சின்னு என்கிற சின்னசாமியும் அக்கீ என்கிற அக்கீசியாவும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 6, 2025
பார்வையிட்டோர்: 3,025 
 
 

அத்தியாயம 5-6 | அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10

அத்தியாயம் – 7

வரதராசனும் சாமிநாதனும் அமைதியாகப் பூங்காவில் நடக்கப் போனார்கள்.

“சின்னசாமியோட அப்பாக்கிட்டப் பேசிப் பார்க்கட்டுமா?”

“அவரு எங்கே இருக்காரு?”

“பூனாவிலே”

“ஆமாம்.. அன்னிக்கே சொன்னியே…. வேண்டாம் விடு.. எனக்கு நம்பிக்கையில்லே”

“ரோகிணியப் பத்தி என்ன நினைக்கிறே?”

“அவளா… சின்னசாமி ஒருவேளை ஒத்துகிட்டாலும், இவ தயாரில்லே”

“அப்புறம் ஏண்டா என்னோட உசுரை வாங்கறே… வேண்டாத கற்பனையே வளர்த்திட்டு..” என்றார் வரதராசன் சற்று மூர்க்கமாக.

“அந்தப் பையன் பேரிலே ஒரு இம்ப்ரெஸ்ஸன் இருந்துச்சு… மூவ் பண்ணிப் பார்த்தா என்னன்னு..” என்றார் சாமிநாதன் பவ்வியமாக.

“லூஸ்ஸாட நீ.. உம் பொண்ணைப் பத்தி நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கே .. அவளையே உன்னாலே சரி பண்ண முடிலே அப்புறம் எப்படி…?”

“சரி.. வேறே பேசுவோம்… வா, இந்த பெஞ்சுலே உட்காருவோம்”

தூரத்தில் ரோகிணியும், அவள் சினேகிதி சாருலதாவும் ‘ஹாய்’யாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள். இவர்களைப் பார்த்ததும் “டாடி.. அப்படியே வாக் வந்தோம்.. அங்கிள்.. எங்கே உங்க மருமகன்?” என்று வரதராசனிடம் கேட்டாள்.

“சின்னசாமியா… அவன் அப்பவே போய்ட்டான்”

“டாடி.. ஒரு யோசனை..”

“அட.. வாங்க ரெண்டு பேரும் வந்து உக்காருங்க…சொல்லும்மா” என்றார் சாமிநாதன்.

“அங்கிள்… நீங்க இருங்க… இப்ப ஒரு பிளான்.. நானும் இவ.. சாருவும் லண்டனுக்கே போறோம்.. இவளுக்கு வேலை அங்கெ கிடைச்சிருச்சு.. எனக்கும் கெடைச்சிரும் .. நாங்க மட்டுமில்லே… நீங்களும் கூட வர்றீங்க!”

“என்னம்மா இது.. நீ பாட்டுக்கு..” “இருங்க டாடி.. நான் சொல்லி முடிச்சர்றேன்.. அங்கிள்… அப்பாவுக்கு இருக்கற பிரச்சனை உங்களுக்குத் தெரியும்.. இந்த வயசுலே எதுக்கு இப்படி ஓடிஓடி சம்பாதிக்கணும்… போதும்.. எல்லாத்தையும் அந்த கௌதம் என்ஜினீர் கிட்ட பொறுப்பைக் கொடுத்துடலாம்.. அவன் நல்ல பையன் அங்கிள்.. அப்பாதான் அவனைப் படிக்க வச்சு.. இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து வச்சிருக்கார்.. அவன் நன்றியும் விசுவாசமும் உள்ள பையன்.. அப்புறம்.. அங்கிள்.. நீங்க ஹேல் அண்ட் ஹெல்தியாவே இருக்கறீங்க.. நீங்க பொறுப்பு எடுத்துக்குங்க… இருக்கிற ப்ராஜெக்ட் போதும் புதுசா எதுவும் வேண்டாம்.. அந்த கௌதம் எல்லாம் பார்த்துக்குவான்..

அப்புறம் இருக்கிற வீடு, நிலம் எல்லாம் வித்துக் காசாக்கிக்குங்க.. உடனே இல்லே அங்கிள்.. மெதுவாத்தான்.. இவ போறதுக்கு இன்னும் ரெண்டு மாசமாகும்.. விசா ப்ராப்ளம்.. உங்க ஃபிரண்டுக்காக இதைக்கூட நீங்க செய்யக்கூடாதா?” அருவி மாதிரி பொழிந்து கொண்டிருந்தாள் ரோகிணி.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த இருவரும் திக்பிரமித்துப் போனார்கள்.

