நாளைய மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 12, 2025
பார்வையிட்டோர்: 3,359 
 
 

(2003ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம் – 10

சித்திரா இரண்டு நாட்களாகச் சாப்பிடவில்லை. உலகம் இன்னொரு தரம் இருண்டுவிட்டது போலிருந்தது. கேம்பிரிட்ஜ் நகரம் இளைஞர் களின் நகரம். எதிர்காலக்கனவுகளை இனிமையாக்குபவை. அகில உலக மாணவர் பட்டாளத்தால் அந்த நகரம் ஒரு அற்புதக் கலைத் தன்மை வாய்ந்ததாய் இருந்தது. அந்த உலகம் சட்டென்று களையிழந்து போனது போல் இருந்தது. 

கால் போனபடி நடந்து சென்றாள் சித்திரா. மனதில் ஏறியிருந்த பாரம் உடலையும் வருத்தியது. சல சலவெனப் பாயும் சின்னக் கால்வாய் அருகில் உட்கார்ந்தாள். ஒரு சில காதலர்கள் மர நிழலில் இந்த உலகை மறந்து போயிருந்தனர். காதல் வயப்படுவது ஒரு அற்புதமான அனுபவம். சித்திரா சிந்தித்தாள். தன்னைவிட இந்த உலகத்தில் மற்ற யாவரும் மிகவும் சந்தோசமாக இருப்பதாக நினைத்தாள். 

ஆழ்ந்துபோன சோகத்திலிருந்து தப்ப வேறு ஏதோ செய்யலாம் என்றால் மனம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. தன்னை இப்படி யாக்கிய ஜோர்ஜை நினைத்தால் மனம் வெடிக்கிறது. அமெரிக்கா ஈராக்குக்கு எதிராகத்தொடுக்கப் போகும் போரை எதிர்த்து நடத்தப்படும் கூட்டத்திற்கு சித்திராவையும் வரச்சொல்லி டேவிட் கேட்டான். அரசியல் வேலைகளில் ஈடுபட அவள் மனநிலை சரியாயில்லை. 

“எங்களுக்கு உலகத்தில் எத்தனையோ கடமைகள் இருக்கின்றன. அதர்மம் பிடித்த அமெரிக்கா தனது போர்வெறியில் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்லப் போகிறார்கள். யாரையாவது அல்லது எதையாவது அழிக்காவிட்டால் அமெரிக்காவுக்குத் திருப்தி வராது போலிருக்கிறது. நீயும் இந்தக் கூட்டத்திற்கு வரவேண்டும்.’ டேவிட் விடாப்பிடியாகக் கேட்டான். 

தன் சொந்த வாழ்வு சிதறிப்போய் இருக்கும்போது உலகத்திற்காக அழ அவளால் முடியவில்லை. 

ஏதோ காரணம் சொல்லி டேவிட்டை அனுப்பிவிட்டாள். டேவிட்டின் அரசியல் பணியில் ஜேனும் ஒத்துப் போகிறாள். தனிப்பட்ட பிரச்சினைகளைக் காட்டவில்லை. அதேநேரம் சுமதிக்குப் பரிதாபப்பட்ட சித்திரா இப்போது தனக்காகத் துக்கப்பட்டாள். சித்திரா தன் சோக நிலையை யோசித்து மனம் சோர்ந்து போனாள். என்னவென்று ஜோர்ஜ் இப்படி எனக்குத் துரோகம் செய்ய முடியும்? அல்லது நான் அப்படி நினைக்கிறேனா? 

“இன்னொரு பெண்ணையணைத்தபடி ஜோர்ஜ் போய்க் கொண்டிருந்தான்.”அப்பா இப்படிச் சொன்னபோது சித்திரா வாய்விட்டுச் சிரித்தாள். 

“அப்பா தெரிந்த சினேகிதப் பெண்களுடன் அணைத்தபடி நடப்பது ஆங்கிலேயர்களால் அங்கீகரிக்கப்பட்ட விடயம்”. சித்திரா இப்படிச் சொன்னது அப்பாவுக்குக் கோபத்தை யுண்டாக்கிவிட்டது. 

“அணைப்புக்கும் ஆதரவுக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் இருக்கின்றன சித்திரா. நீ ஜோர்ஜை உன்னுடைய சினேகிதன் என்று சொல்கிறாய். உன்னைப்போல் இன்னொரு சினேகிதியை நியுயோர்க்கில் சந்தித்திருப்பான் போலும்.” அப்பா அலுப்புடன் சொன்னார். 

அமெரிக்கா போயிருந்தவர் ஜோர்ஜைத் தேடிப் போனபோது அவன் ஒருபெண்ணின் நெருங்கிய அணைப்பில் இருந்ததைத் தான் கண்டதாகச் சொன்னார். அவர் முகத்தில் வேதனை, சோர்வு. வேலை விடயமாக இரண்டு மாதம் தங்குவதற்குச் சென்றவன் நான்கு மாத மாகியும் திரும்பி வராதபோது அவள் சந்தேகப்படவில்லை. அப்பாவந்து ஜோர்ஜ் பற்றிச் சொன்னபின் அவள் மனம் மிகவும் குழம்பிப் போயிருக் கிறது. கடந்த வாரம் போன் பண்ணியபோது அமெரிக்காவில் எப்படித் தன் வாழ்க்கையின் புதிய திருப்பம் ஏற்பட்டது என்பதைத் தான் வந்து விளங்கப் படுத்துவதாகச் சொன்னபோது சித்திரா அதை ஒரு பெரிய விடயமாக நினைக்கவில்லை. இப்போது பெருமூச்சு விடுகிறாள். ஜோர்ஜ் பெரும்பாலான ஆண்களில் ஒருத்தனா? தலை சுற்றியது. மோபைல் டெலிபோன் கிணுகிணுத்தது. 

“என்னலண்டன் பக்கம் எட்டிப் பார்க்கும் யோசனை இல்லையா”, சுமதி கேட்டாள். சுமதியின் குரலைக் கேட்டதும் வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது. செந்திலின் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளும் சுமதி, டேவிட்டின் உதாசீனத்தைப் பொறுத்துக் கொள்ளும் ஜேன், இப்படி எத்தனை பெண்களின் வாழ்க்கை ஆண்களால் குழப் பப்படுகிறது? பெண்களின் பெலவீனமா இதற்குக் காரணம்? 

“வேலையில் பிஸி” சித்திரா மனதறிந்த பொய் சொன்னாள். 

“ஓம்.நீ வேலையில பிஸி, ரவி மெலனியோட பிஸி, நான் ஒருத்தி தனிமையில்,” சுமதி வழக்கம்போல் சுயபரிதாபத் தோரணையைத் தொடங்கினாள். 

“சுமதி தன் கையே தனக்குதவி. மற்றவர்கள் எவ்வளவுக்கு எப்போதும் உதவியையும் சந்தோசத்தையும் தருவார்கள் என்பதைத் தவிர்க்க வேண்டும்”. 

“நான் என்ன லண்டன் மாப்பிள்ளை கேட்டேனா? உன்ர தகப் பனும் தனபால் மாமாவும் இந்த மோசமான செந்திலை என் தலையில் கட்டினார்கள்.எனது கண்ணீர் இவர்களை விடாது.” சுமதி பட்டிக்காடு மாதிரிச்சாபம் போட்டாள். 

சுமதி தன் மாமா ராமநாதனுக்குச் சாபம் போடுகிறாள். அவர் மகள் சித்திரா அதைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருக்கிறாள். என்ன விந்தை? 

ராமநாதன் மகளுக்கு என்ன நடந்தது என்பதைச் சுமதிக்குச் சொல்லலாமா? 

போனகிழமை ஜோர்ஜ் போன் பண்ணியபோது தன் வாழ்க்கையில் புதிய திருப்பம் வந்ததாகச் சொன்னான். என்ன திருப்பம்? அப்பா சொன்ன விடயம் உண்மையா? ஒரு சில நாட்களுக்கு முன் தகப்பன் வந்து ஜோர்ஜை,தான் இன்னொரு பெண்ணுடன் சந்தித்ததாகச் சொன்னார். 

இன்று காலையில் ஜோர்ஜ் போன் பண்ணி இன்னும் சில நாட்களில் லண்டன் வருவதாகவும் சித்திராவுக்கு மிக மிக ஆச்சரியமான விடய மொன்றைச் சொல்லப் போவதாகவும் சொன்னான். 

“அப்பா உன்னை இன்னொரு பெண்ணுடன் பார்த்தாராம் அது யார் அந்தப் பெண்” என்று அவள் கேட்கவில்லை. அப்படிக் கேட்கத் தனக்கு உரிமையிருக்கிறதோ தெரியாது என்று யோசித்தாள். 

“என்ன ஆச்சரயமான விடயம்?” தொனியைச் சாதாரணமாக வைத்துக் கொண்டாலும் நாடி படபடவென்று அடித்துக் கொண்டது. 

“விடயத்தைப் போனில் சொல்ல முடியாது. கூட்டிக் கொண்டு வர்றன். இவ்வளவு காலமும் உன்னிடம் மனம் திறந்து என்னைத் திருமணம் செய்துகொள்என்று சொல்லாமல் இருந்ததற்குக் காரணம் என்னவென்று சொல்வேன். ஜோர்ஜ் டெலிபோனில் சொல்லிக் கொண்டிருந்தான். போனைப் பிடித்திருந்த சித்திராவின் கைகள் நடுங்கின. குரலில் அந்த நடுக்கம் தாவாமற் பார்த்துக் கொண்டாள். மனம் திறந்து எத்தனை விடயங்களைச் சொல்லாமல் விட்டாய் என்று கேட்கவில்லை அவள்.”என்னைத் திருமணம் செய்ய வேண்டுமென்று நீ நினைத்தாயா? எனக்குத் தெரியாது.”சித்திரா அழுதுவிடுவாள் போலிருந்தது. அழ மாட்டேன் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். 

”நான் நினைத்த எத்தனையோ விடயங்களை நான் உன்னிடம் சொல்லவில்லை சித்திரா”, அவன் பெருமூச்சு விடுவது கேட்டது. தாய் தகப்பன் இல்லாமல் அனாதையாக வளர்க்கப்பட்டவன். அதை அவளுக்குச் சொல்லிவிட்டானே! ஏன் இந்தப் பெருமூச்சு! 

“மனிதர்களில் எப்படித்தான் நெருக்கமாயிருந்தாலும் தங்களை மற்றவர்களிடமிருந்து எத்தனையோ கோணங்களில் மறைத்துக் கொள்கிறார்கள்.” 

அவன் அவளுக்கு விளங்காத எதையோ பேசுவது போலிருந்தது. 

“நான் ஒன்றும் உங்களை முழுக்கத் தெரிந்து கொள்ள விரும்ப வில்லை. எனக்குத் தெரிந்த விதத்தில் உங்களைப் புரிந்து கொண்டது போதும்.” 

“நீ கெட்டிக்காரி, என் நிலையைப் புரிந்து கொள்வாய் என்று நினைக்கிறேன்.” என்ன சொல்கிறான்? அமெரிக்காவில் என்னநடக்கிறது என்று தெளிவாய்ச் சொன்னால் என்ன? 

ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு. 

அவளுக்கு எரிச்சல் வந்தது. வயது வந்தவர்கள் மாதிரி நடந்து கொள்ளாமல் என்ன குழந்தைத்தனம்? 

“என்னுடன் வரப்போகும் பெண்ணைப் பார்த்து நீ ஆச்சரியப்படப் போகிறாய்….” 

சித்திரா எப்படித்தான் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொண் டாலும் அவன் இன்னொரு பெண்ணைப் பற்றிப் பேசுவதைக் கேட்கத் தர்ம சங்கடமாக இருந்தது. 

“மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்”, குரலைச் சாதாரணமாக வைத்துக் கொண்டு சொன்னாள். 

