நாளைய மனிதர்கள்





(2003ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
அத்தியாயம் – 4

ரவி, மாமாவின் கோபத்தையுணர்ந்தான். மாமாவும் அப்பாவும் இப்படிப் பேசித்தான் அவன் கேட்டிருக்கிறான்.
தனபால் மாமாவும் அப்பாவும் எழுத்தாளர்கள். வியாபார எழுத் தாளர்கள் அல்லர். உலகத்தைப் பற்றி, சமுதாயக் கொடுமைகளைப் பற்றி மணிக் கணக்காகப் பேசிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் மக்கள் சிந்தனையைத் தூண்டிவிட எழுதுபவர்கள். அரசியல், சமயம், என்பன வற்றின் போர்வையில் நடக்கும் அக்கிரமங்களை அவர்களால் தாங்க முடியவில்லை.1985ல் தமிழ் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இயக்கங்கள் ஒன்றை ஒன்று அழித்ததைக் காண மனம் பொறுக்காமல் அப்பாசிதம்பரம் எழுதிய கவிதை அவர்உயிருக்குஉலை வைத்து விட்டது.
“தமிழன் என்ற ஒட்டுமொத்த ஆத்திரத்தில் சிங்கள இனவாதம் தமிழ் மக்களை அழிக்கிறது, பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே தன் நாட்டில் வாழும் சொந்தக் குடிமக்களை மிருகம்போல் சுட்டுத் தள்ளுகிறது. அதை எதிர்ப்பதற்கு ஒன்றுபட்டுப் போராடாமல் ஒருத்தரை ஒருத்தர் அழித்துக் கொள்கிறார்களே” அப்பா சிதம்பரத்தின் இந்த உணர்வு அவர் கவிதை களில் வெடித்தது. அந்த ஆத்மீக அழுகையின் பலன் அவர் இருதயத் தைச் குண்டு துளைத்து அவர் உயிரைக் குடித்தது. தமிழனைத் தமிழன் சமுதாயத்துரோகி என்ற பட்டம் சூட்டிச்செய்த பயங்கரக் கொலை அது. “ஐயோவாயைப் பொத்திக்கொண்டு சும்மா இருங்கோ’ கமலம் பொரு முவாள். ஐந்து குழந்தைகளை வைத்துக்கொண்டு இருவரின் ஆசிரிய வேலைச் சம்பளத்தில் சுமாராகச் சீவியம் பண்ணினால் போதும் அவளுக்கு.
“தெருவில ஓடுற ஓணானப் பிடிச்சு ஏன் வேட்டிக்குள்ள வைக்கிறியள்” கமலா சத்தம் போட்டாள். அவரின் இறப்பு சுயசிந்தனை, சுதந்திர உணர்வுடன் எழுதியவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது. தனபால் மாமா இந்தியாவுக்குப் போய்விட்டார். மேற்கு நாடுகளுக்கு ஓடி வருபவர்கள் ஓடிவந்துவிட்டார்கள்.
ரவி அவரிடம் செந்தில் பற்றிப் பேசக் கூப்பிட்டான். ஆனால் அவரோ உலகக் கொடுமைகள் பற்றி ஒலம் போடுகிறார். இறக்கும்வரை சமுதாய, அரசியல் சிந்தனையுள்ள மனிதர்களில் தனபால் மாமாவும் ஒருத்தர் என்பது அவன் அபிப்பிராயம். தனபால் மாமா இன்னொருதரம் விஸ்கி ஓடர் பண்ணுவதைப் பார்த்து ரவி பயந்துவிட்டான்.
“மாமா போதும்,” அவன், அவர் இரண்டாவது தடவையாக விஸ்கி ஓடர் பண்ணுவதைத் தடுத்தான்.
“சரி வெளிக்கிடுவோமா” இந்த இளைஞன் தன்னையும் ஒரு வெறிகாரன் என்று நினைக்கக்கூடாது என்ற தவிப்பு மனதில் இருந்ததை அவர் குரல் காட்டியது. “வாழ்க்கையில் எப்போதும் ஒரு வரைபாடும், நிதானமும் தேவை” அவர் சிரித்தார்.
அவர் வாழ்க்கையில் எத்தனையோ மேடுபள்ளங்களைத் தாண்டி வந்தவர். கொலைகளை நேரில் பார்த்தவர்.அரசியல் கொடுமைகளுக்கு முகம் கொடுத்தவர்.
அவனோ வாழவேண்டிய வயதில் தகப்பனையிழந்து வாடியவன். இலட்சியமும் எதிர்கால நம்பிக்கைகளும் கொண்ட இரு தம்பிகளை முறையே இலங்கை ராணுவத்திடமும், இந்திய ராணுவத்திடமும், மிகவும் ஆசையாக, அருமையாக வளர்க்கப் பட்ட தங்கை சங்கீதாவை தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கும் தாரை வார்த்தவன். அனுபவங்கள் ஒரு மனிதனை அறிஞனாக்கும் என்றால் அந்த வரைவிலக்கணம் ரவீந்திர னுக்குப் பொருந்தும் என்று தனபாலுக்குத் தெரியும்.
“நீ மிகவும் உறுதியானவன். இப்படித்தான் வாழவேண்டும் என்ற வரைவிலக்கணத்தோடு வாழ்கிறாய். லண்டன் ஆடம்பரம் உன்னைப் பாதிக்கவில்லை. சுமதியைப் பார்க்கும்போது ஒருவிதத்தில் பாவமும், ஒரு விதத்தில் ஆத்திரமும் வருகிறது. அவளால் குடும்பம் என்ற போர் வைக்குள் நடக்கும் பல விடயங்களைத் தாங்க முடியாமலிருக்கிறது. பப்பை விட்டு வெளியேறி வரும்போது தனபால் சொன்னார்.
தனது சினேகிதனின் மகள் சுமதி என்பதைவிடத் தனது மருமகன் செந்திலின் மனைவி என்ற உரிமை அவர் குரலில் தொனித்தது. வாழ்க்கையில் நிதானம் தேவை என்று பேசியவர் சுமதியின் நிலையை எப்படிப் பார்க்கிறார்? ரவி சண்டைக்குப் போகத் தயாரில்லை. “ஏன் என் தமக்கையில் பிழை சொல்கிறீர்கள்” என்று அவன் ஆர்ப்பரிக்கத் தயாரில்லை. தனபால் திட்டம் போட்டு யாரையும் வருத்த மாட்டார் என்று தெரியும்.
அவனை, ராமநாதன் மாமா இலங்கையில் படிப்பிக்கவும் இப்போது லண்டனுக்கு வரவும் எவ்வளவோ உதவிகள் செய்திருக் கிறார். அதன் பின்னணியின் விளக்கங்கள் அவனுக்கு சாடையாகத் தெரியும். முழுமையும் விளங்கிக் கொள்ளும் அவசியமில்லை, அவசரமுமில்லை. ஒவ்வொரு சந்தர்ப்பம் வரும்போதும் ஒவ்வொரு விடயமும் தன்பாட்டுக்கு வெளியில் வரும், அது உலக நியதியும் கூட என்பது அவனுக்குத் தெரியும்.
“சுமதியும் செந்திலும் சாதாரண தம்பதிகள். சாதாரண ஆசைகளால், எதிர்பார்ப்புக்களால் வாழ்க்கையை நிறைத்துக்கொள்ளப் பார்ப்பவர்கள். அதில் தடங்கல்கள் வந்தால் ஒருத்தரை ஒருத்தர் வருத்திக் கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்” மாமாதத்துவம் பேசினார்.
நடந்துபோன தனபால் சட்டென்று நின்றார். ‘பப்’பைக் கடந்து கொஞ்சத் தூரம் வந்திருந்தபடியால் ரோட்டில் அதிக சனநடமாட்ட மில்லை. இரவின் நிசப்தம் தர்மத்தின் மறுபகுதியாய்ப் பயமுறுத்தியது. ஒரு கார் இவர்களைத் தாண்டிக் கொண்டு போனது.
“உன்னைவிட வயதில் மூத்த தம்பதிகள் அவர்கள். ஆனால் பெரியோர்கள் பக்கத்தில் இருந்து புத்தி சொல்லாததாலோ என்னவோ வாழ்க்கையைக் குழப்பிக் கொண்டு மாரடிக்கிறார்கள். அதனால் குழந்தைகளின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படப் போகிறது என்று பயப்படுகிறேன்.”
தனபால் உருக்கத்துடன் சொன்னார். உணர்ச்சி வசப்பட்ட அவரின் கண்களில் நீர்துளித்ததை நிலவு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
”மாமா… உங்களைக் கண்டபோது அப்பாவைக் காணும் சந்தோசம் இருக்கிறது. நேர்மைக்கும் நீதிக்கும் குரல் கொடுக்கும் உங்கள் மாதிரிப் பேர்வழிகளின் தலைமுறை அழிந்துவிட்டதோ என்று யோசிச்சேன்…. ராமநாதன் மாமா, சுமதியின் சந்தோசமற்ற வாழ்க்கையைப் பற்றி அம்மாவுக்கு எழுதவில்லை. சுமதியும் ஒன்றும் வெளிப்படையாகச் சொல்லியிருப்பாள் என்று நான் நம்பவில்லை. ராமநாதன் மாமா, நீங்க என்னை லண்டனுக்கு வர உதவி செய்ததன் பின்னால் எத்தனையோ எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று எனக்குத் தெரியும். அதில் ஒன்று சுமதி வாழ்க்கையை ஏதோ ஒருவிதத்தில் சரிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நான் ஒரு மேஜிக்கும் செய்ய முடியாது. நான் மந்திரவாதி யில்லை. புத்திமதி சொல்லலாம். ஒன்றாய் வாழுபவர்கள் அவர்கள். ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டவர்கள் அவர்கள். நான் மூன்றாம் பேர்வழி.”
ரவியின் குரல் திடமாக இருந்தது. சுமதியின் தம்பி என்ற ஸ்தானத்தி லிருந்து அப்பால் நின்று பேசுவதுபோலிருந்தது.
“தம்பி என்ற முறையில் தமக்கைக்காகச் சண்டை பிடிப்பாயோ என்று யோசித்தன்…. உனது அப்பாவின் குணங்களில் பல உனக்கிருக் கிறது, உனது தகப்பன் தான் நினைத்ததைச் சாதித்தவன். நீயும் உனக்குப் பிடித்த விடயங்களில் மட்டும் தலையிடுறாய்.”
இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். கார் அருகே வரும்வரை தனபால் பேசிக்கொண்டே வந்தார். சில விடயங்கள் அரசியல் சம்பந்த மாக இருந்தது. ஆனால் ஒழிவு மறைவாகச் சொல்லும் விடயங்கள் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. தனபால் மாமா போன்றோர் இலங்கையில் இருந்தால் இவர்களுக்கு ஆபத்து வருவது நிச்சயம். அதுபற்றி அவரிடம் கேட்கமுதல் வீடு வந்துவிட்டது. சித்திரா இவர்களின் சத்தம் கேட்டு வெளியே வந்தாள்.
தனபால் மாமா இன்னும் புறப்படவில்லை என்று தெரிந்ததும் காப்பி சாப்பிடச் சொன்னாள். அவர் நடையிலிருந்து அவர் நிறையக் குடித்திருக்கிறார் என்பது வெளிப்பட்டது. காப்பியின் பெயரைக் கேட்டதும் “அதுவும் நல்லதுதான்” அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை. சித்திராவும் சுமதியும் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர். அவருடன் அளவளாவிக் கொண்டு சென்ற ரவி ஏன் திடீ ரென்று மௌனமாகிவிட்டான் என்று தெரியாமல் அவள் குழம்பினாள். தனபால் மாமா அப்படி என்ன சொல்லியிருப்பார்? ஏன்ரவி மௌனமாக இருக்கிறான்? சித்திரா தனக்குள் யோசித்தாள். சுமதி குழந்தைகளைப் படுக்கையிற் போட மேல் மாடிக்குப் போய்விட்டாள்.
மாமா தனபால் புறப்பட்டதும் சித்திரா ரவியைக் கேள்விக் குறியுடன் நிமிர்ந்து பார்த்தாள். செந்திலைப் பற்றி தனபால் மாமா என்ன சொன்னார் என்று கேட்கும் பார்வையது. அவன் இவளுடன் மேலதிகமாகப் பேசப் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவனின் செய்கையை அவள் புரிந்து கொண்டாள்.
