சூடிக்கொடுத்த சுடர்முடி
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவருடைய உண்மையான பெயர் அழகப்பன். பேரைச் சொல்லிக் கூப்பிடாமல் ‘பேர் சொல்லான்’ என்றே அழைப்பார்கள் அவரை. ஆள் நல்ல வாட்டசாட்டமாய் இருப்பார். கத்தியைக் கையில் எடுத்துவிட்டால் அவ்வளவுதான். கை, கால், தலை எல்லாம் அடங்கிவிடும் எங்களுக்கு. அவரைப் பார்த்தாலே அலறி அடித்துக்கொண்டு காத தூரத்திற்கு ஓடுபவர்களும் உண்டு.
நானும் அப்படித்தான். மாதத்திற்கு ஒருமுறை அவருடைய வீட்டிற்கு அம்மா என்னை அடித்துவிரட்டுவாள். என் தலைக்குள்ளே கையை நுழைத்து, ‘காடு மாதிரி இருக்கு, போடா போய் வெட்டிக்கிட்டு வா’ என்று திட்டி அனுப்புவாள். அடுத்த வாரத்தில் எங்காவது கல்யாணம், திருவிழா, இல்லை பள்ளியில் ஏதேனும் விழா என்றால் அம்மாவிடம் அடம் பிடித்தாவது அதை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிப்போட்டு விடுவேன், இல்லையேல் அசிங்கமாய் இருக்கும். மாணவர்கள் மத்தியில் ‘மார்க்கெட்’ குறைந்துவிடும்.
அதுவுமில்லாமல் எனது வகுப்பில் நிறைய தனலெட்சுமிகள் (தனலெட்சுமி = அழகி) இருந்த காலம் அது. மாணவி தனலெட்சுமி களைத்தவிர டீச்சர் தனலெட்சுமியும் ஒருத்தர் இருந்தார். அவர் பெயர் மெர்சி. அழகான உருண்டை முகத்தோடு உதட்டுக்கு மேலே ஒரு மச்சத்தோடும். அவருக்காகவே நாங்கள் வகுப்பிற்குப்போன காலமுண்டு. அந்த வகுப்பென்றால் சரவணன் தன் பைக்குள் வைத்திருக்கும் கண்ணாடியையும் சீப்பையும் எடுத்து மெல்ல தலை சீவிக்கொள்வான். நானும் அப்படியே சந்தடிசாக்கில். முடிவெட்டிய ஒருசில நாட்களுக்கு யாருடனும் பேசப்பிடிக்காது. ‘அட.. ஏங் ராசா. இப்பொத்தான் நீ அப்புடி இருக்கே’ன்னு அம்மா சொல்லும்போதுகூட அவள் பொய் சொல்கிறாளோ இந்தத் தலையில் நான் அழகாக இருக்கேனாம் எனக் கோவம் வரும்.
அழகப்பனுக்கென்று சில அதிசயங்கள் இருக்கின்றன. அவர் வைத்திருக்கும் கத்தியைப் பார்த்தால் அவ்வளவுதான். கழுத்திற்கு அருகே கொண்டு வரும்போது கத்தியை சாணை பிடிக்கப்போவது போலத்தோணும். அவரது கத்திரிக்கோல் யப்பா, அவருடைய தாத்தா, அவருடைய அப்பா அப்புறம் இவருன்னு குடும்பத் தொழிலால் பக்குவமாய் குழிந்து காணும். ஒரு வெண்கலக் கிண்ணம். அதுலே தண்ணி எடுக்கக்கூட யாருக்கு முடிவெட்டுறாரோ அவுங்க தான் போய் தண்ணி எடுத்து வரணும். அதுவும் குளத்துக்குப் போகணும். வீட்டில் எடுத்தால் அம்மா திட்டும். புளியமர நிழல்லே, இருக்கைக்கி துண்டு போட்டுக்கிட்டு, அப்படி தலை மேல கத்திய வெச்சி வெட்ட ஆரம்பிச்சாருன்னா சும்மா ‘கிரிச் கிரிச்’ ன்னு தலை மேல ஏதோ அணிலு ஓடி ஆடுற மாதிரி இருக்கும்.
முடிவெட்டும்போது, அட என்னமோ போங்க! எங்கதான் இருந்ததோ இந்தத் தூக்கம். கண்ணைச் சொழட்டிக்கிட்டு வந்து கவ்வும். படக்குபடக்குனு தலை கீழே விழும். டொட்டுன்னு தட்டி மேலே தூக்குவார். அப்புறம் தலை இந்தப்பக்கம் கவிழும். அதையும் தூக்கி நிறுத்துவார். அப்புறம் இடப்பக்கம்; வலப்பக்கம். அப்பப்பா, மொத்த கோவமும் அவரு மூஞ்சிலே தெரியும். காரியம் முடிஞ்சி பாக்கும்போதுதான் அது நம்ம தலையிலே தெரியும்.
வெட்டி முடிச்சவுடன் தலையைப் பாத்தா நமக்கே சகிக்காது. இதுல இந்தத் தனலெட்சுமிங்கெ வேற! அடுத்ததாக முத்து உக்காருவான். ஏற்கனவே அவனுக்கு நரித்தலை. இதுலே ஒட்ட வெட்டுனா? கூம்புத்தேங்காய் மாதிரி இருக்கும். ஒரு சந்தோசம் வரும் பாருங்க அப்போ, நாந்தான் அழகா இருக்கேன்னு. அப்பா!
சரி நாம மட்டுந்தான் தூங்குறோமான்னு உக்காந்து மத்தவங்களையும் பாத்தா அவங்களும் அப்படித்தான் தூங்குவாங்க. அதிலேயும் நம்ம கருப்பண்ணன் இருக்காறே அட, இந்த எருமை மாடெல்லாம் மேப்பாரே. அவருதான். வானி (வாயிலிருந்து ஒழுகும் எச்சில்; ஜொள்ளு என்பர் சிலர்) அதுபாட்டுக்கு கோந்து மாதிரி ஊத்திக்கிட்டு இருக்கும். தண்ணி தூக்கீட்டு போற சம்சாதிகளெல்லாம் அவரைப் பாத்து சிரிச்சுக்கிட்டே போவாங்க. அவரு பொண்டாட்டி மட்டும் கோபமாய்ப் போகும். இப்படி எல்லாருமே தூங்கிடுறாங்கன்னா அழகப்பன் கை தூக்கராசி கைதானே!
என் கிளாஸ்லெ இருந்தான் சேவியரு. அவன் கிராப்பு மட்டும் அப்படித்தான் இருக்கும். கமலு ‘செவப்பு ரோசாவுலே’ வெச்சிக் கிட்டு இருக்க மாதிரி இருக்கும். அந்தக் கிருதாவையும் அவன் பண்ணுற ஸ்டைல் இருக்கே அதுகூட அசத்தலா இருக்கும், நம்ம தலைவரு அதான் எம்ஜியாரு வெச்சிக்கிற மாதிரி இருக்கும். இதைப் பாத்துட்டு நானும் ஒருநா அவருகிட்டே போயி, இப்படி வைங்கன்னு சொன்னேன்.
மொதல்தடவை வெட்டிமுடிச்சபோது இதக்கொஞ்சம் எறக்கி வைங்கன்னேன். அந்த நேரத்திலே கிருதான்ற பேரு ஞாபகத்துக்கு வரலை. ‘என்னப்பொ எதை?’ என்று அவர் தன் கட்டைக்குரலில் கேட்கும்போதே பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் சேவியரு குடுத்த தகிரியம்தான். மீண்டும் சொன்னேன். மறுபடியும் அவர் அப்படி இப்படி வழித்தார். எனக்கு இன்னும் சொகமாயில்லை. மறுபடியும் அவர்ட்டே சொன்னேன். அப்போத்தான் அது நடந்தது. சுருக்குன்னு ஒரு வலி. காதுலெ இருந்து ரத்தம். பாவிப்பய. காதுலெ கிழிச்சிப்புட்டான். அன்னையிலே இருந்து நான் அவர்ட்டே எதையும் சொல்றதில்லே.
அவரு வீட்டுக்கு போவணுமுன்னாவே நாங்கள்ளாம் அலறி அடிச்சி ஓடும்போது எங்க அண்ணன் மட்டும் ஆசையோட அங்கே போவாரு. அவரு மேல எனக்கு ஆச்சரியமா இருக்கும். ஒருநாளு அவருகூட நானும் போயிப் பாத்தேன். அப்போதான் தெரிஞ்சது அழகப்பன் வீட்லேயும் ஒரு அழகான தனலெட்சுமி இருக்குண்றது. பொண்ணுன்னா சூப்பர் பொண்ணுங்க. எனக்கு சரியா வராது. எங்க அண்ணனுக்குத்தான் லாயக்கு. சும்மா மத மதன்னு அப்புடித்தான் இருக்கும். முடிவெட்டும்போதே அழகப்பன் கூப்பிடுவார். அஞ்சலை கொஞ்சம் மோர் கொண்டுவான்னு. அடடா, அது நடந்து வர்றெ அழகு இருக்கே! அண்ணனை நான் அப்பொத்தான் பாப்பேன். வெச்ச கண்ணு வாங்காமெ பாத்துட்டே இருப்பாரு. அது என்ன படம்… ‘மலர்கள் நனைந்தன பனியாலே’ அப்புடின்னு ஒரு பாட்டு ஆங்.. ‘இதயக்கமலம்’ அதுலே வர்ற ‘கேஆர் விசயா’ மாதிரி இருப்பாங்க. உடனே எனக்கு மெர்சி டீச்சர்தான் ஞாபகத்துக்கு வருவாங்க.
அப்புறம் பாத்தா முடிவெட்டி முடியும் போது அண்ணன் மெதுவா அதை அவரு கையிலெ கொடுப்பாரு. என்னன்னு குனிஞ்சி பாத்தா அம்பது காசோ ஒரு ரூவாயோ இருக்கும். ஓஹோ இதான் சங்கதியா. அதுக்குத்தான் ஒனக்கு சீமைக்கல்லுலெ வழிச்சு விடுறாரான்னு நெனைச்சிக்குவேன்.
பொதுவா நாங்க காசு பணம் குடுக்க மாட்டோம். அறுவடை முடிஞ்சி, அஞ்சி இல்லாட்டி ஆறு கட்டு குடுப்பாங்க வீட்லெ. கட்டுன்னா நெல்லு கருதுக்கட்டு. அதன் எண்ணிக்கை வீட்லே உள்ள ஆளுங்க எண்ணிக்கையப் பொறுத்து இருக்கும். ஆனா எங்க அண்ணன் காசு குடுக்குறானே.. அவனை மிரட்டிக் கேப்பேன், நீ மட்டும் ஏன் காசு குடுக்குறே, காசு எங்க எடுத்தே.. அப்பாகிட்டே சொல்லவான்னு. ‘தம்பி தம்பி’ன்னு கெஞ்சுவார். சரி; போனாப் போகுதுன்னு விட்டுடுவேன்.
கடைசிலே நாலஞ்சி பேரு அலைஞ்சும் அவரு மக கண்டுக்கல்லே. அப்புறம் வெளியூர்ல மாப்பிள பாத்துக் கட்டி வெச்சிட்டாரு அழகப்பன் அவரு பொண்ணுக்கு.
ம். அதெல்லாம் அந்தக்காலம்!
அடுக்குவீட்டை விட்டு கீழே வந்தேன். இங்கும் கூட லிப்டில் ஏதேதோ எழுதி வைத்தார்கள். நம்மூரில் கழிவறை குளியலறை மற்றும் கல்லூரி சம்பந்தப்பட்ட இடங்களில் காணப்படுவது போல காதலும் காவியர்களும். நாலெழுத்து ஆங்கில கெட்ட வார்த்தையும் நிறைய இடங்களில்.
எல்லா இடத்திலும் மனிதர்கள் மனிதர்கள்தான். செவ்வாய் கிரகம் சென்றால் கூட அங்கேயும் சில கெட்ட வார்த்தைகளை எழுதி வைத்துவிட்டுத்தான் வருவார்கள். அஞ்சழை-முருவேசு அல்லது சுப்பிரமணி-காதல்-சொர்ணம் என்றாவது இருக்கும்.
கை தானாக கால்சட்டைப்பைக்குள் சென்று வந்தது. ‘நெட்ஸ்’ எனப்படும் உள்ளூர் வங்கி ஒன்றின் ‘உடனடி பண அட்டை’ இருக்கிறதா என்று பார்க்க. ம்ம். இருந்தது.
அப்போதுதான் பெய்திருந்த மழை உடம்புக்கும் மனதுக்கும் சில்லென்று ஒரு சுகத்தைத் தந்தது. இன்னொரு மணம் கூட அப்பகுதியில் இருந்து வந்தது. புல் வெட்டியிருப்பார்கள் போலும். மழை பெய்ததால் சந்தோசத்தில் இருக்கும் புற்களை அப்போது வந்து வெட்டினால் எப்படி இருக்கும்? பாவம். வெட்டுப்பட்ட புற்கள் தந்த மணம் தான் அது.
இன்றைக்கு எனக்கு விடுமுறை. இன்று இந்த வேலையை முடித்தால் தான் உண்டு. அப்புறம் நேரம் இல்லை.
கடைத்தெருவுக்கு வந்துவிட்டேன். அந்தக் கடை திறந்துதான் இருந்தது. உள்ளே நுழையுமுன் நின்று ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டேன்.
உள்ளிருந்த அவர் ஆங்கிலத்தில் என்னை ‘வருக’ என்றார். ஒரு நிமிடம் என் தலையைப்பார்த்தவர் முடிவெட்டவேண்டுமா இல்லை கழுவவேண்டுமா எனக் கேட்டார். வெட்டவேண்டும் எனச் சொன்னேன். எங்களது உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் தான் இருந்தன.
பக்கத்து இருக்கையில் ஒரு சீனக்குழந்தை இருந்தது. சீனக் குழந்தைகள்தான் எவ்வளவு அழகு! அதுவும் இந்தக் கண்கள். மொச்சைக்கொட்டை இப்பொழுதுதான் முளைத்து வருவது போல. அடடா! இவர்கள் பெரியவர்கள் ஆனதும் அப்போது ரசிக்க முடிவதில்லை.
சிங்கப்பூரில் சீனக் குழந்தைகளை (மட்டும்) ரசிப்பதில் எனக்கு அலாதி விருப்பம்.
அந்த அறைக்குள் இருந்து ஒரு வித நறுமண நெடி அடித்தது. பல நேரத்தில் எனக்கு அது மூச்சு முட்டியது. அதற்கு மேல் அந்தக் குளிர் சாதனப்பெட்டி. வெளியே மழைபெய்துகொண்டிருக்கும்போது உள்ளே இப்படி இருந்தால் எப்படி இருக்கும்? நடுக்கம் வந்து விட்டது. இதெல்லாம் அவர் என்மீது அந்த உடையை போர்த்துவது வரைதான். அப்புறம் என்னவோ தெரியவில்லை. குளிராகவே இல்லை.
ஆங்காங்கே கண்ணாடிகளைப் பதித்து என்னை அது பல்வேறு கோணங்களில் காட்டிக்கொண்டிருந்தது. நம்மூர் சினிமாக்களில் காண்பிப்பார்களே, இந்த பணக்கார வில்லன்கள் அமர்ந்து சுற்றிக் கொண்டு அதுமாதிரியான ராஜ இருக்கை அங்கிருந்தது. வாழ்க்கையில் பார்த்திராத என்னென்னமோ வடிவங்களில் கத்திரிக் கோலும் சீப்பும் இன்னபிற லாகிரி வஸ்துகளும் மிளிர்ந்தன. அழகப்பன் ஞாபகத்திற்கு வந்தார். அவருடைய வெங்கலக்கிண்ணம் ஞாபகத்திற்கு வந்தது. இரண்டையும் நினைத்து சிரித்துக் கொண்டேன்.
நான் புன்முறுவதைப் பார்த்து அவர் கண்ணாடி வழியே என்னிடம் சிரித்தார். அவருக்கு நான் அவருடைய வெட்டுதலுக்கு திருப்தி அடைந்து சந்தோசப்படுவதைப்போல ஒரு எண்ணம். என் நிலைமை அவருக்கு எப்படித்தெரியும்? வெட்டப்படும் புற்களின் வேதனை வெட்டுபவனுக்குத் தெரியுமா? இப்போதும் தலைக்கு மேலே அணில் ஓடியது. தலைக்குள் கையை விட்டு அப்படியே கொத்து கொத்தாய் முடிகளை அள்ளி இரண்டு விரல்களுக்குள் இடுக்கிக் கொண்டு ‘கிரிச் கிரிச்’ என்று வெட்டிக்கொண்டிருந்தார். முடிகள் ஆதரவிழந்தவர்கள் போலே வருத்தத்தோடு கீழே விழுந்து கொண்டிருந்தன.
என்னமோ தெரியவில்லை. இப்போது எனக்கு தூக்கம் வரவில்லை. அதற்கு மாறாக இன்னும் கொஞ்சம் முடி வெட்டிக்கொண்டிருக்கக் கூடாதா என்றிருந்தது. அவ்வப்போது அவர் கைகள் என் தோள் மீதும் கழுத்துப்பகுதிகளிலும் தடவியதும் என்னவோ போலிருந்தது.
ஒரு அரைமணி நேரம் அந்த சந்தோச வேதனையை அனுபவித்தேன். வெட்டி முடிக்கும்போது அழகப்பன் மேல் வரும் கோபம் வந்தாலும் கூட அதன் வேகம் குறைந்திருந்தது. எனது தலையின் இப்போதைய நிலையை ‘லைவ்’ நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சாதனங்கள் போல எல்லா திசைகளிலிருந்தும் என்னால் பார்க்க முடிந்தது. அதுவே எனக்கு சந்தோசமாகவும் இருந்தது.
வெட்டி முடித்தவுடன் அவர் இறுதிக்கட்ட வேலைகள் நிறைய செய்தார். அவற்றில் எதிலும் என் கவனம் செல்லவில்லை.
முடித்தவுடன் நெட்ஸ்சைக் காட்டினேன். வாங்கி அந்த அனுமதிப் பானில் செறுகிவிட்டு எனது கடவு எண்களை அழுத்தச்சொன்னார். அழுத்திவிட்டு எவ்வளவு என்றேன். பத்து வெள்ளி என்றார்.
இருநூற்றம்பது ரூபாய் இரண்டு வருடங்களுக்காவது அழகப்பனிடம் வெட்டலாம். அண்ணன் கொடுத்த ஐம்பது காசு மற்றும் ஒரு ரூபாய் ஞாபகத்திற்கு வந்தது.
வரும்போது மறக்காமல் சொன்னேன்.
‘உங்களுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் ஒன்று சொல்லலாமா?’
‘ம். தயவுசெய்து.’
‘இரண்டு விஷயங்களைக் குறைத்தால் நன்றாயிருக்கும்; ஒரு விஷயத்தைக் கூட்டினால் நன்றாக இருக்கும்; ஒரு விஷயத்தை நீங்கள் அப்படியே வைத்திருக்கலாம். நன்றாயிருக்கிறது.’
முதலில் முகத்தைச் சுருக்கியவர் பிறகு என் புன்முறுவலைக் கவனித்துவிட்டு ஆவலானார்.
‘என்ன நான் செய்ய வேண்டும்.’
‘ம்ம். நல்லது. முதலில் இந்த குளிர்சாதனத்தையும் அந்த நறுமண வாசனையையும் குறைத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக் கெப்படியோ, எனக்குத் தாங்க முடியவில்லை. அப்புறம் இந்த நீங்கள் நிற்கும் பலகை தரைக்கு மேலே, இதன் உயரத்தைக் கூட்டிக் கொள்ளுங்கள். ஏனெனில் இருக்கையை உயர்த்தாமல் அது உங்களுக்கு இன்னும் கொஞ்சம் உயரத்தைக் கொடுக்கும். அதனால் என் தோளுக்கு அருகில் உங்கள் தோள் இருக்கும். எளிதாக வெட்ட முடியும். மூன்றாவது இந்தக் கால்சட்டையின் நீளம் அது அப்படியே இருக்கட்டும். அதுதான் இந்த அறைக்கு விளக்கு இல்லாமலேயே வெளிச்சம் தருகிறது.
சொல்லிவிட்டுச் சிரித்தேன்.
அவர் முகத்தைக் கூர்ந்து கவனித்தேன். முதலிரண்டை சரிதான் என நினைத்தவர் மூன்றாவதைப் பற்றிக் கொஞ்சம் யோசித்தார். ஒரு மாதிரி சிரித்துவிட்டு கோபத்தோடு கொஞ்சம் வெட்கப்பட்டார்.
அட! பெண்கள்தான் வெட்கப்படும்போது எவ்வளவு அழகு!
– மருதம், முதற் பதிப்பு: டிசம்பர் 2006, எம்.கே.குமார் வெளியீடு, சிங்கப்பூர்.