அப்பா சொன்னது சரிதான். ஜோர்ஜ் மாறித்தான்விட்டான். இன்னு மொரு பெண்! இன்னுமொரு உறவு. இன்னுமொரு தோல்வி! 

“தாய் தகப்பனை மீற முடியவில்லை. நான் அவர்கள் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டேன்.’ இப்படித்தான் நாராயணனும் சொன்னான். ஐ லவ் யூ என்ற சொல்லு மிகவும் பொழுதுபோக்கான ஒரு சொற் தொடராகி விட்டதோ! அதைத் தானே நாராயணனும் செய்தான். 

இன்னும் சில நாட்களில் அவளுக்குப் பிடித்த ஜோர்ஜ் இன்னொரு பெண்ணுடன் வருகிறான்! கெளரவமாக அவள் ஹலோ ஹவ் டுயுடு சொல்லிக் கொள்ள வேண்டும்! அவள் இங்கிலாந்துக் கலாச்சாரத்தின்படி மிகவும் கௌரவமாக அவளை வரவேற்க வேண்டும். சித்திரா தன் துன்பத்தை மறந்து விட்டு ஜோர்ஜை வரவேற்க வேண்டும். இந்த நிலையில் சுமதிப் பெண் தன்னைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை என்று ஓலம் போடுகிறாள். உலகம் சில வேளையில் பைத்தியத் தனமாய்ப் போய்க் கொண்டிருப்பதாகப் பட்டது. 

செந்தில் குடிப்பவன். மனைவி குழந்தைகளை அடிப்பவன். அவனுக்கு இன்னுமொரு பெண்ணுடன் தொடர்பிருக்கிறது என்பது ஊர், உறவினர் அறிந்த ரகசியம், ஆனால் சுமதிக்குத் தெரியாது. தெரிந்தால் என்ன செய்வாள்? ஓடிப்போய் தேம்ஸ் நதியில் விழுந்து வாழ்க்கையை முடித்து விடுவாளோ? 

“சுமதி இப்போது உனது நிலையில்தான் நானும் இருக்கிறேன். உனது கணவன் போலத்தான் நான் விரும்பிய சினேகிதனும் யாரோ ஒரு பெண்ணுடன் திரிவதாக அப்பா சொன்னார்” என்று சுமதிக்கு அவள் சொல்ல முடியாது. 

அப்பா சொன்னது, அவன் போன் பண்ணிச் சொன்னதையும் ஒட்டிப் போட்டு ஒரு உருவம் அமைத்தால் ஜோர்ஜ் நிச்சயமாக மாறி விட்டான் என்று தெரிகிறது. 

உன்னைத் தவிர எனக்கு நெருங்கிய சினேகிதம் யாருமில்லை என்றவன்,நான் கூட்டிக்கொண்டு வரும் பெண்மணியைப் பார்த்து நீ ஆச்சரியப்படப் போகிறாய் என்கிறான். 

என்ன நடந்தது? சித்திராவின் யோசனை எங்கேயோ சுற்றிக் கொண்டிருக்க சுமதியின் தொணதொணப்புத்தொடர்ந்து கொண்டிருந்தது. 

“இந்த வார விடுமுறையில் ஏன் நீ வரக்கூடாது?” 

சுமதி உரிமையுடன் கேட்டாள். சுமதிக்குத்தன் துயரங்களை கொட்டியழ சித்திரா இருக்கிறாள், சித்திராவுக்கு யாரும் இல்லை. 

சுமதியிடம் போனால் செந்திலைத் திட்டுவாள் அல்லது தன் தம்பியைப் பற்றி ஏதோ முணு முணுப்பாள். நானும் போய் ஜோர்ஜ் பற்றி ஏதும் சொல்லலாமா? 

“சுமதியிடம் ஏன் ஜோர்ஜ் பற்றி சொல்ல வேண்டும்? அவனுக்கு ஜோர்ஜ் யாரென்றே தெரியாதே. அத்துடன் ஜோர்ஜ் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? நான் உன்னைக் கல்யாணம் செய்யப்போகிறேன் என்று எப்போதாவது சொன்னானா? தன்னை மிகவும் சந்தோசப் படுத்தும் பெண்ணுடன்வருவதாகச் சொல்லியிருக்கிறான், அந்த நேர்மை எத்தனை ஆண்களுக்கு வரும்? 

சித்திரா ஏதோயோசித்தபடி நடந்தாள். தெருவில் யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்பதை அவளால் கிரகிக்க முடியவில்லை. அப்பா போனில் பேசியபோது அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னது ஞாபகம் வந்தது. லண்டனுக்குப் போனாள். காரில் ஏறியது, வீட்டுக்குப் போனது எல்லாம் கனவில் நடப்பது போலிருந்தது. 

கேம்பிரிட்ஜிலிருந்து லண்டனுக்குப் போகும் போது பெரிய மோட் டோர்வேயில் போகாமல் சிறிய ரோட்டுக்களால் லண்டனையடைந்தாள். கேம்பிரிட்ஜை விட்டு ஓட வேண்டும் போல் இருந்தது. நாராயணன் ஞாபகத்தால் லண்டனை விட்டு ஓடியவள் இப்போது ஜோர்ஜை நினைத்ததும் வேறு எங்கேயாவது போகவேண்டும் போலிருக்கிறது. 

அம்மாவுக்குத் தெரிந்தால் மிக அவஸ்தைப்படுவாள் என்று தெரியும். இருபத்தி எட்டு வயதில் இன்னும் சித்திராதிருமணம் செய்யாம லிருப்பது திலகவதிக்குப் பொறுக்கவில்லை. நாராயணன் விஷயத்தில் மகள் பட்ட துன்பம் திலகவதியை உலுக்கிவிட்டது. உலகத்தின் கண்களின் முன் தன் தோல்வியை மறைக்க அவள் பட்ட பாடு சித்திரா வைத்தாயின் நிலை குறித்துப் பரிதாபப் படவைத்தது. 

ராமநாதன் அமெரிக்கா போன நாளிலிருந்து திலகவதிக்குச் சுகமில்லை. வயிற்று நோவு என்று அவதிப்பட்டவளுக்குப் பக்கத்து வீட்டுக் கரலைன் உதவி செய்தாள். 

கரலைனின் உதவி திலகவதிக்கு ஆங்கிலேயர் பற்றிய கருத்தை மாற்றிவிட்டது. 

“உனக்குக் கஷ்டம் கொடுப்பதற்கு மன்னிக்கவும். சித்திரா வார விடுமுறையில் தான் லண்டனுக்கு வருவாள். அதற்கிடையில் போன பண்ணிப் பிரச்சினை கொடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்”. 

திலகவதி மகளில் வைத்திருக்கும் பாசம் கரலைனை மனம் நெகிழப் பண்ணிவிட்டது. 

“உன்னைப் போல எனக்கொரு தாயில்லையே”, குரல் தழு தழுக்கச் சொன்னாள் கரலைன். 

திலகவதி பாசத்துடன்கரலைனின் தலையைத் தடவிக் கொடுத்தாள். உத்தியோக ரீதியாக மட்டும் ஆங்கிலேயருடன் இதுவரையும் உறவு வைத்திருந்த திலகவதி இப்போது இந்தப் பக்கத்து வீட்டுப் பெண்ணின் நிலை கண்டு பரிதவித்தாள். 

“என்ன நடந்தது உன் தாய்க்கு?” தாயின் பாசத்துடன் கரலைனை அணைத்துக் கொண்டாள் திலகவதி. 

திலகவதி பிறந்த இடம் வேறு, தெரியப்படுத்தப்பட்டதத்துவங்கள் வேறு. கொழும்பு தனவந்தரின் மகளாகப் பிறந்து கறுவாக் காட்டு மத்திய தரவாழ்க்கையைக்கண்டவளுக்கு எண்பத்து மூன்றாம் ஆண்டுகளுக்குப் பின் தான் தனது வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட மக்களை கண்டாள். 

கரலைனின் வாழ்க்கையின் பின்னணி தெரியாது. கரலைனும் மைக்கலும் காட்டிய அன்பில் திலகவதி தன் சுகவீனத்தை மறந்தாள். 

“தம்பியும் நானும் பாடசாலையால் வீடு வந்தோம். எனக்கு ஒன்பது வயது. தம்பிக்கு ஏழு வயது *கரலைன் ஆரம்பித்ததை நிறுத்தினாள். 

திலகவதி தன் பார்வையில் கரலைனின் முகபாவத்தை அளவிட் டாள். ஆங்கிலேயரின் வித்தியாசமான வாழ்க்கை முறையை இப்போது தான் கரலைன் மூலம் தெரிந்து கொள்கிறாள். ”திலகவதி, நீங்கள் ஒருநல்ல தாய். என் தாய் எங்களுக்கு செய்ததை நீங்கள் ஒருநாளும் கனவிலும் நினைக்க மாட்டீர்கள். சித்திரா மிகவும் கொடுத்து வைத்த பெண்…” 

திலகவதி அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை. குழந்தைகளை விட்டுப் பிரிந்து வாழ்வது ஒரு தாயால் முடியாத காரியம். என்ன கலாச் சாரம், என்ன மதமாயிருந்தாலும் சரி, தாய் சேய் உறவு அற்புதமானது. 

“எங்களைவிட என் தாய்க்கு அவளின் புதிய காதலன் முக்கியமாகி விட்டான். தகப்பனுடன் சேர்த்து எங்களை விட்டு விட்டு எங்கள் தாய் போய் விட்டாள்”. 

கரலைனின் குரலில் ஆத்திரம். கண்களைத் துடைத்துக் கொண்டாள். 

“திலகா, நீங்கள் என்னில் காட்டும் அன்பு என்னால் ஒரு நாளும் மறக்க முடியாது.” 

“அப்படி என்ன செய்து விட்டேன்? என் மகள் என்னுட ன் இருந்தால் அவளுக்குப் பிடித்த சாப்பாட்டைச் செய்து கொடுப்பேன்… திலகவதி கரலைனின் கரங்களைப்பிடித்துக் கொண்டு சொன்னாள். கரலைனும் திலகவதியும் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள்.உறவு வளர்ந்தது.திலகவதி சுகவீனமான போது மைக்கலும் கரலைனும் திலகவதியை அன்புடன் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் மூலம் தன் மகள் சித்திராவின் உறவை அலசினாள். தன் மகள் ஒரு வெள்ளைக் காரனுடன் உறவாக இருக்கிறாளே என்று துன்பப்பட்டவளுக்கு மைக்கலின் அன்பு தெளிவைக் கொடுத்தது. எல்லா மனிதர்களிலும் எத்தனையோ வித்தியாசங்களும் ஒற்றுமைகளுமுண்டு என்று ணர்ந்தாள். தன் மகளின் சினேகிதன் ஜோர்ஜ் பற்றிச் சித்திராவிடம் கேட்கவேண்டும் என்று திலகா முடிவு கட்டி விட்டாள். 

சித்திரா வந்து கதவைத் திறந்தபோது வீட்டில் தகப்பன் இல்லை. தாய் திலகவதி கடவுளுக்கு விளக்கேற்றி விட்டு மாடிப்படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள். 

சொல்லாமல் கொள்ளாமல் எதிரே வந்து நிற்கும் மகளைப் பார்த்தாள் திலகவதி. போன் பண்ணிவிட்டு வரும் சித்திரா திடீரென்று வந்து நிற்கிறாள். 

“அம்மா, உங்களுக்குச் சுகமில்லை என்று எனக்கு ஏன் சொல்ல வில்லை?’சித்திராவின் குரலின் கடுமை. திலகவதியின் முகத்தில் பாச மான புன்சிரிப்பைக் கொண்டு வந்தது. சித்திராவின் பாசம் தாயை நெகிழப் பண்ணிவிட்டது. 

மகளைப் போல் அன்பு செலுத்த கரலைன் என்று நல்ல தொரு வெள்ளைக்காரப் பெண் இருக்கிறாள் என்று சொல்ல அவள் விரும்பவில்லை. 