ரோகிணி, சாருலதாவுடன் கலகலப்புடன் கடந்து போனாள்.

“என்னப்பா சாமி! இதுக்கு என்ன சொல்லப் போறே?” என்றார் வரதராசன்.

சாமிநாதன் சிறிது யோசனைக்குப் பிறகு தாழ்வான குரலில் சொன்னார்.

“ஒண்ணுமில்லேப்பா… எத்தனை நாளைக்கு ‘பற, பற’ன்னு பறந்திட்டிருக்கறது.. பொண்ணு சொல்றபடி இனிக்கேட்க வேண்டியதுதான்.. “

“சரி… இந்த வேலையெல்லாம் இனி… கௌதம் பரவாயில்லையா.. “

“ரோகிணி சொல்றமாதிரி நல்ல பையன்தான்.. நான்தான் காட்ஃபாதர்ன்னு கூட வச்சுக்கலாம்..”

“சரி… அந்த கௌதம்? அந்தத் தம்பியைப் பத்தி…” என்றார் வரதராசன்.

“அது ஒரு பெரிய கதை.. சொல்றேன்…நீயும் தெரிஞ்சிக்கிறது நல்லது.. நான் இந்தத் தொழிலுக்கு வந்த புதுசு… இந்தப் பையனுக்கு ஆறேழு வயசு

இருக்கும்.. இந்தப் பையனோட அப்பா, அம்மா ரெண்டு பேருமே கட்டிட வேலைக்கு வருவாங்க.. நான் இப்ப மாதிரி தனி ஆவர்த்தனம் பண்ணலே.. ஒரு மேஸ்திரி கிட்ட.. அவரு சொல்ற மாதிரி செஞ்சுட்டு காலத்தை ஓட்டிட்டிருந்தேன்”

“அப்படியிருந்தாத்தானே தொழில் கத்துக்க முடியும்” என்றார் வரதராசன் குறுக்கிட்டு.

“எக்ஸாக்ட்லி..”

“அப்புறம் சொல்லு”

“அந்த மேஸ்திரி இருக்கானே, படுபாவி! பேராசை பிடிச்சவன்! சரியா கூலி தரமாட்டான். ஆனா, வேலை மட்டும் செய்யணும்.. சீக்கிரமா முடிக்கணும்.. நாலஞ்சு காண்ட்ராக்ட் எடுத்துட்டு… இருக்கற ஆளை வச்சே வேலை வாங்கிக்குவான்.. இவங்க புருஷன் பொஞ்சாதி ரெண்டு பேரும் பாவப்பட்ட ஜென்மங்க.. உண்மையாயும் இருப்பாங்க.. அவங்களுக்குக் கொடுத்த வேலையை சுத்தமா, பொறுமையாச் செய்யுவாங்க… நான் டிப்ளமா சிவில்.. எனக்குமே கொடுக்கறதுக்கு மனசு வராது.. என்ன பண்றது.. வேலை கத்துக்கற வரைக்கும் பல்லைக் கடிச்சிட்டு இருந்தேன்.. இவங்க என்ன பண்ணுனாங்கன்னா ரெண்டு பேரும் வேலைக்கு வர்றப்பவே இந்த கௌதமையும் கூட்டிட்டு வந்துருவாங்க..”

“அவனைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டியதுதானே?”

“போனாத்தானே… நானும் சொல்லிப்பாத்தேன்.. அப்புறம் என்ன பண்றதுன்னு யோசித்து, இவனை எடுபிடியாளா வச்சுக்கலாம்னு நான்தான் அந்த மேஸ்திரிகிட்ட சொல்லி கூடவே வச்சிட்டோம்..” அவனுக்கு சம்பளமெல்லாம் தர முடியாது. வேணும்னா நீ பாத்து எதோ

கொடுத்துக்கோ ‘ன்னு கை கழுவி விட்டுட்டான்.. நானும் பாவம் பாத்து, கூடவே வச்சிட்டு வாரம் ஆனதுமே என் சொந்தப் பணத்திலேருந்து கூலி கொடுப்பேன்னு வச்சுக்கயேன்..

அந்த நாய்க்கு அது பொறுக்காம அவனை, அப்பப்ப வீட்டுக்கு கூட்டிட்டு போய், அவ பொண்டாட்டிகிட்ட விட்டுருவான்.. அவளா…. ஈவு இரக்கமே இல்லாத ஜென்மம்.. குடிக்கறதுக்குத் தண்ணி கூட கொடுக்கமாட்டா.. ச்சே! இப்படிப்பட்டவங்களக் கூட இந்த உலகம் தாங்கிட்டுதா இருக்கு!

“என்னப்பா சாமி பண்றது.. நாமும் அந்த உலகத்திலேதானே வாழவேண்டியிருக்கு.. அப்புறம் மேல சொல்லு”

“ஒரு நாள் ஒரு பிரச்சனை ஆயிப்போச்சு.. அந்தப் பொம்பள ரெண்டாயிரம் ரூபா நோட்டை டேபிள் மேலே வச்சிட்டு, வெளிலே கீரைக்காரிகிட்ட அஞ்சு ரூபா கட்டுக்கு சண்டைக் கட்டிட்டு இருந்திருக்கா.. அப்ப இந்தப் பையன் ரூமெல்லாம் க்ளீன் பண்ணீட்டு இருந்திருக்கான். அவன் அந்த வேலைய முடிச்சிட்டு திரும்ப பில்டிங் சைட்டுக்கே வந்துட்டான்.. அதுக்கப்புறம் இந்தப்

பணத்தைக் காணம்னு அந்த பொம்பளே பெரிய ரகளை பண்ணி, இவன்தான் எடுத்துட்டான்னு சாதிக்கிறா.. பாவம் பையன் அழுதழுது நடுங்கிப்போய் காய்ச்சல் வந்து..”

“பணம் கெடைச்சுதா இல்லியா?”

“சொல்றதக் கேளு.. அந்த வீட்லே வேலை செய்யறவ எடுத்திருக்கான்னு தெரிறதுக்கு ஒரு வாரம் ஆயிருச்சு.. கொடுமையைக்கேளு.. அந்தப் பொம்பள குதிக்கறா.. மேஸ்திரி எதையும் கண்டுக்கல அந்தப் பொம்பளையோட தம்பி ஒருத்தன் எஸ்.ஐ.. அவன்கிட்ட அவ சொல்ல, அவன் விசாரிக்கறேன்

பேர்வழின்னு பெரியவங்க வீட்டுக்குப் போக… அவங்க அவமானம் தாங்காம, அவசரப்பட்டு தூக்குப் போட்டுட்டாங்க..” “அடப்பாவமே!”

“அதுக்கப்புறம்… என்னத்தைச் சொல்றது.. அந்தப் பையனைக் கூட்டிட்டு, அவங்க முகத்திலியே முழிக்காம இங்க வந்து… அவனைப் படிக்கவச்சு… தொழில் கத்துக்கொடுத்து… காலம் எப்படியோ ஓடிருச்சு”

நெடிய பெருமூச்சை உதிர்த்தவாறு, விழிகளைத் துடைத்துக்கொண்டார்.

“யூ ஆர் கிரேட் சாமிநாதன்!” வரதராசன் நெகிழ்ந்து போனார்.–

“அப்புறமென்ன.. வயசாயிருச்சு… இனிமேல் எல்லாம் முதல் மாதிரி வேலை செய்ய முடியாது. உம் பொண்ணு சொல்றபடி கேளு!” என்றார் வரதராஜன்.

“அப்புறம்… சின்னசாமி விஷயம்?

“அதைப் பத்தி நீ எதுக்குக் கவலைப்படறே… அதுதான் நடக்காதுன்னு ஆச்சே.. உம் பொண்ணுக்கு லண்டன் மாப்பிள்ளேன்னு எப்பவோ முடிவாயிருச்சு போல!” என்று கிண்டலடித்தார் வரதராசன்.

“சரி.. இன்னும் கொஞ்ச நாள் பார்ப்போம்.. எதாவுது மாற்றம் நடக்குதான்னு

பார்க்கலாம்.. போலாமா?” என்றார் சாமிநாதன்.


பூங்காவை விட்டு வெளியே வந்த ரோகிணியும் சாருலதாவும் ஒரு காஃபி டே கடைக்குள் நுழைந்தார்கள்.

“என்ன ரோகு! நீ பேசுனுதுக்கு உன் டாடி எதுவும் சொல்லக் காணோம்”

“எப்படியோ கல்லைப் போட்டாச்சு.. இனி அவராப் போட்டு உருட்டிகிட்டுருப்பாரு!”

“நீ லண்டனுக்கு வர்றதுக்கு முடிவே பண்ணிட்டியா?”

“ஆமாண்டி சாரு.. எனக்கு வெளிநாடு போகணும்னு ரொம்ப நாளா ஆசை… வெறின்னுகூட வச்சுக்கோயேன்”

“கண்டிப்பாடி.. எனக்கும்தான்.. அங்கேயே செட்டில் ஆயிரணும்” என்றாள் சாருலதா.

“சாரு! உன்னை நம்பித்தான் வர்றேன்னு பிளான் பண்ணிச் சொல்லிட்டேன்” “என்ன ரோகு இப்படிப் பேசறே… ரெண்டு பேருமே ஒண்ணாத் தங்கற மாதிரி ஒரு ஃப்ளாட் பார்ப்போம்… லண்டன் உலகத்திலே எவ்வளவு பிரம்மாண்டம்.. தனியா இருக்கிறதை விட ஒருத்தருக்கொருத்தர் துணையாயிருக்கிறது நல்லதுதானே… உன் அப்பா எல்லா பிரச்சனையும் முடிச்சிட்டு மெதுவாக்கூட வரட்டும்.. எப்படியும் உனக்கு சீக்கிரமா ஒரு வேலையும் கெடைச்சிடும்… எப்படியோ என்னாலே ஆன உதவி எப்போதுமே உண்டு.. இப்ப இருந்தே உங்க அப்பாவே ஒத்துக்க வக்கிறதுக்கு என்னென்ன செய்யணுமோ அதையெல்லாம் ஆரம்பிச்சிரு…

சரி..போலாமா.. மழை வர்ற மாதிரி இருக்கு”

இருவரும் வெளியே வந்ததும் ஆளுக்கொரு திசையில் பிரிந்தனர்.

ரோகிணி ஒரு ஆட்டோவில் ஏறவும் வானம் பொத்துக்கொண்ட மாதிரி திடீரென்று கொட்டத் தொடங்கியது. இவளைத் தாண்டிச் சென்ற ஒரு ஆட்டோவை கைதட்டி நிறுத்தினாள். சைடில் தார்ப்பாய் கூட இல்லாத ஆட்டோ அது. டிரைவர் ஒரு முதியவர். பாவம். அவரிடம் என்ன பேசுவது… சாரல் மழை சீட் முதற்கொண்டு இவளையும் விட்டுவைக்கவில்லை

எப்படியோ ஒடுங்கியவாறு வீடு வந்து சேர்ந்தாள். காலிங் பெல் அடிக்கப்போகும்போதுதான் கவனித்தாள், கதவு திறந்திருப்பதை. ஈரத்தை உதறியபோது, உள்ளேயிருந்து அம்முக்குட்டி ஓடிவந்தாள்.

‘என்னம்மா.. மழைலே இப்படி… நின்ன பிறகு வந்திருக்கலாமல்ல..”

“சாரல்தான் இப்படி.. நனைச்சுட்டிருச்சு..” என்றாள்ரோகிணி .

அம்முக்குட்டி சுற்றும் முற்றும் யாரையோ தேடினாள்.

“என்ன அம்மு.. யாரைத் தேடறே?”

“அந்த இன்ஜினீர் தம்பி.. இங்கதானே இவ்வளவு நேரம் இருந்துச்சு”

“ஓ.. கௌதமா.. பக்கத்துலே போயிருப்பான்.. வரட்டும்” என்றவாறு மாடிக்கு ஓடினாள்.

அத்தியாயம் – 8

ஏறக்குறைய ஒரு வாரமாகவே சாமிநாதன் படுக்கையறைக்குள் தூக்கத்தைத் தேடி அலைய வேண்டியதாயிற்று. அதுவும் கண்ணாமூச்சி காட்டிற்று.

‘இந்த ரோகிணி எப்படி இப்படியொரு முடிவுக்கு வந்தான்னு தெரியலியே…. இத்தனை காலமா உழைச்சு… சம்பாதிச்சு… சேர்த்து வச்சது எல்லாமே உனக்காகத்தானே ரோகிணி… எதையே விக்கறது… எதையே கௌதம் பேரிலே எழுதி வக்கிறது… இந்த வீட்டையா. உன் அம்மா நினைவா கட்டுணுது.. யாருக்காக.. உனக்காகத் தானே ரோகிணி!’ சாமிநாதன் எதையெதையோ நினைத்துப் புலம்பினார். சில சமயம் சாப்பிடுவதற்கே வெறுத்துப்போய் காணப்பட்டார். ஆனால் ரோகிணியிடம் எதுவும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ரோகிணி கில்லாடி. தந்தையின் திடீர் மாற்றத்தையும், ஷேவ் பண்ணக் கூட முடியாத சோகத்தையும் கண்டு கொண்டாள். சில நாட்களில் தன்னையே தேற்றிக்கொண்ட சாமிநாதன், ஒரு நாள் வரதராஜனை வீட்டுக்கு வரவழைத்தார். லஞ்சுக்குப் பிறகு இருவரும் சோபாவில் அமர்ந்தார்கள். அருகே ரோகிணியும் இருந்தாள்.

“என்ன வரதா! ஒரு ஐடியா சொல்லுப்பா… மூணு மாசத்திலே எல்லாம் முடிச்சாகனும்.. ரோகிணி வேற லண்டனுக்குப் போறா!” என்றார் குமுறலுடன்.

“அடடே.. நீ போகலியா…?”

“நானும்தாப்பா… காசு பணமெல்லாம் எத்தனை நாளைக்கு.. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா!” என்று சாமிநாதன் திடுதிப்பென்று ‘இளமை’க்கு மாறினார்!

” பார்த்தியாம்மா ரோகிணி.. வயசு போன காலத்திலே வாழ்க்கையை அனுபவிக்கிறானாம்! எவளாவது வெள்ளைக்காரிகிட்டே சரண்டர் ஆயிறப்போறான்!” என்று கிண்டலடிக்க..

அவள் முறுவலித்துக்கொண்டாள்.

அதில் ஏதோ கொஞ்சம் வறட்சி மண்டிக்கிடப்பதை வரதராஜன் கவனித்தவராக “ஏம்மா.. டல்லா இருக்கே.. என்னாச்சு?” என்று கேட்டார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே அங்கிள்… நீங்கதான் நல்ல ஐடியாவெல்லாம் கொடுப்பீங்களே” என்றாள் யதார்த்தமாக.

“உங்க ஃபேமிலி மேட்டர்.. நான் என்ன சொல்றது?” என்று வரதராஜன் தப்பிக்கப் பார்த்தார்.

ரோகிணி ஆழ்ந்து யோசிக்கிறவளாய், சிறிதுநேரம் அமைதியாக்க் காணப்பட்டாள்.

“அங்கிள்! நான் ஒண்ணு சொல்லட்டுமா.. இன்னும் நானும் டாடியுமே இதைப் பத்திப் பேசலே. முதல்லே நாங்க ஒரு முடிவு பண்றோம்.. அப்புறமா உங்ககிட்டே வர்றோம்.. டாடி நீங்க என்ன சொல்றீங்க?”

“பார்த்தியாப்பா.. இந்தக் காலத்திலேயே பிள்ளைக எல்லாம் நல்லா யோசிக்கிறாங்க.. உம் பொண்ணு சொல்றதுதான் சரி… முதல்லே நீங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசுங்க.. நன்மை தீமையெல்லாம் பற்றி விரிவாப்பேசி ஒரு முடிவுக்கு வாங்க… எனக்கும் இப்ப கொஞ்சம் அவசரம்.. சனி ஞாயிறிலே வசதிப்படி சந்திக்கலாம்!” என்ற வரதராஜன் எழுந்தார்.

“அப்புறம்.. சின்னசாமியெப் பார்க்கலியா?” என்றார் சாமிநாதன்.

“அவன் காலேஜ் போயிருப்பான்.. அவனே கூப்பிடுவான்.. அவன் காரியத்தை அப்புறம் பார்க்கலாம்… ஒண்ணும் அவசரமில்லே” என்றவாறு வரதராஜன் விடைபெற்றார்.

அன்று இரவு உணவு முடிந்ததும், சாமிநாதனும் ரோகிணியும் முற்றத்தில் சற்று ஓய்வாகத் தரித்திருந்தார்கள்.

“அப்பா.. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”

“அப்படியா.. பேசலாமே .. எனக்கும் தூக்கம் வரலே”

“கொஞ்ச நாளாவேன்னு சொல்லுங்க… நானும் பார்த்திட்டுதானே இருக்கறேன்… என்னமோ கவலையாவே இருக்கறீங்க…”

அவர் முகத்தில் இளசான சோகம். எரியும் விளக்குபோல் கண் சிமிட்டாமல் தன் மகளையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“சாரு அடுத்த வாரம் லண்டன் கெளம்புறா” என்றாள் ரோகிணி தாழ்ந்த குரலில்.

“அப்படியா.. நல்ல செய்திதானே… உன்னோட பிளான் என்ன?”

அவள் மௌனமாக அவர் மடிமீது ஒரு பொம்மையைப் போல ‘தொப்’பென்று விழுந்தாள்.

“ஏம்மா.. என்னாச்சு… நீ கூடப் போறியா.. இல்லே அப்புறமாவா?”

“என்னப்பா கேட்கறீங்க.. இன்னும் விசாவுக்கே அப்ளை பண்ணலே… உங்களுக்குத் தெரியாததா என்ன”

“ஓஒ… சரி.. இது விஷயமாத்தானே இப்பப் பேசப்போறே”

“எஸ் டாடி.. நான் லண்டன் போகப்போறதில்லே!”

அதிர்ச்சியில் “வாட்! என்னம்மா பேசறே… நானும் வரதராசனும் பார்க்லே இருக்கறப்போ, உன்னோட ப்ளானை அவ்வளவு தெளிவாச் சொன்னே… அதிலும் நியாயம் இருக்கறதாத்தான் எனக்குப் படுது… இப்ப என்னாச்சு?” என்றார் சாமிநாதன் ஆச்சரியம் மேலிட.

“ஆமாம்பா… அது இருக்கட்டும்.. உங்ககிட்டே வேறொரு விஷயம் பேசணும்”

அவள் எழுந்ததும், நிமிர்ந்து உட்கார்ந்தார், சாமிநாதன்.

“பார்க்லே நானும் சாருவும் உங்ககிட்டேப் பேசிட்டு வீட்டுக்கு வந்த போது—”

“என்னப்பா… கவனிக்கிறீங்களா?”

“சொல்லு.. கேட்டுட்டுதா இருக்கேன்”

“ஆட்டோவிலேதான் வீட்டுக்கு வந்தேன்… திடீர்னு வந்த சாரல் மழைலே ட்ரெஸ்ஸெல்லாம் கொஞ்சம் நனைஞ்சுருச்சி… உடனே மாடிக்குப் போறப்போ,, அம்முக்குட்டி ‘ இங்கதானே கௌதம் தம்பி இருந்துச்சு… உங்களைப் பாக்கணும்னு சொல்லிட்டு இருந்துச்சு… இப்ப காணமே” ன்னு சொன்னதும்’ வெளிலே போயிருக்கலாம்.. வந்தா உக்காரச்சொல்லு.. ட்ரெஸ் மாத்திட்டு வந்துர்றேன்’ன்னு நான் மாடிக்குப் போனேன்.. என்னாலே நம்ப முடிலே.. சன்னல் திரைக்கிட்ட கௌதம் நின்னுட்டு, வெளிலே எதையோ பார்த்திட்டிருந்தான்… ‘கௌதம்! இங்க என்னோட ரூம்லே என்ன பண்ணறேன்னு’ கோபமாவே கேட்டேன். ‘மேடம்! அங்கே கொஞ்ச தூரத்திலே ஒரு காலி சைட் தெரிது பாருங்க.. அதையே சார் பார்த்து விசாரிக்கச் சொன்னாரு அதோட வியூ இங்கேருந்து பார்த்தா நல்லாத்தெரிதான்னு பாக்கறதுக்காக வந்தேன்!’ ன்னு சொல்லிட்டே என்னை ஒரு மாதிரி பார்த்தான்.

“அப்படியா?… நான் ஒண்ணும் சொல்லலியே ம்மா” என்றார் சாமிநாதன் குறுக்கிட்டு.

“இருங்க டாடி சொல்லி முடிச்சர்றேன்.. இல்லியே, அப்படிச் சொல்லியிருக்க மாட்டாரேன்னு நான் சொன்ன மறுநிமிஷம் என்னை ஒருமைலே கூப்பிட ஆரம்பிச்சுட்டான்.. எனக்கு வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சிருச்சு.. என்ன பேசறான் இவன்னு அப்படியே ஆடிப்போயி நின்னுட்டிருந்தனா… டாடி! என்னாலே நம்ப முடிலே, இப்படிப் பேசுவான்னு… ‘ரோகிணி! உன்னையே எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. கிட்டத்தட்ட ஆறு மாசமா உங்கிட்டச் சொல்லணும்னு காத்திட்டிருக்கேன்..’ன்னு அவன் பாட்டுக்கு புலம்ப ஆரம்பிச்சுட்டான்.. எனக்கு கோபம் பொத்துட்டு வந்துச்சு.. ‘முதல்லே நீ வெளிலே போறியா இல்லே,… என்னோட ரூமுக்குள்ள வந்ததே தப்பு.. நீ வாயிக்கு வந்ததெல்லாம் பேசிட்டிருக்கே… இரு டாடி வரட்டும்.. சீக்கிரம் வெளிலே போ. நான் ட்ரெஸ் மாத்தணும்.. போறியா இல்லியா.. இரு அம்முக்குட்டிய கூப்பிடுறேன்’ன்னு நான் சுதாரிச்சதும்’ இப்பப் போய்டறேன் மேடம்… நல்லா யோசிங்க மேடம்.. அவசரப்பட்டு டாடிகிட்டச் சொல்லிறாதீங்க, ப்ளீஸ்’ன்னு கையெடுத்துக் கும்பிடு போட்டுட்டே மெதுவா பூனை மாதிரி நழுவிட்டான்… எனக்கு ரெண்டு நாளா கையும் ஓடலே, காலும் ஓடலே.. உங்ககிட்ட எப்படிச் சொல்றதுன்னு தெரில.. அவனே உங்க மகனைப்போல உருவாக்கியிருக்கீங்க எல்லாப் பொறுப்பையும் அவன்கிட்ட ஒப்படைச்சிருக்கீங்க… அவன் இப்படி ஒரு எக்ஸ்ட்ரீம் ஸ்டெப் எடுப்பான்னு நான் நினைக்கலே, டாடி” அவள் மீண்டும் சாமிநாதன் மடியில் சரிந்தாள். அவள் சிரசைத் தடவி விட்டவாறு, ஒரு சிசுவை ஏந்துவதுபோல் எடுத்து, சோபாவில் நிமிர்த்தி உட்கார வைத்தார். சாமிநாதன் கொஞ்சநேரம் யோசித்தார்.

“சரிம்மா.. உன்னோட முடிவு என்ன… முதல்லே நீ ஏன் லண்டனுக்குப் போகலேன்னு சொன்னே?… அதுக்கு என்ன காரணம்?”

“வேண்டாம்பா நான் உங்களோடவே இருந்தர்றேன்.. எனக்குன்னு என்ன வாழ்க்கை அமைச்சுக்கொடுக்கறீங்களோ அதை நான் மனப்பூர்வமா ஏத்துக்கறேன்!”

சாமிநாதன் அசந்துபோய் அந்த ஒளிரும் முகத்தையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது —

அலைபேசி கிணுகிணுத்தது .ரோகிணி எழுந்து சமையலறைக்குப் போனாள்.

“ஹலோ.. வரதா! என்னப்பா இந்நேரத்திலே.. நல்ல இருக்கியா?”

“இருக்கறேன்.. ஒரு விஷயம்.. உம் பொண்ணு பக்கத்திலியா?”

“இல்ல.. சொல்லு”

“அந்த சின்னசாமி ஒத்து வர மாட்டான் போலிருக்கு.. உன்னைப் பத்தி, ஃபேமிலியைப்பத்தி, உம் பொண்ணு ரோகிணியப் பத்தி, மாளாத சொத்து, சுகம், எதிர்காலம் எல்லாம் இருக்குன்னு விலாவரியாப் பேசிப் பார்த்தேன்.. எதுக்கும் மசிய மாட்டேங்கறான்.. அன்றைக்கு உன் வீட்டுக்கு அந்தத் தம்பி வந்தப்போ, உன் பொண்ணு மேலே என்ன அபிப்ராயம் வச்சு இருக்கான்னு தெரில… அப்புறம், மேலே படிக்கணும்னு வேற உடும்புப் பிடியாப் பேசறான்.. ஒரு வேளை… அந்தப் பொண்ணு அக்கீசியா பேரிலே பிரியமோ,

என்னவோ அதையும் புரிஞ்சிக்க முடிலே.. அந்தப் பையன் உனக்கு செட் ஆகாதுன்னு நினைக்கறேன்.. எதுக்கும் ரோகிணியோட அபிப்பிராயம் என்னன்னு கேட்டுக்கோ.. என்னப்பா நான் பாட்டுக்குப் பேசிட்டே இருக்கேன்… நீ ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறே” – என்று தற்காலிகமாக ஓய்வு எடுத்துக் கொண்டார் வரதராசன்.

“ஆமாம்பா.. உன்னோட கணிப்பு சரிதான். டிராப் பண்ணிரலாம்!” என்றார் சாமிநாதன், உள்ளே எட்டிப் பார்த்தவாறே..

“ஏம்பா.. லண்டன் போகுதா?”

“எதுவுமே இன்னும் முடிவு பண்ணாமே இருக்கு.. விசா ப்ராசஸ் எல்லாம் இருக்கு.. டைம் ஆகும் போல. சரிப்பா கொஞ்ச நாள் ஆறப்போடுவோம்.. என்ன சொல்றே?

“ஆமாம்.. ஆயிரங்காலத்துப் பயிறு … யோசிப்போம்.. வக்கட்டுமா ?”

“ஓகே.. குட் நைட்”

அலைபேசி அணையவும், ரோகிணி ஹார்லிக்ஸ் கொண்டு வரவும் சரியாக இருந்தது.

“யாருப்பா வரதராஜன் அங்க்ளா?”

“ஆமாம்மா”

“நீங்க என்ன சொன்னீங்க? ஹார்லிக்ஸ் ஆறுது”

“எதையுமே கொஞ்ச நாளைக்கு ஆறப் போடலாம்னு சொல்லிட்டேன்!”

“குட் ஆன்ஸர்… ரெஸ்ட் எடுங்க டாடி.. கௌதம் விஷயமாக் கொஞ்சம் யோசீங்க குட் நைட்”

ரோகிணி மாடிக்குப் போனாள். அன்றிரவு ஒரு மோகனகரமான இரவு என்றுதான் சொல்லவேண்டும். ஒரு விதத்தில் சாமிநாதனுக்கு நல்ல உறக்கம் பிடித்தது. அதற்குக் காரணம் மகளின் எதிர்பாராத முடிவுதான். கௌதம் நல்ல பையன். அவர் பாலூட்டி, சோறூட்டி வளர்த்த பையன். மெத்தப் படித்தவன். எம்.ஆர்க். கட்டிடக்கலையில் வல்லவன். உண்மையில் அவன் கிணற்றுத் தவளைபோல் இங்கிருக்க வேண்டியதில்லை. ரோகிணியுடன் இணைந்து அவர்கள் எதிர்காலத் திட்டத்தை வகுத்துக் கொள்ளட்டும். மகளை நினைக்க நினைக்கப் பெருமையாய் இருந்தது.


இரண்டு நாட்களாக மெடீரியல்ஸ் வாங்குவதற்கு வெளியூர் சென்றிருந்த கௌதம் இன்று காலையில் ஒரு பில்டிங் சைட்டுக்கு வந்திருப்பான்.

எப்படியும் வீட்டுக்கு வருவான் என்று காத்திருந்தார் சாமிநாதன். நினைத்த மாதிரியே அவன் காலிங் பெல்லை அழுத்திவிட்டு, அகண்ட கதவோரம் பம்மினான். வழக்கமாக அப்படியில்லை. அன்றைக்கு அவன் மனநிலை வேறு மாதிரியிருந்தது . ‘இந்நேரம், ரோகிணி நடந்ததை சாமிநாதன் சாரிடம் சொல்லியிருப்பாள்… அவர் மனசில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ..’ அவனுக்குக் குழப்பமாகவும், அச்சமாகவும் இருந்தது.

ரோகிணி மாடியிலிருந்து இறங்கி வரவும்… கௌதம் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழையவும்.. சாமிநாதன் சோபாவிலிருந்து எழுந்து “வாங்க மாப்பிளே!” என்று விளிக்கவும்…

அந்த வரவேற்பறை என்றைக்குமில்லாத குதூகலத்தால் குமிழியிட்டது.

ஒரு நிமிடம் ஆடிப்போன கௌதம் தடாலடியாய் அவர் பாதங்களில் விழுந்தான்.

நெகிழ்ந்துபோன சாமிநாதன் “எழுந்திரு கௌதம்! நீதான் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா வரப்போறே!” என்று அவன் தோள் பற்றி அணைத்துக்கொண்டார்.

அருகே புன்முறுவலுடன் நின்றுகொண்டிருக்கிற ரோகிணியை அவன் ஓரக்கண்ணால் ரசிக்க ஆரம்பித்தான்.

அப்பாவின் முடிவு ரோகிணிக்குச் சிறகு முளைக்கச் செய்தது.

– தொடரும்…

– 2023

சந்திரா மனோகரன் சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *