படிச் சில பெண்கள் தொடர்ந்து சீவிக்கிறார்கள் என்று தெரியவில்லை” அவன் பெருமூச்சு விட்டான். “சித்திரா என்னை நீ உணர்வாய் என்று நம்புகிறேன்.” அவள் புன்னகைத்தாள். அவர்களுக்கு எதிரில் மிலேனியத்திற்காகக்கட்டப்பட்ட சக்கரம் நூற்றுக்கணக்கான மக்களைத் தாங்கிக் கொண்டு மெல்ல மெல்ல சுற்றிக் கொண்டிருந்தது. 

“வாழ்க்கையே இப்படித்தான். ஒரு இடத்தில் நிற்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறது.” 

அவன் வேதாந்தம் பேசவா இரண்டொருநாள் தன்னுடன் தங்கச் சொன்னான்? 

“மனைவிகளுக்குத் துரோகம் செய்யும் கணவர்கள் உலகத்தில் எல்லா இடமும் நிறைந்து கிடக்கிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி கிளிண் டன் மொனிக்காவை உறவு கொண்டபோது அவர் மனைவி ஹிலரி ஓடிவிட்டாளா? இங்கிலாந்தின் மாஜிப் பிரதமர் தனது மந்திரி எட்வீனா வுடன் உறவு கொண்டபோது அவர் மனைவி நோர்மா விவாகரத்து செய்து விட்டாளா? நாங்கள் சுமதியை செந்திலிடமிருந்து பிரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவனுக்குத் தெரியும்.” 

ரவி இப்போது சித்திராவை ஏறிட்டு நோக்கினான். அவன் பார்வை யிலிருந்த எதிர்பார்ப்பு என்னவென்று அவளுக்குத் தெரியும். 

”நாங்கள் நினைத்தபடி மற்றவர்கள் நடப்பார்கள் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல என்று நினைக்கிறேன்”. 

சித்திரா இப்படிச் சொன்னதும் அவன் முகத்தைத் தாழ்த்திக் கொண்டான். 

இருவரும் தேம்ஸ் நதிக் கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். “உங்கள் தமக்கைக்குப் புத்தி சொல்ல வேண்டும் என்று என்னைக் கேட்பதற்காகவா என்னைக் கூப்பிட்டீர்கள்” 

அவள் நிதானமாகக் கேட்டாள். இவன் தாய் தகப்பன் முன்னி லையில் என்னுடன் ஒன்றிரண்டு நாட்கள் செலவழிக்கிறாயா என்று கேட்டபோது தாய் தகப்பன் என்ன நினைத்திருப்பார்கள் என்று அவளுக்குத் தெரியும். 

அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அவள் அதிகம் யோசிக்கவில்லை. மற்றவர்களின் செயல்களைச்சிலவேளை தடுக்கலாம். புரிந்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் நினைவுகளைத் தடுக்க முடியாது என்று அவளுக்குத் தெரியும். 

ரவி இவளைப் பார்க்கவில்லை. நதியைத் தாண்டியிருந்த படிகளில் இறங்கி உட்கார்ந்தான். பின்னேர ஆரவாரத்தில் தேம்ஸ் நதியில் பல உல்லாசப் படகுகள் ஆரவாரத்துடன் போய்க் கொண்டிருந்தன. 

“நான் உன்னைக் கூப்பிட்டதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன…. அதில் நீ சுமதிக்கு உதவி செய்ய முடியுமா என்று கேட்க யோசித்ததும் உண்டு.” 

அவன் மேலதிகமாக ஏதோவெல்லாம் சொல்ல யோசிக்கிறான் என்று தெரியும். ‘நீ என்னுடன் வந்து நிற்பதால் எங்கள் இருவருக்கி மிடையில் ஏதோ இருப்பதாக உனது தாய் தகப்பன் நினைக்க மாட்டார்கள் என்று விளக்கவும் யோசித்தேன்” 

சித்திராதர்மசங்கடப்பட்டாள். ஒரு சில வினாடிகளுக்குமுன்அவள் நினைத்ததை அவன் சொல்கிறான். 

“நான் இன்னும் சில வாரங்களில் இலங்கைக்குத் திரும்பிப் போகிறேன்…எத்தனயோ பேருக்கு லண்டன் பிடிக்கலாம் எனக்கு விருப்பமில்லை”. அவன் தொண்டையடைத்தது. தொடர்ந்தான். குரல் உணர்ச்சிவசப் பட்டிருந்தது. 

“உனது தகப்பன் எங்கள் குடும்பத்திற்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறார். எனது தாய் அவரின் சகோதரி என்ற காரணத்தைத்தவிர நான் அவர் மருமகனாக வரவேண்டும் என்ற அடிப்படையில் அவர் உதவி செய்திருந்தால் மன்னிக்கச் சொன்னேன். ஏனென்றால் நான் எந்தக் காரணம் கொண்டும் லண்டனில் தங்கத் தயாரில்லை.” ரவி தேம்ஸ் நதியைப் பார்த்தபடி சொன்னான். 

ஒருவிதத்தில் அவளுக்கு நிம்மதியாயிருந்தது. 

“நான் எனது நாட்டையும் மக்களையும் மிகவும் நேசிக்கிறேன். இலங்கையில் ஒரு மாற்றம் வரும். உடைந்து கிடக்கும் சமுதாயத்தை நல்லபடியாக உருவாக்க என் கடமை பயன்பட்டால் நான் சந்தோசப் படுவேன். என் தந்தையின் இரத்தம் சிந்திய பூமியது. இரு தம்பிகளையும் பலி வாங்கிய அரசியல் வெறி பிடித்த நாடது. எனது தங்கை தன் வாழ்க்கையைத் தியாகம் செய்த பூமியது. அந்தப் பூமியில் தன் உயிரும் போகவேண்டும், எனது குடும்பம் புதைக்கப்பட்ட பூமியில் தானும் சங்கமமாக வேண்டும் என்று நினைக்கிறாள். அவளுக்கு இலங்கையில் என்னைத் தவிர யாரும் கிடையாது…” ரவியின் குரலில் உணர்ச்சி வசப்பட்டுத் திணறியது. 

“அப்பா உங்களிடம் என்னைக் கல்யாணம் செய்யச் சொல்லிக் கேட்டாரா?” அவள் குரலில் அவமானம். என்னை யாரிடமாவது தள்ளிவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள் என்ற ஆதங்கம். என்னை இந்த நிலையில் ஏதோ ஒரு பரிதாபத்துக்குரியவள் என்று நினைக்கிறார்களே என்ற எரிச்சல். 

“சித்திரா உனது திறந்த மனமும் புத்திசாலித்தனமும் எனக்கு நிறையப் பிடிக்கும். ஆனால் சிலவேளை சிலவிடயங்களைக் கற்பனை செய்துகொண்டு சங்கடப்படுகிறாயோ என்று சந்தேகமாக இருக்கிறது. உனது தகப்பன் மிகவும் பரந்த மனம் படைத்த நல்ல மனிதன். 

அவள் சட்டென்று எழுந்தாள். இன்னொருதரம் அவனுடன் சண்டை பிடிக்கத் தயாரில்லை. 

“உனது தகப்பனுக்கு நான் லண்டனில் கடைசி வரைக்கும் தங்க மாட்டேன் என்று தெரியும். அதேவேளை உனக்குப் பிடிக்காத எதையும் செய்ய மாட்டார் என்றும் தெரியும். அவருக்கு என்னைப் பற்றி என்னவெல்லாமோ கற்பனையிருந்திருக்கும். ஆனால் வெளிப்படுத்த முடியாதவாறு எத்தனையோ தடங்கல்கள் உண்டு என்றும் தெரியும். சித்திரா, தயவு செய்து என்னைப் புரிந்துகொள். நாங்கள் வித்தியாசமான மனிதர்கள். 

“மெலனியை ஏன் தட்டிக் கழித்தீர்கள்?” சித்திராவின் குரலில் ஆத்திரம். 

அவன் இப்போது வாய்விட்டுச் சிரித்தான். ஆத்திரப்படவில்லை. அவன் ஏன் சிரிக்கிறான் என்று அவளுக்கு விளங்கவில்லை. 

“மெலனி என்னில் பரிதாபப்பட்டாள். இலங்கைக்குப் போய் அரசியல் பிரச்சினைகளில் உயிரை இழந்து விடுவேனோ என்ற பயத் திற்காக என்னை லண்டனில் இருக்கச் சொன்னாள். லண்டனில் இருக்க விசா தேவைக்கு வேண்டுமானால் என்னைத் திருமணம் செய்யக் கேட்டாள்” 

“உங்களுக்கு மெலனியில்….” 

அவள் முடிக்க முதல் அவன் சொன்னான். 

“மிக மிக அன்பும் மரியாதையுமிருக்கிறது? அதற்காகக் கல்யாணம் செய்ய வேண்டுமா?” 

அவளுக்கு வெட்கமாக இருந்தது. தன்னை ஒரு முற்போக்குப் பெண்ணாக நினைத்தவளுக்கு ரவியின் கேள்வி சாட்டையாக இருந்தது. “மெலனி என்னை ஒரு காதலனாக விரும்பவில்லை… ஒரு சினேகிதனாகத்தான் உதவி செய்ய விரும்பினாள்.” 

மெலனியைப் பற்றி இவனும் இவனைப் பற்றி மெலனியும் எவ்வளவு தூரம் மதிப்பாக எடை போடுகிறார்கள்? என்னையும் ஜோர்ஜ் இப்படி எடை போடுவானா? 

“சித்திரா உன்னை நாராயணன் விட்டுப் போய்விட்டதால் உலகத்தில் எல்லா ஆண்பிள்ளைகளும் பொய் சொல்பவர்களாகவும் புரிந்துணர்ந்து கொள்ளும் உணர்வற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்று முடிவு கட்டுவது சரியல்ல.” 

நாராயணன் பற்றி அவன் பேச்சு எடுத்ததும் அவள் அடக்கி வைத்திருந்த கோபம், சோகம் எல்லாம் ஒரேயடியாகப் பொங்கி கண்ணீராய் வந்தது. வார்த்தைகள் வரவில்லை. அவன் தொடர்ந்தான். 

“சித்திரா நீ எத்தனையோபேருக்கு புத்தி சொல்கிற உத்தியோகத்தில் இருக்கிறாய்.நான் உனக்குப் புத்தி சொல்லத் தேவையில்லை. சில ஆண்கள் பெயருக்கு ஆண்கள் என்ற உருவத்தில் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் உண்மையான ஆண்மை இருப்பதில்லை. ஊருக்கும் உலகத்திற்கும் பெரியவர்கள்போல பழகுவார்கள். ஆனால் தன்னை விடக் கொஞ்சம் மனவலிமை, அறிவு வலிமை படைத்த பெண்களை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. ஆரம்பத்திலேயே அவசரப் பட்டு ஓடிவிட்டவனைப் பற்றி ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?” ரவி சித்திராவை ஆறுதல்படுத்தச் சொன்னான். 

“நீயும் அப்படித்தான் மெலனியை விட்டுப் போகிறாய்.” 

ரவி சித்திராவைத் திரும்பிப் பார்த்தான். 

ரவி பெருமூச்சு விட்டுக் கொண்டான். 

என்ன சொல்ல நினைக்கிறான் என்று தெரியவில்லை. 

நாஷனல் பிலிம் தியேட்டர் பார் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. தனக்கு பீரும் அவளுக்கு ஆரன்ஜ்சும் ஓடர் பண்ணிக் கொண்டான். “சித்திரா பெண்ணை நம்பவைத்து ஏமாற்றிய சரித்திரம் எனக்கில்லை. எந்தப் பெண்ணிடமும் அப்படித் தொடர்புமில்லை. மெலனியிடமோ அல்லது உன்னிடமிருந்தோநான் ஏதோதப்பி ஓடுவதாக நினைக்காதே.’ அவன் உண்மை சொல்கிறான், அவன் நேர்மையானவன் என்பதை அவள் சந்தேகிக்கவில்லை. அவன் இவள் முகத்தைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தான். அதன் சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை. 

“சித்திரா மனம் விட்டுக் கேட்கிறேன், உனது அப்பாவின் திருப்திக்காகவோ அல்லது நான் லண்டனில் வாழ விசா கிடைக்கும் என்பதற்காகவோ நீ என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?” 

குடித்துக்கொண்டிருந்த ஜூஸ் தொண்டையில் சிக்கிக் கொண்டது. இவன் இப்படிக் கேட்டிருக்கக் கூடாது. அடிமனம் ஜோர்ஜ் பற்றிஅலறிக் கொண்டிருக்கும்போது இவன் இப்படிக் கேட்கிறானே. 

“உனது மனம் ஜோர்ஜ் பற்றித் திண்டாடிக் கொண்டிருக்கிறது. உனது அப்பா எல்லாம் சொன்னார்.”

“ஓ, அதுதான் எனக்குப் புத்தி சொல்ல உங்களுடன் தங்கச் சொன்னீர்களா. ஜோர்ஜ் பற்றி உங்களிடம் என்ன சொன்னார்?” அவள் குரலில் படபடப்பு. அவன் பின்னால் சரிந்து உட்கார்ந்தான். 

“சித்திரா, நாங்கள் எல்லோரும் அன்பைத் தேடி அலைகிறோம். பிராய்ட் சொல்வதுபோல் காதல் இல்லாவிட்டால், எங்களை யாரும் நேசிக்கவில்லை என்று தெரிந்தால் நாங்கள் எங்களை மிகவும் குழப்பிக் கொள்கிறோம்.மற்றவர்கள் மூலம் எங்களை எடை போடாமல் எங்களை நாங்களே காதலிக்க வேண்டும். நம்ப வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மிக மிகக் குழப்பமான, விசித்திரமான, முரணான இந்த உலகத்தைச் சமாளிக்கலாம்.” அவன்உபதேசித்தான். 

“நல்லது இரண்டு நாட்கள் என்ன இரண்டு கிழமைகள் உங்களுடன் நின்று சைக்கோலஜி படித்துக் கொள்கிறேன்.” அவள் குரலில் நை யாண்டி. ஆனாலும் அவன் உலகத்தைக் கிரகிக்கும் விதம் அவளுக்குப் பிடித்திருந்தது. 

“என்ன கிண்டலடிக்கிறாயா?” அவளைத் துன்பப்படுத்தி விட்டேனோ என்ற பச்சாத்தாபம் அவன் குரலில் தொனித்தது. 

“இல்லை நீங்கள் போக முதல் நான் எப்படியும் ஜோர்ஜை மறக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்…” 

அவளை அவன் தொடர விடாமல் இடைமறித்துச் சொன்னான். 

“சித்திரா யாரும் யாரையும் மறக்கவும், மறுக்கவும் நான் சொல்ல வில்லை. உலகத்தை வித்தியாசமான கோணத்தில் இருந்து பார்த்தால் இப்போது புரியாத விடயங்கள் எத்தனையோ விளங்கும்.” 

“அழகும் அறிவுமான மெலனியை நீங்கள் மறுத்ததை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் எனக்குப் புரியவில்லை.” சித்திரா வெடித்தாள். அவன் இன்னொருதரம் வெறுமையான பார்வையைத் தவழ விட்டான். 

“சித்திரா நீ நினைக்கும் உறவு எங்களுக்குள் இல்லை. அவள் லெஸ்பியன்.ஆண்கள் தேவையற்றவர்கள். மிக மிக நல்ல சினேகிதி. ஆண்கள் தயவில்லாமல் வாழும் பெண்மணி” 

சித்திரா உறைந்துவிட்டாள். 

“நீ போன லண்டன் பிளாட்டில்தான் அவளின் சினேகிதி இருக்கிறாள்” ரவி சித்திராவை ஏறிட்டுப் பார்த்தான். எடை போடும் பார்வையது. மெலனி பற்றி சித்திராவுக்கு இப்போது எத்தனையோ விடயம் விளங்கியது. 

“உங்களைத் தப்பாக நினைத்ததற்கு மன்னிக்கவும்.” இவர்கள் வீட்டுக்குப் போயிருந்த சமயம் தனபால் மாமா ரவியைப் பார்க்க வந்திருந்தார். 

ரவியின் வீட்டில் சித்திராவைக் கண்டதும் அர்த்தத்துடன் பார்த்தார். என்ன இந்தப் பெண் உன் வீட்டில் கூடாரம் போட்டிருக்கிறாள் என்ற பார்வை. 

“பயப்படாதீர்கள் மாமா, நாங்கள் இருவரும் கல்யாணம் செய்யப் போவதில்லை”. ரவி கிண்டலாகச் சொன்னான். அவரின் தேவையற்ற சிந்தனைகளைத் துண்டாடிய குரலது. அவர் தர்மசங்கடத்துடன் சிரித்தார். தான் நினைத்ததை அவன் கண்டுபிடித்த வெட்கம். 

“சுமதி….” தயக்கத்துடன் தொடங்கினார். 

“சுமதிக்கு என்ன நடந்தது?” ரவி அவசரமாய்க் கேட்டான். ஏதாவது தாறுமாறாக நடந்துவிட்டதோ என்று பயப்பட்டான். 

“உன்னுடன் இலங்கைக்கு வரப் போகிறாளாம். டிக்கட் வாங்கித் தரச் சொன்னாள். கொஞ்ச காலம் லண்டனை விட்டுப் போய் இருக்க வேண்டும்போல் இருக்கிறதாம்.” 

சித்திராவும் ரவியும் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.தனபால் தொண்டையைச் சரிசெய்து கொண்டார். ரவியைப் பார்த்தார். 

“சுமதிக்கு நீங்கள்தான் புத்தி சொல்ல வேண்டும்.” அவர் குரலில் கெஞ்சல். 

“நிச்சயமாக”, அவன் வார்த்தைகளில் கிடந்த அர்த்தம் அவருக்குப் புரியவில்லை. 

அத்தியாயம் – 15

அக்டோபர் 2002 

சில கிழமைகளில் இலங்கை திரும்புவேன் என்று சொன்ன ரவி இன்னும் ஊர் திரும்பவில்லை. 

சுமதி தன் குழந்தைகளுடன் தன் தாயைப் பார்க்கப் போவதாகச் சொன்னபோது செந்தில் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு போக வேண்டாம் என்று சொன்னான். 

“ஏன், உங்களுடன் குழந்தைகளை ஒப்படைத்து விட்டுப் போக வேண்டுமா?”சுமதி பொறுமையுடன் கேட்டாள். 

ஆங்கிலச் சட்டத்தின்படி தகப்பன் அனுமதியில்லாமல் ஒரு தாய் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளிநாடு செல்ல முடியாது என்று தெரியும். 

“பிள்ளைகளின் படிப்பு கெட்டுவிடும்.” செந்தில் உறுமினான். அந்த உறுமலுக்குச் சுமதி பயப்படுவாள் என்ற எதிர்பார்ப்பு. 

“ஒரு மாத லீவில் அப்படி ஒன்றும் பெரிய படிப்புக் கெட்டு விடாது.” அவனைக் கோபப்படுத்தக் கூடாது என்ற தோரணையில் சொன்னாள். 

“ரவி உன்னைத் தூண்டி விட்டிருக்கிறான்”, செந்தில் துள்ளினான். 

“எனது தாய் சுகமில்லாமல் இருக்கிறாள். லண்டனுக்கு வந்து நான் அவளைப் போய் பார்க்கவில்லை.”சுமதி கண்ணீரை அடக்கிக் கொண்டு சொன்னாள். 

“அந்த சித்திரா ஒரு பக்கம், ரவி ஒருபக்கம் உனக்குப் புத்தி சொல்லியிருப்பார்கள்.” செந்தில் அடம் பிடித்தான். சுமதி பொறுமையாயிருந்தாள். 

சுமதியை திட்டிவிட்டு ரவியைத் தேடிப் போனான் செந்தில். செந்திலின் வருகையை ரவி எதிர்பார்க்கவில்லை, செந்தில் உருத்திர மூர்த்தியாயக் கோபத்துடன் வந்தான். 

“என்ன உனது தமக்கைக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கப் போகிறாயா?” செந்தில் தரக்குறைவாகப் பேசத் தொடங்கினான்.

“முட்டாள்த்தனமான கேள்விகளுக்கு நான் மறுமொழி சொல்லத் தயாரில்லை”, ரவி கோபத்தை அடக்க மிகவும் கஷ்டப்பட்டான். 