“பெரிய கஷ்டம் ஒன்றுமில்லை. வயிற்றில் நோவு அவ்வளவு தான்.”திலகவதியின் குரலில் மகளின் கரிசனையை ஆமோதித்த அன்பு தவழ்ந்தது. 

சித்திரா ஹோலுக்குள் போனாள். தகப்பன் இல்லை என்று தெரிந்தது, அப்பா அம்மாவிடம் ஜோர்ஜ் பற்றிச் சொல்லியிருப்பாரா? 

“அப்பா எங்கே?” 

“லண்டனில் ஏதோ கூட்டமாம் இந்தியாவிலிருந்து மிஸ்டர் ராம் வருகிறாராம் திலகவதிக்கு அரசியல் தெரியாது, புரியாது, புரிந்தது எண்பத்திமூன்றாம் ஆண்டில் அவள் அனுபவித்த கொடுமைகள். அதற்கு அப்பால் அவளுக்கு ஒன்றும் தெரிய வேண்டாம். 

மேசையில் கிடந்த நோட்டிசின்படி அப்பா லண்டனில் நடக்கும் மறைந்து போன பாராளுமன்ற அங்கத்தவரும் தமிழர் கூட்டணித் தலைவருமான அமிர்தலிங்கத்தின் மறைந்த தின அஞ்சலிக் கூட்டத்திற்கு போய் விட்டார் என்று தெரிந்தது. 

“மரக்கறிச்சமயல்தான் இருக்கு…”தாய் முடிக்க முதல் மகள் இடை வெட்டினாள். 

“எனக்குப் பசிக்கவில்லை.” சித்திராவின் வார்த்தைகள் வெடித்தன. திலகவதி இப்போது மகளின் முகத்தை ஊடுருவிப் பார்த்தாள். வழக்கம்போல குதுகலிக்கவில்லை. குறும்புத் தனமில்லை. எப்போதும் கண்களில் தவளும் சுவாரசியமில்லை. முகம் வெழுத்திருந்தது. 

“என்ன சித்திரா சுகமில்லையா?” தாயின் குரலில் பதற்றம், மகள் அருகில் வந்தாள். 

“அம்மா எனக்கொன்றும் இல்லை. அப்பாவுடன் பேசியபோது உனக்குச் சுகமில்லை என்று சொன்னார்”. 

“அப்பா பதறும் அளவுக்கு ஒன்றுமில்லை.” 

“அப்பா இல்லாத நேரத்தில் உங்கள் உடம்புக்கு ஏதும் நடந்தால் ஒருக்கா போன் பண்ணக் கூடாதா? நான் போன் பண்ணிய நேரம் ஏன் உங்களுக்குச் சுகமில்லை என்று சொல்லவில்லை?” சித்திராவின் குரல் அடைத்தது. 

திலகவதிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏன் இந்தப்பெண் கண் கலங்குகிறாள் என்று தெரியவில்லை. ஏன் மிகவும் உணர்ச்சி வசப் பட்டிருக்கிறாள் என்று தெரியவில்லை. 

“சித்திரா என்ன குழந்தைப் பிள்ளை மாதிரிப் பேசறாய். என்னைப் பார்க்கத் தனபால் மாமா வந்தார், சுமதி வந்தாள், பக்கத்து வீட்டில் கரலைனும் மைக்கலும் மிக நல்ல மனிதர்கள்” 

“என்னை இப்போது ஒருத்தருக்கும் தேவையில்லாமல் போய் விட்டது.”சித்திராமுகத்தைத் திருப்பிக் கொண்டாள். இப்படிக் கவலைப் படுவதற்கு நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்ற குழப்பம் திலகாவின் முகத்தில். இன்னும் இரவு படியாததால் தோட்டத்தில் சிவப்பு ரோஜாப் பூக்கள் காற்றுக்குத் தாளம் போடுவதைப் பார்க்க அற்புதமாக இருந்தது.சித்திராவின் முகம் கோபத்தால் சிவந்து விட்டது. 

“சே,சே,முட்டாள்ப் பெண்ணே, என்ன பேசுகிறாய் …” திலகவதி மகளின் அருகில் வந்தாள். கைகளைப் பற்றிக் கொண்டாள். 

“மைக்கல் எவ்வளவு நல்லவன் தெரியுமா, காலைனை எவ்வளவு அன்புடன் பார்த்துக் கொள்கிறான் தெரியுமா”. 

எந்த சம்பந்தமுமில்லாத விதத்தில் மைக்கலின் பெயரை சம் பாஷணையில் கொண்டு வந்த தாயைப் பார்த்தாள். தாய் ஏதோ மறைமுகமாகச் சொல்ல நினைக்கிறாளா? 

“உனது ஜோர்ஜும் உன்னைச் சந்தோசமாக வைத்திருப் பான் தானே?” ஒரு கலக்கமுமின்றி அந்தத் தாய் அந்தக் கேள்வியைக் கேட்டாள். 

திலகவதியின் கேள்வியில் உறைந்துபோனாள் சித்திரா. அப்பா இவளிடம் ஜோர்ஜ் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று தெரிந்தது. அப்பாவின் மனமுதிர்ச்சி அம்மாவிடமில்லை. அதையுணர்ந்து அவர் நடந்து கொண்டிருக்கலாம். 

“ஜோர்ஜ்அமெரிக்காவிலிருந்து வந்ததும் நீ ஏன் கல்யாணம் பற்றிக் கதைக்கக் கூடாது? அமெரிக்காவிலிருந்து வந்த நேரத்தி லிருந்து அப்பா ஏதோ பிசியாக இருக்கிறார்… சித்திரா உனக்கு இருபத்தி ஒன்பது வயதாகப் போகிறது…” திலகவதியின் பேச்சை இடையில் வெட்டினாள் சித்திரா. தலையில் கை வைத்தாள். கண்களில் அனல் பறக்கும் கோபம். 

“அம்மா எனக்கு என்ன வயது என்று தெரியும். நான் ஏதோ கல்யாணப் பைத்தியத்தில் இல்லை…” 

சித்திராவுக்கு நெஞ்சு படபடத்தது, எங்கே நிம்மதி கிடைக்கும் என்று வந்தாளோ அங்கேயே நெருஞ்சி முட்கள் பாதையில் நிறைந்து கிடக்கிறதே. 

“மகளே நாராயணணை மறந்து விடு. ஜோர்ஜைக் கல்யாணம் செய்து கொள்.” தாய்மையின் பாசம் வார்த்தைகளைக் கொட்டியது. 

“அம்மா நான் நாராயணனை நினைத்து அழுது கொண்டிருக்க வில்லை… ஜோர்ஜ் என்னைக் கல்யாணம் பண்ண வேண்டும் என்று கற்பனை செய்யவுமில்லை.” தாயிடமிருந்து தப்பி ஓடவேண்டும் போலிருந்தது. 

தான் சொல்லும் விஷயத்திற்கு இந்தப் பெண் சந்தோசப் படுவாள் என்று பார்த்தால் ஏன் இவள் இப்படி வெடிக்கிறாள் என்று தெரியாமல் தவித்தாள் திலகவதி. 

“அம்மா, நீங்கள் ரவியையும் என்னையும் சேர்த்துப் பார்த்துப் பட்ட பரவசத்தை நான் மறக்கவில்லை. இப்போது ஜோர்ஜ் பற்றிப் பேசுகிறீர்கள். என்னை யாராவது ஒருத்தர் தலையில் கட்ட வேண்டும் என்று நீங்கள் நினைப்பது எரிச்சலைத் தருகிறது, நான் என்ன ஆடா, மாடா, யாரிடமாவது கட்டி விட?” சித்திராவின் வார்த்தைகள் வெடித்தன.

திலகவதிக்கு ஏன் இந்தப் பெண் கேம்பிரிட்ஜிலிருந்து இந்த இருட்டில் வந்து சண்டை பிடிக்கிறாள் என்று தெரியவில்லை. 

“சித்திரா ரவி உனக்கு முறை மாப்பிள்ளை. ஆனால் நீ ஜோர்ஜில் விருப்பமாயிருக்கிறாய், ரவியை நீ செய்தால் ரொம்பவும் சந்தோசப் படுவோம். அப்பாகூட…” 

தாயை இன்னொருதரம் இடைமறித்தாள் சித்திரா. 

“அப்பா என்ன சொன்னார்?” சித்திராவின் கண்களில் தீப்பொறி.

“ரவி விரும்பினால் சித்திராவைத் திருமணம் செய்து கொடுக்கலாம் என்று சொன்னார்.” திலகவதியின் குரலில் அப்பாவித்தனம், ஆனால் அதை சித்திரா கண்டுகொள்ளவில்லை. 

“ரவி விரும்பினால் ….” வார்த்தைகளை அழுத்தமாக்கினாள். திலகவதி மறுமொழி சொல்லவில்லை. 

ரவி விரும்பினால் அப்பா இவளைக் கட்டிக் கொடுத்து விடுவாரா? “ஏன் என்னை எல்லோரும் ஏதோ ஒரு விலைப் பொருள் போல பேசுகிறீர்கள்?” சித்திராவின் குரலில் விரக்தி. 

தாயின் முகத்தில் சோகம், மகளின் நிலை குறித்துப் பரிதாபம். 

அத்தியாயம் – 11

“விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் சமாதானப் பேச்சு வார்த்தை தொடங்கப் போகிறது. இப்படி இரண்டு முறை தொடங்கினார்கள். எண்பத்தி ஒன்பதாம் ஆண்டு பிரேமதாசா காலத்திலும் தொண்ணூறின் மத்திய காலத்தில் சந்திரிகாவுடனும் பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டது. இப்போதும் ரணில் விக்கிரம சிங்காவின் ஆட்சியில் இன்னொரு பேச்சு செப்டம்பர் மாதம் பதினாறாம் தேதி தொடங்கப் போகிறது. என்ன பேசப் போகிறார்கள்? விடுதலைப் புலிகள் தமிழ் ஈழம் கோரிக்கையை கைவிடவில்லை. அரசாங்கம் தமிழ் ஈழம் கொடுப்பதாகச் சொல்லவுமில்லை. அப்படியானால் பேச்சு வார்த்தை என்ன விதத்தில் தொடரும்? என்று பொறுத்திருந்து பார்ப்போம்” அமிர்தலிங்கம் கூட்டத்திற்குப் பிரதம விருந்தினராக வந்திருந்த சென்னை பிரன்ட்லைன் பத்திரிகையாசிரியர்ராம் இப்படிப் பேசிக் கொண்டிருந்தார். சமாதானப் பேச்சுவார்த்தை பற்றி அவரின் கருத்துக்கள் எத்தனையோ உண்மைகளை வெளிக் காட்டின. லண்டன் மத்தியில் அமைந்திருந்த இந்தியன் வை.எம்.சி.ஏ. கட்டிடம், மத்திய, உயர்வர்க்கத் தமிழ் மக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. 

“பாவம் தமிழர்கள்”, தனபால் பெருமூச்சு விட்டார். இடைவேளை நேரத்தில் வடையும் தேனீரும் சாப்பிட்டபடி தனபால், டாக்டர் ராமநாதனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார். 

“ஏன் தமிழர்கள் பாவம் என்று சொல்லிறியள்?” 

டாக்டர் ராமநாதன் கேட்டார். 

“எத்தனையோ தரம் இப்படிப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஏதோ நிம்மதியான எதிர்காலம் பிறக்கும் என்று எதிர்பார்த் திருந்தவர்கள் தமிழர்கள். இந்த முறையும் இந்தப் பேச்சு வார்த்தை சரிவராவிட்டால், அதாவது இன்னுமொரு தரம் போர் தொடங்கினால் என்னவென்று தாங்கப் போகிறார்களோ தெரியாது”. டாக்டர் ராமநாதனுக்கு மட்டுமல்ல வந்திருந்த பலருக்கும் இந்தச் சந்தேகம் இருக்கிறது. 