“சரி நான் புறப்படுகிறேன்” சித்திரா வெளிக்கிட்டாள்.
சுமதி கீழே வந்தாள். முகம் சோர்ந்திருந்தது. இன்னுமொரு தரம் அழுதிருக்கிறாள் போலும். “இனி இந்த நேரத்தில் வீட்ட போக யோசிக் காத. இங்கேயே நிற்கலாம்.” சுமதி சொன்னது அவனுக்குக் கேட்டதோ
என்னவோ அவன் மறுமொழிசொல்லவில்லை.
“சொல்றது கேட்குதா?” சுமதி தம்பியருகில் வந்தாள். அவன் தோள்களில் பாசத்துடன் கை வைத்தாள்.
“வேண்டாம் நான் போய்விட்டு வாறன்”.
வெளியில் கும்மிருட்டுகளை அகற்ற லண்டன் வெளிச்சங்கள் போட்டி போட்டன. காரில் சித்திரா இருந்தாள். இவன் வருகைக்கு காத்திருந்தாள். ‘ஸ்ரேஸன் வரைக்கும் லிப்ட் தரலாம்,’ சித்திரா சொன்னாள். இந்த நேரத்தில் தனிமையாகச் செல்வது அந்தப் பிராந்தியத் தில் மிகவும் அபாயமான விடயம். அவன் மறுமொழிசொல்லாமல் ஏறிக்கொண்டான்.
கார் ஹைபரி இஸ்லிங்டன் ஸ்ரேசனில் நின்றது. குடிக்கும் நேரம் முடிவடைந்ததால் பட்டாளம் பட்டாளமாகப் பல ‘குடிமகன்கள் பப்புகளுக்குள்ளால் வந்து கொண்டிருந்தார்கள். சந்தோசம் தேடி சாராயத் தவறணை தேடும் கூட்டம்.
பாட்டுப் பாடுபவர்கள் சிலர், பாதையில் இடறி விழுபவர் சிலர், டாக்சிக்காக காத்திருப்பவர் பலர். கையோடு கைகோர்த்து முத்தமிடுவோர் இன்னும் சிலர். இளைஞர்கள், இளைஞிகள், கிழவர்கள் என்ற பேதமின்றி ‘பப்’ நிறைத்த மக்கள் ‘மகிழ்ச்சியுடன் வந்து கொண்டிருந்தார்கள்.
அண்டர் கிரவுண்ட் ரெயினை நோக்கிப் பலர் போய்க் கொண் டிருந்தனர். சித்திரா அவனைக் காரால் இறக்காமல் காரை ஸ்ராட் பண்ணினாள்.
“என்ன யோசிக்கிறாய் சித்திரா?” உயிரற்ற குரலிற் கேட்டான் ரவி. வீதி விளக்குகள் கண் சிமிட்டின. அவன் மனம் எங்கேயோ இருந்தது.
“உங்களை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போறன்.”
அவள் குரலில் தாய்மை கனிந்த பரிவு.
அவன் சண்டை பிடிக்கவில்லை. மெளனமாக உட்கார்ந்திருந்தான். அவள் ஒருதரம் இவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
“என்ன தனபால் மாமா மெளன மாத்ரை தந்தாரா என்ன? வாய் திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.”
“ஏதோ பாட்டுக்கு எதையாவது பேச மனமில்லை”. அவன் முணு முணுத்தான். செந்திலை நேரே கண்டால் மென்னியைத் திருக வேண்டும் என்று கோபம் வந்தது. நள்ளிரவில் கார் வடக்கு லண்டனிலிருந்து தெற்கு லண்டனுக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆங்காங்கே சனக்கூட்டம் வழிந்தது. பெரும்பாலும் ‘பப்’ முடிந்து வரும் மனிதர்களாக இருந்தார்கள்.
சித்திரா ரேடியோவில் உலகச் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் ஒருவித பேச்சும் வைத்துக் கொள்ளவில்லை. பெரிய மாடிக் கட்டிடங்களைத் தாண்டி கார் விம்பிள்டனை நோக்கிஓடிக் கொண்டிருந்தது.
ரவியின் மோபைல் டெலிபோன் கிணுகிணுத்தது. “இப்போது தான் சுமதி வீட்டிலிருந்து வருகிறேன். இன்னொரு தரம் போன் பண்ணு கிறாளா,”அவன் சிந்தித்தபடி “ஹலோ” சொன்னான்.
“ஹலோ மெலனி பேசறன்”
அவன் முகத்தில் சட்டென்று ஒரு வித்தியாசம்.
“இப்போதுதான் சுமதி வீட்டிலிருந்து போய்க் கொண்டிருக்கிறோம்.’
தான் தனிமையாயில்லை என்பதை அழுத்திச் சொன்னான். மெலனியுடன் பேசும் மனநிலையில் அவன் இல்லை.
“ஸாரி, உங்களைக் குழப்பியதற்கு மன்னிக்கவும்” அவள் குரலில் உண்மையான மன்னிப்பு. அதை அவன் உணர்ந்தான். மீண்டும் அமைதி.
கடந்து செல்லும் இரவுக் காட்சிகளில் கண்களைப் பதித்தவன் போலிருந்தாலும் அவன் சிந்தனை எங்கோ சிக்குப் பட்டுக் கொண்டிருக் கிறது என்று சித்திராவுக்குப் புரிந்தது.
இரவு எத்தனையோ ரகசியங்களைத் தன்னுள் புதைத்தபடி நீண்டு கொண்டிருந்தது. சித்திரா ரேடியோவில் நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
ரேடியோவில் நேயர்கள் அரங்கம் நடந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு பெண் தன் குடும்பத்தில் தனக்கு நேர்ந்த துன்பங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். கணவர் தொடக்கம், கணவரின் குடும் பத்தினர் யாவரும் தன்னை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினர் என்று அந்த இந்தியப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“தன்னில் உண்மையான அன்பு தன் மனைவி வைத்திருக்கிறாளா என்பதை நிரூபிக்கவும் தன் மனைவி கற்புவதியா என்பதை நிரூபிக்கவும் ஒரு கணவர் தன் பெண் சாதியை நெருப்பில் இறங்கச் சொன்னாராம்.”
ரேடியோ நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த சித்திரா ரவீந்திரனுக்குச் சொன்னாள்.
“செந்தில் போல் மனிதர்கள்’உலகத்திலுள்ள வரைக்கும் இப்படி எத்தனையோ பெண்கள் கஷ்டப்படத்தான் போகிறார்கள்.” பெருமூச் கூடன் சொன்னான்ரவி. செந்தில் பற்றிய பேச்சை எடுத்தால் தேவையற்ற பல விடயங்கள் வெளிவரும் என்பது அவனுக்குத் தெரியும்.
சித்திரா அவன் ஆத்திரத்தைப் புரிந்து கொண்டாள். அவன் இவ்வளவு நேரமும் மௌனமாய் இருந்ததற்குக் காரணம் இப்போது விளங்கியது. தன் தமக்கையின் வாழ்க்கை எப்படி அவனைத் துன்பப் படுத்துகிறது என்பதை உணர்ந்தாள். அவன் சுமதியையும் செந்தி லையும் பற்றியா யோசித்துக் கொண்டி ருக்கிறான்?
”உங்கள் வீட்டு விலாசத்தை இன்னொருதரம் சொல் லுங்கள்.” அவன் வீட்டுக்கு அவள் இதுவரைக்கும் வந்ததில்லை. சித்திரா காரின் வேகத்தைக் குறைத்தாள். அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் முகம் சோர்ந்து போயிருந்தது. அவன் கண்களை மூடிக்கொண்டு விலாசத்தைச் சொன்னான்.
அடுத்த சில நிமிடங்களில் அவன் இருக்கும் வீட்டின் முன்னால் சித்திராவின் கார் வந்து நின்றது. மத்தியதர மக்கள் வாழும் வசதியான இடம். அவன் ஒரு டாக்டர். அவன் காரைவிட்டு இறங்கினான்; வீட்டை நோக்கினான். அவள் இறங்கவில்லை. அவன் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஏன் என் வீட்டு வாசற்படி மிதிக்க விருப்பமில்லையா?” அவன் திரும்பிப் பார்த்துக் கேட்டான்.
“அது உங்கள் வீடல்ல, வாடகை வீடு.” சித்திராகுறும்புத்தனமாகச் சொன்னாள்.
“வாடகை வீட்டிலும் ஒரு கோப்பி குடிக்கலாமே.” அவன் அழைப்பு விடுத்தான். “சித்திரா, இந்த நேரத்தில் திரும்பிப் போக வேண்டாம். இங்கே நின்றுவிட்டுக்காலையில் போகலாம்”. சித்திராவிற்கு அது சொல்வதுபோல் படவில்லை; உத்தர விடுவதாக ஒலித்தது. அவளது மைத்துனன் அவன். உத்தரவிட உரிமையுள்ளவன்.
ஒரு கொஞ்ச நேரம் சித்திரா இவனது கட்டளைக்கு அடிபணிவதா இல்லையா என்று யோசிப்பது தெரிந்தது.
“சித்திரா, நீ இந்த நேரத்தில் சுமதி வீட்டுக்குப் போனால் அவளுடையதும் குழந்தைகளினதும் நித்திரை குழம்பும். நாங்கள் இருவரும் சுமதி வீட்டுக்குப் போய் என்ன பண்ணிவிட்டோம்?”
அவள் வாயடைத்துப் போய் நின்றாள்.
சுமதியின் டெலிபோன் அழுகையைக் கேட்டுப் பரிதவித்து ஆறுதல் சொல்ல வந்தவளுக்கு சுமதியின் தமயனே இப்படி ஏனோதானோ என்று பேசுவது புரியவில்லை.
சுமதி வீட்டுக்குப் போகாவிட்டால் தாய் தகப்பன் வீட்டுக்குப் போகவேண்டும். இந்த நேரத்தில் முடியாத காரியம் அது. சித்திரா காரில் இருந்தபடியே யோசித்தாள். அவன் இன்னும் இவள் பதிலுக்குக் காத்திருந்தான். “நான் ஒன்றும் உன்னைச் சாப்பிட மாட்டேன்.” அவன் பாதிக் குறும்புடன் பாதி எரிச்சலுடன் சொல்லிவிட்டு நகர்ந்தான். கதவு திறந்திருந்தது. அவன் இவளது வருகைக்குக்காத்துக் கொண்டு நின்றான்.
கார்க்கதவைச் சாத்திவிட்டு அவள் உள்ளே போனாள். காலையில் மெலனியுடன் தொடங்கிய நாளை சித்திராவுடன் முடிக்கப் போகிறானா?
“பிரம்மசாரிகளின் வீட்டில் தங்கிப் பழக்கமில்லை.” சித்திரா குறும்புடன் சொன்னாள்.
அவளின் கிண்டலுக்கு அவன் செவி சாய்த்தானோதெரியாது. பதில் பேசாமல் முன்ஹாலுக்குள் போனான்.
சைக்ரியாட்ரிஸ்ட் புத்தகங்கள் மேசையெல்லாம் பரப்பிக் கிடந்தன. திரும்பிய இடமெல்லாம் புத்தகங்கள். ரவி நிறைய வாசிப்பான் போலும்.
“தனியாகவா இருக்கிறீர்கள்?”
சித்திரா ஹாலின் நாலாப்பக்கமும் பார்வையைச் சுழட்டியபடி கேட்டாள்.
“இல்லை, இன்னுமொரு டாக்டர். இந்தியாவைச் சேர்ந்தவர். அவரும் மேற்படிப்புக்காக வந்திருக்கிறார். லண்டன் பார்க்க ஒரு சொந்தக்காரனுடன் போய்விட்டார். அவர் அறையில் நான் படுக்கிறேன். என்னுடைய அறையை நீ பாவிக்கலாம்.”
பதிலுக்கு எதிர்பாராமல் அவன் போய்விட்டான். இரண்டு அறைகள் மேல் மாடியில் இருக்க வேண்டும். கீழே ஒரு ஹால். வழக்கம்போல் கிச்சன், என்று அமைந்திருந்தது.
மேல்மாடிக்குப் போனவன் கொஞ்ச நேரம் வரவில்லை. ‘அவன் தன் அறையை ஒழுங்கு செய்கிறான் போலும்’ சித்திரா தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
கொஞ்ச நேரத்தில் அவன் கீழே வந்தான். லுங்கி மாத்தியிருந்தான். வித்தியாசமாகத் தெரிந்தான்.
“இந்தா சித்திரா, எனது லுங்கியும் சேர்ட்டும். இங்க நைட்ரேசும் றெஸிங்கவுனும் கிடைக்காது.”அவள், அவன் கொடுத்த உடுப்புக்களை வாங்கிக் கொண்டாள். லுங்கியும் சேர்ட்டும்! அவன் கிச்சனுக்குப் போய் காப்பியோ ஏதோ தயாரித்தான். இந்த சந்திப்பையும் அவனின் அழைப் பையும் உபசாரத்தையும் எதிர்பார்த்தா அவள் வந்தாளா?
“எனக்கொன்னும் வேண்டாம்.” சித்திராஹாலில் இருந்தபடி சத்தம் போட்டாள்.
“குட்நைட,” அவன் இவளைத் திரும்பிப் பார்க்காமல் சொன்னான். உத்தியோக தோரணையான ‘குட்நைட்’!
அவன் ஏதோ தயாரித்துக் கொண்டு மேலே போனான். “திறந்திருக்கும் அறை என்னுடையது. காலையில் பேசிக் கொள்ளுவோம். நான் மிகவும் களைத்திருக்கிறேன்”.
அவன் போய்விட்டான். இவளுடன் உட்கார்ந்திருந்து ஏதும் பேசுவான் என்று அவள் எதிர்பார்த்தாள். கொஞ்சநேரம் ஹாலில் உட்காரந்திருந்தாள் சித்திரா. தனியாக உட்கார்ந்து தன் சுற்றாடலை இன்னொருதரம் நோட்டம் விட்டாள். ரவி அவளின் மைத்துனன். அவர்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள் என்று உறவினர்கள் எதிர்பார்க்கிறார்கள். இவளை இப்போது அவனின் பிளாட்டில் கண்டால் என்னமாதிரிப் பேசிக் கொள்வார்கள்? சித்திராவின் தகப்பன் ராமநாதன், ரவியை லண்டனுக்கு மேற்படிப்புக்கு அழைத்த காரணமே இதுதானோ என்று அவள் சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.
ரவி என்னவென்றால் உலகத்தைப் பற்றி எந்த அக்கறையு மில்லாமல் அவளைத் தன் அறையில் தங்கப் பண்ண வைத்துப் போய்விட்டான். அவனின் செய்கை மிக மிக வித்தியாசமாக இருந்தது. உலகம் மிக மிக நிசப்தமாக இருந்தது. கார்களின் ஓசையும் நின்றுவிட்டது.
மாடிப்படியில் ஏறும்போது ஏதோ தன் வாழ்க்கையில் மாற்றங்கள் இருப்பதை ஒவ்வொரு படியும் உறுத்திச் சொல்வது போலிருந்தது. இவன் எனது மைத்துனன். எனது எதிர்காலத்தில் அக்கறையுள்ளவன். அந்த மாற்றங்களைப் பற்றி அவள் கவலைப்படவில்லை.
அவன் அறை திறந்திருந்தது. ஒரு ஆணின் அறை. பிரமச்சாரியின் கட்டில்! இதுவரைக்கும் அவள் எந்த இளைஞனின் அறையிலும் இப்படிப் போகவில்லை. அறையை நோட்டம் விட்டாள். நிறைய புத்தகங்கள். நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்த உடுப்புகள். மேசையில் அவனின் குடும்பத்துப்படம். அவனின் தந்தை உயிரோடு இருந்தபோது எடுக்கப்பட்ட படம் போலும். ஐந்து குழந்தைகள். தாய் தகப்பனுடன் எடுத்த ஒரு குடும்பப் படம். மாமி கமலாவின் முகத்தில் எவ்வளவோ சந்தோசம்.
சித்திராவின் கண்களில் நீர் வந்தது. அந்த அருமையான குடும்பத்தில்தான் எத்தனை மாற்றங்கள்?
‘மாமி கமலா, ரவி, சுமதியைத் தவிர மற்ற நால்வரும் அநியாயமாக இந்த உலகத்திலிருந்து போய்விட்டார்களே!’
சங்கீதாவிற்கு அப்போது ஏழு வயது. எட்டு வருடங்களின் பின் அவளும் சிறகு முளைத்த பறவையாப் பறந்து போய் என்ன கண்டு விட்டாள்?
ரவியின் கட்டிலில் உட்கார்ந்தாள்.
பதின்நான்கு வயது சங்கீதா ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒரு போராளியாகப் போய்விட்டதை மாமி சொல்லிக் கத்தியபோது சித்திரா வீட்டிலிருந்தாள்.
அப்போது, அப்பா ராமநாதன் தன் தங்கையின் கதறலைத் தாங்க முடியாமல் தன் உணர்ச்சிகளை மறைக்க எத்தனையோ பாடுபட்டார்.
“அண்ணா எனக்கேன் இந்த விதி. புருஷனையிழந்தேன். அநியாய மான இந்தியன் ஆர்மி யாழ்ப்பாணத்திற்குப் படிக்கப்போன என் அருமை மகன் அழகேசனைக் கொன்றது. பாடசாலைக்குப் போன என் அழகு மகன் கண்ணன் இலங்கை ராணுவத்தால் கொண்டு போகப்பட்டான். இப்போது இவளும் போய்விட்டாளே” பெற்ற மனம் வெடிக்க கமலா கதறினாள்.
அப்போதும் கூடத் திலகவதி “எங்கள் சொல்லை நம்பி நாங்கள் சொன்ன யாரையும் செய்திருந்தால் இந்தக் கதி வந்திருக்காதே” என்று பல்லவி பாடினாள்.
திலகவதியின் உலகம் வித்தியாசமானது.
83ம் ஆண்டில் இலங்கைத் தமிழர்களில் பலர் இனப் படுகொலைக்குத் தப்பி உலகின் நாலா பக்கங்களுக்கும் ஓடியபோது திலகவதியும் லண்டனுக்கு வந்தாள்.
லண்டனில் வாழ முடியாது என்று மறுத்தவள் மனம் மாறி டாக்டர் ராமநாதனையும் கூட்டிக் கொண்டு வந்தாள். அவர்கள் குடும்பம் குடிபெயர டாக்டர் ராமநாதனை விட திலகவதிதான் மிகவும் அக்கறை எடுத்தாள்.
எனது மகளின் வாழ்வு இலங்கையிலிருந்தால் பாழாகிப் போகும்” தன் மகள் சித்திராவைக் காரணம் காட்டிப் பிரயாணத்தைத் தொடங்கினாள்.
சித்திரா இன்னும் தூங்கவில்லை.
தூங்க முடியவில்லை. நித்திராதேவியை எத்தனையோ நினைவுகள் விரட்டி விட்டன. இன்று தொடர்ந்து கொண்டு போகும் நிகழ்ச்சிகளால் பழைய, புதிய நினைவுகள் அலை மோதின. ஜேன் ஞாபகம் வந்தாள்.
தான் விரும்பும் மனிதனுக்காக தன்னுள் வளரும் உயிரை என்ன பண்ணுவது என்று தவிக்கும் ஜேன்.
சுமதி ஞாபகம் வந்தாள். தான் கைப்பிடித்த கணவனுக்காக வாழ்க்கையெல்லாம் கஷ்டப்படும் சுமதி.
தன்னுடைய மகள் என்பதால் தன் அபிலாஷைகளைச் சித்திராவில் திணிக்கும் திலகவதி. சித்திரா பெருமூச்சு விட்டாள்.
மெலனி ஞாபகம் வந்தாள். ரவியின் வாழ்க்கையில் அவள் பங்கு என்ன?
தகப்பனை நினைத்துக் கொண்டாள்.
டாக்டர் ராமநாதன் தன் மகளின் சந்தோசத்தில் நிறைவைக் காண்பவர். அவள் யூனிவர்சிட்டியில் படிக்கும்போது ஒரு மகளுக்குத் தேவையான புத்திமதிகள் எல்லாம் சொல்லி யனுப்பினார்.
தனது படிப்பு முடிந்ததும் தனக்குக் கல்யாணம் பேசுவார்கள் என்று தெரியும். யூனிவர்சிட்டியில் அவள் காதல் மலர்ந்தது. இளம் பெண்ணின் மனதில் இன்னொரு உலகம் உதித்தது. தன்னுடன் படித்த இந்திய மாணவன் நாராயணன் பற்றிச் சொன்னாள். அவள் சொன்னவிதத்தைத் தகப்பன் புரிந்து கொண்டார். அம்மாதலையைச் சொறிந்தாள்.
“உனது சந்தோசம் எனது சந்தோசம்.” பெரும்பாலான தமிழ்த் தகப்பன்கள் போலில்லாமல் அவர் தன் மகள் யாரைச் செய்தாலும் சந்தோசமாயிருந்தால் போதும் என்று நினைப்பவர். அதிலும் தன் மகள் ஒரு இந்தியத் தமிழனை விரும்புகிறாள் என்று தெரிந்ததும் மிகவும் சந்தோசப்பட்டார்.
இந்தியா திரும்பிய நாராயணன் தன் தாய் தகப்பன் தனக்கு கல்யாணம் நிச்சயம் செய்து விட்டார்கள் என்று எழுதியபோது அந்த ஏமாற்றம்,ஆத்திரம், அழுகை முடியச்சில காலம் எடுத்தது.
பழைய ஞாபகங்கள் இப்போது ரவியின் அறையை எட்டிப் பார்த்தது. சித்திரா லுங்கியை மாற்றிக் கொண்டாள். ரவியின் சேர்ட்டை மாட்டிக் கொண்டாள்.
கண்ணாடியிற் தன்னைப் பார்த்தாள். சிரிப்பு வந்தது. தன்னை இந்தக் கோலத்தில் தன் இனிய நண்பன் ஜோர்ஜ் சந்தித்தால் என்ன நினைப்பான் என்று யோசித்தாள். ஜோர்ஜ் பற்றி நினைத்ததும் நினைவு இனித்தது. கண்களை மூடிக் கொண்டாள். கற்பனையில் ஜோர்ஜ் சிரித்தான்.
அத்தியாயம் – 5
திலகவதிக்குத் தோசை செய்ய விருப்பம். அதுவும் பக்கத்து வீட்டு கரலைன் திலகவதியின் தோசையில் ஆசைப்படும்போது திலகவதியால் தோசை செய்யாமலிருக்க முடியவில்லை.
நேற்று ரவியும், சித்திராவும் வருவார்கள் என்று எதிர்பார்த்து அவள் செய்த சமையல் நிறைய இருப்பதால் இன்று சமைக்கத் தேவையில்லை.
டாக்டர் ராமநாதன் இரவு மிகவும் நேரம் கழித்துதான் வீட்டுக்கு வந்தார். சித்திரா நேற்று வராததை அவர் பெரிது படுத்தவில்லை என் றாலும் அது அவர் மனதைச் சாடையாக வருத்தியிருக்கும் என்று தெரியும்.
சித்திரா தனது நண்பன் ஜோர்ஜ் என்பவனை இரண்டு மூன்று தரம் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாள். வேலை விடயமாக அவன் அமெரிக்காவுக்குப் போய் விட்டதாகச் சொன்னாள்.
ஜோர்ஜைத் தன் சினேகிதன் என்று அறிமுகப்படுத்தியதால் தாயும் தகப்பனும் அதிகப்படியாகக் கேட்கவில்லை.
சித்திரா – நாராயணன் உறவு மலர்ந்தபோது அவர்கள் நாராயணன் ஒரு இலங்கைத் தமிழன் இல்லையே என்று தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் தங்கள் மகள் ஒரு ஆங்கிலேயனைக் கூட்டிக் கொண்டு திரியவில்லை என்று சந்தோசப் பட்டார்கள்.
அந்த உறவு சட்டென்று உடைந்தவுடன், அந்த உறவைப் பற்றித் தெரிந்த சொந்தக்கார இலங்கைத் தமிழர்கள் சித்திராவைப் பற்றிப் பேசிய விடயங்களையும் திலகவதி கேள்விப் பட்டிருக்கிறாள்.
சித்திராவுக்கு இப்போது இருபத்தெட்டு வயது. அவள் திருமணம் செய்து ‘செற்றில்’ ஆகவேண்டும் என்று ஒரு தாய் எதிர்பார்ப்பதில் ஒரு தவறுமில்லை என்றும் திலகவதிக்குத் தெரியும்.
உனது மகள் வெள்ளைக்காரனைச் செய்தால் என்ன செய்வாய் என்று யாரும் கேட்டால், “எனது மகள் அப்படிச் செய்வாள் என்று நம்பல்ல” என்று வெளிப்படையாகச் சொன்னாலும் மனத்துக்குள் சித்திரா- ஜோர்ஜ் பற்றிய சிந்தனை படர்ந்து கொண்டேயிருந்தது.
நேற்று நடந்த கூட்டத்தில் நடந்த சம்பாஷணைகளை நினைவு படுத்தியபடி ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையுடன் அமர்ந்திருந்தார் டாக்டர் ராமநாதன்.
பாகிஸ்தான் இந்திய யுத்த ஆயத்தங்கள் பற்றி லண்டன் ‘டைம்ஸ்’ எழுதியிருந்த கட்டுரையைப் படிக்கும்போது சித்திராவின் ‘நண்பன்’ நாராயணனை நினைத்துக் கொண்டார்.நாராயணனின் தொடர்பு அறுந்தவுடன் மகள் பட்ட துயரை அவர் அறிவார்.
அவன் தன் மகளின் வாழ்க்கையில் குறுக்கிட்டிருக்கா விட்டால் சித்திரா எப்படியிருப்பாள் என்று அவரால் யோசிக்க முடியாது. லண்ட னில் வளர்ந்தவள். சுயசிந்தனைக்கு முன்னிடம் கொடுப்பவள். தாய் தகப்பனிடம் எதையும் மறைக்காதவள். நாராயணனை ஒரு பரந்த மனமுள்ள, கௌரவமான தமிழனாக நினைத்தவள். சமுதாய சிந்தனை யுள்ளவள். “டாக்டராக வரலாமே லாயராக வரலாமே,” என்ற பட்டியலை திலகவதி தொடங்கிய போது “என்னை நானாக – சித்திராவாக இருக்க விடுங்கள்,” என்று சொன்னவள். அவளுக்கு அப்போது வயது பதினாறு. நேற்றைய தத்துவங்களிலுள்ள பெண்ணடிமைத்தனத்தைக் கேள்வி கேட்கும் இன்றைய பெண் அவள். பதினாறு வயதுப் பெண்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களாகவே நிச்சயிப்பார்கள் என்று தெரிந்து கொண்டபோது திலகவதிக்குத் தன் மகளின் எதிர்காலம் பற்றி எத்தனை யோ யோசனைகள் வந்தன.
“இங்கிலாந்தில் குழந்தைகளை வளர்த்துவிட்டு இலங்கையில் வாழ்வதுபோல் வாழ எதிர்பார்க்கக் கூடாது.” டாக்டர் ராமநாதன் மகள் பக்கம் சேர்ந்து சொன்னதையும் திலகவதியால் கிரகிக்க முடியவில்லை.
ஒரே ஒரு மகள். உள்ள நகை, நட்டு,சீதனம் எல்லா வற்றையும் மகளுக்குக் கொடுத்து ஆசைப்பட நினைத்த திலகவதிக்குச் சித்திராவின் நகையில் ஆசையில்லாத் தன்மை இன்னும் பெருமூச்சுக்களைத் தந்தன.
நாராயணனை அவள் விரும்பியபோது எப்படியும் என்மகள் மற்ற தமிழ்ப் பெண்களைப் போல் வாழ்வாள் என்று மலர்ந்த நம்பிக்கை, நாராயணனின் தொடர்பு அறுந்தபோது அவளுக்கு இன்னும் தலை யிடியை உண்டாக்கியது.
ஏன் நாராயணன் ஏமாற்றினான்?
இந்தக் கேள்வியை அவள் மகளிடம் கேட்கவில்லை. கேட்கத் தயாராகவுமில்லை.
ஒரு கொஞ்ச காலம் துயரமாயிருந்த சித்திராதன் பணிகளில் ஈடு பட்டுப் பழைய வாழ்க்கையை மறந்துவிட்டபோது டாக்டர் ராமநாதன் சொன்னார், “என் மகள் நேற்றைய நினைவுகளில் தன்னையழித்துக் கொள்ளப்போவதில்லை. நாளைய எதிர்பார்ப்புகள் நன்மையாயிருக்கும் என்பதை நம்புகிறாள்,” என்றார். நாளைய மனிதர்களில் ஒருத்தியாய் சித்திராவை அவர் எதிர்பார்த்தார். திலகவதியின் பிரார்த்தனை தன் ஒரே ஒரு மகளின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்பதே.
“இவளுக்காகத்தானே நாட்டை விட்டு ஓடிவந்தோம். இப்போது இவளே தன் வாழ்க்கையை நிர்ணயிக்கிறேன் என்கிறாள். தாய் தகப்பன் சொல்லைக் கேட்டுக் குழந்தைகள் வாழ்ந்த காலம் இனி வராதா?”
திலகவதியின் இப்படியான கேள்விகள் ஒவ்வொரு தாயும் கேட்கும் சாதாரண கேள்விகள். ராமநாதன் தன் மனைவியின் பழங்கால வழக்கமான கேள்வியைக் கேட்டுச் சிரித்தார். காதலிப்பதும் கைவிட்டுச் செல்வதும் அவள் குடும்பத்தில் கேள்விப்பட்டிராத விடயங்கள். கொழும்பில் கறுலாக்காட்டைச் சேர்ந்த தனவந்தரின் மகள் அவள். பெரிய இடத்தில் படித்த மாப்பிள்ளையை விலை பேசி முடிப்பதில் ஒரு பிரச்சினையும் படாத குடும்பம் அவளுடையது. முப்பது வருடங்களில் உலகம் எப்படி மாறிவிட்டது என்று யோசித்தாள் திலகவதி.
தோசை சுட்டப்படி தன் வாழ்க்கையை எடை போட்டாள். இலங் கையில் இனப்பிரச்சினை வராமலிருந்தால் சித்திராவின் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்ற யோசித்தாள்.
தன் மகளை வஞ்சித்த நாராயணனில் கோபம் வந்தது. ஆத்திரத்தில் சாபம் போட்டுத் தீர்த்தாள். அழுகை வந்தது. நேற்று சித்திரா வரவில்லை. ஜோர்ஜ் அமெரிக்கா போய்விட்டான். அவனை இவள் விரும்புகிறாளா? ராமநாதன் எட்டிப் பார்த்தார்.
தோசைக்குச் சட்னி செய்ய வெங்காயம் வெட்டியதால் அவள் கண்கள் கலங்கியிருக்கிறதா அல்லது ஏதோ யோசனையில் கண்கள் கலங்குகிறதா என்று அவர் சிந்திக்கத் தேவையில்லை. சித்திராவுக்காகத் திலகவதி அழுகிறாள் என்று அவருக்குத் தெரியும்.
வெளியில் கார்வந்து நிற்கும் சப்தம் கேட்டது. வந்தவர்கள் கதவைத் தட்டினார்கள்.
திலகவதி இன்னும் சமையலறையில். ராமநாதன் வந்து கதவைத் திறந்தார்.
சித்திராவையும் ரவீந்திரனையும் ஒன்றாகக் கண்ட அதிர்ச்சியைச் சட்டென்று மறைத்துக் கொண்டார். திலகவதி தன் மகளைத் தன் மருமகன் ரவியுடன் ஒரேயடியாகக் கண்டால் என்ன சொல்வாள்? ‘வட் ஏ சேர்பிரைஸ்?” என்றார். குரலில் மகிழ்ச்சி. அவரின் டேப்பிலிருந்து அலை பாயுதே கண்ணாவை ஜேசுதாஸ் பாடிக் கொண்டிருந்தார். “அம்மா எங்கே” என்ற சித்திராவின் குரல் கேட்டு திலகவதி வெளியே வந்தாள்.
ரவியையும் சித்திராவையும் ஒரேயடியாகக் கண்டு ராமநாதன் திடுக்கிட்டது போல் அவளும் திடுக்கிட்டாள்.
இருவரையும் நேற்று எதிர்பார்த்தாள். அவர்கள் வரவில்லை. இன்று வந்தார்கள் ஒன்றாக. அழுவதா சிரிப்பதா? திலகவதி திகைத்துப் போனாள். அடுப்பில் தோசை எரிந்து மணத்தது. அலைபாயுதே இசையுடன் அவள் செய்கை தாளம் போட்டது. திலகா குழந்தைபோல் துள்ளி ஓடினாள். அவளின் மகிழ்ச்சி அவள் நடத்தையில் பிரதிபலித்தது. “நேற்று எதிர்பார்த்தோம், ” ராமநாதன் சொன்னார்.
இரண்டு மூன்று மாதமாக ரவியை அவர் காணவில்லை. அவன் மிகவும் சோர்ந்து போயிருந்தான். மேற்படிப்புக்கு வந்தவன் நிறையப் படிக்கிறான் போலும்.
“நேற்று சுமதி வீட்டுக்குப் போயிருந்தோம்” சித்திரா சொன்னாள். “இரவு சுமதி வீட்டில் தங்கினாயா” தாயின் விசாரிப்பு இது. “இல்லை ரவியின் வீட்டில் நின்றேன்” சித்திரா தாயின் முகத்தை உற்றுப் பார்த்தபடி சொன்னாள்.
இன்னுமொரு அதிர்ச்சி.
தாயும் தகப்பனும் ஒருத்தரை ஒருத்தர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர். ரவிக்கு அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்ததும் புரியாததுமாக சித்திராவைப் பார்த்தான்.
அவர்களைப் புரிந்துகொண்ட சித்திரா ரவியைக் குறும்புடன் பார்த்தாள்.
அவள் ரவி வீட்டில் தங்கி நின்றிருந்த விஷயத்தைத் தாய் தகப்பனுக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. வேண்டு மென்றே சொல்லி அவர்களின் அதிர்ச்சியைப் பார்த்து அவள் மனம் மகிழ்கிறாள் என்று தெரிந்தது.
ரவியின் மனம் இன்னும் சுமதியின் வாழ்க்கையைச் சுற்றிக் கொண்டிருந்ததால் அவளின் குறும்புத்தனத்தை ரசிக்கும் ‘மூட்டில்’ இல்லை. மாமாவிடம் சுமதியின் நிலை பற்றிப் பேசலாமா என்ற யோசனை அவன் மனத்தை வாட்டியது.
“தோசை சுடச் சுடச் சாப்பிட்டால் ருசியாயிருக்கும்.” திலகா உற்சாகத்துடன் சொன்னாள்.
சித்திரா கொல் என்று சிரித்தாள். நீண்ட நேரம் சிரித்தாள். “ஏன் சிரிக்கிறாய்?” திலகா புரியாமல் விழித்தாள்.
“சூடாகச் சாப்பிட்டால் தோசை ருசியாயிருக்கும் என்று எனது சின்ன வயசில இருந்து சொல்லி வருகிறாய் அம்மா. இன்னும் எத்தனை வருடங்களுக்குத் தோசை பற்றிச் சொல்வாய்”. திலகாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது. இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது டெலிபோன் கால் வந்தது.
சுமதி பேசினாள். தன் மகள் இரவெல்லாம் வாந்தி எடுத்ததாகவும் மாமாவிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்றும் சொன்னாள்.
“உன் தம்பியும் இஞ்சதான் இருக்கார்.”
ரவிசுமதியுடன் பேசினான். குழந்தையின் நிலை பற்றிக் கேட்டான். என்ன செய்ய வேண்டும் என்று சொன்னான். தேவையானால் போன் பண்ணச் சொன்னான்.
“ஊரில் அம்மா எப்படி?”
மாமா தனது தங்கை கமலா பற்றி – ரவியின் தாய் கமலா பற்றிக் கேட்டார்.
“அரசியல் பிரச்சினைகள் இன்னும் மக்கள் வாழ்க்கையைக் குழப்பிக் கொண்டிருக்கிறது…. அம்மாவுக்குத் துணையாக இருந்த பையனை இயக்கம் கூட்டிக் கொண்டு போய்விட்டதாம்.” இலங்கை அரசியலில் எத்தனையோகோணங்களில் அடிபட்டவன் அவன், அவன் குரலில் ஆத்திரம். மாமா மௌனமாக இருந்தார். பின்னர் சொன்னார் “புரிந்துணர்ந்த சமாதான நிலை இருக்கும்போதும் போருக்கு ஆட்கள் சேர்ப்பது நடக்கிறதா?”
“மாமா, இலங்கை அரசியல் பற்றிநன்றாகத் தெரிந்த நீங்களே இந்தச் ‘சமாதானம்’ என்ற பேச்சை நம்புவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியாதுள்ளது” ரவியின் குரலில் தொனித்த அவநம்பிக்கையை அவர் உணர்ந்தார்.”சமாதானம் வராது என்று நினைக்கிறாயா?” ராமநாதனின் குரலில் ஆர்வம். மருமகனின் பேச்சில் உண்மை தேடினார்.”மாமா இலங்கைத் தமிழர்களை ஒடுக்குவதில் எப்போதும் முன்நின்றவர்கள் யு.என்.பி. கட்சிக்காரர்கள். தமிழருக்கெதிராக ஜெயவர்த்தனா கண்டி யாத்திரை செய்து சிங்கள மக்களின் இனவெறியைத் தூண்டியது ஞாபகமில்லையா?
போர் என்றால் போர் என்று, 83 ம் ஆண்டு சிங்கள அரசு இயந் திரத்தின் எல்லாச் சக்திகளையும் அப்பாவித் தமிழர்களுக் கெதிராகப் பாவித்தவர்கள் யு.என்.பி.காரர். விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டும் என்று கோஷம் போட்டவர்கள் இவர்கள். இவர்களை நம்பி சமாதானத்தை எதிர்பார்ப்பதா?”ரவியின் பேச்சில் அனுபவம் நெருடிய துன்பம்.
மாமா பெருமூச்சு விட்டார்.
“இப்போது எந்த அரசாங்கம் வந்தாலும் விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சைத் தொடங்கி நாட்டில் அமைதியை நிலைநாட்டு வோம், பொருளாதார திட்டங்களை முன் எடுப்போம் என்றுதான் சொல்கின்றன. சந்திரிகாவும் அதே வார்த்தைகளை வைத்துத்தான் பதவிக்கு வந்தார். ரணில் விக்கிரமசிங்காவும் அதே சுலோகங்களைத்தான் பாவிக்கிறார், “சிங்களப் பொதுமக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் இது”
“எத்தன காலந்தான் ஏமாற்றுவார்கள்” மாமா படித்தவர். ஆனாலும் அவர் குரல் பரிதாபமாக இருந்தது.
“மாமா உலகத்தில் எந்தப் போராட்டமும் தொடர்ந்து நடந்ததில்லை. இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் எத்தனையோ முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. இது இப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினையாக மட்டுமல்லாமல் உலகப் பிரச்சினையாகக்கருதப்படுகிறது.”
“அப்படியிருக்கத்தானே வேணும். எழுபத்தியாறு நாடுகளில் தமிழர் நாடோடிகளாக இருக்கிறார்கள். ஆயினும் மேற்கத்திய நாடுகள் அகதிகளை ஆதரிப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள். அப்படியிருக்கும் போது இது ஒரு உலகப் பிரச்சினையாக மாறியதில் என்ன சந்தேகம்’ மாமாரவியிடம் கேட்டார்.
“பொலிட்டிக்ஸ் கிடக்கட்டும், தோசை சாப்பிடுங்கோ” திலகவதி தன் சமையல் உலகத்திற்கு மாமாவையும் மருமகனையும் இழுத்தாள்.
சித்திராவை ரவியுடன் சந்தித்த சந்தோசம் திலகவதியின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
கேம்பிரிட்ஜ் நகரம் மழையில் நனைந்து சோர்ந்து போய்க் கிடந்தது.
ஜேனின் முகத்தில் கலவரம். சித்திரா தன் பக்கத்து வீட்டுச் சினேகிதியைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
“ஆண்களுக்காக ஏன் எங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது?” ஜேனின் குரல் அவள் முகத்தில் தேங்கியிருந்த சோகம் போற் தொனித்தது.
“பெண்களின்முட்டாள்தனம், “சித்திராஜேனுக்குப் பிடித்த வடை செய்து கொண்டிருந்தாள்.
கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டம். ஜேன் தனது கர்ப்பம் பற்றி டேவிட்டிடம் எப்படிச் சொல்வது என்று தவித்துக் கொண்டிருக்கிறாள்.
ஆனிமாதக் கடைசிப் பகுதியில் ஆங்கிலேயர்கள் வருடாந்தரம் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மனம் பதித்திருந்தார்கள். டேவிட்தனது அரசியல் விடயங்களில் மும்முரமாக இருந்தான். இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கு மிடையில் ஒரு சமரசத்தை யுண்டாக்க பிரிட்டிஷ், அமெரிக்க ராஜதந்திரிகள் அடிக்கடி பிரயாணத்தை மேற்கொண்டிருந்தனர்.
டேவிட் மிகவும் அரசியல் அவதானி. ஜேன் போலவே அவனும் அகில உலகப் பிரச்சினைகளில் தன்னையீடுபடுத்திக் கொண்டவன். கேம்பிரிட்ஜ் நகரப் பத்திரிகை ஒன்றில் நிருபராக இருக்கிறான்.
பாகிஸ்தானும் இந்தியாவும் போரைத் தடுத்துக் கொள்ள வேண்டும் என்று போதனை செய்துகொண்டே பிரிட்டிஷ் அரசாங்கம் அதிவிசேட மானபோர் ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பது பற்றி டேவிட் எரிச்சல் பட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் தன் கர்ப்பம் பற்றிய விடயத்தை எடுக்கத் தயங்கினாள் ஜேன். ஜேன் சித்திராவுடன் பேசிக் கொண்டிருக் கும்போது டேவிட்வந்து சேர்ந்தான். ஜேனை அணைத்து முத்தமிட்டப்படி
“ஹலோசித்திரா” என்றான்.
அவர்களின் அந்நியோன்னியம் சித்திராவின் மனதைத் தொட்டது. இருவரும் சில வருடங்களாக ஒன்றாக வாழ்கிறார்கள். தங்களுக்குக் குழந்தை பிறக்கத் தேவையில்லை என்று முடிவு செய்து கொண்டவர்கள்.
இப்போது ஜேன் கர்ப்பமாயிருப்பது அவனுக்குத் தெரிந்தால் அவனது நடவடிக்கைகள் என்னவாயிருக்கும் என்று தெரியாததால் ஜேன் தனது யோசனைகளையும் துன்பங் களையும் சித்திராவுடன் பகிர்ந்து கொள்கிறாள். மனதில் ஜேனின் கர்ப்பம் பல பிரச்சினைகளைக் காட்டியது. செயற்கை முறைப்படி பிரசவத்தை யுண்டாக்கியபோது ஏற்பட்ட தவறுதலான மாற்றத்தால் ஆங்கிலேயத் தம்பதியர் இரட்டை யான இரு கறுப்புப் பிள்ளைகளைப் பெற்றது பற்றி பத்திரிகை, ரேடியோ எல்லாம் பிரசுரித்ததைப் பற்றிடெலிவிஷனில் ஒருத்தர் விமர்சனம் செய்து கொண்டிருந்தார்.
பிரசவம் பற்றிய நிகழ்ச்சி என்றபடியால் ஜேன் தர்ம சங்கடத்துடன் சித்திராவைப் பார்த்தாள், டேவிட் சித்திராவின் உளுந்து வடையை ருசித்துக் கொண்டிருந்தான்.
“இந்தியச் சமையல்கள் பெண்களைச் சமையலறைகளில் சிறைப் படுத்தி வைக்கின்றன.” டேவிட்சித்திராவைப் பார்த்துச் சொன்னான்.
“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”
“எங்களுக்குப் பிடித்த சான்ட்டிச்சை செய்து சாப்பிட ஒரு சிலநிமிடம் எடுக்கும். வடை செய்ய மணித்தியாலங்கள் எடுக்கிறாயே.” டேவிட்டின் முகம் வடையில் சேர்த்திருந்த உறைப்பால் சிவந்தது. அவனுக்கு உறைப்புச்சாப்பாடு பிடிக்கும். “பிடித்தவர்களுக்குச் சமையல் செய்வதில் எனக்கு ஒன்றும் கஷ்டம் கிடையாது,” சித்திரா சிரித்தாள். “சமையல் செய்யும் பெண்கள் அடிமைகள் அல்ல, சமையல் ஒரு கலை,” அவள் தொடர்ந்தாள். “ஜோர்ஜ் கொடுத்து வைத்தவன்.” டேவிட் கண் சிமிட்டி யபடி சொன்னான். ஜோர்ஜ் பெயரைக் கேட்டதும் சித்திராவின் கன்னம் சிவந்தது. முகத்தைத் திருப்பிக் கொண்டாள். ஜேன், டேவிட் இருவரின் மூலந்தான் சித்திரா ஜோர்ஜை சந்தித்தாள். டேவிட்டின் நண்பன் ஜோர்ஜ். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமொன்றில் கொம்பியூட்டர் புரோக்கிராமராக வேலை செய்கிறான். வேலை விடயமாகச் சில மாதங்கள் அமெரிக்கா போய் விட்டான். ஒரு சில மாதங்கள் அவனைக் காணாது அவனை பத்து இருபது வருடங்கள் பிரிந்தது போலிருக்கிறது. ”ஜோர்ஜ் எப்போ வருகிறான்?”சித்திராவின் முகத்தைப் பார்த்தபடி டேவிட் கேட்டான்.
“தெரியாது…இன்னும் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்க வேண்டி வரும் என்று சொன்னான்”. சித்திரா எப்படி மறைத்தாலும் ஜோர்ஜைப் பிரிந்த தாபம் கண்களில் நிழல் காட்டியது. “ஜோர்ஜைப் பிரிந்திருப்பதில் கஷ்டப்படுகிறாய் என்று தெரிகிறது.” ஜேன்சித்திராவை உற்றுப் பார்த்தபடி சொன்னாள்.
ஜோர்ஜின் பிரிவு அவளை எப்படி வாட்டுகிறது என்று அப்பட்ட மாகத் தெரிந்தது. சித்திரா எப்போதும் ஜோர்ஜைத் தனது சினேகிதன் என்று சொல்வாளே தவிர காதலன் என்று சொன்னது கிடையாது. காதல் பற்றிய தத்துவங்களில் அவள் அக்கறைப்பட வில்லை. சித்திரா பதில் சொல்ல முதல் ஜேனுக்கு வாந்தி வந்துவிட்டது.
ஓடிப்போய் பெரிய சத்தத்துடன் வாந்தி எடுத்தாள். டேவிட்பதறிப் போய்விட்டான். “ஜேன் என்ன நடந்தது. ஏதும் சுகமில்லையா?” டேவிட் ஜேனைத் தாங்கிக் கொண்டான்.
வாந்தி எடுத்த தொந்தரவில் ஜேன் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள். முகம் வெளுத்திருந்தது. மயங்கிவிடுவாள் போலிருந்தது.டேவிட்டின் அணைப்பில் துவண்டு கிடந்தாள்,
“ஜேன் டார்லிங் என்ன நடந்தது?”
டேவிட்பதறினான். இருவரையும் அந்த நிலையில் பார்க்கும்போது ஒருத்தரில் ஒருத்தர் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்று புரிந்தது. சித்திராஜேனைப் பார்த்தாள். இப்போதாவது உன் விடயத்தை டேவிட்டிடம் சொல்லப் போகிறாயா இல்லையா என்ற பார்வை.
ஜேனுக்கு இப்போது வராத தைரியம் இனி ஒருநாளும் வராது. சித்திரா தனக்குள் முணுமுணுத்தாள். டேவிட் ஜேனை இறுக அணைத்துக் கொண்டான். தலையைத் தடவி விட்டான். முத்தமிட்டான். ஜேன் அழத் தொடங்கிவிட்டாள். சொல்ல வந்த விடயத்தை எப்படிச் சொல்வது என்று புரியாத அழுகையது.
“டேவிட் ….” ஜேன் விசும்பினாள்.
என்ன சொல்லப் போகிறாய் என்பதுபோல் டேவிட் நிமிர்ந்து பார்த்தான். சொல்லித் தொலையேன் என்பதுபோல் சித்திரா ஜேனைப் பார்த்தாள்.
“டேவிட் …. டேவிட்” ஜேன் இன்னும் தயங்கினாள். ‘சித்திரா, ஜேன் ஏன் இப்படியிருக்கிறாள்?”
டேவிட் அழாக்குறையாக் கேட்டான். சித்திராபொறுமை கடந்தாள்.
”குழந்தை பிறக்கும் தாய் வேறு எப்படி இருப்பாளாம்”.
சித்திரா தனது வார்த்தைகளை ஆறுதலாகத் தவழ விட்டாள்.
“வாட்” டேவிட் பேயைக் கண்டு அலறியதுபோல் அலறினான். சித்திராவுக்குச் சிரிப்பு வந்தது.
“டேவிட், உங்களுக்கு அழகான ஒரு பாப்பா பிறக்கப் போகிறது.” சித்திரா நிதானமாகச் சொன்னாள்.
ஜேன் இன்னும் வாய் திறக்கவில்லை.
டேவிட் மெளனமாக ஜேனைப் பார்த்தான். சித்திரா சொல்வது உண்மைதானா என்ற கேள்வி நிறைந்த பார்வையது. “என்னை மன்னித்துவிடு” ஜேன் விசும்பினாள். இப்படிச் சொன்ன ஜேனைப் பார்த்து எரிச்சல் பட்டாள் சித்திரா. சித்திராவுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.,
ஏழ்மை காரணமாக இந்தியாவில் எத்தனையோ பெண் குழந்தை களைக் கொன்று தொலைக்கிறார்கள். வரதட்சணை பெரிய பிரச்சினை அங்கு. இங்கு என்ன பிரச்சினை? உலகத்திலேயே பெரிய பணக்கார நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் பிள்ளை பெற ஏன் இத்தனை யோசனை?
“அப்படி எல்லாம் சொல்லாதே ஜேன்.”
வாய்தான் அப்படிச் சொல்லியதே தவிர டேவிட்டின் மனம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது என்பது அவன் பார்வையில் தெரிந்தது.திடீரென்று அவன் தான் ஒரு தந்தையாகி விட்டான் என்ற அதிர்ச்சியில் பேதலித்து விட்டான். இருவருக்கும் கிட்டத்தட்ட சித்திரா வின் வயது. நல்ல உத்தியோகத்திலிருக்கிறார்கள். ஏன் பிள்ளை பெற்றெடுக்கத் தயங்குகிறார்கள் என்று சித்திராவுக்குக் குழப்பமாக இருந்தது.டேவிட்டைப் பார்க்க ஒருவிதத்தில் ஆச்சரியமாகவும் ஒரு விதத்தில் ஆத்திரமாகவு மிருந்தது.
சமூக சேவைகளுக்காகத் தாங்கள் பிள்ளைகள் பெற்றுக் கொள்வ தில்லை என்று சொன்னது சரி. ஆனால் இப்போது தற்செயலாகப் பிள்ளை வந்துவிட்டது. டேவிட் என்ன செய்யப் போகிறான்?
உலகத்தில் பெரும்பாலான ஆண்களே சுயநலவாதிகளா? செந்தில், டேவிட், நாராயணன் எல்லோருமே சுயநலவாதிகளா?
அத்தியாயம் – 6
ரவிக்கு சுமதியின் கணவன் செந்திலைப் பார்க்கப் பிடிக்கா விட்டாலும் சுமதியின் வாழ்க்கையைச் சீராக்க செந்திலைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை. செந்திலைப் போய்ப் பார்ப்பதை ஒத்திப் போட்டுக் கொண்டு வருகிறான்ரவி.
வாழ்க்கையில் மிகவும் சோர்ந்துபோன உணர்வு வந்தது. யாரிட மாவது மனம் விட்டுப் பேசவேண்டும் போலிருந்தது.
மெலனி இன்னும் சில வாரங்களில் வார்ட்டை விட்டுப் போகிறாள் என்பது மிகவும் துக்ககரமான விஷயமாகப்பட்டது. லண்டனில் அவளைத்தவிர யாரும் நெருங்கியவர்களாகத் தெரியவில்லை. இலங்கை யிலிருந்து வந்தபோது மிகவும் உதவியாயிருந்தாள். அவளின் இடத்திற்கு எந்த மேலதிகாரி வருவாரோ தெரியாது.
போதாக்குறைக்கு மாமா இவனிடம் அடிக்கடி போன் பண்ணி இலங்கைக்கு ஏன் திரும்பிப் போக வேண்டும் என்று கேட்கிறார்.
அதன் உள்ளர்த்தம் அவனுக்குத் தெரியும். சித்திராவையும் ரவியையும் ஒன்றாகப் பார்த்த நாளிலிருந்து மாமாவின் பேச்சிலும் போக்கிலும் மிகவும் வித்தியாசம்.
அப்படி அவர் எதிர்பார்த்தால் என்ன சொல்வது? என்ன செய்வது? அவனை லண்டனுக்கு வரவழைத்ததன் உள் அர்த்தமே இதுதானா? அவர் அவனின் முன்னேற்றத்தில் மிகவும் அக்கறையானவர். அம்மா பாவம். ஊரில் தனியாக வாழ்கிறாள். ஐந்து குழந்தைகளைப் பெற்றவள் இன்று யாருமற்ற அனாதையாக இருக்கிறாள். இவன் சிலவேளை லண்டனில் தங்கிவிடுவானோ என்ற பயம் அவளுக்குண்டு.
“லண்டனுக்குப் போக எத்தனையோ லெட்சங்கள் செலவழித்து எப்படியெல்லாமோ போகிறார்கள்…. நீ மேற்படிப்புக்காப் போகிறாய். டாக்டர்மார்களுக்கு அங்கே நல்ல எதிர்காலமிருக்கும். நின்று விடப் போகிறாயா?”இப்படி அம்மா கேட்டபோது, நின்றுவிடாதே மகனே என்று கெஞ்சுவது போலிருந்தது.
சுமதி கல்யாணமாகி லண்டன் போன கால கட்டத்தில் “அம்மா சுமதிக்கும் வசதியாயிருக்கும். உங்களுக்கும் யாருமில்லை..நான் கொழும்பில் இருக்கிறேன். நீங்கள் லண்டன் போனால் என்ன”
ரவி இப்படிக் கேட்டபோது அவள் இவனை விரக்தியாகப் பார்த் தாள். பெருமூச்சு விட்டாள். வாழ்க்கையில் அடிபட்ட அவள் உடலும் உள்ளமும் மிகப் பெலவீனமானது. இவனைக் கடந்துபோய் வீட்டு வராந்தாவில் நின்று உலகத்தைப் பார்த்தாள்.
மட்டக்களப்பு வாவியை அண்டியது அவர்களின் வீடு. சிதம்பரம் மாஸ்டர் மிகவும் கஷ்டப்பட்டு குருவி சேர்ப்பது போல் பணம் சேகரித்துக் கட்டிய வீடு அது. மெல்லிய நீரலைகள் தென்னை மரத்தின் அடிவாரத்தில் கொஞ்சிப் போகும். வீட்டோடு ஒட்டிய வாவியில் காலையில் சூரிய கதிர்கள் ஜாலம் காட்டும். நீரையடர்ந்திருந்த பற்றைகளில் பறவைகள் கீச்சிடும். சிலவேளை நீர்ப் பாம்பு நெளிந்து இவர்கள் வாசலைத் தாண்டிப் போகும். கவிஞனான சிதம்பரத்தின் கற்பனையில் எழுந்த அழகிய வீடு அது.
மகனுக்கு மறுமொழி சொல்லாமல் வீட்டுக்கு முன்னால் நின்று உலகத்தை வெறித்துப் பார்த்தாள் கமலம்.
பின்னர் நடந்துபோய் தென்றலுக்குத் தாளம் போடும் வெள்ளை ரோஜா மலரைத் தடவினாள். “உனது அப்பா நட்ட பூங்கண்டு இது, அவள் கண்களில் வெள்ளம். குரலில் அடைப்பு, ரோசாப் பூக்களைத் தடவி விட்டாள்.
“இந்த வீட்டில் ஒவ்வொரு அங்குலமும் அவர் காலடி பட்டது. ஒவ்வொரு கல்லிலும் அவர் உழைப்பு உறைந்திருக்கிறது. இந்த மரங்கள் காய்த்துக் கொட்டுகிறது. அதை வைத்த மனிதனைக் கடவுள் எடுத்துவிட்டான்.
இதோ பார் இந்த மல்லிகைச் செடியை, இதை வைத்தவள் உனது தங்கை சங்கீதர். வாழவேண்டிய வயதில் தமிழ் மொழிக்காக, தமிழர் களுக்காக, தமிழ் மண்ணுக்காகத் தன்னைத் தியாகம் செய்தவள் அவள்”.
கமலா பேசுவதை நிறுத்தினாள். அடுத்ததாக வீட்டின் ஒரு மூலை அறையிற் போட்டு வைத்திருக்கும் அழகேசனின் பைசிக்களைப் பார்த்து அழுவாள் என்று தெரியும். யாழ்ப்பாணத்திற்குப் படிக்கப் போக முதல், தனது பைசிக்களை இந்த அறையில் பத்திரமாகப் பூட்டி வைத்தான் அழ கேசன். பூட்டி வைத்த பொருள் அப்படியே இருக்கிறது. உரியவனை இந்திய ராணுவம் பலி வாங்கிக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்ட தமிழ் உயிர்களில் அவனின் உயிரும் ஒன்று. மகன் கண்ணனின் அறைக்கு அவள் போவதில்லை. என்று கண்ணன் தன் கதவைச் சாத்திவிட்டு கல்லூரிக்குப் போனானோ அப்படியே அந்த அறையிருக்கிறது. அவன் வருவானா? அவள் பைத்தியம் போல் சிலவேளை கேள்வி கேட்பாள்.
தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்ட எத்தனையோ இளைஞர் களில் கண்ணனும் ஒருவன்.
தொலைந்துபோன, இலங்கைத் தமிழ் மனிதர்களில் கண்ணனும் ஒருத்தன். என்ன ஆனாணோ? அவன் உடல் எங்கே என்றுகூட யாருக்கும் தெரியாது. இலங்கை ராணுவத்தின் அதிரடியின் பிரதி பலிப்பு அது.
“மகனே ரவி இலங்கையில் ஒரு தமிழ்த் தாயாகப் பிறந்த நான் எத்தனையோ இழந்துவிட்டன். லண்டனுக்குப் போய் என்னத்தைக் காணப் போறன்.” அவள் குரல் பரிதாபமாக ஒலித்தது.
“நிம்மதியான வாழ்வு.” ரவி தாயில் பரிதாபப்பட்டுச் சொன்னான். எப்போதும் பழைய நிகழ்ச்சிகளை நினைத்து அழுவதற்கு முடிவு தேவையில்லையா?
“என் குழந்தைகள் மூவர், கணவர் என்று என் வாழ்க்கையில் இழக்க முடியாததையெல்லாம் இழந்து விட்டன். இறக்கும் வரைக்கும் எனக்கு நிம்மதியிருக்கும் என்று நினைக்கிறாயா?” தாய் சத்தியத்தின் பிரதிநிதியாய் நின்று உண்மை மறுமொழி தேடினாள்.
“சுமதிக்குத் துணையாயிருக்கலாம். அவளின் குழந்தைகளின் அன்பில் துன்பங்களை மறக்கலாமில்லையா” ரவியின் விவாதம் இது.
“மகனே எனது சோகம் அவர்களைப் பாதிக்காமலிருக்கட்டும். சுமதி கெட்டிக்காரி. சமாளித்துக் கொள்வாள், எங்கள் திருப்திக்காக மற்றவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடக் கூடாது.”
அம்மா எத்தனை நம்பிக்கையுடன் சொன்னாள்? சுமதி தன் வாழ்க்கைத் துயரைச் சமாளிக்கத் தெரியாமல் தவிப்பதை அம்மா புரிந்து கொள்வாளா?
டிப்பார்ட்மெண்ட் வேலையெல்லாம் முடிந்தபின் டாக்டர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் இருந்தான் ரவி. இவனுடன் வேலை செய்யும் சக டாக்டர்கள் பெரும்பாலும் போய்விட்டார்கள். அவர்கள் இருந்தால் கௌரவத்திற்காக எதையோ பேசிக் கொண்டிருப்பார்கள்.
“மெலனிக்காகக் காத்திருக்கிறாயா”
நேர்ஸ் மார்க்கரெட் கேட்டாள். அவள் கண்களில் மிக மிகக் கூர்மையான தேடல் உணர்வு பளிச்சிட்டது. நேர்ஸ் மார்க்கரெட்நடுத்தர வயது மாது. மேற்கிந்திய நாட்டைச் சேர்ந்தவள். இந்த சைக்கியாட்ரிஸ்ட் வார்ட்டில் இருபது வருடங்களுக்கு மேலாக வேலை செய்கிறாள். பருத்த உடலும் பாசமான உணர்வும் கொண்டவள். இளம் டாக்டர்களைத் தன்குழந்தைகள் போல் நடத்துவாள். ரவியின் முன்னால் அமர்ந்தாள். டாக்டர்ஸ் ஓய்வெடுக்கும் இடத்தில் நேர்ஸஸ் பெரும்பாலும் வரமாட் டார்கள். ஆனால் மார்க்கரெட் வித்தியாசம்.
“மெலனி போய்விட்டால் என்ன பண்ணப் போகிறாய்?” மார்க்கரெட்இடுப்பில் கைவைத்தபடி கேட்டாள். அவளின் பருத்த உடம்பு மலை போல் அவன் முன்னின்றது. அவள் கேட்கும் கேள்வி களும் கேள்வி கேட்கும் தோரணையும் சுவாரஸ்யமாக இருந்தது. ரவி புன்னகைத்தான். அவள் வந்து தலையைத் தடவி விட்டாள்.
“ஏன் நீ அவளைக் கல்யாணம் செய்யக்கூடாது?”
மார்க்கரெட் ஒரு வழக்கறிஞர் மாதிரிக் கேட்டாள்.
ரவி இப்போது புன்னகைக்கவில்லை. பதறிப் போய் விட்டான்.
“மார்க்கரெட் என்ன பேசுகிறாய் என்று யோசித்துப் பேசு. இதெல்லாம் விளையாட்டுப் பேச்சல்ல”.
அவன் குரலிலிருந்த கடுமை மார்க்கரெட்டின் முகத்தில் இருந்த சந்தோசத்தை வாரியெடுத்துவிட்டது.
”உனக்கு இப்படிக் கோபம் வருமென்று எனக்குத் தெரியாது”, மனக்குறையுடன் சொன்னாள் மார்க்கரெட்.
“சாரி மார்க்கரெட், மெலனிக்கு இது கேட்டால் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்?”
மார்க்கரெட்பதில் சொல்லாமல் ரவியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள். தாய்மையுடன்கன்னத்தில் முத்தமிட்டாள்.
“இனவாதம் பிடித்த இந்த நாட்டில் மெலனி போன்றவர்கள் தேவதைகள்.” மார்க்கரெட்டின் குரல் பாசத்தால் கரைந்தது.
ரவி மறுமொழி சொல்லவில்லை.
“உன்னால்தான் அவள் இந்த இடத்தை விட்டுப் போகிறாள் தெரியுமா உனக்கு?” மார்க்கரெட்டின் கேள்வியிது.
மார்க்கரெட்டின் கண்கள் அவனது முகபாவத்தை உற்று நோக் கியது. அவள் கொண்டு வைத்திருந்த கோப்பிபோல் அவன் மனமும் சூடாக இருந்தது.
இலங்கையிலிருந்து எத்தனையோ கொடுமையான அனுபவங் களுக்கு உள்ளானவன் அவன். லண்டனுக்கு வந்து யாரையும் ஊரை விட்டுப் போகும்படியான எந்தவித செயலிலும் அவன்ஈடுபடவில்லை.
மெலனி சாம்ஸன் அவனின் மேலதிகாரி. மிகவும் அன்பாக நடத்துவாள். ஒருதரம் இவனை பீச்சுக்குக் கூட்டிக்கொண்டு போனாள். அவ்வளவுதான். அதற்காக ஏன் அவள் லண்டனை விட்டுப் போக வேண்டும்?
“மார்க்கரெட், விளையாட்டுத்தனமாக எதையும் சொல்லி வீண் வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.”
“ரவி, அதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். எங்கள் கொன்ஸல்டன்ட் மிஸ்ரர் கொலின் டெய்லர் மிகவும் பொல்லாத மனிதர். ‘ மார்க்கரெட் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு இவன் காதில் ரகசியம் சொன்னாள்.
“நான் எனது கொன்ஸல்டன்ட் மிஸ்டர்டெய்லரை ஒன்றும் செய்ய வில்லையே?” அவன் குழப்பத்துடன் கேட்டான். மார்க்கரெட் கொண்டு வந்திருந்த கோப்பி அவன் கோபத்தைத் தணிக்கவில்லை.
“அவரின் காதலி மெலனியை அவரிடமிருந்து பிரித்தெடுக் கிறாயே?” மார்க்கரெட் சொல்வது ரவிக்கு ஒரு விதத்தில் புதிராகவும் மறு விதத்தில் புதினமாகவுமிருந்தது.
“டெய்லரின் காதலி?… மெலனி, டெய்லரின் காதலியா?”மிஸ்டர் டெய்லர் எப்போதும் மெலனியை விழுங்கித் தொலைப்பதுபோல் பார்ப்பார். அதன் அர்த்தம் இதுதானா?
“ஐயோரவி, இத்தனைவயதாகியும் உலகத்தைப் புரிந்து கொள்ளா மலிருக்கிறாயே, ” மார்க்கரெட் சத்தம் போட்டுச்சிரித்தாள்.
இன்று பின்னேரம் தனது மைத்துனன் செந்திலைக் காணவேணும், அவனுடன் என்ன சொல்ல வேணும் என்றெல்லாம் நினைத்திருந்த வனுக்கு மார்க்கரெட் சொல்லும் விடயங்கள் ஆச்சரியம், எரிச்சல் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் கொண்டு வந்தது.
எல்லா இடங்கள் போல ஹாஸ்பிட்டலிலும் நிறைய வம்பு தும்புகள் பேசப்படும். அதில் தன் பெயரும் இழுபடும் என்று அவன் நினைக்கவில்லை.
மத்தியானசாப்பாட்டு நேரம்.டாக்டர்களின் சாப்பாட்டு மேசையில் மெலனியும் டெய்லரும் ஒன்றாக இருந்து சாப்பிடுவதைக் கண்டான். எப்படி அந்த இடத்திலிருந்து ஓடுவது என்று யோசித்தான்.
மிஸ்டர் டெய்லர் பெரும்பாலும் யாருடனும் சேர்ந்து சாப்பிட மாட்டார். அவருடன் மெலனியைக் கண்டதும் மார்க்கரெட் சொன்னது ஞாபகம் வந்தது. அவர்கள் இருவரும் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“ஹலோ ரவி… எங்களுடன் வந்து சாப்பிடலாமே,”மிஸ்டர் டெய்லர் இவனைக் கண்டதும் கூப்பிட்டார். ஆங்கிலேயர்களுக்குள்ள மிடுக்கு அவர் குரலில். மெலனி மௌனமாக இருந்தாள். அவனுக்குத் தர்மசங்கடமாகிவிட்டது. வேறு வழியில்லை.
ரவிக்கு மெலனி ஒரு ஹலோ சொல்லிக் கொண்டாள். டெய்லருக்கு முன்னால் பயப்படுகிறாளா?
“ரவியின் படிப்பும் முடிகிறது. மெலனியும் டிப்பார்ட் மெண்டை விட்டுப் போகிறாள். இந்த டிப்பார்ட்மெண்டில் களையில்லாமல் போகப் போகிறது.” மிஸ்டர் டெய்லரின் முகத்தில் சிரிப்பு. வார்த்தைகளில் இரட்டை அர்த்தம்.
மிஸ்டர் டெய்லரைப் பகைத்துக் கொண்டால் ரவி போன்ற மேற் படிப்பு படிக்க வரும் டாக்டருக்கு நல்லதல்ல. அது நன்றாக ரவிக்குத் தெரியும். படிப்பு முடியும் வரைக்கும் இந்த மனிதருடன் சினேகிதமாய் இருப்பது புத்திசாலித்தனம். டெய்லரின் வார்த்தைகளின் உள் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளாதவன் போல் “யேஸ் சேர், எனது படிப்பு முடியப் போகிறது.” ரவி கவனமாகத் தன் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துச் சொன்னான்.
“இலங்கைக்குத் திரும்பிப் போகிறாயா, அல்லது உன்னைப்போல் மேற்படிப்பு படிக்க வரும் டாக்டர்கள் போல் இங்கிலாந்திலேயே தங்கிவிட யோசனையா?’ டெய்லரின் குரலில் கிண்டல். படிக்கவென்று வந்த எத்தனையோ தமிழர் தங்கி விட்டார்களே, எத்தனை விஷம் இந்த மனிதரின் வார்த்தையில்?
ரவி மறுமொழி சொல்லமுதல் மெலனி சொன்னாள்.
“ரவிக்கு இங்கிலாந்தில் இருக்கப் பிடிக்கவில்லை என்று நினைக் கிறேன்.” மெலனி ரவிக்காகப் பேசினாள். இலங்கைக்குத் திரும்பிப் போவதைப் பற்றிஎத்தனையோ தரம் ரவி அவளுக்குச் சொல்லி யிருக்கிறான்.”அடடே உங்களுக்குள் இதெல்லாம் பேசிக் கொள்ளும் நெருக்கம் இருப்பது எனக்குத் தெரியாமல் போய்விட்டது.’டெய்லரின் வார்த்தைகளின் கிண்டல் அவனை மிகவும் எரிச்சலூட்டியது. இவ்வளவு காலமும் பழகிய இந்த மிஸ்டர் டெய்லரின் அடுத்த பக்கம் இப்போது புரியத் தொடங்கியது போலிருந்தது.
“சேர், எனது நாட்டில் உள்ள நிலையில் பலர் நாட்டை விட்டுப் போகும் நிலையுள்ளது. இங்கு படிக்க வந்தவர்களில் எல்லோரும் இங்கிலாந்தில் தங்கி விடவில்லை. பெரும்பா லானவர்கள் திரும்பிப் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். தனது சொந்தப் பிரச்சினைகள் காரணமாக…”
அவன் சொல்ல இடைமறித்தார் மிஸ்டர் டெய்லர்.”நீங்கள் லண்டனிலேயே நிற்க யோசிக்கிறீர்கள் அப்படித்தானே?’டெய்லருக்கு எப்படி மற்ற மனிதர்களைத் தள்ளிவிட வேண்டும் என்று தெரியும். அவர் தன் மேலதிகாரி என்பதையும் மீறி அவரிடம் கோபம் வந்தது ரவிக்கு.
“மற்றவர்கள் என்ன செய்வார்கள், ஏன் செய்கிறார்கள் என்பதை அனுமானம் செய்வது சிலவேளை தவறுதலான முடிவுகளைக் கொடுக்கு மில்லையா?” ரவியின் குரலில் ஆத்திரம்.ஆங்கிலேயரின் மண்டைக் கனமான அபிப்பிராயங்களுக்கு அவன் தலை சாய்க்கத் தயாராயில்லை. இப்படித்தான் குரலைத் தணித்துச் சொன்னாலும் அவன் குரலிலுள்ள கடுமையான தொனி மெலனியைக் கலவரப்படுத்தியது.
இந்த இடத்தில் இன்னும் கொஞ்சநேரமிருந்தால் இவர்கள் இருவரும் தர்க்கப்படஆரம்பிக்கலாம் என்பதையுணர்ந்த மெலனி “எக்ஸ்யுஸ்மி… வார்ட் ரவுண்ட்ஸ் செய்ய நேரமாகிவிட்டது,” மெலனி சட்டென்று சொன்னாள். “ஆண்கள் ஏன் சில வேளைகளில் குழந்தைத்தனமாக இருக்கிறார்கள்?” அவள் எழுந்தாள். அவளைத் தொடர்ந்து ரவியும் எழுந்தான்.மிஸ்டர்டெய்லரின் முகத்தில் ஒரு மாறுதலும் இல்லை. அவர் ஆங்கிலேயன். உணர்ச்சிகளை அதிகம் பொருட்படுத்தமாட்டார். “ரவி நீங்கள் ஒன்றும் சாப்பிடவில்லை.” மெலனி அவசரப்பட்டுச்சொன்னாள். ரவியில் அவளுக்குப் பரிதாபம். அதை மற்றவர்கள் வித்தியாசமாக நினைப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. “பசிக்கவில்லை,” அவளை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. ரவி ஆத்திரத்துடன் வெளியேறினான்.
மிஸ்டர் டெய்லர் இனவாதம் பிடித்தவர். இங்கிலாந்தில் வந்து குடியேறும் கறுப்பர்களைப் பற்றித் தாழ்வான அபிப்பிராயம் வைத்திருக் கிறார் என்பதை அவர் பேச்சு சொல்லாமல் விளக்கி விட்டது.
மெலனியிலுள்ள ஆத்திரத்தில் தன்னை அப்படிப் பேசினாரா அல்லது அவர்அடிமனத்தில் வெள்ளையரல்லாதோர் பற்றி நல்ல அபிப்பிராயமில்லையா?
அரசியல் தஞ்சம் கேட்டு ஆயிரக்கணக்கான வெளிநாட்டார் இங்கிலாந்தில் வந்து குவிவதால் இப்போது வெளிநாட்டார்களுக்கு எதிரான குரல் வலுக்கிறது என்பது பத்திரிகைகள் மூலம் தெரிய வருகிறது.
வார்ட்டுக்கு வந்தான். தலை வலித்தது. வேலையில் மனம் ஓட வில்லை. மார்க்கரெட் ரவியை ஓரக்கண்ணாற் பார்த்தாள், அவள் பார்வையில் அனுதாபம். “உன்னைப்போல் எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.” அவள் சட்டென்று சொன்னாள்.
“இனத் துவேசத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், படிப்பைக் குழப்பியவர்கள் அவர்கள்.’ இனத்துவேசம் மற்றவர்களின் வார்த்தை களில் நடவடிக்கைளில் மட்டுமல்ல அவர்கள் நினைவிலேயே ஊறிப் போயிருக்கிறது”
மார்க்கரெட் வாஞ்சையுடன் சொன்னாள்.
“நீ ரொம்பவும் நல்லவன் மட்டுமல்ல அப்பாவியுமா யிருக்கிறாய். உனது படிப்பைத் தவிர உன்னைச் சுற்றி நடப்பது பற்றியுணராமலிருக் கிறாய். மெலனி ஒரு நல்ல ஆங்கிலேயப் பெண். அவளை மிஸ்டர் டெய்லர் மிகவும் விரும்புகிறார். மிஸ்டர்டெய்லர் இப்போதுதான் தனது மனைவியை விவாகரத்து செய்து கொண்டார். நீண்ட நாட்களாக அவர் மெலனியில் ஒரு பார்வை வைத்திருந்தார். நாங்கள் நேர்ஸஸ், எங்களுக் குத் தெரிந்த ரகசியங்கள் உங்களைப்போல் மேற்படிப்பு படிக்க வந்த யாருக்கும் தெரிவதில்லை. பெரும்பாலானவர்கள் தாங்கள் உண்டு தங்கள் படிப்புண்டு என்று விதத்தில் இருந்துவிட்டு, படித்துவிட்டுப் போகிறார்கள். மெலனிக்கு உன்னில் ஒரு பிடிப்பு என்பதை நீ புரிந்து கொள்ளாவிட்டாலும் இந்த டிப்பார்ட் மெண்டில் எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.’
மார்க்கரெட் செய்திச்சுருக்கம் சொல்வதுபோல் சொல்லி முடித்தாள். மார்க்கரெட் சொல்வது புரிந்தது. மற்றவர்கள் சொல்வதுபற்றி அவன் என்ன செய்ய முடியும்.வீட்டிலிருந்தால் சுமதியின் பிரச்சினை தலை யிடிக்கப் பண்ணுகிறது என்றால் வேலைக்கு வந்தால் புதிய பிரச்சினை முளைக்கிறது.
வேலை முடிந்து செந்திலைப் பார்க்க வேண்டும். அவனின் நடவடிக் கையால் சுமதியும் குழந்தைகளும் படும் துன்பங்களை செந்திலுக்குப் புரிய வைக்க வேண்டும். செந்திலைத் தனியாகப் பார்க்க அவன் விரும்பவில்லை. மாமா தனபால் வந்தால் நிறைய அரசியல் பேசிக் கொண்டிருப்பார். ஆனாலும் அவரில்லாமல் செந்திலிடம் போய்ப் பேசிப் பிரயோசனமில்லை. சித்திரா கேம்பிரிட்ஜில் இருக்கிறாள். வாரக் கடைசியில் மட்டும் லண்டன் வருவாள். தன்னுடன் சித்திராவை அழைத்துக் கொண்டுபோனால் செந்தில் தரக்குறைவாகப் பேசுவான். செந்தில் போன்றவர்களின்கண்களில் ஒரு ஆணும் பெண்ணும் தனியாகச் சந்தித்தால் அது ஒழுக்க விரோதமாகிவிடும். யோசித்துக் கொண்டு வரும்போது மெலனி எதிர்ப்பட்டாள்.
“லிப்ட் தரலாம்,’ அவள், அவன் அருகில் காரை நிற்பாட்டினாள். மார்க்கரெட் சொன்ன விடயங்கள் பற்றிமெலனியிடம் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தான்.
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல் அவள் வந்தாள். அவளிடம் கட்டாயம் பேச வேண்டும். காரில் ஏறிக் கொண்டான்.
அவனது வீடு கொஞ்ச தூரத்தில்தானிருக்கிறது. அண்டர்கிரவுண்ட் ரெயினில் இரண்டு ஸ்ராப்ஸ் தள்ளியிருக்கிறது. நல்ல சூழ்நிலை என்றால் நடந்தே போவான்.
இவனின் முகத்தில் சந்தோசம் இல்லையென்பதை மெலனி உணர்ந்து கொண்டாள். மௌனமாகக் கார் போய்க் கொண்டி ருந்தது. அவளிடம் எத்தனையோ பேசவேண்டும்.
“மிஸ்டர் டெய்லருக்கும் உனக்குமுள்ள தொடர்புக்கு நான் இடையில் வந்து குதித்ததாக மிஸ்டர் டெய்லர் நினைக்கிறார். அப்படி நினைப்பதற்குநான் மிகவும் வேதனைப்படுகிறேன்.” ரவிதாழ்மையான குரலில் சொன்னான்.
“மிஸ்டர்டெய்லருக்கும் எனக்குமிடையில் தொடர்பு இருப்பதாகக் கதை கட்டிவிட நீங்கள் யார்?” மெலனியின் குரலில் அசாதாரண கோபம்.
இப்போது மெலனி பாய்ந்து விழுந்தாள். அவன் இதை எதிர்பார்க்க வில்லை. ‘உண்மையை அறியாமல் பேசுகிறேனா?’ மார்க்கரெட் சொன்னதைத் திருப்பிச் சொன்னான்.
“மிஸ்டர் டெய்லர் டிவேரார்ஸ் பண்ணுவதும் இன்னொரு பெண் ணைத் தேடுவதும் அவரின் சொந்த விடயம். நான் அவர்தேடும் அந்தப் பெண்ணாக இருக்க விரும்பாததால்தான் அவரின் கரைச்சலிலிருந்து தப்ப வேறொரு இடத்திற்குப் போகிறேன். அத்துடன் நான் இனி ரெஜிஸ்டார் இல்லை.ஆக்டிங் கொன்ஸல்டன்ட்”
மெலனியாலும் சூடாகப் பேசத் தெரியும் என்று கண்டு கொண்டான்.
இருவரும் வேறு வேறு காரணங்களால் மனத்தில் எரிச்சலுடன் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.
“அக்டிங் கொன்ஸல்டண்டாகப் பதவி உயர்வு கிடைத்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” அவளின் சூட்டைக் குறைக்க ஏதாவது சொல்வதற்காகச் சொல்லி வைத்தான்.
“தாங்க்யு.” இவனைப் பார்க்காமல் கார் ஓட்டிக் கொண்டிருந்தாள். கார் ஓட்டும் விதத்தில் அவள் கோபம் பிரதிபலித்தது.
“எங்கே போகிறாய்?”
‘ஸ்கொட்லாந்துக்கு – எடின்பரோ ஹாஸ்பிட்டலில் வேலை.’
அவள் லண்டனை விட்டு வெகு வெகுதூரம் போகப் போகிறாள்.
“லக்கி யூ”, ரவி முணுமுணுத்தான். ‘டெய்லர் போன்றவர் களிடமிருந்து தப்பிப் போவது மிக அதிர்ஷ்டமான விடயம்தானே’
“ஏன் நான் லக்கி?”
“லண்டனை விட்டு எங்கேயாவது போவது நல்லதுதானே?” அவன் குரலில் விரக்தி.
“எடின்பரோ போவதில் அவ்வளவு விருப்பமென்றால் ஒரு சில மாதங்களில் உங்கள் படிப்பு முடிந்தபின் எடின்பரோ வரலாம். எனது டிப்பார்ட்மென்டிலேயே வேலை தரலாம். மெலனி சட்டென்று சொன்னாள். இவனுடன் உறவைத் தொடரத் தான் தயார் என்கிறாளா? அவள் வேடிக்கைக்குச் சொல்கிறாளா அல்லது உண்மையாகத்தான் சொல்கிறாளா என்று தெரியவில்லை.
“மெலனி, ஸ்கொட்லாந்துக்குப் போவது மனதுக்குப் பிடித்த விடயமென்றால் ஏன் உன் கண்களில் நீர் வந்தது.”
ஒரு சில வாரங்களுக்கு முன் பீச்சுக்குக் கூட்டிக் கொண்டு போகும் போது தான் லண்டனை விட்டுப் போகப் போவதாகச் சொன்னபோது அவள் கண்களில் நீர் வழிந்ததை அவன் மறக்கவில்லை.
“கண்களில் நீர் வர ஸ்கொட்லாந்துக்குப் போவது மட்டும்தான் காரணமாக இருக்க முடியுமா?’
“பெண்களுக்கு கண்ணீர் வர என்னென்ன காரணங்கள் இருக்கும் என்றுகண்டுபிடிக்கும் விசேட அறிவு என்னிடமில்லை.”ரவி சலிப்புடன் சொல்லிக் கொண்டான். அவள் இன்று ஏதோ காரணத்தால் கோபமா யிருக்கிறாள் என்பது வெளிப்படை. “ரவி, நாங்கள் இருவரும் சைக்ரி யாட்ரிஸ்ட்ஸ் மனித உணர்வுகளையும் அவர்களின் வாழ்க்கையின் பிரச்சினைகளையும் பற்றி விசேட அறிவு கொண்டவர்கள்.
“சரி, ஏன் உனக்குக் கண் கலங்கியது என்று சொன்னால் என் குழப்பம் நீங்கிவிடும்.” குழந்தைத்தனமான கேள்விதான். ஆனால் இப்படியான கேள்விகள் தவிர்க்க முடியாதன.
“எனக்குப் பிடித்த இடம்,பிடித்த மனிதர்களை விட்டுப் போவது மனத்திற்குச் சிரமமாக இருக்கிறது.” மெலனி உண்மையுடன் சொல்கி றாள் என்பது வெளிப்படை.
“அப்படி என்றால் போகவேண்டாம்,” கிண்டலாகச் சொன்னான் ரவி “மிஸ்டர்டெய்லருடன் மாரடிக்க வேண்டும்.”
இருவரும் சிரித்தார்கள். அவளுடன் மனம் விட்டுப் பேசியதில் மனதில் இருந்த துன்பம் குறைவது போலிருந்தது.
“மிஸ்டர்டெய்லருடன் பெரிதாகச் சண்டை போடப் போகிறாயோ என்று மத்தியானம் பயப்பட்டேன்,” அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களில் மலர்ச்சி, அவள் குரலில் நிம்மதி.
“மிஸ்டர் டெய்லர் மட்டுமல்ல, எனது மைத்துனர் செந்தில் கூடத் தான் எனக்கு எரிச்சலைத் தந்து கொண்டிருக்கிறார்.” செந்தில், டெய்லர் போன்ற ஆண்கள் ஏன் பெண்களை வருத்திக் கொண்டிருக்கிறார்கள்.”
யார் செந்தில் என்னை முறைத்துப் பார்த்த உங்கள் சகோதரியின் கணவரா?” மெலனி கேட்டாள்.
அவன் தலையாட்டினான். “உன்னோடு பழகுவதற்காக மிஸ்டர் டெய்லர்முறைக்கிறார், உன்சகோதரி முறைக்கிறாள். எடின்பரோவுக்குப் போனால் யாரும் முறைக்க மாட்டார்கள்.” அவள் குரலில் நிம்மதி.
“குட்லக்,” அவன் வேண்டா வெறுப்பாகக் கூறினான்.
“தாங்க் யூ”. அவள் அவன் இறங்க வேண்டிய அண்டா கிரவுண்டில் காரை நிறுத்தினாள்.
– தொடரும்…
– நாளைய மனிதர்கள் (நாவல்), முதல் பதிப்பு: டிசம்பர் 2003, புதுப்புனல், சென்னை.
![]() |
இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க... |