“வெள்ளைக்காரியுடன் கும்மாளம், சித்திராவுடன் சேட்டை, உங்கள் தரவளிகளைக் கட்டி வைச்சு உதைக்க வேணும்” 

செந்தில் மறைமுகமாக ஒழுக்கம் பற்றிப் பேசுகிறான் என்று தெரிந்தது. 

“யாரைக் கட்டி வைத்து உதைக்க வேண்டும் என்ற கேள்விக்கு உனது மனத்தைத் தொட்டுக்கேள். சரியான பதில் வரும். கட்டிய பெண்சாதியை வீட்டில் அடிமையாக நடத்திக் கொண்டு வெளியில் உல்லாசம் தேடுவது, உலகம் தெரியாத மகனின் கை உடைப்பது எல்லாம் உன்னைப் போல மரக் கட்டைகளின் மனதில் உறைக்காது” 

செந்திலுடன் எந்தத் தகராறும் வைத்துக் கொள்வதில்லை என்று விலகிப் போயிருந்த ரவிக்கும் இப்போது செந்திலே வந்து நியாயம் கேட்பது எரிச்சலாக வந்தது. 

செந்திலுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் ஏதும் விபரீதம் நடக்கும் என்று ரவிக்குப் புரிந்தது. ரவியின் பிளாட்டில் அப்போது யாரும் இருக்கவில்லை. 

“நீ உடனே போகாவிட்டால் நான் போலீஸாருக்குப் போன் பண்ணுவதைத் தவிர வேறு வழியில்லை” ரவி குமுறினான்.

போலீஸ் என்ற வார்த்தை செந்திலின் கோபத்தைக் கொஞ்சம் அடக்கியது. மிகப் படித்த மனிதர்களின் மிருகத்தனமான வாழ்க்கை பற்றி ஏதோவெல்லாம் அர்த்தமின்றி அலட்டினான். கீழ்த்தரமான வார்த்தை களால் திட்டிவிட்டுச் செந்தில் சென்றான். புயல் அடித்து ஓய்ந்தது போலிருந்தது. 

அவன் போனபின் அவன் சொல்லிவிட்டுச் சென்ற சில விடயங்களைத் திரும்ப யோசித்தான். 

மெலனியுடன் திரிந்ததை எப்படித் திரித்துப் பேசுகிறார்கள் என்று புரிந்தது. ஆனால் சித்திராவுடன் தன்னைச் சம்பந்தப்படுத்திப் பேசியது அவனால் தாங்க முடியாதிருந்தது. சித்திரா நேர்மையான, துணிவான, களங்கமற்ற ஒரு நல்ல பெண் என்று நினைத்தான். ரவியையும் மெலனி யையும் பற்றி யாரும் ஏதும் பேசினால் அந்த வம்புச் சொற்கள் மெலனியைச் சென்றடையாது, அப்படி யாரும் சொன்னாலும் அவள் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால் சித்திராவை இப்படி யான கீழ்த்தரமான பேச்சுக்கள் புண்படுத்தும் என்று தெரியும். 

அவள் மிகவும் மனமுடைந்து போயிருக்கிறாள். இந்த நேரத்தில் இந்தச் செந்தில் போன்றவர்களின் சின்னத்தனமான போக்கு எவ்வளவு தூரம் சித்திராவை மட்டுமல்ல திலகவதி, ராமநாதனையும் புண்படுத்தும் என்று யோசித்துப் பார்த்தான். செய்நன்றிக்கு நான் செய்யும் பிரதியு பகாரம் அவர் மகளுக்கு வாங்கிக் கொடுத்த கெட்ட பெயரா? சித்திராவில் இவ்வளவு அக்கறையிருந்தால் அவளைத் திருமணம் செய்து கொள்ள லாமே என்று திலகவதி கேட்டாலும் ஆச்சரியமில்லை. நினைவு கசந்தது. யாரோ ஒருத்தரின் துன்பம் நீக்கத் தன்வாழ்க்கையைப் பலியாக்க அவன் விரும்பவில்லை. தனபால் மாமாவிடம் சொல்லி செந்திலின் வாயை அடக்கி வைக்க வேண்டும் என்று நினைத்து அவருக்குப் போன் பண்ணி னான். தனபால் மாமாவுக்குச் சுமதியின் போக்குத் தர்ம சங்கடத்தைத் தந்தது என்று அவனுக்குத் தெரியும். எப்படியிருந்தாலும் செந்தில் அவரின் மருமகன். எத்தனையோ முற்போக்குக் கொள்கையுடையவர் அவர் ஆனாலும் பெண்கள் விடயத்தில் பிற்போக்குத்தனமான கொள்கைகள் வைத்திருக்கிறார். மார்க்ஸியம் பேசும் எத்தனயோ பேரிடம் அவன் கண்ட உண்மையது. 

கம்யூனிஸ்ட் என்றால் கோரைப் பாயில் படுக்க வேண்டுமா என்று கேட்பார். தத்துவம் வேறு யதார்த்தம் வேறு என்பார். 

குழந்தைகளுக்காகக் கணவனும் மனைவியும் “ஒற்றுமை”யாக வாழ வேண்டும் என்று சொல்வார் என்று அவனுக்குத் தெரியும். அவரது சிந்தனைகள் முற்போக்கானவை. செயல்கள் அந்தச் சிந்தனையுடன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை. தனபால் மாமா வந்தார். 

வழக்கம்போல் அரசியல் விடயங்கள் பேசினார். விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தை தொடங்கப் போவதைப் பற்றிச் சொன்னார். பேச்சு வார்த்தை இழுபடப் போகிறது என்று குறைபட்டார். 

அம்பாரைப் பகுதியில் அநியாயமாகக் கொலை செய்யப்பட்ட தமிழர்களைப் பற்றிப் பேசினார். 

“சமாதானப் பேச்சுவாத்தையைக் குழப்ப சந்திரிகாவைச் சேர்ந்த சிலரும் ஜே.வி.பி யைச் சேர்ந்த சிலரும் இப்படிக் குழப்பங்களை யுண்டாக்குவார்கள் என்று பேசிக் கொள்கிறார்களே?” ரவி கேட்டான். 

“யார் குழப்பினாலும் இந்தப் பேச்சுவார்த்தை நன்றாக நடக்க எல்லோரும் ஒத்துழைக்காவிட்டால் தமிழர்களின் எதிர்காலம் எப்படி யிருக்குமோ தெரியாது.” வழக்கம்போல் தன் அவநம்பிக்கையை வெளிப்படுத்தினார். 

“நாளை நடப்பது நல்லதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை தான் முக்கியம்.’ நாளை நடப்பது என்று அவன் குறிப்பிட்டது தமிழ் மக்களைமட்டும் குறிப்பிடவில்லை என்று அவருக்குப் புரியும். இப்படிச் சொன்ன ரவியை உற்றுப் பார்த்தார் தனபால். 

“எங்கே நல்லது நடக்கிறது? இலங்கையை எத்தனையோ பேர் எத்ததனயோ விதத்தில் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் எத்தனையோ பிரச்சினை. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு தனிப்பட்ட நாடுகள் போல் நடந்து கொள்கின்றன.” தனபால் மாமா மருமகன் செந்திலைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறார் என்று தெரிந்தது. 

“மாமா, இந்தியா மதரீதியாகச் சேர்க்கப்பட்டிருந்தாலும் மொழி ரீதியாக, கலாச்சார ரீதியாக ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு தனிநாடு தான். ஒரு காலத்தில் இந்தியாவும் தனித்தனி நாடுகளாகச் சிதறும்”. 

தனபால் நம்பிக்கையில்லாமல் தலையசைத்தார். 

“மாமா ஆனானப்பட்ட ரஷ்யாவை எத்தனையோ விதங்களில் அமெரிக்காவும் மற்றைய மேற்கத்திய நாடுகளும் துண்டு துண்டாகச் சிதைத்துவிட்டன. இப்போது பழைய ரஷ்ய மாநிலங்கள் ஒவ்வொன்றும் தனி நாடாகப் பிரிந்து கொண்டு ஒன்றை ஒன்று அழித்துக் கொண்டிருக்கின்றன.” 

“ரஷ்யா அரசியல் ரீதியில் ஒன்றுபட்டிருந்ததே?” 

“மாமா, ரஷ்யாகம்யூனிஸ்டுகளின் காலத்தில் செயற்கையாக ஒன்று சேர்க்கப்பட்டது. இந்தியாவிலும் ஆங்கிலேயர் காலத்தில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. அமெரிக்கா ஏதோ ஒரு வழியில் இந்திய ஒற்றுமையை உடைக்கும். ஒருகாலத்தில் தனி நாடுகளாக மாறும்”. 

“மூடநம்பிக்கைகள் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடை யாகும். மதம் என்ற பெயரில் இந்தியாவில் மூட நம்பிக்கைகளும் மத வெறியும் மிக வேகமாகப் பரவுகிறது”. 

தனபால் மாமா பெருமூச்சு விட்டார். காவேரிப் பிரச்சினையில் உடைபடும் நடிகர் சங்கம் பற்றிப் பேசினார். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றியும் பேசினார். அரசியலும், மதமும், சினிமாவும் ஒன்றாகிக் குழப்புவதைப் பற்றி வருத்தப்பட்டார். 

“தமிழ்நாட்டில் கடந்த முப்பது வருடங்களாக உண்மையான தமிழர் நலம் பற்றிய ஆட்சியா நடக்கிறது? வாரிசு சண்டையும், பொது மக்களின் சொத்தை சூறையாடுவதும்தான் நடக்கிறது.”

தனபால் மாமா பரிதாபத்துடன் சொன்னார். மாமாவுக்குத் தனது மருமகனின் விடயம் உறைக்கவில்லையா? 

“குடும்பம் என்ற முறையில் செந்தில் சுமதியை செய்யும் கொடுமை களை என்னவென்று கணிப்பது?” 

செந்தில் பற்றிய விடயத்திற்கு நேரடியாக வந்தான் ரவி. 

தனபால் மாமா மனம் விட்டுப் பேசத் தயங்கினார் என்பது அவர் முகபாவத்தில் தெரிந்தது. அரசியல் பேசிய வாய் சொந்த விடயம் வந்ததும் அடங்கிவிட்டது. 

“மாமா நாட்டுக்கும் போக்குக்கும் சம்பிரதாயங்களுக்குமாக ஒன்று சேர்ந்திருப்பதைவிடசுமதி தன்வாழ்க்கையை நிர்ணயிப்பது நல்லதல்லவா” 

“சுமதிதான் நிர்ணயிக்கிறாளா அல்லது….”

தனபால் மாமாதன் கேள்வியைச்சட்டென்று நிறுத்தினார். ரவியைக் குறைசொல்ல அவர் விரும்பவில்லை என்று அப்பட்டமாகத் தெரிந்தது. 

மாமா என்ன சொல்வார் என்று ரவிக்குத் தெரியும். 

“மாமா, கல்யாணமாகி இத்தனை வருடம் அவள் தன் சொந்தத் தாயைப் பார்க்கக் கூடச் செந்தில் அனுமதிக்கவில்லை. மனித தர்மங் களுக்கு எதிரான விடயமிது. இப்போது என்னுடன் வரப்பார்க்கிறாள். அவள் எப்படித் தன் எதிர்காலத்தை நிர்ணயிப்பது என்று நான் சொல்லவில்லை. அதை அவள் முடிவு கட்டட்டும்.” 

“இலங்கை அரசியல் இருக்கும் நிலையில் இவள் இலங்கையில் போய்த் தங்கிவிட்டால் குழந்தைகளின் கெதி என்ன?” 

“மாமா, இலங்கையில் மனிதர்கள் வாழவில்லையா? சுமதி என்ன சொர்க்கலோகப் பெண்ணா? அவள் தன் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க அவகாசம் கொடுங்கள். குழந்தைகள் நலனில் அவளுக்கும் அக்கறை யுண்டு. லண்டனில் பிறந்த குழந்தைகள் பலர் எத்தனையோ நாடுகளில் சந்தோசமாய் இருக்கிறார்கள். அவளுக்குப் பிடிக்காவிட்டால் அவள் திரும்பி வருவாள்’ 

தனபால் மாமா பொறுமையுடன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார். 

அவர் செந்திலுடன் பேசுவார் என்ற நம்பிக்கையிருந்தது. 

“எந்தக் குழந்தையும் தான் விரும்பி இந்த உலகில் பிறப்பதில்லை. குடும்ப வளர்ச்சிக்கு, தாம்பத்தியம் சரியான வழியில் நடக்கிறது என்பதை நிரூபிக்க, வாரிசு தேவைக்கு, எதிர்கால உதவிக்கு என்று எத்தனையோ காரணங்களுக்காகப் பிள்ளையைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்தக்குழந்தைகளின் மன, ஆத்மிக வளர்ச்சிக்கு எத்தனை தாய் தகப்பன் உதவி செய்கிறார்கள்” 

தனபால் மாமா பதில் சொல்லவில்லை. ஏதும் அரசியல் பேச்சென் றால் மணிக்கணக்காப் பேசிக் கொண்டிருப்பார். இப்போது தனது மருமகனின் விடயமென்றபடியால் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. வழக்கம்போல் நழுவி விட்டார். 

ஊரிலிருந்து அம்மாவின் டெலிபோன் கால் வந்தது. “எப்போது வர்றாய்?” அம்மா அப்படிக் கேட்டபோது அவனுக்கு நிம்மதியாக இருந்தது. 

ஊரில் எப்போது என்ன பிரச்சினை வருமோ தெரியாது. நீ லண்டனிலேயே நின்றுவிடு என்று சொல்லி விடுவாளோ என்று யோசித் தவனுக்கு அம்மாவின் கேள்வி சந்தோசமாக இருந்தது. 

லண்டனில் எத்தனையோ பேர் கேட்டார்கள் ‘ஏன் திரும்பிப் போகிறாய்’ என்று. 

அவர்கள் இவன் சொல்லும் மறுமொழியில் திருப்திப் படாமலிருக்கலாம். ஆச்சரியப்படலாம். லண்டனுக்கு வந்தும் தள்ளி நிற்க விருப்பமில்லாமல் திரும்பிப் போகும் முட்டாளாக நினைக்கலாம். சொகுசான வாழ்வை அவன் பார்த்திருக்கிறான். அது போதும். ‘மாமா என்ன நினைப்பார்?’ ரவி தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். 

தன்னை லண்டனுக்கு அழைத்தது தனது மேற்படிப்பில் அவருக் குள்ள அக்கறையாலா அல்லது தனது மகளுக்கு என்னைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனா? சித்திராவின் தற்போதைய நிலை கண்டு அவன் பரிதாபப்பட்டான். மேலும் மேலும் இப்படியான கேள்விகள் அவன் மனதில் எழுந்து கொண்டிருந்தது. 

செந்தில் வந்து திட்டிவிட்டுப் போன வார்த்தைகளையும் அவன் மறக்கவில்லை. சித்திராவையும் தன்னையும் பற்றித் தமிழர் மத்தியில் என்ன கீழ்த்தரமான பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை செந்திலின் பேச்சுக்கள் வெளிப்படுத்தின. 

“உலகம் எப்படித்தான் முன்னேறிக் கொண்டிருந்தாலும் எங்கள் மக்கள் மாறவே மாட்டார்களா?’ 

‘மேலை நாட்டில் நாங்கள் படித்து நன்மை பெறக்கூடிய எத்தனை யோ விடயங்கள் இருக்கும்போது ஏன் ஒரு சிலர் மற்றவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்.’ 

‘ஒருதரம் தோல்வி கண்ட துன்பத்தில் இருக்கும் சித்திரா இப்போது ஜோர்ஜ் விடயத்தில் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறாள். தகப்பன் ஜோர்ஜ் பற்றிச் சொன்ன விடயங்கள் அவளை மிகவும் துன்பப்படுத்தி விட்டன என்று அண்மையில் அவள் நடந்து கொள்ளும் விதத்தில் தெரிகிறது’. 

‘எத்தனை அறிவுள்ளவள் சித்திரா. அவளுக்கேன் இப்படித் துயர்கள் வரவேண்டும்? இவளின் நேர்மை, துணிவு, விடயங்களுக்கு நின்று பிடித்து முகம் கொடுக்கும் தைரியம் ஆண்களை அவளிடமிருந்து ஓடப் பண்ணுகிறதா? 

‘மெலனிக்காக என்னிடம் நடுச்சாமத்தில் வந்து சண்டை போட்டாளே அப்படித்துணிவு எத்தனை தமிழ்ப்பெண்களுக்கு வரும்?’ ‘சுமதியை ஒரு உடன்பிறந்த தமக்கைபோல் பார்த்துக் கொள் கிறாளே இந்தப் பாசம் எத்தனை அற்புதமானது.’ 

இப்படிப் பல சிந்தனைகள் வந்து ரவியைக் குழப்பின. 

‘மாமா சித்திராவிடம் ஜோர்ஜ் பற்றி சொல்லிய விடயங்கள் உண்மையானவையா? அல்லது அவர் அப்படிக் கற்பனை செய்து தானும் குழம்பி மகளையும் குழப்பி விட்டாரா?’ 

‘அப்படி அவர் நினைத்ததற்கும் சொன்னதற்கும் நானும் ஒரு காரணமா?’ 

இப்படி நினைத்தபோது அவன் அதிர்ந்து போனான். 

‘மாமா தன்னை லண்டனுக்கு அழைத்தது தன் மகளுக்குத் தன்னைத் திருமணம் செய்து வைக்கும் திட்டத்துடனா?’ 

‘அப்படியானால் அவர் நினைவிற்குத் தீனி போடுவதுபோல் நானும் சித்திராவை என்னுடன் வந்து தங்கி நிற்கச் சொல்லி விடயத்தை இன்னும் சிக்கலாக்கி விட்டேனா?’ 

ரவிக்குச் சரியாக வேலை ஓடவில்லை. 

‘மாமா சொல்லுவதுபோல் ஜோர்ஜ் இன்னொரு பெண்ணுடன் தொடர்பாயிருந்தால் ஏன் ஒவ்வொரு நாளும் சித்திராவுக்குப் போன் பண்ணுகிறான் ? ஒரே நேரத்தில் ஒன்றிரண்டு பெண்களுடன் லீலை செய்யும், தரம் கெட்ட பேர்வழிகளில் இவனும் ஒருத்தனா?’ 

‘சித்திரா அப்படியான மனிதர்களுடன் தொடர்பு கொள்ள மாட்டாள், பரந்த அறிவுள்ளவள், நாராயணன் மூலம் ஒருதரம் நம்பி ஏமாந்தவள். இப்போது, இந்த இங்கிலீஸ்காரனிடமும் நம்பி ஏமாந்திருப்பாளா?’ 

ரவி தனியாக இருந்து ஆழமாக யோசித்தான். 

மாமா தன்னை அவரின் மருமகனாக எண்ணிநடத்தி இருந்தால் அது ஒன்றும் எதிர்பாராத விடயமல்ல. அவர் எனக்கு எத்தனையோ நன்மைகள் செய்திருக்கிறார். 

அவரின் தங்கச்சியின் மகன் நான். அப்படி அவர் நினைத்திருந்தால் அம்மா என்ன சொல்லியிருப்பாள்? 

தான் தன் குடும்பத்திற்கு விருப்பமற்ற ஒரு ஆசிரியரைக் காதலித்த குற்றத்திற்காக தன்னைத் தன்குடும்பம் ஒதுக்கி வைத்ததை ரவியின் தாய் எத்தனையோ தடவை சொல்லியிருக்கிறாள். 

தனது பிறந்த குடும்பத்தின் உதவி எதுவும் தேவையில்லை என்று கமலா தன் கணவருடன் வாழ்ந்தாள். 

ரவி கண்களை மூடிக் கொண்டான். 

மற்றவர்கள் கேட்கும் கேள்வியைத் தானும் தனக்குள் கேட்டுக் கொள்கிறான். 

‘எனக்கு முப்பது வயதாகிறது. நான் ஏன் இன்னமும் தனிமை யாயிருக்கிறேன்.எனக்கு வருபவள் என் தாயைச் சரியாய்ப் பார்த்துக் கொள்வாளா என்ற பயம்தானே? நான் ஒரு சைக்ரியாட்ரிஸ்ட், மற்றவர்கள் துன்பங்களைப் பார்த்து உதவி செய்பவன். எனக்காக என் தாயைத் தவிர யார் இருக்கிறார்கள்?’ 

‘சுமதி ஊருக்கு வருவதாகச் சொல்றாள். எவ்வளவு நாட்கள் அம்மாவுக்குப் பொய் சொல்ல முடியும்? தன் மகள் வாழாவெட்டியாக வந்து நிற்கிறாள் என்பதை அம்மா எப்படித் தாங்குவாள்?’ 

ரவிக்கு மறுமொழி விளங்கவில்லை. 


தென்கிழக்காசியத் தீவுகளில் ஒன்றான பாலியில் வெடித்த வெடி குண்டினால் கிட்டத்தட்ட இருநூறு மக்கள் இறந்துவிட்டார்கள் என்ற செய்தி உலகை உலுப்பியது. 

டேவிட் வழக்கம்போல் அரசியல் கூட்டங்களுக்கு போய் வந்து கொண்டிருந்தான். 

ஜோர்ஜ் லண்டனுக்கு வந்துவிட்டதாகச் சித்திராவுக்குத் தெரியும். போன் பண்ணினான். அவள் தன் அலைபாயும் தன் மனத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டு அவன் வருகையை எதிர்பார்த்தாள். அவன் எந்த நேரம் லண்டனுக்கு வந்து சேருவான் என்று அவன் போன் பண்ணிச் சொல்லியிருந்தாலும் அவன் வந்துவிட்டான் என்ற செய்தி சித்திராவை என்னவோ பண்ணியது. அவன் குரல் அவள் இதயநாதத்தில் சோகம் பாடியது.உணர்ச்சிகளை மறைக்கத் துடித்தாள். விமானப் பிரயாணத் தால் வந்த களைப்புக்களையும் பொருட்படுத்தாமல் உடனடியாக கேம்பிரிட்ஜ் புறப்படுவதாகச் சொன்னான் இவளைக் காணும் ஆவலை அவன் விளங்கப்படுத்தியபோது அழுகையை அடக்கிக் கொண்டாள். “எனக்குப் பிடித்த கோழிக்கறி செய்து வை”, என்று அவன் கெஞ்சிய போது அவனில் இருந்த கோபம் ஒரு நிமிடம் மறைந்தது. பழைய ஜோர்ஜ்தான் திரும்பி வந்துவிட்டான் அவள் மனம் துள்ளியது. “இரண்டு பேருக்குச் சேர்த்து சமைத்து வை”, அவன் குரலில் மிகவும் சந்தோசம். இரண்டு பேருக்கா? 

ஆங்கிலேய வழக்கப்படி தன் முதல் சினேகிதியையோ அல்லது மனைவியையோ இரண்டாவது தொடர்புக்கு அறிமுகம் செய்து வைப்பது பெரிய விடமயல்ல. சித்திரா மிகவும் முற்போக்கான பெண்! 

தன்னுடன் வரும் பெண்ணை எனக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறான், எத்தனை பெருந்தன்மை? 

சித்திராதன்னைத்தானே கிண்டலாகக் கேட்டுக் கொண்டாள். அப்பா இப்போது என்ன நினைப்பார்? அப்பா தன்னில் பரிதாபப்படுவாரா அல்லது வெறும் சம்பிரதாயத்திற்காக வேண்டாம் என்று நழுவிப் போன வனை இழுத்து வைத்து விருந்து போடுவதாக அப்பாநினைப்பாரா? அப் பாவின் நினைவுகளில் அவள் தன் எதிர்காலத்தை அமைக்க முடியாது. ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளாமல் இன்னும் சந்தோசமாக இருக்கி றேன் என்று நினைத்து என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வதாக நினைத்துக் கொள்வாரா? 

இவனை மறந்துவிடு என் மருமகன் ரவியைத் திருமணம் செய்து கொள் என்று கெஞ்சுவாரா? ரவியை அவள் மதிக்கிறாள். ஆனால் மணம் செய்து கொள்வாளா? மறுமொழிகளை எதிர்பார்க்காமல் கேள்விகளைத் தன் மனதிற் போட்டுக் குடைந்து கொண்டாள். 

“உலகம் முன்னேறுகிறதா பின்நோக்கிப் போய்க் கொண்டிருக்க கிறதா என்று எனக்குப் புரியாமலிருக்கிறது.” தனது சாப்பாட்டறையில் இருந்து கொண்டு சித்திரா செய்து வைத்த உழுந்து வடையைக் கடித்தபடி சொன்னான் டேவிட். அவன் ஏதாவது உலக அரசியல் பற்றிய பேச்சைத் தொடங்கப் போகிறானா? சித்திரா தன் நினைவுகளிலிருந்து நிஜ உலகிற் குத் திரும்பி வந்தாள். இப்போதெல்லாம் டேவிட்டும் ஜேனும் சித்திரா வீட்டிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவழிக்கிறார்கள். காரணங்கள் பல. அதில் ஒன்று ஜேன் தாங்க முடியாத வாந்தியும் வயிற்றுக்குமட்டலுமாக இருப்பதால் சித்திரா சமைத்துப் போட வேண்டி யிருந்தது.எப்போதுமே சித்திராவின் சமையலில் ஆசைப்படும் டேவிட் இப்போது தாராளமாக அரசியல் பேசியபடி சித்திராவின் வீட்டில் வளைய வந்து கொண்டிருக்கிறான். வீடு கலகலவென்றிருப்பதால் சித்திராவும் கலகலவென்று இருக்கிறாள். 

வெளியில் கார்ச் சத்தம் கேட்டது. ஜேன் ஒடிப்போய் ஜோர்ஜுக்கு முத்தம் கொடுத்தாள். ஜோர்ஜின் பார்வை எல்லோரையும் தாண்டி எங்கேயோ விரைந்தது. டேவிட், ஜேன், ஜோர்ஜ் மூவரும் ஒரே காலகட்டத்தில் யூனிவர்சிட்டியில் படித்தவர்கள், ஜேனின் முத்தத்தைத் வாங்கியபின் ஓடோடி வந்து சித்திராவைக் கட்டிக் கொண்டான் ஜோர்ஜ். சித்திராதர்மசங்கடப்பட்டுக் கொண்டாள். தனது ஜோர்ஜ் வந்துவிட்டான். மனம் துள்ளியது. ‘இவ்வளவு காலமும் உன்னைக் காணாமல் எவ்வளவு தூரம் மெலிந்து விட்டேன் பார்.” ஜோர்ஜ் உண்மையாகத்தான் மெலிந் திருந்தான். கண்கள் நித்திரையில் சோர்ந்து தெரிந்தது. 

அவன் பின்னால் வந்த பெண் சித்திராவை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். அழகான பெண். ஜோர்ஜின் அருகில். சித்திரா ஏறிட்டுப் பார்த்தாள். 

“சித்திரா இதுதான். இவள்தான் நான் உனக்குத் தரவேண்டிய செர்பிரைஸ்…. இது என் சகோதரி ஷீலா.” சித்திராவுக்கு அமெரிக்காவில் மாதக் கணக்காக அவன் தேடிய புதையல் என்னவென்று புரிந்தது. அவனின் குடும்பம், சித்திரா என்னவென்று தன்னைச் சமாளித்தாள் என்று தெரியவில்லை. ஓடிப்போய் அப்பாவைத் திட்ட வேண்டும்போல் இருந்தது. தனது சகோதரியை அணைத்துக் கொண்டு போனதை அப்பா பார்த்ததும் தப்பாக நினைத்து விட்டாரா? ஒரு சில மாதங்கள் வெறும் கற்பனையிலா அவள் வெந்து போனாள்? சாதாரண பெண்ணாய் நடந்தேனே! ஆ! சரி, தனக்கு இந்த உலகில் யாருமில்லை, தன்னை எடுத்து வளர்த்தவர்களும் இறந்து விட்டதாகச் சொன்னானே… தன் சரித்திரம் தேடியலைந்தானா? 

சித்திரா இன்னொரு தரம் குழம்பினாள். தனது உண்மையான குடும்பம் பற்றிய அவன் வேதனை அவளுக்குத் தெரியும். 

“சித்திரா இவளைத் தேடித்தான் – அதாவது எனது உண்மையான தாயையும், அவள் குடும்பத்தையும் தேடித்தான் இவ்வளவு காலமும் அமெரிக்காவில் தாமதித்தேன். அதெல்லாம் பெரிய கதை, விளக்கமாகச் சொல்வேன்.” சித்திரா நிம்மதியுடன் பெருமூச்சு விட்டாள். தனது முட்டாள்த்தனமான துயரை நினைத்து வெட்கப்பட்டாள். 

சட்டென்று ஜோர்ஜ் அவள் முன்னால் மண்டியிட்டான். ஆங் கிலேய வழக்கப்படி அப்படி அமர்ந்துதான் பெண்களிடம் கல்யாணத் திற்குச் சம்மதம் கேட்பார்கள். ஜோர்ஜின் கண்களில் பரவசம். காதல், மலர்ச்சி,. “வில் யு மரி மீ சித்திரா” ஜோர்ஜின் குரலில் தவித்த உணர்வு அவள் கண்களில் நீரை வரவழைக்கப் பண்ணிவிட்டது. அவனையிறுகத் தழுவிக் கொண்டாள். வாய் திறந்து அவள் மறுமொழி சொல்லத் தேவை யில்லை. ஜேன், டேவிட்டைப் பார்த்தாள். டேவிட் கல்யாணங்களில் நம்பிக்கையில்லாதவன். ஜேனின் பார்வையின் அர்த்தம் அவனுக்குப் புரிந்தது. அவளை அணைத்துக் கொண்டான். ”இதுபற்றி யோசிப்போம்” ஜேனின் முகத்தில் சந்தோசம். ஜோர்ஜ் பற்றித்தான்பட்டதுயரை அவள் எப்போதோ சொல்வாள். 


சுமதி இலங்கைக்குப் போக முடியாது. செந்தில் தன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறான். அவனின் அனுமதியில்லாமல் சுமதி குழந்தைகளை இங்கிலாந்திலிருந்து வெளியில் கொண்டுபோக முடியாது.”ராமநாதன் சொன்னார். சுமதி வரவில்லை. 

தனபால் மாமாவும் ராமநாதன் மாமாவும் ஒரேயடியாக ரவியைப் பார்க்க வந்திருந்தார்கள். ரவி ஊருக்குத் திரும்பிப் போகிறான். வானளாவிய கட்டிடங்களை ஏறிட்டுப் பார்த்தான், ரவியின் முகத்தில் ஏமாற்றம். “நான் அவளுக்காக லண்டனில் நிற்க முடியாது மாமா”. 

“தெரியும் நீ யாருக்காகவும் லண்டனில் நிற்க மாட்டாய் என்று தெரியும்.” ராமநாதன் மாமா பல அர்த்தங்களை மனதில் வைத்தபடி சொன்னார். 

“சுமதி பாவம்”, அவன் முணுமுணுத்தான். 

அவளைச் செந்திலுக்குத் திருமணம் செய்து வைத்த ராமநாதனும் தனபால் மாமாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர். குற்ற உணர்வு தெரிந்தது. ஆனால் காலம் கடந்துபோன விடயத்தை எப்படித் திருத்துவது? 

“தான் தனியாக வாழ சுமதி முடிவு கட்டினால் அவளுக்கொரு வேலை கிடைத்து தன் காலில் நிற்கும் வரை என் வீட்டில் இருக்கலாம்”. 

ராமநாதன் மாமா இப்படிச் சொன்னதும் ரவியின் கண்களில் நன்றி பெருகியது, இப்படி நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் தமிழ்க் கலாச்சாரம் உயிர் பிழைத்திருக்கிறது. 

“மாமா எங்கள் குடும்பத்திற்கு எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். அதற்குப் பிராயச் சித்தமாக….” 

“ரவி நீ ஒன்றும் செய்யத் தேவையில்லை. எனது எதிர்பார்ப்புகளுக்கும் நான் செய்த விடயங்களுக்கும் பிராயச்சித்தமாகவும் நீ ஏதும் செய்யத் தேவையில்லை…”

சொல்ல வந்ததை அவர் நிறுத்திவிட்டுத்தன் மருமகனைப் பார்த்தார். “எல்லாத் தமிழ்த் தகப்பனைப் போல் நானும் எனது மகள் சித்திரா ஒரு தமிழனை செய்தால் நல்லது என்று நினைத்தேன். நான் நேற்றைய மனிதன். என்னையும் எனது குடும்பத்தையும் பற்றி நினைப்பவன். நீ நாளைய மனிதன். குடும்பத்தை மட்டுமல்லாது சமுதாயத்தையும் பற்றி ஆழமான உணர்வுள்ளவன். உன்னைப் போல நூறு தமிழர்கள் இருந்தால் தமிழ்ச் சமுதாயம் உலகில் எத்தனையோ சாதிக்கும்.” 

நீண்ட நேரம் பேசிவிட்ட வெட்கம் அவர் முகத்தில் படர்ந்தது. விமானத்திற்குப் புறப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. 

ரவி நேரத்தைப் பார்த்தான். 

“இலங்கை அரசியலுக்கும் சமுதாயத்திற்கும் உன்னைப் போல நடுநிலை மனம் படைத்தவர்கள் தேவை. 

இலங்கைத் தமிழர்கள் உன் சேவையைப் பெறக் கொடுத்து வைத்தவர்கள்”. 

தனபால் மாமா ரவிக்கு விடை கொடுத்தார். 

(முற்றும்)

– நாளைய மனிதர்கள் (நாவல்), முதல் பதிப்பு: டிசம்பர் 2003, புதுப்புனல், சென்னை

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *