பறவை நேசம்

”பெரியய்யா இருக்காருங்களா? அவரு சொல்லிக்கிட்டபடி மரத்தடி பிள்ளையாருக்கு வேண்டிக்கிட்டேன் பேரனுக்கு காமாலை கொணமாயிடிச்சி.அதான் பிள்ளையாருக்கு நேந்துக்கிட்டதை செலுத்த வந்தேன்.” என்று கையில் பால்தூக்கும் தோளில் தொங்கும் துண்டில் வாழைப்பழங்களுடனும்ன்வாசலில் வந்து நின்றவனை சற்றே எரிச்சலுடன் பார்த்தான் தினேஷ்.
இப்படி தினம் ஏழெட்டுபேராவது வீட்டுத்தோட்டத்துக்குவருவதும்,அப்பா சிதம்பரத்தை விஜாரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இத்தனை நாளாய் புங்கைமரம் என்று பெயர்கொண்டிருந்த மரத்துக்கு ’ பிள்ளையார் மரம் ’என்ற பெயராம்! எல்லாம் அப்பாவினால் வந்த வினை. சாதாரண மரத்தை தெய்வமரமாக மாற்றிவிட்டார்!
“மரத்தின் வடிவமே மாறிப்போச்சு பாருங்க! மரமே ஒரு பெரிய யானை தோற்றத்தில் தெரிகிறது !. இப்படிப்பட்ட வாரண மரம் வீட்டு வாசல் தோட்டத்தில் வாய்த்திருப்பதும் வாஸ்துப்படி ரொம்ப நல்லது “என்று ஜோதிடர் ஒருவர் வேறு புகழ்ந்துவிட்டுப்போனதும் கூட்டம் பெருகி வர ஆரம்பித்துவிட்டது.
‘இந்த அப்பாவுக்கு திடீரென புத்தி மழுங்கிப்போய்விட்டதா? யாரோ தங்களுக்கு உபத்திரவமாக இருக்கிறதென்று ஒன்றரையடி கருங்கல்பிள்ளையார் சிலையை மரத்தின் கீழே வேர் அருகே கொண்டுவந்துவைத்துவிட்டார்கள் . வீடு நல்லவிலைக்குவருகிறபோது ஒருவழியாய் மற்ற சில மரங்களுடன் இதையும்அப்புறப்படுத்திவிடலாம்என
தினேஷ் நினைத்திருந்தான்..இப்போது அதற்கான வேளை வந்திருக்கும் சமயத்தில் பிள்ளையார் பிரச்சினையாகிவிட்டார்.
தினேஷுக்கு கடவுள்பக்தியெல்லாம் உண்டுதான். இந்த நாற்பத்தி இரண்டுவயதுக்கு கடவுள் நம்பிக்கையால்தான் நல்லநிலைக்குத்தான் வந்திருப்பதை அவன் மறுக்கவில்லை ஆனால் கடைப்பிள்ளையாரைக்கொண்டுவந்து யாரோ தன் வீட்டு மரத்தடியில் வைத்து விளையாடுவதை தன் அப்பா மறுப்பதுதான் அவனுக்கு வியப்பாகிவிட்டது.
“தினேஷ்! தெய்வம் தேடிவந்திருக்கு..நாம் அதை மதிக்கணும்.. விஷயம் தெரிந்து மூணுமாசமா எல்லாரும் கும்பிட ஆரம்பிச்சி பலன் கிடைச்சி கொண்டாடறாங்க பாத்தியா?” என்று சிதம்பரம் மகிழ்ந்து கொண்ட போது தினேஷின் மனைவி ரஞ்சனிக்குக் கோபமாக வந்தது.
ஃப்ளாட் கட்ட தோதான இடம் என்று வீட்டை விலைக்கு வாங்க வந்தவர் முன்பு , பிள்ளையார் மரப்பெருமையை பேசியதும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடுமோ என்றும் திகிலாகிவிட்டது.
ஆனால் வீட்டைவிலைக்கு வாங்க வந்தவரும் பிள்ளையார்மர தரிசன மகிமையாம்! பதினோரு வருஷத்திற்குப் பிறகு தன் ஒரே மகள் கர்ப்பமாகி இருப்பதாக சொல்லி தினசரி சிதம்பரத்தை சந்தித்து பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி சிலைக்கு திருவாச்சியெல்லாம் செய்துபோட்டுவிட்டார். அடுத்து மேனிக்கு கவசம் செய்யப்போகிறாராம்!ஆனால் வீட்டை தான் விலைக்கு வாங்க இருப்பது பற்றி மனிதர் மூச்சுவிடக்காணோம்!
தினேஷும் பொறுமை இழந்து தயக்கமுடன் ஒருநாள் கேட்கவும், ”உங்க வீடு அம்சமான வீடு! முகப்பில் பெரிய அழகான தோட்டம்.! பிள்ளையார் வேற தானாக வந்திருக்கிறார். இதுக்குக் கொடுப்பினை வேணும்ப்பா! வீட்டை விக்காதீங்க..விக்கக்கூடாது” என்றார். வந்த வேறு சிலரிடமும் மரத்தடிப்பிள்ளையார் மகிமையைச்சொல்லி வீட்டை விற்க விடாமல் செய்து விட்டார்.
“ரியலெஸ்டேட் எல்லாம் ‘பொசு’க்குனு கீழே இறங்கினால் வீடு நல்ல விலைக்குப் போகவே போகாது. இந்த மனுஷன் அழகா வீடு வாங்க வந்தவர் இப்படி மனசு மாறிட்டாரே?” ரஞ்சனி முணுமுணுத்தாள்.
தினேஷுக்கும் ரஞ்சனிக்கும் தோட்டம், மரம், செடி என்று வீடு இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதில் விருப்பமே இல்லை. வீட்டை விற்றுவிட்டு நாகரீகமாக அடுக்குமாடி குடியிருப்பாக கட்டிவிட்டால் வாடகை கொள்ளையாய் வரும். வேலைக்கு போக வேண்டிய அவசியம் கூட இருக்காது.
வீடு தினேஷின் தாத்தாவினுடையது தான் அதனை சிதம்பரம் சில ஆண்டுகள் முன்பு இதய நோய் வந்தபோதே மகன் பெயருக்கு எழுதி மாற்றி விட்டார் தான், அதனால் வீட்டை தன் இஷ்டத்திற்கு விற்கலாம் என காத்திருந்தான்.இந்த நிலைமையில் பிள்ளையார் வருகை திட்டத்தை தகர்த்து விடும் போலிருந்தது..
தோட்டத்தில் சிதம்பரம் புங்கைமரப் பிரதாபத்தை யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்
“வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியான நிழல் தரும் மரங்களில் புங்கை மரம் சிறந்தது ஏனெனில் அவற்றின் இலைகள் சிறிதானவை, அடர்த்தியானவை, இலைகள் ஊடுறுவும் காற்றை தடுக்காமல் நன்றாக அசைத்துவிடுவதால் அதன் சுற்றுச் சூழலை குளிர்த்தன்மையுடன் வைத்துக் கொள்வதுடன், அடர்த்தியான நிழலையும் தருகிறது. மழைகாலத்தில் இலைகள் முற்றிலும் கொட்டிப் போகமல் இருக்கும் போதே துளிர்கள் வந்துவிடும், இம்மரம் பருவகாலத்திற்கு ஏற்றவகையில் தம்மை வளர்த்துக் கொள்ளும் தன்மை உடையது. அதன் கொத்து கொத்தான பூக்கள் தேன்செறிந்து இருப்பதால் அவை பூக்கும் காலங்களில் வண்டுகளுக்கு கொண்டாட்டம் தான்.”
“அப்படியா? அதான் பிள்ளையாரே இந்தமரத்தடிதான் வேண்டுமென்று வந்துவிட்டாரோ?”
வீடுவாங்கவந்த மனிதர் மூன்றுமாதம் முன்பு ஃப்ளாட்கட்ட அனுமதிப்பத்திரமெல்லாம் வாங்கிவந்ததை மறந்து வாயைப்பிளந்து வியந்தபடி சிதம்பரத்திடம் கேட்டார்.
“ஆமாம்.. ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மரங்களுள் மூங்கிலுக்கு அடுத்து புங்க மரம்தான். எந்தப் பகுதியிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடியவை. அதிக நிழலை தரக்கூடியது. பசுமை படர்ந்த மரமாக காட்சியளிக்கும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும். சாலை ஓரங்களில் நிழல் தரவும், மண் அரிப்பைத் தடுக்கவும் புங்கை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. புவி வெப்பமயமாதலை தடுக்கும் தன்மையுள்ள மரங்களில் புங்க மரமும் ஒன்று. வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும் குணம் இதற்கு உண்டு. புங்கை மரத்தின் மலர்கள், விதைகள், இலைகள், பட்டை,வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை”
சிதம்பரம் தோட்டத்தில் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருக்கும்போது உள்ளேரஞ்சனி
“உங்கப்பா பள்ளிக்கூடவாத்தியாரா இருந்து ரிடையர் ஆனாலும் ஆனார் இதுமாதிரி போதனைக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை “ எனசலிப்புடன் சொல்லிக்கொண்டதை தினேஷினால் மறுக்கமுடியவில்லை.
“என்ன செய்யறது ரஞ்சனி, நானும்இப்போ விற்கலாம்னு நெனச்சி பிரயத்தனம் செஞ்சேன்.ஆனால் பிள்ளையார் குறுக்கே நிற்கிறாரே! இது எப்படி நம்மவீட்டு தோட்டத்துமரத்தடிக்குவந்திருக்கும்?நெஜமாவே சாமி விருப்பமா இருக்குமோ? பாக்கலாம் இன்னும் ஒருசில மாசங்கள்.அப்புறமா பிள்ளையார் மரத்து மோகம் எல்லாருக்கும் குறைஞ்சிடலாம்..அப்புறமா வித்துடலாம்,”
”வேற எந்த காரணம்னாலும் நானும் வீட்டை விற்கறமுடிவுல என் மனசை மாத்திக்க மாட்டேன்.. சாமிங்கறதால, நமக்கும் ரெண்டு பசங்க படிச்சிட்டு இருக்கறதால சின்ன தயக்கமா இருக்கு..பொறுமையாக் காத்திருக்கலாம் வேற வழி?”
மகனும் மருமகளும் பேசுவது சிதம்பரம் காதிலும் விழத்தான் செய்தது
தோட்டத்தில் காலை நேரத்தில் இரைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த பறவைகளைப் பார்த்தார்.
பறவைகளின் மேல் அலாதிப்பிரியம் கொண்ட அவருக்கு அவைகளின் சரணாலயமாய் இருக்கும் வீட்டு மரங்களை வெட்டி அடுக்குமாடி குடி இருப்பு கட்ட இருப்பதை தடுக்க வேறு உபாயம் தெரியவில்லை.ஏற்கனவே தான் ஒருகாலத்தில் பறவைகள் பின்னே பைத்தியம் போல அலைந்து படம் எடுத்து கட்டுரைகள் எழுதியதற்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்காததால் அதிலும் முக்கியமாய் மருமகள் ரஞ்சனிக்குப் பறவைகளே பிடிக்காததால் வீடு விலைக்குப் போகும் தருணத்தில் ஒரு முடிவிற்கு வந்தார்.
சிறகுகளை சிலுப்பிக் கொண்டு உயரப் பறக்கத் தயாராயின புங்கை மரத்துப் பறவைகள்.
பரவசத்தில் அவர் வாய் மென்மையாய் கூவியது.
“என் அருமை பறவைகளே! இயற்கையை நேசிக்கும் நான் உங்களுக்காகத்தான் இந்த மரத்தைக் காப்பாத்த நினைக்கிறேன். ஏற்கனவே உங்களில் பலர் இடம் மாறிப் போய் விட்டீர்களோ அல்லது அழிந்து போய் விட்டீர்களோ தெரியவில்லை.. மீதம் இருப்பவர்களைக் காக்க நினைக்கிறேன் அதற்குத் தான் பிள்ளையாரை கொண்டு வந்திருக்கிறேன்.. என் வேண்டுதலும் கடவுளின் கருணையும் உங்களை சில காலத்திற்காவது காப்பாற்ற வேண்டும்!”
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: August 4, 2025
பார்வையிட்டோர்: 3,804