தனபால் தொடர்ந்தார். “ரணில் தொடர்ந்து ஆட்சியில் இருக்க இப்படி ஒரு பேச்சு வார்த்தையைத் தொடங்க வேண்டும் இல்லை என்றால் வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிதியுதவி கிடைக்காது.நாடு பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான நிலையிலிருக்கிறது”. 

“இந்தப் பேச்சுவார்த்தையால் தமிழருக்கு ஏதும் நன்மை கிடைப்பது கஷ்டம் என்று சொல்லவறியளா?” டாக்டரின் கேள்விக்கு தனபால் பதில் சொல்ல முதல் ரவி வந்து சேர்ந்தான். மாமாவைப் பார்த்து அவன் முகம் மலர்ந்தது. 

“மாமா எப்படி அமெரிக்கா?” ரவி மாமாவிடம் கேட்டான். இந்தக் கேள்வி உடனடியாக ராமநாதனின் முகத்தில் மாறுதலை யுண்டாக்கியது. 

“வெள்ளைத் தோலில்லாத எல்லாரும் அமெரிக்காவுக்கு எதிராக வேலை செய்வது போல் நினைக்கிறார்கள். பணத்தாலும் ஆயுத பலத்தாலும் உலகில் எந்த இடத்திலும் குண்டு போட்டுத் தகர்க்கலாம். எந்த அரசியல் அமைப்பையும் சீர்குலைக்கலாம் என்றிருந்த அமெரிக்கர் களுக்குப் போன வருடம் சில நிமிட நேரத்தில் அவர்களின் தலைநகரம் தாக்கப்பட்டது மிக அவமான விடயமாக இருக்கிறது, பணபலம், படை பலம் எல்லாம் இருந்தும் ஆழமான, நுண்ணிய அறிவுடைய புலனாய்வுத் துறை அவர்களிடமில்லை என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.ஏனோ தானோ என்று தங்கள் விஷயத்தைப் பார்த்துக் கொண்டு திரியும் எங்கள் போன்ற அப்பாவிகளை அநியாயமாக அவமானப் படுத்துகிறார்கள்.” டாக்டர் ராமநாதன் தன் மருமகனுக்கு நீண்ட பதிலைச் சொன்னார். 

“ஆதிக்கத்திலுள்ளவர்கள் சிலரின் போக்குக்காக அமெரிக்கர் களையோ அல்லது வெள்ளையர்களையோ ஒட்டுமொத்தமாகச் சந்தேகிப்பது நல்லதல்ல. இன்றைக்குத் தமிழர் பிரச்சினையில் சமாதானப் பேச்சு வார்த்தையைத் தொடங்குவதற்காக முன்னிற்பது நோர்வேய் நாட்டைச் சேர்ந்த ராஜதந்திரிகள் தானே மாமா?” அமெரிக்க வெள்ளைக் கார உணர்வுகளுக்கும் நோர்வே நாட்டினரின் சமாதான உணர்வுக்கும் வித்தியாசம் தெரியாதா? ராமநாதன் மருமகனை ஒரு சில வினாடிகள் கூர்ந்து பார்த்தார். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதை இந்த இளம் மனம் ஏற்றுக் கொள்ளுமா என்று அவர் யோசித்தார். அல்லது வெள் ளைக்காரர் என்பதால் உலகத்தில் உள்ள எல்லா வெள்ளைக்காரரும் ஆதிக்க வெறி பிடித்தவர்கள் அல்ல என்கிறானா? கூட்டத்திற்கு வந்திருந் தவர்களில் சிலர் ரவி எப்ப இலங்கைக்குத் திரும்பிப் போவாரு, என்று கேள்வி கேட்டனர். 

அவர்களின் கேள்வி அவனுக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. ஒரு காலத்தில் மேற்படிப்புக்காக லண்டன் வந்த தமிழர்கள் அதாவது டாக்டர் ராமநாதன் மாமா போன்றவர்கள் படிப்பு முடிந்ததும் திரும்பிப் போனார்கள். 

இங்கிலாந்தின் இனவாதத்தையும் குளிர் கால நிலையையும் பொறுத்துக் கொள்ள மேற்படிப்பிற்காக வந்த மத்திய தர தமிழர்களால் முடியவில்லை. வெள்ளையரின் ஆதிக்க உணர்வை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

இலங்கையில் வாழ்க்கை மிகவும் சந்தோசமானது, நிம்மதியானது அந்த நிம்மதி அரசியல் என்ற பெயரில் குழி தோண்டிப் புதைக்கப் பட்டபோது இனவெறியிலிருந்து தப்ப இலங்கையை விட்டு ஓடிய தமிழர்களை இன்னொரு தரம் இலங்கைக்குப் போகச் சொன்னால் அவர்களால் அந்த நிலைமையை எப்படி முகம் கொடுக்க முடியும் என்று அவனுக்குத் தெரியாது. 

நினைவு தெரிந்த நாளிலிருந்து நேற்றைக்கும் இன்றைக்கு மிடையில் நடக்கும் அரசியல் வாழ்க்கை மாற்றங்களின் அடிபாடுகளுடன் வளர்ந்தவன் அவன். அவற்றிற்குப் பழக்கப் பட்டவன். மரண ஓலங்களுடன் கோயில் மணி ஓசையையும் சேர்த்துக் கேட்டவன். நாயின் ஓலங்களுடன் மனித ஒப்பாரிகளையும் ஒன்றாகக் கிரகித்தவன் அவன். ‘நிம்மதி’ என்ற வார்த்தைக்கு எத்தனை கோணங்களிலிருந்து விளக்கங்களைப் பெற முடியுமோ அத்தனை விளக்கங்களையும் தெரிந் தவன் அவன். உலகத்தை அழிக்க ஊழித்தாண்டவம் ஆடுவதுபோல் இலங்கை ராணுவம் செய்யும் கொடுமைகள் அவனுக்குத் தெரியாததல்ல. “திரும்பிப் போவாயா? டாக்டர்களுக்கு எந்த ஊரிலும் வரவேற்புண்டு, அதிலும் சைக்கியாட்ரிஸ்டுகளுக்கு நல்ல எதிர்காலமுண்டு. அவற்றை யெல்லாம் யோசித்துப்பார்?’. 

இப்படி எத்தனைபேர் சொல்லி விட்டார்கள். அந்தக் கூட்டத்திற்கு வந்தோர் பலர் மனம் விட்டுப் பேசினர். அன்றைய கூட்டத்திற்கு வந்தோர் பலர் இப்படி ஒரு கூட்டத்தை இலங்கையில் நடத்த முடியாது என்றனர். விடுதலைப் புலிகளின் அங்கீகாரமற்ற எந்தச் ‘சுதந்திர’மான கூட்டங் களும் இலங்கையில் தமிழ்ப் பகுதிகளில் நடக்காது என்று ஒருத்தர் சொன்னதும் தனபால் மாமா பெருமூச்சு விட்டார். 

“தமிழர்களுக்கு நிம்மதி,விடுதலை, சுதந்திரம் தேவை. அதற்காகப் போராடி இறந்த எத்தனையோ தமிழ் இளம் ஆண்களுக்கும் பெண் களுக்கும் தலைவணங்குகிறேன். ஆனால் இந்தச் சமாதானப் பேச்சு வார்த்தை வெற்றி பெற்றும் எப்படியான ஒரு அரசியலமைப்பைத் தமிழர்கள் முகம் கொடுக்கப் போகிறார்கள் என்பது தான் கேள்விக்குறி”. 

தனபால் மாமா வழக்கம்போல் தன் கேள்விகளை எழுப்பினார். “மாமா, நீங்கள் இலங்கையை விட்டு வரும்போது இருந்த அரசியல் நடவடிக்கைகளுக்கும் இப்போது மாறிக்கொண்டிருக்கும் அரசியல் விவகாரங்களுக்கும் எத்தனையோ வித்தியாசம் இருக்கிறது. சிங்களத் தலைவர்களாக இருந்தாலும் தமிழ்த் தலைவர்களாக இருந்தாலும் அகில உலக அரசியல் அமைப்புகளின் பரிணாமங்களுக்கு அப்பால் போவது கடினம். விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தங்களுக்குப் பிடிக்கா தவர்களை வேட்டையாடிய மூர்க்க குணம் மாறாவிட்டால் விடுதலைப் புலிகள் ஒரு ஜனநாயக அரசியலை அமைக்கத் தகுதியானவர்களா என்ற கேள்வி நாலா பக்கத்திலிருந்து வரும். அகில உலக ரீதியாகத் தடைப்பட்ட அவர்கள் இயக்கம் மீண்டும் வெறிப்பட்டு வேலை செய்ய எத்தனையோ மாற்றங்களை முகம் கொடுக்க வேண்டும்.” 

ரவியின் மறுமொழிக்குத் தனபால் புன்னகைத்தார். 

“நீ, நாளைய மனிதன், நன்மைகளை எதிர்பார்க்கிறாய். அந்த நம்பிக்கை நல்லது. உடைந்துபோன தமிழ்ச் சமுதாயம் உருப்பட உன்னைப் போல் இளம் தலைமுறையினரின் நம்பிக்கை மிக மிக முக்கியம்” ரவிக்குத் தனபால் சொல்லும் விஷயங்கள் புரிந்தன. ஆனாலும் என்ன நடக்குமோ என்ற தொடர்ச்சியான அவநம்பிக்கையுடன் அவன் வாழத் தயாரில்லை. நம்பிக்கை என்ற வார்த்தையை அவன் ஆத்மீக ரீதியாக நம்பினான். 

தனபால் ரவியை அவன் வீட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டபோது நடுச்சாமமாகி விட்டது. 

அவனுடன் வாழும் டாக்டர் குப்தா யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்று யோசித்துக் கொண்டு வந்தவனுக்கு அர்த்த ராத்திரியில் சித்திராவைக் கண்டதும் அதிர்ச்சியானது என்ன திடீரென்று வந்து நிற்கிறாள்? 

அவள் முகம் பேதலித்துப் போயிருந்தது. இரண்டு மூன்று நாட்களாகச்சரியாகச் சாப்பிடாத சரியாக நித்திரை கொள்ளாத முகபாவம். அவளைப் பார்த்தவுடன் அவனையறியாமல் இரக்கம் பிறந்தது. ஆதரவுடன் அவளைப் பார்த்தான். மற்றவர்களுக்காகத் துக்கப்பட்டுத் தன்னைக் கஷடப்படுத்திக் கொள்பவள் அவள். 

“என்ன சித்திரா இந்த நேரத்தில்…” அவன் கேள்விக்கு அவளின் சூடான பார்வை பதிலாகக் கிடைத்தது. 

“தனியாகப் பேசவேண்டும்”, அவள் குரலில் இனமறியாத ஆத்திரம் தொனித்ததை அவன் அவதானித்தான். யாருக்காக வாதாடப் போகிறாள் இப்போது? டாக்டர் குப்தா குழும்பிப் போனார். தனபால் மாமா விடை பெற்றார். 

“வீட்டிலிருந்து பேசவிருப்பமில்லை … வெளியில் எங்காவது போகலாமா?” சித்திரா ஏதோ ராஜதந்திரி மாதிரிப் பேசினாள். குரல் கனத்திருந்தது. கண்கள் இவனை ஊடுருவிப் பார்த்தன. 

ரவிக்குத் தர்ம சங்கடமாகிப் போனது. நடு இரவில் மோகினிப் பேய் மாதிரி வந்திருந்து என்ன சொல்கிறாள்? 

“ரவி தயவு செய்து என்னுடன் வாருங்கள்.” குற்றவாளியைக் கூப்பிடும் நீதிபதியின் குரல் அது. 

அவன் மறுமொழி சொல்ல முதல் அவள் நடந்தாள். ஒருபக்கம் ஆச்சரியமும் மறுபக்கம் எரிச்சலாகவுமிருந்தது. 

”என்ன இது? எனக்குக் களைப்பு, நித்திரை என்று பாராமல் கேட்கிறாயே?” ரவியின் குரலின் கடுமை அவளின் நடையை நிறுத்தியது. 

திரும்பிப் பார்த்தாள். இரவின்லைட் வெளிச்சத்தில் அவள் கண்கள் பனிப்பது தெரிந்தது. அவனால் அதைத் தாங்க முடியவில்லை. 

“சரி வர்றன்.” அவன் பின் தொடர்ந்து போய்க் காரில் ஏறிக் கொண்டான். 

சித்திரா ஒரு சில நிமிடங்கள் மௌனமாகக் காரை ஓட்டினாள். விம்பிள்டன் நகரம் தூங்கி வழிந்து கொண்டிருந்தது. 

“என்ன அப்படி முக்கியமான விஷயம்?” ரவி அமைதியாகக் கேட்டான்.சித்திரா ஏதோ கோபத்திலிருப்பது அவள் முகத்தில் தெரிந்தது, அவள் நடவடிக்கை மூலம் புரிந்தது. 

“என்ன அவசரமான – முக்கியமான -தலைபோகிற விஷயம்?” சித்திராவிடம் அழுத்திக் கேட்டான் ரவி. 

“உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் அவசரமாகவும் முக்கிய மாகவும் தலை போகிற விதத்திலும் நடந்து முடிகிறது.” அவள் குரலில் நையாண்டி கலந்த கோபம். 

“உலகநடப்புகளுக்கு என்னை ஏன் நடு இரவில் இழுத்து வைத்துக் கொண்டு கேள்விகள் கேட்கிறாய்?” 

அவன் குரலில் சாடையான கோபம், அதிருப்தி. 

“தங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்வதில் அரசியல் வாதிகளும் சில ஆண்களும் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. இந்தி யாவில் தனக்குப் பிடிக்காதவர்களைச் சிறையில் அடைக்கும் ஆணவம் பிடித்த அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். இங்கே என்றால் தங்களுக்குப் பிடிக்காத நாடுகளையும் மக்களையும் குண்டு போட்டு அழிப்பதில் அமெரிக்கா போன்ற நாடுகள் அவசரப்படுகின்றன.” 

“சித்திரா என்ன பேசுகிறாய்? அமெரிக்கத் திட்டங்களுக்கு நானாபொறுப்பு? அரசியல் வாதிகள் அப்படி நடந்தால் நான் என்ன செய்வது?” 

“அரசியல்வாதிகளின் நடவடிக்கைக்கும் உங்கள் நடவடிக்கைக்கும் எத்தனையோ ஒற்றுமைகள் இருக்கிறது என்று சொன்னேன்” 

“சித்திரா கொஞ்சம் நிதானமாகப் பேசு. நான் அரசியல் வாதியல்ல. மக்களைச் சுரண்டவில்லை. அடக்கவில்லை, அழிக்கவில்லை.” 

சித்திரா காரை நிறுத்தினாள். 

மெளனம், நீண்ட மௌனம், வெளியிலும் மெளனம். காருக் குள்ளும் மெளனம், ஏதோ பூகம்பம் வெடிக்கப் போவதற்கான அறிகுறியது. 

“ரவி, நீங்கள் மற்றத் தமிழர்கள் போலல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பீர்கள் என்று பார்த்தேன். இலங்கையில் நடக்கும் பிரச்சினைக்குப் பயந்து எத்தனையோ தமிழர்கள், எத்தனையோ வழிகளில் நாட்டை விட்டு ஓடிப் போகிறார்கள்.ஏதோ சாட்டுக்காக லண்டனுக்கு வந்தவர்கள் அகதிகளாக இருப்பதற்கு அப்ளை பண்ணி யிருக்கிறார்கள். லண்டனில், வாழ்வதற்காகக் கல்யாணமும் செய்து கொள்கிறார்கள், தனி மனித விருப்பு வெறுப்புகளை நான் மதிக்கிறேன் அதே நேரம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் மெலனியை எவ்வளவு தூரம் பாதிக்கும் என்று கொஞ்சம் யோசித்தீர்களா?” சித்திரா இப்படிச் சொன்னதும் அவனின் குழப்பம் இன்னும் கூடியது. 

“இப்போது மெலனியை ஏன் இந்தப் பேச்சில் இழுக்கிறாய் சித்திரா?” நடுச்சாமத்தில் இவள் எத்தனை மனிதர்களின் பெயர்களை இழுக்கிறாள்? 

“செந்தில் சுமதியை அடித்துத் துன்புறுத்துகிறான். டேவிட் ஜேனைத் துக்கப்படுத்துகிறான். உலகத்தில் சுயநல உணர்வுடன் பெண்களைப் பாவிக்காத ஆண்களில் ஒருத்தராக நீங்கள் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.” 

“மெலனியை எனது சுய நலத்திற்குப் பாவிக்கிறேன் என்று நீ எவ்விதம் முடிவு கட்டினாய்?” 

”ஊர் தெரிய ஒன்றாகச் சுற்றுகிறீர்கள், ஸ்கொட்லாந்துக்கு ஹாலிடேயில் போய் வந்திருக்கிறீர்கள், கட்டிலுக்கு மட்டும் தான் அவள் சரியா, கல்யாணத்திற்கு வேறு பெண்ணா?” 

“சித்திரா ஏதோ காரணத்தினால் நீ மிகவும் குழம்பிப் போயிருக் கிறாய். அந்த ஆத்திரத்தை என்னிடம் கொட்டுவது அநாகரிகம் என்று சொல்கிறேன்.” மெலனியைப் பற்றி அவள் பேசியது ஆத்திரத்தை உண்டாக்கியது. ரவிகாரை விட்டு வெளியே வந்தான். விம்பிள்டன்தெரு கிட்டத்தட்ட வெறித்துப் போய்க் கிடந்தது. அவனது வீட்டை விட்டு ஒன்றிரண்டு மைல்களுக்குப்பால் வந்திருப்பார்கள். அவன் காரை விட்டு இறங்கியது சித்திராவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. 

“நில்லுங்கள், நான் சொல்வதற்குச் சரியாக மறுமொழி சொல்லத் தெரியாவிட்டால் இந்த இரவில் முன் பின் தெரியாத இடத்தில் நடந்து போவது சரியல்ல.” 

சித்திரா அவனைப் பின் தொடர்ந்தாள். 

அவனது கோபம் அவன் நடையில் தெரிந்தது. 

சட்டென்று நின்றான். 

“சித்திரா உனக்குத்தமிழ் எவ்வளவு தூரம் தெரியும் என்று எனக்குத் தெரியாது. ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள். வில்லம்பு பட்ட துன்பம் மாறும். சொல்லம்பு பட்ட துயர் மாறாது. உனது தகப்பன் செய்த உதவிகளுக்கு நன்றி. ஆனால் அதற்காக இப்படி இந்த இரவில் உன்னிடம் இப்படிப் பேச்சு வாங்க வேண்டும் என்று எனக்கு அவசியமில்லை.’ அவன் குரலில் அனல், மெலனியை அவன் ஏமாற்றுவதாக இவள் நினைப்பதில் ஆத்திரம். 

இவள் என்ன சொல்லியும் அவன் கேட்கமாட்டான் போலிருந்தது.

“நீங்கள்மெலனிக்குத் துரோகம் செய்வதாக நான் நினைக்கிறேன். அவள் சத்தம் போட்டாள். அவன் நின்றான். இரவின் அமைதியில் அவள் குரல் பயங்கரமாக ஒலித்தது. 

“உனது நினைவுகளுக்கு நான் பொறுப்பில்லை. சதாம் ஹுசேன் அமெரிக்காவை அழிக்கப் போவதாக பிரசிடென்ட் புஷ் நினைப்பது சரியா? பிழையா? என்று உலகமெல்லாம் விவாதம் நடக்கிறது.தமிழ் நாட்டில் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள் தண்ணீர் இல்லாமல், நெசவுத் தொழிலாளர்கள் எலிக்கறி சாப்பிடுகிறார்கள் பட்டினி தாங்காமல். கல்லூரிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் கோஷம் போடுகிறார்கள். பிரச்சினையை வேறு திசைகளில் திசை திருப்புகிறார்கள் அரசியல் தலைவர்கள். தார்மீகமாக உணர்வுகளற்று, தன் மதத்தை மறந்து, ஏழை களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் எந்த அக்கறையுமற்று எத்தனையோ செய்கிறார்கள். இப்படியான செய்கைகளால் எத்தனை விளைவுகள் வரும் என்று கொஞ்சம் அரசியல் தெரிந்தாருக்கும் புரியும். நீயும் என்னைப் பற்றி எத்தனையோ நினைப்பதாகச் சொல்கிறாய். குட் லக் எதையாவது நினைத்துக் குழம்புவது ஆரோக்கியமான விஷயமல்ல. நேர்வஸ் பிரேக் டவுன் வரலாம்”. அவன் போய் விட்டான். இருளின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அவன் சொல்லிய வார்த்தைகள் ஓலம் போட்டன. 

அவனின் அஸ்திர பாணம் அவளைக் குதறியது. 

அவன் சைக்கியாட்ரிஸ்ட். சாதாரண மனிதர்களின் மனக் குழப்பங் களைத் தீர்த்து வைப்பவன். மிகவும் குழம்பிப் போய்விட்டான் என்று தெரிந்தது. 

“தேவையற்ற விஷயங்களை நினைத்துக் குழம்புகிறேனா?” தனக்குத்தானே கேட்டுக் கொண்டிருந்தாள் சித்திரா. நேரம் நடுச் சாமத் தைத் தாண்டிவிட்டது. தாய் தகப்பனிடம் போக இரண்டு மணித்தி யாலங்கள் எடுக்கும்; கேம்பிரிட்ஜிக்குப் போக அதை விடக் கூட நேரம் எடுக்கும். ஏதாவது ஒரு ஹோட்டலுக்குப் போய் தனியறை எடுத்துக் கொண்டு அழவேண்டும் போலிருந்தது. அவன் போய் விட்டான். அவளுக்கு அவமானமாக இருந்தது. காரை ஓட்டினாள். என்னவென்று சுமதியின் வீட்டுக்கு வந்தாள் என்று கூட அவளுக்குத் தெரியாது. 

சுமதியின் முகத்தில் ஆச்சரியம், அதைவிட இனமறியாத தவிப்பு. “என்ன நடந்தது இந்த நேரத்தில்…?” சுமதி பதறினாள். பேதலித்துப் போயிருந்த சித்திராவின் முகம் சுமதியைப் பொருளற்று உற்றுப் பார்த்தது. 

“என்ன இழவுக் கேள்விகள் கேட்கிறாய்?” செந்திலின் குரல் அதிர்ந்தது.சித்திராவை அவ்விடத்தில் சுமதி எதிர்பார்க்கவில்லை. 

”வர்ற வழியில கார் பழுதாகிப் போச்சு. மெக்கானிக்கப் பார்த்துக் கொண்டு நிண்டதில் நேரம் போனது தெரியல்ல.” 

என்னவென்று இப்படித் தன்னால் பொய் சொல்ல முடியும் என்று சித்திராவால் நம்ப முடியாமல் இருந்தது. 

செந்தில் சித்திராவை ஏறிட்டு பார்த்தான். செந்திலைப் பார்த்து எத்தனையோ மாதங்களாகிவிட்டன. மிகவும் ஊதிப் போயிருந்தான். மது வாடை அடித்தது. அவனைப் பார்க்க எரிச்சலும் அருவருப்பாய் வந்தது. வழக்கமாக செந்திலுடன் சித்திரா அதிகம் பேச்சு வைத்துக்கொள்வ தில்லை. ஏதோ உறவு என்ற சாட்டுக்காக ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவாள். 

இப்போது தனது சொந்த மகனையே காயப்படுத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பியவன் ஒன்றும் நடக்காதது போல் முன்னால் வந்து நிற்பதைப் பார்க்கக் கோபம் வந்தது. 

இப்போது யாரை அடித்துக் காயம் பண்ணப் போகிறான்? சித்திராவுக்கு இந்த உலகத்தில் மிகவும் கோபம் வந்தது. அவனுக்குத் தெரியாத ஒரு புது உலகத்திற்கு ஓட வேண்டும் போலிருந்தது. 

”ஏதும் சாப்பிடப் போகிறாயா?”சுமதி பரிவுடன் கேட்டாள். சித்திராவுக்குப் பசி என்றால் என்னவென்று மறந்து சில நாட்களாகி விட்டன. வேண்டாம் என்றால் சுமதி விடப் போவதில்லை. 

“பால் இருந்தால் சூடாக்கித் தரவா”, உரிமையுடன் கேட்டாள் சுமதி. இவளுக்கும் இவள் தம்பி ரவிக்கும் எத்தனை வித்தியாசம் என்று நினைத்தாள் சித்திரா. 

இருவரும் சமயலறைப் பக்கம் போனார்கள். பெண்களின் சிந்தனையகம் சமயலறையா? 

“என்ன செய்தாலும் கல்யாணம் மட்டும் செய்து போடாதை.” சுமதி மெல்லிய குரலில் சித்திராவின் காதில் கிசுகிசுத்தாள். 

சித்திராவுக்குச் சுமதி ஏதோ சொல்லப் போகிறாள் என்று புரிந்தது. அடுப்பில் பால் பொங்கியது. சித்திராவின் மனத்தில் ஆத்திரம் பொங்கியது. 

“ரவி தன்னைப் போலீசில் புகார் செய்யப் போகிறான் என்று கேள்விப் பட்டு சமாதானம் பண்ணிக் கொண்டு காலைப் பிடிக்க வந்து விட்டார். எல்லாம் போலி நாடகம்.”சுமதி ஆத்திரத்துடன் முணுமுணுத்தாள். 

மிக மிகக் குழம்பிப் போயிருந்த சித்திராவின் மனத்தில் சுமதியின் ஆதங்கம் இன்னும் குழப்பத்தை உண்டாக்கியது. தன் மைத்துனியை ஏறிட்டுப் பார்த்தாள். 

“என்ன அப்படிப் பார்க்கிறாய்?” சுமதி சித்திராவைப் பார்த்துக் கேட்டாள். 

“என்ன செய்தாலும் கல்யாணம் மட்டும் செய்து போடாதை என்று எனக்குச் சொல்லும் உனக்கு உன் நிலையைக் கொஞ்சமாவது யோசித்துப் பார்க்கத் துணிவு இருக்கா?” சித்திரா வெடித்தாள். 

“நான் மற்றவர்களின் சொல்லைக் கேட்டு என் கழுத்தில தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டன். நீ சுதந்திரமான பெண். பெரும்பாலான ஆண்பிள்ளைகள் சுயநலவாதிகள்.” சுமதி ஆத்திரத்தைப் பாத்திரங்களில் காட்டினாள். 

சித்திரா சுமதியை ஏறிட்டு நோக்கினாள். ஒரு கொஞ்ச நேரத்திற்கு முன் இதே வசனங்களைச் சித்திராரவிக்குச் சொல்லிக் கொண்டிருந்ததைச் சுமதிக்குச் சொன்னால் சுமதி நம்புவாளா? 

செந்தில் மேல் மாடிக்குப் போவது கேட்டது. ”சித்திரா, நல்ல மனிதர்கள் சட்டென்று செத்துப் போகிறார்கள். எனக்கொரு சாவு அப்படி வந்தால் எல்லாப் பிரச்சனையும் எனக்குத் தீர்ந்து விடும்”. சுமதி வழக்கம் போல் அழத் தொடங்கினாள். 

“முட்டாள் சுமதி. அழகான இரண்டு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு இப்படி உன்னால் எப்படிப் பேச முடிகிறது. எனது வாழ்க்கை யில் சுதந்திரமிருக்கிறது. ஆனால் அதே நேரம் மிக மிகக் கொடுமையான தனிமையுமிருக்கிறது. குழந்தைகள் இருவரும் இந்த உலகத்திற்குத் தங்களைக் கொண்டு வரச் சொல்லி உன்னிடம் கேட்கவில்லை. நீ அந்த அழகிய குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிப் பெருமைப்பட ஆசையில் லையா” தன் மைத்துனியிடம் ஆதரவுடன் கேட்டாள் சித்திரா. 

“இந்த மனிதன் என் வாழ்க்கையை நரகமாக்கும் போது, நான் எப்படி எதிர்காலத்திற்கு ஆசைப்படுவது.” 

“சுமதி, வாழ்க்கை மிக மிகச் சிக்கலானது. ஆக்குவதும் அழிப்பதும் எங்களைப் பொறுத்தது.” வழக்கம் போல் சுமதியைத் தேற்றும் நிலை சித்திராவுக்கு. 

சுமதியின் வீட்டுக்கு வந்தது ஒரு விதத்தில் சித்திராவை நிதானப் படுத்தியது. தன்னைவிட மிகவும் பரிதாபமான நிலையிலிருக்கும் சுமதியில் பரிதாபம் வந்தது. 

செந்தில் இன்னொரு பெண்ணுடன் தொடர்பாக இருக்கும் விஷயம் தெரிந்தால் சுமதி என்ன செய்வாள்? ஜோர்ஜ் பற்றி நான் அதிர்ந்து போயிருப்பது போல் இவளும் ஆட்டம் கண்டு விடுவாளா? 

‘இவளால் தாங்க முடியாது. தாலி கட்டி, குடும்பமாயிருந்து, குழந்தைகளையும் பெற்ற பின் தனக்கு மட்டும் சொந்தம் என்று நினைத் தவன் இன்னொருத்தியை வைத்திருப்பதை இவளால் தாங்கமுடியாது. சித்திராதன் நினைவுகள் தொடர்ந்தோடச் சுமதியைப் பார்த்தாள். 

“ரவி லண்டனில் இருக்கும் வரைக்கும் இந்த மனிதன் அடங்கி யிருக்க என்று நினைக்கிறான். கடவுள் மனம் வைத்தால் ரவி மெலனி யைச் செய்து கொண்டு லண்டனில் இருக்கலாம். சுமதியின் குரலில் விரக்தி, வெறுப்பு. 

“சுமதி உனக்கு மெலனியைப் பிடிக்காது என்று நினைச்சன்” சித்திரா ஆச்சரியத்துடன் கேட்டாள். 

“இதில எனக்குப் பிடிக்கிறத்துக்கு என்ன இருக்கு. அவன் கொஞ்ச நாளா அவளுக்கு பின்னாலதானே திரிகிறான்” 

சுமதி பெருமூச்சு விட்டாள். தம்பி ஒரு வெள்ளைக்காரப் பெண் ணுடன் உறவாயிருப்பது இவளுக்குப் பிடிக்காது. நான் ஒரு வெள்ளைக் காரனுடன் உறவாயிருந்தேன் என்பதை என்னவென்று ஏற்றுக் கொள்வாள்? 

அத்தியாயம் – 12

“சரி மற்றவர்களைப் பற்றி யோசிக்காமல் போய்ப் படு.” ஆதரவுடன் சொன்னாள் சித்திரா. போவதற்காக எழும்பினாள் சித்திரா. 

“நீ என்ன கேம்பிரிட்ஜுக்கு இந்த நேரத்தில் போகப் போகிறாயா?” வெளியில் கும்மிருட்டு, இரவு லைட்டுக்கள் கண்சிமிட்டின. 

“ஏன் நான் உன் வீட்டுச் சோபாவில படுக்க முடியாதா?” சித்திரா உண்மையில் களைத்துப் போன தொனியிற் கேட்டாள். 

சுமதி சித்திராவை ஏற இறங்கப் பார்த்தாள். 

“ஏன் சோபாவில படுக்க வேணும்… என் அறையில் படு.” “செந்தில்” சித்திரா சுமதியை ஆழமாகப் பார்த்தவாறு கேட்டாள். 

“சித்திரா, செந்திலும் நானும் ஒரு கட்டிலைப் பகிர்ந்து கொண்டது எத்தனையோ வருடங்களுக்கு முன். நான் கல்யாணம் பண்ணிய வாழாவெட்டி’ 

சுமதி வார்த்தைகளைக் கொட்டினாள். இரவு மௌனமாய்க் கண்ணீர் வடித்தது. 

‘ஜேனும், டேவிட்டும் ஒரே வீட்டில் தனித் தனியாக வாழ்கி றார்கள். செந்திலும் சுமதியும் தனித்தனியாக வாழ்கிறார்கள். உலகில் எத்தனையாயிரம் தம்பதிகள் இப்படி தங்களைத் தாங்களே வருத்திக் கொள்கிறார்களோ? 

“வேண்டாம் நான் கேம்பிரிட்ஜுக்குப் போகிறேன்.” 

சித்திராவின் குரலில் வேதனை, விரக்தி, அலுப்பு. 

“போடி பைத்தியம், வர்ற வழியில கார் பழுதாகிப் போனதென் றாய், பேசாமல் படு. இன்னும் என்ன இன்னும் சில மணித்தியாலங்களில் விடிந்து விடும்.” 

இருவரும் சமயலறையிலுள்ள கதிரைகளில் அமர்ந்து கொண் டார்கள். அவர்களைச் சுற்றி குக்கரும், பிரிட்ஜும், சட்டி பானைகளும் இந்தப் பெண்களின் சோகத்திற்குச் சாட்சிகளாய் அமர்ந்திருந்தன. 

“எத்தனை கனவுகளைக் காண்கிறோம்? காதல், கல்யாணம்” சுமதி தத்துவ ஞானிபோல் பேசினாள். சித்திரா சுமதி வீட்டுக்கு வரும்போ தெல்லாம் அவள் அழுது வடிந்து கொண்டிருந்தது சித்திராவுக்கு எரிச் சலைத் தருவதாக இருந்ததுண்டு. 

“வாழ்க்கையில் அலுப்பு வந்தால் ஆண்கள் குடிப்பார்கள், அடிப்பார்கள், சின்ன வீடு வைத்துக் கொள்வார்கள், சமுதாயம் அவர்களை ஒன்றும் சொல்லாது. கௌரவமாக நடித்துக் கொள்வார்கள், நடந்து கொள்வார்கள். நாங்கள் சொற்பம் என்றாலும் வழிதவறினால் வசையும் பழியும் வரும்.” சுமதி பேசிக் கொண்டேயிருந்தாள். 

சித்திரா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். தெருவில் எப்போதோ ஒரு கார் போகும் சத்தத்தைத் தவிர எந்தச் சத்தமும் இல்லை. 

“செந்திலைப் பற்றி அப்படி ஏதும் சந்தேகிக்கிறாயா?” 

“அவர் அடிப்பதும் குடிப்பதும் ஊர் அறிந்த விஷயமாயிற்றே .. மற்ற சுமதி முகத்தை மூடிக் கொண்டாள். அழுதாள். செந்திலுக்கு ‘சின்னவீடு’ இருப்பது சுமதிக்குத் தெரியும் என்பது அப்பட்டமாகப் புரிந்தது. 

“எனக்கு இவர் எங்கே போகிறார். யாருடன் படுத்து விட்டு வருகிறார் என்பது அப்போதே தெரியும். நேரே கேட்டு அவமானப்படத் தயாரில்லை. ஆனால் அந்த ஆத்திரத்தில் எடுத்த சின்ன விசயத்தி லெல்லாம் சண்டை பிடிக்கிறோம்” 

சுமதி விம்மினாள். இரவின் நிசப்தத்தில் விம்மல் இருதயத்தைச் சுண்டியது. இதுவரைக்கும் யாருக்கும் சொல்லியழ முடியாத ரகசியம் இரவின் நெகிழ்ச்சியில் மனக் கோட்டையைத் திறந்து கொண்டு அழுதது. 

“ஒரு பெண் எதையும் தாங்குவாள். ஆனால் தான் நம்பிக் கை வைத்தவன் இன்னொருத்தியுடன் சல்லாபம் பண்ணுகிறான் என்பதைத் தாங்க மாட்டாள். அது அவள் நரம்புக்கும், உள்ளத்திற்கும் அவள் கணவனால் மூட்டி விட்ட நெருப்பாக எரியும்” 

இதுவரைக்கும் சுமதி இப்படி வெளிப்படையாகப் பேசி சித்திரா கேட்டதில்ல. சுமதியின் அணை கடந்த துன்பத்திற்கு என்ன சொல்லித் தேற்றுவது என்று அவளால் புரியவில்லை. 

ஜோர்ஜ் பற்றித் தான்படும் துன்பம் தீர்க்க லண்டனுக்கு ஓடிவந் தவளுக்கு, அம்மா, ரவி, சுமதி எல்லோரின் சந்திப்பும் எத்தனையோ உண்மைகளை உடைத்துக் காட்டியது. அம்மாவின் அபிலாஷை, ரவியின் உதாசீனம், சுமதியின் சுமையான வாழ்க்கை எல்லாவற்றையும் விடத் தன்னுடைய வேதனை என்பன சித்திராவை நிலைகுலையப் பண்ணியது. ரவி சொல்வதுபோல் அளவுக்கு மீறி யோசித்தால் மூளை பிசகி விடும். நேர்வஸ் பிரேக்டவுன் வந்து விடும். 

இருவரும் தூங்கவில்லை. 

பேசிக் கொண்டிருந்தார்கள். 

சுமதி மனம் விட்டுப் பேசினாள். 

சித்திரா மெளனத்துடன் கேட்டுக் கொண்டாள். 

சித்திராவின் கடந்த வாழ்க்கையில் நாராயணன் பற்றிய விஷயம் சுமதிக்குத் தெரியும். ஆனாலும் சித்திராவால் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட பெண் என்று நினைக்கப்பட்ட சுமதி இதுவரைக்கும் வாய் திறந்து நாராயணன் பற்றிக் கேட்டில்லை. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாத பெருந்தனத்தை சித்திரா புரிந்து கொண்டாள். 

“எவ்வளவு காலம் இப்படி அழுது கொண்டு சகிக்கப் போகிறாய்?” சித்திராவின் கேள்வியை ரவி எத்தனையோ தரம் தன் தமக்கையிடம் கேட்டு விட்டான். 

“என்ன செய்ய, ரவி சொல்லுவதுபோல் டிவோர்ஸ் செய்யவா?” சுமதி சித்திராவைப் பார்த்து நேரே கேட்டாள். 

“…” சித்திரா மெளனம். 

“குழந்தைகளுக்காக நான் இந்த நரகத்தில் வாழ்கிறேன். ஆனால் அப்பாவால்தான் தன் கை உடைந்தது என்ற ஆத்திரத்தில் மகன் தகப்பனுடன் கதைக்க மாட்டேன் என்கிறான். இப்படிச் சூழ்நிலையில் ஒன்றாக வாழ்வதால் என் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுமோ என்று பயப்படுறன்.” 

சுமதி சரியான வழியில் யோசிப்பதாகத் தெரிந்தது. இனி ரவி, சித்திரா, தனபால் மாமாயாரும் எதுவும் சொல்லத் தேவையில்லை. சுமதி யின் மனத்தில் சில தெளிவுகள் உருவாகி விட்டன என்று புரிந்தது. 

”உன்னுடைய புருஷனைப் பகிர்ந்து கொள்ளும் பெண்ணில் உனக்கு ஆத்திரமில்லையா?” தான் இந்தக் கேள்வியைக் கேட்பது சரிதானா என்று கூடச் யோசிக்காமல் கேட்டதற்குச் சித்திரா தன்னைத் தானே நொந்து கொண்டாள். 

“இல்லை.” மிக மிகத் தெளிவாகச் சொன்னாள் சுமதி. சித்திரா ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள். 

“சித்திரா, நாங்கள் சாதாரண மனிதர்கள். துன்பம் துயர் வரும்போது யாரோ ஒருத்தர் அன்புக்காக ஏங்குவோம். அந்தப் பெண் இலங்கையில் இந்திய ஆர்மியின் அக்கிரமத்தில் குடும்பத்தில் அத்தனைபேரையும் இழந்தவளாம். இந்திய ஆர்மியின் செல் அடியில் வீடு பிழந்து எரிந்த போது தாய் தகப்பன், தங்கச்சி,தம்பி எல்லோரும் எரிந்து பிணமாகி விட்டார்களாம். அவள் இவரின் பழைய சினேகிதி. கல்லூரியில் ஒன்றாய்ப் படித்தவர்களாம். லண்டனுக்கு வந்ததும் உறவு மீண்டும் தொடர்ந்திருக்கிறது. அவள் நிலையில் தன் துயரத்திற்குத் துணையாக இவர் அகப்பட்டார்.” 

“இவ்வளவையும் தெரிந்து கொண்டு இவ்வளவு நாளும் பொறுமை யாயிருக்கிறாயே?” 

”நான் ஒன்றும் பொறுமையாயில்லை. என்னைத் தொடவேண் டாம் என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டேன். அந்த ஆத்திரம் அவருக்கு எத்தனையோ பிழைகளைச் செய்யப் பண்ணுது. அந்தப் பெண்ணை இனி எந்தத் தமிழனும் கல்யாணம் செய்ய மாட்டான். இந்த மனிசன் இரண்டு பெண்களின் வாழ்க்கையைக் கெடுத்துப் போட்டுது.” 

எத்தனை சிக்கல்கள்! இந்த உலகத்தில் நாராயணன், ஜோர்ஜ், செந்தில், என்று எத்தனை ஆண்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்? 

இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு நித்திரையாகிப் போனபோது கிட்டத்தட்ட விடியும் நேரமாயிருந்தது. 

அடுத்த நாள் திங்கட்கிழமை. 

சித்திரா அவசரமாகத் தன் ஒப்பீசுக்குப் போன் பண்ணித் தனக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னாள். 

உடம்பு சரியில்லை என்பதை விட மனம் சரியில்லை என்பதுதான் சரி என்று பட்டது. செந்தில் எழும்ப முதல் தான் சுமதி வீட்டை விட்டுப் போக நினைத்தாள். 

செந்திலைச் சந்திக்க அவள் விரும்பவில்லை. சுமதியை அடக்கி ஆளும் ஒரு மனிதனாக இல்லாமல் சுமதியைச் சுற்றித் திரியும் ஒரு பல வீனமான மனிதனாகத் தெரிந்தான். கல்யாணம் என்ற போர்வைக்குள் கெளரவமாக வாழும் ஒரு காவாலியாகத்தான் தெரிந்தான். 

சொந்தக் குழந்தையே முகம் கொடுத்துப் பேசாமல் ஒரு தகப்பன் இருப்பதானால் அவன் எப்படிப்பட்ட வராக இருக்க வேண்டும்? 

படுக்கையிலிருந்தபடி யோசித்தாள். 

கேம்பிரிட்ஜுக்குப் போகப் பிடிக்கவில்லை. 

லண்டனில் நிற்கப் பிடிக்கவில்லை. உறவுகள் முறிந்தால் ஒளிந்து ஓட இடம் தேடலாமா? 

ஒரு சில கிழமைகள் லீவு எடுத்துக் கொண்டு எங்காவது போக வேண்டும். 

மனத்தில் கனத்துக் கிடக்கும் சுமையை எங்காவது இறக்கி வைக்க வேண்டும். இருபத்தி எட்டு வயதில் வாழ்க்கை சூனியமாகிப் போன உணர்ச்சி. எமது கனவுகள் பற்றி சுமதி சொன்னது ஞாபகம் வந்தது. ஜோர்ஜும் ஒரு கனவுதானா? அல்லது அவனைப் பொல்லாதவனாக கற்பனை செய்கிறேனா? ஜோர்ஜின் நினைவு அவ்வளவு தூரம் அவளில் ஊறிப் போய்விட்டதா? 

‘கண்ணால் பார்த்ததும் பொய், காதால் கேட்டதும் பொய் தீர அறிந்து கொள்வதே உண்மை என்று சொல்லியிருக்கிறார்களே!, 

அப்பா ஜோர்ஜ் பற்றிச் சொன்னது என்னை ரவிக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காகவா? அல்லது உண்மையாகவே ஜோர்ஜ் இன்னொரு பெண்ணுடன் சுற்றுகிறானா? ஜோர்ஜ் ஆங்கிலேயன் அவனை நம்பியது என் தவறா? 

மனித மனங்களின் பலவீனம் மிக மிகச் சிக்கலானது. ஒரு சில வினாடிகளில், மணித்தியாலங்களில், நாட்களில் எப்படி மனிதர்கள் மாறிவிடுகிறார்கள்? நெருக்கமும் பிரிவும் உண்டாக்கும் நெருடலான உணர்வு நெஞ்சைக் குத்திக் கிழித்தன. 

சினேகிதனான ஜோர்ஜ் பற்றி இப்படித்துடிதுடிக்கிறேன். சாத்திர தோத்திரம் பார்த்துத் தாலி கட்டிய கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பதன் பரிமாணத்தைச் சுமதி எவ்வளவு சுலபமாக விளக்குகிறாள்? சித்திரா சிந்தித்தபடி படுத்திருந்தாள். 

சுமதி எழுந்து குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்ப ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள். அதன் பின்னர் சித்திராவிடம் பேசத் தொடங்கு வாள். அவசரமாக எழுந்து சுமதிக்குக் குட்பை சொல்லி விட்டுத் தன்காரை நோக்கி நடந்தாள். சித்திரா மனம் சோர்ந்து போயிருந்தது. 

சில நாட்களாகச் சரியாகச் சாப்பிடாததால் உடம்பு பலவீனமாக இருந்தது. ரவி சொன்ன வார்த்தைகளை ஞாபகப்படுத்தினாள். 

“தேவையில்லாதவற்றை மனசில் போட்டுக் குழப்புவது ஆரோக்கியமான விஷயமல்ல.” ரவி சொல்லிவிட்டுப் போனது மீண்டும் மீண்டும் ஒலித்தது. 

சுமதி வீட்டிலிருந்து சித்திரா சாப்பிடாமல் புறப்பட்டதால் காலைச் சாப்பாட்டை ஒரு நல்ல கபேயில் முடித்துக் கொண்டாள். மொபைலில் மெலனியை அழைத்தாள். மெலனியும் ரவியும் ஒரே இடத்தில் வேலை செய்கிறார்கள். 

மெலனியை ஒரு தரம் தான் சந்தித்தாள், ஆனால் அவளை சித்திராவுக்குப் பிடித்து விட்டது. சித்திராவின் பெரும்பாலான சினேகி திகள் ஆங்கிலேயப் பெண்கள். 

மெலனி வித்தியாசமானவள். அதற்குக் காரணம் அவளின் சுயமை மட்டுமா அல்லது படிப்பு, வாழ்க்கை முறை என்பனவுமா என்று தெரியாது.சித்திராவைத் தன் பர்த்டேய் பார்ட்டிக்கு வரச் சொல்லிக் கேட்டாள். சித்திராவால் போகமுடியவில்லை. இப்போது லண்டனில் நிற்கும்போது அவளைச் சந்திக்க வேண்டும் போலிருந்தது. மோபைலில் ஹாஸ்பிட்டலில் மெலனியிருக்கிறாளா என்று கேட்டபோது அவள் இன்று வேலைக்கு வரவில்லை என்று சொன்னார்கள். 

மெலனி தந்த வீட்டு டெலிபோன் நம்பர் இருந்தது. போன் பண்ணியபோது மெலினி வீட்டிலிருந்தாள். 

சித்திராவின் அழைப்பு அவளுக்கு ஆச்சிரியத்தை தந்தது என்று பதில் குரலில் தெரிந்தது. 

“எப்படி கேம்பிரிட்ஜ்?” மெலனி சம்பிரதாயத்திற்குக் கேட்டாள். இவ்வளவு தூரம் தன்னைத் தேடி வந்தவள் ஏதோ முக்கிய விஷயம் சொல்லத்தான் வந்திருக்கிறாள் என்று மெலனிக்குத் தெரியும். 

“நான் கேம்பிரிட்ஜிலிருந்து போன் பண்ணவில்லை.” 

“ஓ அம்மா, அப்பாவுடன் செல்லம் பண்ணிக் கொண்டு செயின்ட் அல்பேன்சில் இருக்கிறாயா?” 

“இல்லை லண்டனில் நிற்கறேன். மத்தியானச் சாப்பாட்டுக்கு உன்னை யழைக்கலாமா என்று யோசிக்கிறேன்” 

மெலனியின் சிரிப்பு கணீர் என்று கேட்டது. அந்தச் சிரிப்பு கள்ளம் கபடற்றுக் கேட்டது. ஒரு குழந்தையின் சிரிப்பு. ஏன் சிரிக்கிறாள்? நான் கேட்டது வேடிக்கையாகவா இருக்கிறது? 

“ஏன் என்னுடன் சாப்பிட வரமாட்டாயா? உனது பர்த்டேயுக்கு வரமுடியல்ல. அதுதான் ஒரு லன்ச் தரலாம் என்று யோசித்தேன்.” 

சித்திரா வேடிக்கையாகச் சொன்னாள். 

“பெரிய சந்தோசம். ஆனால் லன்சுக்கு வரமுடியாது. எங்களுடன் வேலை செய்யும் ஒரு நேர்சின் குடும்பத்தில் ஒரு துக்ககரமான விஷயம் நடந்து விட்டது. போகவேண்டும்.” 

“அப்போது பின்னேரம் சந்திப்போம். எங்கே சந்திக்கலாம்?”

மெலனி தனக்குப் பிடித்த ஜப்பானிஸ் ரெஸ்ட்ரோரன்டின் பெயரைச்சொன்னாள். 

மற்சூமாரெஸ்டோரண்ட்! 

சித்திராவுக்கு இரத்தம் உறைவது போலிருந்தது. அவள் சொன்ன இடம் நாராயணனுக்குப் பிடித்த இடம். 

“ஓ எனக்கு ஜப்பானிச் சாப்பாடு பிடிக்காது. ஆனாலும் உனக்காக வருகிறேன்.’ ‘எப்படி என்றால் பொய் சொல்ல முடியும்?” 

தயவு செய்து என்னை அந்த இடத்திற்கு அழைத்துப் போகாதே எனக்குப் பிடித்தமான இடங்களில் ஒன்றாக அது இருந்தது என்று அவளால் சொல்ல முடியவில்லை. 

இரவு சுமதியிடம் பொய் சொல்லியாகி விட்டது. இப்போது மெலனியிடம் பொய் சொல்லிக் கொண்டே யிருக்கிறாள். 

“எனக்காக வரவேண்டாம். சைனிஸ் சாப்பாடு பிடிக்குமா?” மெலனியின் குரல் சித்திராவைத் திருப்திப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதை எதிரொலித்தது. “அதற்கென்ன எங்கே போகலாம். 

சித்திரா சந்தோசத்துடன் சொன்னாள் 

“உனக்கு பிடித்த சைனிஸ் எது என்று சொல்.” 

“சைனா டவுனில் பூன் ரெஸ்ட்ரோரண்டுக்கு வருகிறாயா?” 

“சரி ஆறுமணிக்கு உன்னைச் சந்திக்கிறேன்”. மெலனி பூன் ரெஸ்ட்ராரண்ட் இருக்கும் இடத்தின் விலாசத்தை வாங்கிக் கொண்டாள். 

அப்பாவுடன் சில வேளைகளில் வந்த இடமது. 

அந்த இடம் அவளின் தகப்பனுக்குப் பிடித்த இடம். மிகவும் ருசியானசாப்பாடு, நல்லதரமான சைனாச் சாப்பாடு கிடைக்குமிடம் அது. 

இப்போது நேரம் பதினொரு மணி. மெலனியைச் சந்திக்க இன்னும் ஏழுமணித்தியாலங்கள் இருக்கின்றன. நீண்டகாலமாக லண்டன் தெருக்களில் சுற்றவில்லை. ஹைட்பார்க்குப் போகவில்லை. பொயில்ஸ் புத்தர் கடைக்குப் போகவில்லை. லண்டன் மியூசியத்தைப் பார்த்து எவ்வளவோ நாட்களாகி விட்டன. 

துன்பம் வந்தால் சிலர் குடிப்பார்கள், சிலர் போதைப் பொருட்கள் எடுப்பார்கள். 

சித்திரா புத்தகங்கள் வாங்குவாள். மனத்துயரைத் தீர்க்கத் தன் மனத்தை எங்கேயோ செலுத்துவாள். 

நாராயணின் உறவு உடைந்தபின் பாரிசுக்குப் போய் இரண்டு கிழமைகள் பிரான்சின் சரித்திரப் பிரசித்தம் உள்ள இடங்களைப் பார்த்தாள். மனம் பாரம் குறைய ஏதாவது செய்ய வேண்டும். எந்த ஒரு பெரிய பிரச்சினையுமற்ற வாழ்க்கையில் சட்டென்று பிரச்சினைகள் நாலாப்பக்கத்திலிருந்து ஒரேயடியாக வந்தது போலிருந்தது. ஒரு கிழமைக்கு முதல் எத்தனையோ விதத்தில் யார் யாருக்கோ எல்லாம் உதவி செய்த சித்திரா இப்போது தனித்து விடப்பட்ட அனாதையாகத் தான் இருப்பதாக உணர்ந்தாள். யாரிடம் போய் உதவி கேட்பது? அம்மாவுக்கு இவளைப் புரியாது. தனக்குத்தானே அன்னியமாய்ப் போன உணர்வுடன் நடந்தாள். லெஸ்டர் சதுக்கத்தில் உல்லாசப் பிரயாணிகளின் கூட்டம் நிறைந்திருந்தது. அந்தக் கூட்டத்தில் தன்னைத் தனியாக அடையாளம் கண்டாள். சதுக்கத்தின் நாலாப்பக்கத்திலும் பிரமாண்டமான சினிமாத் தியேட்டர்கள் பெரிய போஸ்டர்களுடன் உறுத்துப் பார்த்தன. குழந்தையின் மனநிலைபோல் தனக்கு முன்னால் அவசரப்பட்டு ஓடிக் கொண்டிருக்கும் உலகைப் பார்த்தாள். 

ஒரு இளம் பெண்ணும் வாலிபனும் தர்க்கம் செய்து கொண்டிருந் தார்கள். அவன் முகத்தில் கோரமான கோபம். அவள் முகத்தில் கெஞ்சல். 

என்ன பிரச்சினையாயிருக்கும்? சித்திரா ஒரு சோசியல் வேர்க்கர். பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது, தீர்க்க வழி தேடுவது அவள் வேலை. ஆரம்ப காலத்தில் அவள் மிகவும் பயந்து ஒதுங்கிப் போன விஷயங்கள் இப்போதெல்லாம் பெரிதாப்படுவதில்லை. 

எத்தனையோ பிரச்சினைகளுக்கு அவள் முகம் கொடுத்தாள்? இன்று எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் பிரிந்து போய் தனக்கு முன்னால் விரிந்து கிடக்கும் உலகுக்கும் தனக்கும் ஒரு தொடர்பும் கிடையாது என்று சொல்ல வேண்டும் போலிருக்கிறது. 

அந்த இளம் தம்பதிகள் ஒருத்தரை ஒருத்தர் பிடித்துத் தள்ளினர். அவள் அழுதாள். அவன் முறைத்துப் பார்த்தான். அவன் உதறிய வேகத்தில் அவள் அந்த முலைச் சுவரில் முட்டி விழுந்தாள். 

அவள் விழுந்ததைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் அவன் வேகமாக நடந்தான். அவள் சத்தம் போட்டு அழுதாள். சிலர் வேடிக்கை பார்த்தனர். பலர் முகத்தில் பரிதாபம், சிலர் முகத்தில் வெறும் வேடிக்கை. அவன் போகும் வழியைப் பார்த்து ஐ லவ் யு என்று அலறுகிறாள். அந்தக் காட்சியை எத்தனையோ பேர் பார்த்தார்கள். பார்த்துக் கொண்டிருந்த சித்திராவுக்கு வயிற்றை ஏதோ செய்தது.நாராயணன் மறந்துபோன போது தானும் மறைமுகமாக இப்படித்தான் அலறினேன் என்று சொல்லிக் கொண்டாள். 

இனியும் இன்னுமொருத்தன் அவளை அழப்பண்ண முடியாது. ஜோர்ஜுக்காக அவள் அழத் தயாரில்லை. அவன் ஆங்கிலேயன். இப்படித்தான் நடந்து கொள்வான், இன்னொரு பெண்ணைப் பார்ப்பான் என்றெல்லாம் அவள் அடிமனம் எப்போதோ சொல்லியிருந்ததால் ஜோர்ஜ் பற்றி அப்பா சொன்னது மிக மிகக் கொடுமையாக இல்லை. ஆனால் வேதனையாகத்தான் இருக்கிறது. 

அந்த வேதனை அவளை மெலனியிடம் துரத்திவிட்டது. மெலனி சைக்கியாட்ரிஸ்ட். விஷயங்களை வித்தியாசமான முறையில் அணுகுவாள். 

“ரவியை ஏன் நான் ஒரு சைக்கியாட்ரிஸ்டாக நடத்த வில்லை. ஏன் அவனிடம் அப்படி நடந்து கொண்டேன்?” 

“மெலனியுடன் நெருங்கிப் பழகும் அதேநேரம், அப்பாவுக்காக என்னைத் திருமணம் செய்யச்சம்மதிக்கப் போகிறான் என்று நினைத்துத் தர்மசங்கப்படுகிறேனா?” மெலனிக்காகப் பரிதாபப்பட்டேனா அல்லது எனக்காகவா? குழப்பம் குழப்பம். 

புத்தகக் கடைக்குள் சில மணித்தியாலங்கள் தன்னை புதைத்துக் கொண்டாள். தனக்குப் பிடித்தமான மனோவைத்தியம், சைக்கோலஜி பற்றிய புத்தங்களைத் தேடினாள். அவளுக்குப் புத்தகங்களைப் பிடிக்கும். குழந்தையைத் தடவிக் கொடுக்கும் நுண்ணிய உணர்வுடன் புத்தகங்களைத் தடவிக் கொடுத்தாள். சில வேளைகளில் சில புத்தகங் களிலிருந்து எத்தனையோ அற்புதமான உண்மைகளை யுணர்ந் திருக்கிறாள்.உயிருக்குயிரான சினேகிதிகளை விட இந்தப் புத்தகங் களுடன் எத்தனையோ மணித்தியாலங்களைச் செலவழித்திருக்கிறாள். 

துன்பம் நேர்கையில் தான் இருந்த பழமையான சூழ்நிலையை விட்டு ஒரு மாற்றுச் சூழ் நிலையில் தன்னைப் புதைத்துக் கொண்டது ஒரு கொஞ்சமாவது ஒரு தற்காலிக சுகத்தைத் தருவது போலிருந்தது. ஜோர்ஜ் பற்றிய உணர்வுகளை யதார்த்தமாக அணுக வேண்டும் என்று முடிவு செய்தாள். 

– தொடரும்…

– நாளைய மனிதர்கள் (நாவல்), முதல் பதிப்பு: டிசம்பர் 2003, புதுப்புனல், சென்னை

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *